Monday, December 25, 2006

பொய் - விமர்சனம்

கடலை வாங்கிச் சாப்பிடும் பொழுது ஒரு சொத்தைக் கடலை தின்று விட்டு அடுத்து எந்தக் கடலையைத் தின்றாலும் அது நன்றாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்..கடைசியாகப் பார்த்த தமிழ்த் திரைப்படம் சிவப்பதிகாரம். அந்தச் சூட்டோடு பார்க்கப் போனது பொய்.

பாலச்சந்தர் படங்கள் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது முன்பு. இன்று அவர் ஓய்வு பெற்ற பிறகு ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படம் எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற ஆவல்தான் படத்தைப் பார்க்கத் தூண்டியது.

தொடக்கமே தமிழ் மயம். வள்ளுவனார் என்று ஒரு தமிழ்/அரசியல் தலைவர். ரொம்பவும் நல்லவர். அவருக்குக் கம்பன் என்று ஒரு மகன். அவந்தான் கதாநாயகன். எப்பொழுதும் முருகா முருகா என்று உருகும் அம்மா. அப்பாவுக்கும் மகனுக்கும் ஆகாது. லேசாக அபூர்வ ராகங்கள் வாடை. "அம்மா! இன்னைக்கு எந்தக் கடவுள் அருள் குடுப்பாரும்மா?" என்று மகன் கேட்கும் பொழுது "முருகன் குடுப்பாரு"ன்னு அம்மா சொல்லும் போது நமக்குப் புல்லரிக்குது. ஆனா அதுக்கப்புறம் வெறும் அரிப்புதான். புல்லைக் காணோம். புலியைக் காணோம் என்று ஓட வேண்டிய நிலை.

அப்பாவிடம் இருந்து கெட்ட பெயர் எடுக்காமல் இருக்க இலங்கைக்குப் போகிறார் கதாநாயகன். கொழும்பு வரவேற்கிறது. அழகான ஊர். மிகவும் அழகான ஊர். பெரிய பெரிய புத்தர் சிலைகள். இத்தனை அழகை வைத்துக் கொண்டிருக்கும் தீவில் அமைதி மட்டும் இல்லை...ம்ம்ம்ம்...சுனாமியின் சில வடுக்களைக் காட்டுகிறார்கள். நெஞ்சம் உண்மையிலேயே கனக்கிறது.

2006வது இலங்கைக்குப் போவோம் என்ற விருப்பம் பொய்யால்தான் நிறைவேறியது. அரைகுறையாய். புறப்படுகையில் பொய் சொல்லக் கூடாது என்று சொல்லி அம்மா ஒரு உண்டியலைக் கொடுக்கிறார். அந்த உண்டியலில் அவன் திரும்பி வருகையில் காசே இருக்கக் கூடாதென்று விரும்புகிறது அந்த அம்மாவின் மனம். ஆனால்..மகன் அங்கு போனதிலிருந்து பொய் பொய்யாகச் சொல்ல வேண்டிய நிலை.

அதற்குக் காரணம் அவனது புது அப்பா. தனது அடையாளத்தை மறைக்க தன்னுடைய பெயர் பாரதி என்றும் தந்தையார் திருநெல்வேலிப் பக்கம் என்றும் அவர் வாயில் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் விழுமென்றும் புழுகி வைக்கிறான். அந்தத் தந்தை கற்பனையில் உண்மையாய் வருகிறார். காதலிக்கச் சொல்கிறார். அதற்கு ஐடியாக்களை அள்ளி விடுகிறார். அந்தத் தந்தையாக நெல்லை தூத்துக்குடிப் பேச்சுப் பேசி நடித்திருப்பது கே.பாலச்சந்தர். அந்தத் தந்தையும் விதியும் விளையாடும் பாம்புக்கட்ட தாயம் விளையாட்டுதான் கதாநாயகனின் காதல். கொஞ்சம் புதுமையான சிந்தனை. ரசனைக்குரிய சிந்தனையும் கூட. விதியாக வருவது பிரகாஷ்ராஜ். ஒவ்வொரு முறையும் விதி காய்களை உருட்டி புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கும் பொழுது....தந்தை பாலச்சந்தரும் காய்களை உருட்டி மகனுக்கு புதுப்புதுத் திட்டங்களை அள்ளி விடுகிறார்.

முதல் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக நம்மைக் கட்டிப் போடுவது வசனங்கள். நல்ல வசனங்கள் கூட. ஆனால் அந்த வசனங்களே பின்னால் கடையில் வாங்கிய புதுக்கத்தியாகும் பொழுது ஆப்பிளாகவும் ஆரஞ்சாகவும் நமது கழுத்து பழுக்கிறது. கதாநாயகனுக்கு ள வராது. வள்ளுவனார் என்ற தந்தையின் பெயரை வல்லுவனார் என்று உச்சரித்துத் திட்டு வாங்கிக் கொள்ளும் அவன் பின்னாளில் ள உச்சரிக்கக் கற்று ள ள ள என்று பாடும் நிலா பாலுவின் குரலில் பாடும் பொழுது...தியேட்டரில் புண்ணியம் செய்த பாதி பேர் ஏற்கனவே வெளியேறி விட்டிருந்தார்கள்.

விதி கதாநாயகியின் பள்ளிக்கூடக் காதலனைக் கொண்டு வருகிறது. அவரது கோணல் நடனங்களும் கொண்ணைப் பேச்சும்....முருகா....முருகா! அதை விடக் கொடுமை கதாநாயகனுக்கு இலங்கையில் அறிமுகமாகும் பெங்காலி நண்பன். பானர்ஜி என்று சொல்லிக் கொள்ளும் அவரிடம் கொஞ்சம் கூட பெங்காலித் தன்மை தெரியவில்லை. இந்திதான் பேசுகிறார். நமஸ்தே என்கிறார். வங்காளிகள் நமோஷ்கார் என்று வணங்குவார்கள். பெங்காலி பாரி என்று மட்டும் அவரது வீட்டுக்குப் பெயர். பாரி என்றால் வங்கத்தில் வீடு என்று பெயர். கொல்கத்தாவில் இருக்கும் காளிகோயிலுக்குக் காளிபாரி என்றுதான் பெயர். படத்தில் தேவையில்லாத பல பாத்திரங்களில் இதுவும் ஒன்று.

நளதமயந்தியில் நடித்த கீது மோகன்தாஸ் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். தேவையில்லாத இன்னொரு பாத்திரம். இவரும் காதலைப் பற்றி வசனங்கள் பேசி நம்மையும் சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்பச் சொல்லி அடம் பிடிக்கிறார். ஆனாலும் படத்தின் முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்ற நமது பொறுமை பூமாதேவியின் பொறுமையை விடப் பெரியது என்று சொல்ல எந்த ரிக்டர் ஸ்கேல் வேண்டுமோ! உல்லூக்கா பட்டா! இதுதான் அவர் வாயில் அடிக்கடி வரும் பேச்சு! அதே மாதிரி கதாநாயகி அடிக்கடி சொல்வது சம்ஜே. கே.பி...கதாநாயகிகள் இன்னமும் இப்படி எதையாவது திரும்பத் திரும்பச் சொல்வது அலுப்பாக உள்ளது.

காதலும் கல்யாணமும் பல பெண்களின் முன்னேற்றத்திற்கும் லட்சியத்துக்கும் தடையாக உள்ளது என்ற கருத்து கதாநாயகிக்கு. ஆகையால் கஷ்டப்பட்டு கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொண்ட பொழுது ஒரு வரம் கேட்கிறார். ஆம். காதலையே விட்டுக் கொடுக்கும் படி. அப்பொழுதுதான் அவரது லட்சியம் நிறைவேறுமாம். அந்த லட்சியம் என்றுவென்று இயக்குனர் நமக்குச் சொல்லியிருக்கலாம். பாவம். அவருக்கே தெரியவில்லை போலும். கதாநாயகியும் கதாநாயகனும் fine என்ற சொல்லை வைத்து பேசும் பொழுது இருகோடுகள் படத்தில் வரும் file-life வசனம் நினைவுக்கு வருகிறது. ஆனால்.....இந்தப் படத்தைப் பார்க்க வந்ததற்கு நமக்குத்தான் fine போடுவார்களோ என்று பயம் எழாமல் இல்லை.

உய்யோ! இப்படி அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகிறார் ரேணுகா. இவரது பாத்திரத்தை இன்னமும் நன்றாகச் செதுக்கியிருக்கலாம். ஆனால் அதுக்கி விட்டிருக்கிறார்கள். இவரது பிளாஸ்டிக் சிரிப்புக் கணவருக்குச் சிரிப்பது ஒன்றுதான் படத்தில் வேலை. படம் முடியும் பொழுது எல்லாரும் அழுகிறார்கள். இவர் மட்டும் தொலைபேசியில் யாருடனோ பேசுகிறார். அழுது கொண்டே பேசக் கூடாதா?

மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இன்னும் பல இசையமைப்பாளர்களும் கவியரசர், வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்களும் கே.பிக்குக் காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கும் கேட்க இனிமையான பாடல்கள் அவை. ஆனால் அவைகளுக்குத் திருஷ்டிப் பரிகாரம் வேண்டாமா? வித்யாசாகர் கொடுத்திருக்கிறார். பாடல் வரிகள்...ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அம்மாவாக நடிக்கும் அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கும் மகனாக நடிக்கும் உதய்கிரணுக்கும் உள்ள அந்த பாசப் பிணைப்பு. நாடகத்தனம்தான். ஆனால் படத்தில் அது ஒன்றுதான் ஆறுதல். ஆனால் அந்த ஆறுதலும் ஆறிப் போகும்படி அவரை மாடியிலிருந்து தள்ளி விட்டுக் கொன்று விடுகிறார்கள். அதே போல படம் முடிகையில் கதாநாயகனையும் நாயகியையும் கொன்று விடுகிறார்கள். என்ன மனசய்யா உமக்கு. மரோசரித்ராவில் சரி. இன்றுமா!

மொத்தத்தில் எனக்குப் பொய் பிடிக்காது என்று சொல்லி விடுகிறேன். ஆங்....இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். படத்தில் ஆங்காங்கே வரும் தமிழ். பொய்மையும் வாய்மையிடத்தப் புரை தீர்த்த காதல் பயக்குமெனின் என்று கற்பனை அப்பா பாலச்சந்தர் சொல்லும் புதுக்குறள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வரியைச் சொல்வதற்காக இந்தப் படத்தின் கதையைச் சொல்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்க நுழைவுச் சீட்டு நான் வாங்கும் பொழுது "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று புரியாமல் போனது வேதனைதான்.

"இறைவா இது நியாயமா?" இது படம் முடியும் பொழுது ஒலிக்கும் பாடல். நமது மனதுள்ளும்தான்.

அன்புடன்,
கோ.இராகவன்

43 comments:

said...

//அந்தத் தந்தையும் விதியும் விளையாடும் பாம்புக்கட்ட தாயம் விளையாட்டுதான் கதாநாயகனின் காதல். கொஞ்சம் புதுமையான சிந்தனை. ரசனைக்குரிய சிந்தனையும் கூட. விதியாக வருவது பிரகாஷ்ராஜ். ஒவ்வொரு முறையும் விதி காய்களை உருட்டி புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கும் பொழுது....தந்தை பாலச்சந்தரும் காய்களை உருட்டி மகனுக்கு புதுப்புதுத் திட்டங்களை அள்ளி விடுகிறார்.//

இந்தப் படத்தைப் பார்க்கவில்லை - ஆனால் நீங்கள் மேலே குறித்திருப்பது படத்தில் வருவது எனில், இதேபோன்ற ஒரு சம்பவ அமைப்பு இங்மார் பெர்க்மனின் The Seventh Seal படத்தில் வரும் - ஒரு போர்வீரனும் மரணமும் சதுரங்கம் ஆடுவதைச் சுற்றியே இப்படம் கட்டமைக்கப்பட்டிருக்கும். என்ன, படம் வந்தது 50 வருடங்களுக்கு முன்னே.

பார்க்க: http://imdb.com/title/tt0050976/

said...

பொய் விமர்சனம் தானே? :-))

said...

//ஆனால் அவைகளுக்குத் திருஷ்டிப் பரிகாரம் வேண்டாமா? வித்யாசாகர் கொடுத்திருக்கிறார். பாடல் வரிகள்...ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை//

பொய்யில் இது முற்றிலும் உண்மை!

said...

/*எப்பொழுதும் முருகா முருகா என்று உருகும் அம்மா*/
உங்களுக்கு பிடித்த ஒரே கதாபாத்திரம் .

/*அந்த லட்சியம் என்றுவென்று இயக்குனர் நமக்குச் சொல்லியிருக்கலாம். பாவம். அவருக்கே தெரியவில்லை போலும்.*/

லட்சியத்தை விடுங்க அவருக்கு படத்தோட கதை தெரிஞ்சிருந்தா சரி.


/* படம் முடியும் பொழுது எல்லாரும் அழுகிறார்கள்*/

திரையரங்கில் இருந்தவர்கள் தானே?

/*மொத்தத்தில் எனக்குப் பொய் பிடிக்காது என்று சொல்லி விடுகிறேன்.*/
அதான் எங்களுக்கு தெரியுமே.

உங்களை இனிமே திரை விமர்சனம் எழுத விடக்கூடாதுன்னு பெரிய போராட்டம் நடத்தப்போறதா பேசிக்கிறாங்க தெரியுமா?

said...

பாவம் பிரகாஷ்ராஜ் இவ்வளவு கஷ்டப்பட்டு குருதட்சிணை எல்லாம் கொடுத்திருக்க வேண்டாம்.

கதையைப் பார்த்தால் பேசாமல் சிந்துபாத் மாதிரி ஒரு டிவி சீரியலாக எடுத்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.

பாவம்!

said...

பொய்யில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் ராகவன்:-))

ஆக, 100 ரூவாயில் இலங்கையாவது பார்த்தீர்களே

said...

// சன்னாசி said...
இந்தப் படத்தைப் பார்க்கவில்லை - ஆனால் நீங்கள் மேலே குறித்திருப்பது படத்தில் வருவது எனில், இதேபோன்ற ஒரு சம்பவ அமைப்பு இங்மார் பெர்க்மனின் The Seventh Seal படத்தில் வரும் - ஒரு போர்வீரனும் மரணமும் சதுரங்கம் ஆடுவதைச் சுற்றியே இப்படம் கட்டமைக்கப்பட்டிருக்கும். என்ன, படம் வந்தது 50 வருடங்களுக்கு முன்னே.

பார்க்க: http://imdb.com/title/tt0050976/ //

ஆகா! சன்னாசி..பிடிச்சீங்களே தொடர்ப...பிரமாதம்.

கன்னடத்துல பழைய தமிழ்ப்படங்கள இப்பத்தான் ரீமேக் செய்றாங்க. பேசும் தெய்வம், ரத்தக்கண்ணீர்னு அடுக்கீட்டே போகலாம். அதக் கிண்டல் செய்வோம். இப்போ...நம்மளையே கிண்டல் செய்ய வேண்டியதாப் போச்சே! ஆஆஆஆஆஆஆஆ! நீங்க குறிப்பிட்ட படத்தப் பார்க்க முயல்கிறேன்.

said...

// கானா பிரபா said...
பொய்யில்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் ராகவன்:-)) //

நீங்களும் பாத்துட்டீங்களா! ஐயோ பாவம். ஒங்க நெலமையும் இப்படி ஆச்சுதே!

// ஆக, 100 ரூவாயில் இலங்கையாவது பார்த்தீர்களே //

நூத்தறுவது ரூவா. படப்பிடிப்பு கொழும்பு சுத்து வட்டாரங்கள்ளயே எடுத்திருக்காங்கன்னு நெனைக்கிறேன். சரியா? அடிக்கடி வெள்ளவத்தைன்னு ஒரு ரயில்வே ஸ்டேஷனைக் காட்டுறாங்க. அது கொழும்பில் இருக்கா? அதே போல அந்த வெண்ணிற புத்தர் சிலைகள். கல்கியின் பொன்னியின் செல்வனின் அவரது வருணனைகள் மூலமாகப் பார்த்தவை அவை. படுத்திருக்கும் புத்தரும் நிமிர்ந்திருக்கும் புத்தரும்....அழகுதான். தமிழர் பகுதி மட்டுமன்றி இலங்கை முழுவதையும் சுற்றிப் பார்க்கும் ஆவல் இப்பொழுது. :-)

இலங்கை அழகுதான். அமைதிதான் இல்லை. :-(

said...

"இறைவா இது நியாயமா.......?"

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பொய் விமர்சனம் தானே? :-)) //

:-) ரவி, இது பொய் விமர்சனம்தான். ஆனால் நான் செய் விமர்சனம் மெய் விமர்சனம். :-)

////ஆனால் அவைகளுக்குத் திருஷ்டிப் பரிகாரம் வேண்டாமா? வித்யாசாகர் கொடுத்திருக்கிறார். பாடல் வரிகள்...ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை//

பொய்யில் இது முற்றிலும் உண்மை! //

உண்மைதான் ரவி. பாலச்சந்தர் படத்தில் எந்த இசையமைப்பாளரும் நல்ல பாடல்களைக் குடுத்திருப்பார். இந்தப் படத்தில் ள ள ளன்னதத் தவிர ஒன்னும் நிக்கலை. அந்த ள ள பாட்டு கூட.....ம்ம்ம்...பாலு...உங்களுக்கு இது தேவையா!

said...

ராகவன்,

பாலசந்தரைப் பற்றி நக்கலாக முன்பு ஒரு பதிவு இட்டிருந்தேன்.

அவருடைய அபத்தமான வேலை இன்னும் தொடர்கிறது. இந்த படத்திற்கு கடைசி நாள் வரை தியேட்டர்களே கிடைக்காமல் இருந்ததாம். வினியோகஸ்தர்கள் இப்போதெல்லாம் தேறிவிட்டார்கள்.

நீங்களும்தான். உங்கள் வாயால் சிறந்த படம் எனப் பெயர் எடுப்பது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் கிடைப்பது போலத்தான்.

கிழி, கிழி என்று கிழித்துவிட்டீர்கள். அவருக்கு இது தேவைதான். பாராட்டுக்கள்.

ஏற்கனவே அரங்கில் சென்று இதை பார்ப்பதில்லை என்று தீர்மானித்ததுதான். இப்போது திருட்டு விசிடி கிடைத்தாலும் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்.


ஒருகாலத்தில் இயக்குனர் சிகரம் எனப்பட்டவருக்கு இந்த கதி.

said...

---ஆனால் அந்த வசனங்களே பின்னால் கடையில் வாங்கிய புதுக்கத்தியாகும் பொழுது ஆப்பிளாகவும் ஆரஞ்சாகவும் நமது கழுத்து பழுக்கிறது---

நல்லதொரு உவமை :-)

கீது மோகன்தாஸ் கதாபாத்திரம் எதற்கு என்பதைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு ஆயிரம் பொன் தரப்போகிறீர் என்று மயிலார் சொல்கிறாரே,அது உண்மையா?

said...

ராகவரே இன்னுமாப் பாலச்சந்தர் படத்தை எல்லாம் தைரியாமாத் தியேட்டர் போய் பாக்குறீங்க? நீங்க வீரர் தான் ஒத்துக்குறேன்.

said...

//// குறும்பன் said...
/*எப்பொழுதும் முருகா முருகா என்று உருகும் அம்மா*/
உங்களுக்கு பிடித்த ஒரே கதாபாத்திரம் . //

:-) ஆனா பாருங்க..அந்தப் பாத்திரத்தையும் மாடிப்படியில இருந்து தள்ளி விட்டுட்டாரு கேபி. பாவங்க. அவங்க இறப்பு படத்துக்கு எந்த வகையிலும் உதவல.

///*அந்த லட்சியம் என்றுவென்று இயக்குனர் நமக்குச் சொல்லியிருக்கலாம். பாவம். அவருக்கே தெரியவில்லை போலும்.*/

லட்சியத்தை விடுங்க அவருக்கு படத்தோட கதை தெரிஞ்சிருந்தா சரி. //

ம்ம்ம்...படத்துல ஒரு நடனப் போட்டி வருது. ஐயகோ! கொடுமையே...நடனம்னா இப்படித்தான் இருக்கும்னா...நடனமே கூடாதுன்னு சொல்லலாம்.

///* படம் முடியும் பொழுது எல்லாரும் அழுகிறார்கள்*/
திரையரங்கில் இருந்தவர்கள் தானே? //

இல்லைங்க. படத்துல இருந்தவங்க. திரையரங்குல இருந்தவங்களுக்கு அழுகக் கூடத் தெம்பில்லாம நொந்து நூலாகி அந்து அல்வாவாயிருந்தாங்க.

///*மொத்தத்தில் எனக்குப் பொய் பிடிக்காது என்று சொல்லி விடுகிறேன்.*/
அதான் எங்களுக்கு தெரியுமே. //

ஹி ஹி ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா :-)

//உங்களை இனிமே திரை விமர்சனம் எழுத விடக்கூடாதுன்னு பெரிய போராட்டம் நடத்தப்போறதா பேசிக்கிறாங்க தெரியுமா? //

என்னது இது? அடிப்படை உரிமையிலேயே கை வெச்சா எப்படி? போராடுவோம் போரடுவோம். விமர்சன உரிமைக்குப் போராடுவோம். குறும்பன்..நீங்களும் கூடச் சேந்துக்கோங்க. :-)

said...

ஜி.ரா,
பாலச்சந்தரும் உங்களை ஏமாத்திட்டாரா???

said...

// Sridhar Venkat said...
பாவம் பிரகாஷ்ராஜ் இவ்வளவு கஷ்டப்பட்டு குருதட்சிணை எல்லாம் கொடுத்திருக்க வேண்டாம். //

உண்மைதான். ஆனால் படத்தில் நடித்திருப்பவர்களைப் பார்த்தால் பெரிய செலவு இருந்திருக்கும் என்று தெரியவில்லை. இலங்கைக்குப் போக வர தங்க ஆகியிருக்கும் செலவுகள் கூட இருக்கும் என்று நினைக்கிறேன்.

// கதையைப் பார்த்தால் பேசாமல் சிந்துபாத் மாதிரி ஒரு டிவி சீரியலாக எடுத்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.

பாவம்! //

டிவி சீரியலாவா? இந்தக் கதையவா? நல்லவேளை இப்பல்லாம் டீவி ரொம்பப் பாக்கிறதில்லை நான்.

said...

great escape.i last watched 'Parthalay Paravasam' on very first week and endup with 'Parthathalay paithiam'.so decided not to watch KB movie without reading the reviews. even i went to PVR this weekend,and tempted to get tickets for 'Poi' but didnt have heart to take that risk,so watched 'Thiruvilayadal'.that movie was good entertainment..evntho' usual story.

said...

// tbr.joseph said...
ராகவன்,

பாலசந்தரைப் பற்றி நக்கலாக முன்பு ஒரு பதிவு இட்டிருந்தேன். //

நினைவிருக்கிறது ஜோசப் சார். அந்தப் பதிவில் கூட உங்களது அந்தக் கருத்து முழுமையாக ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். நன்றாக நினைவிருக்கிறது.

// அவருடைய அபத்தமான வேலை இன்னும் தொடர்கிறது. இந்த படத்திற்கு கடைசி நாள் வரை தியேட்டர்களே கிடைக்காமல் இருந்ததாம். வினியோகஸ்தர்கள் இப்போதெல்லாம் தேறிவிட்டார்கள். //

இந்தப் படம் சகிக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவரது சிலபல பழைய படங்கள் சிறப்பானவை என்ற மாற்றுக் கருத்தேயில்லை. நாடகப்பாணித்தனம் என்று சொன்னாலும் அரங்கேற்றமும், தண்ணீர் தண்ணீரும், அச்சமில்லை அச்சமில்லையும், கல்யாண அகதிகளும்..இன்னும் சில படங்களும்...காலத்தைத் தாண்டியவை என்ற என்னுடைய கருத்தில் மாற்றமில்லை. பார்த்தாலே பரவசமாகட்டும் பொய்யாகட்டும்....வயசாயிருச்சுல்ல. இதுக்கு மேலை அவரு ஓய்வு எடுக்குறதுதான் நல்லது.

// நீங்களும்தான். உங்கள் வாயால் சிறந்த படம் எனப் பெயர் எடுப்பது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் கிடைப்பது போலத்தான்.

கிழி, கிழி என்று கிழித்துவிட்டீர்கள். அவருக்கு இது தேவைதான். பாராட்டுக்கள். //

என்ன செய்வது ஜோசப் சார். படம் சரியில்லையே. அதைக் கிழி கிழி என்று கிழிக்காமல் இருந்தால்தாலும் சரியில்லை. நாம பட்ட கஷ்டம் அடுத்தவங்க படக்கூடாதுங்குற நல்ல எண்ணந்தான். :-)

// ஏற்கனவே அரங்கில் சென்று இதை பார்ப்பதில்லை என்று தீர்மானித்ததுதான். இப்போது திருட்டு விசிடி கிடைத்தாலும் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். //

ஒரிஜினல் டிவிடியே கெடைச்சாலும் பாக்காதீங்க.

// ஒருகாலத்தில் இயக்குனர் சிகரம் எனப்பட்டவருக்கு இந்த கதி. //

பாவம். ஆனா இதுக்கு வருத்தப்பட்டா...படம் பார்த்து வருத்தப்படப் போறது யாரு? இந்த கதி எல்லாருக்கும் ஆயிருக்கும்னு நெனைக்கிறேன். மிகப் பெரிய இயக்குனர் ஸ்ரீதர். அவரும் உடல் முடங்கிக் கிடக்கிறார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஏ.பி.நாகராஜன் இறையடி சேர்ந்து விட்டார் என நினைக்கிறேன். கே.சங்கர்? இவர் ஆலயமணி, கௌரி கல்யாணம், ஆண்டவன் கட்டளை எல்லாம் எடுத்தவரு. கடைசியா வருவான் வடிவேலன், நவக்கிரக நாயகி, முப்பெருந்தேவியர்னு எடுத்தாரு. அப்புறம் சன் டீவியில ராமாயணம் எடுத்தாரு. இப்ப ஆளைக் காணோம். பி.ஆர்.பந்துலு இப்ப இல்ல. பீம்சிங்...எப்பேர்ப்பட்ட பெயர். அவரும் இல்ல. அதுக்கப்புறம் வந்த பாரதிராஜாவுக்கு ஓய்வு குடுத்துருவாங்க போல இருக்குது.

said...

// sivagnanamji(#16342789) said...
"இறைவா இது நியாயமா.......?" //

ஐயா...ஐயா...இத நெனைக்கும் போதுதான் எனக்கு அழுகையா வருது. :-(((((

// சுதர்சன்.கோபால் said...
கீது மோகன்தாஸ் கதாபாத்திரம் எதற்கு என்பதைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு ஆயிரம் பொன் தரப்போகிறீர் என்று மயிலார் சொல்கிறாரே,அது உண்மையா? //

மயிலார் சொன்னாரா? அவரு இன்னொன்னும் சொன்னாரு. இந்தப் படத்த ஓமப்பொடியார் மிகவும் ரசிச்சார். இன்னொரு வாட்டி இந்தப் படத்த பாக்கப் போறதாகவும், அதுக்கு விவசாயி இளாவையும் கூட்டீட்டுப் போகப் போறதாகவும் சொன்னாரு. அதுவும் உண்மைதானுங்களா?

said...

ஒரு காலத்தில் திரைப்படங்களில் புதுமையையும் புரட்சியையும் செய்தவர்தான்.. ஹ¥ம்... என்ன செய்வது? பெருங்காய டப்பா காலியாகி விட்டது.

எனக்கென்ன ஆச்சரியமென்றால், பாலச்சந்தரின் படங்களில் நடித்தவர்கள் அனைவரும் விழா மேடைகளில் சொல்லும் டயலாக் இதுதான்.: "... கேபி சார் சொல்லி கொடுத்ததுல 10 பங்கு நடிச்சிருந்தா கூட போதும். சிறப்பா வந்துரும். அவர் மட்டும் நடிக்க வந்தார்னா.. நாங்க காலி"

ஆனால் ஏதோ ஒரு சீரியலில் இவரின் நடிப்பைக்காணும் போது எரிச்சலே மூண்டது. பின்னர் வந்த சீரியல்களிலும் அதே உணர்ச்சிதான்.

anyway, தமிழ்த் திரைப்பட முன்னோடி என்கிற அளவில் கொஞ்சம் அளவாகவே திட்டுவோம். :-)

said...

// G.Ragavan said...
நூத்தறுவது ரூவா. படப்பிடிப்பு கொழும்பு சுத்து வட்டாரங்கள்ளயே எடுத்திருக்காங்கன்னு நெனைக்கிறேன். சரியா? அடிக்கடி வெள்ளவத்தைன்னு ஒரு ரயில்வே ஸ்டேஷனைக் காட்டுறாங்க. அது கொழும்பில் இருக்கா? அதே போல அந்த வெண்ணிற புத்தர் சிலைகள். கல்கியின் பொன்னியின் செல்வனின் அவரது வருணனைகள் மூலமாகப் பார்த்தவை அவை. படுத்திருக்கும் புத்தரும் நிமிர்ந்திருக்கும் புத்தரும்....அழகுதான். தமிழர் பகுதி மட்டுமன்றி இலங்கை முழுவதையும் சுற்றிப் பார்க்கும் ஆவல் இப்பொழுது. :-)

இலங்கை அழகுதான். அமைதிதான் இல்லை. :-( //

படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் கொழும்பின் சில பாகங்களில் இப்படம் எடுத்ததாக அறிந்தேன். வெள்ளவத்தை என்பது தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசம். குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவு இடம்பெயரும் மக்களின் வாழ்விடமாக அது மாறியிருக்கிறது.
இலங்கையில் சமாதானம் என்பது நிரந்தப் பொய்:-(

said...

ஜிரா,

இந்த படத்துக்கு போகலாமின்னு முடிவு பண்ணி ஏதோ ஒரு சக்தி எங்களை தடுத்து தனுஷின், திருவிளையாடல் ஆ'ரம்பம்'கிறே உலகத்தரமான படத்துக்கு கூட்டிட்டு போனது....

படம் முடிஞ்சு வெளியே வர்றோப்போதான் தெரிஞ்சது அது துஷ்டசக்தி'ன்னு...... :-((((

ஹிம் டிவிடி வந்துக்கப்புறம் நம்ம பொட்டியிலே பார்த்துக்கவேண்டியதுதான்.... :-)

said...

ஜிரா,

எங்கே என்னுடைய முந்தைய கமெண்ட்....????

said...

ராகவரே எங்கே என் பின்னூட்டம் காணும்?

said...

en manaiviyudan serndhu partha mudhal pdam(bfore marriage and after marriage)....aval oru nal muluku ennai thitti kondirundhall..

nanum kb ean ippadi aagi vittar endru yosithu sodithu parthane..kandu pidika mudiya villai

kb yum ,bharathi rajavum thanglai indha geneation ku errar pol maari kolla theriya villai...mani rathnam orrlavuku ok.

any way nan edir partha vimarsanam..thayavu seydhu yarum indha pdathai poi theatre l parka vendam

said...

"படத்தப் பார்த்து நொந்துட்டோம்"
இப்படி மூணே வார்த்தையிலச் சொல்ல வேண்டியத எதுக்கு இப்படி நீட்டி முழக்கி சொல்லியிருக்கீங்க? ;)

said...

தம்பிகளா ஆனாலும் நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா (கண்ணை துடைச்சிக்கிரேன்) உழைச்சி சம்பாதிச்ச காசை வீணடிக்கக்கூடாதுன்னு எவ்வளவு அக்கறை ? இப்படித்தான் வல்லவன் பார்க்காதீங்கன்னு குருக்கால விழுந்து தடுத்தீங்க. நல்லா இருங்கப்பா:-)))

said...

இராகவன் சார்,
மறுபடியும் காப்பத்திட்டிங்க. ...நன்றிகள்
பிரகாஷ்ராஜ கொஞ்சம் நினைச்ச பாவமயிருக்கு

said...

// தேவ் | Dev said...
ராகவரே இன்னுமாப் பாலச்சந்தர் படத்தை எல்லாம் தைரியாமாத் தியேட்டர் போய் பாக்குறீங்க? நீங்க வீரர் தான் ஒத்துக்குறேன். //

தேவ், இது துணிச்சலா? அசட்டுத் துணிச்சலான்னு தெரியலை! ரெண்டாவது வகையாக இருக்கத்தான் வாய்ப்பிருக்கு. :-)

// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
பாலச்சந்தரும் உங்களை ஏமாத்திட்டாரா??? //

வெட்டி வெட்டீங்குற பேருக்குப் பொருள் இன்னைக்குத்தானய்யா தெரிஞ்சது. வெட்டி வேர் எப்படி மணமா குணமா இருக்குதோ அப்படி இருக்குற பயங்குறதாலத்தான வெட்டிப்பயல்னு பேரு?

பாலச்சந்தர் ஏமாத்தீட்டாரா? நல்ல கேள்வி. படம் முடியும் போது விதி சொல்லுது "தீதும் நன்றும் பிறர் தர வாரா". பாலச்சந்தரச் சொல்லி என்ன புண்ணியம்?

said...

// Mohan said...
great escape.i last watched 'Parthalay Paravasam' on very first week and endup with 'Parthathalay paithiam'.so decided not to watch KB movie without reading the reviews. even i went to PVR this weekend,and tempted to get tickets for 'Poi' but didnt have heart to take that risk,so watched 'Thiruvilayadal'.that movie was good entertainment..evntho' usual story. //

மோகன்..ஒங்களப் பெத்தவங்க செஞ்ச புண்ணியந்தான் ஒங்களக் காப்பாத்தீருக்கு. என்னையப் பெத்தவங்க செஞ்ச புண்ணியந்தான் ஒங்கள எல்லாம் காப்பாத்தச் சொல்லீருக்கு. :-)

மூளையே இல்லாம படம் பார்க்கப் போனா...தனுஷையும் ஒரு கதாநாயகன்னு ஏத்துக்கிட்டுப் படம் பார்க்கப் போனா....திருவிளையாடல் ஆரம்பம் சிரிக்க வைக்கும்னு கேள்விப் பட்டேன்.

// சுரேஷ் கண்ணன் said...
ஒரு காலத்தில் திரைப்படங்களில் புதுமையையும் புரட்சியையும் செய்தவர்தான்.. ஹ¥ம்... என்ன செய்வது? பெருங்காய டப்பா காலியாகி விட்டது. //

வாங்க சுரேஷ். பெருங்காய டப்பாவின் வாடை அங்கங்கு தெரிந்தது. ரசிக்கவும் வைத்தது. ஆனால் முழுப்படம் என்று வருகையில்.......

// எனக்கென்ன ஆச்சரியமென்றால், பாலச்சந்தரின் படங்களில் நடித்தவர்கள் அனைவரும் விழா மேடைகளில் சொல்லும் டயலாக் இதுதான்.: "... கேபி சார் சொல்லி கொடுத்ததுல 10 பங்கு நடிச்சிருந்தா கூட போதும். சிறப்பா வந்துரும். அவர் மட்டும் நடிக்க வந்தார்னா.. நாங்க காலி" //

அதான் காலியாயிருச்சே படமே...சரியாத்தான் சொல்லீருக்காங்க.

// ஆனால் ஏதோ ஒரு சீரியலில் இவரின் நடிப்பைக்காணும் போது எரிச்சலே மூண்டது. பின்னர் வந்த சீரியல்களிலும் அதே உணர்ச்சிதான். //

பயங்கர ஓவர் ஆக்டிங். ஆனால் கற்பனைத் தந்தையாக மகன் பிராகரஸ் ரிப்போர்ட்டைத் திருத்தும் காட்சி சூப்பர். 500க்கு 18 மார்க்கு கொறஞ்ச எப்படி பர்ஸ்ட் ரேங்க்காகும்? 18வது ரேங்குதானடன்னா அடி வெளுக்கும் போது உண்மையிலேயே சிரிப்பு பொத்துக்கிட்டு வந்தது.

// anyway, தமிழ்த் திரைப்பட முன்னோடி என்கிற அளவில் கொஞ்சம் அளவாகவே திட்டுவோம். :-) //

அதத்தான் நானும் செஞ்சிருக்கேன்னு நெனைக்கிறேன்.

said...

// கானா பிரபா said...
படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் கொழும்பின் சில பாகங்களில் இப்படம் எடுத்ததாக அறிந்தேன். வெள்ளவத்தை என்பது தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசம். குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவு இடம்பெயரும் மக்களின் வாழ்விடமாக அது மாறியிருக்கிறது.
இலங்கையில் சமாதானம் என்பது நிரந்தப் பொய்:-( //

வெள்ளவத்தை என்பது தமிழர்கள் வாழும் பகுதியா? அதான் இரயில் நிலையத்தில் தமிழிலும் பெயர் எழுதியிருந்தார்கள்.

அதே போல ரயிலின் உட்புறமும் மிகவும் அழகாக இருந்தது. கிட்டத்தட்ட தாலிஸ் ரயில் போல இருந்தது. எல்லா ரயில்களும் அவ்வளவு நன்றாக இருக்கின்றனவா?

// ராம் said...
ஜிரா,

இந்த படத்துக்கு போகலாமின்னு முடிவு பண்ணி ஏதோ ஒரு சக்தி எங்களை தடுத்து தனுஷின், திருவிளையாடல் ஆ'ரம்பம்'கிறே உலகத்தரமான படத்துக்கு கூட்டிட்டு போனது....

படம் முடிஞ்சு வெளியே வர்றோப்போதான் தெரிஞ்சது அது துஷ்டசக்தி'ன்னு...... :-(((( //

ஆகா...ராம்..அழாதீங்க...நமக்குன்னு நல்ல படம் ஒன்னு வராமலா போயிரும். அப்ப சந்தோஷப் பட்டுக்கிருவோம். மனசத் தேத்திக்கோங்க.

// ஹிம் டிவிடி வந்துக்கப்புறம் நம்ம பொட்டியிலே பார்த்துக்கவேண்டியதுதான்.... :-) //

ஆகா...ஆனாலும் ரொம்பத் துணிச்சலைய்யா உமக்கு!

said...

// ராம் said...
ஜிரா,

எங்கே என்னுடைய முந்தைய கமெண்ட்....????

தேவ் | Dev said...
ராகவரே எங்கே என் பின்னூட்டம் காணும்? //

என்னது இது..ரெண்டு பேரும் கமெண்ட்டைத் தேடுறீங்க. மேல இருக்குதே...நாங்கூட பின்னூட்டப் பதில் போட்டேனே!

said...

// கார்த்திக் பிரபு said...
en manaiviyudan serndhu partha mudhal pdam(bfore marriage and after marriage)....aval oru nal muluku ennai thitti kondirundhall.. //

புரிகிறது. புரிகிறது. திட்டுவதோடு நிறுத்தினார்களே. அதற்காக சந்தோஷப்படுங்கள்.

// nanum kb ean ippadi aagi vittar endru yosithu sodithu parthane..kandu pidika mudiya villai //

கண்டுபிடிக்க முடிஞ்சிருந்தா அவரே கண்டுபிடிச்சிருக்க மாட்டாரா!

// kb yum ,bharathi rajavum thanglai indha geneation ku errar pol maari kolla theriya villai...mani rathnam orrlavuku ok.//

உண்மைதான்.

// any way nan edir partha vimarsanam..thayavu seydhu yarum indha pdathai poi theatre l parka vendam //

பார்க்கவே வேண்டாம் என்று நான் சொல்கிறேன். அதென்ன தியேட்டரில்?


// அருட்பெருங்கோ said...
"படத்தப் பார்த்து நொந்துட்டோம்"
இப்படி மூணே வார்த்தையிலச் சொல்ல வேண்டியத எதுக்கு இப்படி நீட்டி முழக்கி சொல்லியிருக்கீங்க? ;) //

உஷா கிட்ட நீங்க டியூஷன் படிக்கிறீங்களா அருட்பெருங்கோ? :-)


// ramachandranusha said...
தம்பிகளா ஆனாலும் நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கப்பா (கண்ணை துடைச்சிக்கிரேன்) உழைச்சி சம்பாதிச்ச காசை வீணடிக்கக்கூடாதுன்னு எவ்வளவு அக்கறை ? இப்படித்தான் வல்லவன் பார்க்காதீங்கன்னு குருக்கால விழுந்து தடுத்தீங்க. நல்லா இருங்கப்பா:-))) //

உஷாக்கா உஷாக்கா....நாங்கள்ளாம் தியாகிகள். எங்களுக்குப் பென்ஷன் எல்லாம் உண்டான்னு கேட்டுச் சொல்லுங்க.

// குருக்கால விழுந்து தடுத்தீங்க. //

நீங்க எங்களுக்குக் குருதான். அதுனால ஒங்க கால்ல விழலாம்னு விழுந்து தடுத்துட்டோம். குறுக்கால விழுந்து குறுக்கு பிடிச்சிக்கிருச்சுன்னா? :-)

said...

//ஆனால் அந்த வசனங்களே பின்னால் கடையில் வாங்கிய புதுக்கத்தியாகும் பொழுது ஆப்பிளாகவும் ஆரஞ்சாகவும் நமது கழுத்து பழுக்கிறது//

எதிர்ப்பார்த்த ரிஸல்ட் தான் இது. இமயம் இப்படி ஆகிவிட்டது கொஞ்சம் வேதனையான விசயம் தான்.
:(((((

said...

// குருக்கால விழுந்து தடுத்தீங்க. //

//நீங்க எங்களுக்குக் குருதான். அதுனால ஒங்க கால்ல விழலாம்னு விழுந்து தடுத்துட்டோம். குறுக்கால விழுந்து குறுக்கு பிடிச்சிக்கிருச்சுன்னா? :-)//

நல்ல pun!!! கலக்கறீங்க ராகவன்.

said...

பாலச்சந்தர் புன்னகைமன்னன் காட்டியதன்பின்னால், அவர் படங்களுக்கு திருட்டுடிவிடியிற்கூட ஒரு டொலர் கொடுப்பதில்லையென்ற உறுதி. இலங்கைப்பிரச்சனை உச்சக்கட்டத்திலேயிருந்தபோது, தமிழகத்திலிருந்த இலங்கை அகதிகளைப் பயங்கரவாதிகளாகக் காட்டியதிலே (அம்மணி ரேவதியும் அவர் சென்னையின் ஸ்ரீலங்காவின் தூதரக அதிகாரியும் அப்பாவிகளாம்) இவருக்கும் புன்னகைமன்னனிலும் வசூல் பண்ணி காற்று அடுத்த திசையிலே அடிக்கையிலே தெனாலியிலும் வசூல் பண்ணிய கமல்காஸுக்கும் பங்குண்டு.

இலங்கையிலே படம் எடுப்பதென்றால் என்ன காரணம்? தமிழ்ப்படங்கள் சில இலங்கையிலே (சிங்களப்பிரதேசங்களிலே) எடுக்கப்படக் காரணங்கள்
1. இந்தியாவிலே வெளிப்புறப்படப்பிடிப்புக்கு ஆகும் செலவிலும் குறைவாகவே இலங்கையிலே ஆகிறதாம் (இணையத்திலேயே முன்னர் ஒரு முறை குமுதத்திலே வாசித்த ஞாபகம்)

2. இலங்கைக்குப் போகமுடியாத இலங்கையர்க்கும் விற்பனைக்கு ஆகும்.

(water போன்ற படங்கள் எடுக்கப்பட்டதன் காரணம் வேறு. வாரணாசியிலே காட்சியமைப்புகளை குண்டர்கள் சிதறடித்த பின்னர் இலங்கையிலே பத்திரமாக எடுக்கப்பட்ட படம்)

பாலசந்தருக்கோ கமல்காஸுக்கோ (மணிரத்தினத்துக்குங்கூட) இஃது ஆக வியாபாரம். நாளை ராம் நரசிம்மன், சோ ராமசாமி பத்திரிகையாளர்கள் "பாலசந்தர் இலங்கையிலேயே போய்ப் படமெடுத்தாரே? அந்த வெள்ளவத்தையிலேதான் கொழும்பிலேயே அதிகம் தமிழர்கள் இருக்கின்றார்கள். அங்கேதும் தமிழர்க்குப் பயமில்லை" என்று ஒற்றை விலா எலும்புக்கு உருக் கொடுத்து உயிரும் கொடுத்துவிடுவார்கள்.

said...

சன்னாசி,
அள்ளிப்போடுவது இசையிலும் இயக்கத்திலும் வழக்கமே.

The Man in the Iron Mask ஐ அள்ளி உத்தமபுத்திரன் ஆக்கியதிலிருந்து
Ballad of a Soldier ஐ அள்ளி காக்கும் கரங்கள் ஆக்கியதூடாக இன்றைக்கு ஆயிரம் அள்ளல்கள்... inspiration ஆக்கும் ;-)

said...

ஆஹா ராகவன்! ஆ.வி.யில் 40 மார்க் போட்டிருக்காங்களே. போகலாம்ன்னு இருந்தேன்...

ஆனா, கேட்டவரை "ள" பாடலும், "என்ன தொலைத்தாய்" பாடலும் அருமை.

said...

இந்த பதிவுக்கு சம்பந்தம் என்றுத் தோன்றியதால் - திண்ணையில் 'பொய்' படத்தைப் பற்றிய விமர்சனம்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60701044&format=html

said...

காப்பாத்திட்ட காப்பாத்திட்ட....

said...

Eppadi ethellam

"கடலை வாங்கிச் சாப்பிடும் பொழுது ஒரு சொத்தைக் கடலை தின்று விட்டு அடுத்து எந்தக் கடலையைத் தின்றாலும் அது நன்றாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்..கடைசியாகப் பார்த்த தமிழ்த் திரைப்படம் சிவப்பதிகாரம். அந்தச் சூட்டோடு பார்க்கப் போனது பொய்".

nalla ezhuthi irrukinge :)

said...

// Anonymous said...
Eppadi ethellam

"கடலை வாங்கிச் சாப்பிடும் பொழுது ஒரு சொத்தைக் கடலை தின்று விட்டு அடுத்து எந்தக் கடலையைத் தின்றாலும் அது நன்றாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்..கடைசியாகப் பார்த்த தமிழ்த் திரைப்படம் சிவப்பதிகாரம். அந்தச் சூட்டோடு பார்க்கப் போனது பொய்".

nalla ezhuthi irrukinge :) //

நன்றி. நன்றி. நம்ம வலைப்பூவுக்கு வந்ததுக்கு நன்றி.

said...

KB ini melum padam edukaamal irundhaal avar peyarukkum, namakum nallathunu ninaikirean!

Anbudan,
Na.Anand Kumar