Friday, December 30, 2005

முன்னைக்கு முன்னை பின்னைக்குப் பின்னை

முன்னைக்கு முன்னை பின்னைக்குப் பின்னை

அவசர அவசரமாகப் பதிவு போட வேண்டியதாப் போச்சு. அதான் நம்ம குமரன் இப்படி ஒரு பதிவு போட்டாரு, அதுக்குப் பின்னூட்டம் கூடிப் போச்சு. அதுக்கு நான் போட வேண்டிய பின்னூட்டம் எழுதுனா ரொம்ப இருக்கு....சரி பேசாம ஒரு பதிவாப் போட்டுரலாமுன்னு போட்டுட்டேன். படிச்சுட்டு சொல்லுங்க.

// சிவனுக்கு மூத்தவள் என்பதையும் a > b; b > c அதனால் a > c சூத்திரத்துக்குள் அடக்கலாமா தெரியவில்லை. //

குமரன், சூத்திரத்துக்குள் அடங்குகின்றவனா சூத்திரதாரி? இப்படிச் சூத்திரம் போட்டு இறைவனை முடிவு செய்ய முடியுமானால் விஞ்ஞானத்தால் இறைவனை எப்பொழுதோ நிரூபித்திருக்கலாம். ஆனால் இந்த அறிவை விட இறைவனை அறிய மெய்யறிவே தேவை. அதையும் அவந்தான் தர வேண்டும். தந்திருந்தாலும் நமக்கு இந்தக் குழப்பமே வந்திருக்காது.

சமயங்கள் ஆறும் தனித்தனியாக எழுந்தவையே. ஆனால் இந்த ஆறில் மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருந்திருக்கின்றன. சைவம், சாக்தம் கௌமாரம் ஆகிய மூன்றும் எனக்குத் தெரிந்த பழம் இலக்கியங்களில் இருந்தே வந்திருக்கின்றன. சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப் படை, சங்க இலக்கியங்களி பார்த்தால் இதற்குச் சான்று கிட்டும். காணாபத்தியத்தைப் பழைய நூல்களில் காணவேயில்லை.

ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுந்து பிறகு ஒன்றானவை. அப்பொழுதுதான் இந்த உறவு முறைகள் உண்டாயின. ஆதித் தமிழ் மதத்தில் முருகக் கடவுளுக்கும் வள்ளிக்குமே தொடர்பில்லை என்று சொல்லவும் கேள்விப் பட்டிருக்கின்றேன். பிறகு அந்த இரண்டும் தமிழர் கலப்பால் இணைந்தன. தெய்வயானை ஆரியக் கலப்பில் இணைந்தார். இப்படி செறிவூட்டப் பட்டுக்கொண்டே இருந்தன. இது சாதகங்கள் மட்டுமின்றி பாதகங்களையும் உண்டாக்கியது உண்மைதான். ஆகையால்தான் ஆதி நூல்களைப் பார்க்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டுமே புகழ்ந்திருக்கும்.

பின்னாளில் செறிவூட்டப்பட்ட காலத்தில்தான் யார் பெரியவர் என்ற வீண் விவாதங்கள் நடை பெற்றன. சிவனே பெரியவர் என்றோ திருமாலே பெரியவர் என்றோ யாரேனும் வாதிட்டிருந்தால் அவர்கள் உண்மையிலேயே இறையருளைப் பெறவில்லை என்பது என்னுடைய கருத்து.

மூச்சுக்கு முந்நூறு முறை முருகா முருகா என்று சொன்ன அருணகிரிதான் "ஓல மறைகள் அரைகின்ற ஒன்றது மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" என்று குழப்பிமில்லாமல் கூறியிருக்கின்றார். கந்தரநுபூதியில் ஆங்காங்கு இதே கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

இன்னும் விளக்கமாகச் சொன்னால் "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்". அதாவது அனைத்தையும் கடந்தும் உள்ளும் இருக்கும் மெய்ஞான தெய்வத்தைக் குறிகளைக் குறியாது குறித்து அறியும் மெய்யறிவை வேல் (ஞானத்தின் வடிவம்) தர வேண்டும் என்பதே. ஆழப் போனவர் கண்டது இதுதான்.

அதையும் முழுதாகச் சொல்ல வந்து சொல்ல முடியாமல் முடியவில்லை என்று முக்கி விடுகின்றார் அருணகிரி. "அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ?" கண்டவர் விண்டிலர் என்பது உறுதியாகின்றது.

உண்மையான இந்திய நாட்டு மதவியல் கோட்பாடுகளின் படி நூறு பேரைச் சொன்னாலும் நூறு விதமாய் வணங்கினாலும் நூறூ இடங்களுக்குப் போனாலும் எல்லாம் ஒன்றே. ஒன்றே. ஒன்றே. அதை மறுத்து உரைப்பவரை ஏற்பது கடினம்.

சரி. அபிராமி பட்டருக்கு வருவோம்.
கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!

இது அம்பிகையைப் பற்றிச் சொல்லியது. பொதுவாக எந்தச் செய்யுளுக்கும் பொருள் கொள்ளும் பொழுது நேரடியாகப் பொருள் கொள்வது உண்டு. கடலையைப் பார்த்து கடலை உருண்டை என்று சொல்வது போல. உடைத்துப் பார்த்தால் உள்ளே பருப்பிருக்கும். உள்ளே இருப்பது பருப்பா வெறுப்பா என்பது உடைத்தால்தானே தெரியும். ஆகையால் சொற்களை முறையாகப் பகுத்துப் பொருள் கொள்ள முயல வேண்டும்.

அப்படி நானும் முயன்றதாக நம்பிக் கொண்ட பொருளை இப்பொழுது விளக்குகின்றேன்.

நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்குக் கெட்டவன் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆகையால் கெட்டவனை விட நல்லவன் குறைந்தவன் என்று பொருள் கொள்ள முடியுமா? இது தனி. அது தனி. இந்த முறையைத்தான் மேற்கூறிய அபிராமி பட்டரின் வரிகளுக்கும் கொள்ள வேண்டும்.

ஆதிநாதன் சிவபெருமான். ஆகையால் அது முன்னது. அந்த முன்னதுக்கும் முன்னது முன்னதாகத்தானே இருக்க வேண்டும். வீரனை வீரனே வெல்ல முடியும். ஆக சிவத்தைச் சிவமே வெல்லும். அப்படி முந்தி வெல்வது சிவசக்தியே. அதுதான் கறைகண்டனுக்கு மூத்தவளே.

பின்னைப் புதுமைக்கும் புதுமை என்பார்கள் அல்லவா. அதுதான் இங்கும். முன்னைக்கும் முன்னை என்றால் கிழவியா? இல்லை என்றும் குமரிதான் என்று சொல்லத்தான் மூவா முகுந்தற்கு இளையவளேன்னு அபிராமி பட்டர் சொல்லியிருக்கின்றார் என்று தோன்றுகின்றது.

இதில் முன்னைக்கு முன்னை. பின்னைக்குப் பின்னை என்றும் பொருள் கொள்ளலாம். ஐ என்றால் கடவுள். முன்னை என்றா முதற் கடவுள். முதற் கடவுளுக்கும் முதற் கடவுள். பின்னைக்குப் பின்னை...பின்னால் வந்த கடவுளுக்கும் பின்னால் என்றும் புதுமையாக இருப்பது.

சரிதானா நண்பர்களே!

அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

//கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!//

இங்கே "மூத்தவள்" எனும் சொல் தலைவியைக் குறிப்பதாம்.

கறைகண்டனுக்கு மூத்தவளே = கறையுண்ட கண்டத்தை உடைய சிவனுககுத் தலைவியாம்(மனைவி) அம்மையே எனப் பொருள் வரும்.

said...

//குமரன், சூத்திரத்துக்குள் அடங்குகின்றவனா சூத்திரதாரி? இப்படிச் சூத்திரம் போட்டு இறைவனை முடிவு செய்ய முடியுமானால் விஞ்ஞானத்தால் இறைவனை எப்பொழுதோ நிரூபித்திருக்கலாம். ஆனால் இந்த அறிவை விட இறைவனை அறிய மெய்யறிவே தேவை. //

மறுக்க முடியாத உண்மை. எள்ளளவும் சந்தேகம் இல்லை.

//சைவம், சாக்தம் கௌமாரம் ஆகிய மூன்றும் எனக்குத் தெரிந்த பழம் இலக்கியங்களில் இருந்தே வந்திருக்கின்றன. சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப் படை, சங்க இலக்கியங்களி பார்த்தால் இதற்குச் சான்று கிட்டும். காணாபத்தியத்தைப் பழைய நூல்களில் காணவேயில்லை.
//

வைணவத்தைப் பற்றிப் பேசவேயில்லையே. பழந்தமிழ் இலக்கியங்களில் வைணவம் இல்லை என்பது உங்கள் கருத்தா? இங்கு முகுந்தனுக்கு இளையவளைப் பற்றிப் பேசுகிறோமே; அதனால் வைணவத்தைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

//ஆதித் தமிழ் மதத்தில் முருகக் கடவுளுக்கும் வள்ளிக்குமே தொடர்பில்லை என்று சொல்லவும் கேள்விப் பட்டிருக்கின்றேன்.//

இதுவும் பின்னர் வரும் சில வரிகளும் எனக்குப் புதிய தகவல்கள்.

//சிவனே பெரியவர் என்றோ திருமாலே பெரியவர் என்றோ யாரேனும் வாதிட்டிருந்தால் அவர்கள் உண்மையிலேயே இறையருளைப் பெறவில்லை என்பது என்னுடைய கருத்து.
//

இருக்கலாம். யாராலும் அதனை அறுதியிட்டுக் கூறமுடியாது.

//ஆதிநாதன் சிவபெருமான்//
இது சைவத்தின் கருத்து மட்டுமா? இல்லை இந்து மதம் முழுமைக்கும் உள்ள கருத்தா? ஏனெனில் வைணவம் விஷ்ணுவே ஆதிநாதன் என்கிறது.

//இல்லை என்றும் குமரிதான் என்று சொல்லத்தான் மூவா முகுந்தற்கு இளையவளேன்னு அபிராமி பட்டர் சொல்லியிருக்கின்றார் என்று தோன்றுகின்றது.
//

இந்த விளக்கம் ஒத்துக்கொள்ளும் படி தான் இருக்கிறது. இங்கும் ஏன் இப்படி விளக்கம் தராமல் விட்டீர்கள்.

ஆதிநாதன் சிவபெருமான் என்று தொடங்கி சிவனும் சக்தியும் ஒன்றே; சிவத்தை சிவமே வெல்கிறது; சிவத்திற்கு சிவமே மூத்தது - என்று விளக்கிய நீங்கள் அதே போல்

முகுந்தன் என்றும் மூவாதவன். இளைஞன். அவனுக்கும் இளையவள் சக்தி. வீரனை வீரனே வெல்வது போல் முகுந்தனை சக்தியே வெல்கிறாள் இளமையில்; சக்தியும் முகுந்தனும் ஒன்றே; முகுந்தனே முகுந்தனை வெல்கிறான்; முகுந்தனுக்கு முகுந்தனே இளையவன் - என்று விளக்கியிருக்கலாமே. பிரச்சனை தீர்ந்துவிட்டதே. ஏன் கூறாமல் விட்டீர்கள்?

சிவனும் சக்தியும் முகுந்தனும் ஒன்றே. ஒருவரை ஒருவர் வெல்கிறார்கள் என்று சொல்லிவிடலாமே. ஏன் முகுந்தனை மட்டும் விட்டுவிட்டீர்கள்?

//முதற் கடவுளுக்கும் முதற் கடவுள். பின்னைக்குப் பின்னை...பின்னால் வந்த கடவுளுக்கும் பின்னால் என்றும் புதுமையாக இருப்பது.
//

இதில் பின்னால் வந்த கடவுள் யார்? முதற்கடவுள் யார்? முன்னுக்குப் பின் முரணாய் இருக்கிறதே தங்கள் பதிவு?

said...

ஞானவெட்டியான் ஐயா. நல்ல விளக்கம். அப்படியே முகுந்தனுக்கு இளையவள் என்பதற்கு தங்கள் விளக்கம் என்னவென்று சொல்லுங்களேன்.

said...

முகுந்தனுக்கு சிவனின் மனைவி தங்கை முறையல்லவா? தங்கையை அண்ணன் மணமுடித்து தருவதாக சொல்வதும் உண்டு

said...

முகுந்தனுக்கு சிவனின் மனைவி தங்கை முறையல்லவா? தங்கையை அண்ணன் மணமுடித்து தருவதாக சொல்வதும் உண்டு

said...

ஞானவெட்டியானின் விளக்கம் மிகவும் அருமை. இது தோன்றவேயில்லை.

// வைணவத்தைப் பற்றிப் பேசவேயில்லையே. பழந்தமிழ் இலக்கியங்களில் வைணவம் இல்லை என்பது உங்கள் கருத்தா? இங்கு முகுந்தனுக்கு இளையவளைப் பற்றிப் பேசுகிறோமே; அதனால் வைணவத்தைப் பற்றியும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். //

வைணவமும் பழந்தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றது. இல்லையென்று எப்படி மறுப்பது? நாம் ஆதிபராசக்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதால் அதைத்தொடர்ந்தே எழுதினேன்.

////ஆதிநாதன் சிவபெருமான்//
இது சைவத்தின் கருத்து மட்டுமா? இல்லை இந்து மதம் முழுமைக்கும் உள்ள கருத்தா? ஏனெனில் வைணவம் விஷ்ணுவே ஆதிநாதன் என்கிறது. //

இது சைவ சித்தாந்தம் சொல்லும் கருத்து. சாக்தமும் கௌமாரமும் சைவத்தோடே வளர்ந்தவையாதலால் நான் அந்த வழியில் எடுத்துக் கொண்டேன். கௌமாரத்தை எடுத்தால் அது முருகனை அனாதிநாதன் என்கின்றது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதம். பேர் மாறும். உரு மாறும். அவ்வளவுதான். நான் விளக்கத்திற்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டேன்.

said...

// முகுந்தன் என்றும் மூவாதவன். இளைஞன். அவனுக்கும் இளையவள் சக்தி. வீரனை வீரனே வெல்வது போல் முகுந்தனை சக்தியே வெல்கிறாள் இளமையில்; சக்தியும் முகுந்தனும் ஒன்றே; முகுந்தனே முகுந்தனை வெல்கிறான்; முகுந்தனுக்கு முகுந்தனே இளையவன் - என்று விளக்கியிருக்கலாமே. பிரச்சனை தீர்ந்துவிட்டதே. ஏன் கூறாமல் விட்டீர்கள்? //

கண்டிப்பாக விளக்கியிருக்க வேண்டும். அலுவலகத்தில் வேலைக்கு நடுவில் அவசர அவசரமாக எழுதியதால் வந்த வினை அது. எழுதாமல் விட்டது சரியே என்று உங்களது அருமையான எடுத்தாடலைப் பார்த்ததும் தோன்றுகின்றது. :-) என்ன குமரன், நான் மதபேதம் பார்ப்பேனா?

said...

// இதில் பின்னால் வந்த கடவுள் யார்? முதற்கடவுள் யார்? முன்னுக்குப் பின் முரணாய் இருக்கிறதே தங்கள் பதிவு? //

இல்லையில்லை. முரணெதுவுமில்லை. நான் எந்தக் கடவுளையும் குறிப்பிட்டு முன்னை பின்னை என்று சொல்லவில்லை.

அனைத்தையும் கடந்தது எப்படி அனைத்திற்கும் உள்ளிருக்குமோ....அப்படித்தான் இதுவும். காலப் போக்கில் இறைவழிபாடுகள் மாறலாம். புதுப்புது கடவுள்கள் வரலாம். எப்படி வந்தாலும் என்றும் தாயாக இருப்பவள் என்று பொருள் கொள்ளலாம்தானே.

said...

தேன்துளி கூறியது:"முகுந்தனுக்கு சிவனின் மனைவி தங்கை முறையல்லவா?"

தேவகி வயிற்றில் சிறையில் முகுந்தன் கருவிருந்தான். அங்கே கொல்ல கம்சன் இருந்தான். மாயவன் உடனே மாயையை அழைத்து கருவில் அவளை இருத்தித் தான் வெளியே வந்து யசோதையிடம் சென்றுவிட்டார். பின்னர் அம்மை அவதரித்தார். கம்சன், எட்டாம் குழந்தை பெண் குழந்தையா? இதுவா எனக்கு எமன்? என ஏமாந்தான்.

இங்கு முகுந்தன் முன்னர் பிறந்ததால், அம்மைக்கு அண்ணன்.

said...

// முகுந்தனுக்கு சிவனின் மனைவி தங்கை முறையல்லவா? தங்கையை அண்ணன் மணமுடித்து தருவதாக சொல்வதும் உண்டு //

தேன்துளி, உங்களது இந்த விளக்கமும் அருமை. ஞானவெட்டியானின் மூத்தவள் விளக்கமும் தேன்துளியின் இளையவள் விளக்கமும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

said...

நல்ல விளக்கம் இராகவன்.

ஞானவெட்டியான் அவர்கள் சொன்னதன் பின்தான் ஏன் சக்தியை நாராயணனின் தங்கை என்று கூறுகிறார்கள் என்பது விளங்குகிறது.

நன்றி

இந்த விஷயத்தில் என்னையுமறியாமல் நான் தான் agent provocateur என்பதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். :(

said...

Mr. agent provocateur. நீங்கள் வந்து இதைச் சொல்லும் வரை காத்திருக்கலாம் என்று தான் மீண்டும் மறுமொழி இடாமல் காத்திருந்தேன்.

தேன் துளி சொன்னதையும், ஞானவெட்டியான் ஐயா சொன்னதையும் கொஞ்சம் விரித்துச் சொல்கிறேன். பாகவதத்தில் சொல்லப்படும் கதை இது. தேவகி தேவியின் மகனாகக் கண்ணன் பிறந்த சிறிது நேரத்தில் யசோதைக்குப் மஹா மாயையாகிய சக்திதேவி பெண்குழந்தையாகப் பிறக்கிறாள். வசுதேவர் கண்ணனை கண்ணனின் கட்டளைப்படி கோகுலத்திற்கு எடுத்துச் சென்று நந்தகோபரின் துணையுடன் யசோதையின் அருகில் வைத்துவிட்டு, அங்கிருக்கும் பெண்குழந்தையைக் கொண்டுவருகிறார். கம்சன் எட்டாவது பெண் குழந்தையா என்று குழம்பினாலும் பெண்ணாலும் தனக்கு அழிவு நேரிடலாம் என்று எண்ணி வழக்கமாக எல்லா குழந்தைகளையும் கொன்றது போல் இந்தப் பெண் குழந்தையையும் பாறையில் அடித்துக் கொல்ல ஓங்கும் போது அவன் கையில் இருந்து நீங்கிச் சென்று ஆகாயத்தில் சிம்மவாஹினியாய் நின்று கம்சனைக் கொல்லப் பிறந்த கண்ணன் வேறோரிடத்தில் வளர்கிறான் என்று எச்சரித்துவிட்டு மறைகிறாள்.

இதன் அடிப்படையில் தான் கண்ணனின் தங்கை கருமாரிதேவி என்ற கொள்கை பிறந்தது.

'அயிகிரி நந்தினி நந்தித மேதினி விஷ்வ வினோதினி நந்த நுதே' என்பதில் உள்ள நந்த நுதே என்பதற்கு நந்தகோபரின் மகள் என்று பொருள்.

அதனால் தான் மீனாட்சித் திருக்கல்யாணக் கோலத்திலும் மாயவன் தன் தங்கை மீனாட்சியை சுந்தரேஸ்வரருக்கு மணமுடித்துத் தருவதாகப் பார்க்கிறோம்.

சங்கரநாராயணத் திருக்கோலத்தையும் அர்த்தநாரீஸ்வரத் திருக்கோலத்தையும் பார்த்தால் இன்னொரு கருத்து விளங்கும். இரண்டு திருக்கோலத்திலும் சிவபெருமான் வலப்பக்கத்திலும் இடது பக்கத்தில் முறையே நாராயணனும் அன்னையும் இருப்பார்கள். அதனால் விஷ்ணுவும் துர்க்கையும் ஒரே தத்துவம் என்ற கருத்தும் உண்டு. துர்க்கையின் கையில் பார்த்தால் விஷ்ணுவின் சங்கு சக்கரம் இருக்கும்.

ஏதோ இராமநாதன் கேட்ட ஒரு கேள்வியால் இத்தனை விஷயங்கள் பேசமுடிந்தது. நாரதர் கலகம் நன்மையில் முடியும் :-)

said...

அருமையான விளக்கம்