Friday, June 30, 2006

தமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை

முன்பு எப்பொழுதாவது நடக்கும். இப்பொழுது அடிக்கடி நடக்கிறது. அதுவும் இலங்கையில் உள்நாட்டுச் சூழ்நிலை கவலைக்கிடமாக இருக்கும் பொழுது.

இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற அக்கறையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் இலங்கை அரசின் கைப்பாவைகள் இப்பொழுது தமிழக மீனவர்களையும் குறிவைத்து விட்டார்கள். இலங்கைக் கடற்படையைத்தான் சொல்கிறேன்.

ஒவ்வொரு நாளும் மீனவர்கள் சுடப்பட்டார்கள். ஆனால் நடவடிக்கை என்று ஒன்றும் இருக்காது. உடனே சர்வதேச எல்லை கில்லை என்று நியாயம் பேசுவதற்குப் படை திரண்டு வருவார்கள். ஆனால் இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

ஏற்கனவே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இலங்கையில் நமது தமிழ்ச் சகோதரர்களைக் கைகழுவியாகி விட்டது. தமிழகக் கடைக்கோடித் தமிழனையும் கைகழுவ என்ன காரணத்திற்குக் காத்திருக்கிறார்களோ!

என்னவோ வயிற்றெரிச்சல். :-( பனை மரத்துல தேள் கொட்டினாலும் தென்னை மரத்துல நெறி கட்டுதய்யா.

Friday, June 23, 2006

சிறிய விபத்து

நண்பர்களே. இன்று மாலை அலுவலத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் சிறிய விபத்து. குண்டும் குழியுமான சாலையில் பைக் சறுக்கித் தடுமாறி விழுந்து விட்டேன். பெரிய அடி அதுவுமில்லை. அணிந்திருந்த ஹெல்மெட் தன்னுடைய கடமையை மிகச்சரியாகச் செய்தது என்றால் மிகையில்லை. வலது தோள்ப்பட்டையில் வலி இருக்கிறது. எலும்பு முறிவு இல்லை.ஆனாலும் ஏதோ தசை முறிவு இருக்கலாம் என்று கருதி தொட்டில் கட்டியிருக்கிறார்கள். ரெண்டு மூனு வாரம் அப்படித்தான் இருக்க வேண்டுமாம். உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பகிர்ந்து கொண்டேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, June 21, 2006

மயிலார் விரும்பிய ஐஸ்கிரீம்

"உன்னோட சென்னைக்கு வந்தாலும் வந்தேன். இப்பிடி வெயில்ல அலைய வெக்கிறயே!!!!" மயிலார் அலுத்துக்கிட்டாரு. மூனு மாசம் வேலைன்னு சென்னைக்கு வந்தா நமக்குத் தோதா கூடவே மயிலாரும் சென்னைக்கு வந்துட்டாரு. வெயில் அது இதுன்னு என்கிட்ட பொலம்புனாலும் ஊர் சுத்துறது குறையவேயில்லை.

அப்படித்தான் அன்னைக்கு ஸ்டெர்லிங் ரோட்டுல இருந்து நேரா வண்டிய விட்டு சேத்துப்பட்டுக்குள்ள நுழைஞ்சேன். கூடவே இவரும் வர்ராறே. வழியில பன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம். ஒரு வழியா சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப் போனேன். ஆனா வெயில் வெக்கை சூடுங்குற பொலம்பல் குறையல.

திடீர்னு நிப்பாட்டுன்னு கத்துனாரு. படக்குன்னு பைக்க ஓரமா ஒதுக்குனேன். "அங்க பாரு"ன்னு மயிலார் தோகையக் காமிச்ச எடத்துல பாத்தா "Creamz"னு எழுதீருந்தது. "ஐஸ்கிரீம் கடை"ன்னு சொன்னேன்.

"அதுதான் எனக்குத் தெரியுமே"ன்னு சொல்லிக்கிட்டே உள்ள நுழைஞ்சிட்டாரு. நான் வண்டிய ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டீட்டு உள்ள ஓடுனேன். சொல்லாமக் கொள்ளாம உள்ள ஓடலாமா? அன்னைக்கு இப்பிடித்தான் சென்னை சிட்டி செண்டருக்குக் கூட்டீட்டுப் போனா..."ஏய்! அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே! இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா! இவங்கதான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவா ஜீன்ஸ்ல நடிசாங்க." இப்பிடிப் பட்டியல் போடுறாரு. என்னோட கண்ணுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது. இவரு என்னன்னா இத்தன பேரப் பாத்துட்டு எனக்கும் காட்டுறாரு. ம்ம்ம்..

ஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.

"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்"

"என்னது பீச்சா? இங்க எங்க பீச் இருக்கு? மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா? இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா?"

நக்கலப் பாத்தீங்களா? "இது peach. beach இல்ல"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.

அவரு சும்மாயிருக்கனுமே! "ஒனக்கு என்ன பிடிக்கும்?"

"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா? ஹே ஹே

"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது?" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு "ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்"னு கேட்டாரு.

"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.

"Banana-னா வாழப்பழந்தான? அதுல என்ன பிடிக்கும்?"

இவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். "Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்."

"சரி. அப்ப அது ஒன்னு" மயிலார் ஆர்டர் குடுத்துட்டாரு.

எனக்கு Baskin and Robbins ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். அங்க மட்டுந்தான் Banana Splitக்கு என்ன ஐஸ்கிரீம்னு நம்மளே முடிவு செய்யலாம். அதுக்கு டாப்பிங்க்ஸ் கூட நம்மளே முடிவு செய்யலாம். ரொம்ப நல்லாயிருக்கும். பெங்களூர் கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் கூட நல்லாயிருக்கும்.

அதுக்குள்ள ஐஸ்கிரீம வந்துருச்சு. பீச் ஜெல்லி ஜாம் ஜாமை மயிலார் முன்னாடி வச்சாங்க. அடுத்தது Banana Split. அதையும் மயிலார் முன்னாடியே வெச்சுட்டுப் போயிட்டாங்க அதக் கொண்டு வந்த ஐஸ்கிரீம்.


பீச் துண்டுகள்ள ஒன்ன எடுத்து முழுங்குனதுமே அவரோட தோக படக்குன்னு விரிஞ்சிருச்சு. அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.

அத்தோட விட்டாரா? "பில் கட்டீட்டு வா. நேரமாச்சுல்ல. சீக்கிரம் சீக்கிரம்." அவசரப்படுத்துனாரு.

"ஹலோ! நான் இன்னமும் ஐஸ்கிரீம் சாப்பிடவேயில்லை." எனக்கும் கடுப்பு.

"அதுனால ஒன்னும் கொறஞ்சு போகாது. இங்கயே நேரத்த வீணடிக்காம படக்குன்னு கெளம்பு." சொல்லீட்டுப் படக்குன்னு கடைய விட்டு வெளிய வந்து ஜிவ்வுன்னு பறக்கத் தொடங்கீட்டாரு.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, June 11, 2006

பராசக்தி படத்துக்கு தடை

(அரசியல் நையாண்டி என்பது எழுத வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழக, இந்திய அரசியல்வாதிகளின் அன்றாட நகைச்சுவைப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் ஈடுகுடுத்து எழுதுவது யாருக்கும் கடினம்தான். ஆனாலும் ஒரு சிறு முயற்சி.)

தமிழக அரசு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. பராசக்தி படத்தைத் தடை செய்வது காலத்தின் கட்டாயம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் பராசக்தி. இந்தப் படம் வெளிவந்த காலத்தில் மிகுந்த புரட்சிகரமானத கருதப் பட்டு இமாலய வெற்றி பெற்றது.

இந்தத் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தடை. இந்தப் படம் இப்பொழுது திரையரங்கில் ஓடினால் யாரும் வந்து பார்ப்பார்களா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தப் படத்தின் உரிமைகள் சன் டீவியிடம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சன் டீவியினர் இந்தப் படத்தை அடிக்கடி ஒளிபரப்பு செய்வதும் அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்திற்குத் தடை விதித்து அதைச் செயல்படுத்தும் படி மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. இன்றைய சூழ்நிலையில் இந்தத் திரைப்படத்தைத் திரையிடுவது என்பது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயலாக அமையும் என்று அரசாங்கம் நம்புகிறது. இதில் பலருடைய நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டில் ஆங்காங்கு கலவரம் உண்டாகலாம் என்று அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் நம்பிக்கையைப் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் படத்தின் வசனங்கள் நிச்சயமாக ஆட்சேபனைக்குறியவை. பலரும் கடவுளாக நம்புகின்ற தெய்வத்தைப் பற்றி படத்தில் அவதூறு வசனங்கள் இருப்பதால் படத்தைத் தமிழக அரசு தடை செய்கிறது.

இதுதான் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தணிக்கைக் குழு சான்றிதழ் கொடுத்த ஒரு திரைப்படத்தை இது போன்று தடை செய்வது முதல்வரின் ஒருதலைப்பட்சமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் படத்தை முதலில் தமிழகத்திலுள்ள மடாதிபதிகளிடம் போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப் படியே இது செய்யப் பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.

தணிக்கைக் குழு என்று ஒன்று இருக்கையில் மடாதிபதிகளிடம் படத்தை ஏன் காட்ட வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்தப் படம் மக்கள் மனதை நிச்சயம் புண்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். முதலில் ஒரு மடாதிபதி உண்ணாவிரதம் தொடங்கியதாலேயே பிரச்சனை பெரிதானது. வலைப்பூக்களில் இதை ஆதரித்தும் எதிர்த்தும் ஏற்கனவே பல பதிவுகள் வந்து விட்டன.

ஆனால் இந்தத் தடையைத் தனது ஆட்சியேலே கொண்டு வந்து விட்டதாகவும் தேர்தல் கமிஷன் இதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொன்னதால் சொல்லவில்லை என்றும் ஜெயலலிதா அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். தேவையில்லாமல் இரண்டாம் முறை இந்தப் படத்தைத் தடை செய்வது கருணாநிதியின் ஏமாற்றுவேலை என்றும் அவர் சாடினார். தன் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அடக்குமுறைகளை கட்சியினரும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். அதைக் கேட்ட சிலர் அந்தப் பக்கமாக வந்த ஒரு லாரியைக் கொளுத்தினார்கள்.

இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்ற வழக்கு உண்டு" என்று கூறினார்.

இதற்கிடையில் ஜெயா டீவியில் ரபி பெர்ணாட்டிற்கு பேட்டி அளித்த வைகோ, "இந்தப் படத்தத் தட பண்ணனுங்க. வெளியிட்டிருக்கவே கூடாதுங்க...அவ்வளவுதான்" என்றார்.

இந்தப் படம் தடை செய்யப்பட்டதால் இந்தப் படத்திற்கு திடீர் ஆதரவு பெருகியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய மக்கள் திருட்டு வீசிடிகளை வாங்கிப் பார்க்கிறார்கள். இதனால் பர்மா பஜார், சிங்கப்பூர் பஜார் மற்றும் அனைத்துத் தமிழக திருட்டு வீசீடி விற்பனையாளர்களும் தமிழக அரசிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிரிண்ட் சரியில்லாவிட்டாலும் படம் லேசுமாசாகத் தெரிவதால் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள்.

இந்தத் தடையைப் பற்றிக் கதாசிரியர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது அவர் நாதழுதழுத்து விட்டதாகத் தெரிகிறது. பராசக்தி தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். இதைத் தடை செய்வது சரியல்ல என்று அவர் கருத்துத் தெரிவித்தார். தமிழனுக்குச் சூடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். அவர்தானே தடை செய்தது என்ற கேள்விக்கு, "அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.

கிண்டலுடன்,
கோ.இராகவன்

Friday, June 09, 2006

14. தூத்துக்குடி வழியா பெங்களூர்

திருச்செந்தூர்ல மொட்ட போட்டுட்டு முருகனைக் கும்பிட்டுட்டு பனங்கெழங்கு வாங்கிக்கிட்டு தூத்துக்குடிக்குப் பஸ் ஏறுனோம். அங்கயிருந்துதான பெங்களூருக்கு டிரெயின். வீரபாண்டியன் பட்டணம், காயல்பட்டணம், ஆத்தூரு வழியா தூத்துக்குடி. வழியில ஆறுமுகநேரியும் உண்டு. அதுதான் வலைப்பூ தாணு பொறந்த ஊர். அதச் சொல்லலைன்னா அவங்க கோவிச்சுக்குவாங்களே.

வழியெல்லாம் நான் சின்னப்புள்ளைல பாத்த மாதிரி வீடுக. எக்கச்சக்கமா கொசுவத்திச் சுருள்கள் (அதாங்க flashback). தூத்துக்குடிய நெருங்க நெருங்க உப்பளங்க. வெள்ள வெளேர்னு பாத்தி பாத்தியாக் கண்ணப் பறிக்குது. பாத்தி கட்டி அதுல தண்ணியத் தேக்கி உப்பு வெள்ளாம பண்றது தூத்துக்குடீல பெரிய தொழிலு.

வெயிலுக்குத் தண்ணி காஞ்சி பாத்தியெல்லாம் வெள்ள வைரங்களா உப்புக்கல்லுக ஜொலிக்கும். அதுல நடக்க முடியாது. கால்ல குத்தும். ரப்பர் ஷீட் மாதிரி காலணி போட்டுக்கிட்டுதான் அதுல எறங்க முடியும். வெயில் பட்டு பளீர்னு வெளிச்சம் மூஞ்சீல தெறிக்கும். ஒரு பெரிய சொரண்டி வெச்சுக்கிட்டு உப்பச் சொரண்டிச் சொரண்டி பாத்தி வரப்புல அள்ளிப் போடுவாங்க. அதுவேற அங்கங்க சின்னச் சின்ன மலையாட்டம் குமிஞ்சிருக்கும். பாக்க அழகோ அழகு. இந்த உப்பையெல்லாம் சேகரஞ் செஞ்சி பெரிய மலையாப் போட்டுருப்பாங்க. மழ பெஞ்சிரக் கூடாது. அப்புறம் எல்லா உப்பும் கறைஞ்சு போகும். அதுனால அந்தக்காலத்துல பனையோலைகளைப் போட்டு மூடி வெச்சிருப்பாங்க. இப்பெல்லாம் தார்ப்பாயி பாலீத்தீன் ஷீட்டுன்னு போட்டு மூடுறாங்க.

அதெல்லாம் அப்பிடியே பாத்துக்கிட்டு ஸ்பிக் நகர் வழியா தூத்துக்குடிக்குள்ள நுழைஞ்சோம். பஸ்சு புதுக்கிராமம் வழியாப் போகும். அங்கதான் என்ன வளத்த அத்தயும் மாமாவும் இருக்காங்க. நண்பர்களோட அங்க போறதா திட்டம். ஆனா ரொம்ப நேரமாயிட்டதால அவங்கள நேரா ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லீட்டு நா மட்டும் புதுக்கிராமத்துல எறங்குனேன். அத்தையும் மாமாவையும் பாத்து பத்து நிமிஷம் பேசீட்டு அத்தைக்கு எடுத்த சேலையக் குடுத்துட்டுக் கெளம்பினேன். எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த கருப்பட்டிச் சேவு, மிக்சரு, காராச்சேவெல்லாம் பெரிய பைல போட்டுக் குடுத்தாங்க. நானும் மறுக்காம வாங்கிக்கிட்டு ஸ்டேஷனுக்கு ஓடுனேன்.

அங்க தேங்கா பன் வாங்குனோம். தூத்துக்குடிக்காரங்க கிட்ட தேங்காபன்னுன்னாப் போதும். அவ்வளவு பிரபலம். பன்னுதான். வட்டமா மாவ உருட்டி அதுக்கு நடுவுல தேங்காயும் ஜீனியும் கலந்து வெச்சு மடிச்சு பன்னாச் சுட்டு எடுத்தா....ஆகா.....ஆகா...ம்ம்ம்ம்ம்...

மணியாச்சி, கோயில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியா மதுரைக்கு வந்து சேந்தது வண்டி. ஒரு வெள்ளைக்காரனும் காரியும் ஏறுனாங்க. எங்க பக்கத்துலயே வந்து உக்காந்தாங்க. அவங்ககிட்ட பேச்சுக் குடுத்தோம். அவங்களும் சங்கோஜம் இல்லாமப் பழகுனாங்க. அவருக்கு 24 வயசும். அந்தப் பொண்ணுக்கு 26 வயசும். ஆனா நாங்கள்ளாம் பாக்க சின்னப்பசங்களாத் தெரிஞ்சோம். நல்ல உயரம். நல்ல விரிஞ்ச கட்டுடம்பு. ரெண்டு பேருக்குந்தான்.

பேச்சு வாங்குல நாங்க என்ன பண்றோம்னு கேட்டாங்க. நான் சாஃப்ட்வேர்ல மேனேஜரா இருக்கேன். இவன் Siemensல இருக்கான். இவன் IBM. இப்பிடிக் கம்பெனி கம்பெனியாச் சொன்னா...அவன் ஓன்னுட்டான். நம்ம என்ன பண்றோம்னு கேட்டுட்டாங்களே. நம்ம திரும்பிக் கேக்க வேண்டாமா? கேட்டுட்டோம். அவங்க ஒரு பார்ல வேல பாத்தாங்களாம். இப்ப அந்த வேலைய விட்டுட்டு இந்தியாவச் சுத்திப் பாக்க வந்திருக்காங்களாம். ஊருக்குப் போய் என்ன திட்டம் வெச்சிருக்காங்கன்னு கேட்டோம். மசாலா டீதான் இப்போ லண்டன்ல பிரபலமாம். அதுக்கு ஒரு கட போடத் திட்டம் வெச்சிருக்காங்களாம். அடடா!

அப்ப நான் ஒரு பேச்சு சொன்னேன். "ஐயா, நீங்க இந்த மாதிரி வேலைல பெருசு சிறுசுன்னு பாக்காமச் செய்றீங்க. ஆனாலும் பாருங்க உங்களால உலகம் சுத்த முடியுது. அதுக்கு உங்களோட ஆர்வமும் நல்ல காரணம். நாங்க பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குறோம். ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். அதுவுமில்லாம வேலைல சின்ன வேலை பெரிய வேலைன்னெல்லாம் நாங்க நெறைய பாக்குறோம். அதுவும் மாறனும். ஆனாலும் உழைப்புங்குற ஒன்னு எங்கள வாழ வைக்குது. அதுதான் எங்க சொத்து."

அவரும் நாங்க கொடுத்த உளுந்து பக்கோடாவ மென்னுக்கிட்டு (மதுரைக்கார நண்பனோட அம்மா கொண்டு வந்து ஸ்டேஷன்ல குடுத்தாங்க) தலையத் தலைய ஆட்டுனாரு. பிரியாணிதான் ரெண்டு பேரும் வாங்கிச் சாப்பிட்டாங்க. அதுவும் ஸ்டேஷன்ல வாங்கீருந்தாங்க. ரொம்ப நல்லாப் பழகுனாங்க. நாங்களும் நல்லாப் பேசீட்டுத் தூங்கீட்டோம். அடுத்தநாள் காலைல பெங்களூர் கண்டோன்மெண்ட்டுல எறங்கீட்டு டாட்டா சொன்னோம்.

முற்றும்.

Sunday, June 04, 2006

13. எனக்கும் ஒரு கனவு உண்டு

மயிலார் யாருன்னு ஒங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை. நான் கொஞ்சம் துணுக்கமா உக்காந்திருந்தப்போ வந்து பக்கத்துல உக்காந்தாரு. அவர் வந்ததே எனக்குத் தெம்பா இருந்தது. பக்குன்னு கண்ணத் தொறந்து என்னைத் தயாராக்கிக்கிட்டேன். அதுக்குள்ள காணிக்கை உதவியாளரு அலுமினியச் சட்டீல இருந்த தண்ணிய எடுத்து தலைய நனைச்சாரு. மூச்சியெல்லாம் தடவுனாரு. முருகன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நான் அமைதியா இருந்தேன்.

கத்தியத் தலைல வெச்சு ஒரு இழு இழுத்தாரு. சரக்குன்னு சின்னச் சின்னத் தடுக்கல்களோட ஒரு கொத்து முடி மடியில விழுந்துச்சு. அதுவரைக்கும் கலகலன்னு பேசிக்கிட்டிருக்குற நண்பர்கள் அமைதியாயிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா முடியெல்லாம் வழிஞ்சி கீழ விழுக விழுக நான் உறுதியானேன். மயிலார் துணையா இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல்.

முடிய வழிச்சவரு ஒரு நல்ல காணிக்கை உதவியாளர். ஒன்னும் சொல்லலை. முடிச்சதும் கைல ஏற்கனவே நான் எடுத்து வெச்சிருந்த இருபது ரூபாயக் கொடுத்தேன். ஏன் குடுத்தேன்னு கேக்குறீங்களா? நன்றிதான். ஏற்கனவே காசு கெட்டி மொட்டச் சீட்டு வாங்கீருக்கிறப்ப அவருக்கு நான் எதுவும் குடுக்கனும்னு கட்டாயமில்லை. ஆனா நான் குடுத்தேன். ஏன்?

கோயில்பட்டிக் கதிரேசன் கோயில் ஐயரைப் பத்தி முந்தி எழுதீருந்தேனே...நினைவிருக்கா? அவரோட ஒடம்புல செதிலா வர்ர சோரியாசிஸ் பத்தி. அது அவருக்கு மட்டுமில்ல. எனக்கும் உண்டு. தலையில சொரியாசிஸ் இருக்குறப்போ பல பிரச்சனைகள் உண்டு. குறிப்பா முடி வெட்டிக்கப் போகுறப்போ ஒரு தாழ்வுணர்ச்சி வரும். நம்ம தலையப் பாக்குற முடி வெட்டுறவரு என்ன நெனப்பாரோருன்னு.

போன வாட்டி நான் திருத்தணியில மொட்ட போட்டப்போ அப்பா அந்த உதவியாளருக்குக் கூடக் காசு குடுத்தாரு. ஆனா அந்த உதவியாளர் அது போதாதுன்னு கூடக் கேட்டாரு. அவரு கேட்டது பெருசில்லை. ஆனா "இந்தத் தலைக்கே நீங்க இவ்வளவு குடுக்கனும்"னு சொன்னாரு. அதுவுமில்லாம மொட்டை எடுக்கும் போது நூறு நொரநாட்டியம் சொல்லிக்கிட்டே இருந்தாரு. என்னோட மனசுல அது பதிஞ்சிட்டாலும் நான் கோவிச்சிக்கலை. அதையெல்லாம் நான் கேக்குறதுதான் முருகனோட விருப்பம்னு ஏத்துக்கிட்டேன். ஆனா கூடவே இருந்த அப்பா அம்மா மனசு?

அப்படியொரு நெலம இங்கயும் வந்துறக்கூடாதேன்னுதான் மொதல்ல எனக்கு அந்தத் துணுக்கம் வந்துச்சி. அதையெல்லாம் தூள்த்தூளாக்கி எல்லாத்தையும் அமைதியா நடத்திக் கொடுத்த உதவியாளருக்கு நான் கூடக் குடுக்கக் கூடாதா சொல்லுங்க?

வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக் கனவுண்டு. கோடிக்கோடியாச் சம்பாதிக்கிறது. நிலபுலனா வாங்கிப் போடுறது. பல பொண்டாட்டி கட்டுறது. நெறையப் பிள்ளைக பெத்துக்கிறது. கட்டிடமாக் கட்டுறது. கொல பண்றது. கொள்ளையடிக்கிறது. பதவிக்கு வர்ரது. இப்பிடியெல்லாம் இருக்கும் போது எனக்கும் ஒரு கனவு உண்டு.

ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கனும்னு. அதுல சொரியாசிஸ் மற்றும் பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி செய்யனும். அத்தோட சொரியாசிஸ்காரங்க முடி வெட்டிக்கிறதுக்கும், மத்த பல காரியங்களுக்கும் அங்க வசதி செஞ்சிக் குடுக்குறது. உடம்புல சொரியாசிஸ் இருக்குறவங்க பொது இடங்கள்ளயோ நீச்சல் குளங்கள்ளயோ குளிக்க முடியாது. நட்சத்திர ஓட்டல்ல கூட நீச்சல் குள அனுமதி தரமாட்டாங்க. அவங்களுக்கு நீச்சல்குளம். நீராவிக்குளியல் இடம். இன்னும் பல வசதிகள் செஞ்சி ஒரு நிலையம் தொடங்கனும். அப்புறம் அதை ஊரூருக்குக் கொண்டு போகனும்.

இதவிட முக்கியமா ஒரு கவுன்சிலிங் செண்டர். அதாவது இந்த நோய்க்காரங்க மொதல்ல மனசாலதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவங்க பொதுவாழ்க்கையே போச்சுன்னு. நானும் மொதல்ல அப்படித்தான் இருந்தேன். ஆனா முருகன் புண்ணியத்துல நல்லா கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சிருக்கேன். வாழ்க்கை முறைய கொஞ்சம் மாத்தி அமைச்சிக்கிட்டா நல்லபடியா சந்தோஷமா இருக்கலாம். இதெல்லாம் எடுத்துச் சொல்ல நிபுணர்கள். இப்பிடிப் போகுது என்னோட கனவு.

ஆனா இதெல்லாம் எப்படிச் செய்றது? நான் டாக்டரும் கிடையாது. கோடீஸ்வரனும் கிடையாது. நெறைய விவரம் தெரிஞ்சவனும் கெடையாது. ஆனா நம்பிக்கை இருக்கு. முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான். அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.

இங்க நெறைய பலதரப்பட்ட துறையில இருந்து ஆட்கள் இருக்கீங்க. இந்த மாதிரி விஷயங்கள்ள உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கலாம். இந்தக் கனவு நனவாகுறதுக்கு உங்களால ஏதாவது உதவ முடியுமா? தனிப்பட்ட முறையில தொடர்பு கொள்ள நினைக்கிறவங்க என்னோட gragavan at gmail dot comக்கு மெயில் அனுப்புங்க. உங்களத் தொடர்பு கொள்ளவும் நான் தயார்.

சொரியாசிஸ் பத்தித் தெரிஞ்சிக்கிறதுக்குக் கீழ இருக்குற சுட்டிகளைப் பாருங்க......
http://en.wikipedia.org/wiki/Psoriasis

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, June 01, 2006

12. கடற்கரை தாகம் இதுதான்

திருநெல்வேலீல இருந்து பஸ்சப் பிடிச்சி ஆழ்வார்த்திருநகரி வழியா திருச்செந்தூர் போய்ச் சேந்தோம். எட்டேகால் இருக்கும். மணி ஐயர் ஓட்டல்ல ரூம் போட்டோம். ஓரளவுக்கு நல்லாவே இருந்துச்சு. காலைல இருந்து கசகசன்னு அலஞ்சதால குளியல் போட்டோம். அப்படியே கீழ வந்து ராச்சாப்பாட்டை முடிச்சோம். மணி ஐயர் ஓட்டல் நல்லாவே இருக்கும். தரமாவும் இருக்கும். மத்த சில ஓட்டல்களும் சுமாரா இருக்கும். அசோக் பவன்னு ஒரு ஓட்டல். அதுவும் சுமாரா இருக்கும். ஆனா பலகைல பேர் எழுதும் போது அசோக்குன்னு தமிழ்ல எழுதீட்டு இங்கிலீஷ்ல ASSHOK-ன்னு எழுதீருந்தாங்க. :-) அதையும் ஒரு படம் பிடிச்சிக்கிட்டோம். (அடுத்த நாள் காலைலதான்.)

ராச்சாப்பாடு முடிஞ்சதும் கோயிலச் சுத்தீட்டு கடலுக்குப் போனோம். திருச்செந்தூரின் கடலோரத்தின் கதையில சொல்லீருக்குற மாதிரி நேரா சின்னப்பத்தேவர் சுத்து மண்டபத்துல நொழைஞ்சி சுக்குத்தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு நடந்தோம். வழியில ரெண்டு ஆட்டுக்குட்டிங்க படுத்திருந்தது. கடக்காத்துக்கு ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டு. அந்தப் பாசக் காட்சி என்ன என்னவோ பண்ணிச்சி. அந்தப் பாசத்தைப் பிடிக்க முடியாது. ஆனா படத்தைப் பிடிக்கலாம். அதுனால ஒரு படம் எடுத்துக்கிட்டோம்.

நேரா கடல்ல போய் நின்னு விளையாண்டோம். விளையாட விளையாட நான் கடலோட ஒன்றிப் போயிட்டேன். Hallucination அப்படீன்னு இங்கிலீஷ்ல சொல்வாங்களே...அந்த மாதிரி...கடல் நம்மோட உறவாடுற மாதிரி. உண்மையச் சொல்லப் போனா...என்னோட உள்ளத்த அமைதியாக்கி அதுல மெத்துன்னு ஒரு இன்பத்தக் கடல் கொண்டு வந்துச்சு. அது ஒரு ஒட்டுதல் தானே. நான் வேணுக்குன்னே கொஞ்சம் பின்னால் வந்து "இப்ப என்னத் தொடு பாக்கலாம்னு" சொன்னேன். அலையும் துள்ளிக்கிட்டு வந்து தொட்டுருச்சு. அடன்னு சொல்லிக்கிட்டு இன்னும் கொஞ்சம் பின்னுக்கு வந்து...இப்ப பாக்கலாம்னேன். பாருங்க...அல வந்துருச்சு.....மறுபடியும் பின்னால....அதுவும் வருது....இப்பிடியே நாங் கொஞ்ச தூரம் வந்துட்டேன். அலயும் வந்துட்டுது.

அங்க ரெண்டு நண்பர்கள் மண் வீடு கட்டிக்கிட்டிருந்தாங்க. நம்ம கூட வந்த பயகதான். இப்பக் கொஞ்சம் குரூரமா நெனச்சது மனம். இப்பத் தொடுன்னு கடல் கிட்ட சொன்னேன். அப்ப அந்த மண் வீடும் அழிஞ்சிரும்ல. ஆனா பாருங்க கடல் வரல. நான் கடைசியா நின்ன எடம் வரைக்கும் வந்துக்கிட்டிருக்கு. அதுவரைக்கும் முன்ன வந்த கடல் அதுக்கப்புறம் வரவேயில்லை. எனக்குன்னா ஒரு மாதிரி ஆயிருச்சு. இந்தப் பயக படக்குன்னு வீட்டக் கட்டி முடிக்கிறான்களான்னா...அதுவும் இல்லை. நடுவுல கூம்பு எழுப்பிச் சுத்துச் சொவர் வெச்சி ஒரு வாசல் வெச்சின்னு போய்க்கிட்டே இருக்காங்க. ஒரு அஞ்சு பத்து நிமிசங் கழிச்சி திருப்தியோட அடுத்த எடத்துக்குப் போயிட்டாங்க. எனக்கு இப்பக் கடல் மேலக் கோவம் இல்லாட்டியும் லேசான வருத்தம். இதுவரைக்கும் கூட விளையாண்டியே...இப்ப விளையாடலையேன்னு....அவனுக எந்திரிச்சிப் போனதுமே கடல் படக்குன்னு வந்து வீட்டத் தட்டி விட்டுட்டு என்னத் தொட்டிருச்சி. எனக்கு ஒரு நிமிசம் ஒரு சிலிர்ப்புச் சந்தோசம்.

இதெல்லாம் தற்குறிப்பேற்றல்னு இலக்கியம் படிச்சவங்க சொல்லீருவாங்க. மூடநம்பிக்கைன்னு பகுத்தறிவாளருங்க சொல்லீருவாங்க. ஆனா கடல் எனக்கு ஒரு பாடம் சொன்னதாகவே எனக்குத் தோணிச்சு. மொதல்ல கூப்பிட்டப்ப என்னோட விளையாடக் கூப்பிட்டேன். அதுனால அது வந்துச்சு. அடுத்தடுத்து அப்பிடித்தான். ஆனா அந்த வீட்ட இடிச்சிக்கிட்டு வந்து தொடுன்னு சொன்னது தப்பு. அதுவும் அவங்க கட்டிக்கிட்டு இருக்குறாங்க. அப்பவே வந்து ஒடச்சா அவங்க மனசு வருத்தப்படும். அதுனாலதான் தப்பா நெனைச்ச என்னக் கொஞ்ச நேரம் காக்க வெச்சிக்கிட்டு அவங்க முடிச்சிட்டுப் போனப்புறம் என்னத் தொட்டுச்சி. ஆகையால எதையும் நல்லதுக்கே நெனைக்கனும்னுங்குறதுதான் எனக்குச் சொன்ன பாடம்னு எடுத்துக்கிட்டேன். இத எவ்வளவு தூரம் நான் பின்பற்றுவேன்னு தெரியலை. ஆனா முடிஞ்ச வரைக்கும் பின்பற்றனும்.

மேலெல்லாம் மண்ணாக்கிட்டு ரூமுக்குள்ள நுழைஞ்சோம். இன்னொரு குளியல் போட்டுட்டுத் தூங்கினோம். காலைல எந்திரிச்சி மொட்டையெடுக்கனுமே. சீக்கிரமா எந்திரிச்சிக் கோயிலுக்குப் போகலாம்னு நெனச்சோம். ஆனா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வேளைக்கு எந்திரிச்சி நேரமாயிருச்சி. சரீன்னு குளிக்காம பல்லு மட்டும் வெளக்கீட்டு மொட்டை எடுக்கக் கெளம்புனோம்.

தனியாப் போறப்ப மொட்டை எடுக்க நம்மளே சீட்டு வாங்கிக்கிரலாம். ஆனா ஆளம்போட போகும் போது கூட வந்தவங்க மொட்டச் சீட்டு வாங்குனாத்தான் ஒரு உரிமை. போன வாட்டி இப்பிடி ஊர் சுத்தப் போனப்போ ஒரு நண்பன் மொட்டை போட்டான் சுவாமிமலைல. அவனுக்குச் சீட்டு வாங்கினேன் நான். இந்த வாட்டி அவன் எனக்கு வாங்குனான்.

திருச்செந்தூர்ல கடக்கரைல நாழிக்கிணத்துக்குப் பக்கத்துல இருக்கு முடிக்காணிக்கை மண்டபம். எப்பவும் ஆளுங்களப் பாக்கலாம். சுத்துப் பக்கத்து ஊர்க்காரங்க மட்டுமில்லாம எல்லாப் பக்கத்துல இருந்தும் திருச்செந்தூர் வந்து முடிக்காணிக்கை செலுத்துவாங்க. முருகன் மேல அவ்வளவு பாசம்.

நாளைக்கு வளரப் போற முடியக் குடுக்குறதா பெரிய விஷயம்னு சொல்லலாம். ஆனால் அதில்லை அதோட உட்கருத்து. நம்ம தோற்றத்த எடுப்பாக் காட்டுறதுல முடி முக்கியப் பக்கு வகிக்குது. அந்த முடி போகும் போது தோற்றத்துல ஒரு குறைவு வருதில்லையா. அந்தக் குறைவை ஏத்துக்கிற மனப்பக்குவம் தேவை. அதாவது கர்வம் பங்கப்படுதா இல்லையா! ஆணவம் கொறையுது பாத்தீங்களா! அது எல்லாருக்கும் தேவையானது. ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். பல பேரு வேண்டுதலைக்குத் தலையக் குடுத்தாலும் முடிய வழிக்கும் போது ஒரு ஆணவ அழிப்பு நடக்குறது உண்மைதான்.

நானும் காணிக்கை செலுத்த உதவுற ஒருத்தருக்கு முன்னாடி இருக்குற பலகைல உக்காந்தேன். சீட்டையும் அதோட குடுத்த அரப்பிளேடையும் கொடுத்தேன். அவரு பிளேடை செட்டுல மாட்டுனாரு. நான் கண்ணை மூடி மனசுக்குள்ள முருகான்னு சொன்னேன். உள்ள சின்னத் துணுக்கு. ஏன் துணுக்கு? அப்ப படக்குன்னு பக்கத்துல வந்து உக்காந்தாரு மயிலாரு.

தொடரும்.