Wednesday, August 10, 2005

அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்

அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்

சென்ற மாதம் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். அந்தச் சுற்றுலாவிலே திருவரங்கனையும் கண்டு வர எண்ணங் கொண்டு திருவரங்கம் சென்றேன்.

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!இளங்கோ வாக்கு. பார்க்காத கண்ணென்ன கண்? அப்படிப் பார்க்கையில் இமைக்கின்ற கண்ணென்ன கண். கவிநயந் ததும்ப இளங்கோ எழுத வேண்டுமென்றால் அந்தப் பரந்தாமனின் அழகை என்ன சொல்வது? எப்படிப் பார்க்காமல் செல்வது?

அலையாழி அரிதுயிலும் மாயனைக் காண, மாலை நிறத்தவனைக் காண மாலையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம். முன்பு சிறுவயதில் திருச்சியும் திருவரங்கமும் திருவானைக்காவலும் சமயபுரமும் சென்றிருக்கிறேன். அப்பொழுது திருவரங்கமும் ஆனைக்காவும் திருச்சிக்கு வெளியே இருக்கும் ஊர்கள்.

ஆனால் இன்றைக்கு திருச்சிக்குள்ளேயே இருக்கின்றன திருவானைக்காவும் திருவரங்கமும். திருவானைக்காவல் என்ற அழகிய தமிழ்ப் பெயர் மருவி பேருந்துகளில் திருவானைக் கோவில் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். யாராவது திருத்தக் கூடாதா?

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவதற்காகவே ஓங்கி உயர்ந்த கோபுரம். பலவண்ணங்களை வீசிக் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. தமிழ் கட்டடக் கலை முறையில் அமைந்திருந்த கோபுரம் சிறப்பாக இருந்தது.
இன்னமும் இருள்கவியாத மாலையாயினும் மக்களின் நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுவர்களும் சிறுமியர்களும் வீதிகளில் விரைந்து கொண்டிருந்தனர். அங்காடிகளில் பொருட்களை விற்பவர்களும் வாங்குகின்றவர்களும் மிகுந்து நெரிசல் உண்டாகத் தொடங்கியிருந்தது.

இவர்களோடு அரங்கணைக் காண வந்த கண்ணிரண்டையும் சுமந்து வந்திருந்த கூட்டத்தினர். அவர்களோடு சேர்ந்து இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே கோயிலை அடைந்தோம்.

விரைந்து உட்சென்ற வேளையில் திருக்கதவம் சாத்தி வைத்திருந்தார்கள். இன்பத்தை பாக்கி வைக்காமல் தருவாய் என வேண்டி வந்த வேளையில் கதவைச் சாத்தி வைத்திருந்தது அங்கிருந்த அன்பர்களை முணுமுணுக்க வைத்தது. அடுத்த தரிசனம் இன்னும் அரைமணியில் என்றனர். காத்திருந்து உள்ளே சென்றோம். கூட்டம் சிறிது சிறிதாகப் பெருகி நிறைந்து கொண்டிருந்தது. பத்து ரூபாய் வரிசையில் போனால் விரைவாகப் பார்க்கலாம் எனக் கருதி அந்த வரிசையில் நின்றோம். அங்கு ஒரு இருபது நிமிட காத்திருத்தல்.

பிறகு உள்ளே விட்டார்கள். பெரிய மணி ஒலிக்க திருக்கோயிலினுள்ளே நடப்பது சுகானுபவம். பட்டால்தான் அதன் சுகம் புரியும். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆண்டவனைத் தரிசிக்கப் போகும் ஆவலும் மிகுந்தது. ஆக்கப் பொறுத்தும் ஆறப் பொறாதார் பலர் வரிசையில் நெருக்கினார்கள்.

உள்மண்டபத்தில் புதிதாக வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். கருங்கற்றூண்கள் புதிதாக போடப்பட்டிருந்தன. சுவற்றிலும் புதிதாக கற்களைப் பதித்திருந்தார்கள். பாரம்பரியம் மிக்க கோயிலுக்குள் இருக்கும் உணர்வு குறைந்து கொண்டே வந்தது. பழைய தூண்களோடு ஒட்டியிருந்த கிராணைட் ஸ்லாபுகள் ஆங்காங்கே கீழே விழுந்திருந்தன. பழசும் புதுசும் ஒட்டவில்லை போலும்.

இதோ பரந்தாமன் படுத்திருக்கின்றான். எங்கே ஒரு முறை முழுதாகப் பார்க்கலாம் என்று ஆவலுடன் பார்ப்பதற்குள், "நகருங்கள்! நகருங்கள்!" என்று சொல்லி விரைவு படுத்தினர். லேசுமாசாக பள்ளிகொண்டவனைக் கண்களில் கைது செய்து விட்டு வெளியே வந்தோம்.

எங்கும் நிறைந்தவனை எங்கும் காணலாம். அப்படியிருக்க சீரங்கத்தில் மட்டும்தான் போய்ப் பார்க்க வேண்டுமா? தேவையில்லைதான். ஆனால் அந்தக் குமிழ்ச் சிரிப்பும், பொய்த் தூக்கமும், அழகு திருவடிகளும் சிற்பியின் கைவண்ணமோ! மாயவன் மெய்வண்ணமோ! அதை எங்கே பார்க்க முடியும்? சமணராகிய இளங்கோவே "கண்ணெண்ண கண்ணே" என்று பாடியிருக்கிறார் என்றால், நான் எந்த மூலைக்கு.

ஆனால் ஆவல் முறையாகப் பூர்த்தியாகவில்லை. நின்று நிதானமாக தரிசிக்க முடியவில்லை. வெளிப்பிரகாரம் சுற்றி விட்டு ஐயங்கார் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் பிரசாதமாக வாங்கி உண்டோம். வயிறு நிரம்பியபின் ரெண்டே ரெண்டு வடைகளை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, திருச்சிக்கான பேருந்தைப் பிடித்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் அடையாறு வரை செல்ல வேண்டிய வேலை. அடையாறு வீட்டிற்குப் பக்கத்தில்தான். வண்டியில் செல்கையில் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோயிலைப் பார்த்தேன். நேரங் கிடைக்கையில் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நேரமும் வந்தது. காலையில் சாப்பிட்டு விட்டு (நான் அதெல்லாம் பார்ப்பதில்லை. சாப்பிட்டு விட்டு போனால் கோவித்துக் கொள்ள மாட்டார் என்று நம்பிக்கை.) வண்டியில் விரைந்தேன்.

கூட்டம் இருக்கவில்லை. உள்ளே அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாள் கண்ணிறையத் தெரிந்தான். படுக்கை பெரிய படுக்கையாதலால் கருவறையும் பெரிது. மூன்று கதவுகள். மூன்றின் வழியாகவும் பரந்தாமனைப் பார்க்க முடிந்தது.

அடிமுதல் முடிவரை, அழகை அங்குலம் அங்குலமாக கண்கள் அள்ளிப் பருகின. இமைக்க மறந்த கண்களால் அழகை அளக்க அளக்க ஆசையும் ஆவலும் தீரவேயில்லை.

வலக்கை ஒதுங்கி படுக்கைக்கு வெளியே நீட்டிக் கொண்டு, படுத்துக் கொண்டிருந்தாலும் பிடிப்பதற்கு இந்தக் கையை நீட்டிக் கொண்டிருப்பது சொல்லமலேயே விளங்கிற்று. இளங்கோ சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.

வங்கக் கடல் கொண்ட மாயவனைக் கேசவனை அரங்கத்தில் பார்ப்பேன் என்று தேடிச் சென்றேன். உலகமே அரங்கம். அது கடவுள் அருளுக்குக் கிறங்கும். அங்கு இருப்பவனே இங்கும் எங்கும் இருந்து நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து அருள் புரிவான் என்ற உண்மை விளங்கியது. கைகளைக் கூப்பித் தொழுதேன். கண்களை மூடிக் கொண்டேன். இதென்ன கூத்து.....கோயிலுக்கு வந்து கண்களை மூடிக்கொண்டா ஆண்டவனை வணங்குவது? கண்ணை மூடினாலும் திறந்தாலும் தெரிகின்ற ஆண்டவனை எப்படித் தொழுதால் என்ன!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! நின் சேவடி செவ்வித் திருக்காப்பு.

அன்புடன்,
கோ.இராகவன்

15 comments:

said...

அன்புள்ள ராகவன் அவர்களே,

அருமையான பதிவு. அடையாற்றில் இப்படி ஒரு கோவில் இருப்பது எனக்குத்தெரியாது. அறிமுகத்துக்கு நன்றி.

பாடல் பெற்ற பழம்பெரும் கோவில்கள் எல்லாம் காலத்தின் மாற்றத்தால் இப்படியாகிக்கொண்டிருக்கின்றன.

என்றும் அன்புடன்,
துளசி

said...

உண்மைதான் துளசி. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில.

தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாத எதுவுமே நிலைக்காது. இது எதற்கும் பொருந்தும்.

said...

மிகவும் அருமையான ஆன்மீகப் பயணக் கட்டுரை. வாழ்த்துக்கள்.

said...

நன்றி மத்தளராயன். என்னால் உங்கள் வலைப்பூவிற்கும் துளசி கோபாலின் வலைப்பூவிற்கும் அவரவர்கள் பெயரைக் கிளிக்கிப் போக முடியவில்லையே.....ஏன்?

said...

>>திருவானைக்காவல் என்ற அழகிய தமிழ்ப் பெயர் மருவி பேருந்துகளில் திருவானைக் கோவில் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். <<

பஸ் கண்டக்டரிலிரிந்து, திருச்சியிலுள்ள என் உறவினர்கள் வரை, திருவானைக்கா என்றால், ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். நானும் விடாப்பிடியாக, விளக்கத்துடன், ஆனைக்கா என்றே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.


>> எங்கே ஒரு முறை முழுதாகப் பார்க்கலாம் என்று ஆவலுடன் பார்ப்பதற்குள், "நகருங்கள்! நகருங்கள்!" என்று சொல்லி விரைவு படுத்தினர். <<

பக்கத்தில் உத்தமர்கோவிலில் இதே பெருமாள் இதே மாதிரியே படுத்துக்கொண்டிருக்கிறார். இதே அழகு, மிகவும் பழைய கோவிலும் கூட. அங்கு போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள். நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். யாரும் விரட்ட மாட்டார்கள். அரங்கம் தான் always housefull-ஆக இருக்கிறது.

திருவரங்கத்தினை நினைவூட்டியமைக்கு நன்றி. சில முறை தான் சென்றிருக்கிறேன். இருந்தாலும், மனதில் ஆழப்பதிந்து போய்விட்ட கோவில். அந்த கோதண்டராமர் தான் எத்தனை அழ்கு. கோபுரங்களும், சிற்பங்களும், அதுவும், அந்த காலைதூக்கிக்கொண்டு நிற்கும் குதிரைகளும், மறக்க எத்தனை முறை பார்த்தாலும் ஆவல் அடங்காது. கொஞ்சநேரம், ஸ்ரீரங்கம் போய்விட்டு வந்தேன். நன்றி, ராகவன்.

said...

// பஸ் கண்டக்டரிலிரிந்து, திருச்சியிலுள்ள என் உறவினர்கள் வரை, திருவானைக்கா என்றால், ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். நானும் விடாப்பிடியாக, விளக்கத்துடன், ஆனைக்கா என்றே சொல்லிக்கொண்டிருக்கிறேன். //

நானும் அப்படித்தான் மஞ்சுளா. திருவானைக்காவல் என்றுதான் டிக்கெட் எடுத்தேன். :-) அதிலொரு மகிழ்ச்சி.

// பக்கத்தில் உத்தமர்கோவிலில் இதே பெருமாள் இதே மாதிரியே படுத்துக்கொண்டிருக்கிறார். இதே அழகு, மிகவும் பழைய கோவிலும் கூட. அங்கு போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள். நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். யாரும் விரட்ட மாட்டார்கள். அரங்கம் தான் always housefull-ஆக இருக்கிறது. //

இது எனக்குத் தெரியாமல் போனதே...தெரிந்திருந்தால் போயிருப்பேன். எப்படிச் செல்வது?

said...

திருவானைக்காவிலிருந்து 5 நிமிட பஸ் பயணம். (சமயபுரம்) TollGate busstop-ல் இறங்கி, 2 நிமிட நடையில் கோவில். சத்திரம் bus-stand-லிருந்து உத்தமர்கோவில் வாசலுக்கே கூட பஸ் போகிறது. சமயபுரம் டோல்கேட்டில் இறங்கியும் போகலாம். சப்தகுரு தலம், பிரம்மாவுக்கு தனி சன்னதி, சிவன், விஷ்ணு இருவரும் உறையும் கோவில், 108 திருப்பதிகளில் 3-வது திருப்பதி என்று பல பெருமைகள் பெற்ற கோவில்.

said...

நன்றி மஞ்சுளா.

இந்தப் பதிவைப் பற்றிப் பேசுகையில் திருவெள்ளரை என்ற ஊரைப் பற்றியும் ஒரு நண்பர் சொன்னார். நேரம் கிடைக்கையில் அதையும் பார்த்துவிட வேண்டியதுதான்.

said...

அரங்கன் துலுக்க நாச்சியாராக மாலிக் கபூரின் பெண்ணை மணந்து தினமும் காலை உணவுக்கு ரொட்டி சாப்பிடுவதை யாரும் சொல்லுவதில்லை போல.. அங்கெ ராமானுஜரின் திரு உருவம் (பூத உடல்) உட்கார்ந்த நிலையில் இருக்கிறதே.. இதெல்லாம் பார்த்திருக்கிறிர்களா..

சிட்னியில் குக் தூக்கிப் போட்டதாக ஒரு கல் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது.. கண்டதும் நம் ஊரில் ஆயிரம் அருமையான விஷயங்கள் இருந்தாலும் எடுத்துச் சொல்ல ஆளில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.

சமயம் கிடைத்தால் திருவள்ளுர் பெருமாளையும் தரிசியுங்கள்.. அவரும் கிடந்த திருக்கோலம் தான்.. அமாவாசை தவிர எல்லா நாட்களிலும் நின்று பேசலாம் அவரிடம்..

அமர்ந்த திருக்கோலம் திருமழிசையில்.. அதுவும் அருமை...

நல்ல பதிவு ராகவன்..

அன்புடன் விச்சு

said...

மிக அருமை ராகவன். நானும் உங்களைப் போல ஆண்டவன் முன் கண்மூடித் தொழுவதுண்டு.

ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பா வைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந் நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்

said...

விசு, திருவள்ளூர் என்பது சென்னைக்கும் அரக்கோனத்திற்கும் இடையிலுள்ள ஊர்தானே. ரயிலில் திருத்தணி செல்கையில் பார்த்திருக்கிறேன்.

சாலை வழியாக போனால் திருவாலங்காடு சிவத்தலம் வரும். பிறகு ஒரு வைணவத்தலமும் வரும். பெயர் மறந்து விட்டது. அது எந்த ஊர்? திருநின்றவூரிலும் பழைய கோயில் கூட்டம் குறைவு என்று கேள்விப் பட்டேன்.

said...

ரமேஷ், உண்மைதான். தொழுகை என்பதே இன்பமே. அதிலும் தமிழால் தொழுவது பேரின்பம். சொல்லும் செயலும் புரிந்து செய்வதல்லவா.

திருப்பாவை எனக்கும் பிடித்த நூல். அதி அற்புதமான தீந்தமிழ்ப் பாடல்கள் பாண்டி நாட்டு வட்டார வழக்கில். படிக்கவும் சுகம். பாடவும் சுகம். தொழவும் சுகம்.

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் - என்ன சொல்நயம். பசுவிடம் நாம் கேட்டுதான் வாங்குகிறோம். ஆகையால் முதலில் மடியில் தண்ணீர் விட்டுக் கேட்பார்கள். ஒத்துக்கொண்டால்தான் குடத்தில் பால். இல்லை பல்லத்தனையும் பாழ். :-)))))

said...

அன்புள்ள ராகவன்,

உங்கள் வலைத் தளத்திற்கு நான் வருவது இதுவே முதல் தடவை. திருவரங்கத்தைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

திருவாலங்காடு என்கிற சிவத்தலம் நாகை மாவட்டத்தில் இருக்கிறது அல்லவா? திருவெண்காட்டில் அகோரமூர்த்தி விசேஷமானவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

said...

ராம், திருவாலங்காட்டில்தான் நீலி தன் கணவனைக் கொன்றாள் என்பார்கள். திருத்தணி வழியில் பார்த்த நினைவு.

திருவெண்காடு...........இந்தப் பெயரும் பரிச்சயமானதுதான். திருவெண்காட்டு நங்கை என்று கூட படித்த நினைவு. எங்கேயோ மூளைக்குள் இருக்கிறது. சிறுத்தொண்டர் துணைவியாரா?

said...

ராகவன்,

மிக நல்ல பதிவு. அரங்கனை/பத்மநாபனை நேரில் கண்டது போல் இருக்கிறது. அடிக்கடி உங்கள் வலைப்பக்கத்திற்கு வரலாம் என்று உள்ளேன்.

குமரன்.