Monday, January 21, 2008

தங்க மரம் - 2

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

ஆளரவமில்லாக் காட்டில் வட்ட வடிவத்தில் ஒரு ஏரி. தளும்பித் தளும்பி நீர் தத்தளிக்கும் மிகப்பெரிய ஏரி. இருந்தாலும் எந்த ஒரு விலங்கும் அந்த ஏரியில் நீர் பருகவோ....அருகில் செல்லவோ இல்லை. ஏரியின் நட்டநடுவில் கூர்மையான உச்சியுடன் கடும்பாறைகளால் ஆன ஒரு கூம்புமலை.

அந்த ஏரிக்கு மேலே மலையைச் சுற்றி நிறைய குண்டரப் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. பறக்கும் பொழுதே வாயைத் திறந்து குரல் வெளியே கேட்காமல் தொடர்ந்து கத்தின. மற்றபடி வேறு எந்தப் பறவையும் அந்தப் பகுதியில் தென்படவில்லை.

குண்டரப் பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பார்க்க எப்படியிருக்குமென்று சொல்கிறேன். கால்கள் இல்லாத பறவை அது. இறக்கைகளும் கிடையாது. பளபளக்கும் பொன்மஞ்சள் நிறம். மற்றபடி பார்க்க வாத்து போலவே இருக்கும். ஆனால் உருவத்தில் மூன்று நான்கு மடங்கு பெரியதாக இருக்கும். இது உட்கார்ந்த இடத்திலிருந்து இறக்கையில்லாமலே அப்படியே மேலே எழும்பிப் பறக்கும். இந்தப் பறவைகளுக்கு உணவு நெருப்புக் குழம்பு. அந்தக் குழம்பின் ஆற்றலால் இவை பறக்கின்றன. அப்படிப் பறக்கையில் அவைகளின் பின்னால் சிறிது புகையெழும்பும். இதனுடைய மற்றைய சிறப்புகளைப் பிறகு பார்ப்போம். முதலில் கூம்புமலைக்குள் நுழைவோம். அங்கு என்ன நடக்கிறதென்று தெரிய வேண்டாமா!


இந்த மலை யாருக்குச் சொந்தமானது தெரியுமா? ஊழிவாயனுக்குச் சொந்தமானது. ஊழிவாயன் கதையைப் பிறகு பார்க்கலாம். முதலில் அவன் கோட்டைக்குள் நுழைவோம். கூம்புமலைக்குள் நுழைய இரகசிய வழி மட்டுமே உண்டு. ஆனால் பார்க்கும் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கிறது.

அந்த மலைக்குள் நிறைய பூகன்களும் பூகிகளும் ஊழிவாயனிடம் வேலைக்கு இருக்கிறார்கள். இவைகள் பூதங்கள். ஆனால் குள்ள பூதங்கள். ஆண் பூதங்களுகுப் பூகன்கள் என்றும் பெண் பூதங்களுக்குப் பூகிகள் என்றும் பெயர். குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பார்த்தாலே சிரிக்க வைக்கும் தோற்றத்தில் இவைகள் இருக்கும். ஆனால் அபார சக்தி பெற்றவை. ஊழிவாயனால்தான் அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை செய்ய வைக்க முடிந்தது. நிலத்தைக் குடைந்து சென்று பூமியின் நடுவில் இருக்கும் நெருப்புக் குழம்புகளை குண்டரப் பட்சிகளுக்கு உணவாகக் கொண்டு வருவதும் பூகன்களின் வேலைகளில் ஒன்று.

சரி. அந்த மலைக்குகைக்குள்ளே போவோம். அதுவும் ஊழிவாயனின் அறைக்குள்ளே. வட்டமாக இருந்த அறையின் சுவற்றில் மாயத்தீவட்டிகள் எரிந்தன. நெருப்பு எரிகையில் சுடுமல்லவா. அப்படிச் சுடாமல் இருக்கத்தான் இந்த மாயத்தீவட்டிகள். வேறொரு அறையில் பூகிகள் நெருப்பு உண்டாக்குவார்கள். ஆனால் தந்திரமாக அந்த நெருப்பின் ஒளியை மட்டும் மந்திரக்கயறுகளின் வழியாக மாயத்தீவட்டிக்குக் கொண்டு வந்திருக்கிறான் ஊழிவாயன். அந்த அறையிலேயே குமிழ் பொறிகளும் வைத்திருக்கிறான். அவைகளைத் திருகி வெளிச்சத்தின் அளவைக் கூட்டவும் குறைக்கவும் கூட அவனால் முடியும்.

அப்படிப் பட்ட ஊழிவாயன் எப்படியிருப்பான் தெரியுமா? ஏழு அடி உயரம். பரந்து விரிந்த உடற்கட்டு. இடுப்பில் ஒரு ஆடை. அது குண்டரப்பறவைகளின் தோலால் ஆனது. பொன்னிறத்தில் பளபளத்தது. தலைமுடி வளர்ந்து இடுப்புவரை தொங்கியது. அதே நேரத்தில் உச்சந்தலையில் கூம்புக்குடுமி ஒன்று. நெஞ்சில் உள்ளங்கையளவு பெரிய வைரம் பதித்திருந்தான். அமைதி காணாத முகமும் உள்ளமும். தேவையில்லாத பரபரப்பும் வெறுப்பும் முகத்தில்.

அறைக்குள் நுழைந்தவன் முதலில் மாயத்தீவட்டிகளின் ஒளியைக் குறைத்து இருட்டாக்கினான். ஆனாலும் அவன் அந்த அறைக்குள் அவனால் மிக எளிதாக நடமாட முடிந்தது. கையில் வைத்திருந்த தடியால் தரையில் ஒரு இடத்தில் மூன்று முறை தட்டினான். உடனே தரை திறந்து உள்ளிருந்து ஏழு ஆளுயர கருப்பு உருளைகள் மேலே வந்தன. முதல் உருளையின் முன் சென்று கைத்தடியை நீட்டினான். உருளையின் மேல் பகுதியில் சிறிய செவ்வகம் திறந்தது. அதன் வழியாக ஊதாநிறத்தில் வெளிச்சம் வந்தது. செவ்வகச் சன்னலில் ஒரு அழகான பெண்ணின் முகம் தெரிந்தது. ஊதா நிறத்திலுள்ள அவளுடைய மேனியிலிருந்துதான் அந்த ஒளி வந்தது. அவள் வாய் திறந்து பேசினாள்.

"ஊழிவாயா...ஆழி போல் ஏரிசூழ் கூம்புமலைத் தலைவா...வைர நெஞ்சம் என்று ஊரார் சொல்வர். அந்த வைரத்தையே நெஞ்சில் பதித்தவா...என்னைப் பாரு...என்னைச் சேரு. நீயின்றி வாழ்க்கை சேறு. நல்ல மறுமொழி ஒன்று கூறு." கேட்ட குரலில் தாபமும் மோகமும் பொங்கிப் பெருகின.

கேட்கும் பொழுதே ஊழிவாயன் உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்திற்குச் சென்றான். படக்கென்று தடியைக் காட்டி உருளையை மூடினான். அடுத்த உருளைக்குச் சென்று அதே போலத் திறந்தான். இந்த முறை கருநீலநிற ஒளி வந்தது. மீண்டும் பெண்ணின் முகம். ஆனால் அதே முகம். ஆனால் மேனி கருநீலநிறத்தில் இருந்தது. வாய் திறந்து பேசினாள்.

"தலைவா....வானம் காத்திருக்கிறது. அந்த வானத்தில் நிலவு காத்திருக்கிறது. நிலவில் ஒளியும், ஒளிக்குள் குளுமையும், குளுமைக்குள் ஆசையும் காத்திருக்கின்றன. காத்திருப்பது சுகம்தான். அந்தச் சுகத்திற்குச் சுகத்தைக் கொடுக்க நீ வா!" குரலில் மோகத்தின் அளவு கொஞ்சம் குறைந்திருந்தாலும் காதல் எக்கச்சக்கமாக இருந்தது.

மேலே பேச்சைக் கேட்காமல் மூடினான். அடுத்த உருளையைத் திறந்தான். அதே முகம். ஆனால் நீலநிறம். அந்த அறை முழுவதும் நீலம் பரவியது. "தலைவன் ஒருவன் இருந்தால் தலைவி ஒருத்தி வேண்டும். இந்தக் கூம்புமலை தலைவியைக் காண்பது எப்பொழுது? உனது அரியணையிலே நானும் அமர்ந்து தலைவியாகி உன்னுடைய கூம்புமலையை ஆள்வது எப்பொழுது?" கேட்கும் பொழுதே நெஞ்சில் நஞ்சு சேர்வது போல இருந்தது ஊழிவாயனுக்கு. படக்கென்று மூடிவிட்டு அடுத்த உருளையைத் திறந்தான்.

ஆம். அதே பெண். ஆனால் பசுமை நிறம். அந்த அறை அழகிய வசந்தகாலப் புல்தரைபோலத் தோன்றியது. "ஊழிவாயா, நீ வாழ்வதற்கு நல்லதொரு வழியைச் சொல்கிறேன். இந்த வையகம் புகழும்படி நீ மெச்சப்படும் நிலையை அடைவதற்கான வழிமுறை நான் அறிவேன். நீ அதைக் கேள்." மோகம் காணமல் போய்....காதல் கறைந்து போய்....ஆசை அற்றுப்போய்...ஆனால் நல்லது சொல்லும் திறம் மட்டுமே பேச்சில் இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து கேட்காமல் உருளையை மூடிவிட்டு அடுத்த உருளைக்குச் சென்றான்.

மஞ்சள் பளபளக்க அதே பெண்ணின் முகம் மீண்டும் தோன்றியது. அந்த அறையே பொன்னறையாக மிளிர்ந்தது. அவள் பேசினாள். நல்ல பொன்மொழிகளைச் சொன்னாள். அவைகளைக் கேட்டும் மனநிலை அவனுக்கு இருக்கவில்லை. அடுத்த உருளைக்குச் சென்றான். இந்த முறை ஒளிர்காவி நிறம். பொன்மொழிகள் மறைந்து குரலில் சீற்றம் தெரிந்தது. "ஊழிவாயா...என்னை அடைத்து வைத்திருப்பது உனக்கு நல்லதைத் தராது. அழிவையே தரும். ஆகையால் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்னை விடுவிப்பாய்." அந்தப் பெண்ணின் பேச்சை மதிக்காமல் கதவை மூடிவிட்டு கடைசி உருளைக்குச் சென்றான்.

செக்கச் செவேல் என்ற ஒளி அறையை நிறைத்தது. குருதி பெருகிய போர்க்களத்தில் இருப்பது போல உணர்ந்தான் ஊழிவாயன். "மூடனே. என்னைப் பிடித்து வைத்திருப்பதனால் நீ உன்னுடைய இறுதி முடிவுக்கு அழைப்பிதழ் விடுத்திருக்கிறாய். வீணாய் மண்ணோடு மண்ணாகும் முன்னே என்னை விடுதலை செய்து பிழைத்துப் போவாய். இல்லையேல் உனது அறிவிழந்து ஆற்றலிழந்து....உனக்காக வேலை செய்யும் பூகன்களையும் பூகிகளையும் இழந்து குண்டரப் பறவைகளையும் கூம்புமலையையும் சுற்றியுள்ள ஏரியையும் இழந்து பிண்டமாகத் திரிவாய்."

தொடரும்....

அன்புடன்,
ஜிரா என்ற கோ.இராகவன்

26 comments:

said...

\\தலைவா....வானம் காத்திருக்கிறது. அந்த வானத்தில் நிலவு காத்திருக்கிறது. நிலவில் ஒளியும், ஒளிக்குள் குளுமையும், குளுமைக்குள் ஆசையும் காத்திருக்கின்றன. காத்திருப்பது சுகம்தான். அந்தச் சுகத்திற்குச் சுகத்தைக் கொடுக்க நீ வா!" குரலில் மோகத்தின் அளவு கொஞ்சம் குறைந்திருந்தாலும் காதல் எக்கச்சக்கமாக இருந்தது.\\

அழகான காதல் வரிகள்!

இந்த பாகம் ரொம்ப நல்லாயிருக்கு ராகவன்,
ஒவ்வொரு வண்ணத்திற்கும் அரற்கு தகுந்தாற்போல் வார்த்தைகளும் உணர்ச்சிகளும் அருமை!

said...

//குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பார்த்தாலே சிரிக்க வைக்கும் தோற்றத்தில் இவைகள் இருக்கும்.//

படிக்கும் போதே சிரிப்பா வந்துது..கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு..அடுத்த பகுதிக்கு ஆர்வமாக காத்திருக்கிறேன் :)

said...

// Divya said...
அழகான காதல் வரிகள்!

இந்த பாகம் ரொம்ப நல்லாயிருக்கு ராகவன்,
ஒவ்வொரு வண்ணத்திற்கும் அரற்கு தகுந்தாற்போல் வார்த்தைகளும் உணர்ச்சிகளும் அருமை! //

ஆகா மொதப் பின்னூட்டமே நட்சத்திரப் பின்னூட்டம். :)

ஆமாங்க வண்ணம் மாறுனா எண்ணம் மாற வேண்டியதுதானே. அதுதான் இங்கயும் நடந்திருக்கு.

said...

ஜிரா
படத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க! கூம்புமலை நல்லா வரைஞ்சிருக்காங்க!

ஏதேது, ஊழிமாயன் Dimmer/Dipper எல்லாம் வச்சிருப்பான் போல இருக்கே! அறிவியல் பூகன்கள்/பூகிகள் எல்லாம் அவன் டீமில் இருக்காங்களோ?

ஏழு கருப்பு உருளைகள் ரொம்பவே சூப்பர்! அப்படியே ஜகன்மோகினி எஃபெக்டு! :-)

said...

எல்லாம் ஒரு முடிவோடதான் எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க.

படம் எடுக்க வசதியா விஷுவலெஃபெக்டோட கதை வந்துக்கிட்டு இருக்கு.

வலை உலக Peter Jackson வாழ்க.

said...

கதை சூடு பிடிக்கிறது. வித்தியாசமான கதை - தொடர்ந்து படிக்கலாம்

said...

கதை சூப்பரா போகுது...

அப்படியே கண் முன்னாடி நிக்குது...

said...

அடடா!!
அண்ணாச்சி பட்டைய கிளப்புறீங்க!!!

ஆரி பாட்டர்,லார்டு ஆஃப் தெ ரிங்ஸ் எல்லாம் தமிழ்ல பாக்கறா மாதிரி இருக்கு!!
கலக்குங்க!! :-D

ரௌலிங் ராகவன் புகழ்!!
வாழ்க வாழ்க!!!!

said...

ஹெலிகாப்டரும் எண்ணெய் கிணறும் மின்சார விளக்கும் நினைவிற்கு வருகின்றன இராகவன். ஆனா இந்த ஆளுயர உருளைகளில் இருக்கும் பெண் தான் யாரென்று தெரியவில்லை. கொஞ்சம் சிந்தித்தால் அதுவும் தெளிவாகும்ன்னு நினைக்கிறேன். :-)

வண்ணங்கள் மாறினால் எண்ணங்கள் மாறுமா? சரி தான் போங்க. உங்கள் வார்த்தைகளில் இருக்கும் புதிய வருண தருமத்தைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் புரியும்ன்னு வவ்வால் படிச்சா சொல்லப் போறாரு. :-)

(வவ்வால். உங்களை இங்க வந்து கிண்டல் பண்றேன்னு கோவிச்சுக்க மாட்டீங்கங்கற தைரியத்துல இப்படி எழுதியிருக்கேன். நகைச்சுவை என்ற அளவில் மட்டும் எடுத்துக்கோங்க.)

said...

ஜிராண்ணா, அந்த ஜெகன்மோகினி படம் பார்த்தா மாதிரி இருக்கு!!

அப்புறம் ஒரு சந்தேகம் ஊதா வேற நீலம் வேறையா? நாங்க ஊரில் ரெண்டும் ஒரே மாதிரிதானே சொல்வோம்.

said...

// ஷாலினி said...
//குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பார்த்தாலே சிரிக்க வைக்கும் தோற்றத்தில் இவைகள் இருக்கும்.//

படிக்கும் போதே சிரிப்பா வந்துது..கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு..அடுத்த பகுதிக்கு ஆர்வமாக காத்திருக்கிறேன் :) //

வாங்க ஷாலினி. பூகன்களையும் பூகிகளையும் பாத்தாச் சிரிப்பாத்தான் இருக்கும். ஆனா அவங்க கிட்ட வம்பு வெச்சுக்கிட்டா அவ்வளவுதான். :)

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
படத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க! கூம்புமலை நல்லா வரைஞ்சிருக்காங்க! //

:) கண்டிப்பா...இந்தக் கதைக்குப் படம் போடப் பலர் கிட்ட கேட்டேன். வலையுலகத்துலதான். எல்லாரும் கை விரிச்சிட்டாங்க. தற்செயலா வந்து மாட்டுனான் நண்பன் ஒருவன். இந்த மாதிரிப் படமெல்லாம் போடக் கூடியவன். டேய்..போட்டுக்குடுறான்னு கேட்டேன். சரீன்னு ஒத்துக்கிட்டு போட்டுக் குடுக்குறான். :) தமிழ் தெரியாது. ஆங்கிலத்துல கதைய அவனுக்கு முழுக்கச் சொல்லியாச்சு. அவனுக்கு வரையறதுக்குத் தக்க உள்ள காட்சிகளை வரஞ்சு தருவான். அதான் அவன் பேரையும் படத்துல போட்டுட்டேன்.

// ஏதேது, ஊழிமாயன் Dimmer/Dipper எல்லாம் வச்சிருப்பான் போல இருக்கே! அறிவியல் பூகன்கள்/பூகிகள் எல்லாம் அவன் டீமில் இருக்காங்களோ? //

ஊழி"மாயன்" இல்லைங்க. வாயன். மாயன்லயே இருங்க. எல்லாமே உங்களுக்கு மாயன் தான். முருகனும் மாயன்..சிவனும் மாயன்...சக்தியும் மாயன். சரிதானுங்களே :)

// ஏழு கருப்பு உருளைகள் ரொம்பவே சூப்பர்! அப்படியே ஜகன்மோகினி எஃபெக்டு! :-) //

ஹி ஹி வலையுலக விட்டலாச்சார்யா ஆயிட்டோம்ல.. இனிமே அப்படித்தான்.

said...

ஜிரா கலக்குறிங்க..;))

\\\ஆரி பாட்டர்,லார்டு ஆஃப் தெ ரிங்ஸ் எல்லாம் தமிழ்ல பாக்கறா மாதிரி இருக்கு!!
கலக்குங்க!! :-D\\

வழிமொழிகிறேன்..;)

said...

துளசி மேடம் சொல்வதுபோல் visual effect நன்றாக வந்துள்ள்ளது.சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது..என்னுடன் சேர்ந்து என் மகளும் படிக்க ஆரம்பித்து விட்டாள் தங்க மரம்..

said...

//ஊழி"மாயன்" இல்லைங்க. வாயன். மாயன்லயே இருங்க. எல்லாமே உங்களுக்கு மாயன் தான்//
ஹிஹி...மாயமந்திரக் கதைங்கிறதுனால மாயன்-ன்னு சொல்லிட்டேங்க அண்ணாச்சி! கோச்சிக்காதீங்க! அது சரி...எங்க மாயன் கேரக்டர் ஒன்னு கதைல வைக்கறது! :-)

//வலை உலக Peter Jackson வாழ்க//
டீச்சர், தீர்ப்பை மாத்தி எழுதுங்க! ஜிரா Rowling Ragavan ஆக்கும்!

//CVR said...
ரௌலிங் ராகவன் புகழ்!!
வாழ்க வாழ்க!!!!//
அது! அது!
சென்ற இடுகையில் சொன்னா மாதிரி Rowling Ragavan என்றே அண்ணனை அனைவரும் அழைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

//ஊதா வேற நீலம் வேறையா? நாங்க ஊரில் ரெண்டும் ஒரே மாதிரிதானே சொல்வோம்//
கொத்ஸ்...அண்ணன் கலர் அத்தனையும் பிடித்துள்ளார்! அட VIBGYOR கலரைச் சொன்னேங்க!
Violet = ஊதா
Indigo = கருநீலம்
Blue = நீலம்
Green = பச்சை
Yellow = மஞ்சள்
Orange = ஒளிர் காவி
Red = சிகப்பு
ஜிராவைப் புடிச்சி விக்கிபசங்கள்-ல போடுங்க! அறிவியல் தமிழ் தானா வளரும்!

said...

// துளசி கோபால் said...
எல்லாம் ஒரு முடிவோடதான் எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க. //

ஹி ஹி ஆமாங்க டீச்சர். கதையின் முடிவோடதான் ஆரம்பிச்சிருக்கோம். :)

// படம் எடுக்க வசதியா விஷுவலெஃபெக்டோட கதை வந்துக்கிட்டு இருக்கு. //

ஆமா ஆமா...நாளப்பின்ன இத ஆலிவுட்டுல படமா எடுக்கனும்னு நெனைக்குறப்போ விஷுவலைசேஷன் டிரீட் வேணும்ல. அதுக்குத்தான்.

// வலை உலக Peter Jackson வாழ்க. //

ஆகா... பீட்டர் ஜாக்சன் எவ்ளோ பெரிய ஆளு. அவரு எங்க...நான் எங்க... :) நீங்களும் கும்மியில ஐக்கியமாயிட்டீங்க போல :)

// cheena (சீனா) said...
கதை சூடு பிடிக்கிறது. வித்தியாசமான கதை - தொடர்ந்து படிக்கலாம் //

ஆமாங்க சீனா... தொடர்ந்து படிச்சு ஒங்க கருத்துகளைச் சொல்லனும். :)

// வெட்டிப்பயல் said...
கதை சூப்பரா போகுது...

அப்படியே கண் முன்னாடி நிக்குது... //

கண் முன்னாடியா.... யாரு? அந்த உருளைக்குள்ள இருக்குற பொண்ணா? ;)

said...

// CVR said...
அடடா!!
அண்ணாச்சி பட்டைய கிளப்புறீங்க!!! //

எந்தப் "பட்டை"யச் சொல்றீங்க? அந்தப் பழக்கத்த விட்டு ரொம்பக் காலமாச்சே!!!

// ஆரி பாட்டர்,லார்டு ஆஃப் தெ ரிங்ஸ் எல்லாம் தமிழ்ல பாக்கறா மாதிரி இருக்கு!!
கலக்குங்க!! :-D

ரௌலிங் ராகவன் புகழ்!!
வாழ்க வாழ்க!!!! //

என்னய்யா இது...அந்தம்மா பேருக்குப் பின்னாடி எம் பேரப் போட்டுருக்கீங்க. அந்த அம்மாவோட ஐயா கோவிச்சுக்கப் போறாரு. இப்பிடியெல்லாம் குடும்பத்துல குழப்பத்த உண்டாக்க வேண்டாம் சீவியார்.

// குமரன் (Kumaran) said...
ஹெலிகாப்டரும் எண்ணெய் கிணறும் மின்சார விளக்கும் நினைவிற்கு வருகின்றன இராகவன். ஆனா இந்த ஆளுயர உருளைகளில் இருக்கும் பெண் தான் யாரென்று தெரியவில்லை. கொஞ்சம் சிந்தித்தால் அதுவும் தெளிவாகும்ன்னு நினைக்கிறேன். :-) //

சிந்திங்க சிந்திங்க. உங்களுக்குத் தெரியாததா! நீங்க சிந்திச்சா யார் யார் என்னென்னன்னு தெளிவாச் சொல்லீருவீங்களே. :)

// வண்ணங்கள் மாறினால் எண்ணங்கள் மாறுமா? சரி தான் போங்க. உங்கள் வார்த்தைகளில் இருக்கும் புதிய வருண தருமத்தைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் புரியும்ன்னு வவ்வால் படிச்சா சொல்லப் போறாரு. :-) //

ஒன்னும் சொல்ல மாட்டாரு. இது வேற...அது வேற....இது வர்ண ஆசிரமம் இல்லை. வர்ணத்தால சிரமம். :)

// இலவசக்கொத்தனார் said...
ஜிராண்ணா, அந்த ஜெகன்மோகினி படம் பார்த்தா மாதிரி இருக்கு!! //

ஹி ஹி...அப்ப ஜெயமாலினி டான்ஸ் ஒன்னு கதைல சேத்துருவோமா? :)

// அப்புறம் ஒரு சந்தேகம் ஊதா வேற நீலம் வேறையா? நாங்க ஊரில் ரெண்டும் ஒரே மாதிரிதானே சொல்வோம். //

ஒரே மாதிரிதான். வெவ்வேறன்னு வெச்சிக்கோங்களேன். ஊதா வானம்னு எப்பவாச்சும் சொல்லீருக்கீங்களா? :) (அப்பாடி மடக்கியாச்சி. டெக்னிக்கலா கேள்வி கேக்குறாங்கப்போய்)

said...

ஊதாவும் நீலமும் வேற வேறன்னு என் பொண்ணு சொல்றா. நான் எப்பவுமே ஊதாவை நீலம்ன்னும் நீலத்தை ஊதான்னும் தான் சொல்லுவேன். அவ திருத்துவா.

ஊதான்னா Violet(அமெரிக்காவுல Purple). நீலம்னா Blue. சரி தானா?

said...

குமரன் பொண்ணு சொன்னது மெத்தச் சரி.

said...

ஜிரா,

வாராத்துக்கு 2 பதிவாவது போடுங்க சார்.

இன்னிக்குதான் 2ஆம் பகுதி படிச்சேன், அதுக்குள்ள முதல் பகுதி மறந்துட்ட மாதிரி ஒரு பீலிங்.

said...

அருமையா இருக்குங்க கதை. ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி கதை படிச்சு. தொடர வாழ்த்துக்கள்.

//ரௌலிங் ராகவன் புகழ்!!
வாழ்க வாழ்க!!!! //

என்னய்யா இது...அந்தம்மா பேருக்குப் பின்னாடி எம் பேரப் போட்டுருக்கீங்க. அந்த அம்மாவோட ஐயா கோவிச்சுக்கப் போறாரு. இப்பிடியெல்லாம் குடும்பத்துல குழப்பத்த உண்டாக்க வேண்டாம் சீவியார்//
இது ரொம்ப சூப்பருங்க :) :) :)

said...

//இன்னிக்குதான் 2ஆம் பகுதி படிச்சேன், அதுக்குள்ள முதல் பகுதி மறந்துட்ட மாதிரி ஒரு பீலிங்.//

வழிமொழிகிறேன்

(அப்பாடா. எம்புட்டு நாளாச்சு வழிமொழிஞ்சு. இந்த ரிப்பீட்டே வந்ததுல இருந்து எல்லாரும் வழிமொழியிறதை மறந்துட்டாங்கப்பூ)

எனக்கு முதல் பகுதி மறந்து போனாலும் இன்னொரு தடவை படிக்க சோம்பேறித்தனம். புரிஞ்சவரைக்கும் சரின்னு ரெண்டாவது பகுதி படிச்சேன். நல்ல வேளைக்கா முதல் பகுதிக்கும் இதுக்கும் அம்புட்டு தொடர்பில்லாமப் போச்சு. மூணாவது பகுதி படிக்கிறப்ப முதல் ரெண்டு பகுதிகளையும் படிக்கணும் போல.

***

இந்தப் பின்னூட்டத்தை எத்தனை முறை போட்டேன்னு தெரியலை. இணையத் தொடர்பு முறிஞ்சுக்கிட்டே இருக்கு. இது தான் கடைசி முயற்சி. :-)

said...

பதிவை ஏற்கனவே படிச்சிட்டேன், படத்தோடு வருவது சிறப்பு.

காதல் வர்ணனையில் சாண்டில்யனின் எல்லை வரை போகாமல் பார்த்துக் கொள்ளவும் ;-)

said...

//காதல் வர்ணனையில் சாண்டில்யனின் எல்லை வரை போகாமல் பார்த்துக் கொள்ளவும் ;-)//

காதல் வர்ணணைய்க்கு எல்லையே இல்லை நண்பரே. சாண்டில்யனின் காதல் வர்ணணைகள் அமரத்துவம் பெற்றவை. எக்காலத்துக்கும் பொருந்தும். எப்போதும் ரசிக்கலாம். மெல்லிய கோட்டைத் தாண்டாமல் அழகாக வர்ணணை செய்வார். படித்துப் படித்து இன்பம் கணடவர்கள் நாங்கள்.

said...

அடுத்த பதிவு போட்டிருப்பீங்கன்னு வந்தேன்... .

said...

கதை நடை மிக அருமை.
வித்தியாசமாக உள்ளது.
இந்தக் கருக்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?
வாசிக்கும்போது மாயாஜால உலகில் சஞ்சரித்து வந்ததைப் போல உணர்கிறேன்.
தொடருங்கள்... :)

said...

//இன்னிக்குதான் 2ஆம் பகுதி படிச்சேன், அதுக்குள்ள முதல் பகுதி மறந்துட்ட மாதிரி ஒரு பீலிங்.//

இதுக்குத்தான் என்னை மாதிரி மொத்தமா படிக்கணும் :)