Wednesday, January 31, 2007

நான் பறக்கிறேனே மம்மி

ஐயா...பாத்துக் கட்டுங்க...இதுக்குப் பேரு life jacket. ஒரு முடிச்சுக்கு ரெண்டு முடிச்சு வேணும்னாலும் கூடப் போட்டுக்கோங்க.

இத இறுக்கிப் பிடிச்சிக்கிரட்டுங்களா? தெரியாத்தனமா எதையாவது இழுத்துட்டேன்னா? என்னது கடல்ல எறங்கீருமா? ஜெல்லி ஃபிஷ் இருக்கும்னீங்களே! அது வெசம்னீங்களே!

போட்டு ஓடும் போது உள்ள இழுக்குமா? நானும் கூடவே ஓடனுமா? சரி...எதுக்கும் இத நல்லா பிடிச்சிக்கிறேன்.

ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ...........

ஐயா...கைய விட்டுட்டுக் கூட என்னால பறக்க முடியுதே! நான் பறக்கிறேனே மம்மி!அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 29, 2007

2ம் பகுதி - கள்ளியிலும் பால்

"இந்தாம்மா காஃபி." கோப்பையை சந்தியாவிடம் நீட்டினார் சிவகாமி. மடியில் சுந்தரை வைத்திருந்த சந்தியா ஒற்றைக் கையால் கோப்பையை வாங்கினாள். காஃபியைச் சிறிது உறிஞ்சியவள்..."அப்பா எப்ப வர்ராங்களாம்? அரவிந்துக்கு இப்ப எப்படி இருக்காம்?"

மெத்துமெத்தான அந்தக் கருப்பு ரெக்சின் சோஃபாவில் சந்தியாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சுந்தரை வாங்கினார் சிவகாமி. "இப்பத் தாவலையாம். அப்பா நாளைக்கு காலைல கெளம்பி வர்ராங்க. வாணி மதியம் ஃபோன் பண்ணீருந்தப்போ சொன்னா. கண்ணனும் புதுக் கார் பதிஞ்சிருக்கானாம்."

யார் இந்த அரவிந்த், வாணி, கண்ணன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சரி. ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துகிறேன்.

சுந்தரராஜன் - சிவகாமியின் கணவர் - ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரி
கண்ணன் - சந்தியாவின் தம்பி. ஒன்றரை வயது சிறியவன். அயல்நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிகிறான்.
வாணி - கண்ணனின் மனைவி. திநகரில் கணவனோடு வசிக்கிறாள். இடுப்பெலும்பு அறுவை சிகிச்சை செய்த இவளது தாயும் கடந்த மூன்று மாதங்களாக இவர்களுடன் இருக்கிறார். அவரது பெயர் ராஜம்மாள். இட்டிலிப் பிரியர்.
அரவிந்த் - வாணிக்கும் கண்ணனுக்கும் பிறந்த மகன்

சுடச்சுட இறக்கி வைத்த இட்டிலியை வெறும் கையால் பிசைந்து விட்டான் குழந்தை அரவிந்த். உள்ளங்கை சிவந்து காய்ச்சல் வேறு வந்து விட்டது. அதனால் அங்கு துணைக்கும் உதவிக்கும் சுந்தர்ராஜன் சென்றிருந்தார். அரவிந்துக்குச் சரியானதையும் சுந்தரராஜன் வருவதையும் மதியம் வாணி அத்தையைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருக்கிறாள். அத்தோடு கண்ணன் புதிதாக கார் வாங்கப் போவதையும் சொல்லியிருக்கிறாள். இப்பொழுது பாத்திரங்கள் யார்யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே! கதைக்குப் போவோமா?

காஃபியைக் குடித்து முடித்திருந்தாள் சந்தியா. "என்ன காராம்? ஏற்கனவே இருக்குற சாண்ட்ரோவ என்ன செய்யப் போறானாம்?"

"எனக்கு அதெல்லாம் தெரியாது. என்னவோ பேர் சொன்னா வாணி. சரியாக் கேட்டுக்கலை. சுந்தர் எப்படியிருக்கான்னு கேட்டா. சனிக்கிழமை வர்ரேன்னு சொன்னா. சம்மந்தியம்மாவும் அங்க இருக்குறதால....பாவம்...எங்கயும் நகர முடியலையாம். ஏற்கனவே அவங்க இடுப்பு ஆப்பரேஷன் செஞ்சவங்க. ஒரு வேலையும் செய்ய முடியாது. அரவிந்த் வேற துறுதுறுப்பா இருக்கான். இவங்களால சமாளிக்க முடியலையாம்." சுந்தரைச் சந்தியாவின் கைகளில் கொடுத்து விட்டு காஃபி கோப்பையோடு அடுக்களைக்குள் நுழைந்தார் சிவகாமி.

தம்பி புதுக்கார் வாங்கப் போவதை நினைத்து மகிழ்ச்சிதான் சந்தியாவுக்கு. அதிலும் இரண்டாவது கார். சந்தியாவைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது. பின்னே ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்தச் சண்டை. ம்ம்ம்ம்....

அப்பொழுது அரவிந்த் மூன்றுமாதக் கைக்குழந்தை. வாணி குழந்தையோடு மதுரையில் தாய் வீட்டில் இருந்தாள். பெசண்ட் நகர் அப்பார்ட்மெண்ட்டை சந்தியா வாங்கி ஓராண்டுதான் ஆயிருந்தது. அப்பார்ட்மெண்ட் சந்தியாவின் பெயரில் இருந்தாலும் அங்கு மனைவியோடு இருப்பது கண்ணனுக்கு உறுத்தலாக இருக்கவில்லை. மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள்.

ஒருநாள் இரவுச் சாப்பாட்டில்தான் அந்தப் பேச்சு தொடங்கியது. சிவகாமி அனைவருக்கும் தட்டில் போட்டு விட்டு தானும் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

"அப்பா, நான் ஒரு முடிவெடுத்திருக்கேன். அத உங்க எல்லார் கிட்டயும் சொல்லலாம்னு நெனைக்கிறேன்." பாதிச் சாப்பாட்டில் சந்தியா பேச்சைத் தொடங்கினாள்.

எல்லாரும் சாப்பாட்டை மறந்து சந்தியாவையே ஆர்வத்தோடு பார்த்தார்கள். என்ன முடிவு எடுத்திருக்கிறாளோ என்று.

"கொழந்தை பெத்துக்கலாம்னு இருக்கேம்ப்பா."

மற்ற மூவருக்கும் ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. சுந்தரராஜன் சுதாரித்துக் கொண்டு முதலில் கேட்டார். "என்னம்மா சொல்ற? கல்யாணமே செஞ்சுக்காம கொழந்த பெத்துக்கப் போறியா?"

"ஆமாம்பா! எனக்கு ஒரு கொழந்தை வேணும்னு தோணுது. அதான் இந்த முடிவு. தப்பாப்பா?"

தட்டில் சாப்பாடு காய்வது கூடத் தெரியாமல் சிவகாமியும் கண்ணனும் ஒருவித கலக்கத்தோடு அவர்கள் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

"இதுதான் தப்பு இதுதான் சரின்னு எதையும் உறுதியாச் சொல்ல முடியாதும்மா. ஆனா இப்படி ஒரு முடிவு எடுத்தா அதோட பின்விளைவுகளையும் யோசிச்சுப் பாக்கனும். பாத்தியா?"

"நல்லா யோசிச்சுப் பாத்தேம்ப்பா. அதுக்கப்புறந்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். இதுல எனக்குக் கெட்ட பேர் கூட வரலாம். ஆனா உங்க துணை இருந்தா எல்லாத்தையும் தாண்டி வருவேம்ப்பா."

இனம்புரியாத ஒரு உணர்ச்சியில் பெருமூச்சு விட்டார் சுந்தரராஜன். "கெட்ட பேர் ஒனக்கு மட்டும் வராதும்மா. எங்களுக்கும் சேத்துதான் வரும். ஏற்கனவே உனக்குக் கல்யாணம் செய்யாம வெச்சிருக்கோம்னு ஒவ்வொருத்தரும் பேசுறாங்க. உனக்கு முடிக்காம கண்ணனுக்கு முடிக்கும் போது நல்ல வேளையா பெரிய சலசலப்பு எதுவும் வரலை. ஆனா குழந்தை பெத்துக்குறதுங்குறது...."

"என்னப்பா? நீங்களாப்பா இப்படிப் பேசுறீங்க? அவங்கவங்க முடிவை அவங்கவங்க சரியா எடுக்கக் கத்துக்குடுத்ததே நீங்கதானப்பா. அப்படியிருக்குறப்போ இப்பத் தயங்குறீங்களேப்பா?"

"சந்தியா என்னது இது? பைத்தியக்காரத்தனமா இருக்கு. இப்படி ஒரு முடிவு எடுத்துக்கிட்டு அதுக்கு நாங்களும் சம்மதிக்கனும்னு எதிர்பார்க்குறயா? எங்களால கண்டிப்பா முடியாது. அப்பா பேச்சையும் கேக்காம நீ வாதாடுறது நல்லாயில்ல." குறுக்கிட்டான் கண்ணன். கொஞ்சம் எரிச்சல் அவனுக்கு.

"டேய். சும்மா இரு. அப்பா பேசுறாங்கள்ள." என்று சொல்லி மகனை அடக்கினார் சிவகாமி.

சுந்தரராஜன் மகளின் கையை மென்மையாகப் பிடித்தார். "சந்தியா. நீ படிச்ச பொண்ணு. இப்படி ஒரு முடிவு எடுக்குறதால ஒனக்கு மட்டும் கெட்ட பேர் வராது. அந்தக் குழந்தையப் பத்தி நெனச்சுப் பாத்தியா? இனிஷியல் வேண்டாமா?"

"இப்பத்தான் அம்மா பேர இனிஷியலா போடலாம்னு சட்டமே இருக்கேப்பா."

"உண்மைதான். சட்டத்தோட மட்டும் நீ வாழப் போறதில்லை. சமுதாயத்தோடதான் வாழனும். நம்ம ஊர்ல இதெல்லாம் ஒத்து வராதும்மா."

"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா?"

திகைத்துப் போனார் தந்தை. மகள் தங்களை விட்டுப் போய் விடுவாளோ என்று சற்று பயந்தார். பிறகு உறுதியாகச் சொன்னார். "சந்தியா. உண்ணால எந்த நாட்டுலயும் நல்ல வேலை வாங்கிக்க முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா இனிமே வரப்போற ஒரு உறவுக்காக இருக்குற அத்தனை உறவுகளையும் இழக்கனுமா என்ன? அது சரியாத் தெரியலை. நல்லா யோசிச்சுப் பாத்தா எனக்கென்னவோ நீ எடுத்திருக்குற முடிவு சரியா வராதுன்னு தோணுது. வேணும்னா ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம். அது உனக்கு நல்ல பேரையும் வாங்கித் தரும். ஒரு குழந்தைக்கு அனாதைங்குற பட்டமும் போகும். இதுதான் சரியான வழின்னு எனக்குப் படுது. இதுதாம்மா என்னோட முடிவு."

நேராக நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். சுந்தரராஜன் முடிவைச் சொன்ன விதத்திலிருந்து அவருக்குச் சம்மதமில்லை என்று புரிந்து கொண்டாள். அம்மாவிடம் இதற்கு மேல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. கண்ணனோ திருமணம் செய்து குழந்தை பெற்றவன். அவனுடைய உதவியையும் இனிமேல் கேட்க முடியாது. தன்னுடைய முடிவைச் சொல்வதே நல்லது என்று இப்படிச் சொன்னாள்.

"சரி. நீங்க ஒங்க முடிவைச் சொல்லீட்டீங்க. என்னுடைய முடிவையும் நான் சொல்லீர்ரேன். I am already pregnant."

தொடரும்.....

Tuesday, January 23, 2007

1ம் பகுதி - கள்ளியிலும் பால்

நகத்தைக் கடித்தபடி காத்திருந்தாள் சந்தியா. வந்து பத்து நிமிடங்களாகிறது. அதனால்தான் கொஞ்சம் டென்ஷன். விரல்களைக் கைகளின் உட்பக்கமாக மடக்கி விரல்களைப் பார்த்தாள். அழகான விரல்கள். மாநிறத்து விரல்களுக்கு ஏற்ற வெளிரிய சாக்லேட் நிறத்தில் நகப்பூச்சு. பளபளப்பாக இருந்தது.

காத்திருத்தலும் சமயங்களில் அலுப்புதான். ஜி.என்.செட்டி ரோட்டிலிருந்த பாரிஸ்டா காஃபிக் கடையில்தான் சந்தியா காத்திருக்கிறாள். மெத்தன்ற ·சோபாவுக்குள் அமிழ்ந்தபடி ஒயிலாக அமர்ந்திருந்தாள். பச்சைச் சுடிதார் அவளை எடுப்பாகக் காட்டியது. முப்பது என்பதை ஐந்து குறைத்து இருபத்தைந்து என்று காட்டியது.

"அலோக்...சீக்கிரமா வா!" மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். வெள்ளை டி-ஷர்ட்டும் கருப்பு ஜீன்சும் அவனது அடையாளங்கள். ஐந்தடி பதினோரு அங்குலம். அறுபத்தைந்து கிலோ எடை. கட்டுடல். வழுவழு முகம். வெள்ளைத் தோல். வயது இருபத்து மூன்று. சொந்த ஊர் சண்டிகர். ஆறு மாதங்களாகச் சென்னையில் வேலை. இவ்வளவுதான் அலோக்கைப் பற்றி சந்தியாவிற்குத் தெரிந்த விவரங்கள். கூடுதலாக அவனுடைய தொலைபேசி எண்ணும் தெரியும்.

சாட்டிங்கில் கிடைத்தது அலோக்கின் தொடர்பு. இன்று சந்திப்பதாக ஏற்பாடு. மாலை நான்கு மணிக்குச் சந்தியாவை பாரிஸ்டாவிற்கு வரச் சொல்லியிருந்தான் அலோக். அவளும் டைடல் பார்க்கிலிருந்து புறப்பட்டு நான்கு மணிக்கெல்லாம் வந்து விட்டாள்.

இப்பொழுது சந்தியாவின் கடிகாரத்தில் நான்கு மணியாகி ஐந்து நிமிடங்கள் ஆகியிருந்தன. அதுதான் டென்ஷனுக்கான காரணம். உள்ளே வருகின்ற ஒவ்வொரு இளைஞனையும் அடையாளம் பார்த்தாள். உயரமாகயிருந்தால் நிறமில்லை. நல்ல நிறமாக இருந்தால் வயது முப்பதுக்கு மேல். எல்லாம் பொருந்தி வந்தால் மீசையிருக்கிறது. மீசையில்லாமல் வந்தால்.....கூட ஆளிருக்கிறது.

காத்திருக்கும் பதட்டத்தோடு வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பேசாமல் வீட்டிற்குப் போய் விடலாமா என்று தோன்றியது. "போன வாரம் பாத்த விஷால் பதினஞ்சு நிமிஷம் தாமதாமா வந்தான். அது போல இவனும் வந்தால்! பேசாம விஷாலையே கூப்பிட்டிருக்கலாம்...." சந்தியாவின் எண்ண ஓட்டம். அலோக்கிற்கு ·போன் செய்தாள். ரிங் போகிறது. ஆனால் பதிலில்லை.

சரியாக நான்கு மணி பத்து நிமிடங்களுக்கு அலோக் உள்ளே நுழைந்தான். அவனும் சந்தியாவைத் தேடினான். பச்சை சுடிதாரைப் பார்த்ததும், "நீங்கதான் சந்தியாவா?" என்று கேட்டான்.

முகத்தில் மலர்ச்சியோடு ஆமாம் என்று தலையசைத்தாள். அவளுக்கு முன்னே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். "மன்னிக்கனும். வெயில் அதிகம். ஆஃபீஸ்ல இருந்து நேரா வர்ரேன். வழியெல்லாம் ஒரே நெரிசல். அதான் நேரமாச்சு."

தலையைத் தலையை ஆட்டி அவன் சொன்னது அவளுக்கு அழகாகத் தோன்றியது. பஞ்சாப் பசங்களே ஒரு கணக்குதான் என்று மனதில் நினைத்துக் கொண்டாள். "அதனாலென்ன....நானும் வந்து பத்து நிமிஷந்தான் ஆகுது. சரி. என்ன சாப்பிடுறீங்க? கா·பி அல்லது டீ?"

"ஒன்னும் வேண்டாம் சந்தியா! உங்களப் பாக்கத்தான் வந்தேன். சரி. அடுத்து என்ன? உங்க வீடு எங்கயிருக்கு? பக்கத்திலயா? எனக்கு இன்னமும் சென்னை பிடிபடலை. நீங்க பேரச் சொன்னாலும் எனக்குத் தெரிஞ்சிருக்காது" சொல்லி விட்டுச் சிரித்தான்.

தலையைச் சாய்த்து புன்னகைத்தாள் சந்தியா. அவளது மேனரிசம் அது. பார்ப்பவரை வசீகரிக்கும் மேனரிசம். "என்னோட வீடு பக்கத்துல இல்லை. பெசன்ட் நகர்ல இருக்கு. ஆனா...." இழுத்தாள் சந்தியா.

"பெசன்ட் நகர். எலியட்ஸ் பீச் இருக்கே. அங்கதானே. அது ரொம்ப தூரம். என்னோட வீட்டுக்கு வாங்களேன். பக்கத்துலதான். சரவணா ஸ்ட்ரீட்!"

சம்மதித்தாள் சந்தியா. அவனது பைக்கை அவளது சாண்ட்ரோ பின்பற்றியது. பாண்டி பஜார் வழியாக சரவணா தெருவில் நுழைந்தார்கள். நான்கைந்து வீடுகள் தாண்டி ஒரு வீட்டிற்குள் இருவரும் நுழைந்தார்கள். ஓரளவு வசதியான வீடாகவேயிருந்தது. முதன்முதலாக வரும் சந்தியாவை வரவேற்றான் அலோக். உள்ளே நுழைந்ததும் மறக்காமல் கதவைச் சாத்தினான்.

"நீங்க நல்லாயிருக்கீங்க சந்தியா. எனக்கு உங்கள ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு நல்ல காண்டேக்ட்ஸ் நிறையத் தர்ரேன்." புதிய சூழலில் அமைதியாக இருந்தாள் சந்தியா. பகல் பொழுதில் எல்லா சன்னல்களும் மூடப்பட்டு ஒருவித அரைகுறை இருட்டு இருந்தது.

தனிமை துணிவு தர சந்தியாவின் தோளில் கைவத்து உள்ளே அழைத்துச் சென்றான். அவளிடம் எதிர்ப்பு இல்லை. ஒத்துழைப்புதான் இருந்தது. முழுமையான ஒத்துழைப்பு. ஒரு மணி நேரமும் ஒரு நொடி போலக் கழிந்தது. இருவருமே வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னான். "சந்தியா! அடிக்கடி இங்க வரனும்." அவனைக் கட்டிக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள். "கண்டிப்பா அலோக்." அவளுக்கு யாரையோ பழிவாங்கிய திருப்தி. அந்த வெறி இன்பமாக மாறி தலை முதல் கால்வரை ஓடியது.

அவள் மனக்கண்ணில் ஒரு ஆணின் முகம் தோன்றியது. அவனைப் பார்த்து அவள் மனம் கெக்கலித்தது. அலோக்கை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். பழிக்குப் பழி. போட்டியில் தன்னைத் தள்ளி விட்டு முன்னே ஓடியவனை தான் முந்திய மகிழ்ச்சி அவளுக்கு. அந்த முகம் வெதும்பி நொந்து கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனக்கண்ணிலிருந்து மறைந்தது. அந்த முகத்திற்குரியவனை வென்ற வெறி புன்னகையாக விரிந்தது.

சற்று நேரம் கழித்து உடைகளைச் சரி செய்து கொண்டு கிளம்பினாள். அலோக்கிடம் விடைபெற்றுக் கொண்டாள். அப்படியே அவனுடைய நண்பர்களின் செல்போன் நம்பர்கள் இரண்டும் பெற்றுக் கொண்டாள். டாடா சொல்லி விட்டு அவளது சாண்ட்ரோவை பெசன்ட் நகர் பக்கம் ஓட்டினாள். சென்னை நெரிசலில் அவளது சாண்ட்ரோ சரக்கென்று லாவகமாகச் சென்றது.

அஷ்டலட்சுமி கோயில் பக்கத்திலிருந்தது ஸ்ரீநிதி அபார்ட்மெண்ட்ஸ். வசதியானவர்களுக்கான அபார்ட்மெண்ட். உள்ளே நுழைந்து லிஃப்டில் ஏறி நான்காம் மாடிக்குச் சென்றாள். வீட்டு எண் 402. சந்தியாவின் சொந்த வீடு.

அழைப்பு மணி ஓசை கேட்டு ஐம்பத்தைந்து வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அது சந்தியாவின் அம்மா சிவகாமி. "என்னம்மா ஆஃபிசிலயிருந்து இன்னைக்குச் சீக்கிரமா வந்திட்ட! வேலை சீக்கிரமா முடிஞ்சிருச்சா?" அலுவலகத்திலிருந்து வழக்கமாக ஏழுமணிக்கு வரும் மகள் இன்றைக்கு ஆறுமணிக்கெல்லாம் வந்திருக்கிறாளே.

மகள் களைப்பாக இருப்பதைப் பார்த்தாள். "ரொம்ப களைப்பா இருக்க. இரு மொதல்ல காஃபி போட்டுட்டு வர்ரென். குடிப்ப. இப்பத்தான் வீட்டைப் பெருக்கித் தொடச்சிட்டு கனகம் போனா. உள்ள சுந்தர் எழுந்திருச்சிட்டான். கைகால் கழுவிட்டு அவனப் பாத்துக்கோ."

படுக்கையறைக்குள் நுழைந்தாள் சந்தியா. ஹேண்ட் பேக்கை கழற்றி சுவற்றிலிருந்த பிளாஸ்டிக் கொக்கியில் மாட்டினாள். ஏஸியின் மெல்லிய குளிர் இதமாக இருந்தது. பாத்ரூமிற்குச் சென்று முகம் கைகால் கழுவிட்டு வந்தாள். கட்டிலில் சுந்தர் கையைக் காலை ஆட்டிக் கொண்டிருந்தான். சந்தியாவைப் பார்த்ததும் அவனுக்கு குஷி கூடியது. கையைக் காலை வேகமாக அசைத்தான். ஏழு மாதக் குழந்தை சுந்தர்.

சுந்தரை இரண்டு கைகளிலும் அள்ளி அணைத்தாள். அந்த வெதுவெதுப்பில் அவள் கண்களில் கண்ணீர் வந்தது. ஏதோ ஒரு சோகம் நெஞ்சைக் கவ்வியது. சோகத்தையும் அழுகையையும் அப்படியே விழுங்கினாள். மனதில் உறுதி எழுந்தது. மனக்கண்ணில் மீண்டும் அந்த உருவம் தெரிந்தது. தலையைச் சாய்த்து அந்தக் கண்ணுக்குத் தெரியாதவனைப் பார்த்துச் சிரித்தாள். மனதில் ஆங்காரம் கூடியது. "பாருடா! பார். இன்னைக்கு நானொரு அம்மா. ஆனா நீ?" அவள் கேட்டதும் அந்தக் கற்பனை உருவம் தலையைக் குனிந்தது.

தொடரும்...

Tuesday, January 16, 2007

05. கின்னிக்கோழியும் சிவன்கோயில் கடையும்

முந்தைய பாகம் இங்கே.

தீபாவளிச் சுற்றுப்பயணம் எழுதத் தொடங்கி பொங்கலும் வந்துருச்சு. இனியும் இத ரொம்ப நீட்டுனா மக்கள் அடிக்க வந்துருவாங்க. ஆகையால தூத்துக்குடியில நடந்த பாத்த மூனு நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி விட்டு மதுரை அத்தியாயத்துக்குப் போறேன். :-) பயப்படாதீங்க. எவ்வளவு சுருக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாச் சொல்றேன்.

தூத்துக்குடியில நான் ஒரு பறவையைப் பாத்தேன். வீட்டுக்குப் பின்னாடி. ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. வான்கோழியோன்னு நெனைச்சேன். ஆனா அந்த அளவுக்கு றெக்கைகள் இல்ல. இது மண்ட ரொம்பச் சின்னதா கழுத்து ரொம்பவும் மெலிஞ்சி...ஆனா ஒடம்பு மட்டும் தண்டியா உருண்டையா இருந்துச்சு. எனக்கு அதுக்கு என்ன பேர்னே தெரியலை. அதை ஒரு ஃபோட்டோ புடிச்சி நம்ம வலைப்பூவுல போடனும்னு நெனச்சேன். ஆனா சோதனைக்குன்னு அது சரியா போட்டோ எடுக்கும் போது நகந்துருச்சு. நாலஞ்சு போட்டோ வெறும் போட்டோவா வந்துச்சு. ஒரு போட்டோவுல மூஞ்சியப் படம் பிடிக்கப் பாத்தா படபடன்னு றெக்கைய அடிச்சிக்கிட்டு கால்தான் விழுந்தது. கடைசியில ரொம்ப கஷ்டப்பட்டதப் பாத்து நேருக்கு நேர் ஒரு போஸ் குடுத்தது. அப்படியே டபடபன்னு பறந்து சொவத்து மேல உக்காந்துகிட்டு ஜம்முன்னு ஒரு போஸ். அந்தக் கோழிக்குப் பேரு கின்னிக் கோழியாம். பெரிய ண் போடனுமா சின்ன ன் போடனுமான்னு கூடத் தெரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க.


அப்படியே காலையில எந்திரிச்சி பேப்பர் வாங்கலாம்னு தூத்துக்குடி புதுக்கிராமத்துல இருந்த தியாகராஜன் கடைக்குப் போனேன். அந்தத் தெருவுல மூனு மளிகைக்கடைங்க பிரபலம். அதாவது ரொம்ப காலமா இருக்குறது. கிட்னங் கடை, தியாகராஜன் கடை, சிவசாமி கடை. இந்த மூனுந்தான் அந்த கடைகள். அதே போலக் காய்கறிக் கடைகள்ள கன்னியம்மா கடையும் முனுசாமி கடையும். இதுல எந்தக் கடைக்கும் பேர்ப்பலகை கெடையாது. எல்லாம் கடைக்குச் சொந்தக்காரங்க பேருதான். இப்பக் கன்னியம்மா கடை இல்ல. இடிஞ்சிருந்தது. முனுசாமி கடை இருக்குது.

மளிகைக்கடைகள்ல கிட்னங் கடையும் தியாகராஜன் கடையும் இருக்குது. சிவசாமி கடைய சிவசாமியோட மகன் பாத்துக்கிறாரு. ஆனா வேற எங்கயோ கடைய மாத்தீட்டுப் போயிட்டாராம். நான் பேப்பரு வாங்கப் போனது தியாகராஜன் கடை. இப்ப தியாகராஜனும் இல்லை. அவரு மகந்தான் கடையப் பாத்துக்குறது. நான் அந்தக் கடைக்குப் போறது...கிட்டத்தட்ட ஏழெட்டு வருசங்களுக்கு அப்புறமா. போனதும் அங்க ஆனந்த விகடன் தீபாவளி மலரைப் பாத்தேன். அப்புறம் ஜெயா டீவியில 3D நாடகத்துக்குக் கண்ணாடி இருந்தது. அதுல ஒன்னு வாங்குனேன்.

எல்லாத்துக்கும் காசு குடுத்துட்டு கெளம்புறப்போ கடைக்காரரு கேட்டாரு. "நீங்க பாபுவா"ன்னு. அது எங்க அத்தை மகன். அவங்க வீட்டுலதான் நான் வளந்தது. இல்லைன்னு மறுத்துட்டு நான் யாருன்னு சொன்னேன். அவருக்கு நாவகம் வந்துருச்சி. "ஆமாமா ஞாவகம் இருக்கு. ரொம்ப வருசமாச்சுல்ல. அப்ப டிரவுசரு போட்டுக்கிட்டு பாத்தது." அடக் கொடுமையே...கடைக்கு casual trouserம் sleeveless டி சட்டையும் போட்டுப் போனது தப்பாப் போச்சு. எப்பவோ டிரவுசர் போட்டதெல்லாம் இவருக்கு நெனைவுக்கு வருதேன்னு நெனைச்சேன். அவரு ரெண்டு பழைய விஷயங்கள எடுத்து விட்டாரு.

புதுக்கிராமங்குறது ஒரு தெரு. அதுவும் பழைய தூத்துக்குடியில உள்ள பிரபலமான தெரு. அங்க இருந்த எல்லாருக்கும் எல்லாரையும் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும். இவரு அந்தத் தெருவுலயே பொறந்து வளர்ந்து தொழில் பாக்குறவரு. கண்டிப்பா நினைவு வெச்சிருக்குறதுல ஆச்சரியமில்லை. சின்ன வயசுல எனக்கு பெரிய மிட்டாய்...அதாங்க கேட்பரீஸ் மாதிரி சாக்லேட் பார்ஸ் சாப்பிடனும்னு ரொம்ப ஆசை. ஆசை மட்டும் பட்டா போதுமா...அப்ப அதெல்லாம் ரொம்பப் பெரிய விசயம் எங்களுக்கு. எப்படியோ யாரோ சொந்தக்காரங்க வந்தப்போ கொடுத்த காசுகளச் சேத்து வெச்சி ஒரு நாள் அந்த பார் சாக்லேட்ட தியாகராஜன் கடையில வாங்கினேன். வீட்டுக்குச் சொல்லீட்டுதான். அது கட்டியா பெருசா இருக்கும்னுதான் நான் நெனச்சேன். ஆனா அது பழைய சாக்லேட் போல.....நெகிழ்ந்து போயி மாவு மாதிரி இருந்தது. அதுல ஓட்டையெல்லாம் இருந்தாப்புல நெனவு. இருந்தாலும் வீட்டு வாசல்லயே உக்காந்து தின்னுட்டு நல்லாயிருந்ததுன்னு பொய்ப்பெருமையா வீட்டுல சொன்னேன். இப்ப விருப்பப்பட்ட சாக்லேட் வாங்கிச் சாப்புடுற வசதிய முருகன் குடுத்திருக்கான். ஆனா சாக்லேட் ஆசைதான் இல்லை. சாப்பிட்டா காலரி கூடீருமோன்னு ஒரு பயம் வேற. ம்ம்ம்....ஆசப்பட்டது இருக்குது. அனுபவிக்கத்தான் முடியல.

ரொம்ப நாளுக்கப்புறம் ஊருக்கு வந்திருக்கோமேன்னு கோயிலுக்குப் போனோம். தூத்துக்குடியில பெரிய கோயில்கள்னா சிவங்கோயில், பெருமாள் கோயில், மாதா கோயில் (பெரிய கோயில்), சின்னக் கோயில். இதுல பெரிய கோயிலும் சின்னக் கோயிலும் சர்ச்சுகள். உருவத்த வெச்சிப்பாத்தா சின்னக் கோயில் பெருசாயிருக்கும். பெரிய கோயில் சிறுசா இருக்கும். ஆனாலும் பெரிய கோயில் திருவிழான்னா தூத்துக்குடியே களை கட்டும். கிருத்துவர்கள் மட்டுமல்ல இந்துக்களும் அங்க போவாங்க. நானும் போயிருக்கேன். அங்க போயிட்டு வழியிலேயே சிவங்கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் போவாங்க. பெரும்பாலானவங்க அதெல்லாம் கண்டுக்கிறதில்லை. தூத்துக்குடி கடற்கரையூரு. அங்க பழைய துறைமுகத்துக்கு எதுத்தாப்புல ஒரு சின்ன பிள்ளையார் கோயில் உண்டு. அதுக்குக் கட்டளைக்காரரா ஒரு கிருத்துவக் காண்டிராக்டரும் எனக்குத் தெரிஞ்சி இருந்தாரு. அவர் பேர்ல பூசை வெச்சி பலவாட்டி சக்கரைப் பொங்கலும் புளியோதரையும் பிரசாதங் கொடுத்திருக்காங்க.

அதே மாதிரி சிவங்கோயில்ல நடக்குற சூரசம்காரமும் ரொம்ப நல்லாயிருக்கும். தூத்துக்குடியில சூரசம்காரம் பாத்தவங்கள திருச்செந்தூர் சூரசம்காரத்தத் தவிர வேறெந்த சூரசம்காரமும் திருப்திப் படுத்த முடியாது. சிவங்கோயில ஒட்டியே பெருமாள் கோயிலும். சிவங்கோயில் பெருசு. பெருமாள் கோயில் சிறுசு. ஆனா சிவங்கோயில விட பெருமாள் கோயில் ஜொஜ்ஜொலிப்பா இருக்குறாப்புல இருக்கும். கோயிலுக்குப் போறப்போ வெளிய ஒரு கடை. பூசைப் பொருளெல்லாம் விக்குற கடை. காண்டிராக்ட் விட்டுருப்பாங்க. அந்தக் கடையைப் பாத்ததும் படக்குன்னு ஒரு யோசனை. கடையில இருந்த அம்மாகிட்ட உத்தரவு கேட்டுட்டு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டேன். ஏன் தெரியுமா? கோயிலுக்குப் போற அத்தனை இந்துக்களும் பூசனைப் பொருள் வாங்குற கடைய நடத்துற அவங்க கிருத்துவங்க. படத்தப் பாருங்க. உங்களுக்கே புரியும்.அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, January 09, 2007

2007லாவது மாற வேண்டும் திருக்கோயில்கள்

வலை வீசித் தமிழ் சொல்லும் அன்பு நெஞ்சங்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2007ம் ஆண்டு உலகில் அமைதியையும் சமத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் கொண்டு வரட்டும்.

ஒவ்வொரு ஆண்டு தொடங்குகையிலும் அந்த ஆண்டு ஏதாவது நல்லவைகளைக் கொண்டு வந்து தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் காத்திருப்பதுதானே நமது வழக்கம். அந்த வகையில் சென்ற ஆண்டில் இலங்கைக்குப் போக வேண்டும் என்று விரும்பினேன். இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் என்றாவது நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்குக் காத்துக் கொண்டேயிருந்தால் போதுமா? இந்த ஆண்டிலும் ஏதாவது விரும்ப வேண்டாமா?

ஆலயம் தொழுவது சாலவும் நன்றுதான். அப்படிச் சாலச் சிறந்ததைத் தரும் திருக்கோயில்கள் எப்படி இருக்க வேண்டும்? இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விருப்பம். வேதங்களைக் கரைத்துக் குடித்த பண்டிதன் அல்ல நான். ஓல மறைகள் உரைக்கும் அனைத்தையும் கடந்தும் உள்ளும் இருக்கும் கடவுளை நம்பும் ஒரு சாதாரண மனிதன். எங்கெங்கு காணினும் சக்தியென்று நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த இறைவனைத் தமிழால் மனதால் தொழுதொழுகுகின்றவன். பல கோயில்களுக்குப் பக்தியோடு சென்று வணங்கி வருகையில் அங்கு கண்டவைகளை வைத்துச் எழுந்த விருப்பங்கள் இவை.

1. திருக்கோயிலில்களில் சாதீய பாகுபாடுகள் இன்றி விருப்பமுடைய எவரும் பூசனை செய்யும் நிலை வர வேண்டும். இதை ஏற்காமல் வழிவழி வருவது என்ற வாதம் செய்வது எடுபடாது. வழிவழி வரத்தொடங்கியது எப்பொழுதிலிருந்து என்று ஆய்ந்தால் பல இடங்களில் உண்மை தெளிவாகும்.

2. தமிழகத்தில் இறைவனைப் பூசனை செய்கையில் தமிழில் செய்வது சிறப்பாகும். வடமொழியில் அருச்சனை செய்ய விரும்பினால் அதற்கும் ஏற்பாடு செய்யலாம். தேவைப்பட்டால் கோயில்கள் அனைத்திலும் இங்கு வடமொழியிலும் அருச்சனை செய்யப்படும் என்று பலகைகளில் எழுதித் தொங்க விடலாம். அதையும் தமிழிலும் வடமொழியிலும் ஆங்கிலத்திலும் தொங்க விடலாம். தமிழகத்திற்கு வரும் வெளிமாநில நாட்டுக்காரர்கள் விரும்பினால் வடமொழியில் அருச்சனை செய்யலாம். வேள்விகளும் குடமுழுக்கும் தமிழிலேயே செய்யலாம்.

3. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கோயில் அருச்சகர்களவோ பூசாரிகளாகவோ வர வேண்டும். தூய்மை என்று சாக்குச் சொல்லக் கூடாது. இன்று ஆண்களும் பெண்களும் இணைந்து பல இடங்களில் வேலை செய்கிறார்கள். அங்கெல்லாம் தூய்மை கெட்டு விட்டதா! அனைத்தையும் கடந்த பரம்பொருள் இதனால் தீட்டாவார் என்று நினைப்பது அறிவீனம். பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று சொல்வதும் தகாது, அந்த சமயங்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இன்றைக்குப் பெரிய கோயில்களில் எத்தனை அருச்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் விடுப்பில் ஒன்றும் குறைந்து விடாது, அது போலத்தான் இங்கும்.

4. கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க விட வேண்டும். வீடியோ எடுக்கவும் விட வேண்டும். எல்லாம் வல்ல இறைவனை ஒரு புகைப்படமா சக்தி இழக்கச் செய்யும்? மலேசிய பத்து மலைக் கோயிலில் கருவறையின் முன்னின்று முருகப் பெருமானை படமெடுக்க விடுகிறார்கள். அற்புதமான அனுபவம் அது. நெருப்பைக் கரையான் தின்ன முடியாது என்பதை உணர வேண்டும்.

5. அனைத்து மதத்தாரையும் கோயிலுக்குள் விட வேண்டும். ஆனால் அவர்கள் வழிபடுகின்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்று சொல்லலாம். இறைவன் அனைவருக்கும் பொதுவானவர். வணங்கினால்தான் இறைவன் என்றில்லை. வைதாரையும் இங்கு வாழ வைப்போன் தானே! மற்ற மதத்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதல்ல முக்கியம். நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியம்.

6. சட்டையைக் கழட்டச் சொல்லும் வழக்கம் பல கோயில்களில் உண்டு. அந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்ற வேண்டும். சட்டை போட்டுக் கொண்டும் உள்ளே செல்ல விட வேண்டும். திருச்செந்தூர் கோயிலிலும் இந்தப் பழக்கம் இப்பொழுது உண்டு. அது கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும். சட்டையைக் கழற்ற வேண்டும் என்பதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் எனக்குத் தோன்றவில்லை. அதே போல் பூசாரிகளும் அருச்சகர்களும் கூட சட்டையணிவது நல்லதே.

7. கோயிலுக்குள் சிறப்பு மரியாதை என்ற பாகுபாடு ஒழிய வேண்டும். எல்லாரும் ஒன்று என்ற நிலை இருக்க வேண்டும். அரசனானாலும் ஆண்டியானாலும் இறைவனை ஒரே வழியில்தான் தரிசிக்க வேண்டும்.

8. திருநீறோ குங்குமமோ சந்தனமோ...கையில் கிள்ளிப் போடுவதைக் காட்டிலும் தொழுகைக்கு வருகின்றவர்களே எடுத்துக்கொள்ளும் வகையில் கிண்ணத்தை நீட்டலாம். அவர்கள் தொட்டு எடுப்பதால் கோயில் தூண்களாவது தப்பிக்கும்.

இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் குறைந்த பட்சம் மேற்கூறிய செயல்திட்டங்களோடாவது தொடங்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? உங்களது கருத்துகளையும் சொல்லுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்