Friday, October 28, 2005

தீபாவளியும் தீபாவலியும்

தீபாவளியும் தீபாவலியும்

தீபாவளி வந்தாச்சு. என்னென்னவோ கொண்டாட்டங்கள். குதூகலங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொன்னு மாறிக்கிட்டே வருது. தீபாவளி கொண்டாடும் முறையும்தான். இந்த ஆண்டு தீபாவளிக்கு எனக்கு நானே கொடுத்துக்கிட்ட பரிசு world space radio. ஆபீஸ்ல ஒரு ஆஃபர் சேல்ஸ் போட்டிருந்தான் ஆர்டர் கொடுத்துட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வந்து இன்ஸ்டால் பண்ணீருவாங்க.

இத்தன தீபாவளி கொண்டாடிருக்கமே...எத்தன தீபாவளி நெனவிருக்குன்னு பாத்தா.....கணிசமா கொஞ்ச தீபாவளிகள் தனியா வரிசைல வந்து நிக்குதுங்க.

தீபாவளிக்கும் எனக்கும் உறவு ரொம்ப நல்லவே இருந்ததுன்னு பொய் சொல்ல விரும்பல. ஏன்னா....எனக்கு ஆன விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்கோ அல்லது தீபாவளியை ஒட்டியோதான் ஆயிருக்கு.

விளாத்திகுளம் பக்கத்துல புதூர். அதுதான் எங்க மூதாதையார் ஊர். இப்பவும் அந்தூர்ல எங்க சித்தப்பா குடும்பமும் மத்த சொந்த பந்தங்களும் இருக்காங்க.

தீபாவளி வந்துச்சுன்னா.....சொந்தக்கார சாதிக்கார பொம்பளைங்களெல்லாம் வெரதம் இருந்து பூஜை செய்வாங்க. இந்த வெரதத்துல பலவிதம் இருக்கு. அத இன்னோரு சமயம் பாப்போம்.

தீபாவளி இரவில் அருப்புக்கோட்டை ரோட்டுல உள்ள ஜின்னிங் பாக்டரி வாசல்ல இருக்குற வில்வ மரத்தடியில பூஜை பண்ணுவாங்க. மரத்தடியில செலை எதுவும் இருக்காது. களிமண் கொண்டாந்து அதப் பெசைஞ்சி சுத்துச் சுவரு மூணு அடுக்கு வெச்சி (எல்லாம் தோராயந்தான்) நடுவுல உருண்டை பிடிச்சி வெப்பாங்க. அதுக்குக் குங்குமமும் மஞ்சளும் வெச்சா சாமி தயார்.

பூஜைக்குள்ள ஏற்பாடுகள் வீட்டுல நடக்கும் பாருங்க...அப்பபா......விரதம் இருக்குற ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தட்டு. அதுல 21 அதிரசம், 21 வாழப்பழம், 21 வெல்லக்கட்டி (மண்ட வெல்லம் கெடையாது. வெல்லக்கட்டின்னு சின்னதா இருக்கும்.), 21 முடி போட்ட நோம்புக் கயிறு, 21 வெத்தல, 21 பாக்கு, காதோலை கருகமணின்னு நெறைய அடுக்கி வெச்சிருப்பாங்க.

காதோலை கருகமணின்னா தெரியுமா? அடிக்கிற மிட்டாய் ரோஸ் கலர்ல ஓலையைச் சுருட்டி அதை ஒரு சின்ன கருப்பு வளையல்ல செருகீருப்பாங்க. அதுதான் காதோலை கருகமணி. (இதப்பத்தியும் ஒரு தனி பதிவு போடனும்.)

அப்புறம் பூவு, சூடம், வெளக்கு, மாவெளக்குன்னு எடுத்துக்கிட்டு போவாங்க. கொழுக்கட்ட வெளக்கு வைக்கிறவங்களும் உண்டு. பெரிய சுமங்கலிப் பெண் (அநேகமா ஒரு பெரிய பாட்டி) வந்து பூஜையைத் துவக்குவாங்க.

மந்திரமும் தெரியாது. ஆகமும் தெரியாது. ஆனா ஆத்மார்த்த பூஜை நடக்கும். தமிழில் அச்சடிச்ச ஒரு கதை புத்தகம் இருக்கும். அதைப் படிப்பாங்க. அதுக்கப்புறம் அம்மனோட போற்றி இருக்கும். அதைச் சொல்லுவாங்க. அப்புறம் சூடம் காமிச்சி, பூஜை முடியும். அந்நேரம் ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்குற சீதாராமு டாக்கிசில் படமும் முடிஞ்சிருக்கும்.

பூஜையெல்லாம் முடிஞ்சதும் எல்லாரும் மரத்தைச் சுத்துவாங்க. அந்த மரம் ரொம்பவே பழைய மரம். ஆகையால ஊர்ப் பொம்பளைகளுக்கு அந்த மரம்னா ஒரு செண்ட்டிமெண்ட்டு. (இராமநாதன், சென்ட்டிமென்ட்டுன்னு தொடர்ந்து அடிச்சா செந்த்டிமெந்த்டு அப்படீன்னு வருது. அதான் செண்ட்டிமெண்ட்டுன்னு லேசா அடிச்சிட்டேன். ஹி ஹி)

நானும் சின்னப்பய, எல்லோரோடையும் சேந்து மரத்தச் சுத்துனேன். ரெண்டு மூணு மரம் ஒன்னாச் சேந்து வளந்த மரம் அது. வேணுக்குமுன்னே ரெண்டு மரத்துக்குள்ள நசுங்கி நெளிச்சி போனேன்.

எல்லாரும் ஒழுங்கா மரத்தச் சுத்திக்கிட்டு இருந்தாங்க. நடுராத்திரி. திடீருன்னு நான் அம்மான்னு கத்துறேன். எல்லாரும் ஓடி வந்து பாத்தாங்க. ஒரு பெரிய பாட்டில் துண்டு பாதத்தைக் கிழிச்சிக்கிட்டு ஆழமாப் போயிருக்கு. ரத்தம் சொளுசொளுன்னு ஊத்துது.

என்னையத் தூக்கிக்கிட்டு அங்க இருக்குற ஆஸ்பித்திரிக்கு ஓடுறாங்க. அந்த டாக்டர் எனக்கு அக்கா முறை வேணும். ஊசீல மருந்து ஏத்துறாங்க.....எனக்கு ஊசீன்னா பயம்.....வலி வேற. மூனு பேரு என்னைய அழுத்திப் பிடிச்சிக்கிட்டதும் ஊசி மருந்தோட ஏறுச்சு. ஓஓஓஓஓஒன்னு கத்துனது இன்னும் நல்லா நெனவிருக்கு. பக்கத்துல இருந்த சோடா பாக்டரிக்காரரு தூக்கத்துல எந்திரிச்சி வந்துட்டாரு.

இப்படிப் போச்சு அந்தத் தீபாவளி. அடுத்த வருசம் என்னாச்சு தெரியுமா? ஒன்னும் ஆகலை. தீபாவளி நல்லபடியாப் போச்சு. தீபாவளிக்குப் பின்னாடியே கார்த்திகை வரும். தூத்துக்குடி புதுக்கிராமத்தில் எல்லா வீட்டுலயும் வெளக்கு ஏத்தி வெச்சிருப்பாங்க. ரொம்ப அழகா இருக்கும்.

எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருந்தவங்க தூத்துக்குடி காமராஜ் காலேஜ் ஃபுரபசர் குடும்பம். அவங்களுக்கு ஊருல இருந்து வெடிகள் நெறைய வரும். அந்த வீட்டுப் பையன் என்னோட நண்பன். அன்னைக்கும் வீட்டுல நெறைய அகல் வெளக்குகள ஏத்தி வெச்சிட்டு காத்துல அணையாம வாசல்ல உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன்.

அப்ப பக்கத்து வீட்டுலயும் வெளக்கு வெச்சிருந்தாங்க. அங்க போய்ப் பாக்கலாமுன்னு வேகமா வெளிய ஓடி பக்கத்து வீட்டுக்குள்ள வேகமா நொழஞ்சேன். ஆஆஆஆஆஆஆஆஆஆன்னு அலறிக்கிட்டே கீழ விழுந்தேன்.

பின்னே...என்னோட ஒரு தொடையே வெந்துருச்சே. என்னோட நண்பன்னு சொன்னேனே அவன் பென்சில் பிடிச்சிக்கிட்டு இருந்தான். அவன் வாசல்ல நின்னத நான் பாக்கல. நான் வேகமா வந்தத அவன் எதிர்பாக்கல. சர்ருன்னு தொடைல பட்டு தொடை வெந்துருச்சு.

அப்ப ஸ்டெச்சிலான் கால்சட்டை ரொம்ப பேமஸ். கலர்கலரா இருக்கும். அதுதான் போட்டிருந்தேன். அது தீயில உருகி தோலில் ஒட்டிக்கிச்சு வேற.

அதப் பாத்ததும் எங்கத்தைக்கு மயக்கம் வந்துருச்சு. கிறுகிறுன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பக்கத்து வீட்டு ஃபுரபசர்தான் என்னை சைக்கிள்ள தூக்கீட்டுப் போயி டாக்டர் கிட்ட காட்டுனாரு.

அந்த டாக்டரும் ஒரு ஊசில மருந்த ஏத்தி சினிமா டாக்டரு மாதிரி மேல பாத்து அமுக்குனாரு. அந்த வலியிலயும் நான் கதறுனேன். ஊசிய புண்ணப் பாத்துக் கொண்டு வந்தாரு. "ஐயோ டாக்டர். வேண்டாம். புண்ணுல ஊசி போடாதீங்க வலிக்கும்"....நாந்தான் கதறுனது.

ஆனா அவரு புண்ணுல ஊசி போடல. அந்த மருந்த புண்ணுல பீச்சி அடிச்சாரு. அப்புறமா தொடச்சு மருந்து போட்டு கட்டு கட்டினாரு.

ரொம்ப நாள் நான் கஷ்டப்பட்டு (மூனாவது படிச்சப்ப) நடந்தேன். உக்கார முடியாது. ஓட முடியாது. தூக்கத்துல தொடை மேல் அடுத்த கால் பட்டுட்டா எரியும். அப்புறம் ஒடனே தூக்கம் வராது. இன்னும் நெறைய.

இன்னும் நெறைய தீபாவளிகள் இருக்கு. இப்ப இவ்வளவு போதும். இதுனால நான் சொல்ல வர்ரது என்னன்னா....

1. அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
2. வெடி வெடிக்கும் போது பாத்துப் பத்திரமா வெடிங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, October 24, 2005

சிகப்பு ரோஜாக்கள்

சிகப்பு ரோஜாக்கள்

சிகப்பு ரோஜாக்கள்
அவளுக்குப் பிடிக்கும்
அவளும் ரோஜா
அவள் பெயரும் ரோஜா

ஒவ்வோர் ஆண்டும்
திருமண நாளில்
அவள் வீட்டு வாயிலில்
பூங்கொத்தொன்று
சிகப்பு ரோஜாக்களாய்
அவள் கணவன் பரிசாய்
நாற்பதாண்டுகளாய் அப்படித்தான்

இந்த ஆண்டிலோ
அவன் இல்லை
வராத வழி போயினான்
ஆயினும் வந்தது
அவள் வீட்டு வாயிலில்
பூங்கொத்தொன்று
சிகப்பு ரோஜாக்களாய்

வழக்கம் போல
அவனது அழகான கையெழுத்தில்
"அன்பே ரோஜா!
இந்த ஆண்டும்
இரட்டிப்பானதடி
உன் மேல் அன்பு!
இந்த ஆண்டும்
பெருகியதடி
உன் மேல் காதல்!
என் செல்லக் கண்ணே!"

அவளுக்கு வியப்பில்லை
அவனை அவளே அறிவாள்
முன்னதாகவே
எதையும் செய்து முடிப்பவன்
விட்டுச் செல்லும் முன்பே
கட்டிச் சென்றால்
கடையில் முன்பணத்தை

தெரிந்து செய்தானோ
தெரியாது செய்தானோ
நினைக்க நினைக்க
உப்பளமாகின அவள் கண்கள்

சீராக நறுக்கினாள்
ரோஜாத் தண்டுகளை
அழகான தொட்டியிலிட்டு
அவன் படத்தின் முன்னிட்டாள்
கண்ணீர்க் கால்வாய்களில்
காதலும் சோகமும் உடைப்பெடுத்தது

இன்னொரு ஆண்டும் கழிந்தது
அவனன்றி ஓரணுவும் அசையவில்லை!


அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, October 12, 2005

கோதுமைக் களவாணி

கோதுமைக் களவாணி

எனது சின்ன வயதில் நடந்தது அது. இன்றும் நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது அந்த நினைவு. தெளிந்த நீரோடைகுள்ளே கிடக்கும் கல்லைப் போல. பையைத் தூக்கிக்கொண்டு படியில் தடதடவென இறங்கினேன். கும்மாளமும் உற்சாகமும் கூடி வந்தது அன்று. சுந்தரும் அவன் பள்ளிக்கூடப் பையைத் தூக்கிக்கொண்டு வந்தான். வழக்கமாக பள்ளிக்கூடம் போகும் நேரமது. கையைக் கோர்த்துக்கொண்டு வேகமாக நடந்தோம். கதிருகடைக்கு பக்கத்திலேயே குமாரும் காத்திருந்தான். மூவரும் சேர்ந்து நெல்லிக்காய் தண்டிக்கு பொடிப்பொடியாக கற்களைப் பொறுக்கிக் கொண்டோம். விருவிருவென வேகத்தைக் கூட்டினோம். பின்னே! கோதுமைக் களவாணி இல்லாமல் போய்விட்டால்! அந்த நினைப்பே வேகமாக நடக்க வைத்தது.

கோதுமைக் களவாணியை அந்தத் தெருவில் இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும், அடிக்கடி போவோர் வருவோருக்கும் நன்றாகத் தெரியும். பைத்தியம் என்று எல்லோராலும் முடிவு கட்டப்பட்டவள். அறுபதை நெருங்கும் வயது. ஒட்டுப் போட்ட கந்தல். குளித்தறியாத அழுக்கு மேனி. சடை விழுந்த செம்பட்டைத் தலை. அவளது ஊரும் பேரும் யாருக்கும் தெரியாது. ஏதோவது ஒரு நேரத்தில் நல்ல மனநிலையில் இருக்கையில் கேட்டால் "பாப்பா மேரி பாத்தீமா தேவி" என்ற சர்வமத பெயரைச் சொல்வாள். ஆளும் பேரும் மாறிமாறி கேட்டாலும் வேறு எந்தப் பெயரையும் அவள் சொல்லியதேயில்லை. இப்படியொரு பெயரை எங்கே பிடித்தாளோ? ஆனால் எல்லோருக்கும் பிடித்ததென்னவோ கோதுமைக் களவாணி என்ற பெயர்தான். எங்கே களவாண்டாள்? எப்போது களவாண்டாள்? யார் வீட்டில் களவாண்டாள்? யாருக்கும் இந்த விவரங்கள் தெரியாது. ஆனாலும் எப்படியோ அவளுக்கு அந்த பெயர் வந்து விட்டது. மூட்டை கோதுமையைக் காயப் போட்டிருந்த வேளையில் திருடி விட்டாளென்று சொல்வார்கள். இத்தனைக்கும் அந்தத் தெருவில் கோதுமையை பயன்படுத்துகிறவர்கள் மிகக் குறைவுதான். அதிலும் கோதுமையை மூட்டையாக வாங்கிக் கொண்டிருந்தது மளிகைக் கடை கதிரு மட்டும்தான். ஆனால் கதிரும் கோதுமையைக் காயப் போட்டதுமில்லை. திருட்டு கொடுத்ததுமில்லை. எது எப்படியோ? பாப்பா மேரி பாத்தீமா தேவிக்கு கோதுமைக் களவாணி என்ற பெயர் நின்று நிலைத்து விட்டது.

எல்லோருக்கும் பிடித்த அந்தப் பெயர் அவளுக்கு ஏனோ பிடிக்காமலே போனது. அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது உறுதியாக அவளது சுயமரியாதையைச் சுட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் பெயரை யாராவது சொல்லக் கேட்டால் அவள் அகோர பத்ரகாளியாக அவதாரமெடுப்பாள். வாயில் சொல்லும் கையில் கல்லுமாய் அந்தத் தெருவையே வதைப்பாள். தமிழில் எத்தனை கெட்ட வார்த்தைகள் உள்ளதோ அத்தனையும் சொல்லி அர்ச்சிப்பாள். அவள் வீசியெறியும் கற்களுக்கு பயந்து கொண்டு அந்தப் பக்கம் போவதற்கு யோசித்தாலும் அவள் சிந்தும் செந்தமிழ் மொழிகளை நன்றாகக் கேட்டு உள்ளூற ஊர் மகிழும். யாருடைய நல்ல நேரமோ! அவள் கல்லெறி குறிக்கு எல்லோரும் தப்பிக் கொண்டே இருந்தார்கள்.

அவள் யார்? எந்த ஊர்? என்கின்ற ஆராய்ச்சியில் இறங்குவார் யாருமில்லை. எல்லாம் விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர் கதைதான். ஆனாலும் அவளைப் பற்றிய வதந்திகள் ஆயிரமாயிரம். பாகிஸ்தான் உளவாளி. இலங்கை இராணுவக்காரி. அமெரிக்க ஏஜெண்ட். பெரிய விஞ்ஞானி. மில் ஓனர் வைப்பாட்டியாயிருந்து கைவிடப்பட்டவள். பிள்ளைகள் கைகழுவிய பெரிய பணக்காரி. ஜமீந்தார் ராணி. இசைப் பைத்தியம் பிடித்த பாடகி. பெற்ற மகனைக் கொன்றவள். ஹைதராபாத் நிஜாமின் ஆசைநாயகி. இப்படியெல்லாம் பத்தாதென்று அந்தக் காலத்து அரக்கி பரம்பரையில் வந்தவளென்று நம்புகிறவர்களும் உண்டு.

அவளுடைய சொத்து என்று சொல்லப் போனால் ஒரு பெரிய துணிமூட்டை. அதை துணி மூட்டை என்பதை விட பொதிமூட்டை என்பதே பொருந்தும். எல்லாம் எங்கிருந்து பொறுக்கினாளோ! அவ்வளவு துணிகள். பிறகு ரெண்டு ஊசி. பழைய பேப்பரில் சுற்றி வைத்திருப்பாள். அப்புறம் நூல்கண்டு. கதிரு கடையில் அவளுக்கு நூல்கண்டு சும்மாவே கிடைக்கும். அவள் காலை வேளையில்தான் போய் நூல்கண்டு கேட்பாள். அவள் வந்து நூல்கண்டு கேட்டால் அன்றைக்கு கடையில் வியாபாரம் கொழிக்கும் என்பது கதிரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் இன்று வரைக்கும் பொய்த்ததேயில்லை. எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள். மூட்டையிலிருந்து துணியை உருவி அணிந்திருக்கும் துணியோடு சேர்த்துத் தைப்பாள். அப்படித் தைத்து தைத்து அவளது ஆடை பலவண்ண நிறங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும்.

இது போக இன்னும் சில அசையாச் சொத்துகள் உண்டு அவளிடம். சாப்பிட அலுமினியச் சொம்பும் தட்டும். அந்தச் சொம்பில் எப்போதும் ரெண்டு மூன்று பெரிய கற்கள் இருக்கும். கோதுமைக் களவாணி என்று யாரவது சொன்னால் முதலில் பறப்பவை அந்த கற்களாகத்தான் இருக்கும். வீசியெறிந்த பின் மீண்டும் அதே கற்களை தேடிப் பொறுக்கி வைத்துக் கொள்வாள். அந்தக் கற்களின் மேல் அவளுக்கு என்ன பாசமோ! வீட்டுக் கல்லு என்று சொல்லிக் கொஞ்சுவாள். எந்த வீட்டுக் கல்லோ! எப்போதோ இடிந்து போன அவளது வீட்டுக் கல்லாகக் கூட இருக்கக் கூடும். எங்கேயாவது செடிகளில் கொடிகளில் பூ பூத்திருக்கக் கண்டால் இரண்டு பூக்களைப் பறித்து கல்லிருக்கும் சொம்பிற்குள் போடுவாள். பூஜை செய்கிறாள் என்று கேலி செய்வோம். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் போவாள்.

பசித்தால் ஏதாவது வீட்டு வாசலில் நின்று கொண்டு "அக்கா!" என்று அழைப்பாள். எல்லோருமே அவளுக்கு அக்காதான். சின்னக் குழந்தையிலிருந்து கோயில் ஐயர் வரை ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோருமே அக்காக்கள்தான். அவள் கேட்டால் இல்லையென்று பொதுவாக யாரும் சொன்னதேயில்லை. முதலில் சொம்பில் தண்ணி கேட்பாள். கற்களையும் தட்டையும் கழுவிவிட்டு தட்டில் போடுவதை வாங்கிக் கொள்வாள். சைவம் அசைவம் என்றெல்லாம் அவள் பாகுபாடு பார்த்ததில்லை. போட்டதைத் தின்பாள். தின்ற வீட்டு வாசலருகே அமர்ந்து இராகம் போட்டு பாடுவாள். கேட்டால் ஒரு சொல்லும் காதில் தெளிவாக விழாது. விழுந்தாலும் புரியாது. அவளது இராகம். அவளது பாடல். அப்படிப் பாடுகையில் அவள் குரல் குழைந்திருக்கும். ஒரு மகிழ்ச்சி தெரியும்.

அன்றைக்கு அவளுக்கு கிடைத்தது அல்வா டீச்சர் வீட்டு இட்லி. அலமேலு டீச்சருக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர் அல்வா டீச்சர். நான், சுந்தர், குமார் மூவரும் பொறுக்கி வைத்திருந்த கற்களோடு அவளை நெருங்கினோம். கற்கள் போட்டு வைத்திருந்த சொம்பில் தண்ணீர் ஒரு மடக்கு குடித்துக் கொண்டும் இட்டிலியை துண்டு துண்டாக விழுங்கிக் கொண்டுமிருந்தவள், முதலில் எங்களைக் கவனிக்கவில்லை. பிறகு தலையைத் தூக்கிப் பார்த்து முகத்தைக் கோணி பழிப்புக் காட்டினாள். மூவரும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தோம். பதிலுக்கு எங்களைப் பார்த்து வக்கனை காட்டினாள். அப்படிக் காட்டும் பொழுது வாய்க்குளிருந்த இட்டிலி பிதுங்கி வெளியே விழுந்தது. கொஞ்சம் கடைவாயில் அசிங்கமாக ஒட்டிக் கொண்டிருந்தது. "உர்ர்ர்ர்ர்ர்ர்" குரங்கு போல கத்தினோம். அவள் கண்டுகொள்ளாமல் இட்டிலி மேல் கவனத்தைச் செலுத்தினாள்.

எங்கள் பொறுமை எல்லை மீறியது. "கோதுமக் களவாணி!!!!!!!!!!" அவள் காது கிழிய கத்திவிட்டு நாங்கள் மூவரும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடினோம். அவளுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. தட்டைக் கீழே வைத்துவிட்டு முதலில் இரண்டு கெட்ட வார்த்தைகளை வீசியவள், சொம்பைக் கவிழ்த்து வீட்டுக் கற்களை கையில் எடுத்து எங்கள் மேல் வீசினாள். மூவரும் மூன்று பக்கங்களில் நின்று கொண்டிருந்தோம். ஆளுக்கொரு கல்லாக ஒவ்வொருவர் மீதும் வீசினாள். நாங்களும் பதிலுக்கு அவள் மேல் பொறுக்கி வைத்திருந்த கல்லை கல்லை வீசினோம். இரண்டொரு கற்கள் அவள் மேலே விழுந்தன. அவளது ஆத்திரம் கூடியது. வசவும் நாறியது. அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக குமார் விட்டெறிந்த கல் நேராக வந்து எனது நெற்றியைத் தாக்கியது. "அம்மா!!!!!!" அலறிவிட்டேன். நெற்றியில் சின்னதாய் தோல் கிழிந்து இரத்தம் லேசாய்த் துளிர்த்தது. அது வலித்தது. குமாரும் சுந்தரும் பயந்து ஒடி விட்டனர். நான் வலியில் கையால் நெற்றியைப் பொத்திக்கொண்டு முனகினேன்.

என் மேல் கல் விழுந்ததைப் பார்த்ததும் மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள் கோதுமைக் களவாணி. மூட்டையிலிருந்து ஒரு துணியை உருவி என்னிடம் நீட்டினாள். நான் வாங்கவில்லை. அவளும் விடவில்லை. துணியை வாங்கச் சொல்லி வற்புறுத்தினாள். நான் அழுதுகொண்டே விலகிப் போனேன். கடைசியில் அவளே நெற்றியைத் துடைக்க வந்தாள். நான் பயந்து அலறினேன். இதற்குள் வாசலில் சத்தம் கேட்டு டீச்சர் வெளியே வந்தார்கள். என்னை அவர்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்று புண்ணைத் துடைத்து மருந்து போட்டார்கள். நடந்தவைகளை கேட்டு ஒன்றிரண்டு அறிவுரைகளைச் சொன்னார்கள். எல்லாம் கேட்டுவிட்டு டீச்சர் கொடுத்த காபியையும் குடித்துவிட்டு வெளியே வந்தேன். கோதுமைக் களவாணி வீட்டுக்கல்லை தேடியெடுத்துக் கழுவிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததுமே சின்னதாய் சிநேகமாய் சிரித்தாள். நான் ஒதுங்கி ஒதுங்கி ஓடிப் போனேன். அதற்குப் பிறகு யாராவது கோதுமைக் களவாணி என்று அழைத்தால் அவளுக்கு கோவமே வருவதில்லை. கல்லையும் சொல்லையும் எறிவதேயில்லை. நாளாவட்டத்தில் அந்தப் பெயரை நாங்கள் மறந்தே போனோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, October 06, 2005

கடவுளும் காதலும் (சிலேடை)

நல்லவை தீயவை
நயப்பது உண்டு
இல்லை என்பார்
இகலில் உண்டு
கவலை கூடிடுங்
கைவிடக் கண்டு
பாவலர் பன்முறை
பண்ணிற் படைத்தும்
ஆவலெப் பொழுதிலும்
அடங்கிட மறுக்கும்
மடமுடை மானிடர்
மனதில் நின்றும்
வடமிடும் வாழ்க்கையின்
வளத்திற் கென்றும்
தடமது கண்டிலர்
தரணியி லின்றே
கடவுளும் காதலும்
கருத்தினி லொன்றே

நண்பர்களே, கடவுளுக்கும் காதலுக்கும் நான் எழுதிய சிலேடை இது. புரியும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் சொல்லுங்கள். நானே விளக்குறேன்.

இது ஆசிரியப்பாவின் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதியது. எழுதி நாலரை வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது ஆசிரியப்பாவின் இலக்கணமே மறந்து விட்டது.

அன்புடன்,
கோ.இராகவன்

இரகசியத் தோட்டம்

Secret Garden
Author : Frances Hodgson Burnett

இரகசியத் தோட்டம்

ஒரு அழகான தோட்டத்தை மனக்கண்ணால் உருவாக்கிப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்த மாதிரியெல்லாம் உருவாக்கிப் பாருங்கள். தோட்டத்தைச் சுற்றிச் சுவர்கள். உங்களுக்குப் பிடித்த மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், நீரோடைகள், நீரூற்றுகள், அழகான புல்தரைகள். அத்தனையும் உங்களுக்குப் பிடித்த வகையில். அழகாய் ஆடும் ஊஞ்சல். அதில் அசைந்தாடும் நினைவுகள். வண்ண வண்ணப் பறவைகள். காற்றிலிருந்து சுரங்களைப் பிரித்து பாடும் குயில்கள். ஆடும் மயில்கள். ஓடும் மான்கள். நாடும் கிளிகள். கூடும் முயல்கள். அடடா! ஆண்டுதோறும் வசந்தகாலமாக இருந்தாலும் அந்தத் தோட்டம் அலுக்காது அல்லவா! அப்படிப் பட்ட தோட்டத்தை யாரும் திருடிவிட்டால்! அப்படித் திருடியது ஒரு சிறுமியென்றால்! என்ன இது? தோட்டத்தை எப்படித் திருட முடியும்? அதுவும் ஒரு சிறுமி, என்று கேட்பது எளிது. ஆனால் அதை உண்மை என்று நிரூபிப்பது கடினம். அப்படி நிரூபிப்பதுதான் ப்ரான்ஸஸ் ஹோட்ஜ்சன் பர்னட் எழுதிய சீக்ரட் கார்டன்.

கதை பத்தொன்பதாம் நூற்றண்டு இந்தியாவிலிருந்து தொடங்குகிறது. வெள்ளையர்கள் ஆட்சிக்காலம். அவர்களின் கேளிக்கை மிகுந்த வாழ்க்கை முறை. அடிமை வேலைக்காரர்கள். அப்படிப்பட்ட ஒரு தம்பதியரின் குழந்தைதான் சிறுமி மேரி. முழுக்க முழுக்க ஆயா ஒருத்தியின் கவனிப்பிலேயே வளர்ந்தவள். செல்லமாக வளர்ந்ததால் அடம் பிடிக்கும் தன்மையும் பிடிவாத குணமும் சேர்ந்து கொண்ட சிறுமி. துணிச்சலும் அகம்பாவமும் வேறு. அவளுடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் வருகிறது. காலரா பரவி பெற்றோர்கள் பலியாகிறார்கள். இங்கிலாந்திலுள்ள மாமாவிடம் அனுப்பப்படுகிறாள்.

க்ரேவன், ஒரு பெரிய பணக்காரர். பெரிய கோட்டை போன்ற பழைய வீட்டில் வசிக்கிறார். அழகான மலைப்பாங்கான பிரதேசம். நிலவளமும் நீர்வளமும் நிறைந்தது. அந்த வீட்டில் பல அறைகள் மூடப்பட்டுள்ளன. யாரும் புழங்குவதில்லை. அவளைப் பார்த்துக் கொள்ளும் பொருப்பு க்ரேவனின் உதவியாளராகிய மெட்லாக் (Medlock) என்ற பெண்மணியிடம் ஒப்படைக்கப் படுகிறது. மெட்லாக்கின் உதவியாளராகிய மார்த்தா, மேரியை கவனித்துக் கொள்கிறாள். சிடுசிடுவென்று எப்போதும் இருக்கும் மேரி, மார்த்தாவின் அன்பால் சிறிது மாறுகிறாள்.

தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் மேரியிடம் ஒரு சாவி கிடைக்கிறது. அது மூடப்பட்டுள்ள ஒரு தோட்டத்தின் சாவி. பத்தாண்டுகளுக்கு முன்னால் மூடப்பட்ட தோட்டம் பாழ்பட்டு கிடக்கிறது. க்ரேவனின் மனைவியின் தோட்டம் அது. ஊஞ்சலில் ஆடுகையில், மரக்கிளை ஒடிந்து இறக்கிறாள் திருமதி க்ரேவன். அப்போது மூடப்பட்டு சாவி தொலைக்கப்பட்ட தோட்டமது. இப்போது மேரியின் கைகளில். யாருக்கும் தெரியாமல் தோட்டத்தைச் சீரமைக்கிறாள். அவளுக்கு உதவுகிறான் மார்த்தாவின் தம்பி டிக்கான். யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். க்ரேவன் வாழ்க்கையில் நொந்தவர். மேலும் முதுகு லேசாக வளைந்தவர். மனைவி இறந்தபின் வீட்டில் அதிகம் தங்கமால் சுற்றிக் கொண்டே இருக்கிறார்.

ஒரு நாள் இரவு வேளையில் அழுகுரல் ஒன்று மேரிக்கு கேட்கிறது. அது க்ரேவனின் மகன் காலினுடைய (Colin) அழுகுரல். மிகவும் செல்லமாக வளர்ந்த பையன். அதனால் கெட்டுப் போயிருக்கிறான். பிறந்ததில் இருந்தே தந்தையால் கைவிடப்பட்டதால் கட்டிலிலேயே வளர்கிறான். நடந்ததேயில்லை. சக்கர நாற்காலியே வாழ்க்கையாகிப் போனவன். அவனை மேரி சந்திக்கிறாள். இரகசியத் தோட்டம் பற்றி அவனுக்கும் தெரிகிறது. மேரியுடனும் டிக்கானுடனும் அவனும் இரகசியத் தோட்டத்திற்குப் போகிறான். காலினுக்கு எல்லோரும் பயப்படுவதால் அவனுடைய கட்டளைக்குப் பயந்து யாரும் அவர்களைப் பின்தொடர்வதில்லை. மேலும் பெரிய தோட்டங்கள் நிரம்பிய வீடென்பதால் அவர்களை வீட்டுக்குள்ளிருந்தும் கவனிக்க முடியவில்லை.

தோட்டம் செழிக்கிறது, காலினும் நடக்கப் பழகுகிறான். அவனுடைய மனமும் மாறுகிறது. நல்ல சிறுவனாக மாறுகிறான். தந்தை வந்ததும் நடந்து காண்பிக்க விரும்புகிறான். அதனால் நடப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் மூவரும். க்ரேவன் வந்தாரா? மகன் நடப்பதைக் கண்டாரா? தோட்டம் பற்றிய இரகசியம் என்னவாயிற்று என்பதே முடிவு.

பாழ்பட்ட தோட்டம் பண்படுவது போல இரண்டு குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக திருந்துவதுதான் கதை. மிகவும் அற்புதமான இந்தக் கதையைப் படிக்கப் படிக்க இன்பம். கீழே வைக்க முடியாது. எல்லா கதைகளிலும் கெட்ட குழந்தைகள் தண்டனை பெறுவதாகத்தான் வரும். ஆனால் இந்தக் கதையில் அவர்கள் திருந்தி நல்ல பிள்ளைகள் என்று பெயரெடுக்கிறார்கள். நல்ல கதை. கண்டிப்பாகப் படியுங்கள். இந்தக் கதை internet-இல் இலவசமாகக் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.

http://www.americanliterature.com/CG/CGINDX.HTML

அன்புடன்,
கோ.இராகவன்