Saturday, December 31, 2005

2006லாவது இலங்கைக்குப் போவோம்

வணக்கம் நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். 2006 உலக மக்கள் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

புத்தாண்டில் ஒரு புதிய பதிவு போட எண்ணியிருந்த வேளையில் கிடைத்ததுதான் இந்தத் தலைப்பு. இந்தத் தலைப்பில் எழுத வேண்டுமென்று இன்றைக்குத் தோன்றவில்லை. நான்கைந்து ஆண்டுகளாகவே உள்ளுக்குள் ஊறிக் கொண்டிருக்கும் ஆசையைத்தான் இன்று எப்படியாவது எழுதியே தீருவது என்று முடிவு கட்டி உட்கார்ந்து விட்டேன்.

தலைப்பு என்ன? 2006லாவது இலங்கைக்குப் போவோம். இந்த ஆண்டாவது நாம் இலங்கைக்குப் போக வேண்டிய ஒரு கட்டாயத்தை எனது மனம் உணர்த்தியதை உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன்.

தலைப்பிற்குப் போவதற்கு முன்னர் கொஞ்சம் பாகிஸ்தானைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. பாகிஸ்தானைப் பற்றி நான் தவறாகப் பேசப் போகிறேன் என்று யாரும் காத்திருக்க வேண்டாம். அது என்னுடைய தலைப்பிற்குப் பொருந்தாது.

பாகிஸ்தானுடன் நல்லுறவு என்று இந்தியா எவ்வளவு மெனக்கெடுகின்றது. நாளொரு ஊரும் பொழுதொரு இடமுமாக குண்டுகள் வெடித்தாலும் இந்தியர்கள் மாண்டாலும் பாகிஸ்தானுடன் எப்பாடு பட்டாவது நல்லுறவு வேண்டும் என்று எவ்வளவு முயற்சிகளை எடுக்கின்றது இந்திய அரசாங்கம். பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நிலைப்பாடுகளையும் மீறி எடுக்கப்படுகின்றன இந்த முயற்சிகள். பாதி காஷ்மீர் போய் விட்டது. நிறைய அகதிகள் காஷ்மீரிலிருந்து வந்தாகி விட்டது. இன்னும் பிரச்சனைகள். கார்கில் போர். பாராளுமன்றக் கட்டிடத் தாக்குதல். கோயிலில் தாக்குதல். அங்கு இங்கு என்று இன்று பெங்களூரிலும் விஞ்ஞானிகளின் மீது தாக்குதல். மென்பொருள் நிறுவனங்களின் மீது குறிவைப்பு என்று பல தகவல்கள் உள்ளன. இவைகளுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளின் பெயர்களும் அவைகளோடு சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களும் படங்களும் கூட பத்திரிகைகளில் வருகின்றன.

இவையனைத்தையும் மீறி இந்திய அரசாங்கம் நல்லுறவுக்கான முயற்சிகளையே மேற்கொள்கின்றது. பஸ் விடுகின்றார்கள். திரைப்படக் கலைஞர்கள் போகின்றார்கள். கிரிக்கெட் வீரர்களின் பயணம். போர்க்கைதிகள் விடுதலை. இன்னும் பல. இவைகளை நம்மில் பலரும் ஆதரித்து பாகிஸ்தானுடம் நல்லுறவு கண்டிப்பாக வேண்டும் என்று விரும்புகின்றார்கள். தமிழர்களிலும் அப்படி விரும்புகின்றவர்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். சில அரசியல் தலைவர்களின் பிறந்த ஊர்களே இன்றைய பாகிஸ்தானில்தான். பாதி பஞ்சாப் அங்குதான் இருக்கின்றது. ஆக பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.

இதையெல்லாம் சரி என்றோ தவறு என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மீறி நம்மிடம் வேறொரு காரணம் இருக்கின்றது. போக வேண்டிய வேறொரு இடம் இருக்கின்றது. அது ஏன் யாருக்கும் நினைவிற்கு வரவில்லை? தமிழ் மொழியைத்தான் காரணமென்று நான் குறிப்பிடுகின்றேன். இலங்கைத் தீவைத்தான் போக வேண்டிய இடமென்று குறிப்பிடுகின்றேன்.

இலங்கையில் தமிழருக்கு ஆதரவு அளிப்பது என்பது ஏன் நமக்கு நெருடலாக இருக்கின்றது என்று தெரியவில்லை. ராஜீவ் கொலையைக் காரணம் சொல்லலாம். அது தவறுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட குற்றங்களைப் பாருங்கள். பாராளுமன்றத்திலேயே தாக்குதல் நடந்திருக்கின்றது. இதெற்கெல்லாம் இடம் கொடுக்கின்றவர்கள் யாரென்று தெரிந்தும் நாம் பாகிஸ்தான் போகவில்லையா? போக விரும்பவில்லையா?

அப்படியிருக்க இலங்கையின் மீது மட்டும் என்ன பாரபட்சம்? அங்கு அடிபடுகின்றவன் தமிழன் என்பதலா? இலங்கைப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர இந்தியா எடுக்க வேண்டிய முயற்சிகளை மத்திய அரசு நிச்சயமாக இப்பொழுது எடுக்காது என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் மத்திய அரசிற்குப் பாகிஸ்தானைத் தெரிந்த அளவிற்கு ஈழத்தைத் தெரியாது. மேலும் அங்குள்ள தமிழன் தீவிரவாதியாத் தெரிகின்றான். அவன் போராடவில்லையென்றால் மாண்டு போவான் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரிகின்றது! மத்திய அரசுக்கு நேரடியாக இன்னொரு நாட்டு அரசாங்கத்தை எதிர்ப்பது தர்மசங்கடமாகவே இருக்கும் என்றே வைத்துக் கொள்வோம். அறிவுறுத்தலாம் அல்லவா? அதுவும் செய்ய முடியாதா? ஐயோ! அங்கே நமது சகோதரன் உயிருக்கும் மானத்திற்கும் போராடிக் கொண்டிருக்கின்றானே!

இந்தியாவிற்கு எத்தனையோ நட்டங்களை உண்டாக்கிய காஷ்மீருக்குத் தனி அந்தஸ்தும் அதற்காகப் போராடும் பாகிஸ்தானுக்கு நட்புறவும் கொடுத்து வருகின்ற மத்திய அரசாங்கத்திற்குப் புரியும் வகையில் தமிழனின் தேவையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை யாருக்கு இருக்கின்றது? நிச்சயமாகத் தமிழக அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு அதைச் செய்வதில் உள்ள தயக்கமும் வெறுப்பும் தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது.

அவ்வப்பொழுது வைகோ பேசினால் அவருக்கும் ஐநூறு நாட்கள் சிறைத்தண்டனை. வைகோவின் கருத்துகள் மூடத்தனமானது என்று கெக்கெலி. தன் வாயாலேயே தனக்குக் கிடைக்கும் மதிப்பைக் குறைத்துக் கொள்கின்றார் என்று குத்தல் பேச்சுகள்.

இந்தத் தமிழக அரசியல் கட்சிகளின் தயக்கமும் வெறுப்பும் தமிழக மக்களின் மனப் போக்கையே பிரதிபலிக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை. தமிழகத் தமிழனுக்கே என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியவில்லை.

நான் எந்த ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் எதிராகப் பேசவில்லை. பேச விரும்பவுமில்லை. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் என்றுதான் கேட்கின்றேன். இந்திய அரசாங்கத்திடமும் தமிழக அரசியல்வாதிகளிடமும் தமிழர்களிடமும் கேட்கின்றேன். உங்கள் கவனத்தைக் கொஞ்சம் தெற்கே திருப்புங்கள். நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

என்ன செய்தால் அங்கு பிரச்சனை தீரும் என்று சொல்ல நான் அறிவாளியோ அரசியல் நிபுணனோ இல்லை. ஆனால் என் தமிழர் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற ஆசை மட்டுமே என்னிடம் உண்டு.

நாமெல்லாம் அந்த வகையில் சிந்திக்கத் துவங்கினால் அரசியல்வாதிகளும் சிந்திப்பார்கள் என்று நம்புவோம். அவர்களால் கொஞ்சமாவது உந்தப்பட்டு இந்திய அரசாங்கமும் சிந்திக்கும் என்று விரும்புவோம். நல்ல வழி புலப்படும் என்று நம்புவோம். 2006லாவது இலங்கைக்குப் போவோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

35 comments:

said...

கொஞ்சம் நிதானமா சிந்தித்துப் பார்க்க/படிக்க வேண்டிய பதிவு ராகவன்.

சாதாரணனுக்கு இப்ப இந்தப் போர் அலுத்துப் போச்சுன்னு பரவலா ஒரு பேச்சு இருக்கு.

கொள்கைப் பிடிப்புன்னு சொல்லிக்கிட்டு ஒரு இனத்தையே அழிக்கப் பாக்கரது நல்லாவா இருக்கு?

மொதல்லே உயிர் இருந்தாத்தானே மொழி? ஆளே இல்லாமப் போனா...?

said...

துளசி அக்கா சொன்ன மாதிரி நிதானமா படித்துச் சிந்திக்க வேண்டிய விஷயம் இராகவன். நீங்கள் சொல்லும் கருத்து ஏற்புடையதாகத் தான் இருக்கிறது. ஆனால் இந்தியத் தலையீடு மீண்டும் அமைதிப்படையாகச் சென்று செய்த தவறுகளாக ஆகிவிடக்கூடாது.

said...

I pray GOD peace should return to srilanka permanently and once for all.

said...

//மொதல்லே உயிர் இருந்தாத்தானே மொழி? ஆளே இல்லாமப் போனா...?//
மொழி அழிந்து உயிர் இருந்து என்ன? இரண்டும் தேவை தானே. துளசி அவர்கள் பட்டும் படாமலும் ஏதோ சொல்ல விழைகிறார். என்ன சொல்ல வருகிறீர்கள்?

said...

உணர்வுபூர்வமான பதிவு இராகவன்.
இதை கூட நக்கலடித்து இன்னொரு பதிவு போட ஒரு கூட்டம் இருக்கிறது.
2006 -ல் கண்டிப்பாக செல்லலாம் இலங்கைக்கு! நம்பிக்கை தானே வாழ்க்கை. நாமும் நம்புவோம்!

said...

ஏதோ எனக்குத்தெரிந்தது இலங்கையில் பிரபாகரன் ஆட்சிப்பொருப்பை ஏற்க மாட்டார் அந்த அளவிற்கு உலஅரசியலைத் தெரியாதவர் இல்லை இத்தாலி முசோலினி புறச்சியாளராக இருக்கும் போது இருந்த மதிப்பும் மரியாதையும் ஆட்சியாளராக வந்தபின் இல்லை மக்களே அவரை கொண்று விட்டனர் புறச்சியாளர் என்ற பாதுகாப்பிலே இருந்து விடலாம் ஆட்சியாளராக வந்து விட்டால் அவருக்கு பாது காப்பு குறைவுதானே சற்று சிந்தித்துப் பாருங்கள். ஏதோ எனக்குத் தோன்றியது.
பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த விடாமல் கலாட்டா செய்து கொண்டிருந்தார் முசோலினி. அதுமட்டுமல்ல, ஊர் ஊராகச் சென்று பொதுக் கூட்டங்கள் நடத்தி, உணர்ச்சி ததும்பப்பேசி, ஆளும் கட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டார். ரவுடிகள் சாம்ராஜ்யம் மக்கள் தன் பேச்சில் மயங்கிக்கிடக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட முசோலினி, ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் நடத்தி, அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும்படி தன் கட்சியினருக்குக் கட்டளையிட்டார். அதன்படி அவர் கட்சியினர் ரவுடிகளையும், பொது மக்களையும் அழைத்துக்கொண்டு, பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவலகங்களைத் தாக்கினார்கள். ஊழியர்களை விரட்டி அடித்துவிட்டு, அலுவலகங்களையும், கஜானாக்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.

1922 அக்டோபரில், முசோலினியின் "கருஞ்சட்டைப்படை" இத்தாலியின் தலைநகரைப் பிடிக்கத் திரண்டு சென்றது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், அமைச்சரவையை ராஜினாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டார். மந்திரிசபை பதவி விலகியதும், ஆட்சிப்பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தார். அடக்கு முறை ஆட்சிக்கு வந்த முசோலினி, "இத்தாலியின் முன்னேற்றத்திற்காக, நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்துவிடுவேன்" என்று அறிவித்தார்.
முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. மக்கள் புகழ்ந்தனர். பிறகு போரின் போக்கு மாறியது. மக்களின் வெறுப்புக்கு உள்ளாயினர். போர் முனையில் இத்தாலி ராணுவம் தோல்வியை சந்தித்ததால்முசோலினியை 1943 ஜுலை 9-ந்தேதி "பாசிஸ்ட்" கட்சி மேலிடம் டிஸ்மிஸ் செய்தது. அவரையும், அவர் குடும்பத்தினரையும், ஆதரவாளர்களையும் கைது செய்து, வீட்டுக் காவலில் சிறை வைத்தது.
கீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்க வைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதை உணர்நது கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைச்சுடுங்கள் என்றாள். இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டு சென்றார்கள். அங்கு விளக்கு கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். அன்று மாலை உடல்கள் இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.

said...

அருமையான ஒரு பதிவு வாழ்த்துக்கள்.

said...

நிச்சயம் போக வேண்டும் ராகவன்.

ஆயுதப் பயிற்சி, பொருளாதார உதவிகள் என பல வகையில் ஈழ போராட்டத்திற்கு உதவியதுதான் இந்தியா அரசாங்கம். அதில்
குறீப்பிடத் தகுந்தவர்கள் இந்திரா காந்தி மற்றும் எம்.ஜி.ஆர். ஈழத்தின் மீதான நமது பார்வையில் மாற்றம் ஏற்பட்டது ராஜீவ் காந்தி
காலத்தில்தான். அப்போது அவருக்கு ஆலோசனை சொன்னவர்கள், அதிகார மையத்தில் இருந்தவர்கள் ஈழப்போராட்டத்தின்
உண்மை நிலைகளை எடுத்து கூறவில்லை. சரியான வகையில் வழி நடத்திசெல்லவில்லை. அதற்கான காரணங்கள் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி போல.

அதே போல நமது அமைதிப்படை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வுகள் என எல்லாமே இந்திய ஈழ உறவினை
வேறு திசைக்கு எடுத்து சென்று விட்டது.

ராசீவ் காந்தியின் மரணம் என்பது மிகக்கொடூரமானது, இந்தியன் ஒவ்வொருவராலும் கண்டிக்கப்பட வேண்டியது. அந்த ஒரு நிகழ்விற்காக
ஒரு இனத்தின் சுதந்திரத்தை எதிர்ப்பது என்பது எந்த வகையிலும் சரியானதாகாது.

மறப்பதும், மன்னிப்பதும் மனிதத் தன்மை.

இல்லாவிட்டால்

நம் தேசப்பிதாவை கொன்றவர்களுக்கே நாம் ஆட்சிப் பரிவட்டம் சூட்டியிருப்போமா\

காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ். இன்றும் தடை செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்தபடுவதில்லையே ஏன்?

இந்துத்துவ பத்திரிக்கைகளின் போலி புரட்டுகள் நீண்ட நாட்களுக்கினி எடுபடாது.

ஈழத்திற்கும் தமிழகத்திற்குமான உறவு என்பது தொப்புள் கொடி உறவு. எந்தக் காலத்திலும் அறுந்து விடாது.
அறுத்து விடத் துடிப்பவர் ஒரு நாளும் வெற்றியடையப்போவதில்லை. உறவுக்குள் எப்போது பாசத்தை காட்ட வேண்டுமோ அது தன்னாலே வரும்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது முதுமொழி.

மதத்தீவிரவாதங்களை கண்டிக்க முன்னேர் உழவர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் இந்த கோமான்கள் புத்தத்தின் பெயரால் இலங்கையில் நடைபெறும்
இனத் தீவிரவாதத்தை கண்டிக்காது, உரிமைக்காக போராடும் தமிழனின் போராட்டம் தீவிரவாதமாக்க முனையும்
அதிபுத்திக் கூர்மை பெற்ற வழியும் மூளை வீங்கிகளின் உண்மை முகங்களை அனைவரும் உணர்தல் வேண்டும்

எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம்.

அப்புறம் நான் என் தேசப்பற்றை சீதையைப் போல, அக்கினியில் குளித்தோ இல்லை உண்மை அறியும் கருவியிலோ போய் நிரூபித்துவரவேண்டும்.

ஆனால் ஈழத்தின் அவலம் குறித்தான ஆதங்கங்கள் இந்துத்துவ மாயக்கட்டுகளை தாண்டி பரவலாக வர ஆரம்பித்திருப்பது மகிழ்வைத் தருகிறது


மிக்க நன்றி ராகவன்

உலகின் வேற எந்த பகுதியிலும் நடக்காத ஒன்று

தன் தாய்மண்ணை விரும்புகிறவனை, தன் தாய்மொழியை நேசிப்பவனை தீவிரவாதி என்பது..

நான் ஈழத்தை சொல்லவில்லை

தமிழ்நாட்டைச் சொன்னேன்

said...

// சாதாரணனுக்கு இப்ப இந்தப் போர் அலுத்துப் போச்சுன்னு பரவலா ஒரு பேச்சு இருக்கு.

கொள்கைப் பிடிப்புன்னு சொல்லிக்கிட்டு ஒரு இனத்தையே அழிக்கப் பாக்கரது நல்லாவா இருக்கு? //

டீச்சர், நான் போர்தான் சரீன்னு சொல்லலை. எத்தைத் தின்னாப் பித்தம் தெளியுமுன்னு உக்காந்திருக்கேன். எத்தைத் திங்கனுமுன்னு சொல்ல வேண்டிய வைத்தியருங்க கிட்ட வேண்டி.

// மொதல்லே உயிர் இருந்தாத்தானே மொழி? ஆளே இல்லாமப் போனா...? //
சரியாப் புரியலை டீச்சர்.

said...

// துளசி அக்கா சொன்ன மாதிரி நிதானமா படித்துச் சிந்திக்க வேண்டிய விஷயம் இராகவன். நீங்கள் சொல்லும் கருத்து ஏற்புடையதாகத் தான் இருக்கிறது. ஆனால் இந்தியத் தலையீடு மீண்டும் அமைதிப்படையாகச் சென்று செய்த தவறுகளாக ஆகிவிடக்கூடாது. //

இருக்கலாம் குமரன். சிந்தித்துச் செயல் பட வேண்டிய விஷயம்தான். ஆனால் சிந்திக்கும் எண்ணமே இருப்பது போலத் தெரியவில்லை. நமது நாட்டில் சிந்தனாவாதிகள் இல்லையா? அரசியல் அறிஞர்கள் இல்லையா? இதுதான் என்னுடைய கேள்வி.

said...

// உணர்வுபூர்வமான பதிவு இராகவன்.
இதை கூட நக்கலடித்து இன்னொரு பதிவு போட ஒரு கூட்டம் இருக்கிறது.
2006 -ல் கண்டிப்பாக செல்லலாம் இலங்கைக்கு! நம்பிக்கை தானே வாழ்க்கை. நாமும் நம்புவோம்! //

நன்றி பொட்டீகடை.

said...

// Mr.Ragavan how long you live in INDIA and How strong you know about Indo-Pak and Indo-Lanka
problems? please dont talk like an uneducated or blind follwer of a political party ...I am not harsh may be my point of view is different read this carefull try to understand also this is my first writting in my life so you can't find this article in a proffesional way...Thanks //

ஐயா. நான் இந்தியத் தமிழன். தமிழன் என்ற பெருமையும் எனக்குண்டு. இந்தியன் என்ற பெருமையும் எனக்குண்டு.

பாகிஸ்தான் பிரச்சனை பற்றியோ இலங்கைப் பிரச்சனை பற்றியோ எனக்கு எதுவும் தெரியாதென்றே வைத்துக் கொள்வோம். உண்மையும் அதுவாகக் கூட இருக்கலாம்.

நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவனுமல்ல. எந்த அரசியல்வாதிக்கும் கொடி பிடிக்கின்றவன் அல்ல. இலங்கைப் பிரச்சனை பற்றிப் பேசுகையில் வைகோவின் பெயரை விட முடியாது என்பதே உண்மை என்று தோன்றுகின்றது. ஆகையால்தான் பயன்படுத்தினேன். அதை விடுத்து நீங்கள் என்னை ஒரு கட்சிக்காரராகக் கருதினால்.....என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

said...

// what Thirumavalavan doing in Canada?who bring him to Canada
why they try to bring Gun culture in your place where you have a smooth life?
ok i put you this way....
In Tamilnadu no one has to speak in Hindi if you go to Delhi that is different even in your Bangalore the CM told recently he is going to ask for a percentage for Kanada speaking peoples for IT jobs in Bangalore job market why dont they take a Gun and fight for the rights why dont you take a gun go to Delhi ask for your Kaveri water?. //

ஐயா! நீங்கள் என்னுடைய பதிப்பைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

இலங்கையிலிருக்கும் எந்தக் குழுவிற்கும் தலைவருக்கும் நான் ஆதரவாகப் பேசவில்லை. அத்தோடு ஆயுதப் போர்தான் சரியான தீர்வு என்றும் சொல்லவில்லை. துப்பாக்கிக் கலாச்சரத்தைப் பற்றியும் நான் ஆதரித்துப் பேசவில்லை. நான் இதையெல்லாம் ஆதரிப்பதாக நினைத்துக் கொண்டு நீங்கள் என்னையும் துப்பாக்கித் தூக்கச் சொல்கின்றீர்கள். அட ஆண்டவா!

// why they try to bring Gun culture in your place where you have a smooth life?
ok i put you this way.... //
என்னுடைய பதிப்பை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதற்கு இது ஒரு சாட்சி.

ஐயா, இப்பொழுது பெங்களூரில் விஞ்ஞானிகள் கூட்டத்தில் பூவையா வீசினார்கள்? நாடாளுமன்றத்தில் பன்னீரையா தெளித்தார்கள்? இருந்தாலும் பாகிஸ்தானுடன் நல்லுறவிற்கு எவ்வளவு பாடுபடுகின்றோம். அதை நான் தவறு என்று எங்கு சொன்னேன்?

என்னுடைய ஆதங்கமெல்லாம் பாகிஸ்தான் பிரச்சனைக்கு இவ்வளவு மெனக்கெடும் நாம், இந்தப் பிரச்சனையை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை என்பதே என்னுடைய கருத்து.

அரசியல் அறிஞர்கள் நேர்மையாக சீரிய முயற்சி எடுத்தால் உண்மையிலேயே பிரச்சனை தீரும் என்று நம்புகின்றேன். அதைத்தானே நான் பதிவின் முடிவில் கேட்கின்றேன். அது எப்படி உங்களுக்குப் புரியாமல் போனது!

இலங்கைப் பிரச்சனை என்றாலே ஆயுதப் போரை ஆதரிப்பது என்றும் குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பது என்றும் உங்கள் எண்ணத்தைச் சுருக்கிக் கொண்டு என்னுடைய பதிவைப் படித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். தயவுசெய்து இந்தப் பின்னூட்டங்களைப் படித்த பிறகாவது இன்னொரு முறை என்னுடைய பதிவைப் படியுங்கள்.

said...

// Thanks Mr.Ragavan...
Be a Good Smart Indian. //

நன்றி ஐயா. நீங்கள் குறிப்பிடும் அளவிற்கு இல்லா விட்டாலும் இந்தியன் என்ற வகையில் இந்த நாட்டிற்கு என்னுடைய வேலையை ஒழுங்காகச் செய்வதன் மூலமும் ஒழுங்காக வரி செலுத்துவதன் மூலமும் செய்து கொண்டிருக்கின்றேன்.

said...

ராகவன்,

//காஷ்மீருக்குத் தனி அந்தஸ்தும் //
காஷ்மீருக்கு மட்டும் அல்ல, மேலும் சில Tribal Areas களுக்கு தனி அந்தஸ்து கொடுக்கபட்டுள்ளது என்று எங்கோ படித்த நினைவு.

//இவையனைத்தையும் மீறி இந்திய அரசாங்கம் நல்லுறவுக்கான முயற்சிகளையே மேற்கொள்கின்றது //


இந்திய அரசு பாகிஸ்தானில் சில "சுதந்திர போராட்ங்களுக்கு" மறைமுகமாக அதரவு அளித்து வருகிறது என்பது தான் உன்மை.

யோசித்து பாருங்கள், ஆப்கன-பாகிஸ்தான் எல்லையில் இருந்து எத்தனை பேர் இந்தியாவுக்கு விசா பெற இந்திய தூதரகத்துக்கு(Consulate) போகின்றனர் ?

அனால் அந்த பகுதிகளில் சில இந்திய Consulateகள் உண்டு.

பலூச்சிஸ்தான்(Baluchistan) விடுதலை அடையும் நாள் வேகு தூரத்தில் இல்லை. :-)

//இலங்கையில் தமிழருக்கு ஆதரவு அளிப்பது என்பது ஏன் நமக்கு நெருடலாக இருக்கின்றது என்று தெரியவில்லை. //

இலங்கை அரசு தனது நாட்டை இந்தியாவுக்கு எதிராக செயல்படும் எந்த அந்நிய நாட்டுக்கும் குத்தகைக்கு விட்டு விட கூடாது என்ற அச்சம் தான்!

அப்போது அமெரிக்கா, இப்போது சீனா.

சீனா இலங்கையில் சமீபத்தில் என்ன என்ன முதலிடுகள் செய்து உள்ளது என்று பார்த்தால் இந்தியாவின் நியாமான கவலை புரியும் என்பது எனது கருத்து.

//வைகோ//
இவர் ஒரு அரசியல்வாதி.

//நாம் ஏதாவது செய்ய வேண்டும்.//

தமிழர்கள் துன்பத்தில் வாடிய போது "Operation பூமாலை" என்ற பெயரில் அவர்களுக்கு நாம் அதரவாக உள்ளோம் என்று உனர்த்தியுள்ளோம்.

இப்போதைக்கு நாம் ஒன்றும் செய்யாமல் அமைதி பேச்சுவார்த்தை உருப்படியாக நடக்கிறது என்று உறுதி செய்தால் போதுமானது அல்லவா ?

said...

தனித் தமிழ் ஈழ தேசம் அமைந்த பின் தன்னை சுட்டு கொன்று விட வேண்டும் என்று பிரபாகரின் Body gaurdsக்கு ஒரு Standing Order உள்ளது என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

//INDO - PAK...is the war for Land
who's land it is and India spend
3 lak RS//

Get your facts right before you wish to debate about the Indo-Pak equations.

Otherwise I promise I shant leave a single word of yours uncontested and proven wrong.


//please dont talk like an uneducated or blind follwer of a political party ...//

I'm afraid there is no such thing called as "unbiased opinion".

So yes, many people write things that are quite similar to what political parties say.Whats the fuss about ?

Quit the "patriotic" policing buisness.

said...

>> மொதல்லே உயிர் இருந்தாத்தானே மொழி? ஆளே இல்லாமப் போனா...? >>

இந்த வாக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கு - இதற்கு முந்தைய வாக்கியம்தான் சாவி :

>> கொள்கைப் பிடிப்புன்னு சொல்லிக்கிட்டு ஒரு இனத்தையே அழிக்கப் பாக்கரது நல்லாவா இருக்கு? >>

'சேச்சி'க்கு 'குருவாயூரப்பன'் ஆசி உண்டுபோலும்! வாழ்க!

ராகவன் அவர்களே! உங்கள் பதிவுக்கு நன்றி.

வங்கதாசத்தை பாகிஸ்தானிடமிருந்து பிரித்தது ஏனாம்? "மொழியின்" பெயரால் என்பதை நம்முடைய jingoist-கள் மறைக்க முடியுமா?

கிழக்குத் தைமூர் இந்தோனேசியாவிலிருந்து பிரிந்து சென்றதை ஆதரித்தவர்களும், பாலஸ்தீனத்தின் விடுதலையை ஆதரிப்பவர்களும், "சோவியத்" பிடியிலிருந்து பிற மொழிவழி தேசிய இனங்கள் - தேசங்களாகப் பிரிந்து சென்றதையும் - ஒப்புக் கொண்ட "இந்தியச் சிந்தனாவாதிகள்" சிலர் ஈழ விடுதலை என்றால் மட்டும் 'கெக்கே பிக்கே' என்று உளறுவது நல்ல வேடிக்கை.

பாலஸ்தீனத்து விடுதலை இயக்கத் தலைவர் 'யாசர் அராஃபத்'-க்கு நோபல் பரிசு வழங்கிய உலகம் - 'மியூனிச் ஒலிம்பிக்'(1972) போட்டிகளின் போது நடந்த கொடுமையை மறக்கத்தான் வேண்டி வந்தது என்பதை இங்குள்ள சில இந்தெலெக்சுவல்களுக்கு யாராவது ந்டுத்துச் சொன்னால நன்றாக இருக்கும்.

said...

இராகவன்,

The Indian Illusion


நன்றி

said...

வணக்கம் ராகவன்,

உங்களுடைய பதிவுக்கு நன்றிகள்.

//மத்திய அரசிற்குப் பாகிஸ்தானைத் தெரிந்த அளவிற்கு ஈழத்தைத் தெரியாது. மேலும் அங்குள்ள தமிழன் தீவிரவாதியாத் தெரிகின்றான். அவன் போராடவில்லையென்றால் மாண்டு போவான் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரிகின்றது! //

இதனை இப்போதும் நமது தமிழர்கள் புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதற்கான காரணங்களை புரிந்துகொள்ளமுடியவில்லை.

மேலும் இங்கு அறிஞர் இன்னார் அவர்களின் ஒப்புவமை திகைக்கவைக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பெரும்பாலும் வருடத்துககு ஒருமுறைதான் உரையாற்றுவார். அத்தோடு சொல்லுக்கு முன் செயல் இருக்கவேண்டும் என்பதில் வாழ்ந்து காட்டிவருபவர். அவர் எப்போது எங்கே பேசிபேசி மக்களை கவர்ந்திழுத்தார் என்பதை அறிஞர் இன்னார் தான் வெளியிடவேண்டும்.
அவரை பேசவைக்கத்தான் இநத உலகமே அலைந்துதிரிவது தெரியவில்லையா?

அன்புடன்
தமிழ்வாணன்

said...

I also want to visit all tamil communities in the world including Tamil eelam to know their way of living. Nice Post. Kudos

said...

தேவையானதொரு பதிவு கோ.இராகவன்

IPKF-ற்காக ஒரு நாளுக்கு ஒரு கோடி செலவழித்ததும்,
இந்திராகாந்திமரணத்திற்குப் பின் வடக்கு பற்றி எரிந்ததும் ஜனங்களுக்கு நினைவிருக்குமா?

தனிப்பட்ட முறையில், இலங்கைக்குப் போக வேண்டும் என்னும் எனது விருப்பம் புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப இயலாது படும் வேதனையில் கானல்நீராகி விட்டது இராகவன்.

இந்த சின்ன வயதில் இத்தனை சீரிய சிந்தையா?
பெற்றோருக்கு எனது வந்தனங்களைத் தெரிவியுங்கள்.

said...

பதிவுக்கு நன்றி இராவகன்!

said...

ராகவன்

பாராட்டுகள் - தமிழர்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளுக்கு.

ஆனால், சொன்னதை சொல்லிவிட்டு, பின்னர் - அப்படி சொல்லவரவில்லை, இப்படி சொல்லவரவில்லை, துப்பாக்கியைச் சொல்லவில்லை, போராட்டங்களைச் சொல்லவில்லை என பல நழுவல்கள், மழுப்பல்கள்.

சமுத்ரா, சிவனடியார் என்ற ஒருவரே இருவராகத் தோன்றி, வாதப்பிரதிவாதங்கள் செய்வதை பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு நல்ல எண்ணங்கள் உண்டு. சிந்தனைகள் உண்டு. No doubts. ஆனால், உங்களிடம் நிலவும் கருத்துக் குழப்பங்கள், மயக்கங்கள், அச்சம் இவை உங்களைப் பேசவிடாமல் தடுக்கின்றது.

நீங்கள் ஒரு அரசியல் கட்சியின் அங்கம் என்று சொன்னால் ஏன் பதறுகிறீர்கள்? வைகோவின் மீது உங்களுக்குப் பற்று என்றால் அதென்ன அத்தனை பெரிய ஹிமாலயத் தவறா? இல்லை.

ஆனால் நீங்கள் வைகோ ஒருவர் தான் குரல்கொடுக்கிறார் என்று சொல்கிறீர்கள் பாருங்கள், அங்கே தான் தவறிழைக்கிறீர்கள். ஈழத்திற்காகப் பலரும் குரல் கொடுக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஞாபகமிருக்கிறதா? தமிழை வளர்ப்பது யார் என்ற சர்ச்சை?

நீங்கள், நெடுமாறன், சுபவீ, மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு, வைகோவை மட்டும் குறிப்பிட்டதினால் என்ன ஆயிற்று பார்த்தீர்களா? உங்களை எளிதாக ஒரு கட்சியின் உறுப்பினராக செய்து விட்டுப் போய் விட்டார்கள்.

ஆக, மேலோட்டமாக எதையும் எழுதாதீர்கள். பிரச்சினையின் ஆழம் வரை புரிந்து கொண்டு எழுதுங்கள். ஈழத்தை ஆதரிக்கும் அனைத்து சக்திகளையும் குறிப்பிடுங்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால், பிறரை ஒதுக்காதீர்கள். மற்றவர்களுக்கும் பங்கு இருக்கிறது. சரியோ, தவறோ அவர்களையும் அவர்களது பங்கையும் குறிப்பிடுங்கள்.

பிறகு, சம்பந்தமில்லா சம்பவங்களை இணைக்காதீர்கள். காஷ்மீரத்தைத் தான் சொல்கிறேன். அது ஒரு அரசியல் குளறுபடி. ஆனால், இலங்கையில் நிகழ்வது மோசடி. குளறுபடிக்கும் மோசடிக்கும் வித்தியாசம் உண்டு.

குளறுபடி, இரண்டு தரப்பிலும் நிகழ்ந்த தவறுகளினால், இரண்டு தரப்புமே அவதிப்பட்டுக் கொண்டு, இறுதியில் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று தோன்றினால் கூட எப்படி முடிப்பது என்று தெரியாமல் விழிக்கும் அவலம். இங்கு மாட்டிக் கொண்டு விழிப்பது இரண்டுமே பொறுப்புடைய - ஆனால் பொறுப்பற்றத் தனமாகச் செயல்பட்ட இரண்டு அரசுகள்.

மோசடி எனப்படுவதோ, தெரிந்தே, இவர்களை வஞ்சிக்க வேண்டும் என்று தெரிந்தே, ஒரு அரச பயங்கரவாதம், அன்பின் சொருபமாய் திகழ வேண்டிய புத்த பிக்குகளைத் தூண்டி விட்டு அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடவைப்பது.

இரண்டையும் ஒப்பிடுவது இரண்டிற்குமே ஏற்புடையதாக இருக்காது.

கடைசியாக. நான் இந்தியத் தமிழன் என்று குறிப்பிட முனைகிறீர்கள். ஏன் கஷ்டப்படுகிறீர்கள் - நான் தமிழ் இந்தியன் என்று சொல்லிப் பாருங்கள் - அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கும். தமிழையும் முன்னிறுத்திய மாதிரி ஆகிவிட்டது. இந்திய இறையாண்மையையும் பேணிக் கொண்ட மாதிரி ஆகிவிட்டது.

நல்லது.

வாதத் திறமையை வளர்த்துக் கொள்ள வாழ்த்துகள்.

அன்புடன்
நண்பன்

said...
This comment has been removed by a blog administrator.
said...

sivanadiyar sir you are ennar right
http://www.blogger.com/profile/8586592
http://www.blogger.com/profile/11949657

said...

மக்களே,

கார சாரமா விவாதம் போகுது.

நான் அரசியல்வாதி கிடையாது. ஆனால் ஒரு 'அம்மா'. இப்படிச் சொன்னால் வேற அர்த்தம் வந்துருது இல்லே?

சரி. நான் ஒரு தாய்.

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ச்சின்னவயசுப் பசங்க போராளிகளாப் போய், உயிரோடு திரும்பிவராத வீடுகளில் இருக்கும்
தாய்மார்களின் அழுகைதான்.

உயிரும் மொழியும் முக்கியம் என்றாலும், மனுஷனுக்கு உயிர் இருந்தாத்தானே அந்தமொழியைப் பேசவோ படிக்கவோ முடியும்?

அங்கே இருக்கும் அரசாங்கம் சமாதானப் பேச்சுன்னு சொல்லிக்கிட்டு இருக்கே தவிர உருப்படியா எதையும் செய்யாம பசங்களை
பலிவாங்கிக்கிட்டு இருக்கு. இப்படியே போகவிட்டா, தமிழ் இனமே அழிஞ்சிரும். அப்ப யாரு பேசுவாங்களாம்?

உயிர் தப்பி வர்ற ஜனங்க, போற இடத்துலே மொழியை வளர்க்கறது இல்லையா?

மொதல்லே குடும்பத்துக்கு, தாய்தகப்பனுக்குப் புள்ளையா இருக்கணும். மத்ததெல்லாம் அப்புறம்தான்னு என் மனசு சொல்லுது.
இங்கே உயிர்தப்பி வந்த குடும்பங்கள் சொல்லித்தான், எனக்கு விவரமே தெரியவந்துச்சு.

மனசுக்குப் பட்டதைச் சொல்லிட்டேன். திட்டறவங்க, மனசுக்குள்ளெ திட்டிக்குங்க.

said...

"அம்மா"! ( co-incidental pun happening naturally?!)

நீங்க மணிரத்தினம் படங்களை அதிகம் பார்ப்பதுண்டு போல!

மேரி அன்டாய்னெட் ரேஞ்சுக்குப் போயிட்டீங்க!

அப்பப் பேசாம காஷ்மீர விட்டு "இந்திய ராணுவம்" வெளியேறிட்டா எல்லாம் சரியாப் போயிடும்னு "நம்மளவா" National Security Advisor - எம்.கே. நாராயணனுக்கு ஒரு 'வியாசம்' எழுதி போஸ்ட் பண்ணிடுங்க! :)

said...

நண்பர்களே உங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. நாம் தயவு செய்து கருத்தை ஒட்டியே பேசுவோம்.

ஆனால் எந்த வகையிலும் தனி நபர்/மத/இன/மொழித் தாக்குதல் வேண்டாம். உங்கள் அனைவரையும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன். கருத்து வேறுபாடுகள் தனிப்பட்ட தாக்குதலாக வேண்டாம். நன்றி.

said...

ராகவன் இந்த பதிவை நான் சில நாட்களாக பார்த்தும் படிக்காமல் இருந்து வந்தேன்.

இலங்கையில் தீவிரவாதம் இருப்பதால் இன்பசுற்றுலா போக முடியாமல் தவிக்கும் ஒரு சாஃப்ட்வேர் இன்சினியராக உங்களை கற்பனை செய்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் இப்போது இந்த பதிவை படிக்கும்போது தான் தெரிகிறது. நீங்கள் எவ்வளவு உணர்ந்து இதை எழுதி உள்ளீர்கள் என்பது...


என்னுடைய ஏதோ ஒரு பழைய பதிவுக்கு நீங்கள் ஒரு பின்னூட்டம் இட்டீருந்தீர்கள்.உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை..

"சொல்ல வந்ததை சொல்லிவீட்டீர்கள்"

என்பதாக...

அதைத்தான் நான் இப்போது கூறுகிறேன். சொல்ல வந்ததை சொல்லிவீட்டீர்கள். மேற்படி நீங்கள் சொல்லாததையும் அதற்கு மாறானதையும் கூறி உங்களை கருத்தையே மாற்றவும் மறுக்கவும் செய்ய முயலும் கருத்துக்கள் வரத்தான் செய்யும்...அது சகஜம் என உணர்க...

நன்றி..ராகவன்...அருமையான எளிமையான உண்மையான உணர்ச்சியான பதிவு...

தமிழன் என்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா

said...

ராகவன்,

>> சாதாரணனுக்கு இப்ப இந்தப் போர் அலுத்துப் போச்சுன்னு பரவலா ஒரு பேச்சு இருக்கு.

கொள்கைப் பிடிப்புன்னு சொல்லிக்கிட்டு ஒரு இனத்தையே அழிக்கப் பாக்கரது நல்லாவா இருக்கு?

மொதல்லே உயிர் இருந்தாத்தானே மொழி? ஆளே இல்லாமப் போனா...? >>

என்றெல்லாம் எழுதுவதை வெறும் கருத்து என்று பம்மாத்து செய்து விட முடியாது.

அதே போல,

>> திட்டறவங்க, மனசுக்குள்ளெ திட்டிக்குங்க. >>

என்பது ஒரு பொதுத்தளத்தில், தமிழர்களின் உணர்வுபூர்வ விவாதகளத்தில் வைக்கப்படக்கூடிய நிர்ப்பந்தமா என்ன?

ஆக - இம்மாதிரியான நுனிப்புல் மேய்தல் 'போலத்' தொனிக்கிற கருத்துப்பரப்பல்களின் பின்னால் இயங்கும் திட்டமிட்ட உள்நோக்கங்களை , திரை விலக்கி யாவரும் பார்க்குமாறு காட்டித்தான் தீர வேண்டும்.

தமிழர்களின் கையைக் கட்டிப்போட முயற்சி செய்யும் 'மாயக்கயிறுகள்' அறுக்கப்பட வேண்டும்.

ஈழ விவகாரத்தில்,

1. ஜி. பார்த்தசாரதி
2. ஜே.என். தீட்சித்
3. என்.ராம் / 'இந்து' இதழ்
4. ஜெனரல் சுந்தர்ஜி
5. சோ ராமசாமி
6. சுப்பிரமணியம் சாமி
7. ஜெயலலிதா
8. மணி சங்கர அய்யர்

என்றொரு 'நெடிய பாரம்பரியம்' தோன்றும்போது, பார்க்கிறவன் Pattern Recognition செய்யத்தான் செய்வான்.

அது சற்றே மேம்போக்கான அனுமானமாகக் கூட இருக்கலாம். ஆனால் தமிழர்களின் உரிமைப்போரில் எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம். துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்பதை காலம் உணர்த்தும்.

said...

நண்பன் அவர்களின் பின்னூட்டம் வெகு நேர்த்தி, அருமை! வாழ்த்துக்கள்!

said...

இலங்கையில் தமிழருக்கு ஆதரவு அளிப்பது என்பது ஏன் நமக்கு நெருடலாக இருக்கின்றது என்று தெரியவில்லை. //

அதையேத்தான் நானும் கேக்கறேன். ஏன்?

நல்லா ஆராய்ச்சி பண்ணி எழுதுன பதிவு ராகவன். அதுவும் வருஷத்தோட கடைசி நாள்..

வாழ்த்துக்கள்.

said...

அருமை நண்பர் ராகவன்,
வரிக்கு வரி உடன்படுகிறேன் .அருமையான பதிவு.பாராட்டுக்கள்.

துளசியக்கா,
உங்கள் மேலோட்டமான கருத்து மிகுந்த வருத்ததை தருகிறது .நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? இவ்வளவு பிரச்சனைகளையும் ,போரையும் ,வன்முறைகளையும் பொறுத்து காஷ்மீர் நமக்கு தேவையா? ஆயிரக்கணக்கில் இப்படி வீரர்களையும் ,வன்முறைக்கு மக்களையும் பலிகொண்டு யாருக்காக காஷ்மீரை காக்க வேண்டும் ? இப்படி நீங்கள் இந்தியாவை கேட்பீர்களா?

பாதுகாப்பான இடங்களில் உட்கார்ந்து கொண்டு வேதாந்தம் பேசுவது எளிது .கண் முன்னே தாயும் சகோதரிகளும் சூறையாடப்படும் போது ,திருப்பி தாக்கவில்லையென்றால் வாழ்வே இல்லை என்னும் நிலையில் என்ன செய்ய முடியும் என்பது அந்த நிலையில் இருப்பவர்களுக்கு தான் புரியும் ."கஞ்சி இல்லையென்றால் என்ன .கேக் சாப்பிடலாமே?' என்ற ரீதியில் பொத்தாம் பொதுவாக அவ்வளவு சுலபமாக நீங்கள் கூறுவது வருத்தமளிக்கிறது.

said...

மனக்குமுறல்,
தயவு செய்து இதை விட்டுவிடுங்களேன்.

said...

மனக்குமுறல் உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. பட்டால்தான் தெரியும் வலி என்பதும் உண்மைதான்.

இங்கு நாம் கருத்துப் பரிமாற்றங்களை முன்னிறுத்தி கருத்து மோதல்களைத் தவிர்க்கலாம்.