Saturday, October 25, 2008

கானா பிரபாவுக்குப் போட்டியா ரேடியோஸ்பதி புதிர்

இந்த வாரம் நம்ம கானாபிரபா அண்ணாச்சி புதிர் போடாம ஏமாத்துன கோவத்துல... அவருக்குப் போலியா உருவெடுக்குறதா முடிவு பண்ணியாச்சு. அட.. என்னோட பேரைப் போட்டுத்தான்....

அடுத்து அவரு புதிரு போடுறாரோ இல்லையோ.. நம்ம அவருக்குப் போட்டியா களம் எறங்கீற வேண்டியதுதான். அவரு இளையராஜா மாதிரி. இருந்தாலும்.. நம்ம சந்திரபோஸ் ரேஞ்சுக்கு "ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே..."

சரி புதிருக்கு வருவோம். கிந்த உண்டேதி ஒக தெலுகுப் பாட்டா.. அதாவது தெலுங்குப் பாட்டு. இந்தப் பாட்டு தமிழிலும் இருக்கு, இந்த தெலுங்குப் பாட்டுக்கு இசையமைச்சவருதான் தமிழுக்கும் இசையமைச்சிருக்காரு. இதே பாடகர்கள்தான். படமும் இதே படம்தான். ஆனா தமிழில் பிரபலமான கதாநாயகன் நடிச்சாரு. ஆனா மெட்டு மட்டும் வேற. ஒரே பாடல் காட்சிக்கு தெலுங்குக்கு ஒரு மெட்டும்... தமிழுக்கு ஒரு மெட்டும் இசையமைப்பாளர் போட்டிருக்காரு. ஆனா அதே பாடகர்களை அந்தப் பாட்டைப் பாட வெச்சிருக்காரு.தமிழ்ப் படத்துல எல்லாப் பாட்டையும் கவியரசர் எழுதுனாலும் ஒரு பாட்டு மட்டும் கங்கை அமரன் எழுதுனாரு. இன்னொரு குறிப்பு சொல்றேன். இந்தப் படத்துல ஒரு கதாநாயகன் வில்லன் ஆனாரு.

தமிழ்ப் பாட்டு ரொம்பவே பிரபலமான பாட்டு. பாட்ட உத்து உத்துப் பாக்குறவங்களுக்கு தமிழில் கதாநாயகர் யாருன்னு பெரிய குறிப்பு இருக்கு.

இன்னொரு குறிப்பு.... இந்தப் படத்தோட பேர ரெண்டா பிரிச்சா ரெண்டு படங்கள் கிடைக்கும். ஒன்னு விஜய் நடிச்சது. இன்னோன்னு நடிகர்திலகம் நடிச்சது.

கண்டுபிடிங்க பாக்கலாம்.

போட்டி முடிவடைந்து விட்டதால் விடையை இங்கேயே சொல்லி விடுகிறேன்.

சுட்டாளுன்னாரு ஜாக்ரதா என்கின்ற தெலுங்குப் படத்தைத் தமிழில் போக்கிரிராஜா என்று எடுத்தார்கள். தெலுங்கில் இசையமைத்த மெல்லிசை மன்னர்தான் தமிழிலும் இசை. ஆனால் தெலுங்கில் பயன்படுத்திய எந்த மெட்டையும் தமிழில் பயன்படுத்தவில்லை. மேலே நீங்கள் கேட்ட தெலுங்குப் பாட்டுக்கு இணையான தமிழ்ப் பாடல் "நான் போக்கிரிக்குப் போக்கிரி ராஜா.. பக்கத்துல பட்டுல ரோஜா" என்ற பாடல். அதை எஸ்.ஜானகியும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இணைந்து பாடியிருந்தார்கள்.

இந்தப் படத்தில் முதன்முதலாக முத்துராமன் வில்லனாக நடித்தார். எல்லாப் பாடல்களையும் கவியரசர் எழுதியிருந்தாலும் ஒரேயொரு பாடலை மட்டும் கங்கையமரன் எழுதியிருந்தார். அது இந்தப் பாடலா... "வாடா என் மச்சிகளா" பாடலா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். :)

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, October 14, 2008

சினிமாப் பைத்தியம்

நம்மளையும் பதிவர்னு அப்பப்பக் காட்டிக்கிறதுக்குன்னே கண்டுபிடிச்சதுதான் இந்தத் தொடர்பதிவுகள் போல..... ஸ்ரீதர் அண்ணாச்சியும் பிரபா அண்ணாச்சியும் கலக்கல் பதிவுகள் போட்டுட்டாங்க. எனக்கும் ஏதோ தெரியும்னு கூப்டுட்டாங்க. நாமள்ளாம் சினிமாலயே பொறந்து வளர்ந்து வாழ்ந்துக்கிட்டிருக்குறவங்களாச்சே. கொஞ்ச நாளா எழுதாம வேற இருந்தேனா.... வெட்டிப்பய பாலாஜி வேற...என்னது ஒன்னுமே எழுத மாட்டேங்குறீங்களேன்னு கேட்டுட்டான். இப்பிடியாக உலக்கத்தரமான சினிமா ரசிகன்னு இன்னும் ஒலகம் என்னைய நம்புறதால இந்தப் பதிவை எழுதீருவோம்னு முடிவு பண்ணி...எழுதியாச்சுங்கோவ். கேள்வி பதில்களுக்குப் போவோமா. போய்த்தானே ஆகனும். வேற வழி. எழுதச் சொன்னீங்கள்ள...இப்பப் படுங்க...அதாவது படிங்க. :)

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயசுலன்னு சரியாத் தெரியலைங்க. தூத்துக்குடில புதுக்கிராமத்துல பெருமாள் கோயிலுக்கும் எண்ணெய்க் கடைக்கும் நடுவுல ஒரு பெரிய சொவரு. அந்தச் சொவர்லதான் மொதமொதச் சினிமா பாத்த நெனைவு. ஆமா. அதுல ஊர்ச் சினிமா போஸ்டரெல்லாம் ஒட்டுவாங்க. சார்லஸ், மினிசார்லஸ், கார்னேஷன், பாலகிருஷ்ணா, முருகன், ஜோசப்...இப்பிடியாப்பட்ட தியேட்டர்கள்ள என்னென்ன படங்க ஓடுதுன்னு ஒட்டீருப்பாங்க. அதுலதான் மொதல்ல பார்கத் தொடங்குனேன். கடைசியாப் போனப்பக்கூட அந்தச் சொவத்துல சினிமா பாத்தேன். :)

பொதுவாவே சின்னப்பிள்ளைல அத்தை கூட்டீட்டுப் போவாங்க. அவங்க கூடப் போய்த்தான் மொதல்ல படம் பாத்திருக்கேன். புதுசு பழசுன்னு கதம்பமா இருக்கும்னு நெனைக்கிறேன். ஏதோ ஒரு விஜயகாந்த் படம்....போஸ்டர்ல மலை, பாம்பு எல்லாம் இருந்துச்சு. அப்பல்லாம் சார்லஸ் தியேட்டர்தான் பெரிய தியேட்டர். உண்மையிலேயே பெரிய தியேட்டருதான். அதுல திரைக்கு முன்னாடி பெரிய மேடையெல்லாம் இருக்கும். அதுலதான் எல்லாம் கொண்டு வந்து வெச்சு சினிமா காட்டுவாங்கன்னு நெனச்சேன். போஸ்டர்ல பாம்பப் பாத்துட்டு....அப்ப சார்லஸ் தியேட்டர் மேடைல பாம்பு வருமான்னு அத்தையக் கேட்டேன். ஆமான்னு சொன்னாங்க. அப்ப அந்தப் படத்துக்கே வரலைன்னு சொல்லீட்டேன். அதே மாதிரிப் போகவும் இல்லை.

ஆனா மொதமொதலா தனியாப் போன படம் நெனைவிருக்கு. சரஸ்வதி சபதம். தனியான்னா....தனியா இல்ல. வீட்டோட போகாம...நண்பனோட சேந்து போனது. பக்கத்து வீட்டு தேன்ராஜோட அந்தப் படத்துக்கு அனுப்புனாங்க. ஏன்னா பழைய படம்னாலும் நல்லாருக்கும்னு. எந்த வயசுலன்னு மறந்து போச்சு.

அப்புறம் அம்மா அப்பாகூட திரும்ப வந்தப்புறமும் நிறையப் படங்கள் பாத்திருக்கேன். அதுலயும் பழசு..புதுன்னு கலந்தே இருக்கும். பொதுவா சிவாஜி படம்னா பழைய படம்னாலும் வீட்டுல கூட்டீட்டுப் போவாங்க. அப்புறம் பாக்கியராஜ் படங்கள், பாலச்சந்தர் படங்கள், விசுப்படங்கள், கமல் படங்கள் இப்பிடியெல்லாமும் இருக்கும். ஆனா எம்.ஜி.ஆர் படங்களோ ரஜினி படங்களோ இருக்காது. எனக்குத் தெரிஞ்சு அப்பாவும் தங்கச்சியும் சேந்து போய் பாட்சா படம் பாத்தாங்க. அதுக்கும் நான் போகலை. இன்னமும் பாக்கலை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியாவா..... தியேட்டர்லயா.... தமிழா.....ம்ம்ம்ம்.... தசாவதாரம். நெதர்லாந்துல பாத்தேன். அது ஒரு பெரிய கதைன்னே சொல்லனும். நெதர்லாந்து வந்தப்புறம் நான் தியேட்டர்ல போய் பாத்த மொதப்படம் அதான். ஜிவாஜி வந்தப்பக் கூடப் போகலை. குருவி கூட வந்துச்சு. ஒருத்தரு குருவி வருதுன்னு சொன்னாரு. நான் சொன்னேன்....விஜய் படங்கள்ளாம் பாக்குறதில்லைங்கன்னு. அவரும் விடாம....ஊர்லன்னா எவன் பாப்பான்? இங்கன்னுதான் பாக்கப் போறேன்னு சொன்னாரு. இங்குட்டு எங்குட்டோ... விஜய் படம்னு வந்துட்டாலே பாக்குறதில்லைன்னு சொன்னேன். அவரு பேசவேயில்லை.

அப்படி இருந்தவன் தசாவதாரம் எப்ப வருமுன்னு காத்திருந்தேன். ஒரு கூட்டமா டிரெயின்ல போனோம். அல்மீரா-ன்னு பக்கத்து ஊருல படம். எட்டு மணிக்குத் தொடங்கி பத்தரைக்கு முடியும்னாங்க. போனா... பொட்டி வரலை. சரீன்னு பக்கத்துல இருந்த டோனேர் கபாப் கடைல போய் சாப்ட்டு வந்தா..இன்னும் வரலை. அந்தா வருது....இந்தா வருதுன்னு சொல்லீட்டே இருந்தாங்க. நேரமாகுதுன்னதும் எல்லாருக்கும் இலவசமா காப்பி டீ குடுத்தாங்க. குடிச்சிட்டு உக்காந்திருந்தோம். ஒருவழியா படத்த பத்து மணிக்குப் போட்டாங்க. அதுல என்னன்னா....கமல் அமெரிக்கால இருந்து ஏரோப்பிளேன்ல இந்தியாவுக்கு வந்து பல்ராம்நாயுடுவைப் பாக்குறாரு...ஒடனே அசின் குய்யோ முய்யோன்னு கத்துறாங்க....கமலும் அசினும் சிலையைத் தூக்கீட்டு ஓடுறாங்க. என்னடா இதுன்னு பாத்தா பத்து நிமிசங்கழிச்சி திரும்ப விட்ட எடத்துல இருந்து பல்ராம்நாயுடு... லட்டியடி பத்தி விளக்குனாரு. அடப்பாவிகளா....ஊருவிட்டு ஊரு வந்து படம் பாத்தா....ரீல மாத்திப் போட்டுட்டியே டச்சான்னு கதறுனோம்.


அத்தோட முடிஞ்சதா கதை...படம் முடியுறப்போ ஆம்ஸ்டர்டாமுக்குப் போற கடைசி வண்டியும் போயாச்சு. அடுத்த வண்டி..அடுத்த நாள்தான். பெருங்கூட்டமே ரயில்வே ஸ்டேஷன்ல நிக்குது. அப்புறமென்ன...டாக்சி பிடிச்சி வீட்டுக்கு வந்தோம். பன்னிரண்டு யூரோ படத்துக்கு எழுவது யூரோ டாக்சி.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

நல்ல கேள்வி. படத்தோட பேரு அந்த நாள். நேத்துத்தான் (13ம் தேதி அக்டோபர் மாதம் 2008ம் வருடம்) பாத்தேன். சிவாஜிக்கு மிகை நடிப்புன்னு எவன்யா சொன்னான்.... சொன்ன பயக பூராம் இந்தப் படத்த இம்போசிசன் மாதிரி பத்து வாட்டி பாருங்க. அவரு இயக்குனர் நடிகர்யா. இயக்குனர் என்ன கேக்குறாரோ அப்படியே குடுப்பாரு. சிவனா நடிங்கன்னா சிவனா வந்தார்ல. திருவிளையாடல் படத்துல. கப்போலோட்டிய தமிழன் படத்தப் பாத்துட்டு "அப்பா"ன்னு வ.உ.சியின் மகனே கதறுனார்ல. கட்டபொம்மன்னா இப்பிடித்தான் இருப்பார்னு நம்ப வெச்சிட்டாரேய்யா.... கயத்தாறுல இருக்குற கட்டபொம்மன் சில கூட இவரு சாயல்ல இருக்கு. உண்மையான கட்டபொம்மனே வந்தாக்கூட சிவாஜி மாதிரி இல்லைன்னு நம்மாளுக திருப்பி அனுப்பிச்சிருவாக போல. ஆயிரஞ் சொல்லுங்கய்யா.... அவரு அவருதான்.

அந்த நாள் மாதிரி விறுவிறுப்போட இப்ப ஒரு படமும் வர்ரதில்லைங்குறதும் ஒரு உண்மை. எங்கப்பாரு பொறந்த சமயத்துல வந்த படம். அத இன்னமும் ரசிக்க முடியுதேய்யா... இப்பிடியெடுக்கனும்யா படத்தன்னு நெனச்சேன்.

என்னது... எங்க பாத்தேனா.. ஹி ஹி.. இந்தப் படத்தோட ஒரிஜினல் டிவிடியோ விசிடியோ எங்கிட்ட இல்லைங்க. நான் இந்தியாவுல ஒரிஜினல்தான் வாங்குவேன். இப்பத்தான் சல்லிசா கெடைக்குதே. நெதர்லாந்துல எங்க போறது? இண்டர்நெட்லதான் பாத்தேன். தப்புத்தான்.. ஆனா வெற வழி இல்லையேய்யா....

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

முதல் மரியாதை மற்றும் கல்யாண அகதிகள். முன்னது காவியம். அதைப் பத்தி எவ்ளோ வேணும்னாலும் சொல்லலாம். சுருங்கச் சொன்னா.... தமிழில் வந்த மிகச்சிறந்த படங்களில் முதல்மரியாதைக்கும் என்றும் உண்டு முதல் மரியாதை.

கல்யாண அகதிகள் படம் வந்தப்பவும் பாத்திருக்கேன். ஆனா அப்ப நினைவிருந்தது அம்மா வீட்டுல செஞ்சி எடுத்துட்டு வந்த கேக்கோட ருசி. ஆனா படம் பாத்த தேட்டர் நினைவிருக்கு. திருச்சி காவேரி தியேட்டர். சின்ன வயசுல இருந்தே படம்..படம் பாத்த தியேட்டரும் மனசுல பச்சக்க்குன்னு பதிஞ்சிருது. படத்தையும் விட.

அப்புறம் ரொம்ப நாள் கழிச்சி அந்தப் படத்தைப் பாத்தேன். பெண்ணியமெல்லாம் ஒரு பக்கம் இருக்க.....ரொம்ப ரசிச்சது சரிதா, ஒய்.விஜயா, மற்றும் சீமா.

ரொம்ப இயல்பான நடிப்பு சரிதாவுக்கு. அதை நான் சொல்லனும்னு அவசியமில்லை. ஒங்களுக்கேத் தெரியும். இல்லைங்குறீங்களா?

ஒய்.விஜயாவை ஏன் வீணடிச்சிட்டோம். கல்யாண அகதிகள் படத்துல பாருங்க. ஒரு நல்ல வேலைல உள்ள பெண்மணியாகவும்..கணவனிடம் விவாகரத்து கோரும் மனைவியாகவும் நடிச்சிருப்பாங்க. ஒய்.விஜயா...நீங்க நல்ல நடிகைன்னு சொல்ல ரெண்டு படங்கள் போதும். கல்யாண அகதிகள் ஒன்னு. மூன்று முடிச்சு இன்னொன்னு.

நடிகை சீமா. அவங்க ரொம்ப அழகாத் தெரிஞ்சாங்க. அந்தப் படத்துல அவங்க அழகைத்தான் ரசிச்சேன். மொத வாட்டிப் படம் பாத்தப்பவும் சீமான்னு தெரியாம...அவங்க அழகா இருக்காங்கன்னு ரசிச்சேன்.

ஆனா ரொம்பப் பிடிச்சது படத்தோட முடிவுதான். இந்தப் பொண்ணு இந்து. அந்தப் பையன் கிருஸ்துவன். காதலுக்குப் பையன் வீட்டுல பச்சைக்கொடி. என்ன.... பொண்ணு மதம் மாறனும். ஆனா மாறாம...காதலைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிர்ரா. காதல் பெருசுதான். ஆனா அவ சொல்ற காரணம் காதலை விட மதம் பெருசுன்னு இல்ல. "முருகன் இருக்கான்னு நம்புறேன். நாளைல இருந்து ஏசுதான் கடவுள்னு எப்படி நான் நம்புறது"ன்னு கேக்குறா. தோழி சொல்றா..."அட..இவ்ளோதானா....வெளிய ஏசுவேன்னு சொல்லீட்டு உள்ள முருகான்னு சொல்லேண்டி". ஆனா இவ அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்குறா..."நான் யாரை ஏமாத்துறேன். ஏசுவையா..முருகனையா...நான் ஏன் ஏமாத்தனும்?" இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமத்தான் அவ காதலை உதறீட்டு வந்துர்ரா. இதுல பொண்ணு முருக பக்தைங்குறதால மட்டுமில்ல...இது எந்த மதத்த நம்புறவங்களுக்கும் பொருந்தும். இது என்னோட கருத்து.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தமிழ் சினிமா...அரசியல்... இது ரெண்டும் ஒன்னுதானே. வெவ்வேறையா? :) சரி. கேட்டுட்டீங்க. சொல்றேன். இந்தச் சினிமா நடிகர்கள்ளாம் எப்ப தங்களை நடிகர்கள்னு மட்டும் நெனைப்பாங்க? அவங்களைச் சொல்லக் கூடாது. மக்களைச் சொல்லனும். நடிகனை நடிகனா மட்டும் பாக்கத் தெரியாத தமிழ்நாட்டு "மட" மக்களைச் சொல்லனும். அந்த "மட" மக்களை நம்பி அரசியல் நடத்துற சினிமாக்காரங்களையும்....அந்தச் சினிமாக்காரங்களை நம்பி அரசியல் பண்ற அரசியல்வாதிகளும் தான் ரொம்பவும் மனதைத் தாக்குது. திருந்த மாட்டீங்களா?


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பமா.... அதெல்லாம் அவ்வளவா புரியாது. ஆனாலும் சின்ன வயசுல அக்னி நட்சத்திரம் பாத்தப்போ...ஏன் இந்தப் படத்துல ஒன்னுமே தெளிவாத் தெரிய மாட்டேங்குதுன்னு நெனைச்சதுதான் என்னோட தொழில்நுட்பத் திறமை. :)

ஆனா கொஞ்ச நாள் கழிச்சித் திருடா திருடா பாக்குறப்போ....அந்தத் தொழில்நுட்பத்தை ரசிச்சிப் பாத்தேன். அதுலயும்.... சந்திரலேகா பாட்டு முடியுறப்போ சுத்தியிருக்குற வெளக்குகள் அணைஞ்சிக்கிட்டே வந்து... கடைசில திரையில ஒரு ஓரத்துல அனு அகர்வால் (பேரு சரியா?) மட்டும் தெரிவாங்க. அந்தக் காட்சியை ரொம்பவும் ரசிச்சேன். ஆனா அதே நேரத்துல ஸ்ரீதரோட பழைய படங்களைப் பாக்குறப்போ... அவருடைய காலகட்டத்துக்கு நெறையவே முயற்சி செஞ்சிருக்காருன்னு தோணுச்சு. நெஞ்சம் மறப்பதில்லை படம் பாத்துப் பாத்து ரசிச்சேன். படமா...அது.... அதுல பாருங்க ஸ்ரீதர் எடுத்த ரெண்டு பாட்டுகள் இப்ப டீவில போட்டாலும் விடாமப் பாப்பேன். ஒன்னு "விழியே கதை எழுது". இன்னொன்னு "தங்கத்தில் முகமெடுத்து." எம்.ஜி.ஆர் லாதாவோட கையப் பிசையுறதப் பாத்தாக் கஷ்டமா இருந்தாலும்.... என்னவோ..அந்தப் பாட்டைப் பாப்பேன்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா

அட இப்பிடிக் கேக்கலாமா? எனக்கும் பசுநேசன், சிங்கமுடித் தலை நடிகர் பத்தியெல்லாம் எப்படித் தெரியும்னு நெனைக்கிறீங்க? சினிமா பத்தி வாசிச்சுத்தானே. ஹிஹி. அதுவுமில்லாம மெல்லிசை மன்னர் ஆனந்த விகடன்ல ஒரு தொடர் எழுதுனாரு. அது...அப்புறம் இந்தக் குளத்தில் கைகழுவியவர்கள்...இல்ல ... இல்ல... கல்லெறிந்தவர்கள்.... அப்புறம் வாலி எழுதுன சுயசரிதை... மகேந்திரன் எழுதுனது...இப்பிடியெல்லாம் படிச்சிருக்கேனே.

7.தமிழ்ச்சினிமா இசை?

இது பத்தி எழுதுனா... எழுதிக்கிட்டேயிருக்கனும். அவ்ளோ இருக்கு. மெல்லிசை மன்னர் ரொம்பப் பிடிக்கும். ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும். இளையராஜா இசையும் ரொம்பப் பிடிக்கும். பொதுவாவே நல்ல இசைன்னாலே ரொம்பப் பிடிக்கும். இப்ப ஒவ்வொரு பாட்டுகள் நல்லா இருந்தாலும்.... பொதுவாவே இசை தொய்வாத்தான் இருக்கு. இந்த நிலை மாறனும். கண்டிப்பா மாறனும். மாறியே ஆகனும்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அதெல்லாம் நல்லாப் பாப்பேன். சின்ன வயசுல...இப்பயும் வயசு நெனைவில்லை. தொலைக்காட்சியில ஞாயித்துக் கெழமை மதியம் "பிராந்தி"யப் படங்கள் போடுவாங்கள்ள... அதுல ஒரு படம். என்ன மொழின்னு புரியலை. நடிகரு யாருன்னு தெரியலை. கீழ ஓடுற எழுத்துகளைப் புரிஞ்சிக்கிற வயசும் இல்லை. ஆனா படமும்...கதையும் மனசுல அப்படியே பதிஞ்சிருச்சு. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழிச்சி ஒரு நண்பனோட பேசுறப்போ பிடிச்ச படங்களைப் பத்திப் பேச்சு வந்துச்சு. அப்ப மனசுல பதிஞ்சிருந்த கதையைச் சொன்னேன். சொல்லச் சொல்லக் கேட்டுட்டு அவன் சொன்னான்.... "இது வங்காளப் படம்....பேரு பஞ்ச்சரமேர் பாகான். 1980ல வந்த படம்"... விடுவேனா அப்புறம்... அடுத்து கொல்கொத்தா போனப்ப படத்த வாங்கீட்டு வரச்சொல்லிப் பாத்தேன். அப்பப்பா... படமா அது... தமிழில் இது மாதிரி எடுக்க மாட்டாங்களாய்யா! எடுத்தாலும் மக்களே..போய்ப் பாப்பீங்களாய்யா?

இந்தப் படத்தைப் பாக்கனும்னா இந்தச் சுட்டிக்குப் போங்க. உண்மையிலே அருமையான படம்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு மொழிகள் புரியுங்குறதால...எல்லாத்தையும் பாக்குறதுண்டு. தெலுங்குன்னாலே பொதுவாகவே மசாலாங்குறது நம்ம சொல்றது எக்கச்சக்கம்னாலும்....அங்கயும் நெறைய அருமையான படங்கள் இருக்கு. விஸ்வநாத் படங்கள் ஒரு பக்கம் இருக்க.... அவை தவிரவும் நெறைய நல்ல படங்கள் இருக்கு. கோரிண்ட்டாகு-ன்னு ஒரு படம். அதாவது மருதாணி....சோபன்பாபு, சாரதால்லாம் நடிச்சிருக்காங்க. அதுல சின்னவயசுச் சோபன்பாபுவுக்கும் அவரோட தங்கச்சிக்கும் சோறு ஊட்டிக்கிட்டே சாவித்திரி ஒரு பாட்டுப் பாடுவாங்க. புருஷனால துன்புறுத்தப்படும் ஒரு பட்டிக்காட்டு அப்பாவிப் பெண். அவங்க பாட்டுப் பாடுறப்போ சட்டுன்னு அழுதுட்டேன். இன்னொரு வாட்டி அந்தப் படத்தைப் பாக்குற மனத்துணிவு எனக்கில்லை.

அதே மாதிரி கன்னடத்துல நாகமண்டலா, பூதய்யனு மக ஐயூ ஆகிய படங்கள் மிக அருமையோ அருமை. திரும்பத் திரும்பப் பாத்து ரசிக்கக் கூடிய படங்கள். மலையாளத்துலயும் படங்கள் இருக்கு. இதுல பாருங்க... நான் சொன்ன எந்தப் படத்தைப் போலவும் தமிழில் படம் வரவேயில்லை. வந்து வெற்றியும் பெறவில்லை.

தமிழில் இயல்பான படங்களே இல்லையான்னு கேக்கலாம். இருக்குது. எண்ணிப் பாத்தா விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுலதான் இருக்குது. ஆனாலும் என்னவோ நம்மல்லாம் மசாலாவுக்குள்ளயே மூழ்கிப் போயிருக்கோம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடித் தொடர்பெல்லாம் இல்லை. எதிரடித் தொடர்புதான் இருக்குது. அதாங்க...திரைக்கு எதிரா உக்காந்திருக்கும் தொடர்பு. அவ்ளோதாங்க.

தொடர்புன்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் நல்லது செய்யலாம். என்ன.... நல்ல கதையா எழுதிக் குடுக்கலாம். யாராச்சும் தயாரிக்கத் தயாரா இருக்கீங்களா? எந்த மாதிரி கதை வேணும்னு சொல்லுங்க. நான் தயார். :)

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர்காலமாவது திருந்தும்னு எதிர்பாக்குறேன். மத்தபடி என்ன சொல்றதுன்னு தெரியலை. வன்முறைய விட்டு வெளிய சிந்திக்க மாட்டீங்களா? :(

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என்னாகும்? நாடகங்களுக்கு வரவேற்பு பெருகும். மேடை நாடகங்களும் சரி....தொலைக்காட்சி நாடகங்களும் சரி. சினிமாக்காரங்கள்ளாம் நாடகத்துக்குப் போய்ட்டதால....நாடகக்காரங்களுக்குக் கோவம் வந்தாலும் வரலாம். சண்டை வரலாம். சினிமா நடிகர்களோட சம்பளம் கொறையும். மேடை நாடகத்துல நடிக்கிறதுக்காக கொஞ்சமாவது நடிக்க முயற்சி செய்வாங்க.

இவ்வளவுதாங்க எனக்குத் தெரிஞ்சது. அதையும் சொல்லீட்டேன். அஞ்சு பேரைக் கூப்புடனுமாம். அஞ்சாத பேர்களைக் கூப்புடுறேன்.

அ. ஆன்மீகச் செம்மல் குமரன்
ஆ. காமிராக் கவிஞர், புகைப்படப் புலவர் சிவிஆர்
இ. அன்புச் சகோதரி துர்கா
ஈ. இந்த வார நட்சத்திரம் இளா
உ. தப்பிச்சு ஓடாத கப்பி

கூப்டாச்சுங்க.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, September 29, 2008

சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள்

அரசியல்வாதிகள் நிலம் திருடுவது ஒன்றும் புதிதில்லை. பழைய ஜெயலலிதா ஆட்சியில் பல பணக்காரர்கள் நடுயிரவில் வீட்டை விட்டு வெளியே போனதெல்லாம் நாம் நாளிதழ்களிலும் படித்ததுதான். திமுகவினரும் அதை எல்லாருக்கும் எடுத்துச் சொன்னதும் தெரிந்ததுதான்.

இப்பொழுது காட்சிகளும் கோலங்களும் ஆட்சிகளும் மாறியிருக்கிறதும் தெரிந்ததுதானே. சமீபத்தில் சென்னையில் இருக்கும் இடங்களை மதுரையின் முக்கிய அரசியல் மையத்தின் மகனும்... அவருடைய சகோதர உறவுடைய மறைந்த நடிகரின் மகனும் வளைப்பதாகத் தெரிகிறது.

என்னுடைய உறவினர்கள் ஒரு இடம் வாங்கியிருந்தார்கள். சமீபத்தில் அங்கு புதிதாக ஒரு போர்டு போடப்பட்டு சுற்றிலும் தட்டியும் போட்டிருக்கிறார்கள். அதாவது அவர்கள் இடம் மட்டுமல்லாது .. சுற்றியுள்ள இடங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் நிலத்தை வளைத்திருக்கிறார்கள்.

சினிமாவில் வருவது போல.. ஒரு குடிசை.. ஒரு மாருதி வேன். கொஞ்சம் அடியாட்கள் (மதுரையிலிருந்தாம்)....இப்பிடி இருக்கிறதாம் காட்சி.

காவல்துறையில் புகார் கொடுக்கப் போனாலும் அவர்கள் எந்தப் புகாரையும் ஏற்க மறுக்கிறார்களாம். தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மகன் இந்த விஷயத்தில் இருப்பதால் புகார் வேண்டாம் என்று காவல் துறையினரே "நல்லது" சொல்லி அனுப்புகிறார்களாம்.

அந்த ஆட்சியில்தான் இப்பிடியென்றால்... இந்த ஆட்சியிலுமா! இப்பொழுது இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டால்... மற்ற அரசியல் பதிவுகளுக்கு எது ஆதாரமோ...அதேதான் ஆதாரம். கும்முகின்றவர்கள் கும்முக. பம்முகின்றவர்கள் பம்முக.

Sunday, September 14, 2008

பிரியாணி - 3

பிரியாணி போட்டு ரொம்ப நாளாச்சுல்ல. அதான் இப்பக் கிண்டியாச்சு. மொதல்ல கொஞ்சம் அறிவியல் பச்சடி போடுவோம்.

இந்த கடவுள் நுண்துகள்...அல்லது பெருவெடிப்பு ஆராய்ச்சியப் பத்தித்தான் இப்ப எங்க பாத்தாலும் பேச்சு. அது சரியா...தப்பா... நல்லதா... கெட்டதா...இப்பிடி நூறு கேள்விகள்...விவாதங்கள். அட.. நமக்கு அவ்வளவு அறிவியல் தெரியாதுன்னு வெச்சுக்கோங்களேன். ஆகையால நல்லது கெட்டது சொல்ல முடியாது. ஆனா இங்க நெதர்லாந்துல இருக்குறவங்களுக்குள்ள ஒரு பேச்சு. அதாவது இங்க எங்கூட வேலை செய்ற இந்திய நண்பர்களுக்குள்ள.

இந்தச் சோதனைக்காக 27 கிலோமீட்டருக்கு சுரங்கப்பாதை போட்டிருக்காங்களாம். அதாவது சுவிட்சர்லாந்துல தொடங்கி பிரான்சு வரைக்கும் போகுது இந்தச் சுரங்கம். ஐய்யா...ஆராய்ச்சி நல்லவிதமா முடிஞ்சிருச்சுன்னு வெச்சுக்கோங்களேன்....எல்லாருக்கும் சந்தோசம். ஆனா ஒவ்வொருவரு பயமுறுத்துறாப்புல கருந்துளைன்னு ஒன்னு உண்டாயிருச்சுன்னா...அதுக்குள்ள எல்லாம் போயி ஒன்னுமில்லாம ஆயிருமாம்ல. அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா.....? பிரான்சுக்கு மேலதான நெதர்லாந்து... ரொம்பப் பக்கமாச்சேய்யா.....அதான் இப்பதையப் பேச்சு. எந்தத் தேதீல இந்தப் பெருவெடிப்ப உண்டாக்குறாங்கன்னு சொல்லீட்டாங்கன்னா...இல்ல ஒங்களுக்குத் தெரிஞ்சா நீங்களும் சொல்லுங்க. அந்தத் தேதி வாக்குல ஒரு வாரமோ ரெண்டு வாரமோ லீவக் கீவப் போட்டு இந்தியாவுல குடும்பத்தோட இருக்கலாம் பாருங்க. தேதி தெரிஞ்சாச் சொல்லுங்கய்யா... பிரான்சு சுவிட்சர்லாந்துல இருக்குற நம்மூர்க்காரகளப் பாத்து ஆறுதல் பட்டுக்கிட்டாலும்....பலருக்கு இங்க அடிவயிறு ஜிலீர்ங்குதாங்கோய்.

---------------------------------------------------------------------------

அடுத்து ஒரு கேள்வி. இந்தியாவுல மருத்துவம் பாக்கலாமா? பாக்கக் கூடாதா? இன்னும் குறிப்பாச் சொல்லனும்னா......வெளிநாட்டுல இருக்குற இந்தியர்கள் இந்தியாவுல மருத்துவம் பாக்கலாமா கூடாதா? ஏன் இந்தக் கேள்வின்னா...ஒரு மெயில் வந்துச்சு. இங்கிலாந்துல இருக்குற ஒரு தமிழர் அனுப்புன மெயில்தான். எனக்கு நேரடியா அவரைத் தெரியாதுன்னு வெச்சுக்கோங்களேன். ஆனாலும் மெயில்னு ஒன்னு வந்துருச்சே. அவரோட மனைவிய இழந்துட்டாராம் இந்தியாவுல. அவங்களுக்கு ஹெர்னியா இருந்திருக்கு. இங்கிலாந்துல மருத்துவம் பாத்திருக்காங்க. அவங்களும் இது ஒன்னும் பிரச்சனையே கெடையாது. அவசரப் பிரச்சனையும் கெடையாது. ஓய்வா இருக்குறப்போ சொல்லுங்க...இப்பத்தான கொழந்தை பிறந்து ரெண்டு மாசம் ஆகுது.. ஆகையால கொஞ்ச நாள் கழிச்சி....அறுவை சிகிச்சை செஞ்சிக்கிறலாம்னு சொன்னாங்களாம். இவங்களும் இந்தியாவுக்கு லீவுல போறோமே...அங்க நம்மூரு டாக்டருங்க நல்லா பாத்துச் சொல்வாங்கள்ளன்னு வந்திருக்காங்க. வந்த அன்னைக்கே டாக்டர் கிட்ட அப்பாயிண்டுமெண்டு. பெருங்குடி பக்கத்துல இருக்குதே லைப்லைன் மருத்துவமனை. அங்க இருக்குற டாக்டர்.ராஜ்குமார் கிட்ட. அவரு சொன்னாராம்...அடுத்த நாளே அறுவை சிகிச்சை வெச்சிக்கலாம்னு.

அடுத்த நாள் அறுவை சிகிச்சையும் நடந்தது. ஆனா அதுக்கப்புறம் ஒன்னு மேல ஒன்னா பிரச்சனைகள் வந்து கடைசியில் மனைவியை வெறும் உடலாத்தான் வீட்டுக்குத் தூக்கீட்டுப் போக முடிஞ்சதாம். அந்த அபாய நிகழ்வுகளை மின்னஞ்சலில் தொகுத்து அனுப்பியிருக்காரு. இதுல எவ்வளவு உண்மை பொய்னு தெரியலை. ஆனாலும் படிக்கிறப்போ நமக்கே பயமாயிருக்குங்க. அந்தக் குறிப்பிட்ட மருத்துவரைப் பத்தியோ மருத்துவமனையைப் பத்தியோ குறை சொல்லனுங்குறது என்னோட எண்ணம் இல்ல. ஆனா வந்த மின்னஞ்சலில் சாராம்சத்தைப் பகிர்ந்துக்கனுங்குறதால சொன்னேன். இந்த மின்னஞ்சல் வேணுங்குறவங்க...எனக்கு gragavan@gmail.comக்கு மின்னஞ்சல் அனுப்புங்க. நான் ஒங்களுக்கு அனுப்புறேன்.

அதுவுமில்லாம...சமீபத்துல என்னுடைய மாமாவும் மருத்துவமனையில் இருந்தாரு. அவங்க அவரைப் பாத்துக்கிட்ட விதத்தப் பாக்குறப்போ இந்திய மருத்துவர்கள் வியாபாரிகளாகிப் போயிட்டாங்களோன்னுதான் தோணுச்சு. விதிவிலக்குகள் இருக்கலாம். எல்லாரும் அப்படித்தான்னு இல்லை. ஆனாலும் அந்த மருத்துவர்ங்குறது போய் மருத்துவ வியாபாரிங்குற எண்ணம் எழுந்தது உண்மைதான். இங்க நெதர்லாந்துல கூட வேலை பாக்குற பொண்ணுக்கு ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு. மருத்துவமனைல பத்து நாளு இருந்துட்டு அப்புறம் இந்தியாவுக்குப் போயிட்டா. ஆனா அந்தப் பத்து நாளும் அருமையா பாத்துக்கிட்டாங்க. நெறைய சோதனைகள் செஞ்சாங்க. ஆனா மருந்தோ எதுவுமோ படக்குன்னு குடுத்துறலை. அதே மாதிரி அந்தப் பொண்ணு இந்தியா போனப்பிறகும் நல்ல மருத்துவர் கிட்ட பாத்து சரியாப் போச்சு. அதுவும் உண்மைதான். முன்னமே சொன்னாப்புல நெறைய மருத்துவ வியாபாரிகள்..சில மருத்துவர்கள். இதுதான் இந்தியாவின் நிலையோ!!!!!

---------------------------------------------------------------------------

அடுத்து எதாச்சும் ஜாலியா பாப்போமா! ஒரு ஜாலியான பாட்டு. ஆனா தெலுங்குல. தமிழ்லயும் இந்தப் படத்தப் பாத்திருப்பீங்க. பாட்டையும் கேட்டுருப்பீங்க. வாழ்வே மாயம்னு தமிழ்ல வந்துச்சுல்ல. அது பிரேமாபிஷேகம்னு மொதல்ல தெலுங்குல வந்துச்சு. படம் குண்டக்க மண்டக்க ஓடுனதால அதைக் கமலை வெச்சு தமிழ்ல எடுத்தாங்க. பில்லா கிருஷ்ணமூர்த்திதான் இயக்கம். தமிழில் இசை கங்கையமரன். எல்லாப் பாட்டையும் புதுசாப் போட்டாலும் இந்தப் பாட்டை அப்படியே தெலுங்குல சக்கரவர்த்தி இசைல இருந்து சுட்டுட்டாரு. பாட்டைக் கேளுங்க. பாருங்க. விழுந்து விழுந்து சிரிச்சு ஒடம்பைப் புண்ணாக்கிக்கிறாதீங்க.அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, September 01, 2008

ஒரு பாடல் மூன்று மொழி இளையராஜா எம்.எஸ்.விஸ்வநாதன்

வெத்தலையப் போட்டேண்டி பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். பில்லா படத்துப் பாட்டுதான். மலேசியா வாசுதேவன் பாடியிருப்பாரு. இந்தப் பாட்டை இதுக்கு முன்னாடி பாக்காதவங்க எங்கயாச்சும் பாத்துருங்க. வீடியோ எங்க கெடைக்கும்னு தெரியலை. இந்தப் பாட்டுக்கு இளையராஜா இசையமைச்சா எப்படியிருக்கும்னு ஆசைப்படுறவங்க கொஞ்சம் பொறுங்க....

தமிழில் வந்த இந்தப் படத்திற்கு மூலம் இந்திப் படமான டான். அந்தப் படத்துல இந்தப் பாட்டு எப்படியிருக்குன்னு இங்க பாத்துக்கோங்க.


அடுத்து இளையராஜாவுக்கு வருவோம். தமிழில் மெல்லிசை மன்னர் இசையமைச்சாரு பில்லாவுக்கு. ஆனா தெலுங்குல இளையராஜா இசை. ரஜினிகாந்துக்குப் பதிலா என்.டி.ராமாராவ். பாட்டைப் பாத்துருவோமே.இதே படத்துல கலக்கலா இளையராஜா ஒரு பாட்டு ஜெயமாலினிக்குப் போட்டிருக்காரு. நா பருவம் நீக்கோசம்...பல்லவி பாடுத்துன்னதி... செம பாட்டு. இது தமிழ்ல பின்னாடி வாலிபமே வா வான்னு வந்துச்சு.


அந்தப் பாட்டையே தமிழ்ல மெல்லிசை மன்னர் போட்டிருக்காரு. எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கீருக்காங்க. ஆனா அதோட வீடியோவும் கிடைக்கலை.

அடுத்து மூலமான இந்தியில்.


இந்தப் பாட்டெல்லாம் பாத்தீங்கள்ள. உங்க கருத்துகளை அள்ளித் தெளிங்க. :)

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, July 31, 2008

ரஜினி நடிக்கும் மன்னிக்க வேண்டுகிறேன்

ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனால் (ஆகித் தொலைந்தால் என்று படிக்க விரும்புகிறவர்கள்...அப்படியும் படித்துக் கொள்ளலாம்)

முதலமைச்சர் அலுவலகத்தில் (சும்மாக்காச்சுக்கும் கூட செயிண்ட் ஜார்ஜ் கோட்டைன்னு சொல்ல மனசு வரலைங்க) உட்கார்ந்திருக்கிறார்.

"நாராயணா.. நாராயணா..."

ரஜினிகாந்தின் அழைப்பைக் கேட்டு ஓடி வருகிறார் உதவியாளர்.

"என்னங்க சத்தியத்த விட்டுட்டீங்க? நன்ன ஹெசுரு சத்யநாராயணா".

ஸ்டைலாகச் சிரிக்கிறார் ரஜினிகாந்த். "ஹா ஹா ஹா... சத்தியத்தை விட்டாலும் நாராயணனை விட மாட்டேன். ஹா ஹா ஹா"

"நீங்க சத்தியத்தை விடுங்க...சாப்பாட்டையும் விடுங்க...இப்ப அவசரமான பிரச்சனை ஒன்னு வந்திருக்கு. அதப் பாருங்க."

"நாராயணா... என்னைப் பிரச்சனைகளிலிருந்து பார்த்துக் கொள்ளுங்கள்...பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். பிரச்சனையைச் சொல்லு."

"நீங்க காவிரி மினரல் வாட்டர் தமிழ்நாட்டுக்கும் டிஸ்டிரிபியூட் பண்ணனும்னு கோர்ட்ல கேஸ் போட்டீங்களே....அதுக்கு அவங்கள்ளாம் ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே.... அப்பக் கூட நீங்க... ஆர்ப்பாட்டம் பண்றவங்களைப் பாத்து ஏன் ஆர்ப்பாட்டம் பண்றீங்கன்னு கேட்டீங்களே...அது இப்பப் பெரிய பிரச்சனையாயிருச்சு."

"அது நடந்து ஒரு வருஷம் இருக்குமே. இப்ப என்ன பிரச்சனை?"

"ஒங்க குரு தயாரிச்ச துரியோதனன் படத்துல நீங்க முதலமைச்சரா வர்ரீங்களே... அந்தப் படத்த அங்க ரிலீஸ் பண்ணக் கூடாதாம். அதான் பிரச்சனை."

"என்ன அந்யாயம் இது.. படத்த ரிலீஸ் பண்ணலைன்னா எப்படி? எக்கச்சக்கமா குருநாயர் பணம் போட்டிருக்காரே. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்."

அந்த நேரம் பார்த்து "ராஜ்யமா இல்லை இமயமா" என்று ஜெயச்சந்திரன் எப்.எம் ரேடியோவில் கதறுகிறார்.

ரஜினிகாந்திற்கு எரிச்சல் வருகிறது. "நேரம் கெட்ட நேரத்துல இதென்ன பாட்டு. அதான் ராஜ்யம்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சே."

"சரி....பிரச்சனைக்கு என்ன செய்யப் போறீங்க?"

"ஹா ஹா ஹா... அதுக்கு ஒரு வழி இருக்கு. என் வழி....தனீஈஈஈஈ வழி."

சத்யநாராயணா சிரிக்கிறார். "ஓ மன்னிப்புக் கேக்கப் போறீங்களா? அப்ப பிரச்சனை தீந்தது."

"அதே அதே. ஒரு மன்னிப்பு. பிரச்சனை கதம் கதம். ஹா ஹா ஹா"

"கதம்தான். அங்க பிரச்சனை கதம். இங்க புதுப்பிரச்சனை வந்துட்டா..."

"ஹா ஹா ஹா நீ என்னை வாழ வைத்த தய்வங்களாகிய தமிழ் ஜனங்களை சரியா புரிஞ்சிக்கலை. அவங்க அறிவு நல்ல அறிவு. அரசியல் வேற...சினிமா வேற... மினரல்வாட்டர் வேறன்னு நல்லாப் புரிஞ்சி வெச்சிருக்காங்க. அதுனால எந்தப் பிரச்சனையும் வராது." சிகரட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறார்.

"சரி.. எப்ப மன்னிப்புக் கேக்கப் போறீங்க?"

"அதுக்குத்தான் ஐதராபாத் போறேனே. அங்க தேஜா டீவி...ஜெமினி டீவியெல்லாம் வரச்சொல்லி மன்னிப்புக் கேட்டுறலாம். அப்படியே இங்க எதுவும் பிரச்சனை வந்தாலும் ஒரு மாசம் கழிச்சி வந்தாப் போதும். எல்லாரும் மறந்திருவாங்க."

"யாராச்சும் அதுக்கப்புறமும் நெனைவு வெச்சிருந்தா?"

"ஹா ஹா ஹா...நல்ல கேள்வி. எனக்கு இருக்குற அஞ்சு முகத்தைத்தான் எல்லாரும் பாத்திருக்காங்க. ஆறாவது முகத்தை யாரும் பாத்ததில்லையே.."

சத்யநாராயணாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

"ஹா ஹா ஹா மேக்கப் இல்லாம வருவேன்னு சொன்னேன்."

சத்யநாராயணா சிரிக்கிறார். ரஜினியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

"ஹா ஹா ஹா நான் ஒரு முறை மன்னிப்புக் கேட்டா நூறு முறை மன்னிப்புக் கேட்ட மாதிரி"

--------------------------------------------------------------------------------------------------------------------------

இங்க ஆம்ஸ்டர்டாம்ல குசேலன் படம் வருது. போகலாம்னு ஒரு கூட்டம் முடிவு பண்ணோம். இன்னைக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணீட்டோம்.

அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கேட்டாத்தான் அடுத்து எதாச்சும் யோசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டோம். அதுவரைக்கும் ரஜினிகாந்த் படங்களுக்குத் தடா.தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Sunday, July 13, 2008

கெமிக்கோ பிசிக்கோ (அறிவியல் சிறுகதை)

இந்தச் சிறுகதை சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக.

கெமிக்கோ பிசிக்கோ....

இடம்....... ஐரோப்பாவின் ஒரு ரகசிய ஆய்வுக் கூடம். பொழுது கிருஸ்துமஸ் பிறப்பதற்கு முந்திய வாரயிறுதியின் குளிரும் நடுயிரவு.

விலைமதிப்பில்லாத அந்தக் காரிலிருந்து இறங்கிய பால் ஹெண்டிரிக்சுக்கு அட்ரீனலின் அளவுக்கு அதிகமாகவே எழுபத்திரண்டு வயதில் சுரந்தது. மூக்கிலும் வாயிலும் புகை விட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

இந்த ஒரு பொழுதுக்காக அவர் காத்திருந்தார். அவருக்காக அங்கு விஞ்ஞானி எரிக் உதவியாளர்களோடு காத்திருந்தார். யூரோ யூரோவாக அள்ளி அள்ளிக்
கொடுத்தவர் ஹெண்டிரிக்ஸ் தானே.

"வெல்கம் மிஸ்டர் பால். எல்லாம் தயாரா இருக்கு. நாங்க எல்லாருமே சோதனையை முடிச்சிட்டோம். All set. நீங்களும் ஒரு முறை சோதனை பண்ணீட்டீங்கன்னா இந்தக் கெமிக்கோ பிசிக்கோ தரோம்போ லிம்போசிஸ் வெற்றீன்னு உலகத்துக்குச் சொல்லீரலாம்."

எரிக் சொன்னதைக் கேட்டு ஒயின் குடித்துக் குடித்துச் சிவந்த முகத்தில் இரத்தவோட்டமே தெளிவாகத் தெரியும் வகையில் மலர்ச்சியைக் காட்டினார் பால். "Yes Erik. கண்டிப்பா வெற்றிதான். உங்க மேல நம்பிக்கை இருக்கு. இந்த வெற்றி உங்க ஐம்பது வயதுக் கனவான நோபல் பரிசைக் கண்டிப்பா வாங்கிக் கொடுக்கும். எனக்கோ இழந்த பல இன்பங்களை மீட்டுக் கொடுக்கும். உலகத்தில் புதுப்புரட்சியையே உண்டாக்கும். பொழுதுபோக்குகளின் போக்கே மாறிவிடும்."

சொன்ன பாலின் பேச்சில் மகிழ்ச்சி தெரித்தது. "கெமிக்கோ பிசிக்கோ தரோம்போ லிம்போசிஸ்...." தனக்குள்ளேயே ஒரு முறை சொல்லிக் கொண்டார்.

உள்ளே நுழைந்ததும் தானியங்கிக் கதவுகள் மூடிக் கொண்டன. அந்தப் பெரிய அறை ஒரு பெரிய சோதனைக்காகத் தயாராக இருந்தது.

இரண்டு மூலைகளிலும் ஒரே மாதிரியான இரண்டு கூண்டு அறைகள் இருந்தன. ஒரு கூண்டு அறையிலிருந்து மற்றொன்றைப் பார்க்கக் கூடாத வகையில் நடுவில் ஒரு தடுப்பு. கண்ணாடிக் கதவு. உள்ளே உட்கார நாற்காலி. நம்மைப் போன்ற சாதரணமானவர்களுக்குப் புரியாத பல அறிவியல் பொருட்கள். சரி. அவைகளைப் பற்றி நமக்கென்ன கவலை. கதைதானே முக்கியம்.

செய்யப் போகும் சோதனையைப் பற்றி எரிக் விளக்கினார்.

"These two chambers are identical. ஒவ்வொன்னுலயும் ஒவ்வொருத்தர் உக்காரனும். ஒருத்தர் அதுல transmitter (அனுப்புனர்). இன்னொருத்தர் receiver (பெறுனர்). அதத் தேர்ந்தெடுத்துட்டு switch on பண்ணா கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ் வேலை செய்யத் தொடங்கீரும். இதுல இன்னொரு வசதி இருக்கு. அனுப்புறதையோ பெறுவதையோ கூட்டிக்கவும் குறைச்சிக்கவும் ரெண்டு பக்கமும் வசதி இருக்கு."

"Impressive Mr.Erik. நம்ம காலம் கடத்த வேண்டாம். முயற்சி பண்ணலாமே."

"கண்டிப்பா. ஆனா நீங்க மொதல்ல அமைதியா இருங்க. Being relaxed will help better results. ஏற்கனவே நாங்க எல்லாருமே இந்தச் சோதனையைப் பண்ணிப் பாத்துட்டோம். எல்லாமே பாதுகாப்பானது. கொஞ்சம் அமைதியா தொடங்குனா போதும்."

மூச்சை இரண்டு மூன்று முறை இழுத்து விட்டுக் கொண்டு தன்னை அமைதிப் படுத்திக் கொண்டார் பால். எரிக்கின் உதவியாளர்கள் கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளேயிருந்த நாற்காலியில் பாலை உட்கார வைத்தார்கள். Receiver என்பதைத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு கதவு மூடப் பட்டது.

மற்றொரு அறைக்குள்ளே எரிக் நுழைந்து உட்கார்ந்தார். Transmitter என்பதைத் தேர்ந்தெடுத்தார் அவர். அவருடைய அறையின் கண்ணாடிக் கதவை மூடிக் கொண்டார். திரைப்படங்களில் காட்டுவது போல Start என்று ஒரு பட்டன் இருந்தது. அதைத் அமுக்கினார். கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ் வேலையைத் தொடங்கியது.

எரிக் தன்னுடைய அறையிலிருந்த மின்விசிறியைத் துவக்கினார். சிலுசிலுவென காற்று அந்த அறைக்குள் நிரம்பியது.

முதலில் பால் ஹெண்டிரிக்சுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சாதாரணமாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலத்தான் உட்கார்ந்திருந்தார். திடீரென பிடரியில் லேசாகக் குளிர்ந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குளிர்காற்று அவர் மேல் வீசுவது போல உணர்ந்தார். அப்படியே சாவகாசமாகச் சாய்ந்து உட்கார்ந்து அதை அனுபவித்தார்.

எரிக் உள்ளேயிருந்த ஒரு பெட்டியைத் திறந்தார். அதில் மஸ்டர்டு சாசோடு ஹாட் டாக் இருந்தது. அதிலிருந்த கிளம்பிய வாடை அவர் நாசியில் கம்மென்று நுழைந்தது. அப்படியே அதை எடுத்துக் கடித்தார். சுவைத்துச் சாப்பிட்டார்.

சாய்ந்து உட்கார்ந்து காற்றை அனுபவித்துக் கொண்டிருந்த பாலின் மூக்கில் கடுகு வாடை ஏறியது. என்னடா கடுகு வாடை என்று யோசிக்கும் பொழுதே அதன் காரம் தொண்டையில் இறங்கியது. ஹாட் டாக்.....ஆம். அதனுடைய சுவை என்று புரிந்து போனது. சாப்பிடாமலேயே அந்தச் சுவையை அனுபவித்தார் பால். ஆகா. ஆகா.

பெட்டியிலிருந்து ஒயின் பாட்டிலை எடுத்து வாயில் சிறிது கவிழ்த்துக் கொண்டார் எரிக்.

இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை பாலின் தொண்டையில் கலகலவென இறங்கியது. ஒயின்... ஒயின்... ஒயின்....

கெமிக்கோ பிசிக்கோ தரம்போ லிம்போசிஸ் ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கியது. பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி வெற்றி.

எந்த விஞ்ஞானிக்கும் இருக்கும் நோபல் பரிசு ஆசை எரிக்குக்கும் இருந்தது. எதையாவது மிகப் புதுமையாகச் சாதிக்க வேண்டுமென்று பலப்பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் கிடைத்தது பால் ஹெண்ட்ரிக்சின் நட்பு. இருவருக்கும் வெவ்வேறு தேவைகள். அந்தத் தேவைகளை இணைத்தது கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ்.

இளம் வயதில் ஐரோப்பாவின் அனைத்து நாட்டுப் பெண்களையும் ரசித்து ரசித்து ருசித்தவர் பால் ஹெண்டிரிக்ஸ். முதல் காதலும் முதல் முத்தமும் முதல் உறவும் மறந்து போகும் அளவிற்குத் திகட்டத் திகட்ட அனுபவித்தார். ஆனால் இந்த எழுபத்தியிரண்டு வயதில் பில்லியன் பில்லியனாகப் பணம் இருந்தும் உடம்பு ஒத்துழைக்காமல் ஆசையை மட்டும் சுமந்து கொண்டிருந்தார். வயக்கராவும் வக்கில்லாமல் போனது. வக்கிரம் மட்டும் போகவில்லை.

ஒருவர் பேசுவதை இன்னொரு இடத்தில் கேட்க முடிகிறது. ஒருவர் செய்வதை இன்னொரு இடத்தில் பார்க்க முடிகிறது. ஏன் ஒருவர் உணர்வதை மட்டும் இன்னொரு இடத்தில் உணரமுடியாது? இந்தக் கேள்விதான் விஞ்ஞானி எரிக்கின் உள்ளத்தில் ஊறிக்கிடந்த கேள்வி. பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த பொழுதிலிருந்து உள்ள கேள்வி. சிந்தித்துச் சிந்தித்து யோசித்துப் பலகாலம் செய்த ஆய்வுகளைத் தொடர்ந்து செய்யத் தேவையாக இருந்தது பணம். அந்தப் பணம் பால் ஹெண்டிரிக்சிடம் இருந்தது. பணமும் ஆசையும் சேர்ந்து உழைத்துச் செய்த ஆய்வுகளின் பலனே இந்த கெமிக்கோ பிசிக்கோ தரம்போ லிம்போசிஸ்.

விசிறியில்லாமலே காற்றை அனுபவித்துக் கொண்டும்... ஹாட் டாக் சாப்பிடாமலேயே சுவையை ருசித்துக் கொண்டும்....குடிக்காத ஒயினைச் சுவைத்துக் கொண்டும்...சோதனையை வெற்றியாக்கிக் கொண்டிருந்தார் பால். அடுத்த கட்டச் சோதனை ஒன்று மட்டும் மிச்சம்.

ஒரு சிறிய தள்ளுவண்டியை எரிக் அமர்ந்திருக்கும் அறையின் கண்ணாடிக் கதவின் முன் வைத்தார்கள். அதிலிருந்த லேப்டாப்பில் ஒரு நீலப்படம் தொடங்கியது. அழகான எஸ்பானிய பெண் தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டிருந்தாள். சந்தனத் தோல். தந்த உடம்பு. பார்க்கப் பார்க்க எரிக்கிற்கு ஜிவ்வென்று ஏறியது.

ஹெண்டிரிக்சுக்குத் தொப்புளுக்குள் முதலில் குறுகுறுத்தது. அந்தக் குறுகுறுப்பு பெருகிக் கூடி அடிவயிற்றில் இறங்கியது. முதன்முதலில்...இப்படித்தானே...தடுமாறி விட்டார் ஹெண்டிரிக்ஸ். பிரிகிட்டா கண் முன்னே தெரிந்தாள். முதல் காதலி. பதினான்கு வயதில் அவர் சிறுவன் இல்லை என்று நிரூபித்தவள். அவளது பழுப்புக் கூந்தல் அவர் மேல் கவிழ்ந்து மூடியது. டூலிப் இதழ்களால் முத்தமிட்டாள். "பிரிகீ....." முனகினார். பிரிகிட்டா புன்னகைத்தாள். "இன்னொரு முத்தம் பிரிகீ..." கொடுக்காமல் சிரித்தாள் பிரிகிட்டா. அறைக்குள் இருந்த பெறுவதைக் கூட்டும் வசதியைத் திருகினார் ஹெண்டிரிக்ஸ். அதைக் கூட்டக் கூட்ட பிரிகிட்டா முத்தமிட்டாள். ஹெண்டிரிக்சின் கடைவாயில் எச்சில் ஒழுகியது. "பிரிகீ.... பிரிகீ"... சொர்க்கத்தின் எஸ்கலேட்டர் அவரை உயர உயர அழைத்துச் சென்றது.

நீலப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி எரிக்கை மிதமான நெஞ்சுவலி தாக்கியது.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, July 08, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி

இந்தப் பதிவை எழுதுவதற்கு எத்தனைத் திரைப்படத் துணுக்குகளைப் படிக்க வேண்டியிருந்தது தெரியுமா! அப்படி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து எழுதிய இந்தப் பதிவிற்குக் காரணம் கவிநயாதான். சும்மாயிருந்த என்னைச் சீண்டி விட்டிருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் பதிவெழுதத் தூண்டி விட்டால்! அதைப் படிக்கும் உங்கள் நிலைதான் என்ன! ஆகையால் இந்தப் பதிவு தொடர்பான எதுவென்றாலும் நீங்கள் கவிநயாவைத் தொடர்பு கொள்ளுங்கள். ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதாக உறுதி சொல்லியிருக்கிறார்.

கர்ணன் படப்பிடிப்பின் பொழுது நடந்த நிகழ்ச்சி இது. ஒரிசாவின் புகழ் பெற்ற கொனார்க் சூரியக் கோயிலில் படப்பிடிப்பு நடந்தது. இரவும் நிலவும் வளரட்டுமே என்ற அருமையான பாடலின் படப்பிடிப்பும் போர்க்களக்காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. இரவும் நிலவும் பாடலைத் தமிழில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடினார்கள். தெலுங்கில் பி.சுசீலா உண்டென்றாலும் ஆண்குரலுக்குப் பாலமுரளி கிருஷ்ணா.

சாப்பாட்டுப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக இங்கிருந்து செட்டியார் மெஸ் ஒன்றும் உடன் சென்றிருந்தது. மேஸ் கூட்டத்தில் கந்தப்பச் செட்டியார் என்பவர் இனிப்பு வகைகளைத் திறம்படச் செய்யும் கைப்பலம் பெற்றிருந்தார். சிவாஜி அசைவப் பிரியர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சிவாஜி என்றால் இங்கு நடிகர் திலகத்தைக் குறிக்கும். நடிகர் மோகன்லால் வீட்டிற்குச் சென்றால் வாத்துக்கறி வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவாராம். ஆகையால் தினந்தோறும் அசைவ வகைகள் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்கள் மெஸ்காரர்கள்.

அந்தப் படப்பிடிப்பின் போதுதான் சிவாஜி அவர்களின் பிறந்தநாள் வருவதை பி.ஆர்.பந்துலு (அவர்தான் திரைப்பட இயக்குனர்) கந்தப்பச் செட்டியாரிடம் சொல்லி.... ஏதாவது புதிய இனிப்பு செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார். பாயாசங்களையே எத்தனை நாளைக்குத்தான் காய்ச்சுவது? அதிரசத்திற்கு உள்ளூர் வெல்லம் சரிவருமோ என்ற கவலை. உக்கரையெல்லாம் இத்தனை பேர்களுக்குச் செய்வதற்குள் தாவு தீர்ந்து விடும். ஆகையால் குலாப் ஜாமூன் போடுவதென்று முடிவானதாம்.

பிறந்தநாள் அன்று காலை எல்லாரும் நடிகர் திலத்தை வாழ்த்தியிருக்கின்றார்கள். நடிகை தேவிகாவும் அவரது தாயாரும் அருகில் இருந்த பிஷ்ணு கோயிலுக்குச் சென்றுப் பூஜை செய்து பிரசாதம் குடுத்தார்கள். கந்தப்பச் செட்டியார் செய்த குலாப் ஜாமூனை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு வாழ்த்துச் சொல்லச் சென்றிருக்கிறார் பந்துலு மாமா. முதல் இனிப்பு தான் குடுக்கும் இனிப்பாக இருக்க வேண்டுமே..

ஆனால் அங்கே ஏற்கனவே நடிகர் திலகம் எதையே மென்று கொண்டிருந்தார். பார்த்தால் ஜிலேபி. கோயிலுக்குச் சென்ற நடிகை தேவிகா வழியில் இனிப்புக் கடையில் ஜிலேபியையும் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதைத்தான் சிவாஜி அவர்களும் கமலா அம்மாவும் சாப்பிட்டிருந்திருக்கிறார்கள். பந்துலு மாமா குலாப் ஜாமூனைக் கொடுத்து கந்தப்பச் செட்டியார் சிறப்பாகச் செய்ததைச் சொல்லியிருக்கிறார். ஜிலேபி கொடுத்த தேவிகாவிற்கும் ஜாமூன் செய்த செட்டியாருக்கும் நன்றி சொல்லி அடுத்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை. கதையென்றால் கதையேதான். அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய். இப்படியே எம்.ஜி.ஆர் வாங்கிய சோடா.... தேங்காய் சீனிவாசனும் திருப்பதி லட்டும் என்று பலப்பல பழைய கதைகளும்... ஜெனிலியாவிற்குப் பிடித்த ஜெய்ப்பூர் கீர்... சூர்யாவின் சந்திரகலா... தசாவதாரப் படப்பிடிப்பில் கமலும் அசினும் சாப்பிட்ட கல்கோனா போன்ற புத்தம்புதிய கதைகளும் நிறைய உள்ளன. தேவைப்படும் பொழுது அவைகளும் எடுத்து விடப்படும்.

அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே. அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, June 24, 2008

தங்க மரம் - 17

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 17

தங்கமரத்தைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி மூவரின் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. வெள்ளைவெளேரென்ற மண்மலையும் அதன் உச்சில் தகதகவென மின்னும் தங்கமரமும் அழகோ அழகு. அவர்களிடம் அண்டி விவரித்தது போல மரகத இலைகள் மெல்லிய தென்றலில் அழகாக அசைய...அவைகளின் ஊடே பவழ மொட்டுகள் நாங்களும் இருக்கிறோம் என்றோம் என்று சொல்ல...மாணிக்கக் காய்களும் வைரக்கனிகளும் பார்வையை மாற்ற விடாமல் கவர்ந்தன. அப்பொழுது கதிரவன் சொன்னான்.

"சித்திரை... நான் பிடிமாவின் மீது ஏறிச் சென்று கனியைக் கொய்து வருகிறேன். இப்பொழுது இங்கு யாரும் இல்லை. ஆகையால் விரைந்து பறித்து விட்டு அண்டியின் வயிற்றுவழியில் திரும்பச் சென்று விடுவோம்."

ஆனால் சித்திரை வேறொன்றைக் குறித்து வைத்திருந்தான். "கதிரவா, நான் பறக்கும் படியில் வருகையில் இருட்டில் வந்தோம். படி நின்றவுடன் காலை எடுத்து வைத்ததும் நாம் வெளிச்சத்திற்கு வந்து விட்டோம். ஆனால் திரும்பவும் இருட்டுக்குள் எப்படிப் போவது என்ற வழியே தெரியவில்லையே!"

சித்திரை சொன்னதைக் கேட்டு இருவருக்கும் திக்கென்றது. அவர்கள் குடலுக்குள் அண்டி போவது போல ஒரு உணர்வு.

கதிரவன் முதலில் சுதாரித்தான். "ஆமாம். உண்மைதான். ஆனால் அதற்காக நேரம் கடத்த வேண்டாம். படக்கென்று நான் சென்று கனியைக் கொண்டு வருகிறேன். பிறகு யோசிப்போம் மற்றவற்றை." சொல்லிக் கொண்டே பிடிமாவின் மீது ஏறி, "பிடிமா தங்கமரத்திடம் செல்" என்றான்.

ஆனால் பிடிமாவால் பறக்க முடியவில்லை. பலவகையில் முயன்றும் பிடிமாவால் பறக்க முடியாமல் போனது. பிடிமாவின் பறக்கும் ஆற்றல் பூமியில் செயல்படவில்லை. பிடிமா தன்னிலையை விளக்கியதும் அவள் மீதிருந்து குதித்தான் கதிரவன். குதித்த வேகத்தில் விடுவிடுவென்று மண்மலையில் கால் புதையப் புதைய ஏறினான். விரைவில் உச்சிக்குச் சென்று வைரக் கனியைப் பறிப்பதற்காக கையை வைத்தான். ஆனால்... மண்மலை கிடுகிடுவென்று ஆடியது. சரேல் சரேல் என இரண்டு பெரிய நச்சுப்பாம்புகள் மண்மலைக்குள் இருந்து எழும்பிச் சீறின.

கனியோடு இரண்டு மூன்று இலைகளையும் கொத்தோடு பறித்தவன் மண்மலையில் தரதரவென உருண்டான். சித்திரையும் பிடிமாவும் கத்தினார்களே ஒழிய... அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சின்னப் பாம்புகள் என்றால் கம்பெடுத்து அடிக்கலாம். பிடிமாவும் தும்பிக்கையால் தூக்கி விசிறலாம். ஆனால் இவையோ முப்பதடி நீளம். அதிலொன்று கதிரவனைக் குறிவைக்க மற்றொன்று சித்திரையையும் பிடிமாவும் குறிவைத்தது.

"பொம்மைகளே" அண்டி கதறிக் கொண்டு ஓடி வந்தாள். வந்தவள் முதல் பாம்பைப் பிடித்துப் பிதுக்கத் தொடங்கினாள். அதன் வாயிலிருந்து நஞ்சு கொழகொழவென்று ஊதா நிறத்தில் கொட்டியது. பல்வலி மனிதர்களுக்கே வேதனை தருவது. அதில் நஞ்சை வைத்திருக்கும் பாம்பிற்கு? நச்சுப்பல்வலி தாளாமல் காஆஆஆஆஆஆய் என்று ஓலமிட்டது நாகம். கூட்டாளிக்கு ஆபத்து என்றதும் அடுத்த நாகம் கதிரவனை விட்டுவிட்டு அண்டியின் மீது தாவியது.

அதை வலக்கையால் பிடித்தாள் அண்டி. இரண்டு நாகங்களும் கழுத்து நசுக்கப்பட்டு ஓலமெழுப்பின.

"பொம்மைகளே.. இப்படியா விளையாட்டுத்தனமாக இருப்பது! பாருங்கள்..எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டீர்கள். நான் என்ன செய்வேன்! நீங்கள் முதலில் ஓடுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள். இந்த நாகங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்."

அண்டி பொம்மைகளைப் பார்த்து உண்மையிலேயே பரிதாபப் பட்டுக் கூறினாள். ஆனால் உண்மையிலேயே அவளது நிலைதான் மிகப் பரிதாபமாக இருந்தது. இரண்டு நாகங்கள். அதுவும் முப்பதடி நீளமுள்ள நச்சு நாகங்கள். அண்டி வீராங்கனைதான். ஆனால் நஞ்சின் முன் என்ன செய்ய முடியும். நாகங்கள் கக்கிய நஞ்சைத் தொடாமல் தவிர்த்து வந்தாள். ஆனால் கக்கும் பொழுது எழும் சாரல் அவளை லேசாக மயக்கியது. அதுதான் சமயமென்று இரண்டு நாகங்களும் அவள் காலைச்சுற்றி இழுத்தன. எப்படியாவது விசத்தை மிதிக்க வைத்து விட வேண்டும் என்றுதான்....

அண்டியின் பிடியோ லேசுமாசாக இல்லை. முதலில் பிடிபட்ட பாம்பின் நச்சுப்பல்லே பிதுங்கிக் கீழே விழுந்தது. விசப்பையும் கிழிந்து நஞ்சு கொட்டியது. வேதனையில் கதறிக் கதறி உயிர் விட்டது அந்த நாகம். ஆனால் இரண்டாம் நாகம் அவள் காலை இழுப்பதில் சற்று வெற்றி கண்டு நஞ்சைத் தொட வைத்தது. சுரீல் என்று விரலைத் தொட்ட நஞ்சு பரபரவென காலில் ஏறியது. ஆத்திரத்தின் உச்சிக்கே போனாள் அண்டி. தான் மாண்டாலும் நாகத்தைக் கிழித்து விட வேண்டும் என்று தனது வலிமையெல்லாம் திரட்டி அதன் வாலைப் பிடித்தாள். பிடித்த வாலை நகத்தால் கீறிக் கிழித்தாள். அந்த கிழிசலையே பிடித்து இழுத்து டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று நாகத்தை இரண்டாகக் கிழித்துப் போட்டாள்.

"பொம்மைகளே... இனிமேல் உங்களுக்கு நாகத்தால் கெடுதி இல்லை. விரைந்து செல்லுங்கள். மிக விரைந்து...." சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே நஞ்சு தலைக்கேறி முழுவுடலும் நிறம்மாறி மாண்டாள் அண்டி.

பார்த்துக் கொண்டிருந்த மூவரும் பேச்சடைத்துப் போயிருந்தார்கள். யாரிடம் மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தார்களோ...அவள் வழியாகவே தங்கமரத்திற்கு வழி தெரிந்து...அந்த மரத்தையும் அடைந்து ....அங்கு சிக்கிக் கொண்ட ஆபத்தில் இருந்து அவளாலேயே காப்பாற்றப்பட்டு...அதற்காக அவளே உயிரை இழந்து.....ச்சே என்று ஆனது அவர்களுக்கு.

இவர்கள் வயிற்றில் போகும் பொழுதே அண்டிக்கு வயிறு கலங்கியது. என்னவோ என்று எழுந்து பார்த்தவளுக்கு விவரம் விரைவிலேயே புரிந்து போனது. அதனால் பொம்மைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று விரைந்து வந்தாள்.

அட்டகாசப் பேர்வழியானாலும் அண்டிக்கும் அன்புண்டு என்று புரிந்ததன் பலன் அவர்களின் கண்களில் கண்ணீராகப் பெருகியது. ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டார் வருவரோ! சிறிதுசிறிதாக மனதைத் தேற்றிய அவர்களுக்கும் அடுத்த பிரச்சனை நினைவிற்கு வந்தது. அதாவது எப்படி வெளியே செல்வதென்று.

அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அங்குமிங்கு நடந்தார்கள். அப்படி நடந்தவர்கள் கண்ணில் பட்டதுதான் தணலேரி. நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருந்த அந்த ஏரியை எப்படிக் கடப்பது என்பதே யோசனை. ஆனால் எதிர்பாராத உதவி அப்பொழுது வந்தது.

தொடரும்....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, June 17, 2008

தங்க மரம் - 16

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

பாகம் - 16

அண்டியின் குகையிலேயே நாம் மூவரை விட்டு வந்துவிட்டோமே. அதுவும் தங்கமரத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற வழிகளில் ஒன்றைத் தெரிந்த கொண்ட மூவரை. அண்டி சொன்னதைக் கேட்டதில் இருந்தே மூவருக்கும் ஒரே சிந்தனை. அதுவும் தங்கமரத்தை அடைவதை அல்ல. அண்டியின் கச்சையின் முடித்து வைக்கப்பட்டிருக்கும் திறவுகோலை அடைவதற்கே சிந்தனை.

எவ்வளவு சிந்தித்தாலும் மூவருக்கும் தோன்றிய ஒரே வழி...அண்டி தூங்கும் பொழுது திருடுவது என்பதுதான். அண்டி தூங்கத் தொடங்கினால் அவளை அவ்வளவு எளிதில் எழுப்ப முடியாது என்று அங்கு தங்கிய ஒரு இரவிலேயே புரிந்து விட்டது. ஆனால் அவளது குறட்டையொலிதான் காதுகளைக் கம்பியால் குடைந்தது.

அண்டி தூங்கிய பிறகு வேறுவழியில்லாமல் அவளது அறைக்குள் நுழைந்தார்கள். நுழையும் பொழுதே கப்பென்று கெட்ட வாடை மூக்கில் ஏறியது. காதையாவது பஞ்சை வைத்து அடைக்கலாம். மூக்கை? காரியத்தை முடிக்க வேண்டுமே. திருடும் பொறுப்பு சித்திரைக்குப் போனது. கதிரவன் என்னதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் குசும்புகளில் சித்திரையை அடித்துக்கொள்ள முடியாது. பிடிமா சித்திரையைத் தூக்கிக் கொண்டு அண்டியின் கச்சையின் அருகில் பறந்தது. பிடிமாவின் மீதிருந்து சரியாகக் கச்சையில் குதித்தான். குதித்த வேகத்தில் அண்டி எழுந்து விடுவாளோ என்று அச்சம். ஆனால் அதற்கெல்லாம் அண்டி அசைவதாகத் தெரியவில்லை.

அவள் மீது இறங்கியதுமே சித்திரைக்கு வயிற்றைப் பிரட்டியது. குளித்தறியாத அண்டியின் கச்சையில் ரோஜா வாடையா எழும்பும்!!!! வேறு வழியில்லாமல் மூக்கையும் மூச்சையும் பிடித்துக் கொண்டு கச்சைக்குள் நுழைந்தான். அந்த ஒரு நொடியிலேயே உலகத்தின் எந்த நாற்றத்தையும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்ற அதிபயங்கர திறமையைப் பெற்றான் சித்திரை.

திறவுகோலைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. ஓரடி நீளமுள்ள இரும்புத் திறவுகோலை ஒருவழியாகக் கச்சைக்கு வெளியே இழுத்து வந்தான். அலும்பு தெரிந்தாலும் நேரத்தைக் கடத்த விரும்பாமல் அண்டியின் வயிற்றை நோக்கி நடந்தான். பிடிமாவின் மீது ஏறிய கதிரவும் அண்டியின் வயிற்றுக்கே வந்து விட்டான். அருகில் இருந்து பார்க்கையில்தான் அண்டியின் வயிற்றோடு சேர்ந்த பூட்டு தெளிவாகத் தெரிந்தது. மூவரும் சுற்றி நின்று கிணற்றுக்குள் பார்ப்பது போலப் பார்த்தனர். கதிரவன் சைகை காட்டியதும் சித்திரை திறவுகோலைப் பூட்டில் நுழைத்துத் திருகினான். கிர்ர்ர்ர்ர்ரென்று துருப்பிடித்த ஓசையோடு பூட்டு திறந்தது.

கரகரவென வயிற்றின் நடுவில் பூட்டு இருந்த இடத்தில் ஒரு குழி திறந்தது. உள்ளே ஒரே இருட்டு. ஆனால் முதற்படி மட்டும் கண்ணில் திறந்தது. நல்ல பெரிய படி. பிடிமாவே நிற்கலாம். கதிரவன் குசுகுசுவெனச் சொன்னான்.

"சித்திரை..படிகள் ஒன்றும் பெரிதாக இருக்கின்றன. இது போல எத்தனை படிகள் இருக்குமோ தெரியாது. முதலில் நான் இறங்குகிறேன். பிறகு பிடிமா இறங்கட்டும். பின்னால் திறவுகோலை எடுத்துக் கொண்டு நீயும் வா." சொன்னவன் முதற்படியில் இறங்கி நின்றான்.

நின்ற அடுத்த நொடியில்தான் விபரீதம் புரிந்தது. படி தானாக நகரத் தொடங்கியது. படக்கென்று வேகம் பிடித்து இருளுக்குள் மறைந்தது. பிடிமாவும் சித்திரையும் அதிர்ந்து போனார்கள். ஆனால் உடனே மற்றொரு படி அங்கு தோன்றியது. அது படிக்கட்டு அல்ல...நகரும் படி என்று புரிந்து கொண்டனர் இருவரும். நேரம் கடத்த விரும்பாமல் பிடிமா அடுத்த படியில் இறங்கினாள். அதுவும் விர்ரென்று உள்ளே நகன்றது. அடுத்த படியில் இறங்கினான் சித்திரை. இருட்டுக்குள் படி வழுக்கியது. எங்கோ பாதாளத்திற்குள் இறங்குவது போல அப்படியொரு வேகம். ஆனால் சுற்றிலும் என்ன இருக்கிறது என்றே தெரியாத இருட்டு. எங்கோ படியின் வேகத்தால் கதிரவன் கத்தும் ஒலியும் பிடிமாவின் பிளிறலும் கேட்டுத்தான் அவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

இன்ன குறிப்பிட்ட திசையில்தான் சென்றது என்றில்லை. கண்ட பக்கமும் படி சரக்சரக்கென்று திரும்பியது. வலது பக்கமே போவது போல இருக்கும். திடீரென வெடுக்கென்று இடப்பக்கம் திரும்பி படக்கென்று கீழே இறங்கும். ஒவ்வொரு சமயம் மேலே எழும்பும்...ஆனா எழும்பிய பிறகு தட்டை யாரோ நழுவ விட்டது போல படியும் விழும். முதலில் மூவரும் கத்திக்கதறினாலும் நேரம் செல்லச் செல்ல பழகி விட்டது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் விழுந்து விடுவார்களோ என்ற அச்சமும் தேவையில்லாமல் போனது. ஏனென்றால் ஓரிடத்தில் படி தலைகீழாகத் திரும்பிச் சென்றது. ஆனால் அவர்களும் கீழே விழவில்லை. அவர்களிடமிருந்த பொருட்களும் உடைகளும் கூடக் கீழே விழவில்லை. படியைப் பொருத்தவரையில் நேராகவே நிற்பது போன்ற நிலை.

எவ்வளவு நேரம் என்று கணக்கிட முடியாத நேரம் இந்தப் விசித்திரப் பயணம் தொடர்ந்தது. படுவேகத்தில் சென்று கொண்டிருந்த கதிரவனின் படி திடீரென்று நின்றது. ஒரு நொடியில் நின்றதும் தடுமாறினான் கதிரவன். பின்னாடியே பிடிமாவின் படியும் வந்து இடித்துக் கொண்டு நின்றது. அடுத்து இரண்டு மூன்று நொடிகளில் திறவுகோலோடு வரும் சித்திரையின் படியும் நிலைக்கு வந்தது. ஆனாலும் இருள் விலகவில்லை. கதிரவன் துணிச்சலோடு காலை எடுத்து வைத்தான்.

அடுத்த நொடியே அவன் ஒளிநிரம்பிய ஓரிடத்தில் அவன் இருந்தான். ஆனால் எங்கிருந்து வந்தோம் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் வெளிச்சம் நிரம்பிய புது இடத்தில் இருந்தான். அப்படியே பிடிமாவும் சித்திரையும் கூட வந்து விட்டார்கள். இருட்டில் இருந்து வந்ததால் அவர்களுக்குக் கண்களைக் கூசியது. இடுக்கிக் கொண்டு பார்த்தார்கள். அவர்கள் பார்வைக்கு முதலில் தெரிந்தது தங்கமரம்.

தொடரும்....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Saturday, June 14, 2008

தசாவதாரம் விமர்சனம்

ஹறி ஓம் நாறாயணாய நமக

இனிமேல் இந்த விமர்சனத்தைப் படிக்கின்றவர்கள் ஹறியருளால் திரைப்படத்தின் கதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்படியால்...விரும்பதாவர்கள் மேற்கொண்டு படிக்காமலும்...விரும்புகிறவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இல்லாதிருக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

உலகநாயகன் என்று தமிழ் கூறும் திரையுலகத்தாலும் ரசிகர்களாலும் போற்றப்படும் திரு.தாமரைநகையானாகிய கமல்ஹானசன் நடித்த தசாவதாரம் திரைப்படமானது கி.பி 12ம் நூற்றாண்டிலே... அதாவது கொடுங்கோற் சைவர்கள் பேயாட்சி செய்த ஊழிக்காலத்தில்...உத்தமர்களும் அமைதிவிரும்பிகளும் நற்சிந்தனையாளர்களுமாகிய வைணவர்கள் நாள்தோறும் அல்லலுற்று அழுது தொழுது பயனில்லாமல் போயிருந்ததுமான பாவப்பட்ட பொழுதுகளில் தொடங்குகிறது.

நம்பிராஜன் பாத்திரத்தில் வீரம் கொப்புளிக்க நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல். ஆளுடைப்பிள்ளையாரைப் போலச் சிறுவனுக்கு வேடமிட்டுக் கல்லெறிய வைத்த கமலின் சிந்தனை சமயவொற்றுமை என்பதேயன்றி வேறொன்றில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணரும் வகையில் இருப்பதை மறுக்கவே முடியாது. அஞ்சும் எட்டும் ஒன்றுதான் என்ற நற்பண்பு எல்லாரும் பழக வேண்டியதேயானாலும் உயிரே போனாலும் அஞ்செழுத்தைச் சொல்ல மாட்டேன் என்று ஆவேசம் கொண்டு எட்டெழுத்தை முழங்குவது தான் அஞ்சாம்படை இல்லை என்று காட்டத்தான் என்பதையும் படம் பார்க்கும் அனைவரும் குற்றமற உணர்வர்.

முப்புரி நூலைக் காட்டி...பிரதோஷாங்கள் சூழ்ந்த மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷமும் சூழ நேறிடும் என்று மிரட்டும் பொழுது ஒரே கல்லில் இரண்டு மாந்தோப்பையே அடித்து விடும் அறிவாற்றலை வியந்து வியந்து பாராட்ட வேண்டியிருக்கும் என்பதையும் யாரும் மறந்து விட முடியாது. எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போகாது என்று சொல்வது கூட நமக்கெல்லாம் கணக்குப் பாடம் எடுக்கும் சீறிய நல்லெண்ணம் என்பது போற்றுதலுக்குரியது.

இப்படிப் பட்ட புளகாங்கிதங்களோடும் தொடங்கிய படம் பலப்பல நாடுகளுக்கும் செல்கிறது. நாம் திரையில் பார்த்துப் பலகாலங்கள் ஆகியிருக்கும் கே.ஆர்.விஜயா, நாகேஷ், ஜெயப்பிரதா மற்றும் ரேகா ஆகியோரை இந்தப் படத்தில் மீண்டும் காண முடிகிறது. இந்தப் படத்தின் சிறப்பே அதனுடைய தொடர்ச் சங்கிலிதான். தொடங்கிய இடத்திலிருந்து ஓங்கி உத்தமன் உலகளந்தது போல தொடர்பு விட்டுவிடாமல் செல்வதுதான். ஆனால் அந்த வளர்ச்சிக்கு முடிவே கிடையாது என்று இறுதியில் நமக்குத் தெரியும் பொழுது இறைவனின் அருளுக்கும் முடிவே கிடையாது என்ற உண்மை புலப்படும்.

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் சென்ற காகுந்தன் இந்நாளில் சுனாமியாக வந்து உலகைக் காத்த உன்னதச் சித்திரம் தசாவதாரம், உண்மையிலேயே சுனாமி வந்த பொழுது மாமல்லபுரத்தில் முருகன் கோயில் வெளிவந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது... அந்தக் கோயிலைப் பெயர்த்தெடுத்து வேறொரு சமயத்தைச் சார்ந்த யாரோ கடலில் போட்டிருக்கக் கூடும் என்ற எண்ணுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அமெரிக்க விஞ்ஞானியின் கிருமி பாமை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற அமெரிக்காவிலிருந்து மெரினாபீச் வரையில் பெருமாள் சிலையைத் தூக்கிக்கொண்டு அசினோடு ஓடிக்கொண்டேயிருப்பதுதான் கதை. கடைசியில் கடவுளே காப்பாற்றுவதுதான் கதை. இந்தக் கதையில் அலங்காரமாக பத்து கமல்கள் இருப்பதுதான் தசாவதாரம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கமல் மெனக்கெட்டிருக்கிறார் என்பதே உண்மை. அத்தனை அவதாரங்கள் எடுத்த பொழுதிலும் ராமனும் கண்ணனும் வைணவர்கள் கொண்டாடுவது போல பலராம் நாயுடுவும் பூவராகனுமே பார்க்கின்றவர்கள் மனதில் திருப்பதி வெங்கடேசர் தாடைக் கற்பூரம் போல ஒட்டிக் கொள்கிறார்கள். பலராம் நாயுடு காமெடி கலக்கல் என்றால் பூவராகன் நேர்மைக் கலக்கல்.

பாட்டி கமலும் நன்றாகத்தான் இருக்கிறது. குறிப்பாக குரலும் பேச்சும். வில்லனாக வரும் ஃப்ளெச்சர் கமலிம் நடிப்பும் அருமை. அந்த அப்பாவி முஸ்லீம் இளைஞன் கமலும் மனதில் நிற்கிறார். இருந்தாலும் நம்மை ராமபாணம் பட்ட அசுரர்கள் போல எரிச்சல் பட வைப்பது விஞ்ஞானி கமல்தான். சிலபல இடங்களில் ஹைபர் டென்ஷன் அசின் அந்த எரிச்சல்களைக் குறைக்கிறார் என்பதும் உண்மை.

இசையா? யாரோ ஹிமேஷ் ரேஷமைய்யாவாம். அவரைப் படத்தில் வரும் கற்பனைப் பாத்திரமான நம்பிராஜனின் இடத்தில் வைத்துப் பார்க்கப் பலர் விரும்பியிருப்பார்கள். அத்தனை அலுப்பூட்டும் இசை. முகுந்தா பாடல் மட்டும் தேவலாம். பேசாமல் தேவிஸ்ரீ பிரசாத்தையே பின்னணியோடு பாடல்களுக்கும் இசையமைக்கச் சொல்லியிருக்கலாம். அட... தேவையாவது கூப்பிட்டிருக்கலாம். ஹிந்தி ரசிகர்களை மனதில் வைத்து ரேஷமைய்யாவை அழைத்து வந்திருக்கிறார்கள். அதே போலப் பாடல் காட்சிகளும் அலுப்போ அலுப்பு. எழுந்து வெளியே போய்விடலாமா என்ற அளவிற்கு. அது தெரிந்துதானோ என்னவோ பாடல்களுக்கு நடுவில் சில கதைக்காட்சிகளையும் காட்டி நம்மை இருக்கையை விட்டு எழவிடாமல் செய்கிறார்கள்.

ஒரு சாதாரண ரசிகனாகப் பார்ப்பதற்கு படம் நன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாகப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு வைணவராக இருந்தால் படம் முழுக்கவே கண்டபடிக்குத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கும். அமெரிக்க வில்லன் கமல், ஜப்பான் கமல் மற்றும் ஜார்ஜ் புஷ் தவிர்த்து அனைத்து கமலுக்கும் விஷ்ணுவின் பெயர்கள்தான். அதுவும் இல்லாமல் கமலின் தந்தையின் பெயர் ராமசாமி நாயக்கர். கமல் ஏறும் லாரிகள் படகுகள்...அதிலெல்லாம் ராமானுஜம், ஸ்ரீராமஜெயம், கோவிந்தசாமி...இப்பிடி விஷ்ணுவின் பெயர்கள் இருக்கும். அதாவது கமல் விஷ்ணு சிலையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார் அல்லவா. ஆகையால் அந்தப் பெயர்கள் வருவது பொருத்தமாகவும் பார்க்கின்றவர்களை மெய்சிலிரிக்க வைக்கவும் செய்யும். அதிலும் ரயிலில் இருந்து விழும் விஷ்ணு சிலை ஆற்று மணலில் நட்டுக்குத்தலாக நிற்கும் பொழுது பின்னணி இசையோடு நமக்கு மெய்சிலிர்க்கிறது. இராம நாராயணா! என்று உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.

கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டிருந்த கமல்..கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஹி ஹி. இரண்டுக்கும் பொருல் வெவ்வேறு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் சில கமல் ரசிக நண்பர்கள் அந்த வசனத்தைச் சொல்லி பேரானந்தத்தோடு மகிழ்ந்தது புன்னகைக்க வைத்தது. அதே போல கருணாநிதி ஜெயலலிதா காட்சிகளும் காமெடியே. படத்தில் மல்லிகா ஷெராவத்தும் இருக்கிறார்.

படம் முடியும் பொழுது 12ம் நூற்றாண்டில் உள்ளே போடப்பட்ட கோவிந்தராஜன் சிலை வெளியே வந்துவிடுவது போலக்காட்டுகிறார்கள். அதைப் பார்க்கின்ற வைணவர்களுக்கு....டச்சுக்காரர்கள் கடலில் போட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வெளியே வந்தது போல....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல..... கோவிந்தராஜனும் வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம் எழுவது நிச்சயம். அந்த ஏக்கத்தில் தவறேதும் இல்லை.

மொத்தத்தில் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். பார்க்கவும் வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்புதான். ஆனால் கமலுக்கு ஒரு அறிவுரை. பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.

தசாவதாரம் வெற்றிப்படமாக அமைய எனது வாழ்த்துகள்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, June 10, 2008

தங்க மரம் - 15

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்

பாகம் - 15

ககன் தொடர்ந்து கதையைச் சொன்னான்.

"கஜன் என்ற பறக்கும் ஆனை மிகவும் அறிவாளி. வந்ததும் முதலில் காட்டில் சில ஆனைகளைச் சந்தித்துப் பழக்கமாக்கிக் கொண்டது. வெளியூரில் இருந்து வந்ததும் உள்ளூரில் பழக்கம் உண்டாக்கிக் கொள்வதைப் போல. அந்த வழியாகத்தான் இருவர் கஜனுக்குப் பழக்கமானார்கள். அவர்களின் பெயர்கள் செங்கோமான் மற்றும் இளங்கோ.அவர்கள் நல்லவர்களாக இருக்கக் கண்டு தான் வந்த காரணத்தைக் கஜன் அவர்களிடம் சொன்னது. அதாவது உனது தாயார் குடுத்தனுப்பிய மாயக்கோலும் பெட்டியும் வைத்து. அவர்களும் உதவுவதாக உறுதி கூறினார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் நான் தனியாக இருந்து எப்படி ஊழுவாயனை எதிரிப்பது அழிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தோன்றியதெல்லாம் ஒரே திட்டந்தான். எங்கள் அரசர் பூரசிடமிருந்து திருடிய மந்திரக்கோலை திரும்பவும் எடுத்துக் கொண்டால் ஊழிவாயனின் ஆற்றல் அழிந்து விடுமல்லவா. திரும்ப எப்படி எடுப்பது?

பூரசு மன்னரின் மந்திரக்கோல் பூகன்களுக்குச் சொந்தமான தங்கமரத்தின் கிளைகளை ஒடித்து உருக்கிச் செய்யப்பட்டது. அந்தத் தங்கமரத்தின் பூவோ கனியோ ஒருவரிடம் இருந்தால் அவரை மந்திரக்கோல் எதிர்க்காது. ஏனென்றால் அவை தாய்மரத்து உறவுகள். இந்தத் திட்டத்தோடு தங்கமரத்தை நோக்கிச் சென்றேன்.

தங்கமரத்தை அடையும் வழி பூகன்களுக்கே தெரியும். ஒவ்வொரு வழியிலும் ஒவ்வொருவிதமான காவல்கள் உண்டு. அத்தனை வழிகளும் எனக்குத் தெரியாது என்றாலும் ஒன்றிரண்டு மட்டும் தெரியும். அவற்றில் மிகவும் எளிதான வழி குண்டக்குழியில் இறங்குவது. அருகிலுள்ள காட்டின் நடுவில் சிறிய மலையுச்சியில் ஒரு குண்டக்குழி உள்ளது. அந்தக் குழியில் எப்பொழுது நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். அந்த நெருப்பில் குதித்தால் முப்பது நிமிடங்களில் தங்கமரத்தை அடைந்து விடலாம். அதாவது தணலேரியில் கரையேறலாம்.

ஆனால்...அந்த முப்பது நிமிடங்களும் நெருப்பின் சூடு குதிப்பவரை வாட்டும். ஆனால் உடலுக்கும் உயிருக்கும் எந்த ஆபத்தும் நேராது. முப்பது நிமிடம் முடிந்ததும் வேதனை பறந்து விடும். திரும்பி வருவதற்கும் அதே வழிதான். எங்கள் இனத்தைக் காப்பதற்காக இந்த ஒரு மணி நேரச் சித்திரவதையை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து காட்டிற்குள் நுழைந்தேன்.

அப்பொழுதுதான் கஜன், செங்கோமான் மற்றும் இளங்கோ ஆகியோரைச் சந்தித்தேன். அவர்கள் ஊழிவாயனைத் தேடிச் சென்று கொண்டிருந்தார்கள். எப்படியோ எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. கஜன் பூமியில் இருந்தாலும் உனது தாய் லிக்திமா அதனோடு தகவல் தொடர்பு வைத்திருந்தார். ஆகையால் தங்கமரத்தைப் பற்றிய செய்தியை அவரிடம் சொன்னேன். அவருக்கும் அந்தத் திட்டம் நல்ல திட்டமாகவே பட்டது. நான் தனியாள் இல்லை என்ற தெம்போடு மூவரையும் அழைத்துக் கொண்டு மலையேறினேன்.

நால்வரும் குண்டக்குழியில் குதித்தோம். நெருப்பு சுட்டது. தசை வலித்தது. தாள முடியாத வேதனை. தணியாத தண்ணீர்த் தாகம். ஆனால் எங்களுக்கும் எங்கள் பொருள்களுக்கும் எந்த அழிவும் உண்டாகவில்லை. முப்பது நிமிட மரணவேதனைக்குப் பிறகு தணலேறியில் இருந்தோம். ஒருவழியாகக் கரையைப் பற்றி ஏறினோம். அங்கே யாரும் ஏற முடியாத மண்மலை. ஏறினால் வழுக்கும். அந்த மலைமீதுதான் தங்கமரம் இருந்தது.

அந்த மரத்தின் அழகை எழுத்தில் வடிக்கவே முடியாது. பார்த்த எவராலும் விவரித்துச் சொல்லவே முடியாது. பசும்பொன்னிறத்து மரத்தில் மரகத இலைகள் பலபச்சை நிறங்களில் துளிர்த்து தடித்து அசைந்தாடும். அந்த மரகத இலைகளின் ஊடாக பவழ மொட்டுகள் முழித்துக்கொண்டிருக்கும். அந்த மொட்டுகள் மாணிக்கக் காய்களாகி வைரக் கனிகளாகும். அந்த மரத்தை அடைந்த எங்களுக்கு அப்பொழுதுதான் ஊழிவாயனின் அறிவு புரிந்தது. ஆம். தங்கமரத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு அதற்குக் காவல் வைத்திருந்தான்.

அதுவும் இரண்டு நச்சுநாகங்களின். முப்பதடி நீளமுள்ளவை அந்தப் பாம்புகள். அவைகளின் பற்கள் நஞ்சில் ஊறியூறி நீலமானவை. அந்தப் பல்லால் கடிக்க வேண்டும் என்ற தேவையில்லை. பட்டாலே போதும் பரலோகம்தான். அந்த இரண்டு நாகங்களும் மரத்தைச் சுற்றி மண்மலையில் ஊர்ந்து கொண்டிருந்தன. அவைகளைப் பார்த்ததும் நான் சற்றுப் பயந்து பின்வாங்கினேன். பின்னால் இருந்த தணலேரியை நான் கவனிக்காமல் அதில் தடுமாறி விழுந்தேன். அது முப்பது நிமிடம் என்னை உள்ளே இழுத்துக் குண்டக்குழியில் திரும்பவும் தள்ளியது. அவர்கள் மூவரையும் அங்கேயே விட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில் சுடுநெருப்பின் வேதனையையும் பாராமல் திரும்பவும் குதித்தேன். ஆனால் தங்கமரத்தில் அருகில் அந்த மூவரும் இருக்கவில்லை. ஆனால் இரண்டு நச்சுநாகங்கள் மட்டும் வெறியோடு ஊர்ந்து கொண்டிருந்தன. அதற்கு மேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து திரும்பவும் பூகனூரில் வந்து இருக்கிறேன். அடிக்கடி தங்கமரத்திற்குச் செல்வேன். ஆனால் எதுவும் செய்ய முடியாமல் வருத்தத்தோடு திரும்பி வருவேன். இதுதான் நீ கேட்ட கேள்விகளுக்கான விடை."

சொல்லி முடித்த ககனின் முகத்தில் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையின் வலி தெரிந்தது. அப்பொழுது தனிமா கேட்டாள். "ககன் என்னைத் தங்கம்ரத்திற்கு அழைத்துச் செல்வாயா?"

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Thursday, June 05, 2008

பிரியாணி - 2

ஒரு வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிறனும். அதுவும் குடும்பத்தோட. அந்த வீடு பெருசுன்னாலும் அந்த வீட்டுக்குல பெரும்பகுதி அப்பாவோட அலுவலகம். அங்க தெனமும் காலைல வேலைக்கு வருவாங்க. சாந்தரம் போயிருவாங்க. அவங்களுக்கு யாருக்குமே தெரியக் கூடாது. வெளியவும் வரமுடியாது. இப்பிடி ரெண்டு வருசம் இருக்கனும். தெரிஞ்ச ஒரு நபர் மட்டும் வீட்டுக்கு வேண்டியதைத் திருட்டுத்தனமா கொண்டு வந்து குடுப்பாரு. அதுகூட அளவாத்தான் இருக்கும். வயசோ 13-14க்குள்ள. அதுலயும் பொண்ணு வேற. என்ன பண்றது?

நாஜிகளைப் பத்திக் கேள்விப்பட்டவங்களுக்கும் நிறைய புத்தகம் படிக்கிற ஆர்வம் இருக்குறவங்களுக்கும் நான் சொல்ல வர்ரது புரிஞ்சிருக்கும். ஆமா. ஆனா பிராங்க். அந்தப் பொண்ணோட பேரு. ஜெர்மனியில் பிறந்த யூதப் பெண். அங்க நாஜிகளின் தொல்லையால நெதர்லாந்து தப்பிச்சு வந்த குடும்பம். ஆம்ஸ்டர்டாமில் ஒரு உணவுப் பொருள் தொழிலை உருவாக்கி வாழத் தொடங்குறாங்க. அப்பத்தான் வருது இரண்டாம் உலகப்போர். ஜெர்மனிக்காரங்க ஆம்ஸ்டர்டாமைப் பிடிச்சிர்ராங்க. யூதர்கள் எல்லாரும் நாட்டை விட்டுப் போயிரனும்னு சொல்றாங்க. இத நெதர்லாந்து மக்கள் ஒத்துக்கலை. ஆனால் ஜெர்மானிய ராணுவம் வெச்சதே சட்டம்.

வேற வழியில்லாம இந்த ஒளிஞ்சு வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறாரு ஆனாவின் அப்பா. கொஞ்சம் கூடச் சத்தமே வரக்கூடாது. ஏன்னா பகல்ல கீழ வேலை செய்றவங்க. இரவுல அமைதி. கொஞ்சம் சத்தம் போட்டாக்கூட வெளிய தெரிஞ்சு போகும் வாய்ப்பு உண்டு. ரெண்டு வருசம் இப்பிடி வாழ்க்கை. ஆனா அப்புறம் ஜெர்மனிக்காரங்களுக்குத் தெரிஞ்சு போகுது. அப்புறம் என்ன...பிடிச்சிக் குடும்பத்த ஜெர்மனிக்குக் கொண்டு போயிர்ராங்க. அங்க போய் குடும்பத்தைப் பிரிச்சி சிறைகளில் அடைச்சுக் கொடுமை படுத்துறாங்க. அதுல எல்லாரும் இறந்து போயிர்ராங்க. அப்பா ஓட்டோ பிராங்கைத் தவிர. போருக்குப் பிறகு ஆம்ஸ்டர்டாமுக்குத் திரும்பி வர்ரவர் கிட்ட ஒரு டைரியைக் குடுக்குறாங்க அவங்களுக்கு ரெண்டு வருஷமா உதவிய பெண்மணி.

ஆனாவோட 13வது வயதுல அவர் கொடுத்த பரிசு அந்த டைரி. இரண்டு வருட வாழ்க்கைல நடந்ததையெல்லாம்...தன்னுடைய மனதில் இருந்ததையெல்லாம்.... அந்த டைரியில் அன்பா, ஆசையா, கோவமா, இயலாமையா, வெறுப்பா, அகிம்சையா... பலவிதங்கள்ள பதிஞ்சு வெச்சிருக்கா அந்தப் பொண்ணு. கைதுக்குப் பிறகு அந்த அறையிலிருந்து உதவி செய்த பெண் சேகரிச்சுப் பத்திரமா வெச்சிருந்து குடுத்திருக்காங்க. அந்த டைரியை வாங்குன ஒரு தந்தையோட மனநிலையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அப்பப்பா! அத டைரியாவா பாத்திருப்பாரு? அந்த மக பொறந்தப்ப கைல எப்படி வாங்குனாரோ.. அப்படித்தான வாங்கீருப்பாரு. பாவம்யா அந்த மனுசன். வாங்கருனவரு அதைப் புத்தகமாப் பதிப்பிச்சாரு. ஆனா பிராங்கின் டைரி என்ற பெயரில் மிகப் பிரபலம் பெற்றது அந்தப் புத்தகம். இப்ப அந்த வீடு ஆம்ஸ்டர்டாம்ல ஒரு கண்காட்சியா இருக்கு. சகிப்புத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டா.

கீழ்க்கண்ட சுட்டிகள்ள போய்ப் பாருங்க. இன்னும் நெறைய விவரங்கள் கெடைக்கும்.

http://en.wikipedia.org/wiki/Anne_Frank
http://www.annefrank.org/

http://en.wikipedia.org/wiki/The_Diary_of_a_Young_Girl

************************************************************

இங்க நெதர்லாந்துல வேலை நிறுத்தப் போராட்டமாம். அதுவும் பேருந்துகள். எதுக்கு வேலை நிறுத்தம்? சம்பளம் கூட்டத்தான். வேற எதுக்கு இருக்கும்!!!! ஆனா பாருங்க அவங்க வேலை நிறுத்தம் பண்ணனும்னு முடிவெடுத்த நேரம் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குப் பரிச்சை நடக்குற நேரம். ஜூன் 1ல இருந்துதான் எல்லாப் பள்ளிக்கூடமும் விடுமுறை. அப்ப எப்படிப் போராட்டம் பண்றது!

லீவு இன்னும் விடலை. இப்பப் போராட்டமும் பண்ணனும். பிள்ளைகளுக்கும் தொந்தரவா இருக்கக் கூடாது. அதுக்கு என்ன செய்யனும்!!!!! செஞ்சாங்களே!

அதாவது காலைல ஆறு மணில இருந்து ஒம்பது மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும். அதே போல மாலை நாலு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும். ஆனா அப்ப யாருக்கும் பயணச்சீட்டு குடுக்கப்பட மாட்டாது. அதாவது காசு குடுக்க வேண்டாம். (நம்மதான் புத்திசாலியாச்சே! ஏற்கனவே பாஸ் வாங்கி வெச்சிருக்கோமே!!!!). மத்த நேரத்துல எல்லாம் பேருந்துகள் ஓடாது. டிராம், மெட்ரோ பயன்படுத்திக்க வேண்டியதுதான்.

இப்ப ஜூன் ஒன்னாந் தேதி வந்துருச்சுல்ல. ஆகையால முழு அடைப்பு பேருந்துகளுக்கு. டிராம்+மெட்ரோவே சரணம். போராட்டம்னு வந்தாலும் கோரிக்கைன்னு வந்தாலும் பள்ளிப்பிள்ளைகளின் படிப்புன்னு வந்தா அதை மதிச்ச பெருந்தன்மையைப் பாராட்டித்தான் ஆகனும்.

************************************************************

எத்தனையோ வள்ளி திருமணம் பாத்திருப்பீங்க. இந்த வள்ளிதிருமணம் பாருங்க. வயித்து வலி நிச்சயம். எஸ்.எஸ்.சந்திரன் முருகனாகவும் மனோரமா வள்ளியாவும் ஓமக்குச்சி நரசிம்மன் நாரதராகவும் உசிலைமணி பிள்ளையாராகவும் நடிச்சிருக்காங்க. Youtubeல இந்தப் பாடலை வலையேத்தியிருக்கும் வெல்லூர் விஜயகுமார் embedding disable செய்து வைத்திருக்கிறார். ஆகையால் இந்தச் சுட்டியை அழுத்திப் பாடலைப் பாருங்கள். சிரிப்பும் இலவசமாக வயிற்றுவலியும் உறுதியாகக் கிடைக்கும். இளையராஜாவின் பாடல்கள் நகைச்சுவையோடு ரீமிக்ஸ் செய்யப்பட்டு இளையராஜாவும் பி.எஸ்.சசிரேகாவும் பாடியிருக்கிறார்கள்.

http://uk.youtube.com/watch?v=pghHNdpt4I0அன்புடன்,
கோ.இராகவன்

Monday, June 02, 2008

தங்க மரம் - 14

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 14

அண்டி வரும் அதிர்வுகள் தெரிந்ததும் மூவரும் பொம்மையறைக்குள் வந்து விட்டார்கள். திடுதிடுவென்று உள்ளே ஓடி வந்த அண்டி எதையோ கீழே போட்டாள். ஏதோ மரத்தை வெட்டி வீழ்த்தியது போல பேரோசை.

"பொம்மைகளே...இதோ உங்களுக்காக கனிகள். வாருங்கள். உண்ணுங்கள்."

அண்டியின் அழைப்பு கேட்ட பிறகே துணிச்சலோடு வெளியே வந்தார்கள். அங்கே ஒரு பெரிய மாமரத்தையும் பலா மரத்தையும் வேரோடு பிடுங்கி வந்து போட்டிருந்தாள்.

"சாப்பிடுங்கள் பொம்மைகளே. நீங்கள் சாப்பிடும் அழகை நான் பார்க்க வேண்டும்."

அண்டியின் அன்புக்கட்டளையைத் தட்ட முடியாமல் மாம்பழங்களைப் பறித்து உண்டார்கள். பிடிமா பலாப்பழத்தைப் பிடுங்கிக் கால்களால் நசுக்கி உடைத்து உண்டாள். வயிறு நிறைந்தவுடன் மிச்சப்பழங்களைப் பிறகு உண்பதாகக் கூறிவிட்டார்கள். பொம்மைகள் சாப்பிடும் என்பதைப் பார்த்த அண்டிக்கு ஆனந்தமோ பேரானந்தம். இந்த பொம்மைகள் முன்பே கிடைத்திருந்தால் நிறைய மரங்களைப் பிடுங்கியிருக்கலாமே என்று வருத்தப்பட்டாள்.

அண்டியின் மகிழ்ச்சியைக் கண்ட கதிரவனும் சித்திரையும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள். வாயைக் கிண்டினால் ஏதாவது கிடைக்குமல்லவா.

"அண்டி...(சித்திரையைக் காட்டி) இந்தப் பொம்மை உளறுகிறது. நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன்." என்று தொடர்பே இல்லாமல் சொன்னான்.

"அப்படியா? அந்தப் பொம்மை என்ன உளறியது?"

சிரித்துக் கொண்டே சொன்னான் கதிரவன். "இப்பொழுது எங்களுக்குப் பசிக்கிறது என்று மரம் பிடுங்கிக் கொண்டு வந்தாயே... அந்த மரத்து மாம்பழங்கள் தங்கம் போல மின்னியது என்றேன் நான். இல்லை... பலாப்பழங்கள்தான் பொன்னாக ஒளிவீசியது என்கிறது இந்தப் பொம்மை. நீயே சொல். பலாப்பழங்களா ஜொலிக்கின்றன?"

கதிரவன் சொன்னது இடியோசை போலச் சிரித்தாள். "ஹா ஹா ஹா... இதெல்லாம் ஜொலிப்பா? இந்தக் கனியெல்லாம் கனியா? தங்கமரத்துக் கனியே சிறப்பாக ஒளிரும். பார்த்தாலே கண்கள் குருடாகிவிடும் அளவிற்கு அழகாக ஒளிரும்."

எதையோ சொல்லி வைக்க தங்கமரத்திற்கே குறிப்பு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து சித்திரை பேசினான்.

"அண்டி.. நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன். நான் பொம்மை என்பதால் என்னை ஏமாற்றப் பார்க்கிறாய். தங்கத்தில் மரம் இருக்குமா? அதை எப்படி நம்புவது?"

பொம்மைகள் தங்கமரத்தைப் புரிந்து கொள்ளமல் நம்ப மறுக்கிறார்களே என்று அண்டிக்கு வருத்தம் வந்தது. "பொம்மைகளே நான் உண்மையைச் சொல்கிறேன். நம்புங்கள். உண்மையிலேயே தங்கமரம் இருக்கிறது. அது முழுக்க முழுக்க தங்கம். அந்த மரத்தில் மரகத இலைகள் துளிர்த்து.. பவழ மொட்டுகள் பூக்கும். அந்தப் பவழ மொட்டுகளோ மாணிக்கக் காய்களாகி வைரக் கனிகளாகும். அந்த வைரக் கனியின் ஜொலிப்பிற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது. இதுதான் உண்மை."

அடுத்து கதிரவன் கேட்டான். "நீ பொய் சொல்ல மாட்டாய் அண்டி. நான் உன்னை நம்புகிறேன். ஆனால் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. தங்கமரம் என்று ஒன்று இருக்குமானால்... அது எங்கே இருக்கிறது?"

"ஓ அதுவா... தணலேரிக்கு அருகில் உள்ள ஏறாத மண்மலையில் உள்ளது."

"சரி. ஆனால் அங்கு செல்வதற்கு வழி இருக்க வேண்டுமே?"

பொம்மைகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தனக்கு விடை தெரிந்திருக்கிறதே என்று பெருமகிழ்ச்சி அண்டிக்கு. இவ்வளவு சிறப்பாக யாருமே இதுவரை பேசவில்லையே என்று லேசான வருத்தம் கூட எழுந்தது. ஆனாலும் தன்னுடைய அறிவைக் காட்டும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை அண்டி. "இருக்கிறதே. இதோ என் வயிற்றில். என்னுடைய வயிற்றின் தொப்புளுக்குள் இருக்கிறது தணலேரிக்குச் செல்லும் வழி.

உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனார்கள் மூவரும். சித்திரைதான் கேட்டுவிட்டான். "ஆகா.. உன் வயிற்றுக்குள் வழியா? அதுவும் தொப்புளுக்குள்ளா? அதை எப்படித் திறப்பது? யாராவது வழியைத் திறக்கிறேன் என்று வயிற்றைக் கிழித்து விட்டால்?"

"ஹா ஹா ஹா.. ஐயோ பொம்மை... இப்பிடி முட்டாளாக இருக்கிறாயே! அதனால்தான் நீ பொம்மை. இதோ அங்கிருக்கும் கதவைத் திறப்பதற்குத் திறவுகோலை இங்கே இடுப்பிடில் கட்டி வைத்திருக்கிறேனே." கச்சையில் கட்டியிருந்த சாவியையும் காட்டிக் கொடுத்து விட்டது அண்டி.

விவரங்களைத் தேவையான அளவு தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் தூங்கப் போனார்கள் மூவரும். எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருந்த பொழுது.. இங்கே என்று தானே வந்து நின்றால்....அந்த இன்பம்தான்.

------------------------

நாம் ககனையும் தனிமாவையும் நீருக்கடியில் பூகனூரிலேயே விட்டுவிட்டோம். தனிமா ககனிடம் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லத் தொடங்கனினான் ககன்.

"தனிமா, நீ எப்படி தண்ணீரில் விழுந்து பூகனூருக்குள் நுழைந்தாயோ.. அதே போலத்தான் உன்னுடைய தந்தையாகிய ஊழிவாயனும் நுழைந்தார். அவரிடம் அளப்பறிய சக்தி இருந்தது. அவருடைய பெருமைமிகு தோற்றம் அவரை எங்கள் பூகமன்னர் பூரசு நண்பராக்கிக் கொண்டார். அவரைப் பூகனூரிலேயே தங்க வைத்து கவனித்துக் கொண்டார். வந்த புதிதில் ஊழிவாயரும் ஒழுங்காகத்தான் இருந்தார். ஆனால் விரைவிலேயே அவருடைய ஆற்றல் குறையத் தொடங்கிவிட்டது. அதற்காக மன்னர் பூரசு மிகவும் வருந்தினார். ஆனாலும் ஊழிவாயனை மிகவும் மதிப்பாக நடத்தினர். பூகன்கள் பூமிக்கு நடுவில் சென்று குழம்பு எடுக்கும் துறையை அப்படியே அவர் பொறுப்பிலும் கொடுத்தார். ஆனால் அது ஊழியருக்குத் திருப்தி கொடுக்கவில்லை. அந்த நிலையில்தான் ஒரு தவறு செய்தார். ஆம். பூரசு மன்னரின் மந்திரக்கோலை திருடிக் கொண்டார். அத்தோடு நில்லாமல் மன்னரைச் சிறையிலும் அடைத்து விட்டார். பூகன்கள் அனைவரும் இனிமேல் ஊழிவாயனின் அடிமை என்றும் எதிர்த்து எதுவும் செய்தால் பூரசுக்கு ஆபத்து என்றும் மிரட்டினார். வேறு வழியில்லாமல் எல்லாரும் ஊழிவாயருக்கு அடிமையானோம். நானும் சில நண்பர்களும் தப்பித்து ஓடினோம். ஆனால் குண்டரப் பறவைகளை ஏவி எங்களை அழித்தார். என்னைத் தவிர நண்பர்கள் அனைவரும் மாண்டனர். நானும் மாண்டதாகவே ஊழியர் நினைத்துக் கொண்டார்.

ஏரிக்கு நடுவில் பூமியைக் கிழித்து...அந்தக் குழம்பு பீய்ச்சி அடித்து...ஒரு கூம்புமலையை உருவாக்கினார். அதை அவருக்கான இடமாக்கி அரசு செய்தார். அப்படியிருக்கையில்தான் உன்னுடைய தாயாரான லிக்திமா அனுப்பிய பறக்கும் ஆனை கஜன் வந்தது.

தொடரும்....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Saturday, May 17, 2008

சு-வா? ஜா-வா?

போட்டீன்னு வந்துருச்சுய்யா.... நல்லதோ கெட்டதோ... வந்தாச்சு... அப்ப என்ன செய்யனும்? ரெண்டு பேருக்கு ஒரு வேலையக் குடுத்து யாரு நல்லா செஞ்சாங்கன்னு பாக்கனும். அப்பத்தான ஒரு முடிவுக்கு வர முடியும்? அதுக்குத்தான் இந்தப் பதிவு.

இசையரசிக்கு வலைப்பூ வெச்சிருக்குறதால நான் பி.சுசீலா பாடுன பாட்டு மட்டுந்தான் கேப்பேன்னு நீங்க நெனச்சா அது தப்பு. எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரின்னு தொடங்கி இப்ப இருக்குற ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்னும் கேப்பேன். பிடிக்கனும். அவ்வளவுதான்.

ஆனா இங்க சர்வேசன் கெளப்புன பிரச்சனை பி.சுசீலாவா எஸ்.ஜானகியான்னுதான். ஆகையால மத்தவங்கள விட்டுருவோம். இவங்க ரெண்டு பேரோட நேரம்... நம்மளப் போல ஞானசூனியங்க கிட்டயும் கேள்வி ஞானங்க கிட்டயும் மாட்டனும்னு இருக்கு. என்ன செய்றது.

எஸ்.ஜானகியோட குரல் செயற்கையா இருப்பது போல எனக்கு ஒரு உணர்வு. அதுக்காக எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதோன்னு சந்தேகப்படுற அளவுக்கு எனக்கு ஐயப்பாடு கிடையாது. அவங்க பாடுன பல பாட்டுகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒன்னா ரெண்டா...நெறைய இருக்கு. ஆனா இசையரசியின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். முதலிடம் அவங்களுக்கு. அவ்வளவுதான். அதுனால எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதுன்னு சொல்ல மாட்டேன்.

சரி. பதிவோட மையக்கருத்துக்கு வருவோம். எஸ்.ஜானகியா பி.சுசீலாவான்னு போட்டி வைக்கனும்ல. ரெண்டு பேத்துக்கும் ஒரே பாட்டைக் குடுத்துப் பாட வைப்போமா?

வைதேகி காத்திருந்தாள் படத்துல பி.சுசீலா பாடுன ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாட்டு இங்க இருக்கு.


அதே பாட்டைத் தெலுங்குல எஸ்.ஜானகி பாடியிருக்காங்க. ஜாபில்லிக்கோசம் ஜாபில்லிக்கோசம்னு. அந்தப் பாட்டு இங்க.ரெண்டையும் கேட்டுப் பாருங்க. உங்க கருத்து என்னனு மட்டும் சொல்லுங்க.

இப்ப ஒரே பாட்டை ரெண்டு பேரையும் பாட விட்டுக் கேட்டோம். ரெண்டு பேரும் ஒரே பாட்டுல பாடுனா? அதுக்கும் இளையராஜா கிட்டயும் எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்டயும் பேசி ஏற்பாடு செஞ்சாச்சு. ஆளுக்கு ஒரு பாட்டு கச்சிதமா போட்டுக் குடுத்துட்டாங்க.

கற்பூர தீபம் படத்துல காலம் காலமாய் பெண்தானே கற்பூர தீபம்னு ரெண்டு பேரும் சேந்து பாடுறாங்க. கேளுங்க. கேட்டுட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க.அடுத்து யாருய்யா.. ஓ.. எம்.எஸ்.விஸ்வநாதனா? என்ன படங்க? சொல்லத்தான் நினைக்கிறேனா? நினைச்சுக்கிட்டே இருந்தா எப்படி? சொல்லுங்க. ஓ! படத்தோட பேரே அதானா? அந்தப் படத்துல பல்லவி என்று மன்னன் கேட்கப் பாடுவேனடின்னு ரெண்டு பேரும் பாடுறாங்க. கேளுங்க. கேளுங்க.
அட... ஒரு டூயட் பாட்டு வேற இருக்கா. சூப்பர். யாரு கூட டூயட். எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூடயா. அப்பச் சரி. என்ன படம்? கண்ணில் தெரியும் கதைகளா? என்ன பாட்டு? நான் ஒரு பொன்னோவியம் கண்டேன். நல்ல பாட்டு. இந்தப் படத்துல இந்தப் பாட்டுக்கு மட்டும் இளையராஜா இசை. சரி. அந்தப் பாட்டையும் கேட்டுருவோம்.என்னது கன்னடப் பாட்டு விட்டுப் போயிருச்சா? என்ன பாட்டு? பிரியாங்குற படமா? ஸ்ரீதேவி நடிச்சாங்களே.. ரஜினிகாந்த். ஆமா.. அந்தப் படத்துல டார்லிங் டார்லிங்குன்னு ஒரு பாட்டு பி.சுசீலா பாடியிருக்காங்க. அதுக்கென்ன? ஓ! அந்தப் படத்த கன்னடத்துல டப்பிங் பண்றப்போ அதே பாட்டை எஸ்.ஜானகி பாடியிருக்காங்களா? அப்பச் சரி. அதையும் கேட்டுருவோம்.

எஸ்.ஜானகி பாடியதுபி.சுசீலா பாடியது

என்ன மக்களே...எங்க ஓட்டுப் போடுறதுன்னு பாக்குறீங்களா? இங்க ஓட்டெல்லாம் போட வேண்டாம். கருத்து சொன்னாப் போதும். ஏன்னா இவங்க ரெண்டு பேருமே இசைத்துறையில் நிறைய சாதிச்சவங்க. நம்ம ரசிகர்கள். ஆகையால நம்ம கருத்துகளை மட்டும் சொல்லலாம். அந்த உரிமை நமக்கு இருக்கும். மக்களே ஸ்டார்ட் தி மூசிக் :)

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

பிரியாணி - 1

அதாவதுங்க.. பிரியாணின்னா நமக்கு ... அதாவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடைசியா இந்தியாவுல சாப்ட பிரியாணி இன்னும் மறக்க முடியாம இருக்கு. அதுவும் காரசாரமான ஐதராபாத் பிரியாணி. ருசி நாக்குலயே இருக்கு.

சரி கதைக்கு வருவோம்...

கியோக்கன்ஹாஃப் (Keukenhof) அப்படீங்குற ஊர் பேர் உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. ஆனா அங்க என்ன இருக்குன்னு சொன்னா உங்களுக்குக் கண்டிப்பாத் தெரியும். டூலிப் (tulips) மலர்த் தோட்டங்களை அந்நியன் படத்துல கூமாரீஈஈஈஈஈன்னு பாடுவாரே... அந்தத் தோட்டங்கள்தான்.

போன வருசம் நான் இங்க நெதர்லாந்து வந்தப்பவே போயிருக்க வேண்டியது. ஆனா பாருங்க இந்தத் தோட்டங்கள் மூனு மாசத்துக்குத்தான் இருக்கும். அப்புறம் பூவே இருக்காது. மார்ச்சுல இருந்து மே மாசத்துக்குள்ளதான் பாக்க முடியும்.

நான் இங்க வந்தது ஏப்ரல் கடைசி. வந்து ஒரு வாரத்துலயே அம்மை போட்டுருச்சு. அதுல இருந்து எந்திரிச்சு தெளிவாகுறதுக்குள்ள தோட்டங்கள் காஞ்சு போச்சு. இந்த வருசம் எப்பிடியாச்சும் போயிருனுமப்போய்னு இருந்தப்பதான் அம்மாவும் அப்பாவும் ரெண்டு மாசத்துக்கு இங்க வந்தாங்க. இப்ப இங்கதான் இருக்காங்க.

சரீன்னு அவங்களையும் கூட்டீட்டு போனேன். அவங்க ஐரோப்பாவுல மொதல்ல போன சுற்றுலா கியோக்கன்ஹாஃப்க்குத்தான். ரொம்பவே ரசிச்சாங்க. ஒரு மாதிரி மூடுன மேகங்கள். அப்பப்போ தெறிச்ச தூறல்கள். ஒன்றா ரெண்டா என்று கூட்டிப் பாக்க நமக்கு 20 வெரல்களுக்கு மேல இல்லையேன்னு வருத்தப்பட வைக்கிற பலப்பல வண்ணங்களில் மலர்கள். காதலர்களுக்காகவே உண்டான தோட்டம் அது. கண்டிப்பா அவங்களுக்குப் பிடிச்சதுல வியப்பில்லை.

கீழ இருக்குற படங்களைப் பாருங்க. நீங்களே சொல்வீங்க.அத்தனை படங்கள்ளயும் எனக்குப் பிடிச்சது இந்தப் படம். பாருங்க காதலன் காதலிக்கு முத்தம் குடுக்குற மாதிரி இருக்கு. மலர்கள் மனதை பதமாக்கும். இதமாக்கும். எவ்வள்வு உண்மை. கண்களுக்கும் கருத்துக்கும் குளுமையோ குளுமை.

************************************************************

அப்புறம் நெதர்லாந்துலயும் அரிசி வெலை ஏறுது. ஆமா. இங்க நான் இருக்குற எடத்துல இந்திய உணவுப் பொருட்கள் வாங்கனும்னா ஒரே வழி பக்கத்துல இருக்குற ஒரு காஷ்மீரி கடைதான். ஆம்ஸ்டர்டாம்ல இன்னோரு ஓரத்துல ஒரு இலங்கைத் தமிழர் கடை இருக்கு. ஆனா அங்க போயிட்டு வர்ரதுக்கே பாதி நாளுக்கு மேலயே போயிரும். ஆகையால இங்க காஷ்மீரிக்காரங்க கடையிலேயே வாங்குறது வழக்கம்.

தஞ்சாவூர் பொன்னி அரிசி, நல்ல இட்டிலி அரிசி, உழுந்து, பருப்பு எல்லாமே கெடைக்கும். அந்தப் பருப்புகளுக்கு மொதல்ல வெலை ஏறுச்சு. இப்ப அரிசிக்கு. எனக்கு அரிசி இல்லைன்னா ஒன்னுமில்லை. ஆனா அம்மா அப்பா இருக்காங்க. அவங்களுக்காகத்தான் வாங்குறது. அதுவுமில்லாம எனக்குத் தோசைன்னா ரொம்பப் பிடிக்கும். மிக்சியில அப்பப்ப மாவரைச்சுச் சுட்டுக்குறது.

*************************************************************

ஆங்கிலப் படங்கள்னாவே பிரம்மாண்டமும் கிராபிக்சும்னு பெரும்பாலும் ஒரு எண்ணம் இருக்குது. ஆனா பாருங்க....தமிழ்ப் படங்களை விட சிறப்பான கதையம்சங்களோடவும் நடிப்போடயும் ஆங்கிலப் படங்கள் நிறையவே வருது. சமீபத்துல அப்படிப் பாத்த இரண்டு படங்கள் 27 Dresses மற்றும் Nanny's Diaries. இரண்டுமே புதுமையான கதைக்களன். இந்த பிரியாணியில 27 Dresses படத்தப் பத்திப் பாப்போம்.

இது ஆனா ஃபிளெச்சர் (Anne Fltecher) அப்படீங்குற பெண் இயக்குனர் இயக்கிய படம். 27 முறை மணப்பெண்களின் தோழியா அலங்கார உடையணிந்த ஒரு பெண் 28வது முறை தனக்காகவே திருமண உடை அணியிறதுதான் கதை. சொல்லறப்பவே வித்தியாசமா இருக்குல்ல.

ஜேன், அவதான் அந்தப் பொண்ணு. ரொம்பவும் சுறுசுறுப்பு. நல்ல பொண்ணு. வேலை பாக்குற எடத்துல அவ பாஸ் மேல ஆசைப்படுறா. ஆனா அவரோட பாசும் ஜேனோட தங்கச்சியும் விரும்புறாங்க. பாஸ் இருக்காரே... அவரு மரக்கறி சாப்புடுறவரு. இயற்கையை ரசிக்கிறவரு. நல்லவரு. வல்லவரு. இப்பிடி பலப்பல. ஆனா ஜேனோட தங்கச்சி அதுக்கெல்லாம் நேர்மாறு. ஆனாலும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நடிக்கிறா. அவ கிட்ட ஜேன் சொல்லிப் பாத்தாலும் கேக்கலை. உண்மையச் சொல்லீட்டா ஒப்புக்கிறவர்தான் அந்த பாஸ். ஆனா இவ சொல்லனுமே.

நம்ம கதாநாயகி ஒரே நாள்ள ரெண்டு கல்யாணத்துல தோழியா இருக்க வேண்டி வருது. ஒன்னு அமெரிக்கக் கல்யாணம். இன்னொன்னு இந்தியக் கல்யாணம். இங்கயும் அங்கயும் மாறி மாறி ஓடி...உடைய மாத்தி...அத இதன்னு மாத்தி.. ரெண்டு எடத்துலயும் நல்ல பேரு வாங்குற. அந்த சமயத்துலதான் கெவினைச் சந்திக்கிறா. அவன் ஒரு பத்திரிக்கையாளன். ஆனா வேற பேர்ல எழுதுறான். அவனோட எழுத்து மேல ஜேனுக்கு ரொம்ப விருப்பம்.

ரெண்டு பேரும் நட்பா பழகுறாங்க. 27 உடைகளையும் வெச்சு ஜேனை கெவின் படங்கள் எடுக்குறான். ஒரு கட்டுரை எழுதுறான். அத அவனுக்குத் தெரியாமலேயே பத்திரிக்கைல போட்டுர்ராங்க. அப்பத்தான் கெவின் யாருன்னு ஜேனுக்குத் தெரிய வருது. அவன் மேல கோவிச்சிக்கிட்டு பேசாம இருந்துர்ரா.

ஜேனோட தங்காச்சீ பாஸை டாவடிச்சாளே.. அவங்க திருமணம் செஞ்சுக்கிறதா முடிவெடுக்குறாங்க. அக்காக்கு முன்னாடி தங்காச்சீ கல்யாணம். அதுனால அவங்க அம்மாவோட கல்யாண உடையை இளையமகளுக்குக் குடுக்குறாரு அப்பா. ஆனா அந்த மரமண்டை அந்த உடையை வெட்டித் தச்சு வேற உடையா மாத்தீர்ரா. ஜேனுக்கு ஆத்திரம்னா ஆத்திரம். தன்னோட கல்யாணத்துக்குப் போட வெச்சிருந்த உடையை... அதுவும் இறந்து போன அம்மாவோட கல்யாண உடையை கிழிச்சிட்டாளேன்னு ஆத்திரப் பட்டு பாஸ் கிட்ட தங்காச்சீ பத்தி உண்மையைச் சொல்லீர்ரா. நடக்க இருந்த திருமணம் நின்னு போகுது.

இந்தக் கெவின் பயலும் அப்பப்பா அம்மா தாயே நானும் இருக்கேன்னு பின்னாடியே வர்ரான். ஆனா இவதான் கோவிச்சிக்கிட்டாளே. அதுனால ஒதுங்கிப் போறா.

அப்ப ஆபீஸ்ல இருக்குற பாசு... இவகிட்ட புதுசா ஏற்படுற பிடிப்பைச் சொல்றாரு. ஆனா அவளுக்கு இப்ப அவர் மேல இருந்த ஆசை போயிருச்சு. எங்க போயிருச்சு? அதான். அந்தக் கெவின் பய இருக்கானே...அவன் கிட்ட போயிருச்சு. ஆனாலும் முந்தி தான் விரும்புனதையும்....தங்காச்சீ மேல பொறாமை இருந்ததையும் ஒத்துக்கிறா. ஒத்துக்கிட்டு ஓடுறா. எங்க? அந்தக் கெவின் கிட்டதான். அப்புறமென்ன முடிவு சுபமோ சுபம். கெவினும் ஜேனும் சேர்ந்துர்ராங்க. பின்னாடி பாசும் தங்காச்சீயும் கூட புரிஞ்சிக்கிட்டு சேந்துர்ராங்க. இதாங்க கதை. ஆனா... படத்தப் பாக்கனுமே... ஒரு எடத்துல கூட தொய்வு இல்லை. அவ்ளோ நேர்த்தி.

அதுலயும் ஜேனா நடிச்ச Katherine Heiglம் கெவினா நடிச்ச James Marsdenம் ரொம்பவே அருமையா நடிச்சிருப்பாங்க. வாய்ப்புக் கெடைச்சா படத்தக் கண்டிப்பா பாருங்க. உண்மையிலேயே பார்த்து மனசுக்குத் திருப்தியான படம். அதுலயும் ஜேனுக்கும் கெவினுக்கும் திருமணம் நடக்குறப்போ ஜேனின் தோழிகள் 27 பேரும், அவள் அவங்கவங்க கல்யாணத்துக்குப் போட்ட உடையோட வரிசையா நிப்பாங்க. பாக்கவே நல்லா இருக்கும்.பிரியாணிகள் தொடரும்.....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, May 12, 2008

தங்க மரம் - 13

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 13

பறக்க முடியாமல் தடுமாறிய பிடிமா கீழே இறங்க நினைத்தது. ஆனால் அதுவும் முடியவில்லை. அப்பொழுதுதான் அந்த பெருத்த சிரிப்போசை கேட்டது.

"ஆகா.. ஆகா... அழகான பொம்மைகள். பறக்கும் யானைப் பொம்மை. அதன் மேல் ரெண்டு மனிதப் பொம்மைகள். ஹா ஹா ஹா"

குரல் வந்த திசையில் பார்த்த பொழுதுதான் அவர்கள் கண்ணில் பட்டாள் அந்த அரக்கி. பத்தாள் உயரம். அந்த அளவிற்குத் தண்டி. பத்து ஆளை விழுங்கினாற் போல் வயிறு. விரிந்து சிக்கு விழுந்த தலைமுடி. கள்ளு குடித்துச் சிவந்த முண்டக்கண்கள். ஆனால் மூஞ்சியில் ஏதோ ஒரு கண்ணாடி முகமூடி மாட்டியிருந்தாள். நல்லவேளையாக அவளது அதியழகான முகத்தைக் கொஞ்சம் மறைத்தது.

அவளைப் பார்த்ததும் சித்திரை கேட்டான்.

"யாரடா இவள். நம்மைப் பொம்மை என்கிறாளே. இவளைப் போன்ற அரக்கிகள் எல்லாம் நம்மளைப் போன்றவர்களைப் பிடித்து விழுங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இவள் நம்மைச் சொப்பாக வைத்து விளையாடப் போகின்றாளோ."

கதிரவனிடம் சித்திரை சொன்னது லேசுமாசாக அவள் காதுகளில் விழுந்து விட்டது.

"ஏஏஏஏ பொம்மைகளே! உங்களுக்குப் பறக்க மட்டுமே தெரியும் என்று நினைத்தேன். பேசவும் தெரிந்திருக்கிறதே. நீங்கள் பேசியது என் காதில் விழுந்து விட்டது."

சித்திரையின் வாயால் சும்மாயிருக்க முடியவில்லை. இடுக்கண் வந்தாலும் வைரக் கடுக்கன் வந்தாலும் நகுகின்றவன் அவன்.

"அம்மா அழகரசி. உன் காதில் தடுமாறி ஆனையே விழுமே...நான் பேசியது விழாமல் போகுமா? உன் பேர் என்ன? எங்களை எதற்காக நிறுத்தி வைத்திருக்கின்றாய்?

சித்திரை பேசப்பேச அவளுக்கு மகிழ்ச்சி கூடிக் கொண்டே போனது.

"ஆகா ஆகா.. அழகாகப் பேசுகிறாய். என்னுடைய பெயர் அண்டி. நீங்கள் என்னுடைய இடத்திற்கு மேல் பறந்தீர்கள். மிகவும் அழகான பொம்மைகளான உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உங்களை என்னுடைய வீட்டில் வைத்து அழகு பார்க்கப் போகின்றேன். என்னிடம் இருக்கும் மற்ற பொம்மைகள் உணர்ச்சியே இல்லாமல் பேசாமல் இருப்பவை. ஆனால் நீங்கள் எனக்குப் பொழுது போகும் வகையில் நன்றாகப் பேசுகின்றீர்கள்."

"அண்டிதான் உன் பெயரா! நல்ல பெயர். அண்டியாம் அண்டி. வேண்டாம். எதையாவது சொல்லி விடப் போகிறேன். சரி. உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது? அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்குமா?"

என்னுடைய வீடு இந்த மலைக்குகையில் இருக்கிறது. உங்களுக்குச் சாப்பிடுவதற்கு வேண்டியன கிடைக்கும். நன்கு உருண்டு திரண்ட...பார்த்தாலே நாவூறும் எட்டு எருமைகளை இப்பொழுதுதான் அடித்துப் போட்டிருக்கிறேன். மாலைச் சிற்றுண்டிக்காக. நீங்கள் ஒரு பக்கமாகச் சாப்பிடுங்கள். நான் ஒரு பக்கமாகச் சாப்பிடுகிறேன். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டு விடப் போகின்றீர்கள். ஹா ஹா ஹா.. சாப்பிடும் பொம்மைகள். சாப்பிடும் பொம்மைகள்."

"ஆகா...எட்டு எருமைகளை அடித்துப் போட்டிருக்கிறாளா... அது சரி. இவள் அடித்துப் போட்டிருக்கும் எட்டுக்கு முன்னால் நாம் சிறிதுதானே. நாம் வாயில் நுழைந்தால் போனதும் தெரியாது. வந்ததும் தெரியாது. ஆனாலும் எதற்கு வம்பு. இவள் எப்படியும் நம்மை விடமாட்டாள். இங்கே இறங்கித்தான் நாம் தப்பிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் நீ சற்று அமைதியாக இரு. நான் பேசுகிறேன்." முணுமுணுப்பாக சித்திரையிடம் சொன்ன கதிரவன் அண்டியைப் பார்த்துச் சொன்னான்.

"எட்டு எருமை தின்னும் அண்டியே... உன்னுடைய வீட்டில் பொம்மைகளாக இருக்க நாங்கள் மூவரும் ஒப்புக்கொள்கிறோம். இப்பொழுது எங்களை இறக்கி விடு."

கதிரவன் ஒப்புக்கொண்டவுடன் தனது மண்டையை ஆட்டி ஆட்டி மகிழ்ந்த அண்டி மூவரையும் கீழே இறக்கியது.

"அதோ என்னுடைய வீடு. வாருங்கள்." என்று ஒரு பெரிய குகைக்குள் அழைத்துச் சென்றது. அந்தக் குகையை வீடு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பெரிய குகைக்குள் சின்னச் சின்ன குகைகள் இருந்தன. சூரிய வெளிச்சம் வருவதற்கும் வழிகள் இருந்தன. அந்த வழிகளில் ஒளிக்கதிர் வருவது பார்வைக்கு மிக அழகாக இருந்தது.

வழியில் அண்டி சொன்னது போலவே எட்டு எருமைகள் கிடந்தன. அண்டி அடித்த அடியில் குருதி கசிந்து பார்ப்பதற்குச் செக்கச் செவேல் என்று இருந்தன. அதைப் பார்த்ததும் அண்டியின் பசி குத்தாட்டம் போட்டது. பொம்மைகளை ஒரு நொடி மறந்து விட்டாள். கண்ணாடி முகமூடியைக் கழற்றி வைத்து விட்டு எட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் திணித்துக் கொண்டாள். அவள் வாய்க்குள் திணித்துக் கொண்ட அழகைப் பார்த்த மூவருக்கும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

"ஸ்ஸ்லபஷ்" என்று உதடுகளை நக்கிக் கொண்டவள்.. திரும்பவும் கண்ணாடி முகமூடியைப் போட்டுக் கொண்டாள். சற்றுத் திரும்பித் தேடிப் பார்த்து இவர்கள் இருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்டாள். "வாருங்கள் பொம்மைகளே. உங்களை பொம்மை அறைக்குள் அழைத்துச் செல்கிறேன்."

சற்றுத் தள்ளி உள்ளேயிருந்த அறைக்குள் (குகைதான்) அழைத்துச் சென்றாள். அந்த அறைக்குள்ளே பலப்பல சிலைகள். இறைவனின் உருவச் சிலைகள்..மனிதர்களின் சிலை.. விலங்குகள்...பறவைகள் என்று பலப்பலச் சிலைகள் இருந்தன. கற்சிலைகளிலிருந்து உலோகம்..மரம் என்று பல வகைகள் வேறு. எங்கிருந்து எடுத்து வந்தாளோ!

"இங்குதான் நீங்கள் இருக்க வேண்டும். இங்கேயே இருங்கள். நான் போய் உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன்."

மூவருக்கும் அடிவயிற்றை அமிலம் அரித்தது. கதிரவன் கேட்டு விட்டான். "அண்டி..எங்களுக்கு என்ன உணவு கொண்டு வரப் போகிறாய்?"

"ஹா ஹா ஹா உங்களுக்கா...நீங்கள் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்னப் பொம்மைகள். ஆகையால் எட்டு எருமைகளை அடிக்க மாட்டேன். அதெல்லாம் எனக்குத்தான்" அவள் சொல்லும் போதே நிம்மதி வந்ததும் மூவருக்கு.

"உங்களுக்கு ஒரேயொரு மலைப்பாம்பு மட்டும் போதுமே. இருங்கள் உடனே சென்று பிடித்து..அதன் கழுத்தைத் திருகிக் கிழித்துத் தருகிறேன். நீங்கள் சுவைத்துச் சுவைத்து உண்ணலாம்."

வயிறு என்று ஒன்று இருப்பதே மூவருக்கும் மறந்து போனது.

"தாயே அண்டி. மலையும் வேண்டாம். பாம்பும் வேண்டாம். நாங்கள் பொம்மைகள். அதையெல்லாம் சாப்பிட முடியாது. எங்களுக்கு மரங்களில் பழுக்கும் கனிகள்தான் உணவு. அவைகளைக் கொண்டு வந்தாலே போதும். புரிந்தது."

"ம்ம்ம்ம்ம்... புரிந்தது புரிந்தது. நீங்கள் பொம்மைகள். உங்களால் நல்ல உணவைச் சாப்பிட முடியாது. மரங்களில் இருக்கும் கனிகளைத்தான் சாப்பிட வேண்டும். இதோ விரைவில் வருகிறேன்." என்று சொல்லிவிட்டுத் தடதடவென ஓடினாள். மூவரும் நிற்க முடியாமல் தடுமாறினார்கள்.

அவள் போனதும் குகையை ஆராய்ந்தார்கள். ஏதாவது வழி தென்படுகிறதா என்று அவர்கள் உள்ளே வந்த வாசலைத் தவிர வேறு வழிகள் எதுவும் தென்படவில்லை. அந்த வாயில் வழியே வெளியே போகவும் முடியவில்லை. ஏதோ ஒரு தடுப்பு இருந்தது. அதற்குள் அண்டி வரும் அதிர்வுகள் தெரிந்ததும் உள்ளே பொம்மையறைக்குள் வந்து விட்டார்கள்.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக


அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, May 05, 2008

தங்க மரம் - 12

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 12

தனிமா பிடிமாவை விட்டு வந்தது போல நாமும் விட்டுவிட்டோம். பிடிமாவின் நிலையை என்னவென்று பார்க்கலாம்.

கதிரவனும் சித்திரையும் பிடிமாவின் மீது பரிவு காட்டியது அதன் கலக்கத்தைக் குறைத்து ஆசுவாசப்படுத்தியது. அதுவுமில்லாமல் சுடர்மகள் லிக்திமாவின் படத்தைப் பார்த்ததும் அவர்கள் மேல் நம்பிக்கையும் பிடிமாவிற்கு உண்டானது. நம்பிக்கை வந்தாலே தன்னைப் பற்றிச் சொல்லத்தானே விருப்பம் வரும். அதற்காகத் தன்னிடமிருந்த நாவிலூறியை வாயில் போட்டுக் கொண்டது பிடிமா. ஆலோரில் மனதினாலேயே அங்குள்ளவர்களிடம் தகவலைப் பரிமாற முடியும். ஆனால் பூமி மனிதர்கள் மனது தகவல்களைப் பெறும் திறனை காலவோட்டத்தில் இழந்து விட்டதால் அவர்களிடம் பேசுவதற்கு இந்த நாவிலூறி தேவைப்படுகிறது. அதை வாயில் போட்டுக் கொண்டால் அவர்களுக்குப் புரியும் மொழியில் தகவலைச் சொல்லலாம்.

பிடிமாவைப் பற்றியும் தனிமாவைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்ட கதிரவனுக்கு வந்திருப்பவர்கள் நண்பர்கள் என்றும் இருவரின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் மிக எளிதில் புரிந்து போனது. இந்த விஷயத்தை முதலில் அன்னையிடம் சொல்லி விட்டு காரியத்தில் இறங்க நினைத்தான்.

பிடிமாவிற்கு உணவு ஏற்பாடு செய்து தரச் சொல்லி சித்திரையிடம் சொல்லி விட்டு நேராக வீட்டிற்குச் சென்றான். ஆனால் அங்கிருந்த நிலவரம் கலவரத்தையே உண்டாக்கியது. என்ன நடந்ததென்றே புரியவில்லை. அம்மாவைக் காணவில்லை. ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. வீட்டுக்குள் மட்டும் அலங்கோலமாக இருந்தது அவன் ஐயத்தை அதிகப் படுத்தியது. நிலமையைக் கண்டதும் ஊழிவாயன் மேல்தான் சந்தேகம் வந்தது. ஆனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

அதற்கு மேல் சற்றும் தாமதிக்க விரும்பாமல் மீண்டும் சித்திரையிடமும் பிடிமாவிடமும் ஓடினான். அதற்குள் சூரிய வெளிச்சத்தாலும் சித்திரை ஒடித்துப் போட்ட நல்ல தென்னங்குறுத்துகளாலும் வயிறு நிரம்பி மிகவும் தெளிவாக இருந்தாள் பிடிமா. வீட்டில் கண்டதை இருவருக்கும் விளக்கினான் கதிரவன்.
மூன்று பேரும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் இட்டார்கள்.

முதலில் கதிரவனின் அன்னை அமுதம் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

பிடிமாவோடு வந்த தனிமாவையும் காணவில்லை. அவளையும் கண்டுபிடிக்க வேண்டும்.

ஊழிவாயன் எங்கிருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவனிடமிருந்து லிக்திமா, கதிரவனின் தந்தை, சித்திரையின் தந்தை...ஒருவேளை அமுதத்தையும் பிடித்துக் கொண்டு போயிருந்தால் அவரையும் சேர்த்து விடுவிக்க வேண்டும்.

இந்தச் செயல்களை எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் முழித்தார்கள் நண்பர்கள் இருவரும். ஏதேனும் சின்னக் குறிப்பு கிடைத்தாலும் நன்றாக இருக்குமே என்ற இருவரின் கவலையையும் பிடிமா குடுத்த தகவல் போக்கியது.

ஊழிவாயன் இருக்குமிடத்தை அடைய முதலில் தங்கமரத்தை அடைய வேண்டும் என்றும்... அந்தத் தங்கமரமோ ஏறாத மண்மலையில் இருக்கிறது. அந்த ஏறாத மண்மலையோ தணலேரிக்கு அருகில் இருப்பதாகவும் லிக்திமா ஏற்கனவே சொல்லி வைத்திருப்பதை பிடிமா சொன்னது. (லிக்திமாவிற்கு இந்த விவரங்கள் எப்படித் தெரிந்தது என்பதைப் பிறகு பார்ப்போம்.)

ஆக இப்பொழுது தணலேரியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏரியில் நீரிருக்கும். தணலிருக்குமா? அல்லது வெறும் பெயரா? மண்ணிலே மலையிருக்கும். மலையே மண்ணாயிருக்குமா? தங்கத்தில் மரம் முளைக்குமா? ஒருவேளை தங்குவதற்கான மரமா?

இந்தச் சந்தேகங்கள் மூவரின் உள்ளத்திலும் எழுந்தன. அப்பொழுது பிடிமா சொன்னாள்.

"நண்பர்களே என் மீது ஏறிக் கொள்ளுங்கள். உங்களைச் சுமந்து என்னால் பறக்க முடியும். என்னுடைய இறக்கைகள் மிகவும் வலுவானவை. இந்தச் சூரியவொளி மிகுந்த ஆற்றலைக் கொடுக்கிறது எனக்கு. ஆகையால் பறந்து சென்று தேடுவதே வசதியாக இருக்கும். மேலும் என்னோடு வந்த தனிமாவும் அருகில் எங்கேயாவது விழுந்திருக்க வாய்ப்புள்ளது. வாருங்கள். என் மீது ஏறிக் கொள்ளுங்கள்"

பிடிமாவின் அழைப்பை இருவராலும் மறுக்க முடியவில்லை. விண்ணிலிருந்து பார்த்தால் விசாலமான காட்சி கிடைக்கும். அது தேடுதலை எளிமையாக்கும் என்றும் புரிந்தது. சரியென்று ஒப்புக்கொண்டு பிடிமாவின் மேல் ஏறினார்கள். இருவரையும் சுமந்து கொண்டு ஜிவ்வென்று வானில் ஏறிப் பறந்தது பிடிமா.

விண்ணிலிருந்து அழகான பூமியைக் காணும் காட்சி மூவரையும் பரவசப்படுத்தியது. களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த பிடிமாவும் நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையையே சற்று மறந்திருந்தார்கள் என்றாலும் மிகையாகது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரங்கள் பறந்த பிறகு மலைகள் நிறைந்த பகுதியை அடைந்தார்கள். அங்கு இறங்கி களைப்பாறி உணவு தேடலாம் என்று கதிரவனுக்குத் தோன்றியது.

தோன்றியதைச் சொல்லும் முன்னமே பிடிமா விண்ணிலேயே நின்றது. அதனால் சிறிதும் நகரமுடியவில்லை. முழு ஆற்றலையும் பயன்படுத்தினாலும் அசையக் கூட முடியவில்லை. கீழேயும் விழவில்லை. என்னடா அதியம் என்று அசந்து போகும் வேளையில் கேட்டது இடியோசை போன்ற சிரிப்போசை.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக


அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Thursday, May 01, 2008

தங்கமரம் - 11

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 11

தங்கக்கத்தி தனிமாவின் கைகளில் சேர்ந்ததும் பூகனின் கண்கள் அச்சத்தால் விரிந்தன. தனிமா அவசரப்பட்டு பூகனைக் கொல்லவில்லை. சற்றுப் பொறுமையாக இருந்தாள். ஆனாலும் பூகன் அவள் மேல் பாய்ந்ததினால் ஆத்திரத்தோடே இருந்தாள்.

"ஹே... யார் நீ?" அதட்டலோடு கேட்டாள்.

"பார்த்தால் எப்படித் தெரிகிறது? உனக்குக் கண்கள் உண்டுதானே?" திமிராகக் கேட்டது அந்த பூகன்.

"அடி வாங்கிப் பிடி பட்ட பிறகும் பேச்சு பெரும் பேச்சு."

"அது சரி... வந்திருப்பது பூகனூருக்கு.... பிடித்து வைத்திருப்பதோ பூகனை.... வெளியிலிருந்து வந்திருக்கும் நீ இவ்வளவு பேசும் பொழுது என் பேச்சு பெரும் பேச்சாவதில் வியப்பில்லையே." பூகனின் பேச்சில் ஆத்திரமும் எரிச்சலும் வெடித்துச் சிதறின.

மெல்லச் சிரித்தாள் தனிமா. "பூகனாக மட்டுமே இருந்தால் பேசலாம். ஆனால் மானம் மரியாதை அனைத்தும் ஊழிவாயனிடம் அடகு வைத்து விட்டு வாயினை உண்ண மட்டுமே திறக்கின்றவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பேசவும் திறப்பீர்கள் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்."

"ஆஆஆ அவமானம். பூகன்கள் அந்த ஊழிவாயனிடம் விரும்பியா வேலை செய்கின்றன? வேறு வழியில்லாமல் அந்த வெளியண்டத்து ஊழிவாயனிடம் அடங்கி நடக்கின்றார்கள். என்னைத் தவிர. நான் ஒருவன் இருப்பதையே அறியான் அந்த ஊழிவாயன். உன்னைப் பார்த்தால் கூட அந்த ஊழிவாயனின் முகச்சாயல் தெரிகின்றது. நீயும் அவனைப் போல மாயாவியாகத்தான் இருக்க வேண்டும். ஆகையால்தான் மனிதர்களே நுழைய முடியாத இந்தப் பூகனூருக்குள் நுழைந்து...என்னையும் பிடித்து....என்னையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறாய்." ஆத்திரத்தில் பொறுமினான் அந்த பூகன்.

தனிமாவிற்கு நிலமை சட்டென்று புரிந்து போனது. ஆலோரில் இருக்கும் பொழுதே ஊழிவாயன் பூகன்களின் தலைவனை ஏமாற்றி மந்திரக்கோலை அபகரித்துக் கொண்டதை அறிவாள். ஆனால் அனைத்து பூகன்களும் அடிமையாகியிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு பூகம் சுதந்திரமாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

பைய அந்த பூகனைக் கீழே இறக்கினாள். தங்கக் கத்தியையும் அந்தரத்திலேயே நகட்டி அந்த பூகன் கையில் வைத்தாள். அதற்கோ வியப்பு. தரையில் ஒரு நிலையில் இறங்கிய பிறகு கேட்டது. "நீ யார்?"

"பூகனே. ஊழிவாயன் என்று நீங்கள் சொல்லும் நபரின் மகள் நான். என்னுடைய பெயர் தனிமா. ஊழிவாயனிடமிருந்து என்னுடைய தாயை விடுவிக்க வந்திருக்கிறேன்."

பூகனுக்கு ஒன்றும் புரியவில்லை. பளக் பளக் என்று முதலில் முழித்தது.

"சரி. என்னுடைய பெயர் ககன். நீ அப்படியானால் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் என்று நான் நம்புவதற்குக் காரணம் இல்லையல்லவா!"

ககன் சொன்னது எடுத்ததும் தனிமாவிற்குப் புரியாவிட்டாலும் தான் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் இல்லை என்பதைத்தான் அப்படிக் கேட்கிறான் ககன் என்று உணர்ந்தாள்.

"சரி தனிமா. அப்படியானால் நீ இங்கே வந்ததற்கான காரணத்தின் மேலதிகத் தகவல்களை நான் அறிந்து கொள்வதில் உனக்குத் தயக்கம் இருக்கப் போவதில்லை என்றே நம்புகிறேன்."

சிரித்து விட்டாள். "ஹா ஹா ஹா.. இல்லை இல்லை. தாராளமாகச் சொல்லலாம். நாங்கள் ஆலோரிகள். நானும் என்னுடைய ஆனையான பிடிமாவும் பூமிக்கு வந்தோம். பூமியின் எல்லைக்குள் நுழையும் பொழுது தடுமாறினோம். அப்படிக் கீழே விழுகையில் பிடிமா ஒருபுறம் போனாள். நான் இங்கு தவறி தண்ணீருக்குள் விழுந்து இங்கு வந்திருக்கிறேன்."

தனிமா சொன்னது பூகனை யோசிக்க வைத்தது. "தனிமா...இப்பொழுது நீ எப்படி இங்கே வந்ததாகச் சொன்னாயோ அப்படித்தான் முன்னம் ஒருவன் உள்ளே வந்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல. யாரை நீ உன்னுடைய தந்தை என்று கூறிக்கொண்டு..அவனையே எதிர்க்க வந்திருப்பதாகக் கூறுகின்றாயோ...அந்த ஊழிவாயந்தான். நீயும் அதை வழியில் இங்கு வந்திருப்பதிலிருந்து இரண்டு விஷயங்கள் என்னுடைய யோசனைக்கு வருவதால் அவைகளை உன்னிடம் சொல்லிவிடுவதே நல்லது என்று இப்பொழுது தோன்றுகிறது. கேள்."

கூர்ந்து கேட்கத் தொடங்கினாள் தனிமா.

"முதலாவது. ஊழிவாயன் என்னதான் ஏமாற்றுக்காரனாக இருந்தாலும் அவன் ஆற்றலிலும் அறிவிலும் குறையுள்ளவன் என்று யாரும் சொல்ல முடியாத அளவிற்குச் சிறந்தவன்.

இரண்டாவது. ஊழிவாயன் வந்திறங்கிய பொழுது அவனிடமிருந்த சக்தியனைத்தும் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க முடியாத நிலை வந்தது. அதாவது சுருங்கச் சொன்னால்...இந்த பூமிக்கு வெளியே சிறந்து பணியாற்றிய அவனது ஆற்றலனைத்தும் பூமிக்குள் வந்ததும் சிறிது சிறிதாக தன்னை இழந்தது. அதாவது என்னை அந்தரத்தில் தொடாமல் நிறுத்தி வைத்திருக்க உன்னால் தொடர்ந்து செய்ய முடியாது போகும்."

ககன் சொன்ன இரண்டு தகவல்களில் இரண்டாவது தகவல் தனிமாவை யோசிக்க வைத்தது. ஒரு பிரச்சனையை தீர்க்க வந்த அவளுக்குப் பிடிமாவை இழந்தது இன்னொரு பிரச்சனையாக வந்து நிற்கிறது. அவளை முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் தன்னுடைய ஆற்றலை விரைவில் இழக்க நேரிடும் என்ற எண்ணம் வேறு சலனப்படுத்தியது. கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக ககனின் நட்பு வேறு கிடைத்திருக்கிறது. ஆனால் எதையும் சுருக்கமாகச் சொல்லத் தெரியாத ககனால் எவ்வளவு நன்மை என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் ஆற்றல் குறையும் முன்னமே விரைந்து செயல்படுவது நன்று என்று அவளுக்குத் தோன்றியது.

"ககன். நீ சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது நான் விரைந்து செயலாற்ற வேண்டும் என்பது புரிகிறது. முதலில்....எனக்கு ஒன்று புரிய வேண்டும். ஆற்றலை அனைத்தும் இழந்தார் ஊழிவாயன் என்றால்....எப்படி பூகன்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? ஏன் எந்த பூகனும் எதிர்க்கவில்லை. நீ ஊழிவாயனை எதிர்ப்பதாகச் சொன்னாலும் இத்தனை ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லையே! ஏன்?"

ககன் சொல்லத் தொடங்கினான்.

தொடரும்...