Thursday, October 26, 2006

01. கேடிசி பிஆர்சி தூத்துக்குடி

எத்தனையோ தீபாவளிகளுக்குப் பெறகு தூத்துக்குடியில மறுபடியும் தீபாவளி கொண்டாடினேன். என்னைய வளத்த அத்தையோடயும் மாமாவோடயும். பொறந்த ஊருக்குப் போறதுல அப்படியொரு மகிழ்ச்சி. ஆனா பாருங்க....நான் தூத்துக்குடிக்குப் இந்திய ரயில்வே துறை ரொம்பவும் விருப்பமில்லை போல இருக்கு. நின்னுக்கிட்டு போற பெட்டியில இருந்து தூங்கிக்கிட்டுப் போற குளுகுளு பெட்டி வரைக்கும் டிக்கெட் தர முடியாதுன்னு மறுத்துட்டாங்க. என் மேல இருக்குற தனிப்பட்ட ஆத்திரத்த லாலு பிரசாத் யாதவ் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம். என்ன ஆத்திரம்னு கேக்குறீங்களா? அத அங்க கேக்க வேண்டியதுதான...ஆனா அவரு அதெல்லாம் ஒன்னுமில்லை. என்னைய அவருக்குத் தெரியவே தெரியாதுன்னு சாதிப்பாரு. சரி. உலகத்துல பலர் அப்படித்தான். விடுங்க.

அடுத்து என்ன செய்ய? சொகுசுப் பேருந்துகள். கே.பி.என், ஷர்மா அது இதுன்னு ரெண்டு மூனு இருக்கே. ஆனா பாருங்க....அந்த வண்டியெல்லாம் மதுர வரைக்குந்தான். சரி. மதுரைக்குப் போயி தூத்துக்குடி வண்டி பிடிச்சாப் போச்சுன்னு நெனச்சேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லைன்னு கவியரசர் இவங்கள நெனச்சுத்தான் பாடியிருப்பாரு போல. டிக்கெட் இல்லைன்னு வெரட்டி விட்டுட்டாங்க. உண்மைதாங்க. இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. சரிதான் போங்கன்னு கெளம்பி வந்துட்டேன். அந்த ஆத்திரத்தைத் தனிக்க பக்கத்துல இருந்த அடையாறு ஆனந்த பவன்ல காக்கிலோ பாவக்கா சிப்சு வாங்கிக்கிட்டேன். அதத்தான நொறுக்க முடியும்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படுறதுதான் அரசாங்கமாமே! அப்படிப்பட்ட கர்நாடக தமிழக அரசுப் பேருந்துகளைத்தான் அடுத்து நெனச்சேன். ஆனா அவங்களும் வண்டி பொறப்படுறதுக்குச் சரியா பத்தே பத்து நாளைக்கு முன்னாடிதான் டிக்கெட் தருவாங்களாம். அதுவும் பண்டிகைக்காலங்குறதால விடியக்காலைல அஞ்சரைக்கே வந்தாத்தான் ஏதாவது தேறும்னு சொல்லீட்டாங்க. என்ன செய்ய? நம்ம நண்பர் பிரதீப்பு மதுரக்காரரு. அவருக்கு ஒரு அலைபேசி (நன்றி குமரன்) போட்டுக் கேட்டேன். அவரும் அந்த பொழுதுல மதுரைக்குப் போறவராம். ஆனா ஐதராபாத்துல இருந்து. அவரோட தம்பி பெங்களூர்ல இருந்து மதுரைக்குப் போகனும். ரெண்டு பேரும் ஒன்னா டிக்கெட் எடுத்து போயிட்டு வந்துட்டா வசதியாயிருக்குமுன்னு முடிவு செஞ்சி டிக்கெட் எடுக்குற லேசான வேலையை மட்டும் அவரோட தம்பி ராஜ் தலையில கட்டினோம்.

டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன். அஞ்சர மணிக்கு வரிசையில நின்னவன் விடுவிடுன்னு முன்னேறி பத்தர மணிக்கெல்லாம் ரெண்டு டிக்கட் எடுத்துட்டான். கடைசி வரிசைதான். அதெல்லாம் பாத்தா முடியுமா? திருநவேலி போற வண்டியில திருநவேலிக்கு டிக்கெட் எடுத்து மதுரையில எறங்கத் திட்டம். அதே மாதிரி பிரதீப்போட மாமா மதுரையில எங்க ரெண்டு பேருக்கும் திரும்பி வர டிக்கெட் எடுத்துட்டாரு. அப்பாடி.......ஒரு வழியா ஏற்பாடுகள் முடிஞ்சது.

திருநவேலி வண்டியோ மதியம் மூனரை மணிக்கு. மதுரைக்கு ரெண்டு ரெண்டரைக்குப் போகும். ஆபீசுக்கு பாதி நாள் மட்டம் போட்டுட்டு வியாழக் கெழமை...அதாவது அக்டோபர் 19ம் தேதி பொறப்பட்டோம். கடைசி வரிசை. சீட்டு சரியில்லை. ஒரு பக்கமா நெளிஞ்சிருக்கு. வண்டி ஓடாம நிக்கும் போதே சீட்டு ஆடாம நிக்க மாட்டேங்குது. சரி. ஊருக்குப் போகனும். அதுக்கு இதெல்லாம் நடக்கனும். நடக்கட்டும்.

இன்னும் நாலு பேரு டிக்கெட் எடுத்திருக்காங்க. ஆனா அதுல மூனு பேரு வந்தாச்சு. நாலாவது ஆளு வந்துக்கிட்டே இருந்தாரு. வண்டி கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்தது. "டிரைவருங்குற பேர்ல நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன். அதுனால என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு" சொல்லீட்டாரு நடத்துனரு. சரீன்னு அந்த சீட்ட இன்னொருத்தருக்குக் குடுத்து காசி வாங்கீட்டாங்க. விடுவாரா நடத்துனரு. பேச வேண்டிய பேரத்தப் பேசி அவரு கணக்குக்கு ஒரு நூறு ரூவாய வாங்கிக்கிட்டாரு. வாங்கீட்டு "ஒரு கட்டுக்கு ஆச்சு"ன்னாரு. அதுல கருத்து வேற சொன்னாரு. "சார். நாங்க குடிக்கிறது பசிக்கோ போதைக்கோ இல்ல. வாசனைக்குத்தான். அந்த வாடைக்குத்தான் குடிக்கிறது. பசிக்கோ போதைக்கோ குடிக்கிறோம்னு தப்பா நெனக்கக் கூடாது"ன்னு தன்னிலை வெளக்கம் குடுத்து அவரு நல்லவருன்னு சொல்லீட்டாரு. சரீன்னு நம்ம ஒத்துக்கலைன்னா இன்னும் பெரிய விளக்கமெல்லாம் குடுப்பாருன்னு அவரு சொன்னத அப்படியே ஏத்துக்கிட்டோம்.

பெங்களூர்ல எங்க பாத்தாலும் கூட்டம். மூனரைக்குப் பொறப்பட்ட வண்டி சரியா ரெண்டே மணி நேரங் கழிச்சு அஞ்சரைக்கு பெங்களூர விட்டு வெளிய வந்திருச்சு. அப்புறம் சர்ருன்னு ஓடுச்சு...ரொம்பப் பேரு நின்னுக்கிட்டும் கீழ உக்காந்து கிட்டும் வந்தாங்க. கொஞ்சப் பொம்பளைங்க டிரைவருக்குப் பின்னாடி இருக்குற கேபின் சீட்டுல உக்காந்து கிட்டும் வந்தாங்க. எப்படியோவது பண்டிகைக்கு ஊருக்குப் போனாச் சரிதான்னு. அவங்கவங்க பகுத்து அவங்கவங்களுக்கு.

வழியில பேர் தெரியாத ஊர்ல பேர் தெரியாத ஓட்டல்ல சாப்பிட நிப்பாட்டினாங்க. பரோட்டா ரொட்டி தவிர ஒன்னும் சரியாயில்ல அங்க. ஒரு பரோட்டாவும் முட்டைக் குருமாவும் வாங்கிச் சாப்பிட்டோம். சில்லி காக்காவா சிக்கனான்னு தெரியலை. எதுவாயிருந்தா என்ன...தின்னாச்சு. அவ்வளவுதான். எனக்கு அப்பப் பாத்து டீ குடிக்க அடங்காத ஆசை. அத்தன சின்ன பிளாஸ்டிக் கப்ப நான் அப்பத்தான் பாக்குறேன். அதுல நெறைய நெறைய நொறையா வர்ர மாதிரி கொதிக்கிற டீய ஊத்திக் குடுத்தாரு டீக்கடைக்காரரு. என்னவோன்னு குடிச்சு வெச்சேன். அவ்வளவு நல்லாயிருக்கல.

இருட்டுற வரைக்கும் Lord of the rings புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தேன். அப்புறம் லைட்ட அணைச்சிட்டு சண்டைக்கோழி படம் வீடியோவுல ஓடிச்சு. மக்கள் ரசிச்சு ரசிச்சு பாத்தாங்க. நானும் அப்பப்ப பாத்துக்கிட்டேன். ரெண்டரை மணிக்கு அலாரம் வெச்சுட்டுத் தூங்கினேன். மதுரையில நான் மூனு மணிக்கு எறங்கி அரை மணி நேரத்துல பஸ் ஏறுனாக் கூட ஆறரைக்கெல்லாம் தூத்துக்குடி போயிரலாம்ல. போனேனா?

தொடரும்....

22 comments:

said...

என்ன இராகவன்? அக்குறும்பா இருக்கே. நாங்க எல்லாம் இங்க செல்பேசியில பேசிக்கிட்டு இருக்க நீங்க அலைபேசியில பேசிக்கிட்டு இருக்கீங்களே?

நீங்க இந்தப் பதிவுல எழுதியிருக்கிறதுல எதை எதை ரசிச்சேன்னு சொல்லணும்னா பின்னூட்டத்துல சொல்ல முடியாது. தனியா பதிவாத் தான் போடணும். :-)

said...

கலக்கலா ஊருக்கு போயிருக்கீங்க... நம்ம தீபாவளி வாழ்த்து பதிவ படிக்காமலே இந்த எஃபக்னா எனக்கு புல்லரிக்குது...

//டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன்.//
ஆஹா... மேனஜர்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க ;)

விறுவிறுப்பா போகுது... அடுத்த பாகத்தையும் சீக்கிரம் போடுங்க ;)

said...

தொடர் வரக் காணுமேன்னு இப்போதான் தனி மடலில் போட இருந்தேன். அதுக்குள்ள போட்டாச்சு. வெரி குட்.

ஆக மொத்தம் ஆரம்பம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது போல. அடுத்து என்ன ஆவுதுன்னு பார்க்கலாம்.

said...

நாங்க எல்லாம் செல்பேசின்னு ஒரு முடிவுக்கு வரா மாதிரி இருக்கும் போது அலைபேசின்னு ஆப்படிக்கறீங்களே.....

said...

// குமரன் (Kumaran) said...
என்ன இராகவன்? அக்குறும்பா இருக்கே. நாங்க எல்லாம் இங்க செல்பேசியில பேசிக்கிட்டு இருக்க நீங்க அலைபேசியில பேசிக்கிட்டு இருக்கீங்களே? //

// இலவசக்கொத்தனார் said...
நாங்க எல்லாம் செல்பேசின்னு ஒரு முடிவுக்கு வரா மாதிரி இருக்கும் போது அலைபேசின்னு ஆப்படிக்கறீங்களே..... //

குமரன், கொத்ஸ்...அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. செல்லுமிடமெல்லாம் பேசினா அது செல்பேசி. அன்னைக்கு வீட்டுக்குள்ள அந்த அறைக்குள்ளையே அலைஞ்சுக்கிட்டுதான பேசுனேன். அதுனால அலைபேசீன்னு சொன்னேன் :-) (அப்பாடி ஒரு வழியா சமாளிச்சாச்சு. இப்படி நாலு பக்கமும் தாக்குறாங்கப்பா)

said...

// குமரன் (Kumaran) said...
நீங்க இந்தப் பதிவுல எழுதியிருக்கிறதுல எதை எதை ரசிச்சேன்னு சொல்லணும்னா பின்னூட்டத்துல சொல்ல முடியாது. தனியா பதிவாத் தான் போடணும். :-) //

போடுங்க குமரன். குமரன் பதிவுன்னா கேக்கனுமா...காத்துக்கிட்டிருக்கேன்.

// இலவசக்கொத்தனார் said...
தொடர் வரக் காணுமேன்னு இப்போதான் தனி மடலில் போட இருந்தேன். அதுக்குள்ள போட்டாச்சு. வெரி குட்.

ஆக மொத்தம் ஆரம்பம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது போல. அடுத்து என்ன ஆவுதுன்னு பார்க்கலாம். //

அதயேங் கேக்குறீங்க கொத்ஸ். சோதனை மேல் சோதனை வரும் போது சோதனைக்குச் சோதனை வைக்கிறவங்கங்குறத சோதனைகள் மறந்து போகும் போதுதானே சோதனைகள் தீருது.

said...

// வெட்டிப்பயல் said...
கலக்கலா ஊருக்கு போயிருக்கீங்க... நம்ம தீபாவளி வாழ்த்து பதிவ படிக்காமலே இந்த எஃபக்னா எனக்கு புல்லரிக்குது... //

அடடே! தீபாவளி வாழ்த்து பதிவு இருக்கா.......பாக்குறேன். பாக்குறேன்.

// //டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன்.//
ஆஹா... மேனஜர்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க ;) //

ஹி ஹி என்ன செய்ய வெட்டி. சமயத்துல இப்படியப்படி இருக்கத்தான வேண்டியிருக்கு.

// விறுவிறுப்பா போகுது... அடுத்த பாகத்தையும் சீக்கிரம் போடுங்க ;) //

போடுவோம். கண்டிப்பாப் போடுவோம்

said...

//இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. //

சில தீபாவளிகளுக்கு முன்னால, பெங்களூரலிருந்து கோவை செல்ல 15 நாளைக்கு முன்னாடியே கோரமங்களா KPN ஆபீஸ் போய் முன்பதிவு செஞ்சேன்.
கடைசிசீட்டுல உக்காந்து போறது ஒத்து வராதுன்னுதான் முன்கூட்டியே போய் முன்பதிவு செஞ்சது.

அன்னைக்கு கோரமங்களா KPNக்கு பஸ் வந்தப்போ பாத்தா, எனக்குக் கொடுத்த சீட்டுல வேற யாரோ உக்காந்துட்டிருக்காங்க. அவுங்களுக்கும் அதே சீட்டு நம்பர் போட்டு டிக்கட் கொடுத்திருந்தாங்க. அவுங்கள வேற சீட்டுல மாத்தி உக்கார வையுங்கன்னா, என்ன கடைசி சீட்டுல உக்கார சொல்றாங்க. ஒரே வாக்குவாததுக்கப்புறம் கடைசி சீட்டுல பிரயாணம் செஞ்சேன். இனிமேல், KPNல போக மாட்டேன்னு முடிவு பண்ணினேன். அதுதான் KPNல என்னோட கடைசிப் பயணம்.
இவங்களுக்கெல்லாம் வாடிக்கையாளர் சேவைன்னா என்னான்னே தெரியாதுன்னு நெனைக்கிறேன்.

said...

ராகவன்,
கேடிசி-ன்னு சொன்னவுடனே எனக்கு பழைய கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் தான் ஞாபகம் வந்தது.

said...

//போனேனா?//

ஆஹா...நீங்க மதுரை வலைப்பதிவர் மாநாட்டுல கலந்துக்கிட்ட சூட்சுமம் இது தானா?
:)

சரி குமரன் சொன்ன "அக்குறும்பு". நீங்க சொன்ன "பகுத்து" இது ரெண்டுத்துக்கும் அருஞ்சொற்பொருள் சொல்லுங்க. என்னைய மாதிரி ஆளுங்கல்லாம் எப்ப தெரிஞ்சிக்கிறது?
:)

said...

நல்ல தொடர் ராகவன், படங்களையும் போடப்பாருங்க

said...

// பெத்த ராயுடு said...
//இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. //

சில தீபாவளிகளுக்கு முன்னால, பெங்களூரலிருந்து கோவை செல்ல 15 நாளைக்கு முன்னாடியே கோரமங்களா KPN ஆபீஸ் போய் முன்பதிவு செஞ்சேன்.
கடைசிசீட்டுல உக்காந்து போறது ஒத்து வராதுன்னுதான் முன்கூட்டியே போய் முன்பதிவு செஞ்சது.

அன்னைக்கு கோரமங்களா KPNக்கு பஸ் வந்தப்போ பாத்தா, எனக்குக் கொடுத்த சீட்டுல வேற யாரோ உக்காந்துட்டிருக்காங்க. அவுங்களுக்கும் அதே சீட்டு நம்பர் போட்டு டிக்கட் கொடுத்திருந்தாங்க. அவுங்கள வேற சீட்டுல மாத்தி உக்கார வையுங்கன்னா, என்ன கடைசி சீட்டுல உக்கார சொல்றாங்க. ஒரே வாக்குவாததுக்கப்புறம் கடைசி சீட்டுல பிரயாணம் செஞ்சேன். இனிமேல், KPNல போக மாட்டேன்னு முடிவு பண்ணினேன். அதுதான் KPNல என்னோட கடைசிப் பயணம்.
இவங்களுக்கெல்லாம் வாடிக்கையாளர் சேவைன்னா என்னான்னே தெரியாதுன்னு நெனைக்கிறேன். //

பாத்தீங்களா பெத்தராயுடு...கேபிஎன் செஞ்ச அக்கிரமத்த.....அன்னைக்கு அவங்க நடந்துகிட்ட விதமே போதும். மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்னு முடிவு செஞ்சிட்டேன்.

said...

// ஜோ / Joe said...
ராகவன்,
கேடிசி-ன்னு சொன்னவுடனே எனக்கு பழைய கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் தான் ஞாபகம் வந்தது. //

வரனுமே...ஒங்களுக்குக் கண்டிப்பா வரனுமே...சரி..இப்ப என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்?

said...

// கைப்புள்ள said...
//போனேனா?//

ஆஹா...நீங்க மதுரை வலைப்பதிவர் மாநாட்டுல கலந்துக்கிட்ட சூட்சுமம் இது தானா?
:) //

அந்த சூச்சுமத்த எல்லாம் சொல்ல முடியுமா? சொன்னா பில்கேட்ஸ் எங்ககிட்ட கேட்டுத்தான் விண்டோஸ் எழுதுனாருன்னு தெரிஞ்சு போகும்ல. :-))))

// சரி குமரன் சொன்ன "அக்குறும்பு". நீங்க சொன்ன "பகுத்து" இது ரெண்டுத்துக்கும் அருஞ்சொற்பொருள் சொல்லுங்க. என்னைய மாதிரி ஆளுங்கல்லாம் எப்ப தெரிஞ்சிக்கிறது?
:) //

அக்குறும்புங்குறது அக்கிரமத்தோட மருவூ. பகுத்துங்குறது கொஞ்சம் அறிவு சார்ந்த சொல். அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்குன்னு சொல்றதும் நான் சொன்னதும் சரிதான். ஆனா இங்க கவலை மட்டுமல்ல...அவங்கவங்க விவகாரங்கள் அவங்கவங்களுக்குன்னு சொல்லலாம். ஒம் பகுத்து தெரியாதான்னு சொல்வாங்க. dont I know your content! எடத்துக்குத் தக்க லேசா மாறும்.

said...

// கானா பிரபா said...
நல்ல தொடர் ராகவன், படங்களையும் போடப்பாருங்க //

கண்டிப்பா பிரபா. அடுத்த பதிவுக்கும் அடுத்த பதிவுல இருந்துதான் படங்கள் வரும். :-)

said...

ஜிரா, இதுதாய்யா கதைவிடுவது என்பது :-)
ஒத்தை வரி, விசேஷ நாள் டிக்கெட் கிடைக்கவில்லை. அடிச்சி பிடிச்சி ஊருக்குப் போய் சேர்ந்தேன் என்று சொல்வதற்கு ஒரு பதிவு, அதுல தொடரும் வேற ;-))))))))))))))))))

said...

//ஆஹா...நீங்க மதுரை வலைப்பதிவர் மாநாட்டுல கலந்துக்கிட்ட சூட்சுமம் இது தானா?//
எனக்கும் கட்டபொம்மன் நினைவுதான் முதலில் வந்தது

said...

// ramachandranusha said...

ஜிரா, இதுதாய்யா கதைவிடுவது என்பது :-)
ஒத்தை வரி, விசேஷ நாள் டிக்கெட் கிடைக்கவில்லை. அடிச்சி பிடிச்சி ஊருக்குப் போய் சேர்ந்தேன் என்று சொல்வதற்கு ஒரு பதிவு, அதுல தொடரும் வேற ;-)))))))))))))))))) //

உஷா, என்ன செய்றது. நீங்க சொல்ற மாதிரி ஒருவரியில சொல்லியிருந்தா ஒரு விறுவிறுப்பு சுறுசுறுப்பு இருக்காதே. அப்புறம் வழியில பாத்தது கேட்டதெல்லாம் எப்படிச் சொல்றது? அதான் தொடரும் போடுறது. :-)

said...

// தாணு said...

//ஆஹா...நீங்க மதுரை வலைப்பதிவர் மாநாட்டுல கலந்துக்கிட்ட சூட்சுமம் இது தானா?//
எனக்கும் கட்டபொம்மன் நினைவுதான் முதலில் வந்தது //

ஒங்களுக்குக் கண்டிப்பா வரனுமே. அதுலதான நீங்க மருத்துவக்கல்லூரிக்கே போயிருப்பீங்க? சரியா?

said...

http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_25.html

பின்னூட்டம் பெருசாப் போடனும்னு ஆசைதான். ஆனா......................

said...

நல்ல விறுவிறுப்பான நடையில் வாசிக்கக் கூடியதாக எழுதி இருந்தீங்க...

த லோட் ஒப் த ரிங்ஸ் புத்தகம் எப்பிடி??? சூப்பர் தானே???

//என் மேல இருக்குற தனிப்பட்ட ஆத்திரத்த லாலு பிரசாத் யாதவ் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம்.//
ஒரு தடவை என் நண்பன் சொன்னான் தனக்கும் பில் கேட்சுக்கும் ஈகோ பிரைச்சனையாம். தான் அவரோட பேசிறதில்லையாம் அவரும் இவனோட பேசறதில்லையாம்!!!

//சில்லி காக்காவா சிக்கனான்னு தெரியலை. //
சாப்பிட்டாப்பிறகு என்னமாதிரிக் குரல் வந்திச்சு?? உன்னிக்கிருஷ்ணன் மாதிரியா???? (ரண் படம் பார்த்த விளைவுதான் இந்தக் கேள்வி)

சரி கடைசியாப் போனீங்களா? இல்லையா? சொல்லாம ஏமாத்திட்டீங்களே! சரி சரி அடுத்த பதிவில அதைப் பாத்திடுவம்.

ஆ.. கடைசியாக உங்களின் தேன்கூடு போட்டி வெற்றிக்காக வாழ்த்துக்கள். உங்கள் படத்துடன் தேன்கூடு முதற்பக்கம் அழகாக இருக்கின்றதே!!! ;)

said...

மீண்டும் ஒரு பயணகட்டுரை.

பண்ணுங்க, பண்ணுங்க

அதுசரி லா(வே)லு ஒரு சிறப்பு ரயில் விட்டாரே அதை கவனிக்கவில்லையா?

நானும் ஒரு பயணகட்டுரை எழுதனும் நினைக்கிறேன்

நினைக்கும் போகுது கவிதை அருவியா கொட்டுது
அதை பதியும் போது தான் வார்த்தை ... :)