Monday, January 14, 2008

தங்க மரம் - 1

நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கல் அன்று இந்தப் புதிய தொடரை இடுகிறேன். இது காதல், ஆன்மீகம் என்றில்லாமல் விட்டலாச்சார்யா படம் போலச் செல்லும். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். சரி கதைக்குப் போகலாம்.

---------------------------------------------------------

"கதிரவா, இன்றோடு உனக்கு வயது பதினெட்டு. இந்த நாளுக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருந்தேனப்பா. உன்னுடைய தந்தை உனக்கென்று ஒதுக்கி வைத்திருந்த பொறுப்பை உன்னிடம் இந்த நாளில் ஒப்படைக்கச் சொன்னார்."

கதிரவனிடம் சொன்னது அவனது அன்னை அமுதம். பொறுப்பு என்று முதன்முதலாகக் கேட்டதும் திகைத்தான் மகன். "என்னம்மா பொறுப்பு? தந்தை எனக்கிட்ட கட்டளைதான் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?"

அவனுடைய தலையைக் கோதியவர், கையைப் பிடித்து மச்சு வீட்டிற்குள் அழைத்துச் சென்றால். பட்டிக்காடுகளில் பெரிய வீடுகளில் மச்சு வீடு என்று உள்ளறை இருக்கும். உள்ளே முக்கியமான பொருட்கள் பல இருக்கும். கதிரவன் பலமுறை சென்ற அதே அறைதான். சுவற்றின் ஒரு பக்கம் மஞ்சளும் குங்குமமும் இட்ட வேல்கள். ஒரு பக்கம் பல பெட்டிகள். அவைகளுக்குள் மதிப்புள்ள பல பொருட்கள். ஒருபுறம் பெரிய குலுக்கை. அந்தக் குலுக்கை நிறைய கம்பு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மணம் மச்சுவீடு முழுவதும் நிறைந்திருந்தது. அந்த நறுமணத்தை அனுபவித்தவாரே இருவரும் உள்ளே சென்றனர்.

அங்கிருந்த பெரிய பெட்டி ஒன்றிலிருந்து சிறிய பெட்டி ஒன்றை எடுத்தார் அமுதம். அந்தப் பெட்டிக்குப் பூட்டே இல்லாமல் இருந்தது. பார்த்தால் எல்லாப்புறமும் மூடியிருந்தது போல இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ரம்பப்பல் போல வரிசையாகச் செதுக்கியிருந்தது. அதை மகனிடம் கொடுத்தார். "இந்தாப்பா. உன்னிடம் அவர் கொடுக்கச் சொன்ன பெட்டி."


பெட்டியை வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான். எப்படித் திறப்பதென்றே தெரியவில்லை. "என்னம்மா இது? இதை எப்படித் திறப்பதென்றே தெரியவில்லையே. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும்?"

மகனின் கேள்வியைக் கேட்டு சிறிதாகச் சிரித்தார். "கதிரவா, அது எனக்குத் தெரியாதே. உன்னிடம் ஒப்படைக்கச் சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே. ஆனால் இதைப் பொறுப்பு என்றுதான் சொன்னார். நீ அறிவுள்ளவனாக இருந்தால் இதைச் செய்து முடிப்பாய் என்று அவர் நம்புவதாகச் சொன்னார்."

கேட்கக் கேட்க கதிரவனின் படபடப்புக் கூடியது. "அம்மா....வணிகம் செய்யச் சென்ற தந்தை ஆண்டு பலவாகியும் நாடு திரும்பவில்லை. அப்படியிருக்க இது எப்பொழுதம்மா நடந்தது?"

கவலைப்பனி அமுதத்தின் முகத்தை மூடியது. "ம்ம்ம்ம்....என்னை மன்னித்து விடப்பா. வணிகம் சென்ற தந்தை திரும்பவில்லை என்று உன்னிடம் பொய் சொன்னேன். உன்னுடைய பாட்டனார் செங்கையார் ஒரு மருத்துவர். உயிர்தொடுச் செங்கையார் என்று ஊர் புகழ்ந்தது. அவர் தொட்ட இலை மூலிகை. மிதித்த வேர் சஞ்சீவி என்று சொல்வார்கள். அத்தோடு விவசாயமும் செய்து வந்த குடும்பம். அப்படியிருக்க உன்னுடைய தந்தை செங்கோமான் மட்டும் ஆனைகளின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார். பெருஞ் செல்வந்தர்கள் வீடுகளிலும் அரண்மனைக் கொட்டடியிலும் இருக்கும் ஆனைகளோடு பழகினார்.

ஆனாலும் அவருக்கு மருத்துவப் பயிற்சியை உனது பாட்டனார் முறையாகக் குடுத்தார். பொருத்தமான சமயத்தில் என்னையும் திருமணம் செய்து வைத்தார். முருகன் அருளால் நீயும் பிறந்தாய். மருத்துவத்தில் உன் தந்தை சிறப்பாக தேர்ந்திருந்தாலும் ஆனைப் பழக்கம் அவரை விடவில்லை. அவரும் அவருடைய உற்ற தோழர் இளங்கோவும் ஆனைப் பயிற்சியிலும் போர்ப் பயிற்சியிலும் கூட ஈடுபட்டிருந்தார்கள்."

இடைமறித்தான் மகன். "இளங்கோ என்றால் சித்திரையின் தந்தைதானே அம்மா?" சித்திரை என்பவன் கதிரவனின் தோழன். வயதொத்தவன்.

"ஆம். சித்திரையின் தந்தையேதான். இந்தப் பெட்டியை என்னிடம் கொடுக்கும் பொழுது உனக்கு வயது மூன்று. அப்பொழுது உன் தந்தை தோழருடன் ஆனை வணிகம் நடந்த களிற்றூருக்குச் சென்றார். அதாவது அப்படித்தான் ஊரிலும் வீட்டிலும் சொன்னார். என்னிடம் மட்டும் இந்தப் பெட்டியைக் கொடுத்து, ஏதோ கடமை இருப்பதாகவும் அதை முடித்து விட்டுத் திரும்புவதாகவும், எவ்வளவு நாளானாலும் மாதங்களானாலும் ஆண்டுகளானாலும் அவர் வருகைக்காக் காத்திருக்குமாறும் சொல்லிச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். இன்னும் வரவில்லை. இதைத்தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாதப்பா. அவருக்காகவும் அவர் கொடுத்த பொறுப்பு உன்னால் முடிக்கப் படவும்தான் காத்திருக்கிறேன்." சொல்லும் பொழுதே விசும்பினார் அமுதம்.

தாயின் பழைய நினைவுகளைக் கண்ணீரில் காணச் சகிக்காத கதிரவன் அவரது கண்களைத் துடைத்தான். "வருந்தாதீர்கள் அம்மா. தந்தை கொடுத்த கடமையையும் நிறைவேற்றி...அப்பா எங்கிருந்தாலும் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேனம்மா. நீங்கள் அழாதீர்கள். உங்கள் வருத்தம் என்னையும் துன்புறுத்துகிறதம்மா."

மகனின் உறுதிமொழி அவரின் உள்ளத்தை நெகிழ வைத்திருக்க வேண்டும். "கதிரவா, உன் மீது நம்பிக்கை இருக்கிறதப்பா. தாத்தா இருக்கும் வரை அவரிடம் மருத்துவமும் ஓரளவு கற்றிருக்கிறாய். பாட்டியும் நானும் கற்றுக் கொடுத்த உழவும் உனக்குத் தெரியும். ஊரில் அனைவரும் உன்னைப் புகழ்கின்றனர். நீ தந்தை கொடுத்த பொறுப்பைச் சிறப்பாக முடிப்பாய் என்று நம்புகிறேன். சரி...முதலில் உணவு. உனக்குப் பிடித்த விரால் மீன் குழம்பும் செந்நெற்சோறும் கெட்டித் தயிரும் காத்திருக்கிறது."

பிறந்த நாளன்று நல்ல உணவு உண்டு திண்ணையில் வந்தமர்ந்தான். உண்ட சுவையுணவும் அணிந்திருந்த புது வேண்டியும் தோளில் போட்டிருந்த புதுத்துண்டும் அவனுக்கு மகிழ்ச்சியைக் குடுக்கவில்லை. தந்தை கொடுத்த பொறுப்பும் தாயார் கொடுத்த பெட்டியும் அவன் மனதைக் குழப்பிக் கொண்டேயிருந்தன. துண்டையெடுத்து தலையில் கட்டிக்கொண்டு தோழன் சித்திரையைப் பார்க்கலாம் என்று குதித்துக் கிளம்பினான். சித்திரையிடம் அவனுக்கு இன்னொரு வியப்பான செய்தியை காத்துக் கொண்டிருந்தது.

தொடரும்....

26 comments:

said...

அடுத்த தொடரா?! சூப்பர். அமைதியான ஆரம்பம். இது என்ன வாரம் ஒரு பதிவா அல்லது இரு பதிவுகளா?

said...

// இலவசக்கொத்தனார் said...
அடுத்த தொடரா?! சூப்பர். அமைதியான ஆரம்பம். இது என்ன வாரம் ஒரு பதிவா அல்லது இரு பதிவுகளா? //

ஆமாங்க. அடுத்த தொடர்தான். வாரத்துக்கு ரெண்டு போடனும்னு ஆசைதான். ஆனா நேரந்தான். இதுவும் அலுவலக வேலைக்கிடையில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துறதுக்காகவும் உதவுது. நேரம் நெறைய கெடைச்சா ரெண்டு போடுறேன். ஆனா இப்போதைக்கு வாராத்துக்கு ஒன்னுதான்.

said...

தொடர் கதை உலகத்துக்கு மீண்டும் வருக வருக என்று வாழ்த்துகின்றேன்.

ஆனைக்காரரா அப்பா?

பிடிச்சிருக்கு:-)

said...

hi Ragavan,

I really enjoyed your Blog. Wish you a Happy Pongal !!!


Cheers,
Sankari

said...

சூப்பரு!! B-)

said...

மர்மமான பொறுப்பு, தொடரை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது...

சித்திரையிடம் கதிரவனுக்கு என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது என அறிய......ஆவலுடன் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!!

said...

நல்லா இருக்கு ராகவன்....கிராமத்து மச்சு வீடு..விரால்மீன்..கெட்டித்தயிர்..
..விவரிப்புகள்..
குலுக்கை எங்க ஊர்ப்பக்கம் இதுக்குக் குளுமை என்று சொல்வாங்கன்னு நினைக்கிறேன்..

said...

nice

said...

பொங்கல் நல்வாழ்த்துகள் இராகவன்.

பொங்கல் நாளில் நீங்கள் இந்தக் கதையை எழுதத் தொடங்கினீர்கள். நானும் பொங்கல் நாளில் படிக்கத் தொடங்கிவிட்டேன்.

அம்புலிமாமாவில் ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் ராகவன்.

தேடுதலோடு ஆரம்பம்.

நன்றாக இருக்கிறது பாசமும் நெகிழ்ச்சியுமாக.

said...

இது என்ன இது.. நான் தான் முதல் ஆளோன்னு கொஞ்சூண்டு உணர்ச்சி வசப்பட்டுட்டேன்..

ஏற்கெனவே 8 எசமான்கள் ஆஜர்..

ஒரே தொடர்மயம்.. கலக்குங்க ஜிரா.. வழக்கம்போல மிஸ் பண்ணிராம வந்துர்ரேன்..

காதல் குளிர் கடைசி பாக்கி இருக்கு.. அதுக்கு அடுத்து இது தான்! :)

said...

ஆரம்பம் அருமை ;)

said...

ஆரம்பமே சஸ்பென்ஸா....கலக்குங்க.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

said...

திரில்லிங்க் - பெட்டி-என்ன செய்ய வேண்டும் கதிரவன். சித்திரை என்ன சொல்லப் போகிறான். ஆனை என்னவாயிற்று. பொறுத்திருப்ப்பொம் அடுத்த பாகத்துக்கு

said...

// துளசி கோபால் said...
தொடர் கதை உலகத்துக்கு மீண்டும் வருக வருக என்று வாழ்த்துகின்றேன். //

வந்துட்டேன் டீச்சர் :)

// ஆனைக்காரரா அப்பா?

பிடிச்சிருக்கு:-) //

:) ஆனைன்ன்னதும் உங்களத்தான் நெனச்சேன். உங்களுக்குப் பிடிக்கும்னு. இன்னும் உங்களுக்குப் பிடிக்கும் பாருங்க.

// Sankari said...
hi Ragavan,

I really enjoyed your Blog. Wish you a Happy Pongal !!! //

நன்றி சங்கரி. தொடர்ந்து படித்து கருத்துகளைக் கூறவும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

// CVR said...
சூப்பரு!! B-) //

என்னது? கதையா? இல்ல கதைக்குள்ள இருக்குற எதுவுமா? ஓ.. புரியுது...கதைக்குப் பொருத்தமா போட்டிருக்குற போட்டோதானே? :)

said...

// Divya said...
மர்மமான பொறுப்பு, தொடரை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது...

சித்திரையிடம் கதிரவனுக்கு என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது என அறிய......ஆவலுடன் அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!! //

வாங்க திவ்யா. சித்திரைகிட்ட என்ன ஆச்சரியம் காத்திருக்குன்னு எனக்கும் ஆச்சரியந்தான். :)

// பாச மலர் said...
நல்லா இருக்கு ராகவன்....கிராமத்து மச்சு வீடு..விரால்மீன்..கெட்டித்தயிர்..
..விவரிப்புகள்..
குலுக்கை எங்க ஊர்ப்பக்கம் இதுக்குக் குளுமை என்று சொல்வாங்கன்னு நினைக்கிறேன்..//

நன்றி பாசமலர். குலுக்கைங்குறத குதிர்னும் சொல்வாங்க. குளுமைங்குற பேர் இப்பத்தான் கேள்விப்படுகிறேன். எந்த ஊர்ப்பக்கம் இப்பிடிச் சொல்வாங்க?

// padma said...
nice //

நன்றி பத்மா. தொடர்ந்து படிச்சு கருத்து சொல்லுங்க.

said...

//நன்றி பாசமலர். குலுக்கைங்குறத குதிர்னும் சொல்வாங்க. குளுமைங்குற பேர் இப்பத்தான் கேள்விப்படுகிறேன். எந்த ஊர்ப்பக்கம் இப்பிடிச் சொல்வாங்க?//

ஆமாம். குதிர்..

குளுமை..மதுரைப்பக்கம்...எங்க வீட்டில் இப்படிச் சொல்வார்கள்..எல்லார் வீட்டிலுமா என்று தெரியவில்லை.

said...

தமிழில் ஆரி பாட்டர் ரேஞ்சுக்கு இந்த கதை நீங்கள் எழுதுவீர்கள்,அதற்கான பரந்த திறமை உங்களூக்கு உண்டு என்று எங்களுக்கு தெரியும் என்பதால்!!
உங்களுக்கு "தென்னகத்தின் ஜே.கே.ர்ரௌலிங்" என்ற பட்டப்பெயரை இந்த சந்தர்ப்பத்தில் அளிக்க விழைகிறேன்!!! :-P

said...

// குமரன் (Kumaran) said...
பொங்கல் நல்வாழ்த்துகள் இராகவன். //

நன்றி குமரன். உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்

// பொங்கல் நாளில் நீங்கள் இந்தக் கதையை எழுதத் தொடங்கினீர்கள். நானும் பொங்கல் நாளில் படிக்கத் தொடங்கிவிட்டேன். //

பொங்கலோ பொங்கல்

// அம்புலிமாமாவில் ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.//

அந்த மாதிரி எழுதத்தான் முயற்சிக்கிறேன் இந்தக் கதையில. பாப்பம். எப்படி வருதுன்னு.
-----------------------------------

// வல்லிசிம்ஹன் said...
இனிய பொங்கல் வாழ்த்துகள் ராகவன். //

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் வல்லிம்மா

// தேடுதலோடு ஆரம்பம்.

நன்றாக இருக்கிறது பாசமும் நெகிழ்ச்சியுமாக. //

வாழ்க்கையே தேடுறதுதானாமே. பொறந்ததும் பாலைத் தேடுறது...அப்புறம் நடையைத் தேடுறது..அப்புறம் பேச்சைத் தேடுறது..படிப்பைத் தேடுறது..காதலை..வேலையை..குழந்தையைப் பணத்தைன்னு தொடர்ந்து தேடிக்கிட்டேதான இருக்கோம். :)

-----------------------------------
// Raghavan alias Saravanan M said...
இது என்ன இது.. நான் தான் முதல் ஆளோன்னு கொஞ்சூண்டு உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.. //

உணர்ச்சிதானே. இருந்துட்டுப் போகட்டும். :)

// ஏற்கெனவே 8 எசமான்கள் ஆஜர்..

ஒரே தொடர்மயம்.. கலக்குங்க ஜிரா.. வழக்கம்போல மிஸ் பண்ணிராம வந்துர்ரேன்.. //

வாங்க வாங்க. நீங்கள்ளாம் வந்துதான் மரியாதை செய்யனும்.

said...

பட்டையை கிளப்புது கதை...

//"தென்னகத்தின் ஜே.கே.ர்ரௌலிங்" என்ற பட்டப்பெயரை இந்த சந்தர்ப்பத்தில் அளிக்க விழைகிறேன்!!! :-P//

இதை நான் கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன். ரௌலிங் அம்மையார் வேண்டுமென்றால் தன்னை இங்கிலாந்து "ஜி.ராகவன்" என்று சொல்லி கொள்ளட்டும் ;)

said...

ஆஹா

இப்போது தான் தொடர் கண்டேன், முடிந்தால் நீங்களோ அல்லது யாராவது பதிவரோ பொருத்தமான படங்களைச் சித்திரத்தில் கீறி இட்டால் நன்றாயிருக்கும்.

பிரமிட் சாய்மீரா அல்லது ஷங்கர் கிட்ட பேசிடவா?

said...

ஜிரா
தங்க மலை ரகசியம்-னு ஒரு படம் வந்துச்சாமே! அது போல இது தங்கப் பெட்டி ரகசியமா? கலக்குங்க!

கதை மாந்தர்கள், ஊர்-னு பெயர் எல்லாம் அழகுத் தமிழில் இருப்பது அருமை!

//விரால் மீன் குழம்பும் செந்நெற்சோறும் கெட்டித் தயிரும் காத்திருக்கிறது//

கேக்கணும்-னு நினைச்சேன்!
மீன் கொழம்புச் சோறு சாப்பிட்டாப் பின்னாடியே தயிர்ச்சோறும் கட்டாயம் சாப்பிடறாங்களே! ஏன் ஜிரா? :-))))

said...

//"தென்னகத்தின் ஜே.கே.ரௌலிங்" என்ற பட்டப்பெயரை இந்த சந்தர்ப்பத்தில் அளிக்க விழைகிறேன்!!! :-P//

ததாஸ்து! :-)

//இதை நான் கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன். ரௌலிங் அம்மையார் வேண்டுமென்றால் தன்னை இங்கிலாந்து "ஜி.ராகவன்" என்று சொல்லி கொள்ளட்டும் ;)//

யதாஸ்து! :-)

ஏம்பா...பட்டங் கட்டுறத்துக்கு இம்புட்டுச் சண்டையா?
நல்லா கவனியுங்க! அண்ணன் பேரும் Rல துவங்குது! அம்மையார் பேரும் Rல துவங்குது!

இனிப் பதிவுலகில் அனைவரும்(அட்லீஸ்ட், இந்தத் தொடர் கதை முடியும் வரையாவது)
ஜிரா வை "Rowling Ragavan" என்றே அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! :-)

said...

@கானா
நன்றி அண்ணாச்சி!!
நம் தமிழ் தொழிநுட்ப கலைஞர்களின் கிராபிக்ஸ் மிரட்டல்களுடன் இந்தப்படம் சர்வதேச அளவில் பேசப்படும் என்பதில் ஐயமில்லை!! :-D

said...

அன்பின் ஜி.ராகவன்,

இன்றுதான் உங்கள் மகரந்தம் பகுதிக்கு வந்தேன்.
மிக ஆச்சரியமாக இருக்கிறது.நிறைய அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
இந்தத் தொடர்கதை ஆரம்பமே அசத்தல்.

நிறைய எழுதுங்கள்.
வெற்றிகள் அத்தனையும் உங்களைச் சேர என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

said...

சூப்பர் ராகவரே! இப்பதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் :)