Sunday, March 15, 2009

பிரியாணி - 4

பிரியாணி கிண்டி ரொம்ப நாளாச்சுன்னு. இப்பிடியே விட்டா பிரியாணி அண்டாவுல இறால் வளப்புல எறங்கனுமோன்னு தோணி... ஒரு பதிவு போட்டாச்சு.

சமீப காலத்துல ரொம்பப் பாதிச்சது ஈழம் தொடர்பான தமிழக இந்திய அரசியல்வாதிகளின் கேடுகெட்டத்தனமான அணுகுமுறைதான். மனசெரிஞ்சி சொல்றேன். ஒங்களுக்குக் கொஞ்சமாச்சும் தமிழ்மான உணர்வுன்னு ஒன்னு இருந்தா... காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூனு கட்சிகளுக்கும் ஓட்டுப் போடாதீங்க. அதுக்காக விஜயகாந்துக்குப் போடுங்கன்னு சொல்லலை. ஒங்கொங்க தொகுதியில இந்தக் கட்சிகளைத் தவிர்த்த வேட்பாளர்களில் பொருத்தமா யாருக்காச்சும் போடுங்க. போதுங்க. எத்தனை நாளைக்குத்தான் கட்சியப் பாத்து..சாதியப் பாத்து... மதத்தப் பாத்து ஓட்டுப் போடுவீங்க? கட்சி, மத, சாதீயப் பாசங்கள்ள மாட்டிக்கிட்டீங்கன்னா... அதுலருந்து வெளிய வரவே முடியாது.

ஜெயலலிதாவோட நடவடிக்கைகளை வெச்சுப் பாக்குறப்போ... எந்தவித"மான" மாற்றமும் அதிகுமல... சேச்சே அதிமுகல தெரியலை. காங்கிரஸ் கட்சி தன்னோட முடிவுல ஒரே உறுதியா இருக்குறாப்புல இருக்கு. ஈழத்துல எத்தாலி போனாலும் இத்தாலியம்மன் விடாப்பிடியா இருக்காங்க போல. நம்ம மட்டும் ஏன் விட்டுக் குடுக்கனும்? தமிழகத்துல காங்கிரஸ் கட்சி ஒரு இடத்துல கூட வெற்றி பெறக்கூடாது இந்த முறை.

திமுக.... அடப்பாவிகளா.... மத்தவங்க மேலையெல்லாம் எப்பவும் இருக்குற கோவந்தான். ஒங்க மேல இருக்குறது அறச்சீற்றம். ஏற்கனவே ஒங்க குடும்ப அரசியலக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கோம். நாளிதழ், தொலைக்காட்சி, சிமிண்ட்டு, திரைப்படம்... இப்பிடி தமிழ்நாட்டுத் தொழில்வளத்தையே குடும்பத்துக்குள்ள முடக்குனது மட்டுமில்லாம..... ஈழம் தொடர்பா அந்தக் காங்கிரசோட சேந்துக்கிட்டு ஆடுற ஆட்டம் இருக்கே......ஒங்களுக்கு போன தேர்தல்லயே பாதிப் பாடம் நடத்தியாச்சு. மீதிப் பாடம் இந்தத் தேர்தல்லதான்.

சரி... பிரியாணில அரசியல் மிளகாய் கூடிருச்சி. அடுத்து ஒரு சந்தேகத்துக்கு வருவோம். ஒரு வலைப்பூவில் இடும் பின்னூட்டத்தைப் பிரசுரம் செய்யும் உரிமை அந்த வலைப்பூவின் சொந்தக்காரருக்கு உண்டு. ஒத்துக்கிறேன். ஆனால் பின்னூட்டத்தை எழுதியவர்.. தன்னுடைய கருத்தைச் சொல்ல... மறுக்கப்பட்ட அந்தப் பின்னூட்டத்தைத் தன்னுடைய வலைப்பூவுல இடலாம்ல. அதத்தான் இங்க பண்றேன்.

உடன்பிறப்பின் இந்தப் பதிவில் நானிட்ட முதற்பின்னூட்டம்.

அரசியல்கட்சீன்னு வந்துட்டாலே... இப்படிப்பட்டக் காமெடிக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. இவங்கள நம்பி கொஞ்சம் ஏழ பாழைங்க கட போட்டுக் காசு பாத்தத நெனச்சிச் சந்தோஷம். இது எல்லாக் கட்சிகளுக்கும் பொதுன்னு நெனைக்கிறேன்.

ஆனா அதிமுகவுக்குன்னு விசேசக் காட்சிகள் இருக்கு. குறிப்பா அந்த மொதப் படம். கால்ல விழுந்து கும்புடுறது. தன்னுடைய காலில் விழுகின்றவனைப் புன்னகையோடு ரசிக்கும் பாங்கு....அவரது மனநிலையைச் சந்தேகிக்க வைக்கிறது.

அது கிடக்க. மானமுள்ளவன் அதிமுகவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததுதானே. ஈழத்துக்கான உண்ணாவிரதம் ஒரு நாடகம். ஜெயலலிதா தான் ஒரு நடிகை என்பதை திரும்பவும் நிரூபிக்கிறார். ஆனால் இந்த முறை மிக அசிங்கமாக.

இந்தப் பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் அதே பதிவில் வேறொரு கருத்துக்குப் பதிலளித்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நானிட்ட பின்னூட்டம் பிரசுரிக்கப்படவில்லை. அவருடைய உரிமையை மதிக்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய உரிமையை இங்கே நிலைநாட்டிக்கொள்கிறேன். ஆம். அந்தப் பின்னூட்டம் இங்கே.

// உடன்பிறப்பு said...

//// நந்தா said...
பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கெல்லாம் அதிமுக அப்படி பண்ணலையா, அம்மா பண்ணா மட்டும் சும்மா இருக்கீங்க கலைஞர்னா மட்டும் கேள்வி கேக்குறீங்க//

நன்றி நந்தா, இப்போ நீங்களே பாருங்க, நம்ம பத்ரி வந்து அ.தி.மு.க. உண்ணாவிரதத்துல மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குமா, மற்ற கட்சிகள் உண்ணாவிரதத்துல நடக்காதா என்று கேட்கிறார். இது மாதிரி கேட்கிறவர்கள் எல்லா கட்சி சார்பாகவும் இருக்கிறார்கள் //

நண்பரே... இத்தகைய வாதங்கள்தான்... அதிமுக எதிர்ப்பு என்ற எங்களைப் போன்றவர்கள் நிலையைத் திமுக ஆதரவு என்று மாற்றாமல் இருக்கிறது.

அதிமுகவோடு ஒப்பிட்டு...அவங்க பண்றாங்க...நாங்களும் பண்றோம்னு நெனைக்கிறதுதான்...ரெண்டு கட்சிகளிடமிருந்தும் எங்களைச் சம தூரத்தில் தள்ளி வைக்கிறது.

இப்படிச் சொல்வதனால் அதிமுகவை நான் ஆதரிக்கிறேன் என்பது பொருளாகாது. முன்பு திமுகவிற்கு ஆதரவளித்தவன் என்ற வகையில் இன்றைய திமுகவின் மேல் மிஞ்சி இருப்பது ஏமாற்றம் மட்டுமே. இதை இந்தப் பதிவில் சொன்னது உங்கள் மனதைப் புண்படுத்துமானால் மன்னிக்க. ஏனென்றால் இது கட்சி சார்பற்ற ஒரு சராசரித் தமிழனின் வயிற்றெரிச்சல்.


சரிங்க... ரொம்ப அரசியல் பேசீட்டோம். ஏதாச்சும் சினிமா பத்திப் பேசலாமா? சினிமான்னாலே ஒரு இதுதான். அதுலயும் சிலுக்கு சுமிதான்னா கேக்கவே வேண்டாம். தமிழகத்துல அப்படியொரு கனவுக்கன்னி இனிமே அவ்வளவு லேசுல வர முடியாது. மலையாளத்துல அவங்க நடிச்ச பாட்டு ஒன்னு. இளையராஜா இசையில். நல்ல பாட்டு. ஆகையால எல்லாருமே பாத்து ரசிக்கலாம்.
அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, March 10, 2009

பட்டாம்பூச்சி பறக்கும் இடத்தச் சொல்லடி...

பதிவு எழுதியே நாளாச்சுன்னு இருக்குற சமயத்துல தொடர்பதிவு எழுத வெச்சிட்டாங்க மதுமிதாம்மா.

பட்டாம்பூச்சி விருதை அவங்க வாங்கினது பொருத்தம். அதை எனக்கும் கொடுத்தது அவங்க அன்புக்குப் பொருத்தம். ஓசீல குடுத்தா ஓலப்பாயச் சுருட்டிக் கொண்டாருவோம். இதுல விருது குடுத்தா விருந்தே குடுத்த மாதிரியாச்சே! விட முடியுமா?சரி. பட்டாம்பூச்சிக்கு வருவோம். பட்டாம்பூச்சி பறக்கும் இடத்தச் சொல்லடி? இது ஏ.ஆர்.ரகுமான் இசையமைச்ச பாட்டுல வரும். வாடி சாத்துக்குடிங்குற பாட்டு... புதிய மன்னர்கள் படத்துக்காக.

பட்டாம்பூச்சி பறக்கும் இடமா? எங்க பறக்கும். எல்லா மனிதர்களும் நாலு எடங்கள்ள பட்டாம்பூச்சி பறக்குறத உணர்ந்திருப்பாங்க. அதென்னன்னு கெக்குறீங்களா?

வயிறு, நெஞ்சு, கண், ...இந்த மூனு எடங்கள்ளயும் பட்டாம்பூச்சி பறக்கும். அப்படி எனக்குப் பறந்த அனுபவங்களைச் சுருக்கமாச் சொல்றேன்.

மொதல்ல வயிறு. இதுவும் சின்ன வயசுல நடந்ததுதான். தூத்துக்குடிக்காரங்க யாராச்சும் இதப் படிச்சீங்கன்னா....நான் சொல்ற புதுக்கிராமம் ஒங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். புதுக்கிராமத்துக்காரங்க யாரும் இதப் படிச்சீங்கன்னா நான் சொல்லப்போற எக்ஸ்டென்ஷன் மிடில் ஸ்கூலும் சிவசாமி கடையும் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்.

அங்க எங்கத்த டீச்சரா வேலை பாத்தாங்க கொஞ்ச நாள். அந்தப் பள்ளிக்கூடத்துல நானும் நாலு வருசம் படிச்சேன். இது ரெண்டாவது...ம்ம்ம்.. ஆமா...அப்பத்தான். அந்தப் பள்ளிக்கூடத்துல ஆண்டாள் டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க ரொம்பக் கண்டிப்பான டீச்சர். விறைப்பா வருவாங்க போவாங்க. ஒருநாள் சிவசாமி கடைக்கு அத்தையோட போனேன். அங்க இருந்த மேடைல என்னையத் தூக்கி உக்கார வெச்சிட்டு வீட்டுக்குத் தேவையானத வாங்கீட்டிருந்தாங்க. அப்ப வந்தாங்க ஆண்டாள் டீச்சர். அத்தைட்ட ரெண்டு பேச்சுப் பேசிட்டு...என்னடா ராகவா எப்படி இருக்கன்னு கன்னத்தத் தொட்டாங்க. என்னன்னு தெரியலை... படக்குன்னு அந்த டீச்சரோட கன்னத்துல அறைஞ்சிட்டேன். அப்புறந்தான் என்ன பண்ணேன்னே புரிஞ்சது. அப்ப வயித்துல பட்டாம்பூச்சி பறந்துச்சு. ஆனா அந்த டீச்சர் நல்லவங்க. அதைப் பெருசாவே எடுத்துக்கலை. கண்டுக்கவும் இல்லை.

வயித்துல இருந்து நெஞ்சுக்கு வருவோம். நெஞ்சுக்கு நீதின்னு சொல்வாங்க. நமக்குப் பீதி வராம இருந்தாலே பெரிய விஷயம். ஆனா நம்ம நாட்டுல பலருக்கு நெஞ்சுக்கு ஜாதின்னு இருக்குறது வருத்தமான விஷயம். என்னுடைய நட்பு வட்டாரத்துலயே ஜாதி மொழியைத் தாண்டிய திருமணங்கள் உண்டு. அதெல்லாம் மகிழ்ச்சியான நிகழ்வுகள். அவர்கள் நீடு வாழ ஆண்டவனை வணங்குகிறேன். ரொம்ப விவரமாச் சொல்லாம சுருக்கமா சொல்றேன். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நண்பனுடைய காதலுக்குத் தூது போனப்போ நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறந்துச்சு.

அடுத்து கண்ணுக்கு வருவோம். ரொம்பச் சந்தோஷமா இருந்தாலும் ரொம்ப அழுதாலும் கண்கள்ள பட்டாம்பூச்சி பறக்கும். என்னுடைய வாழ்க்கையில் ஒரு முறை....ரொம்ப அழுதேன். ஏன் எதுக்குன்னு சொல்ல விரும்பலை. கிட்டத்தட்ட ஆறேழு வருசம் இருக்கும். அப்பக் கண்ணுல பட்டாம்பூச்சி பறந்தது. ஆனா... அதுக்கப்புறம்தான் எனக்கு வாழ்க்கையை எதிர் நோக்குற பக்குவமே வரத்தொடங்குன்னு நெனைக்கிறேன்.

சரி... பட்டாம்பூச்சி பதிவு எழுதியாச்சு. அடுத்து மூனு பேருக்கு இந்த விருதைக் குடுத்துப் பதிவுக்கு அழைக்கனுமாமே. அழைச்சிருவோம்.

இசைப்புதிர் கானாபிரபா.... இவருக்கு நான் அறிமுகம் சொல்ல வேண்டியதில்லை. பிரபா...வந்து பதிவு போடுங்க.

கலக்கல் கைப்புள்ள.... கைப்புள்ளன்னு இவருக்குப் பேருதான். ஆனா இப்ப இவருக்கு உண்மையிலேயே கைப்புள்ள இருக்கு. வாங்கய்யா வாங்க.

கண்ணன் கனியமுது கே.ஆர்.எஸ்.... ராமாயணம் சொல்ற இடத்துல எல்லாம் அனுமாரு இருப்பாருன்னு வைணவர்கள் சொல்வாங்க. ஆனா கே.ஆர்.எஸ் இருக்குற எடத்துல எல்லாம் அனுமார் இருப்பாருன்னு அவருடைய பதிவுகளின் பக்திச் சுவையை அனுபவிச்சவங்க சொல்வாங்க. வாங்க. வாங்க. வாங்க.

மதுமிதாம்மா பதிவுல இருந்து வெட்டு ஒட்டு. அதாங்க... தொடர்பதிவு விதிகள்.

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்