Wednesday, October 12, 2005

கோதுமைக் களவாணி

கோதுமைக் களவாணி

எனது சின்ன வயதில் நடந்தது அது. இன்றும் நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது அந்த நினைவு. தெளிந்த நீரோடைகுள்ளே கிடக்கும் கல்லைப் போல. பையைத் தூக்கிக்கொண்டு படியில் தடதடவென இறங்கினேன். கும்மாளமும் உற்சாகமும் கூடி வந்தது அன்று. சுந்தரும் அவன் பள்ளிக்கூடப் பையைத் தூக்கிக்கொண்டு வந்தான். வழக்கமாக பள்ளிக்கூடம் போகும் நேரமது. கையைக் கோர்த்துக்கொண்டு வேகமாக நடந்தோம். கதிருகடைக்கு பக்கத்திலேயே குமாரும் காத்திருந்தான். மூவரும் சேர்ந்து நெல்லிக்காய் தண்டிக்கு பொடிப்பொடியாக கற்களைப் பொறுக்கிக் கொண்டோம். விருவிருவென வேகத்தைக் கூட்டினோம். பின்னே! கோதுமைக் களவாணி இல்லாமல் போய்விட்டால்! அந்த நினைப்பே வேகமாக நடக்க வைத்தது.

கோதுமைக் களவாணியை அந்தத் தெருவில் இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும், அடிக்கடி போவோர் வருவோருக்கும் நன்றாகத் தெரியும். பைத்தியம் என்று எல்லோராலும் முடிவு கட்டப்பட்டவள். அறுபதை நெருங்கும் வயது. ஒட்டுப் போட்ட கந்தல். குளித்தறியாத அழுக்கு மேனி. சடை விழுந்த செம்பட்டைத் தலை. அவளது ஊரும் பேரும் யாருக்கும் தெரியாது. ஏதோவது ஒரு நேரத்தில் நல்ல மனநிலையில் இருக்கையில் கேட்டால் "பாப்பா மேரி பாத்தீமா தேவி" என்ற சர்வமத பெயரைச் சொல்வாள். ஆளும் பேரும் மாறிமாறி கேட்டாலும் வேறு எந்தப் பெயரையும் அவள் சொல்லியதேயில்லை. இப்படியொரு பெயரை எங்கே பிடித்தாளோ? ஆனால் எல்லோருக்கும் பிடித்ததென்னவோ கோதுமைக் களவாணி என்ற பெயர்தான். எங்கே களவாண்டாள்? எப்போது களவாண்டாள்? யார் வீட்டில் களவாண்டாள்? யாருக்கும் இந்த விவரங்கள் தெரியாது. ஆனாலும் எப்படியோ அவளுக்கு அந்த பெயர் வந்து விட்டது. மூட்டை கோதுமையைக் காயப் போட்டிருந்த வேளையில் திருடி விட்டாளென்று சொல்வார்கள். இத்தனைக்கும் அந்தத் தெருவில் கோதுமையை பயன்படுத்துகிறவர்கள் மிகக் குறைவுதான். அதிலும் கோதுமையை மூட்டையாக வாங்கிக் கொண்டிருந்தது மளிகைக் கடை கதிரு மட்டும்தான். ஆனால் கதிரும் கோதுமையைக் காயப் போட்டதுமில்லை. திருட்டு கொடுத்ததுமில்லை. எது எப்படியோ? பாப்பா மேரி பாத்தீமா தேவிக்கு கோதுமைக் களவாணி என்ற பெயர் நின்று நிலைத்து விட்டது.

எல்லோருக்கும் பிடித்த அந்தப் பெயர் அவளுக்கு ஏனோ பிடிக்காமலே போனது. அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது உறுதியாக அவளது சுயமரியாதையைச் சுட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் பெயரை யாராவது சொல்லக் கேட்டால் அவள் அகோர பத்ரகாளியாக அவதாரமெடுப்பாள். வாயில் சொல்லும் கையில் கல்லுமாய் அந்தத் தெருவையே வதைப்பாள். தமிழில் எத்தனை கெட்ட வார்த்தைகள் உள்ளதோ அத்தனையும் சொல்லி அர்ச்சிப்பாள். அவள் வீசியெறியும் கற்களுக்கு பயந்து கொண்டு அந்தப் பக்கம் போவதற்கு யோசித்தாலும் அவள் சிந்தும் செந்தமிழ் மொழிகளை நன்றாகக் கேட்டு உள்ளூற ஊர் மகிழும். யாருடைய நல்ல நேரமோ! அவள் கல்லெறி குறிக்கு எல்லோரும் தப்பிக் கொண்டே இருந்தார்கள்.

அவள் யார்? எந்த ஊர்? என்கின்ற ஆராய்ச்சியில் இறங்குவார் யாருமில்லை. எல்லாம் விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர் கதைதான். ஆனாலும் அவளைப் பற்றிய வதந்திகள் ஆயிரமாயிரம். பாகிஸ்தான் உளவாளி. இலங்கை இராணுவக்காரி. அமெரிக்க ஏஜெண்ட். பெரிய விஞ்ஞானி. மில் ஓனர் வைப்பாட்டியாயிருந்து கைவிடப்பட்டவள். பிள்ளைகள் கைகழுவிய பெரிய பணக்காரி. ஜமீந்தார் ராணி. இசைப் பைத்தியம் பிடித்த பாடகி. பெற்ற மகனைக் கொன்றவள். ஹைதராபாத் நிஜாமின் ஆசைநாயகி. இப்படியெல்லாம் பத்தாதென்று அந்தக் காலத்து அரக்கி பரம்பரையில் வந்தவளென்று நம்புகிறவர்களும் உண்டு.

அவளுடைய சொத்து என்று சொல்லப் போனால் ஒரு பெரிய துணிமூட்டை. அதை துணி மூட்டை என்பதை விட பொதிமூட்டை என்பதே பொருந்தும். எல்லாம் எங்கிருந்து பொறுக்கினாளோ! அவ்வளவு துணிகள். பிறகு ரெண்டு ஊசி. பழைய பேப்பரில் சுற்றி வைத்திருப்பாள். அப்புறம் நூல்கண்டு. கதிரு கடையில் அவளுக்கு நூல்கண்டு சும்மாவே கிடைக்கும். அவள் காலை வேளையில்தான் போய் நூல்கண்டு கேட்பாள். அவள் வந்து நூல்கண்டு கேட்டால் அன்றைக்கு கடையில் வியாபாரம் கொழிக்கும் என்பது கதிரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் இன்று வரைக்கும் பொய்த்ததேயில்லை. எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள். மூட்டையிலிருந்து துணியை உருவி அணிந்திருக்கும் துணியோடு சேர்த்துத் தைப்பாள். அப்படித் தைத்து தைத்து அவளது ஆடை பலவண்ண நிறங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும்.

இது போக இன்னும் சில அசையாச் சொத்துகள் உண்டு அவளிடம். சாப்பிட அலுமினியச் சொம்பும் தட்டும். அந்தச் சொம்பில் எப்போதும் ரெண்டு மூன்று பெரிய கற்கள் இருக்கும். கோதுமைக் களவாணி என்று யாரவது சொன்னால் முதலில் பறப்பவை அந்த கற்களாகத்தான் இருக்கும். வீசியெறிந்த பின் மீண்டும் அதே கற்களை தேடிப் பொறுக்கி வைத்துக் கொள்வாள். அந்தக் கற்களின் மேல் அவளுக்கு என்ன பாசமோ! வீட்டுக் கல்லு என்று சொல்லிக் கொஞ்சுவாள். எந்த வீட்டுக் கல்லோ! எப்போதோ இடிந்து போன அவளது வீட்டுக் கல்லாகக் கூட இருக்கக் கூடும். எங்கேயாவது செடிகளில் கொடிகளில் பூ பூத்திருக்கக் கண்டால் இரண்டு பூக்களைப் பறித்து கல்லிருக்கும் சொம்பிற்குள் போடுவாள். பூஜை செய்கிறாள் என்று கேலி செய்வோம். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் போவாள்.

பசித்தால் ஏதாவது வீட்டு வாசலில் நின்று கொண்டு "அக்கா!" என்று அழைப்பாள். எல்லோருமே அவளுக்கு அக்காதான். சின்னக் குழந்தையிலிருந்து கோயில் ஐயர் வரை ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோருமே அக்காக்கள்தான். அவள் கேட்டால் இல்லையென்று பொதுவாக யாரும் சொன்னதேயில்லை. முதலில் சொம்பில் தண்ணி கேட்பாள். கற்களையும் தட்டையும் கழுவிவிட்டு தட்டில் போடுவதை வாங்கிக் கொள்வாள். சைவம் அசைவம் என்றெல்லாம் அவள் பாகுபாடு பார்த்ததில்லை. போட்டதைத் தின்பாள். தின்ற வீட்டு வாசலருகே அமர்ந்து இராகம் போட்டு பாடுவாள். கேட்டால் ஒரு சொல்லும் காதில் தெளிவாக விழாது. விழுந்தாலும் புரியாது. அவளது இராகம். அவளது பாடல். அப்படிப் பாடுகையில் அவள் குரல் குழைந்திருக்கும். ஒரு மகிழ்ச்சி தெரியும்.

அன்றைக்கு அவளுக்கு கிடைத்தது அல்வா டீச்சர் வீட்டு இட்லி. அலமேலு டீச்சருக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர் அல்வா டீச்சர். நான், சுந்தர், குமார் மூவரும் பொறுக்கி வைத்திருந்த கற்களோடு அவளை நெருங்கினோம். கற்கள் போட்டு வைத்திருந்த சொம்பில் தண்ணீர் ஒரு மடக்கு குடித்துக் கொண்டும் இட்டிலியை துண்டு துண்டாக விழுங்கிக் கொண்டுமிருந்தவள், முதலில் எங்களைக் கவனிக்கவில்லை. பிறகு தலையைத் தூக்கிப் பார்த்து முகத்தைக் கோணி பழிப்புக் காட்டினாள். மூவரும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தோம். பதிலுக்கு எங்களைப் பார்த்து வக்கனை காட்டினாள். அப்படிக் காட்டும் பொழுது வாய்க்குளிருந்த இட்டிலி பிதுங்கி வெளியே விழுந்தது. கொஞ்சம் கடைவாயில் அசிங்கமாக ஒட்டிக் கொண்டிருந்தது. "உர்ர்ர்ர்ர்ர்ர்" குரங்கு போல கத்தினோம். அவள் கண்டுகொள்ளாமல் இட்டிலி மேல் கவனத்தைச் செலுத்தினாள்.

எங்கள் பொறுமை எல்லை மீறியது. "கோதுமக் களவாணி!!!!!!!!!!" அவள் காது கிழிய கத்திவிட்டு நாங்கள் மூவரும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடினோம். அவளுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. தட்டைக் கீழே வைத்துவிட்டு முதலில் இரண்டு கெட்ட வார்த்தைகளை வீசியவள், சொம்பைக் கவிழ்த்து வீட்டுக் கற்களை கையில் எடுத்து எங்கள் மேல் வீசினாள். மூவரும் மூன்று பக்கங்களில் நின்று கொண்டிருந்தோம். ஆளுக்கொரு கல்லாக ஒவ்வொருவர் மீதும் வீசினாள். நாங்களும் பதிலுக்கு அவள் மேல் பொறுக்கி வைத்திருந்த கல்லை கல்லை வீசினோம். இரண்டொரு கற்கள் அவள் மேலே விழுந்தன. அவளது ஆத்திரம் கூடியது. வசவும் நாறியது. அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக குமார் விட்டெறிந்த கல் நேராக வந்து எனது நெற்றியைத் தாக்கியது. "அம்மா!!!!!!" அலறிவிட்டேன். நெற்றியில் சின்னதாய் தோல் கிழிந்து இரத்தம் லேசாய்த் துளிர்த்தது. அது வலித்தது. குமாரும் சுந்தரும் பயந்து ஒடி விட்டனர். நான் வலியில் கையால் நெற்றியைப் பொத்திக்கொண்டு முனகினேன்.

என் மேல் கல் விழுந்ததைப் பார்த்ததும் மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள் கோதுமைக் களவாணி. மூட்டையிலிருந்து ஒரு துணியை உருவி என்னிடம் நீட்டினாள். நான் வாங்கவில்லை. அவளும் விடவில்லை. துணியை வாங்கச் சொல்லி வற்புறுத்தினாள். நான் அழுதுகொண்டே விலகிப் போனேன். கடைசியில் அவளே நெற்றியைத் துடைக்க வந்தாள். நான் பயந்து அலறினேன். இதற்குள் வாசலில் சத்தம் கேட்டு டீச்சர் வெளியே வந்தார்கள். என்னை அவர்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்று புண்ணைத் துடைத்து மருந்து போட்டார்கள். நடந்தவைகளை கேட்டு ஒன்றிரண்டு அறிவுரைகளைச் சொன்னார்கள். எல்லாம் கேட்டுவிட்டு டீச்சர் கொடுத்த காபியையும் குடித்துவிட்டு வெளியே வந்தேன். கோதுமைக் களவாணி வீட்டுக்கல்லை தேடியெடுத்துக் கழுவிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததுமே சின்னதாய் சிநேகமாய் சிரித்தாள். நான் ஒதுங்கி ஒதுங்கி ஓடிப் போனேன். அதற்குப் பிறகு யாராவது கோதுமைக் களவாணி என்று அழைத்தால் அவளுக்கு கோவமே வருவதில்லை. கல்லையும் சொல்லையும் எறிவதேயில்லை. நாளாவட்டத்தில் அந்தப் பெயரை நாங்கள் மறந்தே போனோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

14 comments:

said...

ராகவன்,
நாம் எல்லாம் ப்ளாக் ஆரம்பித்து என்ன கிழிக்கப் போகிறோம்.. எழுத என்ன இருக்கிறது என்ற நினைவுகளோடுதான் ப்ளாக் ஆரம்பித்தேன். சின்ன வயது அனுபவங்களை எழுதுவோமே அன்று ஆரம்பித்த பிறகு அந்த நினைவுகள் ஒவ்வொன்றாய், ஒன்றின் அடியொற்றி அடுத்தது என்று நீள்கதையாய் மனத்துக்குள் மடல் விரிய ஆரம்பித்து விடுகிறது - உங்கள் பதிவைப் படித்ததும் எல்லோருக்கும் வரும் பொது நிலமை இதுதானோ என்று தோன்றுகிறது.

said...

கொஞ்ச நாள் இடைவெளிக்குப் அப்புறமா இப்பத்தான் வர்றேன். நல்ல நடை. ஆனந்த விகடனில் தாராளமாக பிரசுரிக்கலாம். உங்களுடைய முயற்சி நல்லா வந்துகிட்டு இருக்கு.

said...

எனக்கென்னவோ, யாரோ கோதுமையைக் களவெடுத்து விட்டு அவள் தலையில் பழி போட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நினைவப் பகிர்வு நன்றாயிருக்கிறது.

said...

நன்றி தருமி, ரமேஷ், சந்திரவதனா.

இது உண்மையிலேயே ஒரு கற்பனைக் கதை. என்னுடைய வாழ்வில் நிகழ்ந்தது அல்ல. கதை நாயகனின் பார்வையில் சொல்லும் வகையில் அமைந்தது. ஒரு சின்னப் பையன் கதை என்று நாவல் எழுத எண்ணம் இருக்கிறது. அதற்கான முன்னோட்டமே இது. இந்த பாப்பா மேரி பாத்திமா தேவி அதிலும் வருவார்கள்.

said...

// ஆனந்த விகடனில் தாராளமாக பிரசுரிக்கலாம். உங்களுடைய முயற்சி நல்லா வந்துகிட்டு இருக்கு. //

நன்றி ரமேஷ். ஆனந்த விகடனில் பிரசுரிக்க என்று விரும்பி ஒரு பெரிய தொடர்கதை எழுதத் தொடங்கியிருக்கிறேன். கொஞ்சம் இலக்கியச் சுவையுடன். பார்க்கலாம். அது எவ்வளவு வெற்றி பெருகிறது என்று.

said...

// எனக்கென்னவோ, யாரோ கோதுமையைக் களவெடுத்து விட்டு அவள் தலையில் பழி போட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. //

இருக்கலாம் சந்திரவதனா. அது தெரியாததால் தானே இத்தனை பிரச்சனை. சின்ன வயதில் ஒரு கதை படித்தேன். இதே போல ஒரு பெண். பைத்தியமாகத் திரிகிறாள். திடீரென ஒருநாள் ஒரு கார் வருகிறது. அவளை கூட்டிச் செல்கிறது. அடுத்த நாள் பார்த்தாள் மீண்டும் அவள் அதே தெருவில். ஆனால் கைகளில் கைநாட்டு மைச் சாயம். சிறுவயதிலேயே என்னைப் பாதித்த கதை இது.

said...

ராகவன்,

'கோதுமைக் களவாணி' இன்னும் சில நினைவுகளைக் கிளறிடுச்சு. நாங்க 'வத்தலகுண்டு'லே
இருந்தப்ப, இப்படித்தான் ஒரு பொம்பளை, பைத்தியமுன்னு எல்லோரும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
அந்தம்மா எப்பவும் வந்து நம்ம வீட்டுத் திண்ணையில் உக்காரும். அக்காங்கதான் அப்பப்ப சாப்புட எதாவது
தருவாங்க. பேர் என்னன்னு கேட்டாலும், இல்லை எது கேட்டாலும் ராமர்தான், லட்சுமணர்தான்னு சொல்லும்.
கையிலே ஒரு ச்சின்ன மூட்டை இருக்கும்.

அந்த ராமர் காலத்துலேன்னு ஆரம்பிச்சு எதாவது உளரும். நமக்குப் புரியறது அந்த ராமர், லட்சுமணர்
வார்த்தைகள் மட்டும்தான்.
'ஏ ராமரு'ன்னு கூப்புட்டா ஓடிவரும். அப்புறம் அவுங்க என்ன ஆனாங்கன்னு தெரியலை(-:

said...

அடக் கடவுளே. ஊரெங்கும் இப்படி இருக்கிறார்கள் போல. சொந்தங்கள் எளிதாக கைகழுவி விட்டுவிடுகின்றன இவர்களை.

எங்கள் ஊரில் ஒரு வீட்டில் இப்படி ஒரு பெண் இருந்தார். ஆனால் அவரை வீணாக்கி விடாமல் சிறுவயது முதலேயே தண்ணீர் எடுப்பது என்று வீட்டு வேலைகளைச் செய்யப் பழக்கி இருந்தார்கள். அந்தப் பெண்ணும் அதையெல்லாம் சிரத்தையோடு செய்வார். வீணாகப் போகாமல் இப்படி ஏதேனும் கற்றுக் கொடுப்பதும் நன்றே.

நாங்கள் மதுரையில் இருந்த பொழுது (எனக்கு ரொம்பச் சின்ன வயசு) டீ.ஆர்.வோ காலனியில் இருந்தோம். இரண்டாவது மாடியில் வீடு. சமையலறை பால்கனி வழியாக பார்த்தால் பின்னால் ஒரு பள்ளி தெரியும். அது மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடம். அவர்களுக்கு அங்கு பலவீஷயங்களைக் கற்றுக் கொடுப்பார்கள். அப்பொழுதெல்லம் இது போன்ற பயனுள்ள விஷயங்களை நம்ம பள்ளியில் ஏன் கற்றுத் தர மாட்டேன் என்கிறார்கள் என்று சிந்திப்பதுண்டு.

said...

இந்தக் கதையும் படித்துவிட்டேன். முடிவு இது கற்பனைக் கதையெனச் சொல்கிறது. நீங்களும் அதை உறுதி செய்துவிட்டீர்கள்.

said...

நண்பர்கள் சொன்ன மாதிரி ஆனந்த விகடனில் உங்கள் எழுத்துகள் வரவேண்டும்.

said...

உண்மைதான் நண்பரே. திருச்சியில் கூட கல்லண்ரோட்டு கிழவி என்று ஒரு அம்மையார் உண்டு, அவரை பற்றியும் பல கதைகள் அங்கு புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு முறையும் நான் திருவெறும்பூரை கடக்கும் பொழுதும் பார்ப்பேன் அந்த அம்மையை.

said...

நன்றி குமரன். உங்கள் வாக்கு பலிக்கட்டும். :-)

நன்றி மோகன்தாஸ். இது போன்றவர்கள் ஊருருக்கு இருக்கிறார் என்று செய்தியே வேதனை தருவதாக இருக்கிறது.

said...

ராகவன்,

பின்னி பெடல் எடுத்து விட்டீர்கள்.

எனக்கும் பட்டப்(?) பெயர் ஒன்று உண்டு. அது புளிமூட்டை. பெயர் வந்த காரணம் கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்...

said...

// எனக்கும் பட்டப்(?) பெயர் ஒன்று உண்டு. அது புளிமூட்டை. பெயர் வந்த காரணம் கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்... //

கேக்க மாட்டேனேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ