Monday, April 21, 2008

தங்க மரம் - 10

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்

பாகம் - 10

கஜன் ஆலோரின் அரச ஆனை. அறிவிலும் செயலிலும் மற்ற ஆனைகளையெல்லாம் கட்டிக்காக்கும் சிறந்த ஆனை. ஆகையால்தான் அதை பூமிக்கு அனுப்ப முடிவெடுத்தாள் லிக்திமா. மாயப்பெட்டியிலும் மாயக்கோலிலும் இதுவரை நடந்தவைகளை ஒலியொளிப்படமாகப் பதிவு செய்து, கஜனுக்கு உதவுமாறு வேண்டுகோள் வைத்தாள். அந்த வேண்டுகோள் வைத்த கடைசிப் பகுதியைத்தான் கதிரவனும் சித்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கதையைப் படிக்கின்ற அனைவருக்கும் வரும் ஐயம் இவர்கள் இருவருக்கும் வந்தது. இவையெப்படி அவர்கள் தந்தையார்களிடம் கிடைத்தனவென்று! தந்தையோ ஆனைப்பிரியர் என்று தெரியும். அதனால் எப்படியோ கஜன் அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று நினைத்தார்களே தவிர..அவர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

ஆனால் ஒன்று. அவர்களுக்குக் கடமை புரிந்து போனது. முத்தைக் காப்பாற்ற வேண்டும். ஆலோருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு எப்படிக் கண்டுபிடிப்பது என்று குழம்பித்தான் போனார்கள்.

திடீரென்று சடசடவென்று பேரோசை எழுந்தது. என்ன நடக்கிறது என்று ஊகிக்கும் முன்னரே ஏதோவொன்று மரத்தில் விழுந்து...கிளைகளையெல்லாம் ஒடித்துக் கொண்டு பொத்தடீர் என்று மண்ணில் விழுந்தது. பாஆஆஆஆஆம் என்ற பிளிறல் வேறு கேட்டது. ஆம் பிடிமாதான் அங்கு வந்து விழுந்திருந்தாள். ( பூமியின் சுற்றுவட்டத்திற்குள் நுழைந்ததும் தனிமாவும் பிடிமாவும் கீழே விழுந்ததை நினைவில் கொள்க)

ஆலமரத்திலிருந்து இருவரும் கீழே விழுந்தார்கள். ஒலியொளிக்காட்சியும் கீழே விழுந்து லிக்திமா வேண்டுகோள் விடுக்கும் காட்சி அதில் தெரிந்தது.
பிடிமாவின் இறக்கையைக் கண்டதும் அது ஆலோரின் ஆனையாகத்தான் இருக்க வேண்டும் என்று நண்பர்களுக்குப் புரிந்தது. ஒருவேளை கஜனாகவே இருக்குமோ என்று நினைத்தார்கள். ஆனால் விழுந்த ஆனை மிகவும் இளமையாக இருப்பதால் குழம்பினார்கள்.

தட்டுத்தடுமாறிக் கிடந்த பிடிமாவைக் கதிரவனும் சித்திரையும் எழுப்ப முயற்சித்தார்கள். ஆனால் பிடிமாவே இறக்கைகளை விரித்து எழுந்து விட்டது. அடி சறுக்கிய ஆனை எழாது என்ற தமிழ்ப் பழமொழியைப் பிடிமா பொய்யாக்கி விட்டதே என்று இருவருக்கும் திகைப்பு. எழுந்ததும் நன்றி சொல்ல முனைந்த பிடிமாவின் கண்களில் முதலில் பட்டது வட்டவடிவமான திரையில் தெரிந்த லிக்திமாதான். பிடிமாவின் மகிழ்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று விளக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. ஆமாம். தனிமாவைக் காணவில்லை. தனிமா இல்லாத தனிமை பிடிமாவைக் கலவரப்படுத்தியது.

நிலமையை ஓரளவு புரிந்து கொண்டார்கள் நண்பர்கள் இருவரும். ஆகையால் பிடிமாவைச் சமாதானப் படுத்த முனைந்தார்கள். அதே நேரத்தில் தனிமா வேறொரு இடத்தில் வேறொரு சந்திப்பில் இருந்தாள். ஆம். ஒரு பூகனுடன்.

காற்று மண்டலத்தில் சர்ரென்று இழுக்கப்பட்ட தனிமா எங்கு விழுகிறோம் என்று தெரியாமலே ஒரு குளத்தில் விழுந்தாள். விழுந்தவள் எந்தத் தரையையும் தட்டாமல் நீண்ட நேரம் தண்ணீருக்குள் போய்க்கொண்டேயிருந்தாள். நீண்ட நேரம் கழித்து அடித்தரையைத் தட்டினாள். அந்த இடத்தில் சின்னச்சின்ன மலைகள் இருந்தன. மலை என்பதை விட பெரிய பெரிய மேடுகள் என்று சொல்லலாம்.

என்ன செய்வது என்று எழுந்து நின்ற தனிமாவிற்கு அந்த மேட்டில் இருந்த ஒரு பொந்து தெரிந்தது. சற்றுக் குனிந்து நிமிர்ந்து பொந்துக்குள் நுழைந்தவளுக்கு பெரும் வியப்பு. பொந்துக்கு வெளியிலோ நிறைய நீர். பொந்துக்கு உள்ளேயோ ஒரு சொட்டு நீர் இல்லை. அழகிய சிறிய அரண்மனை போல இருந்தது. உள்ளே பிடிமா இருக்கிறாளா என்றுதான் முதலில் பார்க்கத் தோன்றியது. ஆனால் பிடிமாவோ கண்ணில் படவில்லை. வேறு யாரும் இருப்பது போலக்கூடத் தெரியவில்லை. இந்த இடத்தைப் பற்றி எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பொந்து அரண்மனைக்குள் நுழைந்தாள். ஓரிடத்தில் நிறைய நாற்காலிகள் கற்களில் செதுக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தைப் பார்த்தால் பொழுது போக்கும் இடம் போல இருந்தது. ஆனால் போக்கத்தான் யாரும் இல்லை. சரியென்று களைப்பினால் அங்கிருந்த நாற்காலியொன்றில் சாய்ந்து அமர்ந்தாள். அப்படியே கண்கள் செருகின.

"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்" என்ற ஓசையைக் கேட்டுப் படக்கென்று விழித்தவள் கண்முன்னே நின்று கொண்டிருந்தது ஒரு பூகன். கையில் பளபளப்பான வேலைப்பாடமைந்த தங்கக்கத்தியை வைத்து தனிமாவைக் குறி பார்த்துக்கொண்டிருந்தது.

ஏதோ சொல்வதற்காக தனிமா வாயைத் திறந்தாள். அதற்குள் அந்த பூகன் அவள் மேல் பாய்ந்து கீழே தள்ளி கத்தியை அவள் கழுத்துக்குக் குறி வைத்தது. தனிமா சுதாரித்துக் கொண்டாள். மனதினாலேயே அந்த பூகனைக் கீழே பிடித்துத் தள்ளினாள். துள்ளிப் போய் தொலைவில் விழுந்தது அந்தப் பூகன். படக்கென்று கத்தியை அவள் மேல் வீசி விட்டு..தானும் பாய்ந்தது. ஆனால் தனிமா மனதினாலேயே அந்தக் கத்தியைப் பாதி வழியில் நிறுத்தினாள். பாய்ந்த பூகனையும் வழியிலேயே நிப்பாட்டினாள். தப்பிக்க முடியாத பூகன் அந்தரத்தில் தத்தளித்தது. அந்தரத்தில் நின்று கொண்டிருந்த தங்கக் கத்தியை தன்னிடம் வரவழைத்தாள் தனிமா. அதைப் பார்த்ததும் பூகனின் கண்கள் அச்சத்தால் விரிந்தன.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

8 comments:

said...

ம் நல்லா இருக்கு. வேற்று கிரகத்தில் இருந்து வந்திரங்கியவர்களை பூமியின் சார்பாக வரவேற்கிறோம்.... :)

said...

ம்ம்ம்..;)

said...

ஆர்வம் அதிகமாகிறது..

said...

நல்லா இருக்கு இராகவன். ஒருவழியா எல்லாரும் பூமிக்கு வந்துட்டாங்க!

பூமியிலும் அந்த யானையால் பறக்க முடியுமா ஜீரா!

said...

// தமிழ் பிரியன் said...

ம் நல்லா இருக்கு. வேற்று கிரகத்தில் இருந்து வந்திரங்கியவர்களை பூமியின் சார்பாக வரவேற்கிறோம்.... :) //

ஆமா ஆமா உங்களோட சேந்து நானும் வரவேற்கிறேன். :)

// கோபிநாத் said...

ம்ம்ம்..;) //

இந்த ம்ம்ம்க்கு என்னங்க பொருள்? :) ஆனா எனக்குப் புரிஞ்சிருச்சு ;)

said...

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க!! :))

said...

ஐ. பூகனோட சண்டை அருமையா இருக்கே. :-))

said...

தங்க மரம் கதைமாந்தர் மரம் (character tree) பத்தி சென்ற பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்தேன்! மறக்காமல் கொடுத்த ஜிராவும் ஒரு கற்பக மரம் தான்! :-))