Thursday, February 23, 2006

நாலே நாலா ஏதோ நாலா

ஜோசப் சார் என்னை இப்பிடி இழுத்து விட்டுட்டீங்களே.....நாம் பாட்டுக்குச் செவனேன்னு இருந்தேன்.....சரி....நானும் எதையாவது சொல்லி வெக்கேன். யாருஞ் சண்டைக்கு வராதீங்க...

பிடித்த நான்கு பெரியவர்கள்

1. வாரியார் சுவாமிகள் - தமிழ்ப் பெருங் கடல். நல்ல செய்தியோடு போய் நின்றால் உடனே வாழ்த்து வெண்பா பாடக் கூடிய தமிழறிவு. ஊர் ஊராக நாடு நாடகப் போய்த் தமிழ் தொண்டும் தமிழ்க் கடவுளுக்குத் தொண்டும் செய்த பெருமகனார். ஆன்மீக இலக்கியச் செம்மல். நகைச்சுவையும் தத்துவமும் கலந்து கதைக் கருத்து சொல்லும் இவரது பாங்கிற்கு இன்று வரை போட்டியில்லை.

2. காயிதே மில்லத் - ஒப்பற்ற இஸ்லாமியத் தலைவர். இஸ்லாம் எங்கள் சமயம். தமிழ் எங்கள் மொழி என்று முழங்கிய தமிழர். ஒரு குற்றம் என்று இவரைக் கை காட்ட முடியுமா! தூயவர். அரியவர். என்றும் நினைத்துப் போற்றத் தக்கவர். அனைவருக்கும் பொதுவானவர்.

3. காமராஜர் - உண்மையிலேயே மதிய உணவுத் திட்டத்தைத் துவக்கிய பெருமைக்கு உரியவர். கல்விக் கண் திறந்த ஞானச் சுடர். இந்த அளவிற்கு தமிழகத்தில் கல்வி உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் இட்ட பெருமை இவரையே சேரும். இன்னொரு கர்ம வீரர் இன்னும் காணக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

4. உ.வே.சா - கால் தேய்ந்தாலும் தேயட்டும்.....என் தமிழ் தேயக் கோடாது என்று....தெருத் தெருவாக அலைந்து அலைந்து ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து பல அரிய தமிழ் நூல்களை நாம் அறியத் தந்த அற்புதத் தமிழர். ஒவ்வொரு தமிழனும் ஒருமுறையாவது நன்றி சொல்ல வேன்டிய உழைப்பாளி. தமிழ்த் தொண்டின் தலைமைப் பதவி இவருக்குப் பின்னால் இன்னமும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

பிடித்த நான்கு உணவு வகைகள்

1. தோசை - இதுக்குதான் முதல் இடம். எந்தக் கூட்டணியிலும் சேரக் கோடிய O-ve உணவு. சைவமா இருந்தாலும் சரி. முன்னாடி அ போட்ட சைவமா இருந்தாலும் சரி....நல்லா பொருந்தி வரும். ஒன்னுமில்லையா...கூட்டணி இல்லாமலேயே ருசிக்கும் மசால் தோசையும் உண்டு.

2. கோதுமை ரவைக் கதம்பம் - இது எனது கண்டுபிடிப்பு. இதுக்கு இங்க குறிப்பும் கொடுத்திருக்கேன். பாதி நாட்களில் இரவு உணவு இதுதான். கோதுமை ரவையில் செய்தது. ஆனால் அரிசி வகைக்கான சுவை.

3. மீன் - குழம்பு...பொரிச்சது...இல்லை பாலக்கோட போட்டு செய்றது....எதுவானலும் எனக்குப் பிடிக்கும். சீலா மீனு, வெறால் மீனு, நெத்திலி மீனு, ஜிலேபிக் கெண்டை (ரொகு) - இந்த நாலு மீன்களும் ரொம்பப் பிடிக்கும். (இதுலயும் நாலா!)

4. கீரை - இதுவும் ரொம்பப் பிடிக்கும். கீரைக் குழம்போ...மசியலோ..பொரியலோ...எப்படி இருந்தாலும் கீரை எனக்குப் பிடிக்கும். எல்லாக் கீரைகளுமே பிடிக்கும். காலி ஃபிளவர் அடியில் இருக்கும் கீரையாகட்டும் முள்ளங்கியில் மேலே இருக்கும் கீரையாகட்டும்....எதையும் விட்டு வைப்பதில்லை.

எனக்குப் பிடித்த நான்கு கலைஞர்கள்

1. நடிகர் திலகம் - பெயரைச் சொல்லவே தேவையில்லை. அந்தக் காலத்திற்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்தார். இந்தக் காலத்திற்கு வந்த பிறகு என்ன தேவையோ அதைச் செய்தார். கேட்டதைக் கொடுக்கும் நடிப்பு வள்ளல். சந்தேகமேயில்லை. இப்படி ஒரு தமிழன் இருந்தான் என்று பெருமிதம் கொள்ளலாம்.

2. அனிதா ரத்னம் - பாரம்பரியக் கலையை அப்படியே வைத்துப் பராமரிப்பவர்களுக்கு நடுவில் அதில் கூடுதல் புதுமைகளைச் சேர்க்கும் ஆடலார். நாட்டிய நிகச்சிகளில் கதை சொல்லும் விதங்களின் புதிய முறைகளைக் காட்டுகிறவர். இன்னும் நிறைய செய்ய வேண்டும்.

3. இளம்பிறை மணிமாறன் - தூத்துக்குடிக்காரர்களுக்கு இவரை நிச்சயம் தெரிந்திருக்கும். அங்கு ஒரு பெரிய கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். சரி. என்ன கலை என்று கேட்கின்றீர்களா? இவர் ஒரு தமிழ் சொற்பொழிவாளர். அதுவும் ஆன்மீகத்தில். தமிழிலும் ஆன்மீகத்திலும் இவர் தொடாதது இல்லை. ஒரு விஷயம் தெரியுமா? இவர் ஒரு கிருஸ்துவர். ஆனாலும் மக்கள் இவரை ஆன்மீகச் சொற்பொழிவாளராக ஏற்றுக் கொண்டார்கள். அதுதான் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பு. உண்மையான மதச்சார்பின்மை.

4. எல்.ஆர்.ஈஸ்வரி - எனக்கு இவரை விடப் பிடித்த பாடகர்கள் இருந்தாலும் இவரையே குறிப்பிட விரும்புகிறேன். இவருக்கு முன்னும் பின்னும் பல பெரிய பாடகர்கள் பாரம்பரிய இசைப் பிண்ணனியிலிருந்தோ படித்திருந்தோ வந்தார்கள். அல்லது வெளிமாநிலத்திலிருந்து வந்தார்கள். அவர்களையும் நான் கொண்டாடினோம். கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் எந்த விதப் பிண்ணனியும் இல்லாமல் ஒரு கிருஸ்துவக் குடும்பத்திலிருந்து வந்து, எந்த இசைமுறையையும் கற்றிராமல், தன்னறிவைக் கொண்டே முன்னுக்கு வந்த தமிழச்சி. இவர் கிளப் பாடகி என்று எளிதாக கிண்டலடித்து விடலாம். ஆனால் இவர் இல்லாமல் தமிழ்நாட்டில் பல வீடுகளில் கல்யாணமும் நடப்பதில்லை. ஆடி மாதத்தில் மகமாயி கூழை ஏற்றுக் கொள்வதும் இல்லை. முதலில் சொன்னது "வாராயென் தோழி வாராயோ" பாடலைப் பற்றி. அந்தப் பாடலைப் பெரும்பான்மையான கல்யாண வீடுகளில் கேட்கலாம். லூர்து ஆர் ஈஸ்வரியாக இருந்தாலும் அம்மன் பாடல்கள் என்றால் ஈஸ்வரிதான் என்று முத்திரை கொண்ட இந்தப் பாடகியும் போற்றப்பட வேண்டியவரே.

விடுமுறைக்குச் செல்ல விரும்பும் நான்கு இடங்கள்

1. கேரளா - சேர நாட்டின் அழகைச் சொல்லவும் வேண்டுமா....பச்சை வயல்களும்...உயர்ந்த மலைகளும்.....ஆறுகளும்...ஏரிகளும்....வனப்பும் வளமையும் இயற்கையும் எங்கும் நிறைந்த கேரளம். ஏற்கனவே சென்றிருக்கிறேன். இன்னும் செல்ல வேண்டும்.

2. Valley Of Flowers - இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். நண்பர்கள் சென்று வந்த புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் சென்றதில்லை. டெல்லி சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். ஒரு பயணத்திட்டம் நீண்ட நாட்களாக ஊறிக்கொண்டு இருக்கிறது. என்று நடக்குமோ!

3. ஜெர்மெனி - போயிருக்க வேண்டியது. போக முடியாமல் போய் விட்டது. இன்னொரு முறை வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக போக விரும்பும் நாடு ஜெர்மெனி.

4. கிரீஸ் - கதைகளில் நிறைய படித்த நாடு. ஒடிசியும் பெனிலோப்பும் மகிந்திருந்த நாடு. ஹெலன் என்ற அழகு தேவதையால் நிறைய இழந்த நாடு. நிச்சயம் பார்க்க வேண்டும்.

நான் அழைக்க விரும்பும் நால்வர்

1. பரஞ்சோதி

2. இளவஞ்சி

3. சிவா

4. இராமநாதன்

அன்புடன்,
கோ.இராகவன்

25 comments:

said...

ஆகா,
நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா? வெரிகுட், வெரிகுட்.

ஆனா உங்களை கதாநாயகனாகப் போட்டதாலே பரஞ்சோதிக்கு முதலிடமா? ஆனாலும் இது அநியாயம். இவ்வளவுக்கும் அவர் உங்களை வாயாடி என்று வேறு காமெண்ட் அடிக்கிறார். ஹூம். :)

said...

என்ன ராகவா..நான்கு நான்கா குறிப்பிட்டிருக்கீங்க..

அப்படின்னா பிடித்த நான்கு காதலிகள் பற்றியும் சொல்லுங்களேன்.. ( மாட்டிக்கிட்டீங்க) :)

said...

ஓ.கே. இதுவரைக்கும் ரெண்டு பேர் என்னை இந்த சங்கிலியில கோத்து விட்டிருக்கீங்க. இன்னும் எத்தனை பேரு செய்றாங்கன்னு பாக்கிறேன். அப்புறம் சங்கிலிப் பதிவு போடறேன்.

இராகவன், இதே பட்டியல் தான் எனக்கு வந்தது - என் பெயர் இருக்கும் இடத்தில் உங்கள் பெயர், வரிசையும் கொஞ்சம் மாறும். ஹும். நீங்க முந்திக்கிட்டீங்க.

said...

// ஆகா,
நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா? வெரிகுட், வெரிகுட். //

ஆமாம் இலவசம். என்ன பண்றது...ஓடமும் ஒருநாள் வண்டியில ஏறுது.

// ஆனா உங்களை கதாநாயகனாகப் போட்டதாலே பரஞ்சோதிக்கு முதலிடமா? ஆனாலும் இது அநியாயம். இவ்வளவுக்கும் அவர் உங்களை வாயாடி என்று வேறு காமெண்ட் அடிக்கிறார். ஹூம். :) //

அதுனாலதான மொத இடம்....அவனை அழைச்சதுல...அவன் நிச்சயமா என்னைத் திட்டிக்கிட்டு இருப்பான். அது உங்களுக்குத் தெரியாது. ஹா ஹா ஹா

உங்களத்தான் கூப்பிட நினைச்சேன் இலவசம். ஆனா உங்களைக் கூப்பிட வேண்டிய ஆளைக் கூப்பிட்டாச்சு. ஆக மறைமுகமா உங்களையும் கூப்பிட்டாச்சு. :-)

said...

// என்ன ராகவா..நான்கு நான்கா குறிப்பிட்டிருக்கீங்க..//

இப்பல்லாம் அதுதான நடக்குது ரசிகவ். பாருங்க. ஒங்களையும் கூப்பிடப் போறாங்க...அப்ப தெரியும்...

// அப்படின்னா பிடித்த நான்கு காதலிகள் பற்றியும் சொல்லுங்களேன்.. ( மாட்டிக்கிட்டீங்க) :) //

அட! இதெல்லாம் இப்பிடி வெளிப்படையாவா கேக்குறது....தனியாப் பேசிக்கிருவோம். எனக்கு நாலு....ஒங்களுக்கு நாலுக்குப் பக்கத்துல பூஜ்ஜியம் போடனுமாமே! உண்மையா ரசிகவ்? ;-)

said...

// ஓ.கே. இதுவரைக்கும் ரெண்டு பேர் என்னை இந்த சங்கிலியில கோத்து விட்டிருக்கீங்க. இன்னும் எத்தனை பேரு செய்றாங்கன்னு பாக்கிறேன். அப்புறம் சங்கிலிப் பதிவு போடறேன். //

ஓ! ஒங்கள ஏற்கனவே கூப்பிட்டாச்சா...சரி அப்ப ஒங்க பேர நீக்கீற வேண்டியதுதான். (இரக்கமில்லாதவன் என்று இவன் வலைப்பதிவில் எழுதுங்கள்)

// இராகவன், இதே பட்டியல் தான் எனக்கு வந்தது - என் பெயர் இருக்கும் இடத்தில் உங்கள் பெயர், வரிசையும் கொஞ்சம் மாறும். ஹும். நீங்க முந்திக்கிட்டீங்க. //

இப்ப மாத்தீட்டேன். நான் இளவஞ்சியைக் கூப்பிட்டிருக்கேன். அவரும் வந்து கலக்கப் போறாரு பாருங்க.

said...

பெங்களூரு காரரும் மாட்டிகிட்டாரா? சந்தோஷம்! அடிச்சி ஆடுங்க!

said...

ராகவ்,

நீங்களும் மீன் பிரியரா? ம்...அடி தூள் நான் உங்களை சைவம் என்று நினைத்திருந்தேன்...(எனக்கும் கீரை பிடிக்கும்..வீட்ல நாம் கீரை சாப்பிடற அழகை பார்த்துட்டு மனுசனா இல்ல மாடான்னு கேக்கறாங்கைய்யா...


காயிதே மில்லத், காமராஜர், உ.வே.சா ஆகியோருக்கு நீங்கள் கொடுத்த அறிமுகம் ஒரு வாசகம்னாலும் திருவாசகம் அய்யா..சிம்ப்ளி சூப்பர்ப்..இதை சத்தமா கத்தணும் நம்ப நாட்டில...

said...

அருமையான சுவையான பட்டியல்!

said...

இராகவன் அண்ணா,

பெரிய அர்ச்சனையே நடக்குது. என்னை வம்பில் மாட்டி விட்டுவிட்டீங்க.

ஏற்கனவே கீதா சகோதரி அழைத்திருக்கிறார், இன்னும் 2 பேர் அழைத்தபின்பு, மொத்தம் 4 பேர். அப்புறமாக நானும் அளந்துவிடுகிறேன்.

இலவசக்கொத்தனார், நான் இராகவன் அண்ணாவை வைத்து கதைகள் முன்பே வேறு தளத்தில் சொல்லியிருக்கிறேன்.

said...

ஆகா, தூத்துக்குடிகாரராச்சே.. மீன், கருவாடு இல்லாமயா?

அந்த தூத்துக்குடி மீன் பிடித்துறையில குமிச்சி வச்சிருக்கற மீன், சிங்க ரால் எல்லாத்தையும் மொத்தமா வாங்கி.. என் மனைவி குடும்பத்தோட பங்கு போட்டு.. அது ஒரு காலம்யா..

விலாவாரியா எழுதறதுக்கு கை அரிக்குது.நான் வேல செஞ்ச அடுத்த ஊரு உங்க ஊருதானே.. அப்ப எழுதறேன்..

அப்புறம் நீங்க சொன்ன நாலு பெரியவங்க.. நா அத எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்..

இப்ப சொல்றேன்..

பெருந்தலைவர் காமராசர்,
அன்னை திரேசா,
அப்துல் கலாம்,
மார்ட்டின் லூத்தர் கிங்..

said...

ராகவன்! என்னைய மாட்டி வுட்டுட்டீங்களே :-))

எனக்கும் வாரியார் மேல் மிகுந்த பக்தி உண்டு. எந்த வித ஆடம்பரமும் இல்லாமல், சர்ச்சைகளிலும் சிக்காமல், உத்தமனாக இறை தொண்டாற்றிய மகா பெரியர் அவர்.


எல்.ஆர்.ஈஸ்வரி பற்றி உங்கள் ஆதங்கம் உண்மையே..

said...

// பெங்களூரு காரரும் மாட்டிகிட்டாரா? சந்தோஷம்! அடிச்சி ஆடுங்க! //

சிங்கு....என்ன சந்தோஷமய்யா உமக்கு..ஜிங்கு ஜிங்குன்னு ஆடுறீரே....பேசாம ஜிங்.செயக்குமார்னு பெயர மாத்தீருவோமா?

said...

// நீங்களும் மீன் பிரியரா? ம்...அடி தூள் நான் உங்களை சைவம் என்று நினைத்திருந்தேன்...//

என்ன முத்து அப்பிடிக் கேட்டுட்டீங்க...ஒகேனகல்லு போனப்ப...நம்மளாலயே அன்னைக்கு மீனு விக்குறவங்களுக்குக் கொள்ள லாவம்.

// (எனக்கும் கீரை பிடிக்கும்..வீட்ல நாம் கீரை சாப்பிடற அழகை பார்த்துட்டு மனுசனா இல்ல மாடான்னு கேக்கறாங்கைய்யா...//

கேட்டுட்டாங்களா...கேட்டுட்டாங்களா....வெரி குட்.


// காயிதே மில்லத், காமராஜர், உ.வே.சா ஆகியோருக்கு நீங்கள் கொடுத்த அறிமுகம் ஒரு வாசகம்னாலும் திருவாசகம் அய்யா..சிம்ப்ளி சூப்பர்ப்..இதை சத்தமா கத்தணும் நம்ப நாட்டில... //
வாரியாரையும் விட்டுட்டீங்களே....அவரும் மத்தவங்களப் போலத்தான். தனக்குன்னு ஒன்னும் செஞ்சிக்கலை.

said...

// அருமையான சுவையான பட்டியல்! //

நன்றி ஜோ.

said...

// பெரிய அர்ச்சனையே நடக்குது. என்னை வம்பில் மாட்டி விட்டுவிட்டீங்க. //

நடக்குதா அர்ச்சனை...கோ.இராகவனா கொக்கா? ;-)

// ஏற்கனவே கீதா சகோதரி அழைத்திருக்கிறார், இன்னும் 2 பேர் அழைத்தபின்பு, மொத்தம் 4 பேர். அப்புறமாக நானும் அளந்துவிடுகிறேன். //

ஓ! நாலு பத்துன பதிவுங்கறதால நாலு பேரு கூப்புடனுமோ....மக்களே...இந்தக் கதையக் கேளுங்க...இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை.

// இலவசக்கொத்தனார், நான் இராகவன் அண்ணாவை வைத்து கதைகள் முன்பே வேறு தளத்தில் சொல்லியிருக்கிறேன். //

ஓ! அது வேறையா! இன்னும் எத்தன தளத்துல எத்தனை கதை சொல்லப் போற...விட்டா மரியாதை ராமன் கதைகள் போல கோ.இராகவன் கதைகள் போடுவ போல இருக்கே..மக்களே..இதையெல்லாம் கேக்க மாட்டீங்களா?

said...

// Ilandhirai Manimaran, Lourd R Eshwari!!! Arumai Ragavan.//

நன்றி சிவாஜி. அவங்கல்லாம் நம்ம ஊர்க்காரங்கதான்.

// Ilaya thalabathi Ilavanji ya yaar eppo link pannuvangannu paathuttu irundhen.//

நான் கூப்பிட்டுட்டேனே!

said...

// ஆகா, தூத்துக்குடிகாரராச்சே.. மீன், கருவாடு இல்லாமயா? //

அதச் சொல்லுங்க...புதுக்கிராமத்துல மீனு விக்க மாட்டாங்க. நேரா ஏ.எஸ்.கே.ஆர் மண்டபத்தத் தாண்டிப் போனா முக்குல மீனு விப்பாரு ஒருத்தரு. இல்லைன்னா போல்டன் புரம் போவோம். இல்லைன்னா மீன் மார்க்கெட்.

// அந்த தூத்துக்குடி மீன் பிடித்துறையில குமிச்சி வச்சிருக்கற மீன், சிங்க ரால் எல்லாத்தையும் மொத்தமா வாங்கி.. என் மனைவி குடும்பத்தோட பங்கு போட்டு.. அது ஒரு காலம்யா.. //

நாங்க அதுக்கு எதுத்துதான் இருந்தோம் கொஞ்ச வருஷம். அப்பெல்லாம் கூடைல மீனு கொறஞ்ச வெலைக்கு வாங்கி...எல்லாருக்கும் கொடுத்திருக்கோம்.

// விலாவாரியா எழுதறதுக்கு கை அரிக்குது.நான் வேல செஞ்ச அடுத்த ஊரு உங்க ஊருதானே.. அப்ப எழுதறேன்..//

எழுதுங்க எழுதுங்க...அவலோட...சீச்சீ..ஆவலோட காத்திருக்கேன்.

// அப்புறம் நீங்க சொன்ன நாலு பெரியவங்க.. நா அத எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்..

இப்ப சொல்றேன்..

பெருந்தலைவர் காமராசர்,
அன்னை திரேசா,
அப்துல் கலாம்,
மார்ட்டின் லூத்தர் கிங்.. //

நீங்களும் நல்ல பட்டியல்தான் போட்டிருக்கீங்க. பெரியவங்க பெரியவங்கதான்.

said...

// ராகவன்! என்னைய மாட்டி வுட்டுட்டீங்களே :-)) //

பின்ன...மாட்டி வுடாம....

// எனக்கும் வாரியார் மேல் மிகுந்த பக்தி உண்டு. எந்த வித ஆடம்பரமும் இல்லாமல், சர்ச்சைகளிலும் சிக்காமல், உத்தமனாக இறை தொண்டாற்றிய மகா பெரியர் அவர். //

உண்மைதான். பத்து காசு சேத்துக்கலை. தமிழ்ப் புத்தகங்கள் நிறைய போட்டாரு. அதுலயும் முறையா செம்மைப்படுத்தினாரு. அதுக்கப்புறந்தான் தமிழ்ப் புத்தகப் பதிப்பில் நல்ல முறைமைகளும் வந்தன. இன்னும் நெறைய சொல்லலாம்.

// எல்.ஆர்.ஈஸ்வரி பற்றி உங்கள் ஆதங்கம் உண்மையே.. //

உண்மைதான் சிவா. கேள்வி ஞானத்தால் வந்தவர். எந்த இசையமைப்பாளருக்கும் செல்லப்பிள்ளை இல்லை. ஆனாலும் பிரபலமாகி தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டவர். நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர். ஐயமில்லை. அதுலயும் அவரு தூத்துக்குடி மாவட்டம்.

said...

அன்பு இராகவன்,
தங்களின் மின்னஞ்சல் முகவரி இல்லாததால் இத்தொடர்பற்ற பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.

தங்களின் 39 தத்துவங்கள் பற்றிய வினாவுக்கு விடைகாண சொடுக்குங்கள்
http://njaanametti.blogspot.com/2006/02/8.html

said...

என்ன விளையாட்டு இது கோ.இராகவன்

நானே நானா யாரோ தானா மாதிரி
நாலே நாலா ஏதோ நாலா-ன்னு

அன்னைக்கு ஞான்ஸ் பதிவிலும் இப்படி போட்டிருந்தது.
நல்லா எழுதியிருக்கீங்க
அதுசரி
அதென்ன வம்பில் மாட்டி விடுவது,
சங்கிலியில் கோர்ப்பது

said...

// அன்பு இராகவன்,
தங்களின் மின்னஞ்சல் முகவரி இல்லாததால் இத்தொடர்பற்ற பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.

தங்களின் 39 தத்துவங்கள் பற்றிய வினாவுக்கு விடைகாண சொடுக்குங்கள்
http://njaanametti.blogspot.com/2006/02/8.html //

மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா. அன்று கேட்டதை மறவாமல் தந்து நினைவு படுத்தியமைக்கு நன்றி.

said...

// கட்டத்துக்குள் அடைக்க முடியாத வெரைட்டியான ரசனை. அழகு. தூத்துக்குடி முயல் தீவுக்குப் போனதுண்டா? //

அந்தக் கொடுமையைக் கேக்காதீங்க....நானும் வீட்டுல எத்தனையோ வாட்டி கூட்டீட்டுப் போகச் சொல்லீருக்கேன். ஆனா கரிநாளுக்கு தண்ணி டாங்கிக்குதான் கூட்டீட்டுப் போவாங்க. பனங்கெழங்கு அவிச்சி கொண்டு போய்....கூடி உக்காந்து திண்ணுகிட்டு குப்பையாக்கி...அடடா! நீங்க போயிருக்கீங்களா?

said...

// என்ன விளையாட்டு இது கோ.இராகவன்

நானே நானா யாரோ தானா மாதிரி
நாலே நாலா ஏதோ நாலா-ன்னு //

இது என்ன ஏதுன்னு எனக்கும் தெரியாது. நாலு நாலாச் சொல்லனும். அதுவும் நாலுதான் சொல்லனும். சங்கிலியா போகுது....எல்லாரும் எப்படியாவது இதுக்குள்ள விழுந்துட்டாங்க. என்ன செய்ய...அது சரி ஒங்கள இன்னும் கூப்புடலையா..இருங்க யாரைவாது விட்டுக் கூப்பிடச் சொல்வோம்.

// அன்னைக்கு ஞான்ஸ் பதிவிலும் இப்படி போட்டிருந்தது.
நல்லா எழுதியிருக்கீங்க
அதுசரி
அதென்ன வம்பில் மாட்டி விடுவது,
சங்கிலியில் கோர்ப்பது //

எல்லார் வலைப்பூவுலயும் இது இருக்கும். இதெல்லாம் ஒரு விளையாட்டுதான. ஜாலியா...அப்படியே விளையாண்டுகிட்டுப் போகலாம்.

said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.