Monday, February 25, 2008

தங்க மரம் - 7

முன்கதைச் சுருக்கம்

கதிரவனும் சித்திரையும் ஆலமரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு பெட்டியையும் செங்கோலையும் சேர்த்து வைத்து உரசினார்கள். அப்பொழுது...
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5
பாகம் - 6


பாகம் - 7

கிணிகிணியென்ற மணியோசையும் துண்டு துண்டாக வந்து விழுந்த சொற்களும் இருவரையும் குழப்பியது. உரசிக்கொண்டிருக்கும் பொழுதே பெட்டியும் கோலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. அப்படி ஒட்டிக்கொண்டதும் பளீர் என்று ஒளிக்கீற்று செங்கோலில் இருந்து புறப்பட்டது. அது கண்ணுக்குத் தெரியாத வட்டவடிமான மாயத்திரையில் பட்டு காட்சிகள் தெரிந்தன. வியப்பின் உச்சியில் இருவரும் காட்சிகளைக் காணத் தொடங்கினர்.

காட்சியில் முதலில் ஆலோர் வந்தது. அந்தப் பின்னணியில் அழகிய பெண்ணின் முகம் தெரிந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கையில் பொலிவும் அறிவும் அருளும் அன்பும் நிரம்பிய தெய்வீகம் தெளிந்தது. ஒளிவீசும் செந்நிறக் கண்களும் சுற்றியும் ஜொலிக்கும் பொன்னிற ஒளியும் பார்த்த பொழுதிலேயே கதிரவனின் உள்ளத்திலும் சித்திரையின் உள்ளத்திலும் ஒரு மதிப்பை எழுப்பின. அந்த அருளுடைப் பெண்ணே பேசினார்.

"வணக்கம். நான் லிக்திமா. ஆலோர் கிரகத்து ஒளியரசி. சுடர்மகள் என்றும் என்னைச் சிறப்பித்து அழைப்பார்கள். உங்களுக்கு இந்தப் ஒளிப்படக் கருவியை அனுப்பியிருப்பது ஒரு உதவியை வேண்டித்தான். என்ன உதவி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆலோரின் தோற்றத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன். பிறகு உதவியைச் சொல்கின்றேன்.''

இப்பொழுது காட்சி மாறியது. ஆலோரின் சுவற்றில் இருக்கும் ஒரு கோபுரத்தின் உள்ளிருந்த அறை தோன்றியது. அந்த அறையின் ஒரு தங்கத் தொட்டிலில் சின்னஞ்சிறு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. ஒளியின் பிறப்பிடம் போலச் சுடர் விட்டுக்கொண்டிருந்த லிக்திமா உலகின் எந்த இசைக்கருவியும் இசைக்கலைஞரும் தோற்றுப் போகும் இனிமையுடன் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். அவருடைய மாணிக்கக் கண்களும் கழுத்துச் சங்கியில் தொங்கிக் கொண்டிருந்த முத்தும் ஆனந்த ஜோதியை வீசிக் கொண்டிருந்தன. சட்டென்று உள்ளே நுழைந்தார் சாண்டா. பொன்னாடை இடுப்பில் மினுக்க வைரம் நெஞ்சில் மினுக்க நுழைந்தார். கதையைப் படிக்கின்றவர்களுக்கு அவர்தான் ஊழிவாயன் என்று அழைக்கப்பட்டவர் என்பது இப்பொழுதே புரிந்திருக்கும்.

"லிக்திமா........ ஒரு வாரமாக நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த முத்தைக் கொடுப்பதில் உனக்கென்ன குறைந்து விடப் போகின்றது? நான் யார் என்பது உனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது தானே?"

"கணவனே..நீ யார்? சாண்டா. மண்ணின் மகன் என்று ஆலோர் போற்றும் மேலோன். ஆதியில் ஒன்றுமில்லாமல் இருந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக் கொண்டிருந்தது. அந்த ஆதியின் சோதியால்தான் எல்லாம் உண்டானது. அதாவது ஆதியே அனைத்துமாய் ஆனது. அந்த எல்லாவற்றிலும் ஆலோர் கிரகமும் ஒன்று. உலகின் மற்ற கிரகங்களைப் போலில்லாமல் தட்டைக் கிரகமாக ஆலோரை உண்டாக்கினார் ஆதி.

ஆலோரைப் பார்த்துக் கொள்ள தன்னிலிருந்தே நான்கு ஆற்றல்களை உண்டாக்கி அற்புத சக்திகளையும் கொடுத்தார். முதலில் மண்ணைப் பார்த்துக்கொள்ள உன்னை உருவாக்கினார். சாண்டா என்று பெயரும் இட்டு...உறுதியில் சிறந்து மக்களையும் மற்ற உயிர்களையும் தாங்கும் வலிமையைக் குறிக்க உனது நெஞ்சில் வைரம் பதித்தார். அடுத்து என்னை உண்டாக்கினார். ஒளியும் ஆற்றலும் என்னிடம் இருந்து நீங்கள் பொறுப்பேற்றுள்ள மண்ணின் உயிர்களுக்கு உண்டாகட்டும் என்று பணியும் கொடுத்தார். என்னைச் சிறப்பிக்க செவ்வொளி பரப்பும் மாணிக்கக் கண்களைக் கொடுத்தார். எனது ஒளியைக் கூட்டிக் குறைத்து இரவையும் பகலையும் உண்டாக்கினார். அதே போல நீருக்கு மெரிமாவையும் காற்றுக்கு விண்டாவையும் உருவாக்கினார். மெரிமாவிற்கு நீலக் கல்லை நாவில் பதித்தார். விண்டாவிற்கு மரகதத்தைக் இரண்டு உள்ளங்கைகளிலும் பதித்தார். நீரின்றி அமையாது உலகு என்பதால் மெரிமாவிற்கு நீர்மகள் என்ற சிறப்புப் பெயர். காற்றின்றி எதுவும் வாழாது என்பதால் விண்டாவிற்கு தென்றலன் என்ற சிறப்புப் பெயர்.

ஆலோர் சுற்றுச் சுவற்றில் நான்கு கோபுரங்கள் அமைத்து நம் நால்வருக்கும் கொடுத்தார். அங்கிருந்து நாம் ஆலோரைக் காத்து வருகையில் உனக்கு என்னையும் விண்டாவிற்கு மெரிமாவையும் மணம் செய்து வைத்து வாழ்வளித்தார். அன்றிலிருந்து நாம் ஆலோரைக் காத்துப் பராமரித்துக் கொண்டு வருகின்றோம். சரிதானே!"

"கேட்ட கேள்வி என்ன? சொல்லும் விடை என்ன? நான் யார் என்று கேட்டால் ஆலோரின் வரலாற்றையும் ஆதியின் பெயரையும் சொல்லி நானும் நீயும் ஒன்று என்று கதையளக்கின்றாயா?"

"குடும்பம் என்று வந்தால் கணவனும் மனைவியும் ஒன்றுதானே? இதில் பெரியோர் சிறியோர் என்ற பேதம் ஏது?"

"ஆகா...அழகான பேச்சு...ஆனால் அது மறக்கடிப்பது உன்னுடைய ஆணவத்தை. சுடர்மகள் அல்லவா...அதனால் என்னுடைய சிறப்பை இருளில் தள்ளவும் உன்னுடைய பெருமையை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தெரிந்திருக்கிறது."

"சாண்டா! என்ன பேசுகின்றாய்? எனக்கு ஆணவமா? உன்னை விட என் சிறப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றேனா? சுடர்மகளாக என்னுடைய கடமையையும் மனைவியாக என்னுடைய வாழ்க்கையையும் ஒழுங்காக நடத்தியதால்தானே இரண்டு பரிசுகள் கிடைத்திருக்கின்றன."

"அந்த இரண்டு பரிசுகளை நீ பெற்றதால் என்னிலும் பெரியவள் நீ என்ன மமதையில் பேசுகின்றாய். கணவன் மனைவிக்குள் பெரியவர் இல்லையென்று சொல்லி விட்டு உன்னை உயர்த்திக் காட்டும் அந்த முத்தை என்னிடம் கொடுக்க மறுக்கிறாய். அதன் மூலம் நால்வரில் பெரியவள் நீ என்று காட்டிக் கொள்ளத் துடிக்கிறாய். நீ ஒரு புகழ் விரும்பி."

ஆட்டிக் கொண்டிருந்த தொட்டிலை நிறுத்தி விட்டு எழுந்தார் லிக்திமா. அவருடைய பேரொளி சற்றுக் குன்றியது போலத் தோன்றியது. ஆனாலும் மிடுக்கிற்குக் குறைவில்லை.

"நானா புகழ் விரும்பி? சாண்டா..... இந்த முத்து ஆதி பரிசளித்தது. நமது மகள் தனிமா பிறந்த பொழுது கிடைத்த பரிசு. பகலில் நான் ஒளிரும் பொழுது இந்த முத்து வெள்ளொளி வீசும். மாலை வரவர நீலமாகி இரவிலோ அடர்ந்து ஒளிவீசும். ஆற்றலை நான் வெளிப்படுத்துகையில் அதைச் சீர்மை செய்யவும் உதவுகிறது இந்த முத்து. அதைக் கேட்டால் எப்படித் தருவது? உனது நெஞ்சிலே பதித்திருக்கும் பெரிய வைரத்தை யாரேனும் கேட்டால் தர முடியுமா?"

லிக்திமாவின் பேச்சு சாண்டாவிற்கு ஆத்திரத்தையே கூட்டியது. "நான்கு தெய்வங்களும் ஆளுக்கு ஒன்று என்று கற்களை வைத்திருக்கையில்...உனக்கு மட்டும் ஏன் இரண்டு? நமக்குள்ளே பாகுபாடு காட்டத்தானே?"

"சாண்டா... கொடுத்தது ஆதி. நாளையே உனக்கும் ஒரு பரிசு கிடைக்கலாம். அப்பொழுது மற்றவர்கள் பொறாமைப் பட வேண்டுமா? பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் நாம். வெறும் வெறுப்பில் இருந்தால் சரியாகுமா?"

"லிக்திமா. பேச்சைக் குறை. உனக்கான ஒன்று என்னிடம் இருந்தால் என்ன? என்னுடைய கழுத்தை இந்த முத்து அலங்கரித்தால் என்ன வந்துவிடப் போகிறது?"

"ஒரு மனைவியாக நான் வைத்திருக்கும் பொருளை நீ பயன்படுத்து தவறில்லை. ஆனால் இது கடமையில் வந்தது. அதை எப்படிக் கொடுக்க முடியும்?"

சாண்டாவின் ஆத்திரம் வைரத்தில் தெரிந்தது. செக்கச்செவேல் என்று நெருப்பாய் ஜொலித்தது. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அந்த இடத்தில் இருந்து விலகி தன்னுடைய கோபுரத்திற்குச் சென்று விட்டான். மெரிமாவும் விண்டாவும் நிகழ்ச்சிகளைக் கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெய்வங்களுக்குள்ளே சண்டை எழுந்தால் ஆலோரை யார் காப்பாற்றுவது. ஆதியே வந்துதான் இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். பிரச்சனைக்குள் தலையிடாவிட்டாலும் தொடர்ந்து மெரிமாவும் விண்டாவும் நடப்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தன்னுடைய கோபுரத்திற்குச் சென்ற சாண்டாவின் உள்ளத்தில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது. அதைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு தவறான எடுத்துக்காட்டாக தான் மாறப்போவது தெரியாமல் திட்டம் தீட்டினான் சாண்டா.

தொடரும்

பி.கு - படம் வரைந்து தரும் கிரண் பணிப்பளுவினால் இந்த வாரம் திட்டமிட்ட படி படம் தரமுடியவில்லை என்றும் அடுத்த வாரம் கண்டிப்பாக செய்து தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, February 18, 2008

தங்க மரம் - 6

முன்கதைச் சுருக்கம்

இருண்டு கிடக்கும் ஆலோர் கிரகத்தைப் பிழைப்பிக்க தனிமாவாலும் பிடிமாவாலும் மட்டுமே முடியும் என்று அரசி சொன்னதைக் கேட்டுச் செயல் முடிக்க வாக்குறுதி அளித்தாள் தனிமா. பாதி உண்டிருந்த கிரகத்திற்காகப் புறப்பட்டாள் தனிமா.....
பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5

தங்க மரம் - 6

ஆலோரின் நடுக்கோபுர உச்சியிலிருந்து ஜிவ்வென எழும்பிப் பறந்தார்கள் தனிமாவும் பிடிமாவும். ம்ம். இல்லையில்லை. பிடிமாதான் இறக்கைகளை விரித்துப் பறந்தாள். தனிமா பிடிமாவின் மேல் உட்கார்ந்திருந்தாள்.

பழுப்பு நிறம்...மரகதத் தந்தம்..இரண்டு அழகிய இறக்கைகள் கொண்ட பெண்யானைதான் பிடிமா. அவள் மீது ஏறித்தான் பறந்து கொண்டிருந்தாள் தனிமா. அதுவும் பூமியை நோக்கி. அவ்வப்பொழுது திசைகாட்டியை எடுத்துப் பறக்கும் வழியைச் சரி பார்த்துக் கொண்டாள். விண்வெளியில் வழி மறந்து விட்டால் தொலைந்து போக வேண்டியதுதானே.

முதன்முதலாக தன்னுடைய கிரகத்தை விட்டுத் தெரியவே தெரியாத இடத்திற்குப் போகிறாள். அதுவும் போரிடுவதற்கு. எப்படிப் போரிடப் போகின்றோமோ என்ற எண்ணம் அவ்வப்பொழுது தோன்றினாலும் உள்ளத்தில் உறுதி குறையவேயில்லை. அதுவுமில்லாமல் பறக்கும் பொழுது காணும் காட்சிகள் அவளுக்கும் பிடிமாவிற்கும் புதுமகிழ்ச்சியை உண்டாக்கின. பலப்பல சிறிய நட்சத்திரங்கள்..எரிகற்கள்..கிரகங்கள்..தொலைவில் மினுக்கும் தாரகைகள்...என்று நவரத்தினங்களைக் கொட்டி வைத்த சாலையில் செல்வது போல இருந்தது. தேவையான ஆற்றல் இருந்ததால் பறப்பது பிடிமாவிற்கு எளிதாகவே இருந்தது.
அவ்வப்பொழுது ஒளித்தாரகைகளுக்குள் புகுந்து வெளிவருவதும் இருவருக்கும் சுகமாக இருந்தது. அந்தத் தாரகைகளில் இருந்து ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சம் ஏற்றிக் கொண்டார்கள்.

கிட்டத்தட்ட பாதி தொலைவு கடந்திருந்தார்கள். ஒருவருக்கொருவர்தானே பேச்சுத்துணை.

"நாம் புறப்பட்டு இரண்டு நாட்களாகிவிட்டன. பூமியை அடைய இன்னும் ஒன்றரை நாளாவது ஆகும் என்று தெரிகிறது. புறப்படும் பொழுது கட்டிக் கொடுத்த காரிசுகள் நிறைய இருக்கின்றன. ஆளுக்கொன்று கொறிப்போமா?"

தலையை ஆட்டி மறுத்தாள் பிடிமா. "வேண்டாம் தனிமா. சற்று நேரம் போகட்டும். இப்பொழுது பசியில்லை." பேசிக்கொண்டே வந்த பிடிமா படக்கென்று நின்று விட்டாள்.

ஏன் என்று கேட்க நினைத்து வாயைத் திறந்தாள் தனிமா. ஆனால் முடியவில்லை. அவளால் சிறிதும் அசைய முடியவில்லை. பிடிமாவாலும்தான். ஆகையால்தான் படக்கென்று நின்று விட்டாள். ஒரு நொடி இருவருமே திகைத்துப் போனார்கள். இப்பிடி அசையாமல் தொடர்ந்து நின்று விட்டால் ஆற்றல் வீணாகிவிடுமே. பிறகெப்படி பூமிக்குப் பறப்பது?

அப்பொழுதுதான் அவர்களுக்கு நேர்ந்தது சற்றுப் புரியத் தொடங்கியது. கண்ணுக்குத் தெரியாத ஒருவிதக் கண்ணாடிக் கயிற்றால் இருவரும் கட்டப்பட்டிருந்தார்கள். மிகமிக மென்மையான அந்தக் கயிற்றின் அழுத்தம் புரியவில்லை. ஆனால் இறுக்கம் புரிந்தது.

ஒரு பயங்கரம் அவர்களது கண்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. ஆம். அடர்மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய சிலந்தி. பக்கவாட்டில் இருந்து நகர்ந்து அவர்களுக்கு முன்னால் நின்றது. அதன் வலையில்தான் தனிமாவும் பிடிமாவும் சிக்கியிருந்தார்கள். பார்க்கவே அருவெறுப்பாக இருந்த அந்தச் சிலந்தி எச்சில் ஒழுகும் கோரவாயின் கூரிய பற்களைக் காட்டிக் கொண்டு விரைந்து வந்தது.

கைகால்களை அசைக்க முடியாவிட்டாலும் மனத்தால் எதையும் செய்யும் திறமையுள்ளவர்கள் ஆலோரிகள். மனதால் முறுக்கிக் கண்ணாடிக் கயிறுகளை நெகிழ்த்தினார்கள் தனிமாவும் பிடிமாவும். கயிறு அறுபடுவதைக் கண்டதும் சிலந்து மறுபடியும் கண்ணாடிக்கயிறுகளைக் கக்கியது. இவர்கள் அறுக்க அறுக்க சிலந்தியும் கயிறுகளைக் கக்கிக் கொண்டேயிருந்தது.

இப்படியே சென்று கொண்டிருந்தால் வேலைக்காகது என்பதைத் தனிமா புரிந்து கொண்டாள். மனதிற்குள்ளேயே பிடிமாவுக்குச் செய்தி அனுப்பினாள்.

"பிடிமா.. இந்தச் சிலந்தியை நாம் மனதால் தாக்குவோம். நீ அதன் எட்டு கால்களையும் ஒவ்வொன்றாய் மனதால் உடை. நான் அந்தக் கண்ணாடி கக்கும் வாயைக் கிழிக்கிறேன். இல்லையென்றால் தொடர்ந்து நாம் கட்டப்பட்டுக்கொண்டேயிருப்போம்."

பிடிமாவுக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்தது. மனதால் சிலந்தியின் ஒரு காலைத் தும்பிக்கையால் பிடித்து இழுப்பது போல இழுத்தது. யாருமே இல்லாமல் தன்னுடைய கால் இழுபடுவதை உணர்ந்த சிலந்தி ஆத்திரத்தோடு திரும்பியது. அதே நேரத்தில் சரியாக அதன் வாயில் குத்தினாள் தனிமா.

தன்னுடைய உணவு/எதிரிகள் கண் முன்னே கட்டுப்பட்டுக் கிடக்க தன்னைத் தாக்குவது யாரென்று தெரியாமல் தடுமாறியது சிலந்தி. காய் காய் என்று கத்திக் கொண்டு தன் காலை யாரோ பிடித்திருக்கிறார்கள் என்று நினைத்து....தன் காலைத் தானே கடித்தது. பிடிமாவும் விடாமல் காலைப் பிடித்து முறுக்க முறுக்க சிலந்தியில் அலறல் கூடியது. ஆனால் தொடர்ந்து அலறவும் விடாமல் தனிமா அதன் தாடையிலேயே குத்தினாள். தாடையும் உடைந்து கிழிந்து எச்சிலும் கண்ணாடியிழைக் கூழும் ஒழுகின. யாரும் இல்லாமல் தானே தாக்கப்பட்டுக் கொள்ளும் காட்சி மிகக்கொடூரமாக இருந்தது.

அதற்குள் ஒரு காலை உடைத்து விட்ட பிடிமா அடுத்த காலுக்குத் தாவியது. மிகவிரைவிலேயே இரண்டு மூன்று கால்கள் நொறுங்கின. சிலந்தி நேராக நிற்க முடியாமல் லம்பி ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. வாய் கிழிந்து போனதால் கண்ணாடிக் கயிறுகளை அதனால் பீய்ச்சியடிக்கவும் முடியவில்லை. வலியும் வேதனையும் தாளாமல் தானே விழுந்து புரண்டது. அதுதான் சரியான நேரம் என்று தனிமாவும் பிடிமாவும் தங்களைக் கட்டியிருந்த கண்ணாடிக்கயிறுகளை அறுத்துக் கொண்டார்கள்.

மனதினாலேயே இருவரும் வழிந்திருந்த கண்ணாடியிழைக் கூழால் சிலந்தியை இறுக்கக் கட்டினார்கள். நகரவும் முடியாமல் மூச்சு விடவும் முடியாமல் சிறிது நேரத்திலேயே சிலந்தி விறைத்தது.

பெருமூச்சு விட்டபடியே தங்களைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள் தனிமாவும் பிடிமாவும். ஆளுக்கு இரண்டு காரிசுகளைக் கடித்துத் தின்றார்கள். களைப்பு சற்று நீங்கியது. அப்படியே சிறுது பானிகாவும் குடித்துக் கொண்டார்கள். நா வறட்சியைப் போக்கியதுடன் சிறிது தெம்பும் வந்தது.

நேரம் கடத்த விரும்பாமல் உடனே புறப்பட்டார்கள். அப்பொழுதுதான் ஒரு பெரிய உண்மை இருவருக்குமே புரிந்தது. ஆம். இருவரின் ஆற்றலிலும் பெருமளவு சிலந்திச் சண்டையிலேயே வீணாகிப் போனது. மிச்சமிருக்கும் ஆற்றல் அவர்களை பூமியில் கொண்டு சேர்க்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் முன்னேறுவது என்ற முடிவோடு தொடர்ந்தார்கள். விரைந்து செல்ல முடியாத வகைக்கு ஆற்றல் பெருமளவில் குறைந்து வேகம் மட்டுப்பட்டது. வழியில் அங்காங்குள்ள ஒளிப்பொட்டுகளிலிருந்தும் தொலைதூரத் தாரகைகளில் இருந்தும் ஆற்றலைக் கொஞ்சம் பெற்றுக்கொண்டாலும்....அவையெல்லாம் போதவில்லை. ஒருவழியாக இருவரும் குற்றுயிரோடு தங்களை இழுத்துக் கொண்டு பால்வெளி மண்டலத்திற்குச் சென்றார்கள்.

பால்வெளி மண்டலத்தில் நுழையும் பொழுதுதான் ஆற்றல் முழுவதும் தீர்ந்து மயங்கத் தொடங்கினார்கள். அந்த மயக்கம் தீர வரவேற்றான் கதிரவன். உலகையெல்லாம் தனது ஒளிக்கற்றைகளால் காக்கும் கதிரவனைச் சொல்கிறேன். அந்தக் கதிரவனின் வெள்ளொளியானது தெம்பைக் கொடுத்தாலும் ஏற்கனவே இருந்த ஆற்றலையெல்லாம் வீணடித்து விட்டதால்....இப்பொழுது கிடைக்கும் ஆற்றல் அவர்களை நகர்த்தவும் உயிரோடு வைத்திருக்கவும் மட்டுமே முடிந்தது. பூமியை நெருங்க நெருங்க களைப்புதான் இருவரையும் வாட்டியது.

சரியாகக் காற்று மண்டலத்திற்குள் நுழைந்ததுமே புவியீர்ப்புவிசை அவர்களைப் பற்றி இழுத்தது. ஆனால் அதைத் எதிர்த்துப் பறக்கும் ஆற்றல் இல்லாமலையால் பிடிமா பிடிமானம் இழந்தது. நிலை குலைந்து கீழே விழுந்தாள் தனிமா. இருவரும் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று தரையை நோக்கி இழுக்கப்பட்டார்கள்.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

பி.கு - வழக்கமாக படம் வரைந்து தரும் கிரண் விடுமுறை முடிந்து திரும்பவும் அமெரிக்கா சென்று விட்டதால் அடுத்த வாரத்தில் இருந்து படங்கள் வரும்.

Monday, February 11, 2008

தங்க மரம் - 5

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.

ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று மிரட்டுகிறாள். மற்றும் பாகம்-3 பாகம்-4

பாகம் - 5

உருளைப் பெண்ணின் மிரட்டலைக் கேட்டு ஆத்திரத்தோடு இருந்த ஊழிவாயனின் எரிகின்ற சினத்தில் எண்ணெய் ஊற்றியது தேலி. அது ஊழிவாயனுக்கு ஏதும் கெட்டது நல்லது நடக்குமானால் முன்னால் எச்சரிக்கும் பறவை. காய் காய் என்று கத்தியது. அந்தக் கத்தலைக் கேட்டு தேலியிடன் சென்றால் ஊழிவாயன்.

"ஊழிவாயா.... நீ விரைந்து செயல் முடிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. நீ பிடித்து வைத்திருக்கும் செங்கோமானின் மனைவி தன்னுடைய மகன் கதிரவனிடம் உன்னை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவன் வெற்றி பெறுவானோ! தோல்வி பெறுவானோ! ஆனால் உனக்கு ஒரு எதிரி உண்டாகி விட்டான்."

ஊழிவாயனின் நெஞ்சிலிருந்த வைரம் செவேலென்று ஒளிர்ந்தது. "தேலி... இப்பொழுது அந்தச் சிறுவன் எங்கிருக்கிறான்? உடனே சொல்...நான் சென்று கொன்று வருகிறேன்."

தேலி கிக்கித்தது. "ஹா ஹா எந்த இடத்தில் இருக்கிறான் என்று சொல்ல முடியாது. அது என்னுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இன்று அவனுடைய பிறந்தநாள். ஆகையால் இல்லத்தில் இருப்பான் என்றுதான் தோன்றுகிறது."

அடுத்த நொடியிலேயே அந்த இடத்திலிருந்து மறைந்தான் ஊழிவாயன். மிக விரைவில் கதிரவனின் இல்லத்தில் தோன்றினான். "கதிரவா....வா இங்கே?"

ஆரவாரத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் கேட்டு வெளியே வந்தார் அமுதம். வந்திருப்பவன் கொடியவன் என்று மட்டும் உடனே புரிந்தது. "யார் நீர்? என்ன வேண்டி உள்ளே வந்தீர்?" சற்று அதட்டலோடுதான் கேட்டார்.

"ஓ நீதான் அமுதமா? கதிரவனின் தாய்தானே? என்னைக் கண்டு அச்சப்படாமல் என்னையே அதட்டத் துணிந்த உம்மைச் சும்மா விடமாட்டேன். மந்திரங்களைக் கற்றவன் நான். அதைப் புரிக." உறுமினான்.

"தமிழைக் கற்றவர்கள் நாங்கள். தமிழ்வேளை உற்றவர்கள் நாங்கள். உன்னுடைய மந்திரங்களும் தந்திரங்களும் எங்கள் உண்மைச் சொல்லுக்கும் செயலுக்கும் முன்னால் அற்றுப் போகும். அதைப் புரிக முதலில்." மறமும் அறமும் பொலிந்து சினந்தது அமுதத்தின் முகத்தில்.

அது ஊழிவாயனின் சீற்றத்தை ஏற்றத்தில் வைத்தது. "பெண்ணே... உனது கணவனைப் பிடித்து வைத்திருக்கிறேன் இத்தனை ஆண்டுகளாக. அப்படியிருக்கையில் நீ என்ன செய்து விட முடியும்? உன்னுடைய மகன் என்ன செய்து விட முடியும்? உங்களைப் பொடியாக்கி மண்ணில் முளைக்கும் செடியாக்க நொடி கூடப் பிடிக்காது."

தன்னுடைய கணவனைப் பிடித்து வைத்திருப்பவன் வந்திருப்பவன் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்திலிருந்த அன்பையெல்லாம் கிளறி ஆத்திரமாக்கி ஊழிவாயன் மேல் பாய்ச்சியது. "கொடியவனே.....யார் பொடியாவார்? குற்றத்தைக் கொற்றம் என்று நினைக்கும் உன் போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்கலாம்...ஆனால் நீ மாண்டு அவரும் மீண்டு வருவது உறுதி. இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."

"மடப் பெண்ணே...பேச்சைக் குறை. உன் தமிழறிவை பள்ளியில் காட்டு. இந்தக் காட்டுக்கள்ளியிடம் காட்டாதே. இது பார் ஏவி விடுகிறேன் நெருப்பை."

சிரித்து விட்டார் அமுதம். "நெருப்பா? ஒவ்வொரு நாளும் எங்கள் அடுக்களையில் அதில்தான் வேகிறது பருப்பு. நீ ஏவி விடு. அதைச் சாம்பலாக்கி நான் காற்றில் தூவி விடுகிறேன்."

கையிலிருந்த மந்திரத்தண்டை எடுத்துத் திருகினான் ஊழிவாயன். தண்டிலிருந்து கபகபவென நெருப்புக் கொப்புளங்கள் பொங்கிப் பரவின. அந்தக் கொப்புளங்கள் அமுதத்தைச் சுற்றி வளைத்தன.

"உணவு என்பது உயிருக்கு அடிப்படை. அதை உண்டாக்கத் தேவை தீயெனும் படை. பசிப்போரை எதிர்க்கும் நெருப்பே நீ இப்போர் மறந்து சமைப்போர் அடுப்பில் புகுக. உணவு உண்டாக்குக. மீந்த சாம்பல் எங்கள் வழிபாட்டுக் கொப்பரையில் திருநீறாகுக." அமுதம் சொல்லச் சொல்ல நெருப்புக் கொப்புளங்கள் அவரிடமிருந்து விலகி அடுப்பறைக்குள் சென்று அடுப்புக்குள் புகுந்தது.

ஒன்றும் அறியாத பெண் தான் ஏவிய நெருப்பை அணைத்ததை ஊழிவாயனால் ஏற்க முடியவில்லை. உடனே ஒரு மாயப்பேயை உருவாக்கி ஏவினான். அந்தப் பேயும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு முண்டக்கண்டை விழித்துக் கொண்டும்....பார்க்கச் சகிக்காத உருவத்தோடு சிவந்த நாக்கை நீட்டி மிரட்டியது. கூ கூ ஹிஹ் ஹிஹ் என்று ஓலமிட்டது. பேய்க்கு மிரளாதார் உண்டோ. ஆனால் அமுதம் மிரளவில்லை. "சீச்சீ...பேயே...போயேன். ஆண்டவனையே அச்சத்தால் வணங்காமல் அன்பால் வணங்குகின்றவர்கள் நாங்கள். உன்னைக் கண்டு அஞ்சினால்....அந்த இறைவனுக்குத்தான் இழுக்கு. மறைந்து தொலைந்து போ..." அச்சம் மிச்சமிருக்கும் வரைதான் எந்தக் கொடுமையும் தெரியும். பயம் மறைந்ததும் கொடூரத்தின் சுயம் மறைந்து விடும். அதுதான் அங்கும் நடந்தது. மாயப்பேய் மாயமாய்ப் போனது.

தன்னுடைய முந்தைய சாதனைகள் அத்தனையும் அமுதம் அழித்து அவமானப்படுத்திவிட்டதாகவே கருதினான். அதே நேரத்தில் அவரிடம் இருக்கும் சக்தி என்னதென்றும் அதன் அளவு எவ்வளவென்றும் கருதிட முடியாமல் தவித்தான். வலிமை தெரியாமல் அடுத்த படையை ஏவுவது அவனுக்குச் சரியானதாகப் படவில்லை. அந்த நொடியில் ஒரு திட்டம் தோன்றியது.

அமுதம் என்ன நடக்கின்றது என்று யோசிக்கும் முன்னமே ஒரு மயக்கக் குளிகையை தரையில் உருட்டினான். அதிலிருந்து மயக்கப்புகை அறையெங்கும் பரவியது. வெட்டுப்பட்ட கொடி போல தரையில் வீழ்ந்தார் அமுதம்.

மந்திரத்தண்டை மீண்டும் திருகினான். அதிலிருந்து சிறிய குமிழ் வெளிவந்தது. அந்தக் குமிழைப் பார்த்துச் சொன்னான். "கண்ணாடிக்குமிழே...இதோ இங்கே மயங்கிக் கிடக்கும் பெண்ணை சிறைப்படுத்திக் கொண்டு கூம்புமலைக்குச் செல்."

அவன் கட்டளையைப் புரிந்து கொண்ட குமிழ் சிறிது சிறிதாக காற்றடைக்கப்படுவது போலப் பெரிதானது. அப்படியே மிதந்து சென்று அமுதம் மீது அமர்ந்து அப்படியே அவரை தனக்குள் அடைத்துக் கொண்டது.

"ம்ம்ம்ம்...கூம்புமலைக்குச் செல்... வெளியிலிருந்து எந்தச் சத்தமும் உள்ளே வரக்கூடாது. உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் வெளியே வரக்கூடாது. இந்தப் பெண் பேசியே கூம்புமலையைச் சிதைத்து விடக்கூடும். ஆகையால் குரல் வெளியே வரவே கூடாது. செல்" உறுமினான் ஊழிவாயன்.

அந்தக் குமிழ்..அப்படியே அந்தரத்தில் எழும்பிப் பறந்தது.... சட்டென்று மறைந்தது. ஊழிவாயனும்தான். அந்த பொழுதில்தான் காட்டிற்குள் கதிரவனும் சித்திரையும் ஒரு பெரிய உண்மையைத் தெரிந்து கொண்டார்கள்.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, February 04, 2008

தங்க மரம் - 4

முன்கதைச் சுருக்கம்

கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான். பாகம்-2 மற்றும் பாகம்-3

பாகம் - 4

தாய் கொடுத்த பெட்டியை புது வேட்டியில் கட்டிக் கொண்டு ஓடினான் கதிரவன். எங்கே? அங்கேதான். வழக்கமாக சித்திரையைச் சந்திக்கும் இடத்திற்குத்தான். கதிரவனின் பாட்டனார் உயிர்தொடு செங்கையார் ஒரு மருத்துவர் என்று நாம் அறிவோம். அவரது மருத்துவச்சாலையைக் கோயிலாகவே கட்டியிருந்தார். வாழ்வளிக்கும் வள்ளலாகிய வள்ளி மணாளனுக்குக் கோயில் கட்டி...தீந்தமிழ்க் கடவுளுக்குக் கட்டிய அந்தக் கோயிலேயே மூலிகைத் தோட்டத்தையும் மருத்துவத் துறையும் அமைத்து சிறப்பாற்றி வந்தார்.

இன்றும் அந்தக் கோயிலும் மருத்துவத்துறையும் கதிரவனின் அன்னையின் பொறுப்பில் சிறப்பாக இருக்கின்றன. செங்கையாரிடம் கற்ற மாணாக்கர்கள் அங்கு மருத்துவம் செய்து வந்தால் நாட்டிலுள்ளோருக்கு அது பயனுள்ளதாகவே இருந்தது. கதிரவனும் அங்கு மருத்துவம் கற்றிருந்ததால் அவனும் ஒவ்வொரு பொழுது மருத்துவம் பார்த்தான்.

அந்த மருத்துவத்துறையின் மூலிகைத் தோட்டத்தின் வில்வமரம்தான் இவர்கள் இருவருக்கும் விளையாட்டு மரம். அங்கு கதிரவன் சென்ற பொழுது சித்திரை மருத்துவத்துறையில்தான் இருந்தான். மூலிகைத் தோட்டப் பராமரிப்பு அவர்கள் குடும்பத்தின் பொறுப்பு. சித்திரையின் தந்தை இளங்கோவின் காலத்திலிருந்து பொறுப்பாகச் செய்து வருகின்றார்கள்.


கதிரவனை விடச் சித்திரை ஓராண்டு மூப்பு. வந்த நண்பனைக் கட்டியணைத்துப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான். உற்ற நண்பர்களின் அணைப்பும் வாழ்த்தும் யாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பெட்டியும் பொறுப்பும் கைவந்ததிலிருந்து உணர்ச்சிவசப்பட்டிருந்த கதிரவனின் பரபரப்பு நண்பனைக் கண்டதும் குறைந்தது. பொன்னவிரிலையைப் பதப்படுத்திக் கொண்டிருந்த சித்திரையின் கையைப் பிடித்து வில்வமரத்தடிக்கு அழைத்துச் சென்றான்.

மடியில் முடிந்து வைத்திருந்த பெட்டியை எடுத்து நண்பனின் கையில் வைத்தான். "சித்திரை, இன்று அம்மா இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார்கள். இது அப்பா கொடுத்துச் சென்ற பெட்டியாம். அவர்..." கதிரவன் முடிக்கும் முன்னமே சித்திரை தொடர்ந்தான். "அவர் ஒரு கடமையை கொடுத்துச் சென்றிருக்கிறார். அது என்ன எதுவென்று அம்மாவிற்குத் தெரியாது. ஆனால் நீ ஆற்றல் மிக்கவனாக இருந்தால் கண்டு பிடித்துச் செய்து முடிப்பாய். சரிதானே?" சொல்லி விட்டுக் கண்ணைச் சிமிட்டினான்.

வியப்பில் வாயடைத்துப் போனான். "டேய்...இதை நீ எப்படி அறிவாய்?" சின்னக் கோவத்தில் நண்பனின் தோளில் குத்தினான்.

குத்தை வாங்கிக் கொண்டு சிரித்தபடியே சொன்னான் சித்திரை. "எட்டு மாதங்களுக்கு முன் என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய அன்னை எனக்குச் சொன்னது. உனக்குப் பதினெட்டு வயதாகும் பொழுது உன்னிடம் உன் அம்மா சொல்வார் என்றும் அதுவரையில் உன்னிடத்தில் இதைப் பற்றி நான் பேசக்கூடாது என்றும் எனக்கு என் அம்மா கட்டளையிட்டிருந்தார்கள். ஆகையால்தான் உன்னிடம் சொல்லவில்லை."

இதுவரைக்கும் எதிலும் ஒளிவு மறைவு என்று வைக்காத நண்பன் இப்படியொரு செய்தியை எட்டு மாதங்களாகச் சொல்லாமல் வைத்திருக்கிறானே என்ற ஆத்திரம் லேசாக இருந்தாலும் அம்மாவின் கட்டளை என்று சொன்னதும் அமைதியானான் கதிரவன். அதுவுமில்லாமல் தன்னிடம் ஒரு செய்தியைச் சொல்ல முடியாமல் எட்டு மாதங்கள் சித்திரை அடக்கி வைத்திருந்தான் என்பதை நினைத்ததும் நட்பின் பாசம் துளிர்த்தது. மறுபடியும் நண்பனைக் கட்டிக் கொண்டான்.

முதுகில் தட்டிக் கொடுத்த சித்திரை, கதிரவனைத் துறைக்குள் அழைத்துச் சென்றான். மூலிகை விதைகளையும் நாற்றுகளையும் அவை தொடர்பான மற்ற பொருட்களையும் வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தார்கள். பலப்பல மூலிகை விதைகளில் கிளம்பும் கும்மென்ற மணத்தை முகர்ந்ததும் இருவருக்கும் உடலில் புத்துணர்ச்சி பரவியது. அங்கேயிருந்த ஒரு பெட்டகத்தைத் திறந்து ஒரு துணிப்பொட்டலத்தை எடுத்தான் சித்திரை. பெரிய வெள்ளைத்துணிப் பொட்டலம். அதைக் கதிரவனையே பிரிக்கச் சொன்னான்.

வெண்ணெயை நெய்த துணி போல வாங்கிய கையில் ஒரு வழுவழுப்பை உணர்ந்தான். ஈரமில்லாமல் இருந்தாலும் குளிர்ச்சி உள்ளங்கையைக் குத்தியது. பிரிக்கப் பிரிக்க வெள்ளையாக இருந்த துணிப்பொட்டலாம் வெளிர் மஞ்சளானது. இன்னும் இரண்டு சுற்று பிரிந்ததும் அப்படியே அடர் மஞ்சளாகியது. நிறம் அடர்ந்து கொண்டே போய் துணி செக்கச் செவேல் என்று ஆனது. மொத்தத் துணியையும் பிரித்ததும் உள்ளே அரையடி நீளத்திற்கு ஒரு பக்கம் மட்டும் பட்டையாக உள்ள செக்கச் சிவந்த உருளை கதிரவனின் கைப்பிடியில் சிக்கியது.

கீழே விழுந்திருந்த பொட்டலத் துணி இப்பொழுது வெளுத்திருந்தாலும் உருளையைப் பிடித்திருந்த கதிரவனின் கை, கட்டியிருந்த வேட்டி, அவனது உடம்பு...என்று சிவப்பாகத் தெரிந்தது. மாயம் போல மயங்கியது கதிரவனின் மனது. வியப்பில் கேட்டான். "என்னடா இது? இப்படியொரு உருளைக் குச்சியை நான் பார்த்ததேயில்லையே. அனலில் இட்ட இருப்புக் கம்பி போல் ஒளிர்கிறது. ஆனால் தொட்டால் குளுமையாக இருக்கிறதே. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும்?"

பெருமூச்சு விட்டான் சித்திரை. "தெரியவில்லையே. பெட்டியை வைத்துக் கொண்டு நீ இன்றைக்குத்தானே முழிக்கத் தொடங்கியிருக்கிறாய். நான் எட்டு மாதங்களாக முழித்துக் கொண்டிருக்கிறேன். சரி. முதலில் பொட்டலத்தைத் திரும்பக் கட்டு. இங்கு மருத்துவர்களும் நோயாளிகளும் வருவார்கள். நாம் வேறொரு இடத்தில் இதைப் பற்றிப் பேசலாம். நடுப்பகலுக்கு மேல்தான் ஓய்வுப் பொழுது."

தான் கொண்டு வந்த பெட்டியையும் செங்கோலையும் ஒன்றாக வைத்து வெள்ளைத் துணியில் திருப்பக் கட்டினான். அப்படி அழுத்திக் கட்டும் பொழுது கிணுங்கிணுங்கென்று வெள்ளிமணியொலி கேட்டது. உடனே பொட்டலத்தைப் பிரித்து பெட்டியைக் கையிலெடுத்துக் குலுக்கினான். ஒன்றும் கேட்கவில்லை. செங்கோலையும் குலுக்கினான். எந்த ஓசையுமில்லை. யோசித்தபடியே மீண்டும் இரண்டையும் ஒன்றாக வைத்துக் கட்டினான். மறுபடியும் கிலுங்கிலுங்கென்ற் ஒலி கேட்டது. பெட்டியும் செங்கோலும் உரசும் பொழுது அந்த ஒலியெழுகிறதோ என்று இருவரும் நினைத்தார்கள். ஆனாலும் அங்கே வைத்து அதைப் பரிசோதிக்க அவர்களுக்கு அச்சமாக இருந்தது.

நடுப்பகல் வரும் வரையில் காத்திருக்கப் பொறுமையில்லாமல் துணிப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டு இருவரும் அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினார்கள். யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு மரங்களடர்ந்த பகுதியில் ஒரு பெரிய ஆலமரத்தின் மேல் ஏறிக் கொண்டார்கள். பொட்டலத்தைப் பிரித்து பெட்டியையும் செங்கோலையும் உரசினார்கள். கிலுங்கிலுங்கென்று ஒலியெழுந்தது. வெள்ளி மணியை காதோரம் வைத்து ஆட்டுவது போல.

மணியோசை நல்லிசையாக இருவரின் மனதையும் மெல்ல மயக்கியது. அப்படியே தொடர்ந்து உரசுகையில் "ம....ங்க......ஆ.....பாதி....யார்....களி...." என்று சொற்கள் துண்டு துண்டாக வந்து விழுந்தன.

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்