Wednesday, February 28, 2007

7ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே.

ராஜம்மாள் அப்படிக் கேட்டதும் வாணிக்கு எரிச்சல் வந்தது. வெளியில் காட்ட விரும்பவில்லை. அத்தோடு அமைதியாக எடுத்துச் சொல்ல விரும்பி மெதுவாகவே கேட்டாள். "என்னம்மா சொல்ற?"

மகள் அப்படி மெதுவாகக் கேட்டதை தனக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு வாயை விட்டார் ராஜம்மாள். "அதாம்மா....சந்தியாவை வீட்டுக்குக் கூட்டீட்டு வர்ரதப் பத்திச் சொன்னியே. அதத்தான் சொல்றேன். நீ பாட்டுக்கு நம்ம வீட்டுக்குள்ள சந்தியாவையும் பையனையும் கூட்டீட்டு வந்தா எல்லாரும் பேசுவாங்க? அத யோசிச்சியா?"

"யோசிச்சேன். நல்லா யோசிச்சேன். ஆனா நீ ஒன்னு யோசிக்கலையேம்மா. இப்ப நம்ம இருக்குறது நம்ம வீடு கெடையாது. மாமாவோட வீடு. அவர் கட்டுன வீடு. அதுல கண்ணனுக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு சந்தியாவுக்கும் உண்டு. நீயோ நம்ம சொந்தக்காரங்களோ வர்ரது எல்லாரும் பேசும்படி இருக்கும்னு சந்தியா நெனக்கக் கூட உரிமையிருக்கு. ஆனா நெனைக்க மாட்டாங்க. அதுனால நம்மளும் நெனைக்க வேண்டாம்."

"அதில்ல. சந்தியாவுக்குக் கல்யாணமே ஆகலை. அதுதான் எனக்கு நெருடல். யார் கூட எந்த மாதிரிப் பழக்கமோ? கொழந்தை பொறந்தப்புறம் செயற்கையாச் செஞ்சதுன்னு கதை சொல்றா."

வாணியின் பொறுமை எல்லை மீறியது. "நிறுத்துமா. போதும். எதையும் தெரியாமப் பேசாத. அப்படியே சந்தியா யார் கூடயும் தொடர்பு வச்சிருந்தாத்தான் என்ன? இவ்வளவு பேசுற ஒங்கிட்ட ஒரு கேள்வி. இத்தன வருஷ வாழ்க்கைல அப்பாவைத் தவிர வேற எந்த ஆம்பிளையும் மனசால கூட நெனைச்சதில்லையா? இல்லைன்னு என்னால பொய் சொல்ல முடியாது. கல்யாணத்துக்கு முன்னால அஜீத்தையும் விஜயையும் மனசுல விரும்பினேனே. இப்பக் கூட சுட்டும் விழிச் சுடரேன்னு அசின் கூட சூர்யா பாடும் போதோ விக்ரம் சதாவத் துரத்தும் போதோ என்னோட மனசு குழையும். அது மட்டும் சரியா? கண்ணனுக்குக் கூடத்தான் நயன்தாரா பிடிக்கும். பாக்கும் போது கண்டிப்பா மனசுக்குள்ள அந்த நடிகையை நெனைக்காமலா இருக்கப் போறாங்க?"

"இதென்ன கூத்து? நெனைக்கிறதும் செய்றதும் ஒன்னா? இட்லீன்னு நெனச்சா வயிறு நெறைஞ்சிருமா?"

"இட்லீன்னு நெனச்சா வயிறு நெறையாது. ஆனா மனசுக்குள்ள இட்லி சாப்பிடனும்னு ஆசய வெச்சிக்கிட்டு இட்லி சாப்புடுறது தப்புன்னு சொல்றதுதான் தப்பு. ஆகையால....அடுத்தவங்க என்ன செய்றாங்கன்னு பாக்குறத மொதல்ல விடும்மா. நம்ம செய்ய வேண்டியதே நெறைய இருக்கு. அதுகளப் பத்தி யோசிப்போம். இனிமே இதப் பத்திப் பேச வேண்டாம். பேச எனக்கும் விருப்பமில்லை." உறுதியாகச் சொல்லி விட்டாள் வாணி. ராஜம்மாள் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு நடந்தார்.

இது நடந்து மூன்று நாட்கள் ஆகி விட்டன. சந்தியா பரபரவெனக் கிளம்பிக் கொண்டிருந்தாள். விமான நிலையத்திற்கு. சரவணனை வரவேற்க. விடியற்காலையிலேயே மும்பை வந்து அங்கிருந்து கிங் ஃபிஷரில் சென்னை வருகிறான். ஜெல்லி ஐஸ்கிரீம் போலக் குளுகுளுவெனக் கிளம்பினாள். சரவணன் வருவதை ஏற்கனவே வீட்டில் சொல்லியிருந்தாள். சந்தியாவிற்கும் சரவணனுக்கும் உள்ள நட்பு(!) மட்டும் வீட்டில் தெரியுமாதலால் சந்தியாவின் பரபரப்பைச் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டனர். கத்திப்பாராவில் இன்னும் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் மேம்பாலத்தையும் அது உண்டாக்கும் நெரிசலையும் சபித்தபடி காரை ஓட்டிக் கொண்டு ஒருவழியாக விமான நிலையத்திற்குள் நுழைந்தவளை வரவேற்றார் பெருமாள்சாமி. சரவணனின் தந்தை.

"என்ன சந்தியா. எப்படியிருக்க? சரவணன் வந்தாத்தான் ஒன்னப் பாக்க முடியுது. இல்லைன்னா நீ இருக்கியா இல்லையான்னே தெரியாது. வீட்டுல எல்லாரும் நல்லாயிருக்காங்களா?"

இவர் வருவார் என்று சந்தியா எதிர்பார்க்கவில்லை. முன்பெல்லாம் அவரை அடிக்கடி பார்த்துப் பேசியவள்தான். சுந்தரைச் சுமக்கத் தொடங்கியதிலிருந்து அவரைத் தவிர்த்து வந்தாள். அவர் வழியாகச் சரவணனுக்குக் குழந்தை பிறந்தது தெரிந்து விடுமோ என்ற பயந்தான். சரவணனுக்குத் தெரிந்தால் இல்லாத கேள்விகள் கேட்பானே. அதனால்தான் அவரைப் பார்த்ததும் வழிந்தாள். "நல்லாயிருக்கேன் அங்கிள். வீட்டுலயும் எல்லாரும் நல்லாயிருக்காங்க. நீங்க எப்படியிருக்கீங்க? ஆண்ட்டி எப்படி இருக்காங்க?"

"நான் நல்லாயிருக்கேன். இப்பல்லாம் கார் ஓட்டுறதில்லை. டிரைவர்தான். அதுனால ஏர்போர்ட்டுக்கு நானே வந்துட்டேன். ரிட்டையர் ஆயாச்சு வேற. வேற என்ன வேல வீட்டுல. சரியான நேரத்துக்குத்தான் நீயும் வந்திருக்க. பிளைட் வர்ர நேரந்தான்."

அறிவிப்புப் பலகையில் கம்ப்யூட்டர் கிங்பிஷர் வந்து இறங்கியதை ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்தியிலும் சொல்லியது. "வந்துருச்சு அங்கிள். ஃபிளைட் வந்துருச்சு. இன்னும் பத்து நிமிஷத்துல லக்கேஜ் எடுத்துக்கிட்டு சரவணன் சீக்கிரமா வருவான்னு நெனைக்கிறேன்." மனதிற்குள் ஒளித்துக் கொண்ட துள்ளல் குரலில் எட்டிப் பார்த்தது.

"ஆகா வந்தாச்சு. நல்லவேளை டிலே ஆகலை. உன்னோட பிரண்டு வந்ததும் சொல்லு. இந்த வாட்டி அவன் கல்யாணம் பண்ணிக்கனும்னு. நல்ல வரனெல்லாம் வருது."

சந்தியா மனதால் உடலால் உயிரால் சடன் பிரேக் போட்டாள். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, "என்ன அங்கிள். சரவணனுக்குக் கல்யாணமா?" என்று கேட்டாள்.

மனதுக்குள். "என்ன அங்கிள்! சரவணனுக்குக் கல்யாணமா?" என்று கேட்டாள். அதே கேள்விதான். ஆனால் தொனி மாறியிருந்தது.

"ஆமாம்மா. அவனுக்கேத்த நல்ல வரன்கள் நெறைய வருது. அதான்."

(வரும் அங்கிள் வரும். சரவணனோட மொத வரனே நாந்தான். நீங்க என்னடான்னா புதுப்புது வரனாப் பாக்குறீங்க. அவன் பாத்த வரன்களையெல்லாம் கணக்குப் பாக்க முடியுமா ஒங்களால!)

"அதுவுமில்லாம...எங்களுக்கும் பேரன் பேத்தியப் பாக்கனும்னு ஆசை இருக்காதா?"

(பேரன் பேத்தியப் பாக்கனுமா? ஏற்கனவே ஒங்களுக்குத் தெரியாம ஒரு பேரன் இருக்கான். பேரு சுந்தர். அது சரி....எனக்குத் தெரிஞ்சி ஒரு பேரந்தான். எனக்குத் தெரியாம எத்தன பேரு ஒங்களுக்குப் பேரனையோ பேத்தியையோ பெத்திருக்காங்களோ!)

"அத்தோட...அவன் வெளிநாட்டுல இருக்கான். வேண்டியத ருசியாச் செஞ்சு சாப்பிடவும் தெரியாது. கண்டதத் தின்னுக்கிட்டிருப்பான். அவனுக்குன்னு ஒருத்தி வந்துட்டான்னா வீட்டுச் சாப்பாடு கெடைக்கும். ஒடம்புக்கும் நல்லது."

(சரவணனே ஒரு 5 ஸ்டார் ஹோட்டல். அங்க கெடைக்கிற விருந்துகளே எக்கச்சக்கம். அதுவுமில்லாம சரவணன் கைப்பக்குவம் எப்படீன்னு எனக்குத் தெரியும். அவனோட பிரியாணின்னா...சரி...அதெல்லாம் ஒங்களுக்கு எங்க புரியப் போகுது! சொல்லத்தான் முடியுமா!)

"அதாம்மா...நீ அவன் கிட்ட எடுத்துச் சொல்லு. அது சரி. நீயும் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கமா. நீங்க ரெண்டு பேரும் ஒன்னாப் படிச்சவங்கதான. சரவணன் கிட்ட நான் சொல்றேன். அவன் வந்து ஒன்னைய சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்வான்."

(ஆகா! சரவணன் கிட்ட நான் சொல்லனும். எங்கிட்ட சரவணன் சொல்லனும். கிழிஞ்சது போங்க! ரெக்கமெண்டேஷனுக்கு நல்ல ஆளப் பிடிக்கிறீங்களே! நான் அவன் கிட்ட முதலிரவுக்குத்தானே ரெக்கமெண்டேஷன் செய்ய முடியும்!)


"அந்தா! சரவணன் வந்துட்டாம்மா." அப்பாவைப் பார்த்துக் கையை அசைந்த சரவணனுக்குள் சந்தியாவைப் பார்த்ததும் கோக்கோகோலா பொங்குகிறது. சந்தியாவும் இன்ஸ்டண்ட் எனர்ஜியைப் புன்னகையிலும் பரவசத்திலும் காட்டி வரவேற்றாள்.

"எப்படி இருக்கீங்கப்பா?" என்று அப்பாவைக் கேட்டவன் அப்படியே திரும்பி, "ஹே சந்தி, என்னது இது? திடீர்னு அழகாயிட்ட? பியூட்டி பார்லர் போயிட்டு வந்தியா?" என்று கிண்டினான். பொய்க் கோபத்தைக் கண்களில் கொப்பளித்து விட்டு மகிழ்ச்சியாகச் சிரித்தாள் சந்தியா.

"என்னப்பா, அம்மாவும் நீங்களும் ஏர்ப்போர்ட்டுக்கு வருவீங்கன்னு சொன்னீங்க? அம்மா வரலையா?"

"இல்லப்பா. ஒரு நல்ல வரன் வந்திருக்கு. ஒனக்குதான். அது சம்பந்தமா பேச ஒன்னோட மாமா வந்திருக்காரு. அவரோட பேசிக்கிட்டிருக்கா. அதுனால நான் மட்டும் கெளம்பி வந்தேன். வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம். சந்தியா, நீயும் வீட்டுக்கு வர்ரியாம்மா?"

தொடரும்...

Monday, February 26, 2007

6ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பாகம் இங்கே.

அந்த வாரம் படபடவென ஓடியது. சனிக்கிழமையும் வந்தது. ஏற்கனவே சிவகாமியிடம் தொலைபேசியில் சொல்லியபடி வாணி பெசண்ட் நகர் வந்தாள். கண்ணனுக்கும் ராஜம்மாளுக்கும் மதிய உணவைக் காலையிலேயே தயாரித்து வைத்து விட்டு அரவிந்தைத் தூக்கிக் கொண்டு காரில் கிளம்பி வந்து விட்டாள்.

வாணி வந்ததும் சந்தியாவின் அப்பார்ட்மெண்ட் கலகலப்பானது. வாணிக்கு நன்றாகச் சமைக்க வரும் என்றாலும் இந்த மாதிரி பெசண்ட் நகர் வருகையில் சிவகாமியின் கைப்பக்குவத்தைத்தான் விரும்புவாள். வாரயிறுதியில்தான் பெரும்பாலும் வருவதால் மீன், கோழி என்று எதாவது எடுப்பார்கள். நிறைய செய்து வாணியிடம் கண்ணனுக்கும் கொடுத்தனுப்புவார் சிவகாமி. அன்றைக்கு வஞ்சிர மீன்.

சனிக்கிழமைக்கே உரிய சோம்பலுடன் சந்தியா மிகவும் தாமதமாக எழுந்து இன்னமும் குளிக்காமல் இருந்தாள். அரவிந்தோடு விளையாடிக் கொண்டிருந்த சுந்தரை வாணியே குளிப்பாட்டினாள். வாணியிடம் சுந்தர் நன்றாக ஒட்டிக் கொண்டான். பிறகு ஹாலில் சுந்தரராஜன், வாணி, சந்தியா உட்கார்ந்து கண்ணன் வாங்கப் போகும் காரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுக்களையில் வேலைக்கு வரும் ஜான்சி இருந்ததால் சிவகாமி உள்ளே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

"ஜென் எஸ்டிலோப்பா. கருப்புதான் வாங்கனும்னு அடம் பிடிச்சாங்க. நாந்தான் குறுக்க விழுந்து தடுத்திட்டேன். அதுவும் எப்படி? எனக்குப் பிங்க் கலர்தன் வேணும்னு அடம் பிடிச்சேன். கடைசியில ரெண்டு பேருக்கும் பொதுவா முடிச்சோம். ஹா ஹா ஹா." சொல்லிச் சிரித்தாள் வாணி. கண்ணனை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்தவள் அவள்.

"ஆகா. ஒனக்குச் சொல்லிக் குடுக்கனுமா?" சந்தியா பாராட்டினாள். "ஒனக்கு நெனைவிருக்கா? ஒங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுல தேநிலவுக்கு அவன் தாய்லாந்து போகனும்னு அடம் பிடிக்க...நீ எகிப்து போகனும்னு அடம் பிடிக்க...கடைசீல நீ விருப்பப் பட்ட மாதிரியே சிங்கப்பூர் மலேசியா போயிட்டு வந்தீங்களே!" அவனுக்குச் சரி நீதான். வஞ்சகமில்லாமல் நாத்தனாரைப் புகழ்ந்தாள் சந்தியா.

எல்லாரும் சிரித்து மகிழ்ந்து இருக்கையில் ஒரு கொக்கியைப் போட்டாள் வாணி. "அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு மேல கார் டெலிவரி எடுக்கச் சொல்லீருக்காங்க. அன்னைக்கு நீங்களும் வாங்கப்பா. கார் எடுத்துட்டு நேரா அகஸ்தியர் கோயிலுக்குப் போய் பூஜை போட்டுட்டு டின்னர் வெளிய போலாம். சந்தியா, நீங்களும் சுந்தரும் கண்டிப்பா வரனும்."

வாணியின் திடீர் அழைப்பு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. வாணியே தொடர்ந்தாள். "என்ன அமைதியாயிட்டீங்க. இப்படியே இருக்க முடியுமா? கொஞ்சம் கொஞ்சமா வரப் போக இருந்தா பழகீரும். பழையபடி எல்லாரும் ஒரே வீட்டுல இருக்க முடியும்னு தோணலை. ஆனா வரப்போக கண்டிப்பா இருக்கனும். அதுதான் நல்லது."

சுந்தரராஜன் முதலில் பதில் சொன்னார். "வாணி, நீ சொல்றது கேக்கும் போதும் நெனைக்கும் போதும் நல்லாயிருக்கு. ஆனா வேலைக்காகுமா? பொதுவுல யாருக்கும் இதுனால பிரச்சனை வரக்கூடாது."

"அப்பா, நீங்க நெனைக்கிறது புரியுது. அன்னைக்கு அம்மா பேசுன மாதிரி யாரும் பேசுவாங்களோன்னு பயப்படுறீங்க. மொதல்ல பேசுவாங்கப்பா. ஆனா போகப் போக அமைதியாயிருவாங்க. இன்னமும் சொல்லப் போனா இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு நா. அப்படி வந்தும் என்னையும் இந்தக் குடும்பத்துல ஒருத்தியா நெனைக்கிறதாலதான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கொண்டு வரனும்னு நெனைக்கிறேன். விரும்புறேன். ஒரு வாட்டி எல்லாரும் அங்க வந்தீங்கன்னா சரியாப் போகும்." கெஞ்சும் தொணியில் முடித்தாள் வாணி.

எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கத்தான் செய்தது. அதனால்தான் வாணி சொன்னதும் அந்த ஆசை இன்னமும் பெருகியது. சரி என்று சொல்லிவிட சுந்தரராஜனும் சிவகாமியும் துடித்தனர். ஆனால் முடிவெடுக்க வேண்டியது சந்தியா. அதனால் ஆவலுடன் அவள் முகத்தையே பார்த்தனர். பெற்றோரின் விருப்பம் சந்தியாவிற்குப் புரிந்தும் இருந்தது. அவர்கள் விருப்பத்தை மீறி பலதைச் செய்திருந்ததால் இந்த விஷயத்திலாவது அவர்களுக்கு ஒரு நிம்மதி கொடுக்க நினைத்தாள்.

"சரி வாணி. கண்ணன் மேல எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது. ஆயிரம் இருந்தாலும் அவன் என்னுடைய தம்பி. அவனை என்னால விட்டுக் கொடுக்க முடியாது. அன்னைக்கு வீட்டுல எங்கிட்ட அப்படிப் பேசினாலும் ஊருக்கு முன்னாடி அவன் என்னை விட்டுக் கொடுத்ததில்லைன்னு எனக்கும் தெரியுமே. உன்னையும் எனக்கு நல்லாத் தெரியும். உன்னோட எடத்துல வேறொரு பொண்ணு இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னே என்னால யோசிக்க முடியலை. கண்ணன் மட்டுமில்ல, நாங்களும் ரொம்பக் குடுத்து வெச்சவங்கதான். அப்பாம்மாவுக்காக மட்டுமில்ல உனக்காகவும் இந்த முடிவுக்கு நான் ஒத்துக்கிறேன். எடுத்த எடுப்புலயே நான் வர்ரத விட மொதல்ல சுந்தரக் கூட்டீட்டுப் போ. கண்ணனும் சுந்தரும் மொதல்ல பழகுனா அப்புறம் நான் வர்ரது லேசாயிரும். சரியா?" புன்னகையோடு கேட்டாள்.

பெரிய பிரச்சனையாகுமோ என்று பயந்திருந்த வாணிக்குச் சந்தியாவின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இன்னும் இரண்டு நாட்களில் சரவணனின் வருகையை நினைத்து நினைத்து மகிழ்ச்சியாக இருந்த சந்தியாவிற்கு எல்லாமே நல்லதாகவே நடப்பது போன்ற மகிழ்ச்சி. தலைக்குக் குளித்து விட்டு வந்து அனைவரோடும் உட்கார்ந்து மதிய உணவை முடித்தாள். நன்றாக இருந்த வஞ்சிர மீனை எல்லாரும் மிச்சம் வைக்காமல் ஒரு பிடிபிடித்தனர். வாணி மறந்தாலும் சிவகாமி கண்ணனுக்காக தனியாக ஏற்கனவே சில துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்திருந்தார். சிறிய தூக்கத்திற்குப் பிறகு நான்கு மணிக்கு மேல் ஏலக்காய் டீ குடித்து விட்டு வாணியும் அரவிந்தும் டி.நகருக்குக் கிளம்பிப் போனார்கள்.

மாலையில் கண்ணனிடம் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள். "கார் எடுக்க அப்பாவும் அம்மாவும் வர்ரதாச் சொல்லீருக்காங்க. அப்புறம் பாருங்க...சுந்தர் எங்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டான். போன வாட்டி போனப்பவே கீழ எறங்க மாட்டேன்னு அடம் பிடிச்சான். தூக்கி வெச்சுக்கிட்டேயிருந்தேன். இந்த வாட்டி அவனை நாந்தான் குளிப்பாட்டினேன். நல்லாச் சிரிக்கிறான்." ஏதோ இயல்பாகச் சொல்வது போலச் சொன்னாள்.

கண்ணனுக்கும் சதை ஆடத்தான் செய்தது. "ஒங்கிட்ட ஒட்டிக்கிட்டானா? போன வாட்டி வாங்கீட்டுப் போன டிரஸ் சரியா இருந்ததா? அவனுக்கு மொட்டை வேற எடுக்கனும். அதுக்கு என்ன பண்ணப் போறாங்களோ. காது வேற குத்தனும்."

தன் பங்கிற்கு வாணியும் நன்றாகவே ஊசியேற்றினாள். "ஆமாங்க. திருப்பரங்குன்றம் போகனுமே. ஒங்களுக்கும் லீவு கெடைக்கனும். ஒங்க மடியில் வெச்சுத்தான மொட்டை எடுக்கனும். அப்பா கிட்டச் சொல்லி சனி ஞாயிறுல வர்ர மாதிரி நல்லநாள் பாக்கச் சொல்லனும். கண்ணுக்குள்ளயே இருக்கான் சுந்தர். அடுத்த வாட்டி போகும் போது அவனையும் தூக்கீட்டு வந்திரப் போறேங்க." ஏதோ அப்பொழுது தோன்றுவது போலச் சொன்னாள்.

"ஏய்! நீ பாட்டுக்கத் தூக்கீட்டு வந்திராத. சந்தியாவால அவனை விட்டுட்டு இருக்க முடியுமா? அப்புறம் அவன் அழுதான்னா என்ன பண்றது?"

"அதுவும் சரிதாங்க. காரெடுக்க அப்பாவும் அம்மாவும் வரும் போது அவனைத் தூக்கீட்டு வரச் சொல்வோம். அப்புறம் எப்படியும் ராத்திரி அவங்க பெசண்ட் நகர் போயிருவாங்களே. அதுனால பிரச்சனையிருக்காது. சரி. எனக்கு நேரமாகுது. நீல்கிரீஸ் போகனும். அம்மாவைக் கூட்டீட்டுப் போறேன். அவங்களுக்கும் வெளிய போன மாதிரி இருக்கும்." கண்ணனின் பதிலுக்குக் காத்திராமல் அரவிந்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு ராஜம்மாளோடு கிளம்பினாள். சுந்தரை மட்டும் வரச்சொல்வதை விட வாணி சந்தியாவையும் அழைத்திருக்கலாமே என்று சிந்திக்கத் தொடங்கியிருந்தான் கண்ணன்.

பக்கத்துத் தெருவில்தான் நீல்கிரீஸ். வாணியும் ராஜம்மாளும் மெதுவாக நடந்தே சென்றனர். தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியதும் ராஜம்மாள் கேட்டார். "எதுக்கு நீ வேண்டாத வேலையெல்லாம் பாக்குற?"

தொடரும்.....

Thursday, February 22, 2007

கர்நாடகத் தமிழனின் கேள்வி

கர்நாடகத் தமிழனின் கேள்வி என்றதும் அது ஜிராவின் கேள்வி என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். ஜிரா கர்நாடகாவில் ஆண்டுக்கணக்கில் இருப்பவர். இன்றைக்கு நினைத்தாலும் சென்னைக்கோ வேறு ஊருக்கோ வேலை வாங்கிக் கொண்டு ஓடிட முடியும். அதுவுமில்லாமல் தமிழகத்தில் நல்ல வலுவான குடும்ப அடிப்படை கொண்டவன். ஆனால் அப்படி எதுவும் செய்ய முடியாத...தமிழகத்தில் யாரையும் தெரியாத....கர்நாடகத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழனின் கேள்விதான் இது. இவர்கள் சொந்தக்காரர்கள் எல்லாரும் பெங்களூர், மைசூர், குடகு சுற்றுவட்டாரங்களுக்குள்ளேயே இருப்பார்கள். தமிழ் உச்சரிப்பே காட்டிக் கொடுத்து விடும். வாங்கியிருக்கும் சொத்து சுகமெல்லாம் கர்நாடகாவிற்குள்ளேயே இருக்கும். இப்படிப் பட்ட கர்நாடகத் தமிழனின் கேள்வி இங்கே.

தமிழ்ப் படத்துல நடிச்ச சரோஜாதேவி கர்நாடகாவுல பந்துக்குப் போகக் கூடாதுன்னு சொல்றீங்க. சரி. அந்தம்மாவும் போக மறுத்திருச்சு. அதே மாதிரி தமிழ்ப் படத்துல நடிக்கிற கர்நாடகாவுல இருந்து வந்த நடிகர்கள் தமிழகத்திற்கு ஆதரவா இருக்கனும்னு சொல்றீங்க. சரி. நாங்க யாருக்கு ஆதரவா இருக்கனும்? பொறந்து வளர்ந்து பொழைச்சது எல்லாம் இங்கதான். சோறு போட்ட ஊருக்கு நன்றியோட நாங்க இருக்கனுமா வேண்டாமா? இல்ல இந்த விதி சினிமாக்கரங்களுக்கு மட்டுந்தான் பொருந்துமா? இல்ல நாங்க பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி அடி ஒத வாங்கி அகதியா வரணுமா? அப்படி வந்தா எங்களுக்கு என்ன செய்வீங்க? ஏற்கனவே இலங்கைத் தமிழர்கள் வேற அகதியா வர்ராங்க. வந்திருக்காங்க. அவங்களுக்கு நீங்க ஆதரவு எப்படிக் கொடுக்குறீங்களோ அதே மாதிரிதான் எங்களுக்குக் குடுப்பீங்களா? பின்னாடி எங்கள்ள யாரரவது தப்பு செஞ்சா, கர்நாடகத் தமிழன்னாலே தப்பு செய்றவன், தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கிறவன்னு சொல்வீங்களா? இல்ல ஒங்களுக்காக அகதியா வந்ததுக்காக எங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் குடுத்து வேலை வாய்ப்புகள்ல உதவுவீங்களா? சொல்லுங்கங்க.

புரியலைன்னா இங்க போய்ப் பாருங்க

Tuesday, February 20, 2007

கண்டுபிடிச்சுக் குடுங்களேன்

கொஞ்ச நாளுக்கு முன்னாடி திருக்கரங்குடியைப் பத்தி ஏதோ ஒரு பதிவு வந்தது. சரியாக் கவனிக்கலை. ஆனா எங்க அலுவலகத்துல உள்ள நண்பர்கிட்ட அவங்க ஊரப் பத்திய பதிவு ஒன்னு இருக்குன்னு சொல்லீட்டேன். அவரு அந்த ஊர விட்டு வந்து ரொம்ப காலம் ஆச்சு. அப்பா காலத்திலயே பெங்களூருக்கு வந்துட்டாரு. ஆனா அவரு வீட்டுல போய் அவரோட பாட்டிகிட்ட பதிவைப் பத்திச் சொல்லீட்டாரு. அவங்க அதக் கொண்டாந்து படிச்சுக் காட்டணும்னு சொல்லீட்டாங்களாம். யாராவது அந்தப் பதிவைக் கண்டுபிடிச்சுக் குடுப்பீங்களா?

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, February 19, 2007

5ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

"ஹலோ தேன் தூங்கீட்டியா?"

"ஹே சந்தீ....இல்லடீ. அதுக்குள்ளயா? புத்தக வெளியீடு இருக்குல்ல. அதுக்குத்தான் மகளத் தூங்க வெச்சுட்டு நானும் அவரும் வேலை பாக்குறோம்."

"மகளத் தூங்க வெச்சுட்டு...நீயும் அவரும் வேல பாக்குறீங்களா! பெரிய ஆளுதான் நீ. கேட்டா புத்தக வெளியீடுன்னு சொல்வ." (குறும்புடன் சொன்னாள் சந்தியா)

(பொய்க் கோபத்துடன்) "நீ அடி வாங்கப் போற. ஒன்ன மாதிரியா நான்? அஞ்சுமாடி மகன், புதுமுக நடிகன், ஹாஸ்பிடல் ஓனர், இண்டஸ்டிரியலிஸ்ட்.....அத்தோட புதுப்புது பசங்க. வெளுத்து வாங்குற. எனக்கிருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு." (பொய்யாக அலுத்துக் கொண்டாள்)

"ஏய்! சினிமாக் கவிஞர்னு நிரூபிக்கிற பாரு. வரிசையா அடுக்குறா. ஒங்க சினிமாவுல இல்லாததா. அந்தப் புதுமுக நடிகர் திரிந்தும் திரியாமலும் ஜெய்தீப். நீ கூட இண்ட்ரோ குடுத்தியே. நியாபகம் இருக்கா? அவன பைக்ஸ் அண்டு பேரல்ஸ்ல பாத்தேன். சரி. ஏற்கனவே சாப்ட பிரியாணிதானன்னு கிட்டப் போய்ப் பேசலாம்னு பாத்தேன். ஆனா அவன் அதே படத்துல நடிச்ச இன்னொரு ஹீரோ பின்னாடி ஓடுறான். என்னத்தச் சொல்றது! மொதவாட்டி அவனோட ஜி.ஆர்.டி கிராண்டு போறப்பவே எனக்கு ஒரு டவுட்தான். ம்ம்ம்...இப்பிடி இருக்கு சினிமா. இதுல நீ என்னயச் சொல்ல வந்துட்டியா? வரவர ஆம்பிளைங்களே சரியில்லை. சரி. சரி. நான் சொல்ல வந்ததையே விட்டுட்டு வேறெதையோ பேசிக்கிட்டிருக்கேன். ரொம்ப முக்கியமான விஷயம். சரவணன் மெயில் அனுப்பீருக்கான். இந்தியாவுக்கு வர்ரானாம்." (கொஞ்சம் இறுகியது சந்தியாவின் குரல்)

(திடீர்க் குரலில்) "யாரு? சரவணனா? ஏண்டி...புருஷன் வர்ரான்னு சந்தோஷமாச் சொல்லாம இப்பிடிச் சோகமாச் சொல்றியே! இது ஒனக்கே நல்லாயிருக்கா?"

"ஏய்! என்ன ஒளர்ர? சரவணன் எப்படி எனக்குப் புருஷனானான்? விட்டா எனக்குத் தாலியே கட்டி அவனோட நெதர்லாண்டுக்கு அனுப்பீருவ போல?" (சுருக்கென்று கேட்டாள் சந்தியா. சரவணன் அவளது கணவன் என்பதை அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.)

"நானா ஒளர்ரேன்? ஒன்னோட மகனுக்கு அவந்தான் அப்பான்னா....அவனுக்கு நீ யாரு? ஒனக்கு அவன் யாரு? அதச் சொல்லும்மா."

"சரி. இந்த கே.பாலச்சந்தர் மாதிரி கேக்குறத நீ கொஞ்சம் நிறுத்து. ஊருக்கெல்லாம் artifical inseminationன்னு சொல்லீருக்கேன். ஒன்னோட டமாரத்த இந்த விஷயத்துல அடிச்சிறாத." (கொஞ்சம் அமைதியாகக் கெஞ்சும் குரலில் சொன்னாள்.)

(தேன்மொழியும் அமைதியானாள்.) "சீச்சீ. அப்படிச் செய்வேனாடி? ஏதோ கிண்டலுக்குச் சொன்னா...சீரியஸ் ஆயிட்டியே. ம்ம்ம்...அந்தக் கொழந்தைக்கு அவந்தான் அப்பான்னு யார் கிட்டயும்......ஏன்? சரவணன் கிட்டயும் சொல்ல மாட்டேன். சரியா?"

"ஏ தேன்! ஒன்னய எனக்குத் தெரியாதா? திடீர்னு அப்படிச் சொல்லீட்டேன். சரி. நம்ம கதைக்கு வருவோம். சரவணன் சென்னைக்கு வர்ரானேடி. என்ன பண்றது? பாக்குறதா வேண்டாமா? சுந்தர அவன் கண்ணுல காட்டாம எப்படி இருக்குறது? வீட்டுக்கெல்லாம் வருவானேடி!"

"சென்னைக்கு வந்தான்னா...போய்ப் பாரு. வழக்கம் போல ...அதது..இததுன்னு...பிரியாணி போடுங்க. ஆனா வீட்டுக்கெல்லாம் அவன் வருவானே. சுந்தரப் பாத்துட்டான்னா? கண்டிப்பா யாருன்னு கேப்பான். அவனுக்குச் சொல்லாம இருக்க முடியாது. அதே நேரத்துல நீ artificial insemination செஞ்சிருக்குறன்னு நெனைக்கிற அப்பாம்மாவுக்கு அது சரவணனுக்கேத் தெரியாதுங்குறதுங்குறது அதிர்ச்சியாக்கூட இருக்கலாம். நம்ம காலேஜ்ல சேந்ததுல இருந்து ஒங்க வீட்டுக்கு வர்ரவனாச்சே அவன். பேசாம சுந்தர் விஷயத்தை அவனுக்குச் சொல்லீட்டா? அவன் இதக் கூடப் புரிஞ்சிக்க மாட்டானா?"

(சந்தியாவுக்கு அதில்தான் தயக்கம்) "அவன் கிட்டச் சொல்றதா? அவனும் சுதந்திரப் பறவை. அவனுடைய சுதந்திரத்துல எதுவும் குறுக்க வர்ரத ஏத்துக்க அவனால முடியாது. என் மேல அவனுக்குப் பாசமெல்லாம் உண்டு. நல்ல நண்பனா எனக்கு நெறைய செஞ்சிருக்கான். என்ன இருந்தாலும் அவந்தான நம்பர் 1. அதுக்கப்புறந்தான அவன்களும் இவன்களும். இன்னைக்கும் எந்த அழகான பொண்ணுன்னாலும்......நான் இருந்தா அவங்களைக் கண்டுக்கவே மாட்டான். ஆனா....அந்த உரிமை நட்பைத் தாண்டிப் போகலையேடி. அவன எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மறுக்கலை. அதுனாலதான் எனக்குக் கொழந்தை வேணும்னு ஆச வந்ததும் அவனோட கொழந்தையைச் சுமந்தேன். அதுவும் போன வாட்டி அவன் இந்தியா வந்திருந்தப்போ நான் protection பயன்படுத்துறேன்னு பொய் சொல்லி. ஆனா அத வெளியில சொல்ல முடியுமா? அதுக்குத்தான் artificial inseminationன்னு சொன்னேன்."

"ஏய்...கொஞ்சம் நிறுத்து. எனக்கு இப்பத்தான் இரு டவுட். இத்தன நாள் இது எனக்குத் தோணவேயில்லை. protection நீ பயன்படுத்துறேன்னு சொன்னியே. அப்போ அவன் condom போட்டுக்க மாட்டானா? இது ரிஸ்க்காத் தெரியலையா ஒனக்கு?"

(பெருமூச்சு விட்டாள் சந்தியா) "ம்ம்ம்....அவன் எவ கூடப் போனாலும் condom இல்லாமப் போகவே மாட்டான். ஆனா என் கிட்ட மட்டும் இல்லை. நாங்க பழகத் தொடங்குனப்போ இருந்தே அப்படித்தான். அதே மாதிரி.....I ensure everybody uses condom but not him. ஆனாலும் இப்ப பெண்களுக்கு மட்டுமான கருத்தடைச் சாதனங்கள் எக்கச்சக்கமா இருக்கேடி. அதுனால எங்களுக்குக் குழந்தை இல்லாமப் பாத்துக்கிட்டோம். ஆனா உடலுறவுன்னு வர்ரப்போ...அது அப்படித்தான்." ( சந்தியா சொன்னதைக் கேட்ட தேன் பேச்சில்லாமல் இருந்தாள்)

"என்னடி அமைதியாயிட்ட? நாங்க நண்பர்களா? காதலர்களா? கணவன் மனைவியான்னு யோசிக்கிறையா? ரொம்ப யோசிக்காத. ஏன்னா...எங்களுக்கே தெரியாது. திரும்பவும் சொல்றேன். எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். அவன் நெதர்லாந்து போனது கூட எனக்குப் பிடிக்கலை. அவனப் போகாதேன்னு சொல்லீருந்தா அவனுக்கும் அது பிடிச்சிருந்திருக்காது. அவனைப் பிரிய விரும்பாம அவன் இங்கயே இருந்தான்ன விரும்புனதும் உண்டு. ஆனா அதுக்காக என்னோட காதனாவோ கணவனாவோ என்னை அவன் dominate பண்ண விட முடியுமா? அவன் மேல இருக்குற உரிமை என்னை அவன் அடிமைப் படுத்தக் கூடாது. I miss him. But he cant mentally dominate me. I hate him because I am posessive. But I cant let him be my husband to loose even my surname."

(தேன்மொழிக்குச் சிரிப்பு வந்தது.) "நல்லா ஒளர்ர நீ. எனக்கென்னவோ நீ அவனக் காதலிக்கிறன்னுதான் நெனைக்கிறேன். ஒருவேளை அவன் தாலியோடயோ மோதிரத்தோடயோ வந்து கல்யாணம் செஞ்சுக்கோன்னு கேட்டா ஒத்துக்கிருவன்னுதான் நெனைக்கிறேன்."

(சந்தியாவிற்குக் கோவம் வந்தது.) "ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! காதலா? எனக்கா? I am not so weak. ஒங்கிட்ட பேசுனா கொஞ்சம் நிம்மதியா இருக்குமேன்னு கூப்டா...இப்பிடிக் கொழப்புறயேடி. சரி. வேறெதாவது பேசலாம். என்னவோ புத்தக வெளியீட்டு விழான்னு சொன்னியே...அதப் பத்திச் சொல்லு."

(சிரித்து விட்டாள் தேன்.) "ஹாஹாஹா..நல்லா பேச்ச மாத்துற நீ. சரி. அப்படியே செய்வோம். ஏற்கனவே புதுப் புத்தகத்தைப் பத்திச் சொல்லீருக்கேன். ஒனக்கு அதுவா நெனைவுல இருக்கும்! கள்ளியிலும் பால்னு கவிதைத் தொகுப்புக்குப் பேரு. நீதான் இதுக்கு inspiration. ஒன்னய வெச்சுத்தான் இத்தன கவிதை எழுதீருக்கேன். இதுவரைக்கும் படிச்சவங்களும் நல்லாயிருக்குன்னு சொல்லீருக்காங்க. டைரக்டர் சேரன் கூட அதுல ரெண்டு கவிதைய அவரோட அடுத்த படத்துக்குன்னு சொல்லி வெச்சிருக்காரு. இன்னும் ரெண்டு வாரந்தான் இருக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு. ஒன்னையும் கூப்பிடுறேன். நீயும் வரனும்."

"என்னது? என்னைய வெச்சு..ஒரு கவிதைத் தொகுப்பே போட்டுட்டியா? நீ ஏதோ வெளையாட்டுக்குச் சொல்றன்னு நெனச்சேன். எங்கிட்ட என்னடி நல்ல விஷயம் இருக்குன்னு கவிதையெல்லாம் எழுதீருக்க?" (தன்னை வைத்துக் கவிதை எழுதியிருப்பது சந்தியாவின் ஆர்வத்தைக் கிளறி விட்டது."

"உன் கிட்ட இருக்குறது அடுத்தவங்களுக்கு நல்லதோ இல்லையோ..ஒனக்கு நல்லதுங்குறதுதாண்டி கவிதைத் தொகுப்போட கரு. இரு ஒரு கவிதை சொல்றேன் கேளு.

கள்ளிப்பால்
கள்ளிக்கு நஞ்சோ?
கிள்ளிப் பார்க்கும்
மனிதனுக்கே நஞ்சு
உதவாது என்றால்
எதையும் தீதென்பான்
கைக்குத் தோதாதானால்
அதையும் சாதென்பான்...."

"நிறுத்துடி (சொல்லிக் கொண்டிருந்த கவிதையை நிறுத்தச் சொன்னாள் சந்தியா)...எனக்கு ஒன்னும் புரியல. ஏதோ தமிழ் வாத்தியார் செய்யுள் நடத்துற மாதிரி இருக்கு. ஆள விடும்மா. இதுக்கு என்னதான் பொருள்?"

(டெலிபோனில் தேனின் புன்னகை சந்தியாவைச் சேரவில்லை.) "அதாவது கள்ளிக்குள்ள இருக்குற கள்ளிப்பால் நஞ்சுன்னா...அது ஏன் கள்ளியைக் கொல்லலை? அதக் கீறிப் பாக்குறவனுக்குத்தான நஞ்சாகுது. அப்ப கள்ளிகிட்ட தப்பா? கீறுனவன் கிட்ட தப்பா? இதுதாண்டி நான் கேக்குறது. புரிஞ்சதா?"

(உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை சந்தியாவிற்கு) "புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. என்னைய ஆள விடும்மா. சரி. ரொம்ப நேரமாச்சு. நீ போய் வேலையப் பாரு. நாளைக்குப் பேசுறேன்."

இருவரும் பேச்சை முடித்துக் கொண்டனர். சுந்தர் விஷயத்தைச் சரவணனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்றே யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள் சந்தியா. கனவில் சரவணனோடு......சரி. சரி. புரியுது. இங்க நிறுத்திக்கிறேன்.

தொடரும்....

Monday, February 12, 2007

4ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

குளித்து முடித்துக் கிளம்பத் தயாராக இருந்தார் சுந்தரராஜன். கண்ணன் ஏற்கனவே அலுவலகம் கிளம்பிச் சென்றிருந்தான். காலை டிபனாகத் தோசையைச் சுட்டுக் கொண்டிருந்தாள் வாணி.

"அம்மா, வாணி. நான் கெளம்புறேம்மா. நேரமாச்சு. ஒங்க அத்த காத்துக்கிட்டிருப்பா."

"அப்பா. ஒரு நிமிஷம் இருங்க. தோச சுட்டாச்சு. சாப்ட்டுப் போங்கப்பா." வாணி சுந்தரராஜனை அப்பா என்றுதான் அழைப்பது வழக்கம். சிவகாமியும் அவளுக்கு அம்மாதான்.

சரியென்று மேசையில் உட்கார்ந்தார் சுந்தரராஜன். உள்ளேயிருந்து வந்தார் ராஜம்மாள். "என்ன சம்மந்தி. கெளம்பியாச்சு போல இருக்கு. கார நீங்களே ஓட்டீருவீங்க. ஒங்களுக்கு டிரைவரும் வேண்டாம்." உள்ளே வாணியைப் பார்த்து, "வாணி, மாமாவுக்குச் சாப்புட டிபன் குடு. வீட்டுக்குக் கெளம்பக் காத்திருக்காரு பாரு." வாணிக்கு அவள் தாயின் பேச்சு எரிச்சலைத் தந்தது. சற்று இங்கிதம் இல்லாமல் பேசுகிறவர் ராஜம்மாள். கேட்டால் வெளிப்படையாக எதையும் சொல்வதாகச் சொல்வார்.

தட்டில் இரண்டு தோசைகளை எடுத்து வந்து கொடுத்தாள் வாணி. "என்னம்மா இன்னைக்கும் தோசையா? நாலஞ்சு நாளா தோசையவே சுடுற. அரவிந்த் இட்டிலியப் பெசஞ்சுட்டான்னு....இட்டிலியே சுடாம இருக்க முடியுமா?" சுந்தரராஜனை நோக்கி, "நீங்க சொல்லுங்க சம்மந்தி, வாய்க்கு மெத்துன்னு இட்லி இல்லாம என்னதான் டிபனோ!" ராஜம்மாளின் இட்டிலிப் பிரியத்தை தெரிந்திருந்த சுந்தரராஜன் புன்னகைத்தார்.

"சரி. சம்மந்தி. நீங்க சாப்புடுங்க. குறுக்கால நாம் பேசிக்கிட்டிருக்கேன். வீட்டுல எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க. சந்தியாவும் கொழந்தையும் நல்லாயிருக்காங்கள்ள. கொழந்தைக்கு என்ன பேரு?"

"சுந்தர்னு பேரு வெச்சிருக்கோம். ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. நீங்களும் வாணி வரும்போது பெசண்ட் நகருக்கு வாங்களேன்." ஒரு மரியாதைக்குக் கூப்பிட்டார்.

"நானா? வேண்டாஞ் சம்பந்தி. எங்க மாப்பிள்ளையே போறதில்லை. அப்புறம் நானெப்படிப் போறது. மாப்பிளைதான எங்களுக்குப் பெருசு. வாணி என்னவோ வரப்போக இருக்கா. அவ மாப்பிள்ளைக்குச் சமாதானம் சொல்லிக்கிருவா. நான் எங்க வீட்டுக்காரங்களுக்குச் சொல்லனுமே."

அழைத்ததற்கு நொந்து கொண்டார் சுந்தரராஜன். வாணி உதவிக்கு வந்தாள். "அம்மா. நீ சும்மாயிரு." சுந்தர்ராஜனிடம் ஒரு பையைக் குடுத்தாள். "அப்பா, இதுல நெல்லிக்கா இருக்கு. நேத்து நடேசன் பார்க் கிட்ட வித்துக்கிட்டிருந்தான். நல்லாயிருந்துச்சுன்னு வாங்கினேன். அம்மா கிட்ட குடுத்து ஊறுகா போடச் சொல்லுங்க. நான் வந்து கொஞ்சம் எடுத்துக்கிறேன்."

பையை வாங்கி வைத்துக் கொண்டு டிபனையும் முடித்துக் கொண்டு தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சுந்தரராஜன். அவர் புறப்பட்டும் போனதும் ராஜம்மாளிடம் வந்து சீறினாள். "ஏம்மா! வாயை வெச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டியா? வீட்டுக்குக் கூப்டா, வர்ரேன்னு சொல்லீட்டுச் சும்மாயிருக்க வேண்டியதுதான. அத விட்டுட்டு...தேவையில்லாம பேசுனா எப்படி?"

"ஐயோ! இதென்ன கூத்து. ஒரு பேச்சு பேசுனதுக்கு இந்தப் பாடா! நான் என்ன இல்லாததையா சொல்லீட்டேன். சந்தியா செஞ்சது மாதிரி நம்ம குடும்பத்துல யாராவது செஞ்சிருந்தா இந்நேரம் வெட்டிப் போட்டிருப்பாங்க. ஏன்...நீயே இருந்தாலும் அதுதான் நடந்திருக்கும்." ஆவேசத்தோடு சொன்னார் ராஜம்மாள்.

"அப்படியாம்மா...சரி...நானாயிருந்தா யாரு வெட்டீருப்பா? அப்பாதான் நான் காலேஜ் படிக்கிறப்பவே தவறீட்டாரே." நக்கலாகக் கேட்டாள் சந்தியா.

"ஏண்டி...ஒங்கண்ணன் இல்லையா? கிருஷ்ணன் என்ன சும்மாவா இருப்பான்?" உளறிக் கொட்டினார் ராஜம்மாள்.

"ஓ அண்ணனா! அண்ணியைக் கவுன்சிலராக்கீட்டு, அத வெச்சே வியாபாரம் செய்ற அண்ணந்தான. ஊருல அண்ணனப் பத்தி என்ன பேசுறாங்கன்னு ஒனக்குத் தெரியுமா? கையைல காச வெச்சாப் போதுமாம். வேலையக் கச்சிதமா முடிஞ்சிருமாம். அந்த அண்ணன் என்னைய வெட்டுவாரா?" சொல்லி விட்டுச் சிரித்தாள்.

மகனைச் சொன்னதும் ராஜம்மாளுக்குக் கோவம் வந்தது. "நல்லாயிருக்குடி. ஊருல ஒலகத்துல இல்லாததயா கிருஷ்ணன் செஞ்சிட்டான். இன்னைக்கு லஞ்சம் வாங்காதவங்க யாரு? என்னவோ இவன் ஒருத்தன் மட்டும் குத்தம் செஞ்சாப்புல!"

"ஆகா. அப்ப ஊருல இருக்குற பொண்ணுங்கள்ளாம் இதே மாதிரி கொழந்த பெத்துக்கிட்டா சந்தியா செஞ்சதும் சரியாயிரும் இல்ல! அண்ணன் செய்ற தப்புகள ஏத்துக்குற ஒனக்கு ஒரு பொண்ணு கொழந்த பெத்துக்கிறத ஏத்துக்க முடியலை. ம்ம்ம். லஞ்சம் வாங்குறத ஏத்துக்க முடியுறதுக் காரணம்...நாமளும் அந்தத் தப்பச் செய்றதுதான். நம்ம செய்யாத வரைக்கும் தப்புன்னு சொல்வோம். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரியாயிரும். நீ மட்டுமில்லம்மா...ரொம்பப் பேரு இப்பிடித்தான். ஒன்னைய மட்டும் சொல்லி என்ன புண்ணியம்." சொல்லி விட்டு சமையலைறைக்குள் புகுந்தாள் வாணி. அரவிந்தைக் கவனிக்கப் போனார் ராஜம்மாள்.

சுந்தரராஜன் பெசண்ட் நகருக்கு வரும் பொழுது சந்தியா அலுவலகத்திற்குக் கிளம்பிப் போயிருந்தாள். சிவகாமியுடனும் சுந்தருடனும் அன்றைய பொழுது நல்லபடி போனது. சம்பந்தியம்மாள் பேசியதை மனைவியிடம் சொன்னாள். சிவகாமிக்கு ராஜம்மாளையும் வாணியையும் தெரியுமாதலால் பெரிது படுத்தவில்லை.

அன்று அலுவலகத்தில் சந்தியாவிற்கு நிறைய வேலை. முதல்நாள் அலோக்கைப் பார்ப்பதற்காக விரைவில் கிளம்பி விட்டதால் வேலைகள் கொஞ்சம் மிச்சமிருந்தன. நடுவில் அழைத்த கதிருக்கும் தான் வேலையாக இருப்பதாகச் சொல்லி விட்டாள். கதிர் யாரென்று கேட்கின்றீர்களா? அலோக்கைப் போலத்தான். ஆனால் உள்ளூர்க்காரன். தி.நகரில் இருக்கும் ஒரு அஞ்சுமாடிக் கடைக்காரரின் மகன். சந்தியாவிற்கு நல்ல பழக்கம். இப்படி யாரெல்லாம் பழக்கமென்று இப்பொழுது பட்டியல் போட வேண்டாம். கதை குழம்பு என்றால் அவர்கள் கடுகு. அங்கங்கு தென்படுவார்கள்.

மாலை வீட்டிற்கு வந்தவள் தந்தையோடு கண்ணன் வாங்கப் போகும் கார் பற்றியும் வாணி, அரவிந்த் நலத்தையும் பற்றிப் பேசினாள். பிறகு இரவு உணவை முடித்து விட்டு சுந்தரராஜனும் சிவகாமியும் தூங்கப் போனார்கள். சுந்தரோடு தன்னறைக்குள் புகுந்த சந்தியா, மகனைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு தன்னுடைய மடிக்கணினியை இயக்கினாள். மின்னஞ்சல்களைப் பார்க்கவும் நண்பர்களோடு சாட்டிங் செய்யவும்தான்.

sandhyasundararajan@gmail.com என்பதுதான் அவளது மின்னஞ்சல் முகவரி. உண்மை முகவரி என்று ஒன்றிருந்தால் போலி என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும். ஆனால் இங்கு இரண்டு போலிகள் angelexotica@gmail.com மற்றும் drippingambrosia@yahoo.com என்பவைதான் அந்தப் போலிகள். இதன் மூலம்தான் சாட்டிங் செய்து நட்பு(!) வட்டாரத்தை உருவாக்கி வைத்திருந்தாள் சந்தியா. ஆனால் பெரும்பாலும் ONS. அதென்ன ONS? One Night Stand.

முதலில் சந்தியா தன்னுடைய உண்மை மின்னஞ்சலுக்குள் நுழைந்தாள். வந்திருந்த மின்னஞ்சல்களில் ஒன்று.....சரவணன். சரவணன். சரவணன். ஆமாம். அவனுடைய மின்னஞ்சல்தான். அதைப் பார்த்ததும் படக்கென்று ஒரு மகிழ்ச்சிப் பூ மொட்டு விட்டது. ஆனால் அந்தப் பூ இரும்புப் பூ போல கனமாக இருந்தது. ஒருவிதத் தயக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் அந்த மின்னஞ்சலைத் திறந்தாள் சந்தியா. ஆங்கிலத்தில் இருந்த மின்னஞ்சலை உங்களுக்காக நான் தமிழில் மொழி பெயர்த்துத் தருகிறேன். ஏனென்றால் யுனிகோடு வழியாக மின்னஞ்சல் அனுப்ப சரவணனோ சந்தியாவோ இணையத்தில் வலைப்பூக்கள் மூலமும் மன்றங்கள் மூலமும் தமிழ் வளர்க்கவில்லை. ஆங்கிலத்தில் படிக்க விரும்புகிறர்களுக்காக ஆங்கிலத்திலும் கொடுத்திருக்கிறேன்.

"தேனே சந்தியா,

எப்படி இருக்க? நான் நல்லா இருக்கேன். அங்க என்ன நடக்குது? இங்க நெதர்லாண்டுல எல்லாம் நல்லாப் போகுது. அடுத்த வாரம் செவ்வாய்க் கெழமை இந்தியா வர்ரேன். சென்னைக்கு வர்ரேன். இந்த முறை ரெண்டு மாச லீவு. ஒன்னோட நம்பர் மாத்தீருந்தீன்னா புது நம்பர் அனுப்பு. வந்து பேசிக்கலாம். பேச்சு மட்டுமில்ல........ ;-)

இனிய முத்தங்கள்,
சரவணன்"

sandhya sweety,

how r u? i'm fine. whatz up there? things r fine here at NL. will be there in india by tuesday next week. itz two months this time. if u hv changed ur no, mail me. let us talk. not just talk... ;-)

sweet kisses,
Saravanan

சின்ன மெயில்தான். ஆனால் சந்தியாவை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. சரவணன் சரவணன் என்று அந்தப் பெயரை மட்டும் மனசுக்குள் மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தாள். இன்றா? நேற்றா? கல்லூரிக் காலத்திலிருந்தே பழக்கம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் சந்தியாவின் பெண்மையைக் கண்டுபிடித்து அவள் இனிமேல் கன்னியல்ல என்று சொன்னவனே சரவணந்தான். சந்தியாவின் நெருங்கிய...மிகச் சிறந்த...அக்கறை கொண்ட...அன்பு கொண்ட நண்பன்.

நெதர்லாண்டில் பணி புரிகின்றான். இந்தியாவை விட்டுச் சென்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன்பு அவனும் சந்தியாவும் போகாத பார்ட்டி இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை. கூடாத கூட்டமில்லை. சரவணனுக்குச் சொந்த ஊர் சென்னைதான். வாழ்க்கையை மிகச் சுதந்திரமாக அனுபவிக்க விரும்பும் அவன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சந்தியா பெண். சரவணன் ஆண். அவ்வளவுதான் வேறுபாடு. புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

சரவணனின் மெயிலைப் படித்து விட்டுத் திரும்பிக் கட்டிலைப் பார்த்தாள். சுந்தரின் முகம். அது சரவணனின் முகம். அதுதான் அவளை அடிக்கடித் துன்புறுத்தும் முகம். படபடவென்று அலைபேசியை எடுத்து அழைத்தாள். "ஹலோ, தேன். தூங்கீட்டியா?"

தொடரும்....

Tuesday, February 06, 2007

3ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

கேள்வி: ஜயண்ட் வீல் ராட்டிணம் எல்லாருக்கும் தெரியும். அதில் ஏறிச் சுற்றுவது நன்றாக இருக்கும். அதே ஜயண்ட் வீல் கரகரவென வேகமாகச் சுற்றினால்?

விடை:
1. மண்டை கிறுகிறுக்கும்.
2. ஒரு மாதிரி உமட்டி வாந்தி வருவது போல இருக்கும். அதனால் வாயைத் திறக்கவும் அச்சமாக இருக்கும்.
3. சத்தமில்லாமல் உடம்பு இறுகிப் போய் அசையாமல் இருக்கும்.

மேலே சொன்ன விடையின் நிலையில்தான் எல்லாரும் இருந்தார்கள். படிப்பு, வேலை, வீடு, திருமணம் வேண்டாம் என்று அத்தனை முடிவுகளையும் சந்தியாதான் எடுத்திருந்தாள்.ஆனால் இப்படி வயிற்றில் குழந்தையோடு வந்து பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்றால்?

முதலில் சுதாரித்தது கண்ணன். "என்ன செஞ்சிருக்க சந்தியா! நம்ம மானமே போச்சு. இனிமே நம்ம சொந்தக்காரங்க யார் மொகத்துலயும் முழிக்க முடியாது. வாணி வீட்டுல என்னவெல்லாம் பேசப் போறாங்களோ! இனிமே அவங்க வீட்டுப்பக்கமும் போக முடியாது." திடீர்ப் படபடப்பு. என்ன செய்வதென்றே புரியாமை.

சுந்தரராஜனும் சிவகாமியும் வேதனையோடு அமைதியான சந்தியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"கண்ணா! எதுக்கு இப்பிடிக் கத்துற? நான் என்னோட முடிவைச் சொல்லீருக்கேன். அவ்வளவுதான!"

"சந்தியா, நான் கத்துறேன்னு மட்டும் சொல்ற. ஆனா ஏன்னு புரிஞ்சுக்கலையே! ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு கொழந்தையோட இருந்தா...இல்ல...கொழந்த பெத்துக்கிட்டா எல்லாரும் எப்படிப் பேசுவாங்க! அது ஏன் ஒனக்குத் தெரிய மாட்டேங்குது? உன்ன யாரோ ஏமாத்தீட்டாங்கன்னும் பேசலாம்.....யார் கிட்டயோ நீ தொடர்பு வெச்சிருக்கன்னும் பேசலாம்.....oh my god....sandhya please understand."

"stop it kanna. நீ இப்படி ஒளர்ரத என்னால கேக்க முடியலை. ஊருல இருக்குறவங்கதான் மனுசங்களா? என்னோட விருப்பங்கள் பெருசில்லையா?"

"விருப்பமெல்லாம் சரி. ஆனா ஒலகத்துக்கு முன்னாடி ஒன்னையும் குழந்தையையும் எப்படி அடையாளம் காட்டப் போற? கொழந்தைக்கு அப்பா யாருன்னு சொல்ல ஒன்னால முடியுமா? தகப்பன் பேர் தெரியாத கொழந்தைன்னு இருந்தா அம்மாவுக்கு என்ன பேர் கெடைக்கும்னு தெரியுமா? ஐயோ..பேச வெக்கிறயே சந்தியா!"

சந்தியாவுக்குக் கொஞ்சம் சுருக்கென்று தைத்தது. "ஆமாண்டா...பேசுறதெல்லாம் பேசீட்டு நான் பேச வெக்கிறேன்னு சொல்லு! என்ன சொன்ன? தகப்பன் பேர் தெரியாத கொழந்தை இருந்தா அம்மாவுக்கு என்ன பேரா? விபச்சாரி. அதான? அதான சொல்ல வர்ர? சொல்லு. உலகத்துல எந்தத் தப்பு செய்றவனும் இருக்கலாம். ஆனா இது மட்டுந்தான பெருந்தப்பு. ஊழல் செஞ்சவனும் கொள்ளையடிச்சவனும் ஏமாத்துனவனும் பெரிய ஆளுங்க. ஆனா கல்யாணம் ஆகாம ஒருத்தி கொழந்த பெத்தா...விபச்சாரி. பொம்பளைங்களச் சொல்ல மட்டும் ஒன்னாக் கெளம்பீருவீங்களே! திருந்துங்கடா! எங்க திருந்தப் போற! நீயும் ஒரு ஆம்பிளைதான!"

சிவகாமி குறுக்கே புகுந்தார். கண்ணனை மேற்கொண்டு எதுவும் பேச விடாமல் நிறுத்தினார். சுந்தரராஜனிடம் "என்னங்க, நம்ம பிள்ளைங்க சண்ட போடுறத என்னால பாக்க முடியல. நிலமை இவ்வளவுக்கு வந்தாச்சு. இன்னமும் சும்மாயிந்தா சரியில்ல. ஏதாவது முடிவெடுக்கிறதுதான் நல்லது."

சிவகாமியின் கூற்றைத் தலையை அசைத்து ஆமோதித்தார் சுந்தரராஜன். சந்தியாவைப் பார்த்து, "நீ இன்னமும் கொழந்த பெத்துக்கிறதுங்குற முடிவுலதான் இருக்கியா?" என்று கேட்டார்.

"ஆமாம்ப்பா. அதான் செய்யப் போறேன். என்னோட கொழந்தைய நான் பெத்துக்கத்தான் போறேன். இந்த ஊர் சரியில்லைன்னா....வேற ஊரோ நாடோ போய்க்கிறேன். நீங்களும் அம்மாவும் எங்கூடயே வந்துருங்க. எனக்கு யார் துணை இல்லைன்னாலும் ஒங்க துணை வேணும். இதுதான் என்னோட முடிவு."

"ம்ம்ம்...சரி. அப்ப நம்ம ஒரு முடிவுக்கு வந்திரலாம். கண்ணா நீ கூடிய சீக்கிரம் நல்ல நாள் பாத்து நம்ம டி.நகர் வீட்டுக்குப் போயிரு. அங்க வாடகைக்கு இருக்குறவங்கள காலி செய்யச் சொல்லீரலாம். வாணியும் அரவிந்தும் அடுத்த மாசம் நேரா அங்கயே வரட்டும். ஏன்னா அவங்க வீட்டுல இருந்து கொஞ்ச நாளைக்கு யாராவது வரப் போக இருப்பாங்க. சந்தியா பேறு காலத்துக்குக் காத்திருக்குறப்போ வர்ரவங்க போறவங்க ஏதாவது பேசுவாங்க. அது அவளுக்கும் நல்லதில்லை. அவ கொழந்தைக்கும் நல்லதில்ல. நானும் அம்மாவும் சந்தியா கூட இங்க இருக்கோம். அப்பப்ப டி.நகருக்கும் வருவோம். சரிதானே?" என்று மகனிடம் முதலில் முடிவைச் சொன்னார். கண்ணனும் அதை ஏற்றுக் கொண்டான்.

சந்தியாவிடம் அடுத்தது. "சந்தியா, நீ செய்றது சரியா தப்பான்னு விவாதம் செஞ்சா அதுக்கு முடிவே இருக்காது. சரீன்னு சொல்றவங்களும் தப்புன்னு சொல்றவங்களும் ஆயிரக்கணக்குல காரணங்கள் சொல்வாங்க. உன்னோட இந்த முடிவு அடுத்தவங்களுக்குத் துன்பம் கொடுக்காத முடிவுதான். ஒத்துக்கிறேன். ஆனாலும் இதால உனக்கும் உன்னோட கொழந்தைக்கும் ஏற்படப் போற துன்பங்களை எடுத்துச் சொன்னோம். அதை எப்படி நீ சமாளிக்கப் போறங்குறது ஒன்னோட பொறுப்பு. அதுக்கு எங்க உதவி எதுவும் வேணும்னா நிச்சயம் செய்வோம். கண்டிப்பாப் பல விதங்கள்ள பேச்சுகள் வரும். சமாளிப்போம். எல்லாம் நல்லபடியா நடந்தாச் சரி."


சுந்தரராஜனின் முடிவு உடனே செயலுக்கு வந்தது. அதற்குப் பிறகு நடந்தவை கீழே.


வல்லினம்

க. வாணி சென்னைக்கு வந்ததும் கண்ணன் அவளிடம் உண்மையைச் சொல்லி விட்டான். அவளும் நிலமையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தாள்.

ச. அன்று அந்தப் பேச்சுப் பேசிய கண்ணன் மட்டும் சந்தியாவுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தான். அதுகூட ஆத்திரத்தில் அல்ல. அப்படிப் பேசி விட்டோமே என்ற வருத்தத்தில்.

ட. சந்தியாவின் அலுவலகத்தில் வெளிப்படையாக artificial insemination உதவியால் குழந்தை பெற்றுக் கொள்வதாகக் கூறி விட்டாள்.

த. அவ்வப்போது சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்த ராஜம்மாள் வகையறாக்களும் சந்தியாவை ஒரு விதமாகப் பேசினார்கள்.

ப. சந்தியாவின் சொந்தக்காரர்களுக்கும் குழந்தை பற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது. முனுமுனுப்புகள் எழுந்தன.

ற. படுக்கையில் கணவன் என்ற பெயரில் சூர்யாவோடும் விஜய்யோடும் கூடிக் கொண்டாடும் உத்தமப் பத்தினிகள் சிலர் சந்தியாவின் முதுகுக்குப் பின்னால் அவளது கற்பைப் பற்றிப் பல் கூசக்கூசப் பேசினர்.


இடையினம்

ய. டி.நகர் வீட்டிற்குக் கண்ணன் குடி போனான்.

ர. குழந்தை அரவிந்த் தாத்தா வீட்டில் வளரட்டும் என்பதற்காக டி.நகருக்கு வந்து விட்டதாக வாணி குடும்பத்தாருக்குச் செய்தி போனது.

ல. வாணிக்குத் துணையாக ராஜம்மாள் வந்து தங்கியிருந்தார். கணவனைப் பறிகொடுத்திருந்த அவருக்குப் பேரனோடு பொழுது போக்குவது மிகவும் பிடித்திருந்தது.

வ. வாணியின் குடும்பத்தார் பெசண்ட் நகர் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தனர்.

ள. சுந்தரராஜனும் சிவகாமியும் அவ்வப்பொழுது டி.நகர் சென்று வருவார்கள். ஊர் பேச்சு அவர்களை வருத்தப்பட வைத்தாலும் பொறுத்துக் கொண்டார்கள்.

ழ. மருமகன் அரவிந்திற்குச் சந்தியா செய்ய வேண்டிய சீர்களைத் தவறாமல் செய்தாள். வாணியும் கண்ணனும் அவைகளை ஏற்றுக் கொண்டார்கள்.


மெல்லினம்

ங. சந்தியாவிற்குச் சுகப் பிரசவம் நடந்து சுந்தர் பிறந்தான்.

ஞ. மகளையும் பேரனையும் சுந்தரராஜனும் சிவகாமியும் நல்லபடி பார்த்துக் கொண்டார்கள்.

ன. வாணி ஏதாவது வாய்க்குச் சுவையாக செய்தால் அதை பெசண்ட் நகர் வரை சென்று சந்தியாவிற்குக் குடுத்தாள்.

ந. சுந்தருக்குத் தங்கச் சங்கிலியும் கைக்காப்பும் வெள்ளித் தண்டையும் வாங்கித் தந்தாள். சாப்பிடுவதற்கு வெள்ளிக் கிண்ணமும் கரண்டியும் சங்கும் கொடுத்தாள்.

ம. தனது மகன் பெயரை ச.சுந்தர் (S.Sundar) என்று பெயரைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்தாள். அம்மாவின் பெயரைத்தான் முதலெழுத்தாகப் பயன்படுத்தலாமே.

ண. மொத்தத்தில் அந்த வீட்டு மனிதர்களுக்குள் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டு அமைதி இருந்தது.


கடையினம்

இப்படி நடந்ததெல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டே தூங்கப் போனாள் சந்தியா. அடுத்த நாள் அவள் வாழ்க்கையைத் தோசையாக்கப் போகும் மின்னஞ்சல் வரப் போவது தெரியாமல். அதாவது அவளுக்குத் தெரியாமலே வாழ்க்கையைத் திருப்பிப் போடும் மின்னஞ்சல்.

தொடரும்...

Monday, February 05, 2007

யார் இவர்?

இந்தப் படத்துல இருக்குறவரப் பாருங்க. யார்னு தெரியுதா? கண்டுபிடிச்சிருப்பீங்களே. அவரேதான்.


சரி. இந்தப் படத்துக்குத் தகுந்தாப்புல ஒரு துணுக்கு அல்லது கவிதை அல்லது ஜோக்கு...அல்லது ஒங்களுக்கு என்ன தோணுதோ.....அதச் சொல்லுங்க பாக்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்