Tuesday, August 30, 2005

எனக்குதான் புரியும்

காற்றுப் பல்லாக்கு
இன்னமும் தூக்கி வருகிறது
நாம் சேர்ந்து வெளியேற்றிய மூச்சுகளை

நேற்று போலுண்டு
மறக்கவில்லை காதோரத்தில்
நாம் சேர்ந்து பிதற்றிய பேச்சுகளை

வெற்றுப் போர்வைகள்
விலகிக் கிடக்க, மேனி மறக்கவில்லை
ஒருவருக்கொருவர் பதித்துக் கொண்ட அச்சுகளை

மூச்சும்
பேச்சும்
அச்சும் - என்னை
நொச்சு நொச்சென்று
தொந்தரவு செய்தாலும்
நானுன்னைத் தொந்தரவு செய்யவில்லை
உன் நிலை எனக்குத் தெரியும்
அது எனக்குதான் புரியும்

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, August 29, 2005

வாழைப்பழப் பாயாசம்

வாழைப்பழப் பாயாசம்

மிகவும் சுவையான இந்தப் பாயாசம் வெல்லத்தைக் கொண்டு செய்யப் படுவது. சீனி சேர்க்கப் படுவதில்லை. ஆகையால் தமிழ் மணம் மிகுந்த பாயாசம்.

பச்சரிசி - ஒரு கோப்பை
வெல்லம் - ஒன்றரை கோப்பை ( இனிப்புப் பிரியர்கள் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளல்லாம் )
பால் - இரண்டு கோப்பை
பழுத்த வாழைப்பழம் - மூன்று அல்லது நான்கு ( பச்சைப் பழமாக இருக்க வேண்டும். மலைப்பழமும் போடலாம். ஆனால் இரண்டு மடங்காகப் போட வேண்டும். மலைப்பழம் சிறியதாக இருக்கும். நாட்டுப் பழமும் பூலாஞ்செண்டும் ஆகாது )
நெய் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
உலர் திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு ( வெறும் வானலியில் லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் )

செய்முறை

1 . அடிகனமான பாத்திரத்தில் பாலையும் அரிசியையும் போட்டு வேக விடவும். குக்கரில் வேகவைத்தாலும் பரவாயில்லை. தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

2. அரிசி குழைய வெந்ததும் அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும்.

3. வெல்லமும் அரிசியும் நன்றாகக் குழைந்து வருகையில் (வெல்ல வாடை கமகமவென வரும்) வெட்டி வைத்திருக்கும் வாழைப்பழத் துண்டுகளையும் சேர்க்கவும்.

4. கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு நன்றாகக் கிளறவும்.

5. எல்லாம் கலந்து பாயாசப் பதத்தில் வருகையில் ஏலக்காய்ப் பொடியும் முந்திரியும் திராட்சையும் கலக்கவும்.

6. கெட்டியான வாழைப் பழப் பாயாசம் தயார்.

இதையே மாம்பழத்தைக் கொண்டும் செய்யலாம். ஆனால் மல்கோவா போன்ற நாரில்லாத இனிப்பு மாம்பழங்களையே பயன்படுத்த வேண்டும். நன்கு கனிந்த பலாப்பழங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் பலாப்பழத்தை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். வாழை விரைவில் வெந்து விடும். பலா சற்று நேரம் பிடிக்கும்.

செய்து உண்டு மகிழ்ந்து கருத்துச் சொல்லுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, August 25, 2005

போனது போனாய்

போனது போனாய்
என்னை ஏன் கொண்டு போனாய்
எனக்குத் தெரியாத என்னை
எனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்

மீண்டும் வந்தது வந்தாய்
உன்னையாவது தந்தாயா?
எனக்குத் தெரிந்த உன்னை
எனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்

சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்

கடைப் பொருளுக்கும்
கடைப் பொருளல்லவே
விடைப் பொருள் தருவாய்- நான்
நடைப் பொருளாவதற்குள்!

Monday, August 22, 2005

சூர் கொன்ற ராவுத்தனே

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே

இளமையில் கல் என்பது பழமொழி. இளமையில் கள் என்பது புதுமொழி. கள்ளருந்தினால் என்னவாகும்? அறிவு மங்கும். அறிவின் வயப்பட்டிருந்த உடல் தன்னிச்சையாக செயலாற்றத் துவங்கும். அது அழிவில் சென்று விட்டு விடும்.

ஆகையால்தான் கள்ளுண்ணாமை என்று அதிகாரமே எழுதியிருக்கின்றார் வள்ளுவர். குடித்த பொழுதே மனதை மயக்குவது கள்ளென்றால், நினைத்த பொழுதே மனதை மயக்குவது காமம்.

கள்ளுக்கடையை கண்ட பொழுதெல்லாம் கள்ளுண்டவனைப் போல காமக் கள்ளை மொண்டு உண்டார் அருணகிரிநாதர்.

கண்டுண்ட - கற்கண்டு உண்டசொல்லியர் - பேசுகின்றவர்கள்கண்டுண்ட சொல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசுகின்றவர்கள்.கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசும் மென்மையான பெண்கள். அவர்களோடு கூடிக் குலவி காமக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்து போகின்ற வேளையில் என்ன நினைக்க வேண்டும்?

வேலை நினைக்க வேண்டும். வேலென்றால் கொலைக்கருவி அல்ல. அறிவின் வடிவம். கொலைக்கருவி என்று கேவலமாகப் பேசக் கூடாது. அறிவு ஆழமானது. அகலமானது. கூர்மையானது. இவை மூன்றையும் குறிப்பது வேல்.
மதி மயங்கிய வேளையில் வேலை நினைக்க வேண்டும். அறிவு வரும்.

ஆகையால்தால் "அயர்கினும் வேல் மறவேன்" என்றார் அருணகிரிநாதர்.
இன்னும் விளக்கமாகச் சொல்கின்றேன். பாலைக் காய்ச்சுகிறோம். கொதிக்கின்ற பால் பொங்கி வழியப் போகிறது. அப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்தால் பால் அடங்கி விடும். இப்படி அடிக்கடி தண்ணீர் தெளித்து காய்ச்சிக் கொண்டே இருந்தால் பால் திரண்டு வரும். அறிவு மயங்கும் வேளைகளிலெல்லாம் வேலை நினைத்தால் அறிவு திரண்டு வரும். புரிகிறதா?

முருகனை நினைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. வேலை நினை என்று சொல்கின்றார். இதுதான் மதச்சார்பற்ற பண்பு.

சூர் கொன்ற ராவுத்தனே என்று பாடலை முடிக்கிறார். சூர் என்றால் துன்பம். துன்பத்தைக் கொன்ற ராவுத்தனே என்று முருகனைப் புகழ்கிறார். இந்தப் பாடல் கந்தரலங்காரத்தில் வந்திருப்பதால் முருகனைக் குறிக்கின்றார் என்று சொல்கிறோம். தனிப்பாடலாக எடுத்துப் படித்தால் எல்லா மதத்தினரும் ஒத்துக் கொள்ளும் கருத்து நிறைந்திருக்கிறது.

கூளி என்றால் பேய். முது கூளித்திரள் என்றால் பெரும் பேய்க்கூட்டம். டுண்டுண்டுண்டென்று இந்தப் பேய்க்கூட்டங்கள் ஆடுகையில் துன்பத்தைக் கொன்ற ஆண்டவனை வேண்டுகின்றார் அருணகிரி.

இலக்கியத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் போர்க்காட்சி. சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுக்கப் போகின்றான். அங்கே அவனை எதிர்க்கின்ற கனகனையும் விசயனையும் போரில் எதிர்கொள்கின்றான். வெல்கிறார். அப்பொழுதும் பேய்க்கூட்டங்கள் ஆடின பாடின என்று எழுதியுள்ளார் இளங்கோவடிகள். "பறைக்கண் பேய்மகள்" என்று எழுதியிருக்கிறார். பறையை ஒத்த பெரிய வட்ட வடிவமான கண்களை உடைய பேய் மகள் என்று பொருள்.

மனது மயங்கும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அறிவு வேலை செய்யும்.

Wednesday, August 10, 2005

அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்

அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்

சென்ற மாதம் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். அந்தச் சுற்றுலாவிலே திருவரங்கனையும் கண்டு வர எண்ணங் கொண்டு திருவரங்கம் சென்றேன்.

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!இளங்கோ வாக்கு. பார்க்காத கண்ணென்ன கண்? அப்படிப் பார்க்கையில் இமைக்கின்ற கண்ணென்ன கண். கவிநயந் ததும்ப இளங்கோ எழுத வேண்டுமென்றால் அந்தப் பரந்தாமனின் அழகை என்ன சொல்வது? எப்படிப் பார்க்காமல் செல்வது?

அலையாழி அரிதுயிலும் மாயனைக் காண, மாலை நிறத்தவனைக் காண மாலையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம். முன்பு சிறுவயதில் திருச்சியும் திருவரங்கமும் திருவானைக்காவலும் சமயபுரமும் சென்றிருக்கிறேன். அப்பொழுது திருவரங்கமும் ஆனைக்காவும் திருச்சிக்கு வெளியே இருக்கும் ஊர்கள்.

ஆனால் இன்றைக்கு திருச்சிக்குள்ளேயே இருக்கின்றன திருவானைக்காவும் திருவரங்கமும். திருவானைக்காவல் என்ற அழகிய தமிழ்ப் பெயர் மருவி பேருந்துகளில் திருவானைக் கோவில் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். யாராவது திருத்தக் கூடாதா?

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவதற்காகவே ஓங்கி உயர்ந்த கோபுரம். பலவண்ணங்களை வீசிக் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. தமிழ் கட்டடக் கலை முறையில் அமைந்திருந்த கோபுரம் சிறப்பாக இருந்தது.
இன்னமும் இருள்கவியாத மாலையாயினும் மக்களின் நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுவர்களும் சிறுமியர்களும் வீதிகளில் விரைந்து கொண்டிருந்தனர். அங்காடிகளில் பொருட்களை விற்பவர்களும் வாங்குகின்றவர்களும் மிகுந்து நெரிசல் உண்டாகத் தொடங்கியிருந்தது.

இவர்களோடு அரங்கணைக் காண வந்த கண்ணிரண்டையும் சுமந்து வந்திருந்த கூட்டத்தினர். அவர்களோடு சேர்ந்து இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே கோயிலை அடைந்தோம்.

விரைந்து உட்சென்ற வேளையில் திருக்கதவம் சாத்தி வைத்திருந்தார்கள். இன்பத்தை பாக்கி வைக்காமல் தருவாய் என வேண்டி வந்த வேளையில் கதவைச் சாத்தி வைத்திருந்தது அங்கிருந்த அன்பர்களை முணுமுணுக்க வைத்தது. அடுத்த தரிசனம் இன்னும் அரைமணியில் என்றனர். காத்திருந்து உள்ளே சென்றோம். கூட்டம் சிறிது சிறிதாகப் பெருகி நிறைந்து கொண்டிருந்தது. பத்து ரூபாய் வரிசையில் போனால் விரைவாகப் பார்க்கலாம் எனக் கருதி அந்த வரிசையில் நின்றோம். அங்கு ஒரு இருபது நிமிட காத்திருத்தல்.

பிறகு உள்ளே விட்டார்கள். பெரிய மணி ஒலிக்க திருக்கோயிலினுள்ளே நடப்பது சுகானுபவம். பட்டால்தான் அதன் சுகம் புரியும். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆண்டவனைத் தரிசிக்கப் போகும் ஆவலும் மிகுந்தது. ஆக்கப் பொறுத்தும் ஆறப் பொறாதார் பலர் வரிசையில் நெருக்கினார்கள்.

உள்மண்டபத்தில் புதிதாக வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். கருங்கற்றூண்கள் புதிதாக போடப்பட்டிருந்தன. சுவற்றிலும் புதிதாக கற்களைப் பதித்திருந்தார்கள். பாரம்பரியம் மிக்க கோயிலுக்குள் இருக்கும் உணர்வு குறைந்து கொண்டே வந்தது. பழைய தூண்களோடு ஒட்டியிருந்த கிராணைட் ஸ்லாபுகள் ஆங்காங்கே கீழே விழுந்திருந்தன. பழசும் புதுசும் ஒட்டவில்லை போலும்.

இதோ பரந்தாமன் படுத்திருக்கின்றான். எங்கே ஒரு முறை முழுதாகப் பார்க்கலாம் என்று ஆவலுடன் பார்ப்பதற்குள், "நகருங்கள்! நகருங்கள்!" என்று சொல்லி விரைவு படுத்தினர். லேசுமாசாக பள்ளிகொண்டவனைக் கண்களில் கைது செய்து விட்டு வெளியே வந்தோம்.

எங்கும் நிறைந்தவனை எங்கும் காணலாம். அப்படியிருக்க சீரங்கத்தில் மட்டும்தான் போய்ப் பார்க்க வேண்டுமா? தேவையில்லைதான். ஆனால் அந்தக் குமிழ்ச் சிரிப்பும், பொய்த் தூக்கமும், அழகு திருவடிகளும் சிற்பியின் கைவண்ணமோ! மாயவன் மெய்வண்ணமோ! அதை எங்கே பார்க்க முடியும்? சமணராகிய இளங்கோவே "கண்ணெண்ண கண்ணே" என்று பாடியிருக்கிறார் என்றால், நான் எந்த மூலைக்கு.

ஆனால் ஆவல் முறையாகப் பூர்த்தியாகவில்லை. நின்று நிதானமாக தரிசிக்க முடியவில்லை. வெளிப்பிரகாரம் சுற்றி விட்டு ஐயங்கார் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் பிரசாதமாக வாங்கி உண்டோம். வயிறு நிரம்பியபின் ரெண்டே ரெண்டு வடைகளை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, திருச்சிக்கான பேருந்தைப் பிடித்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் அடையாறு வரை செல்ல வேண்டிய வேலை. அடையாறு வீட்டிற்குப் பக்கத்தில்தான். வண்டியில் செல்கையில் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோயிலைப் பார்த்தேன். நேரங் கிடைக்கையில் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நேரமும் வந்தது. காலையில் சாப்பிட்டு விட்டு (நான் அதெல்லாம் பார்ப்பதில்லை. சாப்பிட்டு விட்டு போனால் கோவித்துக் கொள்ள மாட்டார் என்று நம்பிக்கை.) வண்டியில் விரைந்தேன்.

கூட்டம் இருக்கவில்லை. உள்ளே அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாள் கண்ணிறையத் தெரிந்தான். படுக்கை பெரிய படுக்கையாதலால் கருவறையும் பெரிது. மூன்று கதவுகள். மூன்றின் வழியாகவும் பரந்தாமனைப் பார்க்க முடிந்தது.

அடிமுதல் முடிவரை, அழகை அங்குலம் அங்குலமாக கண்கள் அள்ளிப் பருகின. இமைக்க மறந்த கண்களால் அழகை அளக்க அளக்க ஆசையும் ஆவலும் தீரவேயில்லை.

வலக்கை ஒதுங்கி படுக்கைக்கு வெளியே நீட்டிக் கொண்டு, படுத்துக் கொண்டிருந்தாலும் பிடிப்பதற்கு இந்தக் கையை நீட்டிக் கொண்டிருப்பது சொல்லமலேயே விளங்கிற்று. இளங்கோ சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.

வங்கக் கடல் கொண்ட மாயவனைக் கேசவனை அரங்கத்தில் பார்ப்பேன் என்று தேடிச் சென்றேன். உலகமே அரங்கம். அது கடவுள் அருளுக்குக் கிறங்கும். அங்கு இருப்பவனே இங்கும் எங்கும் இருந்து நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து அருள் புரிவான் என்ற உண்மை விளங்கியது. கைகளைக் கூப்பித் தொழுதேன். கண்களை மூடிக் கொண்டேன். இதென்ன கூத்து.....கோயிலுக்கு வந்து கண்களை மூடிக்கொண்டா ஆண்டவனை வணங்குவது? கண்ணை மூடினாலும் திறந்தாலும் தெரிகின்ற ஆண்டவனை எப்படித் தொழுதால் என்ன!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! நின் சேவடி செவ்வித் திருக்காப்பு.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, August 08, 2005

திருவாசக இசைத்தட்டு - எனது பார்வையில்

திருவாசக இளையராஜாங்கம்

எல்லாரும் திருவாசகத்தை விமர்சித்துத் தெருவாசகமாக்கி விட்ட நிலையில் நான் மட்டும் சும்மா இருக்கலாமா? என் பங்குக்கு விமர்சித்திருக்கிறேன்.

இன்னிசைப் பூக்களான தமிழ்ப் பாக்கள் எத்தனை என்றால் பலப்பல. அவற்றில் மக்களைச் சேர்ந்தவை எவையென்றால்
சிற்சில.


எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளுக்குச் சிலர் இசையமைத்து ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள். பல
ஔவையார் பாடல்கள் ஔவையார் திரைப்படத்தில் மனங் கவர்ந்தன. சில சிலப்பதிகாரப் பாடல்களுக்கு சலீல் சவுத்திரி
அருமையாக இசையமைத்து பி.சுசீலாவும் யேசுதாசும் பாடியிருக்கின்றார்கள். பின் தேவார திருவாசகப் பதிகங்கள்
திரையில் வந்தன. எம்.எஸ்.ஸ¤ம் சில சிலப்பதிகாரப் பாடல்களைப் பாடியிருக்கிறார். பக்திப் பாடல்கள் என்ற வகையிலும்
பல வந்துள்ளன. விஸ்வநாதன் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசை வடிவில் வந்துள்ளது. பாரதியார் பாரதிதாசன்
பாடல்களும் வந்துள்ளன. இளையராஜாவின் இசையில் "கற்றது கைமண்ணளவு" என்ற ஔவையார் பாடல் தாய்
மூகாம்பிகை படத்தில் பி.சுசீலா பாட வந்துள்ளது. தளபதி படத்தில் "குனித்த புருவமும்" என்ற தேவாரப் பாடலும்
வந்துள்ளது. இன்னமும் சிலவும் இருக்கலாம்.


இவையனைத்திற்கும் இப்பொழுது வந்திருக்கும் திருவாசகத்திற்கும் என்ன வேறுபாடு? தமிழ்ப் பண்பாட்டிற்குப் பழக்கமான
இசை வடிவங்களில் மேற்கூரிய பாடல்கள் அனைத்தும் வந்துள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களை நாம் மூழ்கிச்
சுவைத்து மகிழ முடிந்தது. ஆனால் இப்பொழுதைய இளையராஜாவின் முயற்சி வேறுபட்டது. மேற்கத்திய இசை
வடிவத்தில் இறைவனை வணங்குவதற்குண்டான இலக்கண முறையைப் பின்பற்றி தமிழ்ப் பாடல்களுக்கு
இசையமைத்திருப்பது. அதிலும் பழம் பாடல்களுக்கு. ரொம்பச் சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில பைபிளையோ அராபிய
திருக்குரானையோ தமிழிசை முறைப்படிப் பாடுவது.


இது எளிதன்று. மிகக் கடினம். காரணம்? தமிழிசையில் பாடல்கள்/செய்யுட்கள் எழுதும் பொழுதே அதற்குரிய பாவை
முடிவு செய்து விடுவார்கள். வெண்பாவோ ஆசிரியப்பாவோ கலிப்பாவோ வஞ்சிப்பாவோ கொண்டுதான் செய்யுள்
எழுதப்படும். ஆக இங்கே மெட்டுக்குப் பாட்டுப் போட முடியாது. Oration என்ற மேற்கத்திய பாணியில் தமிழ்ப்
பாடலைப் பாட தமிழறிவும் தேவை. தமிழிசையறிவும் தேவை. மேற்கத்திய இசையறிவும் தேவை. இவை மூன்றுமே
இளையராஜாவிடம் இருப்பவைதான். அனைத்திற்கும் மேலாக இறையருளும் பங்கேற்றவர்களின் மதங்களை மீறிய
தமிழுணர்வும் இங்கே பெருங் காரியமாற்றியிருக்கின்றன.


திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு அதன் பெருமை தெரியும். ஜீ.யூ,போப் அவர்களின் மொழி பெயர்ப்பும் சிறப்பானது.
வரிக்கு வரி அவர் மொழி பெயர்க்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்காது. Understanding
என்றால் கீழே நிற்பது என்று அவர் மொழி பெயர்க்கவில்லை. திருவாசகப் பாடல்கள் சொல்லும் கருத்தை உள்வாங்கி
அதனை ஆங்கில முறைப்படி படைத்திருக்கிறார் போப். இதுவும் மிகக் கடினமான செயலே. இசைத் தட்டோடு
வந்திருக்கும் பாட்டுப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் இது உங்களுக்குப் புரியும்.


தகட்டில் முதல் பாடலாக இருப்பது "பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடல் ஏன் முதலிடத்தில்
இருக்கிறது என்பது பாடலின் தொடக்கத்திலேயே புரிந்து விடுகிறது. பெரிய அலை போல இசை வந்து நம்மை பரவசக்
கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. தப்பிக்க முடியவில்லை. பழைய நூற்றாண்டுத் தமிழ் மேற்கத்திய இசையில்
அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறது.
இந்தப் பாடல் இளையராஜாவின் குரலுக்கு அழகாகப் பொருந்தி வருகிறது. மிகவும் சிறப்பு. இறைவனின் சிறப்புகளைச்
சொல்லும் பாடல்கள். உணர்ச்சியின் உச்சியில் நின்று கொண்டு பாடியிருக்கிறார். அதனால்தான் பாடல் பெரியதாக
இருந்தாலும் முடியும் வரை நாம் மெய் மறந்து போகிறோம்.


பீத்தோவானின் கொஞ்சம் சிம்பொனி கேட்டிருக்கிறேன். ரொட்ஜர்ஸ் அண்டு ஹாமர்ஸின் பாடல்கள் கொஞ்சமும்
கேட்டதுண்டு. இவர்கள் மேற்கத்திய இசையில் ஊறித் திளைத்தவர்கள். அதே நேரத்தில் அவர்களும் மேற்கத்தியர்கள்.
அந்த அளவிற்கு பிசகாமல் செய்திருக்கிறார் இளையராஜா. இது The King and I படத்தில் சீன இசையைக் கையாண்ட
முறைமையைப் போல சிறப்பாக இருக்கிறது. கேட்டவர்கள் எல்லாம் இந்தப் பாடலுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள்.


இரண்டாவது வருகின்ற பாடல் "பொல்லா வினையேன்" எனத் தொடங்கும் பதிகம். ஆனால் ஆங்காங்கே
தேவைக்கேற்றவாரறு கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக வேறு பதிகங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதுவும்
அருமையாக இருக்கிறது. இந்தப் பாடல்தான் ஆறு பாடல்களிலும் நீளமானது. காரணமில்லாமலில்லை. தமிழ் வரிகளோடு
ஆங்கில வரிகளும் கலந்து உணர்ச்சிக் கலவையாக வரவேண்டுமே! அதற்குத் தோள்
கொடுத்திருக்கிறார்கள்....இல்லையில்லை உயிர் கொடுத்திருக்கிறார்கள் உடன் பாடிய ராய் ஹார்கோடும் குழுவினரும்.


திரையிசையில் இளையராஜாவின் முத்திரைக் கைத்திறன்கள் உண்டு. அவற்றை இலக்கண வரம்பிற்குட்பட்ட இந்த
இசைக்கோர்வையில் காட்டியிருக்கிறார். மெல்லிய ஓடையாகத் தொடங்கும் பாடல் தடாலென அருவியாகப் பெருகி
வழிந்து உணர்ச்சிப் பிரவாகமாய் மடை திறக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டு கடலைப் பார்க்கும் பரவசம். இந்த
வெளியீட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான்.


இது நல்லது அது நல்லது என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முடியாத அருமையான பாடல். ஒவ்வொரு வரியையும்
பாடுகையில், அந்த வரியும் புரிகையில் (இதற்கு செய்யுட்களோடு கொஞ்சம் பழக்கமிருக்க வேண்டும்.) பரவசமே!
அதனால்தான் கேட்கும் பொழுது பெரிய பாடலாக இருந்தாலும் அலுப்புத் தெரியவில்லை. ஒரே பாடலாக இல்லாமல்
நாலைந்து பாடல்களாக கேட்பது போல உள்ளது இன்னமும் சிறப்பு.


நமசிவாய வாழ்க பதிகத்தை கே.வீ.மகாதேவன்
இசையில் பி.சுசீலா பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு வேறு சிலர் இசையில் வேறு சிலர் பாடவும் கேட்டதுண்டு.
ஆனாலும் மகாதேவன் போட்ட மெட்டுதான் எனக்கு வரும். அவ்வளவு உணர்ச்சியும் பண்பாடும் கலந்த இசை. இனிமேல்
இளையராஜாவின் மெட்டும் நினைவிற்கு வரும். இரண்டுக்கும் அடிப்படை இசைக் கோர்ப்பில் வேறுபாடு இருந்தாலும்
அவை சொல்ல வந்ததைச் சொல்லி விட்டன. மிகச் சிறப்பு.


மூன்றாவது பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் சசிரேகாவும் பாடிய விழியில் விழுந்து என்று
தொடங்கும் பாடல் எல்லாரும் கேட்டிருப்பீர்கள். அப்படி ஒரு பாடல்தான் மூன்றாம் பாடல். அதாவது அந்தப் பாடலில்
ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து இழைந்து தேனாக ஒழுகும். சசிரேகாவும் இளையாராஜாவும் அருமையாகச்
செய்திருப்பார்கள்.


ஆனால் "பூவேறு கோனும்" எனத் தொடங்கும் இந்தப் பாடலில் சசிரேகாவிற்கு மாற்றாக பவதாரிணி. உச்சரிப்பு தெளிவாக
இருந்தாலும் ஒரு பிண்ணனிப் பாடகியாக பவதாரிணி செல்ல வேண்டிய தொலைவு இன்னமும் நிறைய என்பது எனது
கருத்து. இளையராஜாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். சித்ராவையாவது பாட வைத்திருக்கிலாம். ஆனாலும்
தமிழர் என்பதால் என்னுடைய வாக்கு சசிரேகாவிற்கு. இளையராஜாவும் ஒரு தந்தைதானே. இருந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு
பாடல்.


"உம்பர்கட்கரசே" எனத் தொடங்கும் பாடல் நான்காவதாக வருகிறது. எனது கருத்தில் இதுதான் அனைத்துப்
பாடல்களிலும் இறுதியாக வருவது. இளையராஜாவே பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் ஜேசுதாசின் குரலுக்கு மிகவும்
பொருத்தமாக இருக்கும். அவரை இளையராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படி அவர் பாடியிருந்தால் இந்தப் பாடல்
மிகவும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது கருத்து.


நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று
சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடல் சற்று சுறுசுறுப்பாக
இருக்கிறது. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடும் "முத்து நாற்றமாம்" எனத் தொடங்கும் பாடல். மொத்தம் மூன்று
பாடகர்களும் மூன்று பாடகிகளும். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி
ஆகியோர் பாடியிருக்கின்றார்கள்.


உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கின்றார் என்பது பெயர்ப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரிகிறது. மது பாலகிருஷ்ணன்
குரலெடுத்துப் பாடியிருக்க வேண்டும். நம்மை ஆச்சரியப் படுத்துகிறவர் விஜய் ஜேசுதாஸ். நல்ல குரல்வளம். முன்னுக்கு
வருவதற்கு வாய்ப்புகள் நிறைய. வருவார். பெண்களில் மஞ்சரி சிறப்பாகவும் மற்றவர்கள் நன்றாகவும் செய்திருக்கிறார்கள்.
உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஆஷாவின் குரலையும் காயத்ரியின் குரலையும் கண்டு பிடிக்க முடியவில்லை.


சுண்ணமிடிக்கையில் பாடும் பாடலாதலால் உலக்கையிடிக்கும் ஒலியைத் தாளமாக வைத்துப் போட்டிருக்கிறார். இது அவர்
முதல் திரைப்படத்திலேயே செய்து விட்டது. அன்னக்கிளி படத்தில் வரும் "முத்துச் சம்பா" பாடலைத்தான் சொல்கிறேன்.
அதிலும் உலக்கைச் சத்தமே தாளமாக வரும். உற்சாகமான பாடல்.


இசைத்தட்டில் இறுதியாக வருகின்ற பாடல் "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று வருகின்ற பதிகம். இந்தப் பாடலிலும்
பிரச்சனையில்லை. அதற்கு இளையராஜா இசையமைத்துப் பாடியதிலும் பிரச்சனையில்லை. ஆனாலும் பிரச்சனை
செய்கிறார்கள்.


பாடல் வரிகளைக் கவனிக்க வேண்டும். "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று தொடங்கி, அதாவது புற்றிலிருக்கும்
பாம்பிற்கும் அஞ்சேன், "பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்" என்று வளருகிறது. வளர்ந்து "கற்றை வார் சடை எம்
அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணி" என்று இறைவனைச் சொல்லி விட்டு, இந்த இறைவனைத் தவிர வேறொரு
இறைவன் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் அச்சமாக இருக்கிறது என்று முடிகிறது பாடல். வரிகளைக் கீழே
தருகிறேன்.


புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்கற்றைவார் சடையெம் அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணிமுற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைத்து எம் பெம்மார்க்குஅற்றிலாத அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறேஇந்தப் பாடல் அச்சப் பத்து என்ற தலைப்பில் வருகிறது. அதாவது தான் அச்சப்படுகின்ற பத்து விடயங்களை மாணிக்க
வாசகர் அடுக்கியுள்ளார். சரி. பிரச்சனைக்கு வருவோம்.


சிவபெருமானைத் தவிர வேறொரு தெய்வம் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் மாணிக்க வாசகருக்கு ஏன்
வெறுப்பு? இறையருள் பெற்றவருக்கு இதுவா பொறுப்பு? இப்படி எழுதினால் ஏது சிறப்பு? இதற்கு இசையமைக்காமல்
இளையராஜா செய்திருக்க வேண்டும் மறுப்பு?


இப்பொழுது புரிந்திருக்குமே பிரச்சனை. மாணிக்கவாசகரை சாதாரண மதவெறியராக்கி, இளையராஜாவை மதப்பித்தனாக்கி
பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் அது உண்மை போலத்தான் தோணும். ஆனால்
உண்மையல்ல. காரணமென்ன? தமிழ் நூல்களின் பண்பும் தமிழ் மொழியின் செழுமையும் தான். தமிழில் நுனிப்புல்
மேயக்கூடாது. வரிக்குவரி அப்படியே பொருள் கொண்டு படிக்கக் கூடாது.


காலத்தில் இஸ்லாமியர்களின் வேதமான திருக்குரானுக்கும் முந்தையது திருவாசகம் என்பதிலிருந்து அதன் பழமை
விளங்கும். அதனை ஒரு கிருத்துவப் பாதிரியார் மொழிமாற்றினார் என்பதிலிருந்து அதன் பெருமை விளங்கும். சரி.
பிரச்சனைக்கு என்ன விளக்கம்?


அல்லாவின் திருவருளாலே அண்ணல் (ஸல்) முகமது நபியவர்கள் திருவாக்கினின்றும் வெளிவந்தது திருக்குரான். அரபு
மொழியிலே அனைவருக்கும் புரியும் வகையிலே இசைநயத்தோடு அமைந்தது திருக்குரான். அரபு மொழியின்
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமைந்த இறையருள் நூல். அரபு மொழி அறிந்தவர் அதை உணரலாம். நல்வழி பெறலாம்.
அரபு மொழி அரைகுறையாகத் தெரிந்தவர் தெரிந்தவரிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். விளக்கம் கொடுக்கவும்
உண்டான ஊடகங்களை இஸ்லாம் அருமையாக ஏற்படுத்தி வைத்திருக்கிறது.


ஆனால் திருவாசகம் அப்படியில்லை. தமிழ் மொழி வளர்ச்சி கொண்டும், இன்றைக்கு பழக்கத்தில் வலுவிழந்தும் உள்ள
நிலை. பழைய செய்யுட்களைப் படிக்கையில் நல்ல தமிழறிவு உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாமாகத் தேடிப் போய்க் கேட்ட வேண்டியுள்ளது. ஆங்காங்கே நண்பர்கள் விளங்களை இட்டுள்ளனர். இருந்தாலும்
போய்ப் பார்க்கச் சோம்பல். பார்த்த சில விளக்கங்களில் செறிவு பற்றாமை.


இந்தப் பிரச்சனை எழுப்பியதும் வலைப்பூவில் ஒரு நண்பர் வியந்து சொன்னதை இங்கே தருகிறேன். "ஆகா! என்னே
படைப்புச் சுதந்திரம். வைரமுத்துவோ வாலியோ எழுதியிருந்தால் ஈகோ பிரச்சனையில் வரிகளை மாற்றுவதில் மறுப்பு
வரலாம். யாரோ மாணிக்க வாசகராமே. புது ஆள்தானே. இளையராஜா படக்கென்று மாற்றி எழுதி வாங்கியிருக்கலாமே!"
கிண்டலாக அந்த நண்பர் சொன்னது உண்மை நிலையை வேதனையோடு எண்ணித்தான்.


மாணிக்கவாசகரை ஒரு evangelist என்றும் மதப்பிரசங்கி என்றும் இகழ்கின்றவர்கள் திருவாதவூராரின் வாழ்க்கையையும்
அறியார். திருவாசகத்தின் பெருமையையும் அறியார். எனக்குத் தெரிந்த விளக்கம் சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள்.


இறையருள் பெற்ற ஒரு கிருஸ்துவரோ, இஸ்லாமியரோ, பௌத்தரோ......யாராயிருந்தாலும் இப்படிச் சொல்லியிருப்பார்கள்.
காரணம் என்ன? அன்புதான். அன்பினால் அச்சம் வருமா என்று கேட்கலாம். கண்டிப்பாக வரும். பிள்ளைகளின்
மேலுள்ள அன்புதானே பெற்றோர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது!
நன்கு படித்துப் பெரியவர்களான பெற்றோர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் படிப்பின் ஆர்வலன்.
மற்றொருவன் விளையாடிப் பொழுது போக்குகின்றவர். இரண்டாமவனை நினைத்தால் பெற்றோருக்கு அச்சம் வரத்தானே
செய்யும்? விளையாடும் பிள்ளை முன்னுக்கு வருமா என்று!
விளையாடி முன்னுக்கு வந்தவர்களும் உண்டு. ஆனால் இந்தப் பெற்றோர்களுக்கு அது தெரியவில்லை. இவர்கள் படித்து
முன்னுக்கு வந்தவர்கள். நன்கு படித்தால் முன்னுக்கு வரலாம் என்று தெரியும். எடுத்துக்காட்டுகளாக அவர்களே
இருகிறார்கள். இன்னொரு பிள்ளையும் நிருபிக்கப் போகிறான். எங்கே இவன் மட்டும் தப்பி விடுவானோ என்ற அச்சம்.


அந்த அச்சமே திருவாதவூராருக்கும். அன்பே உருவானவர். எந்த மதப்பிரச்சாரமும்
செய்யவில்லை அவர். இறையருளைப் பெற்றவர். எல்லாம் தெய்வந்தான். ஈஷ்வரு அல்லா தேரே நாம். "சிவனை வணங்கி
நான் உய்வு பெற்று விட்டேன். இந்தப் பிள்ளை இன்னமும் உய்வு பெறவுமில்லை. சிவனை வணங்குகிறாற் போலவும்
தெரியவில்லை. எப்படிப் பிழைக்கும் என்று அச்சமாக இருக்கிறது." இப்படி அஞ்சுகிறார் மாணிக்க வாசகர்.


சிவன் பெயரைச் சொல்லாதவரை கொல்லு என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை...எல்லாரையும் சிவநாமம் ஓதச் சொல்லு
என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை. இல்லை. இவைகள்தான் மதப்பிரச்சாரம். திருவாசகத்தை முழுமையாகப் படியுங்கள்.
குற்றமற உணருங்கள். மாணிக்கவாசகரின் அச்சத்தை அன்பு என்று உணருங்கள்.


இந்தப் பாடலுக்கு இசையமைத்ததை தவறு என்றே சொல்ல முடியாது. மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார் இளையராஜா.
சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் முழுவதும் அவரே பாடியிருப்பதும் சிறப்பாகவே இருக்கிறது. பாட்டுக்கு
முன்னமே சிம்பொனி இசை வடிவத்திற்கு திருவாசகத்தைப் பொறுத்திப் பார்ப்பதும் அழகாக வந்திருக்கிறது.


இதுவரையில் திருவாசக ஒலிப்பேழையிலுள்ள பாடல்களின் விமரிசனத்தைப் பார்த்தோம். இனி முடிவுரைதான்.

இந்த இசைவடிவத்தின் வெளியீட்டு விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் உருகியது நினைவிற்கு வருகிறது. அவரும் ஒரு
இசைமேதை. திரையிசையிலும் பக்தியிசையிலும் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர். அவரது கண்களைக்
கசிந்துருகச் செய்திருக்கிறது இந்த இசைக்கோர்வை. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் ஒரு நேர்மையானவரின்
கருத்து அது. கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் ஏ.ஆர்.ரகுமானும் சொல்லியிருக்கின்றார்.


இளையராஜாவின் மீது ஆத்திரமோ, திருவாசகத்தின் மீது ஆத்திரமோ அல்லது தமிழின் மீது ஆத்திரமோ
என்னவோ...பெயரில் மட்டுமே ஞானமுள்ளவர்களால் இளையாராஜா கிழித்தெரியப் பட்டார். அவருடைய குலத்தைச்
சொல்லிக் காட்டி அவமானப் படுத்தப் பட்டார். திரையிசையில் அவர் தொய்வு கொண்டது நினைவுறுத்தப் பட்டு
சிரிக்கப்பட்டது. இதென்ன பைத்தியக்காரத்தனம்?


இசையை ரசி. அதில் குற்றமிருந்தால் சொல். அவர் குரல் சில இடங்களில் எடுபடவில்லை. உண்மைதான். ஒத்துக்
கொள்கிறோம். அதற்காக இந்தப் படைப்பையே குற்றம் சொல்வதா? இசையின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத
ஔரங்கசீப்புகள் இசை விமரிசனம் செய்தன. கரித்துக் கொட்டின.


தமிழிலிலக்கியத்தில் பழக்கமோ ஆழமான அறிவோ இல்லாமல் திருவாசகத்தைக் குற்றம் சொன்னர். சிவனைப் பாடும்
பாடலுக்கு இசையமைத்தால் இளையாராஜா மதவெறியனாகவும் சூத்திரனாகவும் ஆகிவிட்டாராம்....இதென்ன கொடுமை.
அவருக்குத் தெரிந்ததைச் செய்திருக்கிறார் அவர். இசை தெரியும். தமிழ் தெரியும். இரண்டும் ஒன்றோடு ஒன்று
தொடர்புள்ளது. அந்தத் தொடர்பை வெளிக் கொண்டு வந்ததிற்கு இப்படி ஒரு பரிசு.


அல்லாஹு அக்பர் என்றுதான் இஸ்லாமியர்கள் சொல்வார்கள். அதனால் அவர்களை மதச்சார்பற்றவர்கள் அல்லர் என்ற
முடிவுக்கு வரும் மடமையைத்தான் இந்த வீண் விமர்சகர்கள் செய்திருக்கின்றார்கள். சூரியனுக்குச் சேறு பூச
முயன்றிருக்கின்றார்கள்.


இதே வேறு மொழி இலக்கியம் எதற்காவது இளையராஜா இசையமைத்திருந்தால் அவரை அந்த மொழிக் குடிதாங்கி
என்று போற்றியிருப்பார்கள். போயும் போயும் தமிழ்ப் பாட்டுக்கு இசையமைத்தாரே இளையராஜா. அவருக்கு இதுவும்
வேண்டும். இன்னமும் வேண்டும்.


சரி. தமிழன் மனப்பாங்கு தெரிந்ததுதானே. விட்டுத் தள்ளுங்கள்.

இது போன்ற படைப்புகள் கண்டிப்பாக ஊக்குவிக்கப் பட வேண்டியவைகள். இன்னும் எதிர் பார்க்கிறோம் இளையராஜா.
நிறைய இருக்கின்றன. சிம்பொனிகளும் ஓரேட்டோரியோக்களும் இருக்கட்டும். கொஞ்சம் சிலப்பதிகாரம், திருப்புகழ்,
திருப்பாவை, திருவெம்பாவை, தேம்பாவணி, சீறாப்புராணம் என்று திரும்பிப் பாருங்கள். உங்களுக்குத் தோன்றிய
இசைவடிவிலேயே தாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். தமிழ் காத்திருக்கிறது. இசையும் காத்திருக்கிறது.


அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, August 04, 2005

கந்தனுக்கு அலங்காரம் - 1

கந்தனுக்கு அலங்காரம்

கந்தரலரங்காரம் அருணகிரிநாதர் எழுதிய நூல். அருள் நூல். அழகு நூல். அறிவு நூல். முருகப் பெருமானின் திரு அலங்காரங்களை விளக்கும் நூல். உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான அழகினையும் முருகப் பெருமானின் ஊர்தியின் பெருமையையும், வெற்றி வேலின் திறமையையும் இவைகளினால் நாம் பெறும் வளமையையும் விவரித்து எழுதப்பட்ட நூல்.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.

இந்த நூலைப் படித்தாலும் கேட்டாலும் உள்ளத்தில் நினைத்தாலும் இன்பம் பெருகும். துன்பம் கருகும். உள்ளம் உருகும். பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரைக் குறித்துச் சொல்கையில் ஓசைமுனி என்பாராம். எந்த ஒரு ஓசையையும் தமிழ்ச் சொல்லாக்கி அந்தச் சொல்லையும் பூவாக்கி முருகனுக்கு அலங்காரம் செய்தவர் அருணகிரியார். இறைவன் அருளும் இறைவன் மீது அன்பும் உண்மையிலேயே இருந்தால்தான் இதெல்லாம் நடைமுறைக்கு வரும்.

காப்புச் செய்யுளோடு சேர்த்து மொத்தம் நூற்று எட்டு பாக்கள் உள்ளன. இந்த நூற்றி எட்டுப் பாப்பூக்களையும் படிப்பது இன்பமென்றாலும் நாம் எளிமையாக பாடியும் துதித்தும் மகிழத்தக்க சிறந்த பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்கு உரையளிக்க உள்ளேன். அனைத்துப் பாக்களுக்கும் உரையளிப்பது என்பது பேரறிஞர்களுக்கே கைவரும். எளியேனாகிய எனக்குப் புரிகின்ற செய்யுட்களை எடுத்து அவைகளுக்கு விளக்கம் கோர்த்து நீங்கள் படித்து மகிழ்ச்சியும் வளமும் பெறத் தருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு பாடலாக இடுகிறேன். எல்லாம் முருகன் செயல்.

காப்புச் செய்யுள்

அடலருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபடெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே

முருகனை வணங்கி கந்தலரங்காரத்தைத் துவக்குகிறார் அருணகிரி. அவருக்கு முருகன் அருள் காட்டிய இடம் திருவண்ணாமலை. ஆகையால் திருவண்ணாமலையை வைத்தே துவக்குகிறார்.

அடல் என்றால் வலிமை. அடலேறு என்ற சொற்றொடரை நினைவு கொள்ள. அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம். அருணை என்பது திருவண்ணாமலை. அதற்கு ஏன் அருணை என்று பெயர்?

அருணம் என்றால் சிவப்பு. ஆகையால்தான் செஞ்சுடராக வானிலிருக்கும் சூரியனுக்கும் அருணன் என்று பெயர். நான்முகனும் நாரணனும் செருங்கு மிகுந்த பொழுது அடியும் முடியும் தெரியாத தீப்பிழம்பாக காட்சி தந்தார் பரமேசுவரன். அடியும் முடியும் காணாமல் தேடித் தோற்றார்கள் பிரம்மனும் பரந்தாமனும். ஆகையால் அண்ணாமலைக்கு அருணை என்றும் பெயருண்டு.

அடலருணை என்றால்? வலிமை மிகுந்த அருணை. அருணைக்கு என்ன வலிமை. சில புண்ணியத் தலங்கள் சென்றால்தான் பலன் கொடுக்கும். சில புண்ணியத் தலங்களைப் பற்றிப் பேசினாலே பலன் கிடைக்கும். ஆனால் உள்ளன்போடு நினைத்த பொழுதிலேயே பலன் கொடுக்கும் தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. அதனால்தான் அந்த ஊரை அடலருணை என்று அடைமொழியோடு அழைக்கிறார்.

அப்படிப் பெருமையுள்ள திருவண்ணாமலை வல்லாளராஜன் கோபுரத்தின் வடபுறமாக முருகப் பெருமான் கொலு வீற்றிருக்கிறார். இடப்புறமாகச் சென்றால் அங்கே விநாயகப் பெருமான் நன்றாகச் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறார். அங்கே எல்லாரும் தலையில் தடபடனெக் குட்டிக் கொண்டு வணங்குகிறார். அவர்கள் படைக்கின்ற சர்க்கைரையில் செய்த தின்பண்டங்களை துதிக்கையில் எடுத்து வாயில் மொக்கிக் கொண்டு அருள் பாலிக்கிறார் பிள்ளையார்.

இப்பொழுது முதல் மூன்று அடிகளையும் படியுங்கள். அடலருணைத் திருக்கோபுரத்தே அதன் வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன். வருவார் தலையில் தடபடனெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை. புரிந்திருக்குமே!

கடதடக் கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே என்பது கடைசி வரி. அப்படி அருள் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்ற பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே அவருக்குக்கு இளையவரான முருகப் பெருமானைக் கண்டுகொண்டேன் என்று முடிக்கிறார் அருணகிரி.

இதில் சொல்லாடலைப் பாருங்கள். கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே! கும்பக் களிறு விநாயகர். அவருக்கு இளைய களிறு முருகப் பெருமான். அத்தோடு பாருங்கள் குட்டும் பொழுது உண்டாகும் ஒலியையும் பாட்டில் வைத்திருக்கிறார் அருணகிரி. "தடபடெனப் படு குட்டுடன்" என்ற அடியில் வருகிறது பாருங்கள்.

உண்பதைச் சொல்லப் பல பெயர்கள். கொறித்தல் என்றால் கொஞ்சமாகச் சாப்பிடுவது. நுங்குதல் என்றால் வயிறு நிரம்ப உண்ணுதல். மொக்குதல் என்பது வாய் நிரம்ப உண்ணுதல். ஆனை வாய் நிரம்ப உண்ணும். விநாயகப் பெருமானும் ஆனைமுகர்தானே. ஆகையார் அன்பர் தந்த இனிப்புப் பண்டங்களை துதிக்கையில் தூக்கி வாயில் திணிந்து மொக்கினாராம். "சர்க்கரை மொக்கிய கை". இப்படிப்பட்ட பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் முருகப் பெருமானை வணங்கி அருள் வேண்டுகிறார் முருகப் பெருமான்.

ஒரு பாடலிலேயே பிள்ளையாரையும் முருகனையும் பாடும் இந்தப் பாடல் துதிக்கச் சிறந்தது. எந்தக் காரியத்தைச் செய்யும் முன்னும் இந்தப் பாடலை உளமாற நினைத்து விட்டு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.