Tuesday, January 24, 2006

நட்சத்திரக் குமரனுக்கு ஒரு வாழ்த்து

நமது குமரன் கொடுத்த பொறுப்பு மிகப் பெரிய பொறுப்புதான். பின்னே ஒரு செய்யுளை எழுதி அதில் அவரது கதையைச் சொல்லி அதற்கு என்னையும் விளக்கம் சொல்லச் சொன்னால் அது மிகப் பெரிய பொறுப்புதானே. அதையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு என்னால் முடிந்ததை மயிலாரோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். மயிலார் யாரென்று எல்லாருக்கும் தெரியும்தானே! சரி. முதலில் கவிதையைப் பார்ப்போம்.

நான்மாடக் கூடலாம்
மதுரையம்பதியினில்
நாயகனின் திருவருளினால்
நானன்றுத் தோன்றினேன்
நலமுடைக் குமரனெனும்
நல்லபெயர் தனை அருளினான்!

அகவையோ மூவாறுப்
பதினைந்து அழகுடைய
அகமுடையாள் மனைமாட்சியாம்!
மகிழ்ச்சியுறத் தேசு பெறும்
மகளுடையேன் மனைமுழுதும்
மன்னன் மகள் அவளாட்சியாம்!

வாழ்வதுவோ அமேரிக்க
மினசோட்டா மாகாணம்
வாழ்க தமிழ்! வாழ்க தமிழே!
வாழ்வுபெற நானும் வந்தேன்

மயிலார் : இதென்ன கவிதையா செய்யுளா?

நான் : இது செய்யுள் மாதிரி இருக்குற கவிதை. தமிழ் இலக்கியத்தில் புது வடிவம் என்று சொல்லலாம். மரபுக் கவிதை மாதிரி இருக்கும். ஆனா மரபுக் கவிதை கெடையாது. கவிதை மாதிரி இருக்காது. ஆனா கவிதை.

மயிலார் : அப்ப நீ சொல்லப் போற விளக்கத்துல விஷயம் இருக்குற மாதிரி இருக்கும். ஆனா இருக்காது. ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கும். ஆனா ஏதாவது புரியும்.

நான் : (வழிந்த படி). சரி. சரி. குமரன் கோவிச்சுக்கப் போறாரு. நம்ம செய்யுளுக்கு வருவோம்.

மயிலார் : கவிதைக்கு வருவோம்னு சொல்லு.

நான் : (இன்னும் வழிந்தபடி) ஆமாமா. கவிதைக்கு வருவோம். இந்தக் கவிதைல மூனு பத்திகள் இருக்கு. ஒவ்வொரு பத்தியும் குமரனோட வாழ்க்கைல ஒவ்வொரு பகுதியச் சொல்லுது.

முதல் பத்தி குமரன் பிறந்ததையும் அவருக்குப் பேரு வெச்சதையும் சொல்லுது. இரண்டாவது பத்தி அவரோட திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு எல்லாம் சொல்லுது. மூன்றாம் பத்தி அவர் இப்போ இருக்குற இடத்தைப் பத்தியும் தமிழ் வாழ்த்தும் சொல்லுது.

மயிலார் : ஒவ்வொரு பத்தியும் அவரோட பொறப்பப் பத்தியும் வாழ்க்கையைப் பத்தியும் இருப்பைப் பத்தியும் சொல்லுதா! அப்ப நாலு பத்தி.

நான் : (அவசர அவசரமாக) இல்ல மூனு பத்தி.

மயிலார் : ஏற்கனவே மூனு பத்தி. அந்த மூனும் அவரப் பத்தி சொல்றதால நாலு பத்தீன்னு சொன்னேன். அவசரக்குடுக்கையா இருக்கையே! சரி ஒவ்வொரு பத்தியப் பத்தியும் சொல்லு. கேட்டுக்கிறேன்.

நான் : சரி. சரி. "நான்மாடக் கூடலாம் மதுரையம் பதியில்." அதாவது நான்கு மாடங்களை உடைய கூடங்களை உடைய மதுரையம்பதியில்....

மயிலார் : இரு இரு....ஏன் இப்படி மாடத்தையும் கூடத்தையும் உடைக்கிற?

(எனக்கு ஆத்திரத்தில் கண்ண இருட்டிக்கிட்டு வருது. அத அடக்கீட்டு தொடர்ரேன்.)

நான் : சரி. நான்கு மாடங்களைக் கொண்டு எழுப்பப்பட்ட கூடங்கள் நிறைந்த ஊர் பாண்டி நாட்டு மதுரையம்பதி. அந்த மதுரையம்பதியில் "நாயகனின் திருவளினால் நானன்று தோன்றினேன்" என்கிறார் குமரன். இங்க நாயகன்னா முருகப் பெருமான்.

(முருகன் பெயரைச் சொன்னதுமே மயிலார் உணர்ச்சி வசப்பட்டு படக்கென்று தோகையை விரிக்கிறார். அந்தத் தோகை இடித்து மேசையிலிருந்த எவர்சில்வர் டம்ளர் தரையில் உருளுகிறது.)

நான் : நாயகன்னா இங்க முருகப் பெருமான். முருகப் பெருமானுக்குரிய பங்குனி மாதத்து உத்திரத் திருநாளில் பிறந்தவர். அதுனால அவருக்கு முருகன் பெயரான குமரனையே வெச்சிட்டாங்க. இதைத்தான் சுருக்கமா "நாயகனின் திருவருளினால் நானன்று தோன்றினேன். நலமுடைக் குமரனெனும் நல்ல பெயர்தனை அருளினான்" அப்படீன்னு குமரன் சொல்லீருக்காரு.

இதுல சிறப்பம்சன் என்னன்னா....நல்ல பெயர்தனை வைத்தனர்னு சொல்லலை. அப்படிச் சொல்லீருந்த அது பெத்தவங்களும் பெரியவங்களும் வெச்சதா இருந்திருக்கும். அருளினான்னு சொல்றதால, அது முருகப் பெருமானே பெத்தவங்க வழியா வைத்து அருளினான்னு பொருள் கொள்ளனும்.

(மயிலார் ரொம்பவே பக்தியா கேட்டுக்கிட்டு இருக்காரு.)

நான் : இப்ப ரெண்டாவது பத்திக்குப் போவோம்.

மயிலார் : அது எங்க பக்கத்தூர்லயா இருக்கு?

நான் : (திடுக்கிட்டு) என்ன...பக்கத்தூரா?

மயிலார் : ஆமா. நீதான் பத்திக்குப் போவோம்னு சொன்னியே.

நான் : (எரிச்சலுடன்...ஆனால் காட்டாமல்.) அதாவது பார்ப்போமுன்னு பொருள். இப்ப குமரனுக்கு என்ன வயசுன்னு மொதல்ல சொல்றாரு. முப்பத்து மூனு வயசாகுதாம். அதை நேரடியா சொல்லாம ஒரு கணக்கு வழியா சொல்றாரு. "அகவையோ மூவாறு பதினைந்து". (மயிலாரைப் பார்த்து) மூன்று ஆறும் பதினைந்தும் சேந்தா என்ன வரும்?

மயிலார் : (நக்கலுடன்) மூனு ஆறும் பதினைந்தும் சேந்தா வெள்ள நிவாரண நிதி வரும்.

நான் : (சற்றுக் கடுகடுப்புடன்). மயிலார். இது குமரனோட வாழ்க்கைச் செய்யுள்...இல்ல...கவிதை. இத இப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது. அவரு நொந்து போயிருவாரு. அதுனால கொஞ்சம் முனைப்பா கவிதையப் பாக்கலாம்.

(கொண்டை அழகாக அசையுமாறு மயிலார் தலையை ஆட்டுகிறார்.)

நான் : மூவாறு என்றால் பதினெட்டு. பதினெட்டும் பதினைந்தும் சேர்ந்தால் முப்பத்து மூன்று அதுதான் அவர் வயது. அடுத்து வீட்டுல அவரோட துணைவியார்தான் எல்லாம் பாத்துக்கிறார்னு சொல்றாரு. (மெல்லிசா மதுரைன்னு மயிலார் கமெண்ட் அடிக்கிறார்). அழகுடைய அகமுடையாள் மனைமாட்சியாம். இங்க புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் தரலை. அகத்தின் அழகுதான் பெருசூன்னு சொல்றாரு. அழகும் அறிவும் உடைய திருமதி குமரன்தான் வீட்டை ஒழுங்காக பொறுப்பாகப் பார்த்துக் கொள்கிறாராம். அடுத்து மகளப் பத்திச் சொல்றாரு.

மயிலார் : (குறுக்கிட்டு) குழந்த தேஜஸ்வினியப் பத்தியா....அடடா! அவளோட பெயர்க்காரணம் தெரியுமா ஒனக்கு. அடடா! முருகா!

நான் : (சற்றுக் கடுப்புடன்) நான் இண்டெர்நெட் படிக்கும் போது எட்டிப் பாக்கக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லீருக்கேன்.

மயிலார் : (முணுமுணுப்புடன்) பெரிய இண்டெநெட். எட்டிப் பாத்துட்டாலும். எனக்குத் தெரியாத சமாச்சாரமா! சரஞ்சரமா எடுத்து விடுவேன்.

நான் : "மகிழ்ச்சியுறத் தேசு பெறும் மகளுடையேன்." தேசுன்னா ஒளி பொருந்திய அழகு. அதான் தேஜஸ்வினி. அதுதான் தனது மகளின் பெயர்னு சொல்றாரு. "மனைமுழுதும் மன்னன் மகள் அவளாட்சியாம்." வீடு முழுக்க குழந்தை தேஜஸ்வினியோட ஆட்சிதானாம். மண்வீடு மட்டுமல்ல மனவீடுமுன்னு சொல்றாரு குமரன். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே அல்லவா.

மயிலார் : ஆமாமா. கொண்டாடும் இடத்துலதான். குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம். சரி. அடுத்த பத்தியப் படிச்சுச் சொல்லு.

நான் : இப்ப அவர் எங்க இருக்காருன்னு இங்க சொல்றாரு. அமெரிக்க நாட்டிலே மீனாசோட்டா மாகாணத்திலே....

மயிலார் : நிறுத்து நிறுத்து. அது மீனாசோட்டா இல்ல. மினசோட்டா. இதுக்கு மேல நீ விளக்கம் சொல்ல வேண்டாம். நானே சொல்றேன். அமெரிக்க நாட்டின் ஐம்பது மாகாணங்களில் ஒன்றான மினசோட்டா மாகாணத்திலே கணிப்பொறியில் மெலாளராகப் பணிபுரிந்து அங்கேயே குடும்பத்துடன் குமரன் இன்பமாக வசித்து வருகிறார். "வாழ்க தமிழ்! வாழ்க தமிழே! வாழ்வு பெற நானும் வந்தேனே" என்று முடித்திருக்கிறார். தமிழ் மீது அவர் கொண்ட அன்பு தெரிகிறது. அந்தத் தமிழும் நீடு வாழ்ந்து அந்தத் தமிழால் தானும் நீடு வாழ விரும்புவதை தெளிவுபடுத்தியிருக்கிறார். தமிழ்க்கடவுளின் சார்பாக குமரனையும் அவர்தம் குடும்பத்தாரையும் நீடு நிலைத்து இன்புற்று வாழ நான் வாழ்த்துகிறேன்.

நான் : நானும் வாழ்த்துகிறேன். (கூட்டத்தோட கோவிந்தா.)

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, January 19, 2006

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி

போன வாரம் மயிலாரைக் கூட்டிக் கொண்டு மீண்டும் forum mallக்குப் போனேன். அப்போது landmark கடையில் ஒரு ஒரிஜினல் தமிழ்க் குறுந்தட்டு வாங்கினேன். மயிலார் வம்பு செய்யாமல் இருக்க அவருக்குக் கந்தன் கருணைக் குறுந்தட்டும் வாங்கிக் கொடுத்தேன். நான் வாங்கியது டௌரி கல்யாணம் என்ற திரைப்படம். மிகச்சிறு வயதில் மதுரைக்கு விடுமுறையில் சென்றிருந்த பொழுது விஜயலட்சுமி திரையரங்கில் பார்த்தது. அப்பொழுது புரியாமலேயே படம் ஏனோ பிடித்திருந்தது. அந்த நினைப்பில் குறுந்தட்டை வாங்கி விட்டேன்.

விசு நடித்து இயக்கிய படம். சென்னைப் புறநகர்க் கிராமங்களான தின்னனூர் எனப்படும் திருநின்றவூரை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். விசு, விஜயகாந்த், ஸ்ரீவித்யா, விஜி மற்றும் எஸ்.வீ.சேகர் நடித்தது. எளிமையான கதை. எளிமையான பின்புலம். அழகான வசனங்கள். தேவையான அளவு நடிப்பு. படமும் வெற்றி அடைந்ததில் வியப்பில்லை. வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

சரி. கதைக்கு வருவோம். அந்தப் படத்தில் விசுவின் சகோதரி விஜி. விசுவின் குடும்ப நண்பர் விஜயகாந்த். விஜயகாந்த் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள். விஜியைத் தங்கை போல நினைப்பவர். விஜிக்கும் அவர் அண்ணனைப் போல. அடிக்கடி வீட்டுக்கு வந்து விஜயகாந்தின் மகளைப் பார்த்துக் கொள்வார். இதைப் பார்த்த விஜயகாந்தின் மாமியார் விஜயகாந்தின் அம்மாவிடம் சொல்லி விஜியை விஜயகாந்திற்குக் கட்டி வைக்கச் சொல்வர். இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எல்லாரும் ஒரு திருமணத்திற்குப் போக வேண்டி வரும்.

திருமணத்தைப் பார்த்ததும் விஜயகாந்திற்குக் கற்பனை பிறக்கும். தங்கை விஜிக்குத் திருமணம் செய்து வைக்கும் அண்ணனாகக் கனவு காண்பார். காட்சி ஊட்டிக்குத் தாவும். விஜி பட்டுச் சேலையில் இருப்பார். இவர் சட்டையும் பேண்ட்டும் அணிந்து பாடுவார். மெல்லிசை மன்னர் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவார்.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே என்று தொடங்கும் பாடல். நல்ல மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைப்பேன் என்று பாடுவார்.

அடுத்து விஜியின் கற்பனை. அண்ணன் விஜயகாந்த்திற்கு நல்ல அண்ணியைக் கொண்டு வருவதாக கற்பனை செய்து பாடுவார். இப்பொழுதும் கற்பனையில் ஊட்டி. ஆனால் விஜயகாந்த் பட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு ஒரு துண்டும் தோளில் போட்டுக் கொண்டு வருவார். பாவாடை தாவணி அணிந்து கொண்டு விஜயகாந்தின் மகளைக் கையில் வைத்துக் கொண்டு பாடுவார். இப்பொழுது வாணி ஜெயராமின் முறை.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே
ரம்பைகளைச் சபைக்களைத்து கண்ணகியைக் கண்டெடுத்து
அண்ணி என்று பேர் சூட்டுவேன்...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
பிஞ்சு மகள் கொஞ்சும் மொழி பஞ்சனையில் கேளாமல்
நெஞ்சினிலே தாலாட்டுவேன்...ஓஓஓஓஓஓஓஓஓ
நெஞ்சினிலே தாலாட்டுவேன் (ஸ்ரீராமன் ஸ்ரீதேவி...

அடுத்த காட்சியில் விஜயகாந்தின் தாயார் யோசிப்பார். விஜயகாந்தின் மாமியார் என்னவென்று கேட்க. இருவரையும் ஜோடியாக வைத்துப் பார்ப்பதாகச் சொல்வார். இப்பொழுது மறுபடியும் பாடலின் தொடர்ச்சி ஊட்டியில். விஜயகாந்தும் விஜியும் மேற்கத்திய உடைகளை அணிந்து கொண்டு பாடுவார்கள். இந்த முறை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வாணிஜெயராமும் இணைந்து பாடுவார்கள்.

ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்
ஆனந்தம் ஆரம்பம் ஆலய ஓவியமே ஒஹோஹோ ஆலய ஓவியமே....

சரி. சரி. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கின்றீர்களா? ஒரு குறைந்த செலவுப் படத்தில் வருகின்ற ஒரு பாடல் காட்சியை இப்பொழுது சொன்னேன். அந்த ஒரு பாடலில் எத்தனை விஷயங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்று பார்த்தீர்களா? இந்தக் காட்சியை மெல்லிசை மன்னருக்கும் ஆலங்குடி சோமுவிற்கும் விசு விளக்கமாகச் சொல்லியிருப்பார். அவர்களும் அந்தச் சூழ்நிலைக்குத் தேவையானதை இசையிலும் பாடலிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். பாடலைக் பார்த்தால் ஒவ்வொரு பகுதிக்கும் வித்தியாசங்கள் காட்டியிருப்பது தெளிவாகவும் அழகாகவும் தெரியும்.

என்னதான் சொல்ல வருகிறேன்? இன்றைக்குத் திரைப்படங்களில் பாடல் காட்சிக்கான சூழ்நிலையை எப்படி இயக்குனர்கள் விளக்குவார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஆறு சூழ்நிலைகளுக்குள் பெரும்பாலான பாட்டுகளை அடக்கி விடலாம்.
1. கதாநாயகன் அறிமுகப் பாட்டு
2. கதாநாயகி தனியாக ஆடும் பாட்டு
3. காதல் பாட்டு
4. குத்துப் பாட்டு
5. Western Style பாட்டு
6. நகைச்சுவை நடிகர்/நடிகை பாட்டு

இதற்கு மேலும் காட்சிகள் வெகுசில இயக்குனர்களின் படங்களில் மட்டுமே வருகின்றன. சேரன், பாலா, தங்கர் என்று ஒரு சிலரே. ஏனிப்படி? பாடல்கள் என்பவையே இயல்புக்கு அப்பாற்பட்டவைதான். ஆனால் அதிலும் எத்தனை வகையான சூழ்நிலைகளைக் காட்டியிருக்கிறார்கள். இது மாதிரி புதுமாதிரி சூழ்நிலைகள் ஏன் இன்றைக்கு நமக்குக் கிடைப்பதில்லை. இன்றைய பாடல்கள் எனக்கும் பிடித்திருக்கிறது. ரசிக்கிறேன். தாளம் போடுகிறேன். ஆனாலும் கதைகளில் மாறுபட்ட சூழ்நிலைப் பாடல்களுக்கான தேறுதல் இல்லை என்பதும் உண்மைதான். சேரனின் பொற்காலம் படத்தில் வரும் "கருவேலங் காட்டுக்குள்ள" பாடலும் எவ்வளவு உணர்வுப் பூர்வமாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இன்னும் நிறைய அடுக்கலாம்.

நல்ல கதைகளுக்குத் திரைப்படத்தில் இடமில்லாமல் போனது வருத்தம்தான். வித்தியாசமான கதைகளைப் படமாக எடுத்தால் பார்க்க மாட்டர்கள் என்று இல்லை. அதை எடுக்கும் துணிவு பலருக்கும் இல்லை என்பதே உண்மை. பணமும் குறிக்கோள் என்றிருந்த நிலையிலிருந்து பணம் மட்டுமே குறிக்கோள் என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. இதற்கு மேலும் என்ன செய்ய முடியும்? என் காதில் இன்னமும் ஸ்ரீராமன் ஸ்ரீதேவி என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வாணிஜெயராமும் பாடுவது கேட்கிறது. பழையதோ புதியதோ இது போன்று வித்தியாசமான சூழ்நிலைப் பாடல்கள் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா?

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, January 15, 2006

டாவின்சி கிரெய்ல்

இந்த டாவின்சி கோடு புக்கப் படிச்சாலும் படிச்சேன். ஒரே குழப்பம். எத நம்புறது எத நம்பக்கூடாதுன்னே தெரியலை. ஆனா கத படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா விறுவிறுப்பா போச்சு. ரெண்டு மூனு மூச்சுகள்ல படிச்சு முடிச்சிட்டேன். (ஒரே மூச்சுல படிக்க முடியலை. நேரமில்லாமத்தான்.)

இப்ப இந்தக் கதையப் பத்தித் தோண்டித் துருவிப் படிச்சிக்கிட்டு இருந்தப்ப ஒரு விஷயம் மாட்டுச்சு. அத உங்ககிட்டப் பகுந்துக்கனுமுன்னு விஷயத்தைச் சொன்ன வெப்சைட் சொன்னதால இந்தப் பதிவு எழுத வேண்டியதாப் போச்சு.

கடைசி விருந்து (The Last Supper) அப்படீங்குற ஓவியத்த லியனார்டோ டாவின்சி வரைஞ்சிருக்காராம். (லியனார்டோன்னாலே அடுத்து டிக்காப்ரியோதான் வருது. எல்லாம் சினிமா பண்ற வேலை.) அந்தப் ஓவியத்துல ஏசுநாதர் தன்னோட சிஷ்யர்களோட கடைசியா விருந்து சாப்பிடுறத படமா போட்டிருக்காராம் டாவின்சி.

அதுல பயண்படுத்துன குவளை (grail) ரொம்பவே பிரபலமானது. புனிதமா கிருஸ்துவர்கள் நினைக்கிறதுதான் இந்தக் கிரெயில் குவளை.Indiana Jones படத்துல கண்டுபிடிக்கிறதா வருமே அந்தக் குவளைதான் இந்தக் குவளை.

டாவின்சி கோடு புத்தகம் பத்தி எல்லாரும் கேள்விப் பட்டிருப்பீங்க. அது ஏசுநாதருக்கு மனைவியும் குழந்தையும் உண்டுன்னு சொல்ற புத்தகம். அதுக்கு ஆதாரமாத்தான் டாவின்சியோட படங்களை ஆதாரமாக் காட்டுது. இன்னும் நெறைய விஷயங்களையும் சொல்லுது. புத்தகத்துல சொல்றது உண்மையோ பொய்யோ....ஆனா புத்தகத்தப் படிச்சப்புறம் ஏசுநாதர் மேல எனக்கு அன்பு கூடீருச்சுங்குறத ஒத்துக்கத்தான் வேணும்.

ஏசுநாதருடைய மனைவியின் பேரு மேரி மகதலின் (Mary Magdaline) அப்படீன்னு இந்தப் புத்தகம் சொல்லுது. அவங்களை ஒரு விபச்சாரின்னு தேவாலயங்கள் சொல்லுதாம். அவங்களோட புகழை மறைச்சு தேவாலயங்கள் புகழ் பெற அப்படிச் செஞ்சுட்டாங்கன்னு இந்தப் புத்தகம் சொல்லுது.

அப்படி மேரி மகதலினோட புகழ தேவாலயங்கள் மறைச்சாலும் ஒரு குழுவினர் அந்த ரகசியத்தைக் காப்பாத்தி இன்னமும் வெச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படி ரகசியம் தெரிஞ்ச ஒருத்தர்தான் டாவின்சின்னு இந்தப் புத்தகம் சொல்லுது. தனக்குத் தெரிஞ்ச ரகசியத்த தன்னோட ஓவியங்களில் இலைமறை காயா வெச்சுட்டுப் போயிருக்காருன்னும் பலர் நம்புறாங்களாம்.

அதுக்கு ஒரு எடுத்துக்காட்டா கடைசி விருந்து ஓவியத்தைச் சொல்றாங்க. கடைசி விருந்து ஓவியத்துல ஏசுநாதர் நடுவுல இருக்க, மொத்தம் பதிமூனு பேரு இருப்பாங்க. ஏசுநாதரோட கடைசி விருந்துல கலந்துகிட்டவங்களோட எண்ணிக்கை பதிமூனாம். அதுனாலதான் 13ங்குற எண் கிருஸ்துவர்களுக்கு நல்லதில்லைன்னும் ஒரு நம்பிக்கையாம். கடைசி விருந்து படத்தைக் கீழ குடுத்திருக்கேன். ஒரு வாட்டி நல்லா பாத்துக்கோங்க.ஆனால் டாவின்சி வரைஞ்ச கடைசி விருந்து ஓவியத்துல ஹோலி கிரெய்ல் குவளையே இல்லை. அப்ப கிரெயில்னா என்னன்னும் இந்தப் புத்தகம் கேள்வி எழுப்புது. விடையும் சொல்லுது. கிரெயில் அப்படீங்குறது ஏசுநாதரின் ரத்தத்தைத் தாங்கும் குவளை அல்ல. மாறாக ஏசுநாதரின் இரத்தத்தை வயிற்றில் சுமந்த மேரி மகதலின் அப்படீன்னு விளக்குது. ஏசுநாதருக்கு வலப்பக்கம் உக்காந்திருக்குறது ஆண் இல்லை. ஒரு பெண் அப்படீன்னும் இந்தப் புத்தகத்துல சொல்லீருக்கு. படத்த நானும் பாத்தேன். எனக்கும் அந்த உருவம் பொண்ணு மாதிரிதான் தெரியுது. குறிப்பா நெளிவு சுளிவுகள். இந்த ஓவியத்த லூவர் மியூசியத்துல நான் நேருலயே பாத்திருக்கேன். பெருசா....அப்பக் கூட இருந்த ஒரு நண்பன் ஏசுநாதர் பக்கத்துல இருக்குறது பொண்ணுன்னு சொன்னது சரியா மனசுல பதியல. ச்சே...தெரிஞ்சிருந்தா நல்லா பாத்திருப்பேனே. சரி. அடுத்த வாட்டி பாத்துக்கலாம். (எப்ப போகக் கெடைக்குதோ!)

எழுத்தாளர் டான் பிரவுன் (Dan Brown) இந்தப் புத்தகத்துல சொல்லீருக்குற கருத்துக்கு ஆதரவு இருக்குற அளவுக்கு எதிர்ப்பும் இருக்கு. அதே சமயத்துல அவரும் டாவின்சியோட குறிப்புகளைச் சரியா கவனிக்கலைன்னும் சொல்லிக்கிட்டு இருக்குது ஒரு கூட்டம். அவரால கண்டு பிடிக்க முடியாததை நாங்க கண்டுபிடிச்சிருக்கோமுன்னும் சொல்லிப் பெருமைப் பட்டுக்குறாங்க. அதுவும் கடைசி விருந்து ஓவியத்துல.

"அந்த ஓவியத்துல குவளை இல்லைன்னுதான டான் பிரவுன் சொல்றாரு. ஆனா எங்களுக்குக் குவளை தெரியுது. அத நிரூபிக்கிறோம்"னு மார் தட்டுது ஒரு கூட்டம்.

அந்த ஓவியத்த கம்ப்யூட்டருல போட்டு கசக்கிப் பிழிஞ்சி ஏதாவது தேருமான்னு தேடிப் பாத்திருக்காங்க. அவங்க கண்ணுல மாட்டீருக்கு ஒரு குவளை. அதத்தான் இவங்க ஹோலி கிரெயில் (புனிதக் குவளை)ன்னு சொல்றாங்க. கீழ இருக்குறது கம்ப்யூட்டர்ல புராசஸ் பண்ணுன படம். அதுல ஏசுநாதருக்கு வலது கோடீல இருக்குறவரு தலைக்கு மேல பாருங்க. ஒரு குவளை தெரியுதா? அதுதான் டாவின்சி சொல்ற ஹோலி கிரெயிலாம்.அதத் தெளிவாக் காட்ட அந்தக் குவளையத் தவிர ஓவியத்துல இருக்குற எல்லாத்தையும் கருப்பு-வெள்ளைக்கு மாத்தீருக்காங்க. கீழ இருக்குற படத்தப் பாருங்க.இப்ப இந்தப் படத்துல அந்த புனிதக் குவளை தெளிவாத் தெரியுதா? அப்படியே கொஞ்சம் மேல போய் உண்மையான ஓவியத்தைப் பாருங்க. உங்க கண்ணுக்குக் குவளை தெரியுமுன்னு இந்த இணையதளம் சொல்லுது.

ஆமா. என்னோட கண்ணுக்கும் தெரியுது. தெள்ளத் தெளிவா ஒரு குவளை. ஆனா அந்தத் தூணுக்குப் பின்னாடியிருக்குற ஒவ்வொரு தூண்லயும் ஏதோ மங்கலா தெரியுற மாதிரி இருக்கு. சரி. தெளிவாத் தெரியலையே.........அதுனால இந்தக் குவளை தெளிவாத் தெரியுதுன்னு விட்டுருவோம். ஆனா இன்னொரு கேள்வி தோணுதே. குவளையத் தெளிவாக் காட்டனுமுன்னு டாவின்சி முடிவு செஞ்சிருந்தா அத ஏன் தூண்ல காட்டனும். ஏசுநாதருக்கு முன்னாடியே காட்டீருக்கலாமே. என்னவோ ஒன்னுமே புரியலை. புத்தகம் படிக்க விறுவிறுப்பாப் போச்சு. அத வெச்சு நமக்கும் நல்லாப் பொழுது போகுது. இன்னும் இது மாதிரி விறுவிறுப்பான சமாச்சாரங்கள் இருந்தா சொல்லுங்க....

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, January 12, 2006

போகியிலேயே பொங்கல் பரிசு

பொங்கல் பரிசுன்னா பொங்கல் அன்னைக்குக் குடுப்பாங்க. ஆனா பாருங்க...தினமலர் பத்திரிகைல பொங்கலுக்கு ஒரு நாள் முன்னாடி வர்ர போகிப் பண்டிகை அன்னைக்கே குடுத்துட்டாங்க.

அதாங்க. நம்ம வலைப்பூ முகவரியக் கொடுத்து, கூடவே கண்டு பிடித்துக் கொடுப்பவருக்குப் பரிசு மாதிரி இருக்குற நம்ம போட்டவப் போட்டு (நம்ம முழியோ ஒரு மாதிரி!) அறிமுகம் கொடுத்திருக்காங்க.

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. மிக்க நன்றி தினமலர்.

வலைப்பூவத் தொடங்கிய பெறகு, அதுக்குத் தமிழ்மணம் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய வலைப்பூவ எல்லாருக்கும் எடுத்துட்டுப் போய் உதவி செஞ்சு...நட்சத்திரமாக்கி...இன்னும் பிரபலப்படுத்தி...என்ன சொல்றது. ரொம்ப நன்றி தமிழ்மணம். (இப்போ நந்தவனம்). ரொம்ப ரொம்ப நன்றி.

வலைப்பூவுல பல விஷயங்கள எழுதீருக்கேன். கத, கவித, கட்டுர, தமிழ் இலக்கியம், ஆன்மீகமுன்னு. கந்தர் அலங்காரங்கத்து விளக்கம் எழுதுனதுண்டு. திருப்பாவைக்கு அடுத்து. கதைகளும் ஒரு ஏழெட்டு இருக்குமே. ஆனா பாருங்க.......நமக்குப் பொழப்பக் கொடுத்து உப்புப் போட்ட பெங்களூருதான் இந்த வாட்டியும் பரிசக் குடுத்திருக்கு. பெங்களூரு ஒரு நன்றி.

என்னதான் எழுதுனாலும் யாருமே கண்டுக்காமப் போனா நல்லாவா இருக்கும்? நம்ம எழுத்துல இருக்க நல்லது கெட்டது நமக்குத் தெரிய வேண்டாமா? அதுக்கெல்லாம் நீங்க எல்லாரும் போட்ட பின்னூட்டங்களும் கருத்துகளும் பலவிதங்களில் உதவியிருக்கு. இப்பவும் என்னுடைய பேரு வந்திருக்குன்னு மொதல்ல ஃபோன் பண்ணிச் சொன்ன தி.ரா.ச, அப்புறம் வலைப்பூவுல அத மகிழ்ச்சியா வந்து சொன்ன மாயவரத்தான், சிங்.செயகுமார், துளசி கோபால், குமரன், அப்புறம் இந்தப் பதிவுக்கு வந்து பின்னூட்ட வாழ்த்து போடப் போற உங்கள் எல்லாருக்கும் என்ன சொல்றது? நன்றிதான். ரொம்ப நன்றி நண்பர்களே!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு. நான் ஒரு வாட்டி நன்றி மறந்தேன். அது என் மனசுல இன்னும் இருக்குது. முள்ளாக் குத்துது. அதுனால இப்ப எல்லாருக்கும் நன்றி சொல்றேன். விட்டுப் போனவங்க. சொல்ல மறந்தவங்க. எல்லாருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

வழக்கமா நான் அன்புடன்னு முடிப்பேன். இந்த வாட்டி........

நன்றியுடன்,
கோ.இராகவன்

ஒன்னு அஞ்சு வாடு

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கன்னட நண்பனோடையும் பெங்களூருலயே பொறந்து வளந்த தமிழ் நண்பனோடையும் பேசிக்கிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு பிரச்சனை வந்தது.

தமிழ் நண்பனுக்குத் தமிழ் சரியாப் படிக்க வராது. அவனுடைய அக்காவுக்கும் அப்படித்தான். அவங்க எனக்கும் அக்காதான். ஆனா அவங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்லா தமிழ் படிக்க வரும். தினமும் பேப்பர் வாங்கிப் படிப்பாங்க.

அன்னைக்கு வந்த பேப்பர்ல ஒரு சமையல் குறிப்பு. அது என்னன்னு அக்காவுக்குத் தெரிஞ்சே ஆகனும். ஆனா அப்பாவும் வீட்டுல இல்ல. அம்மாவோ வேலையா இருக்காங்க. நானும் மத்த ரெண்டு நண்பர்களும் உக்காந்து கதை பேசீட்டு இருந்தோம்.

அப்ப எங்கிட்ட வந்து அந்தப் பேப்பரக் குடுத்து அதப் படிக்கச் சொன்னாங்க. நானும் படிச்சுச் சொன்னேன். அப்ப கூட இருந்த கன்னட நண்பன் ஆர்வத்துல பேப்பரப் பாத்தான். பாத்தவனுக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா அதுல நம்பரெல்லாம் இங்கிலீஷ் நம்பரா இருந்தது. நெய்க்கு நேரா 1 கப்புன்னு எழுதீருந்தது. அப்படித்தான் மத்த பொருட்களுக்கும்.

இதுல ஆச்சரியப் பட என்ன இருக்குன்னு கேக்குறீங்களா? கன்னடத்துல எழுதும் போது நம்பரும் கன்னடத்துலயே எழுதுவாங்களாம். ஆனா நம்ம தமிழ்ப் பேப்பர்ல இங்கிலீஷ் நம்பர் இருக்கேன்னு ரொம்ப ஆச்சரியப் பட்டான்.

அப்பப் பாத்து குண்டத் தூக்கிப் போட்டான் தமிழ் நண்பன். அதாவது கன்னட நண்பனுக்கு விளக்கம் சொல்றானாம். "தமிழ்ல நம்பரே கிடையாதே. அதுனாலதான் இங்கிலீஷ் நம்பரப் போடுறாங்க...."

அட ஆண்டவா! இப்பிடிக் கேக்க வேண்டிய நெலம எனக்கு வந்துருச்சேன்னு வருத்தப்பட்டேன். ரெண்டு பேருக்கும் குறுக்க விழுந்து தமிழ்லயும் நம்பர் இருக்குன்னு அழுத்திச் சொன்னேன். ஆனா கொடுமைக்கு ரெண்டு பேருமே நம்பலை. அப்படி இருந்துச்சுன்னா அத ஒடனே நிரூபிக்கனுமாம். எனக்குத் தமிழ் தெரியுமில்லையா...அதுனால நான் ஒடனே எழுதிக் காட்டனுமாம்.

அவமானம். அவமானம். ரொம்பவே அவமானம். தெரியாதுன்னு ஒத்துக்க வேண்டியதாப் போச்சு. தெரியாததைத் தெரியாதுன்னுதான சொல்லனும். அதுல அவமானம் இல்லை. ஆனா தெரியாத நிலமை அவமானம்தானே. தமிழ் எழுத்துகள இவ்வளவு படிக்கிறோம். ஆனா எண்கள விட்டுட்டோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். சரிதான். இப்ப ஒரு கண்ணுல பாக்குறோமா? இல்லை. இங்கிலீஷ் நம்பர்கள் பயன்படுத்துறோமே. ஆனா நம்ம எண்கள ஏன் தொலச்சிட்டோம்?

வங்க நண்பர்கள் எனக்குண்டு. அவங்களும் நெறைய படிப்பாங்க. அவங்க புத்தகத்துல எல்லாமே வங்காளத்துல இருக்கும். பக்க எண். விலை. முகவரில வர்ர எண். எங்கெல்லாம் நம்ம 123 போடுறோமோ....அங்கயெல்லாம் நம்பர் இருக்கும். கன்னடத்துலயும் அப்படித்தான். பஸ்சு நம்பர் கூட இப்பல்லாம் கன்னடத்துல அங்கங்க தென்படுது. ஹிந்திக்காரங்களும் ஹிந்தி நம்பரத்தான பயன்படுத்துறாங்க. என்னவோ போங்க!

ஆனாலும் கொஞ்சம் லேசா சமாளிக்க முடிஞ்சது. அதுகூட எங்க பட்டிக்காட்டு வழக்கால. எல்லாம் பட்டிக்காட்டுல படிச்ச சில பேச்சு வழக்குகலால.

விளாத்திகுளம் பக்கத்துல இருக்குற புதூர்தான் எங்க மூதாதையார் ஊர். தூத்துக்குடீல நான் இருந்தப்ப் அடிக்கடி போயிருக்கேன். அப்புறமா பண்டிக்கைக்கும் விசேசத்துக்கும் மட்டுமுன்னு கொறஞ்சு போச்சு.

நான் போறப்பல்லாம் எனக்கு கருவாடு செஞ்சித் தருவாங்க. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதுனால போகும் போதெல்லாம் கேக்குறது வழக்கமாப் போச்சு. பட்டிக்காட்டுப் பக்குவம் பிரமாதமா இருக்கும். அதுனால என்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு கிண்டலாக் கூப்புடுவாங்க.

அதென்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு பாக்குறீங்களா! தமிழ்ல ஒன்னுங்குறதக் குறிக்க க-ன்னு எழுதுவாங்களாம். ரு போட்டா அது அஞ்சு. கரு-ன்னா ஒன்னு அஞ்சு தான. அப்ப ஒன்னு அஞ்சு வாடுன்னா கருவாடு. இப்பப் புரிஞ்சிருக்குமுன்னு நெனைக்கிறேன். (கரு-ன்னா பதினைஞ்சுதானன்னு இப்ப நீங்க கேக்கலாம். ஆனா அது இத்தன வெளக்குனப்புறந்தானே. வெளக்காமலேயே அவங்க சொன்னதால ஒன்னு அஞ்சு சரீன்னே வெச்சுக்கலாம்.)

இந்த ரெண்டு எழுத்தையும் சொல்லித் தமிழோட மானத்தையும் என்னோட மானத்தையும் கொஞ்சம் காப்பாத்துனேன்.

அந்தப் பட்டிக்காட்டுல இருக்குறவங்களுக்குத் தெரிஞ்சிருந்தது படிச்சுப் பரதேசமெல்லாம் பாத்த படைப்பாளிகளான நமக்குத் தெரியாமப் போச்சே!

நம்ம நண்பன் சண்முகம் பழைய தமிழ் எழுத்துகளை அவனோட வலைப்பூவுல போட்டிருக்கான். இங்க கண்டிப்பாப் போய்ப் பாருங்க. படிச்சுக்குங்க. தமிழ் எழுத்துகளைத் தெரிஞ்சுக்குங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 09, 2006

பகலில் வந்த பூர்ணிமா

ஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு வாங்கியிருந்தேன். காலை இடுக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு வெளியே நோட்டம் விட்டேன். பயணிகள் படிப்பதற்காக விமான கம்பெனி வைத்திருந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை எடுத்துப் புரட்டினேன். தலைநகரிலும் நாட்டிலும் நடந்த பல கெட்ட விஷயங்கள் பத்திரிகை எங்கும் இருந்தன.

ஒரு வாரம் டெல்லியில் தங்கல். அலுவலக விஷயமாகத்தான். நேற்று இரவுதான் எல்லாம் முடிந்தது. அதனால் ஞாயிறு காலையிலேயே கிளம்பி விட்டேன். சென்னையில் குடும்பம் காத்திருக்கிறதே! இன்னும் தாமதித்தால் அவ்வளவுதான்.

"எக்ஸ்கியூஸ் மீ" பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை ஏர்ஹோஸ்டசின் இனிக்கும் குரல் அழைத்தது. சிறிய அழகான பிரம்புக் கூடையில் சாக்லேட்களும் பஞ்சுத் துண்டுகள் அடைக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளும் இருந்தன. ஹாஜ்முலாவின் புளிப்புச் சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டு நன்றி சொன்னேன்.

பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று ஆர்வத்தில் பார்த்தேன். ஒரு தாயும் மகளும். சட்டென்று மண்டையில் உறைத்தது. அந்த மகளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். பிறப்பிலேயே மூளை வளர்ச்சியில்லாத குழந்தை. சட்டென்று ஒரு பரிதாபம். தமிழர்கள் என்று பேச்சில் தெரிந்தது. சீட் பெல்ட்டைப் போட மறுத்த மகளுக்கு போட்டு விட்டுக் கொண்டிருந்தார். தனியாக வந்திருக்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார்களோ என்று மனது நினைத்தது.

அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தேன். சீட் பெல்ட்டை மகளுக்குப் போட்டதும் நிமிர்ந்த அந்தப் பெண் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். கொஞ்சம் வெட்கம் மேலிட நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். "வாட் இஸ் யுவர் நேம்?" அந்தச் சிறுமியைப் பார்த்து சிநேகமாகக் கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கொஞ்சம் கூட குற்றமில்லாத சிரிப்பு.

"பேர் சொல்லும்மா." மகளுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.

"எம் பேர் புண்ணிம்மா" தத்தை மொழியில் தமிழில் கிடைத்தது விடை. அதைச் சொல்லி விட்டும் ஒரு சிரிப்பு.

"அவ பேர் பூர்ணிமா." மகளின் பெயரைச் சரியாகச் சொன்னாள் தாய்.

"பூர்ணிமா! என்ன அழகான பெயர். தேய்மானம் இல்லாத நிலவுக்குத்தான் பூர்ணிமா என்று பெயர். வெள்ளை உள்ளச் சேய் மனதில் கொஞ்சமும் தேய்மானம் இல்லாத இந்தக் குழந்தைக்கும் பூர்ணிமா என்ற பெயர் பொருத்தம்தான்." தத்துவமாக நினைத்தது மனது.

இரண்டு சீட்களையும் பிரிக்கும் கைப்பிடியில் கையை வைத்திருந்தேன். கொஞ்சமும் யோசிக்காமல் என்னுடைய கையையே கைப்பிடியாக்கிக் கொண்டாள். அப்படியே தப்தப்பென்று என்னுடைய கையை விளையாட்டாக அடித்தாள். தடுக்க வந்த அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "குழந்தைதானே. இருக்கட்டும்."

"சாரி." அந்தப் பெண்ணின் குரலில் தாழ்மை தெரிந்தது. அவரது நெஞ்சில் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்த இயலாமையும் ஏக்கமும் அந்த சாரியில் ஒளிந்திருந்தன. புன்னகை செய்து அவரை நிலைக்குக் கொண்டு வர முயன்றேன்.

"பூர்ணிமா! சாக்லேட் சாப்பிடுவையா? மாமா தரட்டுமா?" உண்மையான அக்கறையோடு கேட்டேன். என்னைப் பார்த்து மீண்டுமொரு சிரிப்பு. படக்கென்று அவளது அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து மகளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ பூர்ணிமா என்னைப் பார்த்து மீண்டும் சிரித்து தலையை ஆட்டினாள். "வேண்டாம்" என்று சொல்லும் மறுப்பு. அதற்கும் ஒரு சிரிப்பு. ஆண்டவன் மேல் லேசாக ஆத்திரம் வந்தது.

அதற்குள் விமானம் ஓடத்தொடங்கியது. சர்ரென்று நேராக ஓடி படக்கென்று ஒரு நொடியில் விண்ணில் எழும்பியது. பூர்ணிமாவிற்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். என்னுடைய கையையும் அவளது அம்மாவின் கையையும் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள். விமானம் உயரத்தை அடைந்து ஒரு நிலைக்கு வந்த பிறகும் கொஞ்ச நேரம் முகத்தைப் பயமாக வைத்துக் கொண்டிருந்தாள். நேரம் செல்லச் செல்ல இயல்பு நிலைக்கு வந்தாள். அதாவது சிரிப்பு அவள் முகத்தில் குடியேறியது.

அதற்குள் ஏர்ஹோஸ்டஸ்கள் உணவு பரிமாறத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண் தனக்கும் தன் மகளுக்கும் "நான்வெஜ்" கேட்டார். நானும் "நான்வெஜ்" கேட்டேன். இரண்டு சிறிய பிரட் துண்டுகள். ஒரு சிக்கன் சாஸேஜ். கொஞ்சம் புதினாத் துவையல். பழக்கலவை. சிறிய பாக்கெட்டில் வெண்ணெய். காப்பி அல்லது டீயில் கலக்க கொஞ்சம் பால் பவுடர். அத்தோடு சுவையூட்டப்பட்ட பால்.

உணவு சுவையாக இருந்தது. பூர்ணிமா என்ன செய்கிறாள் என்று பார்த்தேன். பிரட் துண்டுகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். கள்ளமில்லாத உள்ளம் உள்ளவர்களுக்கே அனைவரும் அனைத்தும் விளையாட்டுத் தோழர்கள் ஆவார்கள். உள்ளத்தில் கள்ளம் குடியேறிய பிறகே நம்மோடு ஒத்துப் போகாதவர்களை நாம் வெறுக்கத் தொடங்குகிறோம். பூர்ணிமா பெயருக்கேற்ற வெண்ணிலா.

அவளை அடக்கப் பார்த்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் ஒன்றும் முடியாமல் விட்டு விட்டார். பூர்ணிமாவின் விளையாட்டு இடைஞ்சல் இல்லாமல் தொடர்ந்தது. பிரட் துண்டுகள் துகள்களாகி சாப்பாட்டு மேசையில் சிதறப் பட்டன. அப்படியே கொஞ்சத்தை எடுத்து என் மேல் போட்டு விட்டு சிரித்தாள். நானும் சிரித்தேன். பூர்ணிமா பார்க்காத பொழுது பேண்டிலிருந்த பிரட் துகள்களைத் தட்டி விட்டேன்.

அந்தப் பெண் அதற்குள் தன்னுடைய உணவை முடித்து விட்டு பூர்ணிமாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். சாஸேஜை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொடுத்திருந்தார். ஒரு துண்டை ·போர்க்கால் குத்தினாள் பூர்ணிமா. என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு அந்த ·போர்க்கை எனக்கு நீட்டினாள். ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. பூர்ணிமாவின் கையைப் பிடித்து அவளுக்கு ஊட்டினேன். அடுத்த துண்டை அந்தப் பெண் ஊட்டப் போனபோது தடுத்து என்னிடம் ·போர்க்கைக் கொடுத்தாள். அந்தப் பெண்ணின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது.

நான் அவரைச் சமாதானப் படுத்திவிட்டு பூர்ணிமாவிற்கு சாஸேஜ் துண்டுகளை ஊட்டி விட்டேன். பிஸ்தா சுவையூட்டப்பட்டிருந்த பாலை அவளே குடித்து விட்டாள். காலையில் சீக்கிரமாக எழுந்து வந்திருக்க வேண்டும். கொட்டாவி விடத் தொடங்கினாள். அப்படியே என் மேலே சாய்ந்து கொண்டு தூங்கிப் போனாள். பூர்ணிமாவை தூக்கப் போன அந்தப் பெண்ணைத் தடுத்தேன். "நானும் ஒரு குழந்தைக்குத் தகப்பன். குழந்தைகள் நிலை எனக்கும் புரியும். பூர்ணிமா சாஞ்சி தூங்குறதால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீங்க சங்கடப் படாதீங்க."

என்னுடைய பேச்சில் அந்தப் பெண் சமாதானமாகியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அதற்குப் பிறகு நிம்மதியாக உட்கார்ந்திருந்தார். அதற்குப் பிறகு மொத்தப் பயணமும் அமைதியாகக் கழிந்தது. சென்னையில் இறங்கியதும் பூர்ணிமாவைப் பற்றி எனது மனைவி சுனிதாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சென்னை வந்ததற்கான அறிவிப்பு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கேட்டது. வங்காள விரிகுடா அழகாக விரிந்தது. கிண்டியில் பாலத்திற்கு அருகே இருக்கும் மாருதி ஷோரும் பளிச்சென்று தெரிந்தது. அவ்வளவு வெயில்.

இறங்கியதும் பூர்ணிமாவிடமும் அந்தப் பெண்ணிடமும் விடை பெற்றுக் கொண்டு நடந்தேன். சுனிதாவையும் ஸ்ருதியையும் தேடினேன். ஸ்ருதி எனது ஆறு வயது மகள். இருவரும் வெளியில் காத்திருந்தார்கள். சுனிதாவே காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஸ்ருதி.

யாரோ என் பிளேசிரைப் பிடித்து இழுக்க திரும்பினேன். பூர்ணிமாதான். "தாத்தா" என்று சைகை காட்டினாள். "போய்ட்டு வர்ரோம்" அந்தப் பெண்ணும் விடை பெற்றுச் சென்றார். போகும் பொழுதும் பூர்ணிமாவின் முகத்தில் பௌர்ணமிச் சிரிப்பு. சுனிதாவும் ஸ்ருதியும் பூர்ணிமாவிற்கு டாட்டா சொல்லிக் கையசைத்தார்கள்.

காரில் வீட்டிற்குப் போகும் வழியில் பூர்ணிமாவைப் பற்றிச் சுனிதாவிடம் சொன்னேன். எவ்வளவு சந்தோஷமாக என்னிடம் பழகினாள் என்று சொன்னேன். கொஞ்சம் பெருமிதத்தோடுதான். சுனிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஏனென்று பார்க்க நான் என்னுடைய பேச்சை நிறுத்தினேன்.

"ஏன் ரகு? நமக்கு மட்டும் இப்படி? டாக்டர் ஸ்கேன் பண்ணிச் சொன்னப்பவும் நான் கலைக்க மாட்டேன்னு உறுதியாத்தானே இருந்தேன். எப்படி இருந்தாலும் பெத்து வளக்க தயாராத்தானே இருந்தேன். நீயும் மாரல் சப்போர்ட் கொடுத்தியே. அப்புறம் ஏன் பொறந்து கொஞ்ச நேரத்துலயே நம்ம விட்டுப் போயிட்டான்? நம்ம ஒழுங்கா வளக்க மாட்டோன்னா? நம்ம மேல நம்பிக்கை இல்லாம கடவுள் திரும்பவும் நம்ம பையனக் கூட்டிக்கிட்டாரா? அந்தப் பொண்ண அவளோட அம்மா பாத்துக்கிறது போல நாம பாத்துக்க மாட்டோமா ரகு?" சுனிதாவின் குரல் தளுதளுத்தது. அவள் சொன்னது எங்கள் மூத்த மகனைப் பற்றி. பூர்ணிமாவைப் போலத்தான் அவனும். ஆனால்.....அம்மாவாசைதான் எங்களுக்குப் பரிசு.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, January 03, 2006

மயிலார் போன ஃபோரம்

இந்த 2006ல் இருந்து மயிலார் நம்ம கூடவே இருந்து பாத்து காப்பாத்தப் போறதால, இனிமே நம்ம வாழ்க்கைல மயிலார் இல்லாம பதிவு போட முடியுமா? நம்ம மயிலார் முருகன் அனுப்பிச்ச ரத்னக் கலாப மயிலார்தான்.

இன்னைக்கு ஜனவரி ஒன்னு. ஊரெல்லாம் கோலகலமா இருக்கே. நாமளும் forum வரைக்கும் போயிட்டு வரலாமுன்னு நெனச்சேன். அதாவது ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு. ஒடனே கெளம்பீட்டாரு மயிலாரு. சொல்லச் சொல்ல கேக்கவேயில்லை. அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் போனதில்லைன்னு தோகைய விரிச்சிக்கிட்டு ஒத்தக்கால்ல நிக்குறாரு. வேற வழியில்லாம கூட வரச் சொன்னேன்.

நான் பைக்குல போகும் போது அவரு மட்டும் ஜிவ்வுன்னு வானத்துல எம்பி சர்ருன்னு பறந்தாரு. டிராஃபிக்காவது! சிக்னலாவது! சட்டுன்னு பொறாமையா இருந்துச்சு. சரி. அதையெல்லாம் பாத்தா முடியுமா? மால்ல போய் வண்டிய நிப்பாட்டுனேன். ஒரே கூட்டம். நெரிசக்காடு.

"ஏம்ப்பா ராகவா! இங்க என்ன திருவிழா நடக்குதா? பெரிய கோயிலா இருக்கும் போல!"

"ஐயா சாமி. இது கோயில் இல்ல. கடை. பெரீஈஈஈஈஈஈஈய்ய கடை. விக்கிரமாதித்தன் கதைல வர்ர கதைக்குள்ள கதை மாதிரி கடைக்குள்ள கடை. ஒரு கடைக்குள்ள பல கடை. ஒவ்வொன்னும் ஒரு கடை." முடிஞ்ச வரைக்கும் விளக்குனேன்.

நீட்டமான கழுத்தைத் தூக்கி நாலு பக்கமும் பாத்தாரு. மேலையும் கீழயும் கழுத்து ரெண்டு வாட்டி ஏறி எறங்குச்சு. நான் நடக்கத் தொடங்குனதும் கூடவே வந்தாரு. வர்ரவங்க மேல இடிக்கக் கூடாதுன்னு தோகையை இறுக்கி நெருக்கி வெச்சுக்கிட்டே நடந்தாரு.

ஒரு எடத்துல போனதும் கமகமன்னு வாட வந்துச்சு. மயிலார் கண்ணு பெரிசா விரிஞ்சது.

"ராகவா! என்னவோ வாட வருது பாரு. ஜம்முன்னு இருக்கு."

"மயிலாரே! அது மக்காச்சோளம். நல்லதா உதுத்து வேக வெச்சி கூட உப்பும் மெளகாப் பொடியும் வெண்ணெய்யும் போட்டுத் தர்ராங்க."

"அட அப்படியா! நமக்கும் கொஞ்சம் வாங்கி எரச்சு விட்டா கொத்தித் திம்போமுல்ல."

பாவம் பறந்து வந்ததுல மயிலாருக்குப் பசிச்சிருக்கும் போல. ஒரு பெரிய கப்பு வாங்குனேன். கீழ பல பேரு நடக்குற எடங்குறதால கைல போட்டுக் காட்டுனேன். ஒவ்வொன்னாக் கொத்திக் கொத்திச் சொகமாத் தின்னாரு. தலையக் குனிஞ்சு ஒன்னக் கொத்துறதும்....அதையே வானத்தப் பாத்துக்கிட்டு முழுங்குறதும்....அது தொண்டைல ஜில்ல்லுன்னு போறதும்...அடடா! என்ன அழகு தெரியுமா!

"ராகவா! இந்த மக்காச்சோளம் எவ்வளவு?"

"முப்பது ரூவா ஒரு கப்பு."

மயிலாருக்கு சடக்குன்னு ஒரு சோளம் குறுக்க விழுந்திருச்சு. "என்னது? முப்பது ரூவாயா? கைப்பிடிதான இருந்துச்சு. அதுக்கே முப்பது ரூவாயா?"

"மயிலாரே, இது மக்காச்சோளமாயிருந்தா நாலஞ்சு ரூவாய்க்கு விக்கலாம். அத வெளிய தெருவுல விக்குறாங்களே. நீளமா நெருப்புல வாட்டி. இது கார்ன். பேரே வெளிநாட்டுப் பேரு. பெறகு வெல இருக்காதா?" நான் சொன்ன வெளக்கம் மயிலாருக்குத் திருப்தியாயில்லைன்னு அவரு நடையிலேயே தெரிஞ்சது.

அப்புறம் அப்படியே தானா மேல ஏறும் படீல ஏறி லேண்டு மார்க்குங்குற புத்தகக் கடைக்குப் போனோம். வரிசையா இருந்த புத்தகங்கள ஒரு நோட்டம் விட்டுட்டு மாடிக்குப் போயி தமிழ் சினிமா வீசீடி ஒரிஜினல் வாங்கலாமுன்னு போனோம். ஒவ்வொன்னா எடுத்துப் பாத்தேன். பழசு புதுசுன்னா எல்லாம் இருந்துச்சு. மயிலாரும் பார்வைய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. திடீருன்னு தலையக் குனிஞ்சி குனிஞ்சி என்னவோ பண்ணுனாரு. உக்காந்து உக்காந்து எந்திரிச்ச மாதிரி இருந்தது. படக்குன்னு தோகைய வேற விரிச்சிட்டாரு. எனக்கு மானமே போன மாதிரி ஆயிருச்சி.

"என்னாச்சு...ஏன் இப்பிடி பண்றீங்க? எல்லாரும் பாக்குறாங்க...கொஞ்சம் நிப்பாட்டுங்க." கட்டக் குரல்ல அழுத்திச் சொன்னேன்.

படக்குன்னு என்னய கோவமா ஒரு பார்வ பாத்தாரு. ஏதாவது தப்பாச் சொல்லீட்டமோன்னு கம்முன்னு நின்னேன். அங்கயிருந்த வீசீடிய சைக காட்டுனாரு. அது கந்தன் கருணை படத்தோட சீடி. அடக் கடவுளே!

"ஐயா! இது சினிமா. அதப் பாத்து இந்தப் போடு போடுறீங்க. படிக்காதவங்கதான் சினிமா பாத்து சாமியாடி கன்னத்துல போட்டுக் கிட்டா நீங்களுமாய்யா? ஒரு படத்தப் பாத்து...சரி. சரி....வாங்க எல்லாரும் பாக்குறதுக்குள்ள போயிருவோம்." கிடுகிடுன்னு நடந்து வெளிய வந்துட்டோம். மயிலார் செஞ்ச கூத்துல நா கையில எடுத்த வீசீடியக் கூட கீழ வெச்சுட்டு வந்துட்டேன். ச்ச!

எனக்கு இன்னும் மனசு கேக்கலை. இப்பிடிச் சின்னப்புள்ளத் தனமா பண்ணீட்டாரே. பாக்குறவங்கள்ளாம் இனிமே மயிலாரப் பாத்துச் சிரிப்பாங்களேன்னு நெனப்பு ஓடுது. மயிலாரும் தோகையத் தொங்கப் போட்டுக்கிட்டு அமைதியா தலையக் குனிஞ்சிக்கிட்டு பின்னாடியே வந்தாரு.

"எக்ஸ்கியூஸ் மீ" ஒரு நல்ல அழகான பொண்ணு. நல்ல பிரமாதமா இருக்கு. நானும் பதிலுக்கு இங்கிலீஸ்ல "யெஸ்"ன்னு சொன்னேன்.

ஆனா பாருங்க. "நாட் யூ"ன்னு சொல்லீட்டு அந்தப் பொண்ணு மயிலார் கிட்டப் போயிருச்சு.

"கேன் ஐ ஹேவ் அ ஃபோட்டோ வித் யூ?"ன்னு கூட்டீட்டுப் போயி போட்டோவும் எடுத்துச்சு அந்தப் பொண்ணு. மயிலார் நல்லா தொகைய பப்பரப்பாங்குன்னு விரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கொண்டைய சிலுப்பிக்கிட்டு நின்னாரு. ஃபோட்டோ எடுத்து அத அப்பிடியே வெள்ளைச் சட்டைல போட்டுக் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு சட்டய வாங்கிக் கிட்டு "தேங்க்ஸ்" சொல்லி மயிலார் கழுத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போயிருச்சு.

நான் ஃபியூஸ் போயி "வீட்டுக்குப் போகலாம். இல்லைன்னா லேட் ஆயிரும்"ன்னு சொன்னேன். இல்லைன்னா எத்தன பேரு இந்த மாதிரி ஃபோட்டோவுக்கு வருவாங்களோ!

சரீன்னு சொல்லீட்டு மயிலாரு கம்பீரமா தோகைய அசைச்சுக்கிட்டு விறுவிறுன்னு துள்ளலோட முன்னாடி போனாரு. நான் பின்னாடியே வேகமா ஓடுனேன்.

அன்புடன்,
கோ.இராகவன்