Saturday, June 13, 2009

தொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா?

நானெல்லாம் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்மளையெல்லாம் நினைவு வெச்சிருப்பாங்களான்னு நெனைக்க விடாம நாமக்கல் சிபி இந்தப் பதிவுக்குக் கூப்டுட்டாரு.

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எந்தப் பேரு? இராகவனா? ஜிராவா? இராகவங்குற பேர் எங்கத்தை வெச்சது. அப்பாவோட அக்கா. அவங்க கனவுல அவங்க பாட்டி வந்து இராகவன் பொறக்கப் போறான்னு சொன்னாங்களாம். அப்படீன்னு அத்தைதான் சொன்னாங்க. குளக்கட்டாங்குறிச்சி அப்பா வழிச் சொந்தமெல்லாம் கூப்டுறது இராகவன். ரெட்டியபட்டி அம்மா வீட்டுச் சொந்தங்கள்ளாம் ராஜேஷ்னு முந்தி கூப்புடுவாங்க. ஆனா வளர வளர இராகவன்னு நின்னிருச்சு. ஆக... ராஜேஷ்ங்குறதும் என்னோட இன்னொரு பேர்தான்.

ஜிராங்குற பேர் நுனிப்புல் உஷா வெச்சது. எப்பன்னு நினைவில்ல. ஆனா மொதமொதல்ல அவங்கதான் சுருக்கமா ஜிரான்னு கூப்டாங்க. அது அப்படியே நின்னுருச்சு.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
அழுவதா? கண்களாலா? உள்ளத்தாலா? கண்களால் என்றால் நீண்ட நாட்களாயிற்று. உள்ளத்தால் என்றால் மிகச் சமீபத்தில் அழுதேன். எங்கள் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் உறவைக் கைகளில் தாங்கி அணைத்திருந்த பொழுது அன்பினால் உள்ளம் இளகி அழுதது. அது ஆனந்த அழுகை.
பி.கு - சமீபத்தில் என்னுடைய சகோதரியையும் குழந்தையையும் பார்ப்பதற்கென்று சிங்கைப் பயணம் சென்றிருந்தேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
அதக் கேக்காதீங்க. ரொம்பக் கொடுமையானது அது. கொழந்த எழுதுனாப்புல இருக்கும். ஆங்கிலம் எழுதுனாலும் தமிழ் மாதிரி முட்ட முட்டையா இருக்கும். அதையெல்லாம் இனிமேத் திருத்த முடியுமான்னு தெரியலை. இருந்துட்டுப் போகட்டும்.

4).பிடித்த மதிய உணவு என்ன?
நல்ல சாப்பாடுன்னா போதும். குறிப்பிட்டு இன்னதுன்னு இல்லை.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நட்புதானே வெச்சுக்கலாம். நட்புலயே பல நிலைகள் இருக்கே. பழகுற நபரைப் பொருத்து நட்பின் நிலைகள் மாறும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவிதான். கடலும் பிடிக்கும். ஆனா ரெண்டுலன்னு கேட்டா... அருவிதான். அதுக்காக நயாகராவும் அருவின்னு சொல்லி எறக்கி விட்றாதீங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
மொதல்ல பாக்குறப்போவா... முகம்னு நெனைக்கிறேன்.

இத எழுதுறப்போ ஒரு கவிதை நினைவுக்கு வருது. திரிகூடராசப்பக் கவிராயர் எழுதுனது.
மனம் முந்தியதோ
விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே
பாத்ததும் ஆவலிலும் ஆசையிலும் மனசு தொடனும் ஆசப்பட்டுக்கிட்டிருக்குறப்பவே கண் போய் தொடப்போச்சாம். பாத்தா.. கை தொட்டிருக்கு. அவ்ளோ ஆவல். தொடனும்.. தொடனும்னு. நல்லா அனுபவிச்சி எழுதீருக்காரு ராயரு.


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சதுன்னா...... நிறைய இருக்கு. எங்கிட்ட என்னென்ன பிடிச்சதுன்னு மத்தவங்கதான் சொல்லனும். நம்மளைப் பிடிச்சவங்க நம்ம கிட்ட என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிக் கேக்குற ஆவலே தனிதான். பிடிக்காத விஷயம் சோம்பல். இத மாத்தனும்னு கடும் முயற்சி பண்றேன். கடைசி நேரத்துக்குத் தள்ளிப் போடுற பழக்கம் மாறனும். மாறியே ஆகனும்.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சரி பாதியா? அப்படி யாராச்சும் எனக்கு இருந்தாங்கன்னா... அவங்களைப் பாதின்னு எப்படிச் சொல்ல முடியும். நாந்தான் அவங்க. அவங்கதான் நான். ஆகா நான் பிடிச்சது பிடிக்காததுன்னு சொன்னா.. அது என்னப் பத்தித்தானே இருக்கனும். இதுக்கு என்ன சொல்றீங்க? ;)


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
நான் ஒரு மகன்னா... எங்கம்மாப்பா பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்
நான் ஒரு அண்ணன்னா... என்னோட தம்பி தங்கைகளோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்
நான் ஒரு தம்பின்னா... என்னோட அக்கா அண்ணன்கள் கூட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்
நான் ஒரு மாமன்னா.... என்னோட மருமக்களோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்
நான் ஒரு காதலன்னா என்னோட காதல் துணையோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்
நான் ஒரு கணவன்னா என்னோட வாழ்க்கைத் துணையோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்
நான் ஒரு நண்பன்னா... நண்பர்களோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்

இப்பிடி அடுக்கிக்கிட்டே போகலாம்...


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வாடாமல்லி நிறத்துல கொஞ்சம் சாயம் போன டீ.சட்டையும்.... செகப்பு, கருப்பு, வெள்ளை, பச்சை கலந்துக் கட்டம் போட்ட பைஜாமாவும் போட்டிருக்கேன். இவ்ளோ சொன்னாப் போதும்ல... வேறு ஏதாச்சும் தகவல் வேணுமா?

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
தமிழ்ப் பாட்டுதான். ஜெயச்சந்திரன் பாடுன ஒரு அழகான பாட்டு.

ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என்னுயிரிலே நீ கலந்தாய்
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நாவல்பழ நிறம். எனக்கு மிகவும் பிடித்த நிறம். சின்ன வயசுல புண்ணு வந்துச்சுன்னா வயலட் ஜெல்லி போடுவாங்க. ஜிலுஜிலுன்னு இருக்கும். காந்தாது. அதே நேரத்துல பாக்கவும் அழகா இருக்கும். தூத்துக்குடி பிரிண்ஸ் டாக்டர் ஆஸ்பித்திரில போட்ட வயலெட் ஜெல்லி இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு.

14.பிடித்த மணம்?
இதுக்கு என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியும். ஆனா சொல்ல மாட்டேனே... ;)

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
மூனு பேரைக் கூப்புடுறேன். நண்பர்கள் கே.ஆர்.எஸ், குமரன், மற்றும் பாலாஜி.
கே.ஆர்.எஸ்சின் எழுத்துத் திறமையும் அறிவின் ஆழமும் நான் நினைத்து நினைத்து வியப்பவை. அவருடைய திறமையில் கொஞ்சமாச்சும் இருந்தா... நான் சிறப்பா வேலை செய்வேன்னு நெனைக்கிறேன்.
குமரனைப் பத்திச் சொல்லனும்னா... அவருடைய உழைப்பும் எழுத்தும். நேரத்தை எவ்ளோ அழகாப் பயன்படுத்துறாரு. எவ்ளோ படிக்கிறாரு. அடேங்கப்பா.
பாலாஜி.... வெட்டிப்பயல்ங்குற பேரை...வெற்றிப்பயல்னு மாத்தனும் கோரிக்கை வைக்கிறேன். அந்த அளவுக்குச் சுறுசுறுப்பு. விறுவிறுப்பு.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
சிபியோட பல பதிவுகளைப் படிச்சிருக்கேன். முருகனருள்ள இட்ட இந்தப் பதிவு ரொம்பப் பிடிக்கும்

17. பிடித்த விளையாட்டு?
நானொரு விளையாட்டு பொம்மையா........

18.கண்ணாடி அணிபவரா?
ஓ போடுவேனே. ஆனா எப்பவும் காண்டாக்ட் லென்ஸ் போடுறது வழக்கம். வாங்குன லென்ஸ் தீந்து போச்சு. இன்னைக்கே ஆர்டர் குடுக்கனும். ஆன்லைன்ல குடுத்துட்டா நாலஞ்சு நாள்ள வந்துரும். அதுவரைக்கும் கண்ணாடிதான் போட்டுக்கனும்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எனக்கு நெறைய விதமான படங்கள் பிடிக்கும். ஒரு மாதிரி கதம்ப ரசனை. அலுப்புத்தட்டாம இருக்கனும். அவ்ளோதான். சமீபத்துல பாத்த படம் Conspiracy. மறக்க முடியாத படம். அவ்ளோ ஒன்றிப் போயிருந்தேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
கடைசியாவா.... Hangover. நகைச்சுவைப் படம். கொஞ்சம் அத்துமீறலா இருந்தாலும் நல்லாத்தான் போச்சு. ஆனா படம் பாக்குறப்போ படம் பிடிச்சிருந்தாலும்.. போகாம வீட்டுக்குப் போயிருந்திருக்கலாமோன்னு தோணீட்டேயிருந்துச்சு.

21.பிடித்த பருவ காலம் எது?
பிடித்த பருவகாலமா.... வசந்தகாலம்.

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
வாழ்க்கை என்னும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பக்கங்களும் ஒவ்வொரு திருப்பங்களோடு இருக்கின்றன.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அத மாத்தவே இல்லை. சுவிட்சர்லாந்து போனப்போ லூசர்ன்-ல எடுத்த படந்தான் இருக்கு.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது முத்தச் சத்தம்
பிடிக்காதது துயரம் மிகு அழுகைச் சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
தூத்துக்குடில இருந்து அமெரிக்கா எவ்ளோ தொலைவு? அமெரிக்கால வாஷிங்டன் டீசிய விட பென்சில்வேனியா தொலைவுன்னா... அதாத்தான் இருக்கனும்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தனித்திறமையா? தண்ணித் திறமை நெறையவே இருக்குன்னு சொல்றாங்க. சமீபத்துல திறைமையக் காமிச்சது மாலிபூல.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நெறைய இருக்கு. என்னன்னு சொல்றது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கொஞ்சம் தன்னலம் உண்டு. அது தலை தூக்குறப்பல்லாம் குற்றவுணர்ச்சியும் தலைதூக்கும். பல வேளைகள்ள தன்னலம் வெற்றி பெற்றிருக்கு. பல வேளைகள்ள குற்றவுணர்ச்சியும் வெற்றி பெற்றிருக்கு.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மனசுக்குப் படிச்சவங்க கூட இருந்தா எந்தத் தலமும் பிடிச்ச தலமே. சமீபத்துல நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தலம் சிங்கைத் தலம். நீண்ட நாட்களாக போக விரும்பும் இடங்கள்..... எகிப்து மற்று கிரேக்கம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மகிழ்ச்சியோட இருக்கனும்னு ஆசை

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
தெரியலையே....

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழனும். கண்டிப்பா வாழனும். வாழ்ந்தே ஆகனும். வாழ்க்கை வாழ்வதற்கே.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்