Friday, April 20, 2007

அழகிய தமிழ்மகள் இவள்

கண்ணுக்கு மையழகுன்னு கவிஞர்கள் பாடியிருக்காங்க. அதே மாதிரி வலைப்பூக்கள்ள நண்பர்கள் எல்லாரும் அழகு பத்தி ஏற்கனவே பதிவு போட்டாச்சு. நம்மள குமரனும் அனுசுயாவும் (இங்க பேர மொதல்ல அநுசுயான்னு எழுதினேன். அவங்க கோவிச்சுக்கிட்டாங்க. அதுக்கப்புறம் மரியாதையா அனுசுயான்னுதான் கூப்பிடுறது.) கூப்பிட்டிருக்காங்க. பதிவு போட முடியாத அளவுக்கு நேரமின்மை. ஆனாலும் அழகைப் பத்திச் சொல்லக் கொஞ்ச நேரம் ஒதுக்கியாச்சு. அதான் இந்தப் பதிவு.

"அழகிய தமிழ்மகள் இவள்" அப்படீன்னு தலைப்பு வெச்சாச்சு. ஏன்? நம்முடைய தாய்மொழியாகிய தமிழ் அழகுன்னு சொல்லத்தான். அப்ப கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளமெல்லாம்? அவைகளும் அழகுதான். எல்லா மொழியும் அழகுதான். பொதுவாவே மொழின்னாலே அழகுதான். அவங்கவங்களுக்கு அவங்கவங்க தாய்மொழி அழகு. அதான் அழகிய தமிழ்மகள்னு நான் தலைப்பு வெச்சேன்.

ஏன் மொழி அழகு? யோசிச்சுப் பாருங்க. ஒருத்தர் கிட்ட இனிப்புன்னு சொல்லனும். மொழியே இல்லை. வெறும் சைகைதான். சேட்டாயிருந்தா வாயில லட்டத் திணிக்கலாம். நம்மூரு ஆளுங்கன்னா அதிரசத்தத் திணிக்கலாம். சரியய்யா. இதோவது திங்கிறது. வலிக்குதுன்னு எப்படிச் சொல்றது? எதுக்க நிக்குறவர கட்டயக் கொண்டு சாத்த வேண்டியதுதான். இப்படி ஒவ்வொன்னுக்கும் நெனைச்சுப் பாருங்க. கண்ணுல மண்ணு விழுந்திருச்சு, கீழ விழுந்து இடுப்பு பிடிச்சிக்கிச்சு, வெந்நிய கொதிக்கக் கொதிக்கக் கால்ல ஊத்திக்கிட்டேன்...இதையெல்லாம் சொல்லனும்னா....சரி. அத விடுங்க. ரசங்கள் ஒம்போதையும் எப்படிக் காட்டுறது? புரிய வைக்கிறது? பத்மினி இருந்திருந்தாங்கன்னா "மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசத்தையும் செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனிரசத்தையும்" அபிநயத்துலயே காட்டீருப்பாங்க. ஆனா நம்ம எப்படி? அதுக்குத்தான் உண்டானது மொழி.

இப்ப....ஒருத்தர் வந்து ஒங்ககிட்ட "பால் பொங்கீருச்சு"ன்னு சொன்னதும் ஒங்களுக்குப் புரிஞ்சு போகும். ஒரு சட்டியில வெள்ளவெளேர்னு பால் காஞ்சி பொங்கி வழியிறதெல்லாம் ஒரு நொடிக்குள்ள ஒங்களுக்குப் புரிஞ்சு போகும். இத எங்க வெச்சு எத்தன மணிக்குச் சொன்னாலும் புரிஞ்சு போகும். எலுமிச்சை ரசம்னோ எலும்பு சூப்புன்னோ படிக்கும் போதே நெறையப் பேருக்கு எச்சி ஊறுதே! இப்படி எளிமையா தகவல்களைப் பரிமாறிக்கிறதுக்காக பிறந்த மொழிகள் வளர்ச்சியடைந்து இலக்கணங்களையெல்லாம் வகுத்துக்கொண்டு வளர்ந்த பின்னால அந்த இலக்கியங்கள்ள இந்தச் சுவையெல்லாம் எப்படியிருக்குன்னு படிச்சுப் பாத்தா மொழி ஏன் அழகுன்னு தெரியும்? ஏன் நம்ம அதத் தமிழ்க் கடவுளின் வடிவமாகவே வாழ்த்திப் போற்றுகிறோம்னு தெரியும். அந்த அருமையான தமிழ் மொழியில சில அழகான பகுதிகளை நாம பாப்போமா? மூனு பகுதிகதான். அறம் பொருள் இன்பம்னே பாப்போம். அறத்துல ஆன்மீகம். அனாவுக்கு ஆனா. பொருள்ள கொடுக்கல் வாங்கல். இன்பத்துல காதல். இந்த மூனையும் பாப்போம். மூனுக்குப் போகலாம் வாங்க.

மொதல்ல ஆன்மீகம். திருவள்ளுவரே இறைவணக்கத்தோடதான தொடங்கீருக்காரு. நம்ம மொதல்ல கச்சியப்பர எடுத்துக்குவோமா? அட...அழகென்ற சொல்லுக்கு முருகான்னு தமிழ் எப்பயோ ஒத்துக்கிட்டாச்சு. ஆகையால நாம அங்கயிருந்தே தொடங்குவோம். பரமசிவம் பரமசிவம்னு (ரெண்டு பேரு இல்லங்க) ஒருத்தர் இருந்தாரு. அவரு கடவுள். சரி. கும்புடு. அவரு சமாச்சாரம்..இல்லல்ல சம்சாரம் பார்வதி. சரி கும்புடு. அவருக்கு முருகன்னு ஒரு பையன். நிறுத்தேய். புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரு இருக்காங்கள்ள. அப்புறம் இவரு யாரு? அவங்க ரெண்டு பேரும் பாத்துக்க மாட்டாங்களா? பாத்துக்குவாங்க. ஆனாலும் இவரும் பாத்துக்குவாரு. எப்படி? நாளை எப்படிப் பிரிக்கலாம்? இரவு பகல். சரி. இந்த இரவையும் பகலையும் இணைக்குதே மாலை. அந்த மாலை மாதிரி முருகன்.

புரியலையா? மொதல்ல இரவு பகல் ரெண்டும் வெவ்வேறன்னு நெனைக்கிறதே தப்பு. நாள் ஒன்னுதான். அத நம்ம இரவாகவும் பகலாகவும் உணர்ரோம். சரியா? வெளிச்சமே இல்லாத இருட்டறையில இருக்குறவனுக்கும் நாள் ஒன்னுதான். ஆனா அவன் உணர மாட்டான். வெளியில இருக்குறவன் நாளை இரவாகவும் பகலாகவும் உணர்ரான். பகல்லா வெளிச்சம். இரவுன்னா இருட்டு. ஒவ்வொன்னுலயும் ஒவ்வொரு பிரச்சனை. ஆனா இரண்டையும் இணைக்குதே மாலை. அதுல? லேசான வெளிச்சமும் இருக்கும். ஆனா சுடாது. மெல்லிய இருட்டும் இருக்கும். ஆனா மருட்டாது. ஒரு மாதிரி சிலுசிலுன்னு இருக்கும்ல. அப்படித்தான் முருகன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவுல பகலையும் இரவையும் இணைக்கும் மாலையாக நம்மை இன்பத்தில் ஆழ்த்துகிறார். இதத்தான் கச்சியப்பர் கந்தபுராணத்துல இப்படிச் சொல்றாரு.

ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தமக்கும்
பாலனாகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞாலமேவுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலையாவதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்

அதுல பாருங்க...இரவும் பகலும் இருக்குற வரைக்கும் மாலை இருக்கும். அதத்தான் அழிவின்றி வைகுமாறு ஒக்கும்னு சொல்றாரு. நான் ரெண்டு பத்தி எழுதி விளக்குனத இவரு நாலே வரியில எவ்வளவு அழகாச் சொல்லீட்டாரு பாத்தீங்களா. இதுக்கு இன்னும் ரெண்டு பக்கத்துக்கு வெளக்கம் எழுதலாம்.

அடுத்தது பொருளுக்குப் போவோம். புறநானூற எடுத்துக்குவோமா? அதுல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு இதாங்க.

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனிலும் உயர்ந்தன்று


அடடா! என்ன அனுபவிச்சுச் சொல்லீருக்காங்க. ஒருத்தர் கிட்ட போய் இன்னது வேணும்னு கேக்கனும். அப்படிக் கேக்க எவ்வளவு வெக்கமா இருக்கும். என்ன செய்ய....வயித்துப்பாடாச்சே..கேட்டாச்சு. அப்ப அவரு குடுத்துட்டா நல்லது. இல்லைன்னு சொல்லீட்டா? அது இன்னமும் அசிங்கம். வெக்கத்த மானத்த விட்டுக் கேட்டதுக்கு நல்ல பலன். இன்னுஞ் சிலர் இருப்பாங்க. நம்ம படுற பாட்டப் பாத்ததுமே அவங்களே வந்து உதவுவாங்க. இந்தாடா வெச்சுக்கோன்னு அவங்க குடுத்தா அது எவ்வளவு நல்லாயிருக்கும். அப்படி அவங்க குடுக்கைல..."இருக்கட்டுண்டா...சாமாளிச்சுக்குவேன். இப்ப வேண்டாம். வேணுங்குறப்ப நானே கேட்டு வாங்கிக்கிறேன்" அப்படீன்னு மனவுறுதியோட சொல்ல முடிஞ்சா? அது இன்னமும் இனிமைதான? அதத்தாங்க இந்தப் புலவர் சொல்லீருக்காரு. இவரு பேரு மறந்து போச்சு. நினைவிருக்குறவங்க சொல்லுங்க. இன்னொரு வாட்டி படிச்சுப் பாருங்க. நாலு வரிக்குள்ள நானூறு பொருள் இருக்கும். அதுனாலயும் புறநானூறுன்னு பேரு வெச்சாங்களோ! கொடுக்கல் வாங்கலையும் எவ்வளவு அழகாச் சொல்ல முடியுது தமிழ்ல!

அறமும் பொருளும் முடிஞ்சது. அடுத்தது இன்பம். இந்த இன்பம் இருக்குதே. இது பலவகைப்படும். சில குடும்பங்களப் பாத்தீங்கன்னா சாப்பாட்டு வேளையில பூட்டு தொங்கும். ஆனா உள்ள ஆளிருக்கும். உள்ள இருந்தே பூட்டிக்கிட்டு பெருச்சாளி மாதிரி பொந்துக்குள்ள உக்காந்து திம்பாங்க. இன்னுஞ் சிலரு...தண்ணியப் போட்டாத்தான் நாளே தொடங்கும். இப்பிடி பலவகையான இன்பங்கள் இருக்கு. ஆனா எல்லாருக்கும் பொதுவான இன்பம் காதல். காதலிக்கலைன்னு யாராவது சொன்னா அது பொய். ஒருதலையாகவாவது எல்லாரும் காதலிச்சிருப்பாங்க. அதே மாதிரி இன்னும் சில பொய்கள் இருக்கு. நான் சரோஜாதேவி டைப் புத்தகங்கள் படிச்சதே இல்லப்பா...நீலப்படம் பாத்ததே இல்லப்பா....மக்களே...இப்பிடி யாரவது சொன்னா (குறிப்பா பசங்க) அவங்க கிட்ட இருந்து எதுக்கும் தள்ளியே இருங்க. சரி. நம்ம அழகுக்கு வருவோம். காதல்....ஆணைக் கேட்டா பெண்ணும்பான். பெண்ணைக் கேட்டா ஆணும்பான். இப்பல்லாம் மாத்தியும் சொல்றாங்க. எப்படியோ ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான் விஷயம்.

இந்தக் காதல் உணர்வோட காதலி பந்து விளையாடுறதப் பாத்தா? தக்கு தக்குன்னு மனசுக்குள்ள நூறு கவிதை பிறக்காதா? நம்ம ராசப்பரு மட்டும் என்ன விதிவிலக்கா? அதாங்க...திரிகூட ராசப்பக் கவிராயரு. சந்தத்த அள்ளிச் சூரை விடுறாரு. அப்படியே பிடிச்சுக்கோங்க.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டாட
குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
மதன் சிலை வண்டோட
இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு
மென்றிடை திண்டாட
மலர்ப் பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே


ஒவ்வொரு வரிக்கும் எதுகையும் மோனையும் தாராளமா விட்டுப் பிசைஞ்ச பாட்டு இது. படிக்கும் போதே பந்து எம்பிக் குதிக்கிற மாதிரி இருக்கும். இதுல ஒரு வரி. "இனி இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட". இத எப்படிப் படிக்கனும் தெரியுமா? "இனி இங்கு இது கண்டு உலகு என்படும் (என்று) மென்படும் மெல்லிய இடை திண்டாட". இப்ப லேசாப் புரிஞ்சிருக்குமே. இப்பிடி அழகழகா பிரிச்சி மேஞ்சிருக்காரு திரிகூட ராசப்பரு. திருக்குறாலக்குறவஞ்சி படிங்க. பிரமாதமா இருக்கும். இன்னொரு பந்தாட்டப் பாட்டு கீழ இருக்கு.

செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்சொல் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!


இந்த வரிகளைக் கவியரசர் கண்ணதாசன் ஆதிபராசக்தி படத்துல ரொம்ப அழகா பயன்படுத்தியிருந்தாரு. இதே நூல்ல இருந்து ஒரு பாட்ட ஏ.ஆர்.ரகுமான் எடுத்து இசையமைச்சிருக்காரு. காதலன் படத்துக்கு.

இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ
மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே......


மனம் நெனைக்குது.....அந்த நெனப்புலதான் காதலன் முன்னாடி வர்ரானான்னு கண்ணு பாக்குது...அவனப் பாத்ததும் காதல் உணர்ச்சி தலைக்கேற கை அவனைத் தொடுது (அந்தக் காலத்துல காதலந்தான் மொதல்ல தொடனும்...காதலி தொட்டா அசிங்கம்னு தமிழர்கள் நெனைக்கலை). அப்படி மனசு நெனச்சு முடிக்கு முன்னாடியே கண் பார்த்து...கண் பார்த்து முடிக்கும் முன்னாடியே கை தொட்டிருச்சாம். ஆக..கை தொடும் போது மனம் இன்னும் நெனச்சு முடிக்கலை. அந்த ஒரு நொடியில நெனைச்சுக்கிட்டே பாத்துக்கிட்டே தொட்டுக்கிட்டாளாம் காதலி. அடடா!

ஒன்ன நெனச்சுக்கிடே ஏஏஏஏ
ஒன்ன பாத்துக்கிட்டே ஏஏஏஏ
ஒன்ன தொட்டுக்கிட்டேன் மாமாஆஆஆஆ
ன்னு இன்னைக்கு சினிமாவுல எழுதுனா அது எங்கயோ போயிரும்.

இப்பிடித்தாங்க அழகழகா நம்ம தமிழ் மொழியில சொல்லீருக்காங்க. அதுல கொஞ்சத்த ஒங்களுக்குச் சொல்லீருக்கேன். என்ன நெனச்சு என்னைய அழகெழுதக் கூப்பிட்டாங்களோ! ஏதோ நமக்குத் தெரிஞ்சதச் சொல்லியாச்சு! அடுத்து மூனு பேரைக் கூப்பிடனுமாமே! முருகா! முருகா! முருகா! கூப்பிட்டாச்சு. இனிமே தமிழ்ல யார் பதிவு போட்டாலும் அவன் போட்ட பதிவுதானே! :-) (அட...நமக்கு முன்னாடியே எல்லாரும் பதிவு போட்டாச்சு. இப்ப யாரக் கூப்புடுறது?)

அன்புடன்,
கோ.இராகவன்

27 comments:

said...

அறம் பொருள் இன்பம் மூணுத்தையும் கவர் பண்ணிட்டீங்க. அதே சூட்டோட இயல் இசை நாடகம் என அந்த முத்தமிழையும் கவர் பண்ணி ஒரு பதிவு போட்டுடுங்க தலைவா.

said...

அருமை அருமை இராகவரே!அழகிய தமிழ் மகள் இவள் என தமிழ்மகளின் அழகையெல்லாம் அள்ளித்தந்தீர்கள்!

//மனம் நெனைக்குது.....அந்த நெனப்புலதான் காதலன் முன்னாடி வர்ரானான்னு கண்ணு பாக்குது...அவனப் பாத்ததும் காதல் உணர்ச்சி தலைக்கேற கை அவனைத் தொடுது (அந்தக் காலத்துல காதலந்தான் மொதல்ல தொடனும்...காதலி தொட்டா அசிங்கம்னு தமிழர்கள் நெனைக்கலை).//

உண்மைதான்!
பாரதியும் சொல்லி இருக்காரே'காதலொருவனைக் கைப் பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து..'என்று.
அன்புடன்
ஷைலஜா

said...

//சரி. அத விடுங்க. ரசங்கள் ஒம்போதையும் எப்படிக் காட்டுறது//

ஆகா, நவ ரசம்னு நீங்க சொன்ன உடனே, அடுப்படி பதிவில், ஓட்ஸ் உப்புமாவுக்கு அப்புறம், எலுமிச்சை, மிளகு, பைனாப்பிள்.....ஒன்பது வகையான ரசங்களைச் சொல்லிக் குடுக்கப் போறீங்கன்னு ஆசை ஆசையா ஒடீயாந்தா....என்ன ஜிரா நீங்க!.............

அதை விடச் சுவையான தமிழ் ரசத்தை இப்படி மிக அழகா ஊத்திக் கொடுத்தீட்டங்களே! :-)

//குமரவேள் இரவொடு பகலுக்கும் நடுவாய்//
இப்படி முருகனை, இரவும் பகலும்
சந்திக்கும் வேளையில் சிந்திக்க வைத்தீரே!
அதுவும் அழகே!

said...

//அவங்களே வந்து உதவுவாங்க. இந்தாடா வெச்சுக்கோன்னு அவங்க குடுத்தா அது எவ்வளவு நல்லாயிருக்கும்//

அப்பா, நண்பர்களே!
ஜிரா சொல்றதை நல்லாக் கேட்டுக்குங்க!
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னா மாதிரி!
எவ்வளவு நல்லாயிருக்கும்? எவ்வளவு நல்லாயிருக்கும்? :-))

//மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே......//

ஜிரா, நீங்க எதுல முந்தப் போறீங்க?
"கந்தனில் முந்துவேன்" ன்னு எல்லாம் சொல்லிச் சமாளிக்கக் கூடாது! சொல்லிட்டேன் :-))

said...

// இலவசக்கொத்தனார் said...
அறம் பொருள் இன்பம் மூணுத்தையும் கவர் பண்ணிட்டீங்க. அதே சூட்டோட இயல் இசை நாடகம் என அந்த முத்தமிழையும் கவர் பண்ணி ஒரு பதிவு போட்டுடுங்க தலைவா.//

அடடே! இது நல்லாயிருக்கே. கண்டிப்பாக முயற்சிக்கலாம்.

said...

// ஷைலஜா said...
அருமை அருமை இராகவரே!அழகிய தமிழ் மகள் இவள் என தமிழ்மகளின் அழகையெல்லாம் அள்ளித்தந்தீர்கள்! //

நன்றி ஷைலஜா. இருக்குறதத்தான தர முடியும். அதான். :-)

////மனம் நெனைக்குது.....அந்த நெனப்புலதான் காதலன் முன்னாடி வர்ரானான்னு கண்ணு பாக்குது...அவனப் பாத்ததும் காதல் உணர்ச்சி தலைக்கேற கை அவனைத் தொடுது (அந்தக் காலத்துல காதலந்தான் மொதல்ல தொடனும்...காதலி தொட்டா அசிங்கம்னு தமிழர்கள் நெனைக்கலை).//

உண்மைதான்!
பாரதியும் சொல்லி இருக்காரே'காதலொருவனைக் கைப் பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து..'என்று.
அன்புடன்
ஷைலஜா //

அதே அதே. ரொம்பச் சரியாச் சொன்னீங்க. முதலில் மனதைக் கொடுத்து...பின்னர் கையைக் கொடுத்து...பின்னர் காரியம் யாவினும் கையைக் கொடுத்து....

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆகா, நவ ரசம்னு நீங்க சொன்ன உடனே, அடுப்படி பதிவில், ஓட்ஸ் உப்புமாவுக்கு அப்புறம், எலுமிச்சை, மிளகு, பைனாப்பிள்.....ஒன்பது வகையான ரசங்களைச் சொல்லிக் குடுக்கப் போறீங்கன்னு ஆசை ஆசையா ஒடீயாந்தா....என்ன ஜிரா நீங்க!............. //

அது அடுப்படிச் சமாச்சாரங்க. மகரந்தத்துல எப்படி? அடுப்பு ஏத்தியும் நாளாச்சு. ம்ம்ம்...

// அதை விடச் சுவையான தமிழ் ரசத்தை இப்படி மிக அழகா ஊத்திக் கொடுத்தீட்டங்களே! :-) //

ஊத்திக் கொடுத்த ஜிரான்னு பேரு வாங்கிக் கொடுத்திராதீகப்போவ்.

////குமரவேள் இரவொடு பகலுக்கும் நடுவாய்//
இப்படி முருகனை, இரவும் பகலும்
சந்திக்கும் வேளையில் சிந்திக்க வைத்தீரே!
அதுவும் அழகே! //

என்ன செய்வது ரவி? சிந்தையில் இருப்பது பதிவில் வந்து விடுகிறதே. :-)

////மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே......//

ஜிரா, நீங்க எதுல முந்தப் போறீங்க?
"கந்தனில் முந்துவேன்" ன்னு எல்லாம் சொல்லிச் சமாளிக்கக் கூடாது! சொல்லிட்டேன் :-)) //

நானா? எனக்கு மட்டும் என்ன தனி ஆர்டரா? மேல சொன்ன அதே வரிசைப்படிதான் எனக்கும். :-))

said...

அழகிலே குறவஞ்சிதான் மிக அழகோ?

முருகுடன் கலந்ததாலா?

ஜிரா,
வள்ளி புராணமும் எழுதுங்கள்.
அழகன்,அழகி எல்லோரையும் படித்துக் களிக்கலாம்.

நன்றியும் வாழ்த்துக்களும்.

said...

IS SHE JEYALALITHA?

said...

இராகவன். இந்த இடுகையைப் பற்றி நான் என்ன சொன்னாலும் ஏதோ சொல்லாமல் விட்டது போன்றே தோன்றும். அதனால் எதுவும் சொல்லாமல் எல்லாவற்றையும் சொல்லாமல் விட்டுவிடலாம் என்று இருக்கிறேன். :-)

- பல நாட்களுக்குப் பின் உங்கள் தமிழ்ச்சுவையைப் பருகிய மயக்கத்தில் இருக்கும் ஒருவன்.

said...

ஏய்யா நேரமில்ல நேரமில்லன்னு இந்தப் போடு போட்டிருக்கீரு... அழகுத் தமிழைப் பற்றி அழகுப் பதிவு அழகே அழகு!!!

said...

என்ன சொல்லறது ராகவன் சார்

உங்க அழகு எல்லாம் அருமை....அருமை....அருமை ;-))

கொத்தனார் அவர்கள் சொன்னது போல இயலையும், இசையையும் (இசை பற்றி ரொம்பவே எதிர்பார்க்குறேன்) நேரம் கிடைக்கும் போது எழுதுங்க.

said...

Hi Ragavan,

Generally i dont post any comments except few.
just keep reading...

But i cant resist myself after reading this beautiful blog about the beauty of Thamizh.
Very charming................

I know its not fair on me to give comments in English for a blog which elaborates Thamizh's beauty...
So please excuse me...i dont have Tamil typewriting..

Cheers!

said...

ஜிரா..

நேரமின்மை என்பது உங்கள் வலைப்பூவை அடிக்கடி பார்வையிட்ட பிறகு அதே Weird ஏ இருப்பதில் இருந்து தெரிந்தது.

அழகு பற்றிய பதிவு - மிக வித்தியாசம்.. அற்புதம்... என்ன சொல்ல?

கலக்கிட்டீங்க.. ரசித்துப் படித்தேன்.. அகமிக மகிழ்ந்தேன்..

முருகப்பெருமானை மாலை வேளைக்கு ஒப்பிட்டு வரும் பாடலும் அதற்கான உங்கள் விளக்கமும் அழகோ அழகு!!!

தொடரட்டும் உங்கள் பயணம்..

வாழ்த்துக்கள்..

said...

// வல்லிசிம்ஹன் said...
அழகிலே குறவஞ்சிதான் மிக அழகோ?

முருகுடன் கலந்ததாலா? //


குறவஞ்சியும் அழகுங்கு. அப்படிச் சொல்ல வந்தேன். குற்றாலக் குறவஞ்சியைப் பத்தி ஒங்களுக்கு நான் சொல்லித் தரனுமா?

// ஜிரா,
வள்ளி புராணமும் எழுதுங்கள்.
அழகன்,அழகி எல்லோரையும் படித்துக் களிக்கலாம்.

நன்றியும் வாழ்த்துக்களும். //

வள்ளியின் கதையா! எழுதலாம். ஆனால் இப்பொழுது இல்லைங்க. நேரமின்மைதான். ஆனால் கண்டிப்பா எழுதலாம். சிலப்பதிகாரத்துல இளங்கோவடிகள் பயன்படுத்திய உத்தியைப் பயன்படுத்தி...ஆனா உரைநடைல எழுதுனா நல்லாயிருக்கும்.


// Anonymous said...
IS SHE JEYALALITHA? //

ஆனாலும் ஒங்களுக்கு ரொம்பவும் குசும்புங்க. மகள்னு அழுத்திச் சொல்றேன். நீங்க அம்மான்னு சொல்றீங்களே! :-))))) அந்தம்மா வயசுல அழகாத்தான் இருந்தாங்க.....அதென்னவோ உண்மைதான்.

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். இந்த இடுகையைப் பற்றி நான் என்ன சொன்னாலும் ஏதோ சொல்லாமல் விட்டது போன்றே தோன்றும். அதனால் எதுவும் சொல்லாமல் எல்லாவற்றையும் சொல்லாமல் விட்டுவிடலாம் என்று இருக்கிறேன். :-)

- பல நாட்களுக்குப் பின் உங்கள் தமிழ்ச்சுவையைப் பருகிய மயக்கத்தில் இருக்கும் ஒருவன். //

வாங்க குமரன். உங்க தமிழ்த்தாகம் தெரியாததா! ஆனால் தேன் நல்ல தேனான்னு தெரியலை. ரொம்ப அவசரமா எழுதிப் படக்குன்னு போட்டது.


// பிரதீப் said...
ஏய்யா நேரமில்ல நேரமில்லன்னு இந்தப் போடு போட்டிருக்கீரு... அழகுத் தமிழைப் பற்றி அழகுப் பதிவு அழகே அழகு!!! //

இந்தப் போடா! ஐயா...இதெல்லாம் ஞாயமில்லை. இத எழுத எனக்கு 15-20 நிமிடங்கள் கூட ஆயிருக்காது. எழுதுனதத் திருப்பிக்கூட படிக்கலை. பதிவு போடனும்னும் முருகனைப் பத்தி ஏதாவது எழுதனும்னு தோணுனதாலையும் போட்ட பதிவு இது. உங்களுக்குப் பிடிச்சிருந்தா ரொம்பவும் மகிழ்ச்சி.

said...

// கோபிநாத் said...
என்ன சொல்லறது ராகவன் சார்

உங்க அழகு எல்லாம் அருமை....அருமை....அருமை ;-)) //

நன்றி கோபிநாத். படபடவென எழுதிப் போட்ட பதிவு ரசிக்கும்படி இருந்தது என்பது மகிழ்ச்சி. பெரும் மகிழ்ச்சி.

// கொத்தனார் அவர்கள் சொன்னது போல இயலையும், இசையையும் (இசை பற்றி ரொம்பவே எதிர்பார்க்குறேன்) நேரம் கிடைக்கும் போது எழுதுங்க. //

எழுதனும் கோபிநாத். நல்லாவேயிருக்கும். இயலிசைநாடக தீபம் ஏற்றினால் சுடராக இருக்கும். ஆனால் அதனைத் தொடராக விட்டால் இன்னமும் நன்றாக இருக்கும். யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

// Anonymous said...
Hi Ragavan,

Generally i dont post any comments except few.
just keep reading...

But i cant resist myself after reading this beautiful blog about the beauty of Thamizh.
Very charming................

I know its not fair on me to give comments in English for a blog which elaborates Thamizh's beauty...
So please excuse me...i dont have Tamil typewriting..

Cheers! //

வாங்க நண்பரே. படிக்கிறீங்களே. அதுவே பெரிய மகிழ்ச்சி. அதுல கருத்து சொல்றது இன்னும் பெரிய மகிழ்ச்சி. தமிழிலானால் என்ன..ஆங்கிலமானால் என்ன...அந்த முனைப்பே பெரும் பரிசு.

அப்புறம்...தமிழ் டைப்ரைட்டிங் ஒன்னும் பெரிய வித்தையில்லை. எல்லாம் ஃபொனெடிக் டைப்பிங்தான். இ-கலப்பைய இறக்குமதி செஞ்சு பயன்படுத்திப் பாருங்க. அப்புறம் நீங்களே புகுந்து விளையாடுவீங்க.

said...

ராகவன்,

பதிவின் தலைப்பே அழகு!
உங்களின் விளக்கம் அழகு!

said...

அழகோ அழகு ஜி.ரா

said...

இராகவன்,
அருமையான பதிவு. தெவிட்டாத தமிழில், படிக்கச் சுவைக்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள்.

மிக்க நன்றி.

said...

// தென்றல் said...
ராகவன்,

பதிவின் தலைப்பே அழகு!
உங்களின் விளக்கம் அழகு! //

ஆகா! இன்று மகரந்தத்தில் தென்றல் வீசியது. :-) நன்றி. நன்றி. தென்றல் தொடர்ந்து பரவட்டும். மகரந்தம் அதில் மணக்கட்டும்.

// நாகை சிவா said...
அழகோ அழகு ஜி.ரா //

நன்றி நாகை சிவா.

said...

மிக மிக அழகான பதிவு ராகவன்.

"நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர்,- தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?"

பாரதிதாசன்

said...

என்ன சொல்ல ராகவன்...

ஒங்க அளவுக்கு நமக்கு எழுத (தமிழ்ல) வரலையேன்னு ஏக்கமா இருக்கு...

அழகு, அழகுன்னு எங்கங்கயோ சுத்தி அலையறோம்... நாம் எழுதும் மொழியில் இத்தனை அழகான்னு கேக்க வச்சிட்டீங்க...

சூப்பர்..

said...

// ஜெயஸ்ரீ said...
மிக மிக அழகான பதிவு ராகவன்.

"நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர்,- தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?"

பாரதிதாசன் //

அதே அதே...சரியா எடுத்துச் சொன்னீங்க ஜெயஸ்ரீ. உங்க தமிழார்வம் எங்களுக்குத் தெரியாததா என்ன?

// டி.பி.ஆர்.ஜோசஃப் said...
என்ன சொல்ல ராகவன்...

ஒங்க அளவுக்கு நமக்கு எழுத (தமிழ்ல) வரலையேன்னு ஏக்கமா இருக்கு... //

என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க! நீங்க திரும்பிப் பாக்குறதையே புத்தகமாக் கொண்டு வர்ர அளவுக்கு இருக்கு. அப்படி இருக்குறப்போ..இந்தத் துண்டும் துடுக்கானும் மலைப்பா?

// அழகு, அழகுன்னு எங்கங்கயோ சுத்தி அலையறோம்... நாம் எழுதும் மொழியில் இத்தனை அழகான்னு கேக்க வச்சிட்டீங்க...

சூப்பர்.. //

ஆமாங்க. ஒரு நிமிசம் யோசிச்சுப் பாருங்க. இப்ப ஒங்கள யோசிச்சுப் பாக்கச் சொல்றதையே மொழி இல்லாம இருந்திருந்தா எப்படிச் சொல்லீருக்க முடியும். நான் ஒரு சைகை காட்ட...நீங்க ஒன்னு புரிஞ்சிக்க....கற்காலவாசிகள் ரொம்பவும் செரமப்பட்டிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

said...

ராகவன்,

தமிழ்ல அறம், பொருள விட காதல் ரொம்ப அழகா இருக்கிற மாதிரி எனக்குத் தோணுது ;)

அறத்துக்கு ஒரு பாட்டு...
பொருளுக்கு ஒரு பாட்டு...
காதலுக்கு மட்டும் இத்தனப் பாட்ட அள்ளித் தெளிச்சிருக்கீங்க? ;)

said...

// அருட்பெருங்கோ said...
ராகவன்,

தமிழ்ல அறம், பொருள விட காதல் ரொம்ப அழகா இருக்கிற மாதிரி எனக்குத் தோணுது ;) //

காதற்கவிஞர்க்குக் காதலையன்றி ஏது அழகு?

// அறத்துக்கு ஒரு பாட்டு...
பொருளுக்கு ஒரு பாட்டு...
காதலுக்கு மட்டும் இத்தனப் பாட்ட அள்ளித் தெளிச்சிருக்கீங்க? ;) //

அறத்துக்கும் பொருளுக்கும் ஒன்னு போதும். ஏன்னா அறமும் பொருளும் புரிஞ்சிருச்சுன்னா அப்படியே இருக்கும். காதல்தான் கடலலை மாதிரி. வந்து வந்து மொந்து மொந்துன்னு மோதும். அதுவுமில்லாம குற்றாலக்குறவஞ்சி ரொம்பவே இனிமையான நூல். அதுல ஒன்னு எடுத்தா அடுத்து படக்குபடக்குன்னு வந்துக்கிட்டேயிருக்கு.

said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)