Thursday, August 25, 2005

போனது போனாய்

போனது போனாய்
என்னை ஏன் கொண்டு போனாய்
எனக்குத் தெரியாத என்னை
எனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்

மீண்டும் வந்தது வந்தாய்
உன்னையாவது தந்தாயா?
எனக்குத் தெரிந்த உன்னை
எனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்

சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்

கடைப் பொருளுக்கும்
கடைப் பொருளல்லவே
விடைப் பொருள் தருவாய்- நான்
நடைப் பொருளாவதற்குள்!

9 comments:

said...

ராகவன் அழகாக இருக்கிறது....

// கடைப் பொருளுக்கும்
கடைப் பொருளல்லவே
விடைப் பொருள் தருவாய்- நான்
நடைப் பொருளாவதற்குள்! //

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.... யாரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை இது...

said...

ராகவன் இக்கவிதையை இருபகுதியாய் பிரித்தால் இரண்டு பொருள் தருகிறது.முதல் இரண்டு பத்தி மட்டும் எடுத்துக்கொண்டால்..இறைததுவம் போல் உள்ளது. இறுதி பத்தியோடு இணைக்கையில் காதல் போல் உள்ளது. இது இறைக்காதலா? அல்லது?

நீங்களே விளக்குங்கள். மொத்தத்தில் இக்கவிதை ஒரு நவீன ஓவியம்போல் பார்ப்போர் கண்ணுக்கெல்லாம் பலவித் அர்த்தம் கற்பிக்கிறதோ?

said...

இந்தக் கவிதை காதல் கவிதை என்பதில் ஐயமில்லை. பிரிவுத் துயரைத் தாங்காமல் விளைந்தது என்பதில் ஐயமில்லை. பழகிய காதல் விலகிய போழ்தில் எழுந்த கவிதை.

போனது ஒருத்தர். இங்கேயே இருந்தது மற்றொருத்தர். ஆகையால் போனவருக்கும் இருக்கின்றவருக்கும் முன்பே இருந்திருக்கிறது ஒரு உறவு.

அவர் வராமலும் போகவில்லை. வருகிறார். ஆனால் தராமல் போகிறார். அதுதான் வேதனை.

வருவாயைப் பார்க்காமல் - வருகின்ற வாயைப் பார்க்காமல் - அதாவது யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய் - என்னை நீ உறவாகவாகச் சேர வேண்டாம். விலைப் பொருளாக எண்ணியாவது சேர் என்று கெஞ்சல். எவ்வளவு ஆசை பாருங்கள்.

கடைப் பொருளுக்கும் கடைப் பொருள் அல்லவே - விலைப் பொருளாக வருவதால் கடையில் கிடைக்கும் பொருளுக்கும் கடைப் பொருள் (இழிவானது) என்று நினைத்து விடாதே.

விடைப் பொருள் தருவாய் - எதையாவது செய்
நான் நடைப் பொருளாவதற்குள் - நான் நடைப் பிணமாவதற்குள். ( ஏன் தெரியுமா, நடைப் பிணமான பின் வந்தால் வந்தவருக்கு முழுச்சுகம் கிடைக்காதே...அதனால். "சூடாக இருக்கிறப்போ சாப்பிட வாங்க" என்று கண்ணதாசன் சொன்னது போல.)

இந்தக் கவிதையில் உள்ள நிலையில் வேறு யாராவது இருந்திருக்கின்றார்களா என்று இலக்கியங்களைத் தேடிப் பார்த்தேன். என் நினைவிற்கு வந்தது ஆண்டாள். அவளை நினைத்து இந்தக் கவிதை வரவில்லையானாலும் அவளுடைய நிலையிலிருக்கும் ஒருவர் எழுதியதாகக் கொள்ளலாம். பாவம் ஆண்டாள். கண்ணன் வந்தான். பாடினான். ஆடினான். கூடினானென்றால் இல்லை. தேடினாள். ஓடினாள். மீண்டும் வந்தான். பழைய கதைதான்.

இப்பொழுது நான் கவிதையில் சொல்ல வந்தது புரிந்திருக்குமே.

said...

நன்றி ஈஸ்வர். நீங்க என்ன சொல்ல வர்ரீங்க? புரியலையே.....

said...

நல்ல கவிதை. சிறந்த சொல்லாளுமை. தமிழில் உங்களுடைய பாண்டித்யம் தெரிகிறது. மகரந்தத்தின் ரசிகனாக மாறிக்கொண்டிருக்கிறேன்.

said...

நன்றி ரமேஷ். உங்கள் பாராட்டுகள் ஊக்கம் கொடுக்கின்றன. உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயல்கிறேன். நன்றி.

said...

ராகவன்,
நல்ல கவிதை அருமையாக உள்ளது .. !
வாழ்த்துக்கள், நிறைய எழுதுங்கள்.. !

said...

நன்றி வீ.எம்.

உணர்ந்து எழுதிய கவிதைக்கு என்றுமே வரவேற்புண்டு என்பதை உணரவைத்த கவிதை இது. ம்ம்ம்ம்....இனிமே இது மாதிரிதான் எழுதனும்.

said...

நல்ல கவிதை இராகவன்.
முந்தி கவிதையெல்லாம் எழுதியிருக்கிறீர்கள் போல. :-))