Thursday, February 02, 2006

சேப்பாக்கமும் சிலப்பதிகாரமும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு இருக்கத்தான் செய்கிறது. எப்படியோவது...இல்லையென்றால் சேப்பாக்கத்தைப் பற்றிச் சொல்ல வருகையில் சிலப்பதிகாரம் உள்ளே நுழையுமா?

ஜனவரி கடைசி வாரக்கடைசியில் குடியரசு தினத்தை ஒட்டி சென்னைக்குச் சென்றிருந்தேன். அங்கு நண்பர்களோடு சந்திக்கச் சென்னைச் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை கிரிக்கெட் கிளப்பிற்குச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததுமே உள்ளே விட முடியாது என்று சொல்லி விட்டார்கள். என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா?

என்னுடைய உடையலங்காரந்தான். வட்டக்கழுத்து டி-ஷர்ட் அணிந்திருந்தேன். இது போன்ற பெரிய கிளப்களில் உடைக்கட்டுப்பாடு உண்டு. சென்ற முறை சென்றிருந்த பொழுது ஒழுங்காக நல்லதொரு சட்டையை மாட்டிக் கொண்டு சென்றேன். இந்த முறை நாலு இடங்களில் சுற்றி விட்டுப் பிறகு கிளப்பிற்குச் சென்றதால் எனக்குத் தோன்றவேயில்லை.

பிறகு அங்கு எங்களை அழைத்துச் சென்ற நண்பர் உடனே வீட்டிற்கு ஃபோன் செய்து கிளம்பிக் கொண்டிருந்த அவரது துணைவியாரை ஒரு சட்டையைக் கொண்டு வரச் சொன்னார். அந்தச் சட்டை வந்த பிறகு கிளப்பிற்குள் சென்றோம்.

நல்ல இடம். மாலைப் பொழுதுகளில் நண்பர்களோடு பொழுது போக்கச் சிறந்த இடம். Under-19 குழுவினர் ஒளி வெள்ளத்திலும் வியர்வை வெள்ளத்திலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொருவருக்குள்ளும் என்னென்ன கனவுகளோ. ஆசைகளோ. சிறுவயதிலேயே விளையாட்டில் ஈடுபட்டிருந்ததால் இந்த வயதிலேயே எல்லாருக்கும் நல்ல உடல்வாகு வந்திருந்தது.

அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்கு ஏதுவாக நாற்காலிகளை அமைத்துக் கொண்டோம். முதலில் மசால்வடைகளையும் முட்டைக்கோஸ் வடைகளையும் கொண்டு வரச்சொன்னோம். போட்டி பலமாக இருக்க உருளை போண்டாவையும் கொண்டாவென்றோம்.

சொன்னவை வந்து (அல்லது வெந்து) கொண்டிருக்கும் நேரத்தில் சுற்றிப் பார்க்கையில் என் கண்களில் பட்டார் பேராசிரியர் ராஜகோபாலன். தொலைக்காட்சியில் வரும் தமிழ்ப் பட்டிமன்றங்களைப் பார்ப்பவர்களுக்குப் பேராசியர் ராஜகோபாலனைத் தெரியாமல் இருக்காது. நக்கீரன், இளங்கோ, கம்பன் என்று கரைத்துக் குடித்த கலியுக அகத்தியர். வெறும் வெற்றுப் படிப்பல்ல. ஒவ்வொரு இலக்கியத்தையும் படித்து ஆய்ந்து அதன் பாத்திரங்களைத் தெளிந்த அறிஞர்.

அவருடைய பேச்சைத் தொலைக்காட்சியில் கேட்டுதான் நான் சிலப்பதிகாரத்தில் ஈடுபாடு கொண்டேன். தென்னவன் தீதிலன் என்ற கதையை எழுதியதற்குக் காரணமே அவர் மேற்கோள் காட்டிய சிலப்பதிகார வரிகள்தான். ஆகையால் அவரிடம் நேரில் சென்று மரியாதை செய்வதே தமிழுக்கு நான் செய்யும் மரியாதை என்று எண்ணி அப்படியே செய்தேன். அவரும் மிகவும் மகிழ்ந்து போனார். அவர் பேசியதையும் அதிலிருந்து நான் எடுத்ததையும் சொல்லச் சொல்ல அவர் கண்களில் சில மகிழ்ச்சிப் பொறிகள் பறந்ததை என்னால் காண முடிந்தது. அவருக்கு நன்றி கூறி விட்டு அவரை அவரது நண்பர்களோடு அளவளாவ விட்டுவிட்டு நான் நமது மன்றத்தினரோடு சேர்ந்து கொண்டேன்.

சிலப்பதிகாரத்தில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் ஒன்று உண்டென்றால் அது கண்ணகி. மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் உண்டென்றால் அது பாண்டியன் நெடுஞ்செழியன். அவன் மனைவி கோப்பெருந்தேவியையும் சொல்லலாம். கண்ணகி வெறும் அடங்கிக் கிடந்த மனைவி பாத்திரமல்ல என்று வாதங்களோடு நிரூபித்தவர் பேராசிரியர் ராஜகோபாலன் அவர்கள். அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியாரும் கூட கவனியாது விட்ட விஷயங்கள் இவை. நான் படித்த வேறெந்தச் சிலப்பதிகார ஆய்வு நூலிலும் இதைச் சொல்லவில்லை. நேற்று எழுதியவர்கள் முதற்கொண்டு. ஆகையால்தான் நான் சிலப்பதிகாரத்தை முடிந்த வரையில் ஆழமாகப் படித்து வருகிறேன்.

இப்பொழுது சொல்லுங்கள். சேப்பாக்கத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் விட்ட குறை தொட்ட குறை உண்டுதானே?

அன்புடன்,
கோ.இராகவன்

25 comments:

said...

எங்இருந்து சார் இத்தனை விஷயம் புடிக்குறீங்க?

இன்றைய தமிழிலகியங்களையே படிக்க முடியவில்லை என்னால்... சிலப்பதிகாரம் கந்த புராணம் என்று கலக்குகிறீர்கள்.

Nice to have read you...continue.

said...

ராகவன் சிலப்பதிகாரம் கதைத் தெரியும்.. அதைச் சார்ந்த வரலாற்று புதினங்கள் படிக்க ஆசை... உங்களுக்கு எதேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்....


சேப்பாக்கத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் விட்ட குறை தொட்டக் குறை.... ம்ம் என்னவோ சொல்ல வர்றீங்க என்னன்னு நம்ம அறிவுக்கு டக்குன்னு எட்ட மாட்டேங்குதுண்ணா:)

said...

//சேப்பாக்கத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் விட்ட குறை தொட்ட குறை உண்டுதானே//

நிச்சயம் உண்டு என்பதை இந்த பதிவின் விளக்கங்கள் வாயிலாக அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ராகவன்.

----------
//மசால்வடைகளையும் முட்டைக்கோஸ் வடைகளையும்... உருளை போண்டாவையும்//

இந்த ஐட்டங்களுக்கும் வாயு பகவானுக்கும் தொடர்பு உண்டா? இல்லியா?

:-)))

said...

// எங்இருந்து சார் இத்தனை விஷயம் புடிக்குறீங்க? //

நீங்க வேற கிண்டல் பண்ணாதீங்க சிறில்.

அன்னைக்கு ஒரு நாள் டீவில மெல்லிசை மன்னர் பேசிக்கிட்டு இருந்தாரு. பாட்டுக்கு எப்படி டியூன் போடுறீங்கன்னு ஒரு அறிவு ஜீவித்தனமான கேள்விய அவருகிட்ட கேட்டாங்க. அவரு சொன்னாரு. பாட்டுக்குள்ளையே மெட்டு ஒளிஞ்சிருக்கு. அதக் கண்டுபிடிச்சா போதும். வேற ஒன்னும் செய்ய வேண்டாமுன்னு.

அது மாதிரி ஒவ்வொரு நிகழ்ச்சீலயும் நிறைய விஷயம் இருக்கு. அத எப்படி சொல்றதுன்னு தெரிஞ்சா போதும். நம்மதான் அறிவாளி. ஹா ஹா ஹா

// இன்றைய தமிழிலகியங்களையே படிக்க முடியவில்லை என்னால்... சிலப்பதிகாரம் கந்த புராணம் என்று கலக்குகிறீர்கள். //

என்னாலும் தொடர்ந்து படிக்க முடியவில்லை. நேரம் ஒரு காரணம். அத்தோடு நாம் விரும்பிப் படிக்கும் ஆங்கிலப் புத்தகங்கள். வேலை. நண்பர்கள்....நேரம் கிடைக்கிறப்போ ரெண்டு வரி படிச்சுக்கிறது. அவ்வளவுதான் முடியும் சிறில். நீங்கள் தொடங்குங்க. அப்புறம் வெளுத்து வாங்குவீங்க.

// Nice to have read you...continue. //

நன்றி சிறில். அடிக்கடி வாங்க.

said...

//என்னாலும் தொடர்ந்து படிக்க முடியவில்லை. நேரம் ஒரு காரணம். அத்தோடு நாம் விரும்பிப் படிக்கும் ஆங்கிலப் புத்தகங்கள். வேலை. நண்பர்கள்....நேரம் கிடைக்கிறப்போ ரெண்டு வரி படிச்சுக்கிறது.//

இப்போது தமிழ்மணமும் சேர்ந்து கொண்டது.

இந்த சூழலில் உங்களைப் போன்றவர்கள் சிலப்பதிகாரம் போன்ற தொன்மை இலக்கியங்களை உங்கள் பதிவில் விளக்கலாம். எல்லோரும் நிச்சயமாக சிறிது தமிழ் இலக்கியங்களை தெரிந்து கொள்வோம்.

said...

என்ன ராகவன்,தலைப்பு வைக்குறதுல பெரிய இலக்கியவாதி ரேஞ்சுக்கு போயிட்டீங்களே! பலே! பலே!!

said...

// ராகவன் சிலப்பதிகாரம் கதைத் தெரியும்.. அதைச் சார்ந்த வரலாற்று புதினங்கள் படிக்க ஆசை... உங்களுக்கு எதேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்.... //

தேவ். சிலப்பதிகாரத்தை நிறைய பேர் தொட்டாண்டிருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. கதை வடிவில் மிகக் குறைவே என்று நினைக்கிறேன். ஆனால் பல உரைநூல்கள் உள்ளன. எக்கச்சக்கமாக. ஆய்வு நூல்களும் உள்ளன. சென்னை ஹிக்கின்பாதம்சிலோ, வடக்கு உஸ்மான் ரோடிலுள்ள நியூ புக் ஹவுசிலோ (முருகன் இட்லி கடையிலிருந்து பனகல் பார்க்கிற்கு போகும் வழியில் அதே பக்கத்தில் இருக்கிறது) நிறைய கிடைக்கும்.

// சேப்பாக்கத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் விட்ட குறை தொட்டக் குறை.... ம்ம் என்னவோ சொல்ல வர்றீங்க என்னன்னு நம்ம அறிவுக்கு டக்குன்னு எட்ட மாட்டேங்குதுண்ணா:) //

நீங்க ரொம்ப ஆழமா யோசிக்கிறீங்க தேவ். இந்தப் பதிவும் அதுல நடந்த நிகழ்வுந்தான் அந்த விட்ட குறை...தொட்ட குறை.

said...

////சேப்பாக்கத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் விட்ட குறை தொட்ட குறை உண்டுதானே//

நிச்சயம் உண்டு என்பதை இந்த பதிவின் விளக்கங்கள் வாயிலாக அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ராகவன். //

ஆகா! ஞானபீடம் நீங்க கொஞ்சம் முன்னாடி இந்தப் பின்னூட்டத்தப் போட்டிருந்தீங்கன்னா...தேவுக்கு நான் விளக்கம் சொல்லீருக்கவே வேண்டாம்.

----------
////மசால்வடைகளையும் முட்டைக்கோஸ் வடைகளையும்... உருளை போண்டாவையும்//

இந்த ஐட்டங்களுக்கும் வாயு பகவானுக்கும் தொடர்பு உண்டா? இல்லியா? :-))) //

கண்டிப்பாக உண்டு. ஆனால் அக்கினி பகவான் கனஜோராக வேலை பார்ப்பதால் வாயு பகவான் அமைதி காக்க வேண்டியதாயிற்று. :-)

said...

// இப்போது தமிழ்மணமும் சேர்ந்து கொண்டது. //

உண்மைதான் மணியன். தமிழ்மணமும் வலைப்பூக்களும் நிறைய நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.

// இந்த சூழலில் உங்களைப் போன்றவர்கள் சிலப்பதிகாரம் போன்ற தொன்மை இலக்கியங்களை உங்கள் பதிவில் விளக்கலாம். எல்லோரும் நிச்சயமாக சிறிது தமிழ் இலக்கியங்களை தெரிந்து கொள்வோம். //

ஏற்கனவே சில இலக்கிய நூல்களுக்கு விளக்கம் சொல்வதற்கே இனியது கேட்கின்னு ஒரு வலைப்பு தொடங்கீருக்கேன். http://iniyathu.blogspot.com

அதுல ஏற்கனவே கொஞ்சம் போய்க்கிட்டு இருக்கு. அதெல்லாம் மொதல்ல முடியனும். அதுவுமில்லாம சிலப்பதிகாரத்தை நான் இன்னமும் முழுசாப் படிக்கலை. வேறு யாரேனும்....ஏன் நீங்களே ஏன் தொடங்கக் கூடாது...முயற்சி திருவினையாக்கும் தானே!

said...

//ஏன் நீங்களே ஏன் தொடங்கக் கூடாது.//
ஆஹா, போர்ட் மீட்டிங் ரேஞ்ஜ்ஜுக்கு போய்ட்டீங்களே, கருத்து சொன்னவரையே காரியமாற்றச் சொல்லி :))

said...

// என்ன ராகவன்,தலைப்பு வைக்குறதுல பெரிய இலக்கியவாதி ரேஞ்சுக்கு போயிட்டீங்களே! பலே! பலே!! //

என்ன ஜோ...கிண்டல் பண்ணுதீகளா! பேரு மட்டுந்தேன் எலக்கியவாதி கெணக்கா இருக்காக்கும்! நல்ல பாத்துட்டு சொல்லுங்க? :-)

said...

இராகவன், ஏற்கனவே இந்த விட்ட குறை தொட்ட குறை நிகழ்வைப் பற்றி என்னிடம் சொல்லிவிட்டீர்கள் என்பதால் அதனைப் பற்றி எதுவும் பின்னூட்டம் இட முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். (இப்படிப் பின்னூட்டம் போடுவதும் அதிக பின்னூட்டம் பெறுவதற்கான வழிகள்ன்னு சேர்த்துக்கணும்) :-)

said...

//என்ன ராகவன்,தலைப்பு வைக்குறதுல பெரிய இலக்கியவாதி ரேஞ்சுக்கு போயிட்டீங்களே! பலே! பலே!!

//

ஜோ, எல்லாம் நம்ம ரிஜன்ட் பதிவைப் படித்ததால வந்த வினை. :-) கோவிச்சுக்காதீங்க இராகவன். நீங்க எப்பவுமே இந்த மாதிரி தலைப்புகள் வைக்கிறவர் தானே. தென்னவன் தீதிலன், பிள்ளையாரும் பிள்ளை ஆறும் இப்படியே சொல்லிகிட்டே போகலாம்.... :-)

said...

//இந்த சூழலில் உங்களைப் போன்றவர்கள் சிலப்பதிகாரம் போன்ற தொன்மை இலக்கியங்களை உங்கள் பதிவில் விளக்கலாம். எல்லோரும் நிச்சயமாக சிறிது தமிழ் இலக்கியங்களை தெரிந்து கொள்வோம்.
//
நல்லா சொன்னீங்க மணியன். நானும் வழிமொழிகிறேன். இனியவைகளில் சிலப்பதிகாரமும் அடங்கும் என்பதால் கந்தர் அனுபூதிக்கு நடுநடுவே சிலப்பதிகாரமும் பேசலாமே?!!!

said...

தேர்தல் நேரத்திலே இப்படி பேர் வைச்சு கலக்கறீங்களே. நீங்க சொன்னதை படித்த பிந்தான் ராகவன் ரூட் மாறலைன்னு புரிஞ்சுது. அப்பாடி.

said...

////ஏன் நீங்களே ஏன் தொடங்கக் கூடாது.//
ஆஹா, போர்ட் மீட்டிங் ரேஞ்ஜ்ஜுக்கு போய்ட்டீங்களே, கருத்து சொன்னவரையே காரியமாற்றச் சொல்லி :)) //

மணியன், இப்படி சிரிச்சு நழுவலாமா? ஒத்துக்குங்க. உங்களால் முடியும் மணியன். எப்போ தொடங்குறீங்க? சிலப்பதிகாரம் pdf அனுப்பி வைக்கட்டுமா? உங்க மயில் ஐடியச் சொல்லுங்க.

said...

// (இப்படிப் பின்னூட்டம் போடுவதும் அதிக பின்னூட்டம் பெறுவதற்கான வழிகள்ன்னு சேர்த்துக்கணும்) :-) //

அத மொதல்ல பண்ணுங்க. கண்டிப்பா மக்களுக்குப் பயனுள்ளதா இருக்கும். இப்பயே பாருங்க...இதுனாலயே ரெண்டு பின்னூட்டம் ஆயிருச்சு.

// கோவிச்சுக்காதீங்க இராகவன். நீங்க எப்பவுமே இந்த மாதிரி தலைப்புகள் வைக்கிறவர் தானே. தென்னவன் தீதிலன், பிள்ளையாரும் பிள்ளை ஆறும் இப்படியே சொல்லிகிட்டே போகலாம்.... :-) //

கோவிச்சுக்க என்ன இருக்கு குமரன். பெரியவங்க சொல்றீங்க. கேட்டுக்கிறேன். அவ்வளவுதான்.

said...

// நல்லா சொன்னீங்க மணியன். நானும் வழிமொழிகிறேன். இனியவைகளில் சிலப்பதிகாரமும் அடங்கும் என்பதால் கந்தர் அனுபூதிக்கு நடுநடுவே சிலப்பதிகாரமும் பேசலாமே?!!! //

இல்லை. இல்லை. நிச்சயமாக இல்லை. கண்டிப்பாக மாட்டேன். முடியவே முடியாது. இதை ஒப்புக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாது.

said...

பாலாஸ்ரீ என்பவர் கலைஞரின் சிலப்பதிகாரத்தை ஆகஸ்ட்/செப் மாதங்களில் தொடங்கினார். பிறகு தொடரவில்லை :(

//இப்படி சிரிச்சு நழுவலாமா? ஒத்துக்குங்க. உங்களால் முடியும் மணியன். எப்போ தொடங்குறீங்க? //

நான் எப்போ படித்து,புரிந்து எழுதுவது? நீங்கள்தான் தேசிகன் பதிவில் கூட சிலப்பதிகாரத்தை ஈடுபாட்டுடன் படித்துவருவதாய் சொல்லியிருந்தீர்கள்.உங்களுக்கு சமயம் வாய்க்கும்வரை காத்திருக்கிறோம்.

said...

// தேர்தல் நேரத்திலே இப்படி பேர் வைச்சு கலக்கறீங்களே. நீங்க சொன்னதை படித்த பிந்தான் ராகவன் ரூட் மாறலைன்னு புரிஞ்சுது. அப்பாடி. //

கொத்தனார் பெரிய எத்தனார்-னு நிரூபிச்சிட்டீங்க. :-)) தலைப்புக்குள்ள இருந்த இன்னொரு விஷயத்தையும் வெளிய கொண்டு வந்துட்டீங்க. பெரிய ஆளுங்க நீங்க.

said...

அன்பின் ராகவன்,

நீங்கள் அனுப்பிய பின்னூட்டம் ஏனோ பிளாக்கரில் பதிவாகவில்லை.We are unable to complete your request என்றே பிளாக்கரில் வருகிறது.அனானி பின்னூட்டம் இட்டு சோதனை செய்து பார்த்ததில் சரியாக வருகிறது.ஏன் இந்த பிரச்சனை என தெரியவில்லை.

உங்கள் பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்து இட்டிருக்கிறேன்.பிரச்சனை சரியானதும் அதை மீண்டும் இடுகிறேன்.சிரமத்துக்கு மன்னிக்கவும்

அன்புடன்
செல்வன்

http://holyox.blogspot.com/2006/02/blog-post_02.html

said...

// பாலாஸ்ரீ என்பவர் கலைஞரின் சிலப்பதிகாரத்தை ஆகஸ்ட்/செப் மாதங்களில் தொடங்கினார். பிறகு தொடரவில்லை :( //

உண்மைதான் மணியன். நானும் அதைப் படித்தேன். கலைஞர் மிகவும் மேலோட்டமாக கையாண்டிருக்கிறார். நானென்றில்லை....தமிழறிஞர்களைக் கேட்டாலும் அப்படித்தான் சொல்வார்கள். பூம்புகார் திரைப்படமாகட்டும் இந்தத் தொடராகட்டும்.....கொஞ்சம் உஷா டைப். :-) (உஷா உங்களைச் சொல்லலை. உங்க வலைப்பூ பெயரைச் சொன்னேன்.)

////இப்படி சிரிச்சு நழுவலாமா? ஒத்துக்குங்க. உங்களால் முடியும் மணியன். எப்போ தொடங்குறீங்க? //
நான் எப்போ படித்து,புரிந்து எழுதுவது? நீங்கள்தான் தேசிகன் பதிவில் கூட சிலப்பதிகாரத்தை ஈடுபாட்டுடன் படித்துவருவதாய் சொல்லியிருந்தீர்கள்.உங்களுக்கு சமயம் வாய்க்கும்வரை காத்திருக்கிறோம். //

சரி. கழுவுற மீன்லயும் நழுவுறீங்க. :-)

said...

// உங்கள் பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்து இட்டிருக்கிறேன்.பிரச்சனை சரியானதும் அதை மீண்டும் இடுகிறேன்.சிரமத்துக்கு மன்னிக்கவும்

அன்புடன்
செல்வன் //

இருக்கட்டும் செல்வன். பின்னூட்டத்தில் ஏதோ பிரச்சனை என்று தெரிகிறது. சரியானதும் போடுங்கள்.

said...

//நேற்று எழுதியவர்கள் முதற்கொண்டு. ஆகையால்தான் நான் சிலப்பதிகாரத்தை முடிந்த வரையில் ஆழமாகப் படித்து வருகிறேன்//.

நன்றி., தம்பி.

said...

////நேற்று எழுதியவர்கள் முதற்கொண்டு. ஆகையால்தான் நான் சிலப்பதிகாரத்தை முடிந்த வரையில் ஆழமாகப் படித்து வருகிறேன்//.

நன்றி., தம்பி. //

அக்கா, இந்த நன்றிக்கு என்ன பொருள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே. ஒருவேளை இதில் ஏதும் மறைபொருள் இருக்கிறதா? இந்த மரமண்டைக்கு விளங்கவில்லையே.