Thursday, July 31, 2008

ரஜினி நடிக்கும் மன்னிக்க வேண்டுகிறேன்

ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனால் (ஆகித் தொலைந்தால் என்று படிக்க விரும்புகிறவர்கள்...அப்படியும் படித்துக் கொள்ளலாம்)

முதலமைச்சர் அலுவலகத்தில் (சும்மாக்காச்சுக்கும் கூட செயிண்ட் ஜார்ஜ் கோட்டைன்னு சொல்ல மனசு வரலைங்க) உட்கார்ந்திருக்கிறார்.

"நாராயணா.. நாராயணா..."

ரஜினிகாந்தின் அழைப்பைக் கேட்டு ஓடி வருகிறார் உதவியாளர்.

"என்னங்க சத்தியத்த விட்டுட்டீங்க? நன்ன ஹெசுரு சத்யநாராயணா".

ஸ்டைலாகச் சிரிக்கிறார் ரஜினிகாந்த். "ஹா ஹா ஹா... சத்தியத்தை விட்டாலும் நாராயணனை விட மாட்டேன். ஹா ஹா ஹா"

"நீங்க சத்தியத்தை விடுங்க...சாப்பாட்டையும் விடுங்க...இப்ப அவசரமான பிரச்சனை ஒன்னு வந்திருக்கு. அதப் பாருங்க."

"நாராயணா... என்னைப் பிரச்சனைகளிலிருந்து பார்த்துக் கொள்ளுங்கள்...பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். பிரச்சனையைச் சொல்லு."

"நீங்க காவிரி மினரல் வாட்டர் தமிழ்நாட்டுக்கும் டிஸ்டிரிபியூட் பண்ணனும்னு கோர்ட்ல கேஸ் போட்டீங்களே....அதுக்கு அவங்கள்ளாம் ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே.... அப்பக் கூட நீங்க... ஆர்ப்பாட்டம் பண்றவங்களைப் பாத்து ஏன் ஆர்ப்பாட்டம் பண்றீங்கன்னு கேட்டீங்களே...அது இப்பப் பெரிய பிரச்சனையாயிருச்சு."

"அது நடந்து ஒரு வருஷம் இருக்குமே. இப்ப என்ன பிரச்சனை?"

"ஒங்க குரு தயாரிச்ச துரியோதனன் படத்துல நீங்க முதலமைச்சரா வர்ரீங்களே... அந்தப் படத்த அங்க ரிலீஸ் பண்ணக் கூடாதாம். அதான் பிரச்சனை."

"என்ன அந்யாயம் இது.. படத்த ரிலீஸ் பண்ணலைன்னா எப்படி? எக்கச்சக்கமா குருநாயர் பணம் போட்டிருக்காரே. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்."

அந்த நேரம் பார்த்து "ராஜ்யமா இல்லை இமயமா" என்று ஜெயச்சந்திரன் எப்.எம் ரேடியோவில் கதறுகிறார்.

ரஜினிகாந்திற்கு எரிச்சல் வருகிறது. "நேரம் கெட்ட நேரத்துல இதென்ன பாட்டு. அதான் ராஜ்யம்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சே."

"சரி....பிரச்சனைக்கு என்ன செய்யப் போறீங்க?"

"ஹா ஹா ஹா... அதுக்கு ஒரு வழி இருக்கு. என் வழி....தனீஈஈஈஈ வழி."

சத்யநாராயணா சிரிக்கிறார். "ஓ மன்னிப்புக் கேக்கப் போறீங்களா? அப்ப பிரச்சனை தீந்தது."

"அதே அதே. ஒரு மன்னிப்பு. பிரச்சனை கதம் கதம். ஹா ஹா ஹா"

"கதம்தான். அங்க பிரச்சனை கதம். இங்க புதுப்பிரச்சனை வந்துட்டா..."

"ஹா ஹா ஹா நீ என்னை வாழ வைத்த தய்வங்களாகிய தமிழ் ஜனங்களை சரியா புரிஞ்சிக்கலை. அவங்க அறிவு நல்ல அறிவு. அரசியல் வேற...சினிமா வேற... மினரல்வாட்டர் வேறன்னு நல்லாப் புரிஞ்சி வெச்சிருக்காங்க. அதுனால எந்தப் பிரச்சனையும் வராது." சிகரட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறார்.

"சரி.. எப்ப மன்னிப்புக் கேக்கப் போறீங்க?"

"அதுக்குத்தான் ஐதராபாத் போறேனே. அங்க தேஜா டீவி...ஜெமினி டீவியெல்லாம் வரச்சொல்லி மன்னிப்புக் கேட்டுறலாம். அப்படியே இங்க எதுவும் பிரச்சனை வந்தாலும் ஒரு மாசம் கழிச்சி வந்தாப் போதும். எல்லாரும் மறந்திருவாங்க."

"யாராச்சும் அதுக்கப்புறமும் நெனைவு வெச்சிருந்தா?"

"ஹா ஹா ஹா...நல்ல கேள்வி. எனக்கு இருக்குற அஞ்சு முகத்தைத்தான் எல்லாரும் பாத்திருக்காங்க. ஆறாவது முகத்தை யாரும் பாத்ததில்லையே.."

சத்யநாராயணாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

"ஹா ஹா ஹா மேக்கப் இல்லாம வருவேன்னு சொன்னேன்."

சத்யநாராயணா சிரிக்கிறார். ரஜினியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

"ஹா ஹா ஹா நான் ஒரு முறை மன்னிப்புக் கேட்டா நூறு முறை மன்னிப்புக் கேட்ட மாதிரி"

--------------------------------------------------------------------------------------------------------------------------

இங்க ஆம்ஸ்டர்டாம்ல குசேலன் படம் வருது. போகலாம்னு ஒரு கூட்டம் முடிவு பண்ணோம். இன்னைக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணீட்டோம்.

அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கேட்டாத்தான் அடுத்து எதாச்சும் யோசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டோம். அதுவரைக்கும் ரஜினிகாந்த் படங்களுக்குத் தடா.தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Sunday, July 13, 2008

கெமிக்கோ பிசிக்கோ (அறிவியல் சிறுகதை)

இந்தச் சிறுகதை சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக.

கெமிக்கோ பிசிக்கோ....

இடம்....... ஐரோப்பாவின் ஒரு ரகசிய ஆய்வுக் கூடம். பொழுது கிருஸ்துமஸ் பிறப்பதற்கு முந்திய வாரயிறுதியின் குளிரும் நடுயிரவு.

விலைமதிப்பில்லாத அந்தக் காரிலிருந்து இறங்கிய பால் ஹெண்டிரிக்சுக்கு அட்ரீனலின் அளவுக்கு அதிகமாகவே எழுபத்திரண்டு வயதில் சுரந்தது. மூக்கிலும் வாயிலும் புகை விட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

இந்த ஒரு பொழுதுக்காக அவர் காத்திருந்தார். அவருக்காக அங்கு விஞ்ஞானி எரிக் உதவியாளர்களோடு காத்திருந்தார். யூரோ யூரோவாக அள்ளி அள்ளிக்
கொடுத்தவர் ஹெண்டிரிக்ஸ் தானே.

"வெல்கம் மிஸ்டர் பால். எல்லாம் தயாரா இருக்கு. நாங்க எல்லாருமே சோதனையை முடிச்சிட்டோம். All set. நீங்களும் ஒரு முறை சோதனை பண்ணீட்டீங்கன்னா இந்தக் கெமிக்கோ பிசிக்கோ தரோம்போ லிம்போசிஸ் வெற்றீன்னு உலகத்துக்குச் சொல்லீரலாம்."

எரிக் சொன்னதைக் கேட்டு ஒயின் குடித்துக் குடித்துச் சிவந்த முகத்தில் இரத்தவோட்டமே தெளிவாகத் தெரியும் வகையில் மலர்ச்சியைக் காட்டினார் பால். "Yes Erik. கண்டிப்பா வெற்றிதான். உங்க மேல நம்பிக்கை இருக்கு. இந்த வெற்றி உங்க ஐம்பது வயதுக் கனவான நோபல் பரிசைக் கண்டிப்பா வாங்கிக் கொடுக்கும். எனக்கோ இழந்த பல இன்பங்களை மீட்டுக் கொடுக்கும். உலகத்தில் புதுப்புரட்சியையே உண்டாக்கும். பொழுதுபோக்குகளின் போக்கே மாறிவிடும்."

சொன்ன பாலின் பேச்சில் மகிழ்ச்சி தெரித்தது. "கெமிக்கோ பிசிக்கோ தரோம்போ லிம்போசிஸ்...." தனக்குள்ளேயே ஒரு முறை சொல்லிக் கொண்டார்.

உள்ளே நுழைந்ததும் தானியங்கிக் கதவுகள் மூடிக் கொண்டன. அந்தப் பெரிய அறை ஒரு பெரிய சோதனைக்காகத் தயாராக இருந்தது.

இரண்டு மூலைகளிலும் ஒரே மாதிரியான இரண்டு கூண்டு அறைகள் இருந்தன. ஒரு கூண்டு அறையிலிருந்து மற்றொன்றைப் பார்க்கக் கூடாத வகையில் நடுவில் ஒரு தடுப்பு. கண்ணாடிக் கதவு. உள்ளே உட்கார நாற்காலி. நம்மைப் போன்ற சாதரணமானவர்களுக்குப் புரியாத பல அறிவியல் பொருட்கள். சரி. அவைகளைப் பற்றி நமக்கென்ன கவலை. கதைதானே முக்கியம்.

செய்யப் போகும் சோதனையைப் பற்றி எரிக் விளக்கினார்.

"These two chambers are identical. ஒவ்வொன்னுலயும் ஒவ்வொருத்தர் உக்காரனும். ஒருத்தர் அதுல transmitter (அனுப்புனர்). இன்னொருத்தர் receiver (பெறுனர்). அதத் தேர்ந்தெடுத்துட்டு switch on பண்ணா கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ் வேலை செய்யத் தொடங்கீரும். இதுல இன்னொரு வசதி இருக்கு. அனுப்புறதையோ பெறுவதையோ கூட்டிக்கவும் குறைச்சிக்கவும் ரெண்டு பக்கமும் வசதி இருக்கு."

"Impressive Mr.Erik. நம்ம காலம் கடத்த வேண்டாம். முயற்சி பண்ணலாமே."

"கண்டிப்பா. ஆனா நீங்க மொதல்ல அமைதியா இருங்க. Being relaxed will help better results. ஏற்கனவே நாங்க எல்லாருமே இந்தச் சோதனையைப் பண்ணிப் பாத்துட்டோம். எல்லாமே பாதுகாப்பானது. கொஞ்சம் அமைதியா தொடங்குனா போதும்."

மூச்சை இரண்டு மூன்று முறை இழுத்து விட்டுக் கொண்டு தன்னை அமைதிப் படுத்திக் கொண்டார் பால். எரிக்கின் உதவியாளர்கள் கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளேயிருந்த நாற்காலியில் பாலை உட்கார வைத்தார்கள். Receiver என்பதைத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு கதவு மூடப் பட்டது.

மற்றொரு அறைக்குள்ளே எரிக் நுழைந்து உட்கார்ந்தார். Transmitter என்பதைத் தேர்ந்தெடுத்தார் அவர். அவருடைய அறையின் கண்ணாடிக் கதவை மூடிக் கொண்டார். திரைப்படங்களில் காட்டுவது போல Start என்று ஒரு பட்டன் இருந்தது. அதைத் அமுக்கினார். கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ் வேலையைத் தொடங்கியது.

எரிக் தன்னுடைய அறையிலிருந்த மின்விசிறியைத் துவக்கினார். சிலுசிலுவென காற்று அந்த அறைக்குள் நிரம்பியது.

முதலில் பால் ஹெண்டிரிக்சுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சாதாரணமாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலத்தான் உட்கார்ந்திருந்தார். திடீரென பிடரியில் லேசாகக் குளிர்ந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குளிர்காற்று அவர் மேல் வீசுவது போல உணர்ந்தார். அப்படியே சாவகாசமாகச் சாய்ந்து உட்கார்ந்து அதை அனுபவித்தார்.

எரிக் உள்ளேயிருந்த ஒரு பெட்டியைத் திறந்தார். அதில் மஸ்டர்டு சாசோடு ஹாட் டாக் இருந்தது. அதிலிருந்த கிளம்பிய வாடை அவர் நாசியில் கம்மென்று நுழைந்தது. அப்படியே அதை எடுத்துக் கடித்தார். சுவைத்துச் சாப்பிட்டார்.

சாய்ந்து உட்கார்ந்து காற்றை அனுபவித்துக் கொண்டிருந்த பாலின் மூக்கில் கடுகு வாடை ஏறியது. என்னடா கடுகு வாடை என்று யோசிக்கும் பொழுதே அதன் காரம் தொண்டையில் இறங்கியது. ஹாட் டாக்.....ஆம். அதனுடைய சுவை என்று புரிந்து போனது. சாப்பிடாமலேயே அந்தச் சுவையை அனுபவித்தார் பால். ஆகா. ஆகா.

பெட்டியிலிருந்து ஒயின் பாட்டிலை எடுத்து வாயில் சிறிது கவிழ்த்துக் கொண்டார் எரிக்.

இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை பாலின் தொண்டையில் கலகலவென இறங்கியது. ஒயின்... ஒயின்... ஒயின்....

கெமிக்கோ பிசிக்கோ தரம்போ லிம்போசிஸ் ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கியது. பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி வெற்றி.

எந்த விஞ்ஞானிக்கும் இருக்கும் நோபல் பரிசு ஆசை எரிக்குக்கும் இருந்தது. எதையாவது மிகப் புதுமையாகச் சாதிக்க வேண்டுமென்று பலப்பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் கிடைத்தது பால் ஹெண்ட்ரிக்சின் நட்பு. இருவருக்கும் வெவ்வேறு தேவைகள். அந்தத் தேவைகளை இணைத்தது கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ்.

இளம் வயதில் ஐரோப்பாவின் அனைத்து நாட்டுப் பெண்களையும் ரசித்து ரசித்து ருசித்தவர் பால் ஹெண்டிரிக்ஸ். முதல் காதலும் முதல் முத்தமும் முதல் உறவும் மறந்து போகும் அளவிற்குத் திகட்டத் திகட்ட அனுபவித்தார். ஆனால் இந்த எழுபத்தியிரண்டு வயதில் பில்லியன் பில்லியனாகப் பணம் இருந்தும் உடம்பு ஒத்துழைக்காமல் ஆசையை மட்டும் சுமந்து கொண்டிருந்தார். வயக்கராவும் வக்கில்லாமல் போனது. வக்கிரம் மட்டும் போகவில்லை.

ஒருவர் பேசுவதை இன்னொரு இடத்தில் கேட்க முடிகிறது. ஒருவர் செய்வதை இன்னொரு இடத்தில் பார்க்க முடிகிறது. ஏன் ஒருவர் உணர்வதை மட்டும் இன்னொரு இடத்தில் உணரமுடியாது? இந்தக் கேள்விதான் விஞ்ஞானி எரிக்கின் உள்ளத்தில் ஊறிக்கிடந்த கேள்வி. பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த பொழுதிலிருந்து உள்ள கேள்வி. சிந்தித்துச் சிந்தித்து யோசித்துப் பலகாலம் செய்த ஆய்வுகளைத் தொடர்ந்து செய்யத் தேவையாக இருந்தது பணம். அந்தப் பணம் பால் ஹெண்டிரிக்சிடம் இருந்தது. பணமும் ஆசையும் சேர்ந்து உழைத்துச் செய்த ஆய்வுகளின் பலனே இந்த கெமிக்கோ பிசிக்கோ தரம்போ லிம்போசிஸ்.

விசிறியில்லாமலே காற்றை அனுபவித்துக் கொண்டும்... ஹாட் டாக் சாப்பிடாமலேயே சுவையை ருசித்துக் கொண்டும்....குடிக்காத ஒயினைச் சுவைத்துக் கொண்டும்...சோதனையை வெற்றியாக்கிக் கொண்டிருந்தார் பால். அடுத்த கட்டச் சோதனை ஒன்று மட்டும் மிச்சம்.

ஒரு சிறிய தள்ளுவண்டியை எரிக் அமர்ந்திருக்கும் அறையின் கண்ணாடிக் கதவின் முன் வைத்தார்கள். அதிலிருந்த லேப்டாப்பில் ஒரு நீலப்படம் தொடங்கியது. அழகான எஸ்பானிய பெண் தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டிருந்தாள். சந்தனத் தோல். தந்த உடம்பு. பார்க்கப் பார்க்க எரிக்கிற்கு ஜிவ்வென்று ஏறியது.

ஹெண்டிரிக்சுக்குத் தொப்புளுக்குள் முதலில் குறுகுறுத்தது. அந்தக் குறுகுறுப்பு பெருகிக் கூடி அடிவயிற்றில் இறங்கியது. முதன்முதலில்...இப்படித்தானே...தடுமாறி விட்டார் ஹெண்டிரிக்ஸ். பிரிகிட்டா கண் முன்னே தெரிந்தாள். முதல் காதலி. பதினான்கு வயதில் அவர் சிறுவன் இல்லை என்று நிரூபித்தவள். அவளது பழுப்புக் கூந்தல் அவர் மேல் கவிழ்ந்து மூடியது. டூலிப் இதழ்களால் முத்தமிட்டாள். "பிரிகீ....." முனகினார். பிரிகிட்டா புன்னகைத்தாள். "இன்னொரு முத்தம் பிரிகீ..." கொடுக்காமல் சிரித்தாள் பிரிகிட்டா. அறைக்குள் இருந்த பெறுவதைக் கூட்டும் வசதியைத் திருகினார் ஹெண்டிரிக்ஸ். அதைக் கூட்டக் கூட்ட பிரிகிட்டா முத்தமிட்டாள். ஹெண்டிரிக்சின் கடைவாயில் எச்சில் ஒழுகியது. "பிரிகீ.... பிரிகீ"... சொர்க்கத்தின் எஸ்கலேட்டர் அவரை உயர உயர அழைத்துச் சென்றது.

நீலப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி எரிக்கை மிதமான நெஞ்சுவலி தாக்கியது.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, July 08, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி

இந்தப் பதிவை எழுதுவதற்கு எத்தனைத் திரைப்படத் துணுக்குகளைப் படிக்க வேண்டியிருந்தது தெரியுமா! அப்படி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து எழுதிய இந்தப் பதிவிற்குக் காரணம் கவிநயாதான். சும்மாயிருந்த என்னைச் சீண்டி விட்டிருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் பதிவெழுதத் தூண்டி விட்டால்! அதைப் படிக்கும் உங்கள் நிலைதான் என்ன! ஆகையால் இந்தப் பதிவு தொடர்பான எதுவென்றாலும் நீங்கள் கவிநயாவைத் தொடர்பு கொள்ளுங்கள். ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதாக உறுதி சொல்லியிருக்கிறார்.

கர்ணன் படப்பிடிப்பின் பொழுது நடந்த நிகழ்ச்சி இது. ஒரிசாவின் புகழ் பெற்ற கொனார்க் சூரியக் கோயிலில் படப்பிடிப்பு நடந்தது. இரவும் நிலவும் வளரட்டுமே என்ற அருமையான பாடலின் படப்பிடிப்பும் போர்க்களக்காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. இரவும் நிலவும் பாடலைத் தமிழில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடினார்கள். தெலுங்கில் பி.சுசீலா உண்டென்றாலும் ஆண்குரலுக்குப் பாலமுரளி கிருஷ்ணா.

சாப்பாட்டுப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக இங்கிருந்து செட்டியார் மெஸ் ஒன்றும் உடன் சென்றிருந்தது. மேஸ் கூட்டத்தில் கந்தப்பச் செட்டியார் என்பவர் இனிப்பு வகைகளைத் திறம்படச் செய்யும் கைப்பலம் பெற்றிருந்தார். சிவாஜி அசைவப் பிரியர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சிவாஜி என்றால் இங்கு நடிகர் திலகத்தைக் குறிக்கும். நடிகர் மோகன்லால் வீட்டிற்குச் சென்றால் வாத்துக்கறி வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவாராம். ஆகையால் தினந்தோறும் அசைவ வகைகள் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்கள் மெஸ்காரர்கள்.

அந்தப் படப்பிடிப்பின் போதுதான் சிவாஜி அவர்களின் பிறந்தநாள் வருவதை பி.ஆர்.பந்துலு (அவர்தான் திரைப்பட இயக்குனர்) கந்தப்பச் செட்டியாரிடம் சொல்லி.... ஏதாவது புதிய இனிப்பு செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார். பாயாசங்களையே எத்தனை நாளைக்குத்தான் காய்ச்சுவது? அதிரசத்திற்கு உள்ளூர் வெல்லம் சரிவருமோ என்ற கவலை. உக்கரையெல்லாம் இத்தனை பேர்களுக்குச் செய்வதற்குள் தாவு தீர்ந்து விடும். ஆகையால் குலாப் ஜாமூன் போடுவதென்று முடிவானதாம்.

பிறந்தநாள் அன்று காலை எல்லாரும் நடிகர் திலத்தை வாழ்த்தியிருக்கின்றார்கள். நடிகை தேவிகாவும் அவரது தாயாரும் அருகில் இருந்த பிஷ்ணு கோயிலுக்குச் சென்றுப் பூஜை செய்து பிரசாதம் குடுத்தார்கள். கந்தப்பச் செட்டியார் செய்த குலாப் ஜாமூனை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு வாழ்த்துச் சொல்லச் சென்றிருக்கிறார் பந்துலு மாமா. முதல் இனிப்பு தான் குடுக்கும் இனிப்பாக இருக்க வேண்டுமே..

ஆனால் அங்கே ஏற்கனவே நடிகர் திலகம் எதையே மென்று கொண்டிருந்தார். பார்த்தால் ஜிலேபி. கோயிலுக்குச் சென்ற நடிகை தேவிகா வழியில் இனிப்புக் கடையில் ஜிலேபியையும் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதைத்தான் சிவாஜி அவர்களும் கமலா அம்மாவும் சாப்பிட்டிருந்திருக்கிறார்கள். பந்துலு மாமா குலாப் ஜாமூனைக் கொடுத்து கந்தப்பச் செட்டியார் சிறப்பாகச் செய்ததைச் சொல்லியிருக்கிறார். ஜிலேபி கொடுத்த தேவிகாவிற்கும் ஜாமூன் செய்த செட்டியாருக்கும் நன்றி சொல்லி அடுத்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை. கதையென்றால் கதையேதான். அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய். இப்படியே எம்.ஜி.ஆர் வாங்கிய சோடா.... தேங்காய் சீனிவாசனும் திருப்பதி லட்டும் என்று பலப்பல பழைய கதைகளும்... ஜெனிலியாவிற்குப் பிடித்த ஜெய்ப்பூர் கீர்... சூர்யாவின் சந்திரகலா... தசாவதாரப் படப்பிடிப்பில் கமலும் அசினும் சாப்பிட்ட கல்கோனா போன்ற புத்தம்புதிய கதைகளும் நிறைய உள்ளன. தேவைப்படும் பொழுது அவைகளும் எடுத்து விடப்படும்.

அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே. அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்