Wednesday, September 27, 2006

சீனியம்மா - சிறுகதை

"ஏல சீனி. இப்ப எப்பிடியிருக்கு? சவுரியந்தானா?" சீனியம்மாவிடம் கேட்டது மாரியம்மா.

சீனியம்மா சென்னைக்குப் போயி கண்ணு ஆப்புரேசன் செஞ்சிட்டு வந்துருக்குல்ல. அதான் ஊருல எல்லாரும் வந்து பாக்காக. புதூரு கொளக்கட்டாங்குறிச்சிதான் சீனியம்மாவுக்குச் சொந்தூரு. மிஞ்சி மிஞ்சிப் போனா தெக்க நாலாரமும் வெளாத்திகொளமும் போயிருக்கும். வடக்க அருப்புகோட்ட. கெழக்க சாத்தூரு. இதத் தாண்டி எங்க போயிருக்கு. அதான் இப்பச் சென்னைக்குப் போயிட்டு வந்துருக்கே.

"இப்ப நல்லாத் தெரியுது மாரி. ஒரு வாரத்துக்கு டாக்குடரு மூடுன மானிக்கி இருக்கனுன்னு சொல்லீருக்காரு. தோட்டந் தொரவு போய்ப் பாக்க முடியாது. இப்பிடி வீட்டுக்குள்ளயே கெடக்க வேண்டியிருக்கு." சொகமா அலுத்துக்கிருச்சி சீனியம்மா.

"அட இதென்ன பச்சத்துணி போட்டுல்ல மூடீருக்கு. இதத் தொறக்கக் கூடாதாக்கும்......" இழுவ எசக்கிதான். வேறாரு.

"இவ ஒரு இவ. பெரிய படிச்ச டாக்குடரு சொன்னா சும்மாவா இருக்கும். கூரில்லாமக் கேக்கியே? நம்ம அழகரு சென்னப் பட்டணத்துல இருக்கப் போயி சரியாப் போச்சு. இல்லீன்னா செலவுக்கு எங்க போக? சாத்தூரு டாக்குடரு கிட்டதாம் போகனும். ஆனாலும் பட்டணம் பட்டணந்தேன்." பெருமதான் சீனியம்மாவுக்கு. பின்னே மகன் வயுத்துப் பேரன் அழகருதான கூட்டீட்டுப் போயி பெரிய ஆசுப்பித்திரீல கண்ணு மருந்து காட்டி ஆப்புரேசன் செலவு செஞ்சது. மாரி மகன் அருப்புக்கோட்ட மில்லுல சூப்பருவைசருதான. எசக்கிக்கு மகதான். அவளையும் உள்ளூருல குடுத்துருக்கு. இவுக எங்க பட்டணம் போயி.....அந்தப் பெருமதான் நம்ம சீனியம்மாவுக்கு.

"இந்தால...பட்டணம் நாங்க எங்க பாக்க? என்னென்ன பாத்தன்னு சொல்லு. கேட்டுக்கிருதோம்." மாரியம்மா எறங்கி வந்துருச்சி. வெவரம் கேக்குறதுல்ல ரொம்பக் கெட்டிக்காரி மாரி.

"அதயேங் கேக்க மாரி. நம்மூருல பஸ்சு வர்ரதே பெரிய பாடு. அங்கன எங்கன பாத்தாலும் பிளசருதாம் போ. சர்ரூ சர்ரூன்னு போகுது. அழகரு வீட்டுலதான் தங்கீருந்தேன். கூடக் கூட்டாளிக ரெண்டு பயலுக. பாட்டி பாட்டீன்னு பாசமாக் கூப்புட்டானுக. கூட வேல பாக்குற பயலுகளாம். நல்லபடியாப் போயிருந்தா பொங்கிப் போட்டுருப்பேன். பாவம் கெளப்புக் கடைலயே எப்பவும் திங்கானுக. நம்ம சொருணந்தான் ரெண்டு நாளைக்குச் செஞ்சு போட்டா. (சொருணம் அழகரப் பெத்தவ. சீனியம்மாவோட மகன் வெள்ளச்சாமியக் கட்டுனவ.) நல்லாருக்கு நல்லாருக்குன்னு ருசிச்சி ருசிச்சி சாப்புட்டானுக. பாவம் யாரு பெத்த புள்ளைகளோ!"

"அது கெடக்கட்டும். ஆசுபித்திரி எப்பிடி? வீட்டுக்குப் பக்கத்துலயா?" எசக்கிக்கு வந்த சந்தேகம்.

லேசா முக்கி மொணங்குச்சு சீனியம்மா. "க்கூம். ஆசுபித்திரி ஒரு மூலைல. வீடு ஒரு மூலைல. புதூருலயிருந்து நாலாரம் போயி அங்கேருந்து வெளாத்திகொளம் போயி இன்னும் தெக்கால போற தூரம். கொஞ்சம் போனா குறுக்குச்சாலயே வந்துரும் போல. அம்புட்டு தூரம். அதுவும் ஆட்டோவுல கூட்டீட்டுப் போனான். ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டீருச்சு. லேசா கக்க வந்தது. கண்ண மூடிட்டுப் பல்லக் கடிச்சிட்டுப் போயிட்டேன்.

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆசுபித்திரி மாரி. அஞ்சாறு மாடியிருக்கும். அடேங்கப்பா...நிமுந்து பாத்தா கழுத்து வலிக்கு. உள்ள போனா ஆளு வெச்சித் தரையத் தொடச்சிக்கிட்டே இருக்காங்க. அப்பிடித் தொடைக்கங்காட்டிதான் தரை வழுவழூன்னு இருக்கு. ஆசுபித்திரி நடத்துறவக வெளிநாட்டுக்காரக போல. ஏன்னா அழகரு அவுககிட்ட இங்குலூசு பேசுனான். அவுக கிட்டப் பேசப் பயந்து கிட்டுத்தேன் நானு தலையத் தலைய ஆட்டுனேன். அதுவும் அவகளுக்குச் சிரிப்புதாம் போ.

அங்கன ஒருத்தி எந் தண்டட்டியப் புடிச்சிப் பாக்கா. என்னவோ பட்டிக்காட்டன் முட்டாய்க் கடையப் பாத்தாப்புல.

அத விடு. அங்க ஒரு பெரிய தெராசு இருக்காத்தா. ஒரே வேளைல நாலஞ்சு பேர நிப்பாட்டி நிறுக்கலாம். அத்தாம் பெருசு. அடிக்கடி அதுல ஆளுகள எட போட்டுப் பாத்தாக. நாம் போனதுங் கூட மொதல்ல என்ன எட பாத்தாக. ரெண்டு நாளு கழிச்சிப் பொறப்படும் போதும் எட பாத்துத்தான் விட்டாக. அவ்வளவு பதமா எதமா பாத்துக்கிட்டாக. எட பாக்கைல அப்பிடியே ஜிவ்வுங்குது. பெரிய தராசுல்ல. நான் அழகரு கையப் பிடிச்சிக் கிட்டேன்.

அங்கனயே ரூம்புல சாப்பாடு. உள்ளயே படுக்கச் செய்ய வசதி. பளபளக் கக்கூசு. பெரிய பதவிசாத்தா....."

மாரியம்மாவும் எசக்கியும் இதெல்லாங் கேட்டுக் கெறங்கிப் போனாக. சீனியம்மா சொன்னத வெச்சிப் பாத்தா ஆசுபித்திரி கட்டபொம்மங் கட்டுன அரமண கெணக்கா இருக்கனுமுன்னு நெனச்சிக்கிட்டாக. அந்த ஆசுபித்திரிக்கு ஒரு வாட்டியாச்சும் போய்ப் பாக்கனுமுன்னு மனசுக்குள்ள இருக்கங்குடி மாரியாத்தாளுக்கு நேந்துக்கிருச்சி எசக்கி. மூனாவது பொறக்கப் போற பேரனுக்கோ பேத்திக்கோ இருக்கங்குடீல மொட்டையெடுத்து காது குத்தி கெடா வெட்டனுமுன்னு நேந்துக்கிருச்சி. இல்லைன்னாலும் எல்லா அங்கதான் செய்யுறது.

ரெண்டு பேருங் கொஞ்ச நேரம் சீனியம்மாகிட்ட பேசீட்டுப் பொறப்பட்டாக. அப்பப் பாத்து வந்தான் அழகரு. வட்டக் கெணத்துல குளிச்சிட்டு துண்டக் கெட்டிக்கிட்டு வந்தான். திண்ணைல வெச்சிக் கெழவிக அவனப் பிடிச்சிக்கிட்டாக.

"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம்? எம்புட்டுக் கூடிச்சாம்? கொறஞ்சுச்சாம்?" கேட்டது வெவரம் மாரியம்மா.

"அது தெராசில்ல பாட்டி. அது லிஃப்டு. அது மேல போகும். கீழ வரும்."

"இவன் ஒருத்தன் வெவரம் புரியாம. அதுதான் தெராசு. அதத்தான சீனி சொல்லுச்சு. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுல. சரி. வர்ரோம். நேரமாச்சு. வீட்டுப் பக்கம் வர்ரது. சுடுகருவாரு சுட்டுத்தர்ரேன்...." கிழவிக ரெண்டும் சொல்லீட்டு நகந்து போய்க்கிட்டேயிருந்தாக. அழகருதான் செலயா நின்னான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, September 18, 2006

பெங்களூரில் ராகவனைச் சந்தித்தேன்

ஆமா...சென்னையிலேயே சந்திச்சிருக்க வேண்டியது. எப்படியோ தட்டிப் போயிருச்சு. பெங்களூர் வந்தப்புறம் சந்திக்க வாய்புக் கிடைச்சது. அதாவது சனிக்கிழமை செப்டம்பர் 16ம் தேதி இரவு. அதுவும் நண்பர்களோட. எங்கன்னு கேக்குறீங்களா? PVR Cinemasலதான். வேட்டையாடு விளையாடு படத்தச் சென்னையில இருக்கும் போதே பாத்திருக்க வேண்டியது. எப்படியோ நேரமில்லாமத் தள்ளிப் போச்சு. இங்க பெங்களூர்ல போன வாரம் முயற்சி செய்து முடியாமல் இந்த வாரம் சனிக்கிழமை இரவுக் காட்சிக்குப் போக முடிந்தது.

டி.சி.பி ராகவன் பாத்திரத்தில் கமல். படம் தொடங்கும் போதே ராகவன் தொல்லை தாங்க முடியலைன்னு ஒருத்தர் சொல்ற மாதிரிதான் தொடங்குது. வலைப்பூவுல இருந்து யாரும் வசனம் எழுதீருக்கீங்களா என்ன? ஹா ஹா ஹா! பொதுவாவே ராகவன்னு பேரெல்லாம் தமிழ்ப் படத்துல பாக்க முடியாது. ராஜாதான் நெறைய பயன்படுத்துன பேர்னு நெனைக்கிறேன். ஆகையால படம் பாக்கும் பொழுது என்னையுமறியாம ராகவன் பாத்திரத்தோட கொஞ்சம் ஒன்றீட்டேன்னுதான் சொல்லனும். அதுலயும் கூட வந்தவங்க செஞ்ச வம்பு இருக்கே! அப்பப்பா! :-)

டி.சி.பி ராகவன் வீட்டுலயும் வாரம் ஒரு வாட்டி கறி எடுக்குறாங்க. ஹி ஹி. நம்ம வீட்டுலயுந்தான். எவ்வளவு பெரிய ஒத்துமை. அத விட அவரு வீட்டுல பூஜையறையில நடுநாயகமா முருகன் படம். அதுவும் வள்ளி தெய்வானையோட நிக்குற பெரிய படம். :-) நான் கவனிச்சதது போலவே கூட இருந்த நண்பர்களும் பாத்துட்டு எங்கிட்ட சொன்னாங்க. புல்லரிச்சுப் போச்சுங்க எனக்கு. :-)

டி.சி.பியும் அமெரிக்காவுக்கு ஒரு வாட்டிதான் போயிருக்காரு. நானும் அப்படித்தான். நல்ல வேளையா நமக்கு அமெரிக்காவுல அடிகிடி படலை. அதுல பாருங்க டி.சி.பி ராகவன் கையில தொட்டில் கட்டியிருக்கிற காட்சியில எனக்குக் கண்ணுல தண்ணி வந்துருச்சு. சென்னையில இருந்தப்போ நான் கட்டிக்கிட்டிருந்தேனே! அந்த நெனப்புதான்.

சவால்லாம் பயங்கரமா விட்டுச் சண்டை போடுறாரு டி.சி.பி. நமக்கு அதெல்லாம் ஆகாதுங்க. என்னத்தச் சண்ட போட்டு....ஆனா ஒன்னு....Raghavan's Instinctன்னு சொல்றாரு பாருங்க....அது நமக்கு அப்பிடியே பொருந்தும். என்னோட வாழ்க்கையில பலவாட்டி நான் அனுபவிச்சதுதான் அது. அதெல்லாம் சொல்லலாந்தான். ஆனா அடுத்தவங்களும் தொடர்புள்ள நிகழ்ச்சிகள். அதுனால சொல்ல விரும்பலை. அதுனால டி.சி.பி ராகவனுக்கு அந்த instinct வேலை செய்ற காட்சிகள்ள எனக்கு ஒரு மாதிரி ஈரப்படுக்கையில படுத்திருந்த மாதிரி இருந்தது. ஆனா நேரா கருத்துக்கு வர்ர அவருடைய வழக்கம் எனக்கும் உண்டு. எல்லாருக்கும் உண்டுன்னு எல்லாரும் சொல்வாங்கன்னு நெனைக்கிறேன்.

இன்னொரு ஒத்துமை. எனக்குக் கயல்விழிங்குற பேரு ரொம்பப் பிடிக்கும். தமிழில் பிடிச்ச பேர்கள்ள அதுதான் முதலிடம்னே சொல்லலாம். ஒரு பெண்குழந்தையக் குடுத்துப் பேர் வெக்கச் சொன்னா மொதல்ல அந்தப் பேரத்தான் வெப்பேன்.

நமக்கும் டிசிபிக்கும் கொஞ்சம் வேறுபாடுகளும் இருக்குது. அவருக்கு மீசை இருக்குது. என்னைய விட பெரிய தொப்பை வெச்சிருக்காரு. போலீஸ் பாத்திரம்னு அப்படி இருந்திருக்கலாம். காரு ஜீப்பு ஓட்டுறாரு. எனக்குத் தெரியாதே. பைக்குதான் தெரியும். கதவையெல்லாம் என்னால மோதி ஒடைக்க முடியும்னு தோணலை. அதே போல கழுத்தத் திரிகிக் கொல்ல முடியுமான்னும் தெரியலை. கறி கோழி திம்பேன்னாலும் ஒரு கோழியக் குடுத்து வெட்டுன்னு சொன்னா இன்னைக்கு இருக்குற ஜிராவால செய்ய முடியும்னு தோணலை.

படத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு மிகச் சிறப்பு. அவர் இருக்கும் காட்சியில் ராகவன் இருப்பதே தெரியவில்லை. ஜோதிகாவும் ராகவனை பன்னுக்குள் சாசேஜை வைத்து ஹாட் டாக் போல கபலபக்கி விடுகிறார். கமலும் ராகவன் என்ற பெயரினாலோ என்னவோ அடக்கி வாசித்திருக்கிறார் போல. :-) ஆனால் அதுவும் அழகாய்த்தான் இருக்கிறது. வெள்ளை ரோஜா படத்தில் போலீஸ் சிவாஜி மனோரமாவை விசாரணைக்கு அழைத்து வரச் சொல்வார். அந்தக் காட்சியில் மனோரமாவின் அரசாங்கந்தான். சிவாஜி அமைதியாக இருந்து மனோரமாவிற்கு பெயர் வாங்கிக் கொடுப்பார். அந்த மாதிரி நடித்திருந்தார் டி.சி.பி.

வில்லன்களைச் சொல்லாமல் விட முடியுமா? ஒரு வில்லனைக் கொஞ்சமும் யோசிக்காமல் கதாநாயகனாகவே போடலாம். அவ்வளவு நன்றாக இருக்கிறார். நடிக்கிறார். நல்ல வாய்ப்பு கிடைக்க எனது வாழ்த்துகள். நான் இளாவைத்தான் சொல்கிறேன். அமுதன் கொஞ்சம் அளவுக்கு மீறிய சேட்டை. பார்க்கும் பொழுதே எரிச்சல் வருகிறது. அதுதான் அந்தப் பாத்திரத்திற்குத் தேவை என்று நினைக்கிறேன். இரண்டு bi-sexual ஆண்களை வில்லனாகப் போட்டுப் படமெடுப்பது தமிழுக்குப் புதிது.

கமலினி....கமல் இனி வாய்ப்புக் குடுப்பாரா என்று தெரியவில்லை. பின்னே....முத்தக் காட்சியே படத்தில் இல்லையே! ஆனாலும் அழகாய்த் தோன்றி அடக்கமாய் நடித்து படக்கென்று போய் விடுகிறார். அதனால்தானோ என்னவோ கதாநாயகியின் மொத்த எடையையும் ஜோதிகா வாங்கிக் கொண்டு மிகச் சிறப்பாய் செய்திருக்கிறார். இனிமெல் திரைப்படத்தில் நடிக்க மாட்டாராம். நல்லது. அது அப்படியே இருக்க இறைவனை வேண்டுகிறேன். அதுதான் அவரது குடும்ப வாழ்க்கைக்கு நல்லது.

பாடல்கள் எல்லாமே நன்றாக எழுதப் பட்டிருக்கிறது. தாமரை! உங்களைத் தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று வருந்தாதீர்கள். நல்ல குலாப்ஜாமூன் எப்பொழுதாவது ஒருமுறை கிடைத்தாலும் நாவிலும் நெஞ்சிலும் நிற்கும். ஆனால் உங்களின் பாடல் ஒன்று வடக்கத்திப் பாடகர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருக்கிறது. கேட்கும் பொழுது வருத்தமாக இருந்தது.

ஹாரிஸ் ஜெயராஜ். வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவெ.....சூப்பரப்பு! ஆனாலும் நீங்கள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது. வாழ்த்துகள்.

கடைசியாக கௌதமுக்கு சில வரிகள். நல்ல முயற்சி கௌதம். படம் வெற்றிப்படம்தான். ஐயமில்லை. படத்தை நானும் ரசித்தேன். ஆனால் எப்படி UA கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. A+ கொடுத்திருக்க வேண்டும். அந்த அளவு வன்முறை. பலகாட்சிகளில் திரையிலிருந்து கண்களை விலக்க வேண்டியிருந்தது. படத்தில் ஜோதிகாவைக் கொன்று விடுவீர்களோ என நினைத்தேன். நல்லவேளை...என்னுடைய சாபத்திலிருந்து தப்பினீர்கள். :-)

வெண்ணிலவே பாடலைத் திரையில் மிகவும் ரசித்தேன். அந்த வெள்ளைக்கார மாணவர்கள் தமிழில் பாடுவது ரொம்பவும் இயல்பாகவும அழகாகவும் இருந்தது. அந்தப் பாடலின் முடிவில் தன்னையுமறியாமல் டி.சி.பி ராகவன் ஆராதனாவை (ஜோதிகாவை) உள்ளத்தில் ஈர்த்துக் கொள்வது மிகவும் அழகாக படமாக்கப்பட்டிருந்தது. ரசித்தேன்.

அதே போல டி.சி.பி தன்னுடைய காதலை ஆராதனாவிடம் சொல்லும் காட்சியும் மிக அழகு. தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு செல்லும் ஆராதனாவின் முகபாவங்களும் நடிப்பும் புதுமை. இனிமை. ஆராதனா வெளிப்படுத்திய காதலின் எடை கயல்விழி காட்டும் காதலை விட மிக இயல்பாக வந்திருக்கிறது. அதிலும் ஆராதனா தன்னுடைய தங்கையிடம் ராகவனுடன் நடத்திய உரையாடலை விவரிக்கும் கட்டம். அப்பப்பா! நமக்குள் திக்திக்தான்.

கௌதம், படம் முடிகையில் எனக்கு ஒன்று தோன்றியது. எல்லாரும் இந்தப் படத்தைக் காக்க காக்க -2 என்று சொல்கிறார்கள். அது தப்பு. இதுதான் காக்க காக்க - 1. காக்க காக்கவிற்கு முன்னோடி. இதன் தொடர்ச்சிதான் காக்க காக்க கதை. ஏன் இப்படி நினைக்கிறேன் தெரியுமா? படத்தில் ஜோதிகாவின் மகளின் பெயர் மாயா. அந்த மாயாதான் காக்க காக்கவில் வரும் மாயா டீச்சர். ஜோதிகாவின் மகள் ஜோதிகாவைப் போலவே இருப்பதும் சரிதானே! இது குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லையோ!

அன்புடன்,
கோ.இராகவன்

Saturday, September 09, 2006

2. லம்பயீ கரியோ லொவீயா - பாகம் ரெண்டு

தாமதத்துக்கு மன்னிக்கவும். என்ன பண்றது. அடுத்த பாகம் போட வேண்டிய பொழுதுதான் சென்னைய விட்டுக் கெளம்பி பெங்களூர் வர வேண்டியதாப் போச்சு. வந்த மொத வாரம் வேலை நெறைய. அதாங்க காரணம். ஆனாலும் போன வாட்டி போட்டிருக்க வேண்டிய படங்களை இந்த வாட்டி போட்டிருக்கேன்.முதல் பாகத்த இங்க பாத்தீங்க. இப்ப ரெண்டாம் பாகத்துக்கு வருவோம்.

நவீன நாடகங்கள் எனக்குப் புரியாது என்று பெருமை பேசுகின்ற தமிழர் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருந்தாலும் அவ்வப்பொழுது ஆசை உந்த பார்த்து விடுவது உண்டு. பெங்களூரில் ஆங்கில கன்னட நாடகங்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு தமிழ் நாடகங்களைப் பார்க்கக் கிடைக்கவில்லை. மூன்று மாதங்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்ற நிலை வந்த பொழுது நாடகங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆசை அடிவயிற்றில் விழுங்கிய அத்தனை இட்டிலிகளுக்கு அடியிலும் ஒளிந்து கொண்டிருந்தது.

கூத்துப்பட்டறை பற்றி எல்லாரும் கொஞ்சமாவது கேள்விப்பட்டிருப்பீர்கள். நவீன நாடகங்களுக்குப் பெயர் போனவர்கள். பொன்னியின் செல்வனை மேடையேற்றியவர்கள். என்.முத்துசாமி அவர்களின் உழைப்பாலும் முயற்சியாலும் 1977ல் தொடங்கி தமிழ் நாடக உலகில் புதுமலர்ச்சியும் முயற்சியும் கொண்டு வந்தவர்கள். இன்னும் நிறைய சொல்லலாம். நாடகத்தையும் நடிப்பையும் கற்றுக் கொள்ளச் சிறந்த இடங்கள் என ஐந்து இடங்களை UNESCO தேர்ந்தெடுத்துள்ளது. அந்தப் பட்டியலில் கூத்துப்பட்டறையும் இருப்பது அதன் உழைப்பாலும் பங்களிப்பாலும். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிலிருந்து நடிகர்கள் வந்து மூன்று மாதங்கள் கூத்துப்பட்டறையில் தங்கி பயிற்சி பெறுவார்கள்.

பரமார்த்த குரு கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வீரமாமுனிவர் என்றழைக்கப்படும் Contenstine Jospeh Beski எழுதியதாகக் கருதப் படுவது. தேம்பாவணி என்னும் நூலும் இவர் எழுதியதாக் கருதப் படுவதே. இவர்தான் எழுதினார் என்றுதான் சிறுவயதில் பள்ளியில் படித்திருக்கிறேன். ஆனால் பல தமிழாராய்ச்சி நூல்களைப் புரட்டிய பொழுது இவரு எழுதாமல் இவருக்கு ஆசானாக இருந்த சுப்ரதீபக் கவிராயர் எழுதியிருப்பாரோ என்று பலர் கருதுகின்றனர். ஆனாலும் இவர் எழுதவில்லை என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாததால் அவரால் எழுதப்பட்டது என்று கருதப்படுவது என்று நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

கிருத்துவ மதப் பிரச்சாரத்திற்காக இத்தாலியிலிருந்து இந்தியா வந்தவர் இவர். ஒன்றை நம்பினால் இன்னொன்றை மறுப்பது என்பதுதானே பொதுவான உலக வழக்கு. அந்த வகையில் கிருத்துவத்தை நம்பிய அவர் அப்பொழுதைய தென்னிந்திய மக்களின் நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து எழுதியதாகக் கருதப்படுவதே பரமார்த்த குரு கதைகள். வைரத்தையும் தங்கத்தையும் நக்குவதைக் காட்டிலும் சிறந்த நகைச்சுவைக் கதைகள் அவை.

இந்த பரமார்த்த குரு கதையும் கூத்துப்பட்டரையும் இணைந்தால் என்ன கிடைக்கும்? மாலைப் பொழுதை நல்லவிதமாகப் பொழுது போக்கினோம் என்று மனநிறைவைத் தரும் நல்ல நாடகமும் அதனால் பல சுவையான நினைவுகளும் வலைப்பூக்களிலும் மன்றங்களிலும் சில பல பதிவுகளும் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் பதிவுகளில் ஒன்றுதான் நான் தருவது. இப்பொழுது நீங்கள் படிப்பது.

இருட்டில்தான் எல்லாம் தொடங்குகிறது என்கிறார்கள் திருமணமானவர்கள். நாடகம் பார்க்கிறவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். டிஜிட்டல் கேமிராவை வைத்துக் கொண்டு நானும் தயாராக இருந்தேன்.

ஓ பகிரியா ஓ பகிரியா
லம்பயி கரியோ லொவீயா
க்வாக் க்வாக் க்வாக்
ஓ பகிரியா ஓ பகிரியா

பின்னாடியிருந்து சத்தம் வந்தது. டொண்ட்ட டக்க டொண்ட்ட டக்க என்று தாளவொலி. தலையில் வட்டக் கொண்டை. அதைச் சுற்றிலும் பூச்சரம். மழுமழு முகம்.நெற்றியில் வட்டமாய்க் கருப்புப் பொட்டு. இளஞ்சிவப்பு அரிதாரமுகமும் அடர் சிவப்பு வாயும். முழுக்கைச் சட்டை. முக்காப் பாவாடை. ஜிலுஜிலுவென பாடிக் கொண்டே இறங்கி வந்தாள் சோலை. இரண்டு பக்கமும் ரசிகர்களைப் பார்த்துப் பாடிக் கொண்டே வந்தவள்.....கருத்த மச்சானாக கட்டழகாக உட்கார்ந்திருந்த ஒருவர் பக்கத்தில் ஆசையோடு உட்கார்ந்து பாடுகிறாள். பார்வையால் அவனைப் பருகிக் கொண்டே மேடைக்குப் போகிறாள்.

தன்னைச் சோலை அறிமுகம் செய்து கொள்கிறாள். "நான் அவனா அவளான்னு பாக்குறீங்களா? அவன்ல இருக்குற ன்னோட நடுவுல இருக்குற சுழி போயி கோடு வந்து அவளாயிருச்சு." இருபொருள் பட அவளது பாலியல் மாற்றத்தை விளக்குகிறாள். கூஊஊஊஊஊச்! இதுதான் சோலைக்கு ரொம்பப் பிடித்தது. அதென்னது! அட! அதையெல்லாம் வெளிப்படையாச் சொல்வாளா என்ன? :-)

இந்தச் சோலைதான் பரமார்த்த குருவோட ஆசிரமத்துல குருவுக்கும் சீடர்களுக்கும் எடுபடியா உதவியா இருக்குறது. இவளோட பார்வையிலதான் நாடகம் தொடர்ந்து நடக்கப் போகுது!

கூஊஊஊஊஊச்! (நானில்லை. சோலை)

தொடரும்...