Sunday, April 13, 2008

தங்க மரம் - 9

நண்பர்களே இந்தியப் பயணம் மற்றும் பல காரணங்களால் இந்தத் தொடர் சற்றுத் தடைபட்டுப் போனது. இனிமேல் தொடர்ந்து ஓடும். :) சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 9

ஆலோரின் அரண்மனையில் அவசரக்கூட்டம். ஆலோரின் அரசி, லிக்திமா, விண்டா மற்றும் மெரிமா ஆகியோர் கூட்டத்தில் இருந்தனர். அனைவருக்கும் நிலமையின் தீவிரம் புரிந்திருந்ததால் ஒருவித அமைதியில் இருந்தனர். அரசிதான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். தேவதைகள் அமைதியாக இருக்குமானால் மக்களைக் காப்பாற்ற அரசியே பேச்சைத் தொடங்கினாள்.

"ஆலோரின் தேவதைகளே... ஆதிதான் ஆலோரைப் படைத்த தெய்வம் என்று அனைவரும் அறிவோம். அப்படியிருந்தும் தேவதைகளாகிய உங்களை வணங்கி வாழ்ந்து வந்தோம். இன்று உங்களுக்குள்ளேயே பிரச்சனை. ஒன்று முத்தைக் காப்பாற்ற முடியாமல் மூன்று தேவதைகள் இருந்தும் தொலைத்தது. இரண்டாவது நிலமகனாகிய சாண்டாவிற்கு மாற்றாக யார் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள் என்பது."

குறுகுறுத்து லிக்திமா அமைதியாக இருக்கையில் பொங்கினாள் மெரிமா. "அரசி. இந்த நாற்காலியில் வெறும் அறுபது ஆண்டுகள் இருந்து விட்டு அனைத்தும் அறிந்தவர் போல் பேச வேண்டாம். தேவதைகளானாலும் ஆலோரின் மூத்த மக்கள் நாங்கள். எங்களில் மிகப் பெரியவர் சாண்டா. அவருடைய வலையில் வீழ்ந்த காரணத்தினால் எங்களை அவமதித்துப் பேச வேண்டாம். சாண்டாவைப் போல நாங்களும் விலகிப் போனால் ஆலோர் என்னாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடமையையும் பொறுப்பையும் அறிந்தே இங்கு இன்று பேசிக் கொண்டிருக்கிறோம்."

பேச்சு வேறுவிதமாகப் போவதைக் கண்டு அதைத் தடுக்க விரும்பினாள் லிக்திமா. "மெரிமா.. அமைதி கொள். நீயின்றி அமையாது உலகு. உனது சினம் அழிவையே உண்டாக்கும். அது நன்றன்று." அரசியை நோக்கிச் சொன்னாள். "அரசி. பொறுமை. இங்கு அனைவருமே ஆலோரின் நலம் விரும்புகின்றவர்களே. நமக்குள்ளே பிளவு உண்டாக வேண்டிய நேரமல்ல இது. எதிர் வரும் சோதனை தரப்போகும் வேதனையிலிருந்து மீள்வதற்கு நாம் செய்ய வேண்டிய சாதனையை யோசிப்போம். என்னிடம் ஒரு வழி இருக்கிறது. அனைவரும் சற்றுக் கவனமாகக் கேளுங்கள்."

அனைவரிடம் ஒரு பரபரப்பும் அதை மீறிய ஆர்வமும் எழுந்தது. ஆற்றலரசியின் திட்டம் என்னவென்று ஊன்றிக் கேட்டார்கள்.

"முத்தைக் கண்டுபிடிப்பது அவசியமே என்றாலும் முதலில் ஆலோரின் பொறுப்பு பெரியது. மண்மகன் என்று சாண்டாவிற்கு மட்டுமே பெயர். ஆனால் இப்பொழுது அது தனிமாவிற்கும் பொருந்தும். உண்மையிலேயே மண்ணின் மகள் அவள். அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பு அவளது பிஞ்சுத் தோள்களில். அதை அவள் செய்ய வேண்டியதற்கான ஆற்றலை என்னிடமிருந்தே பெறுவாள். அத்தோடு மெரிமாவும் விண்டாவும் சிறுது ஆற்றலை வழங்கினால் அனைத்தும் நலமாகவே நடக்கும்.

இரண்டாவது பிரச்சனை முத்து. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கொண்டு சென்றது சாண்டா. சாண்டாவை என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. அரசி என்ற முறையில் நீயோ அல்லது கடவுள் என்ற வகையில் ஆதியோதான் குற்றத்திற்குத் தண்டனை வழங்க முடியும். முத்தைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மட்டுமே நாம் இப்பொழுது பார்க்க முடியும். அதற்கு முதலில் முத்து எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டும்."

இரண்டு கைகளையும் பாத்திரம் ஏந்துவது போலப் பிடித்தாள் லிக்திமா. உள்ளங்கையில் ஒளிப்பந்து ஒன்று தோன்றியது. மெல்லிய வெள்ளொளியாக இருந்தது அடர்ந்து பொன்னொளியானது. அது சுழன்று சுழன்று ஒரு பாத்திரமாகி ஒளி வீசியது. லிக்திமா கையை எடுத்த பிறகும் அந்தப் பொற்பாத்திரம் அந்தரத்தில் சுழன்று கொண்டேயிருந்தது."

லிக்திமா மெரிமாவைப் பார்த்துச் சொன்னாள். "நீர்மகளே.... இளநீரை அதில் நிரப்பு."

மெரியா தனது இரண்டு கைகளையும் சேர்த்து பாத்திரத்தில் காட்டினாள். மெழுகு இளகுவது போல இளகி அவள் கையிலிருந்து பாத்திரத்தில் நீரொழுகியது. தூய கண்ணாடி நீர் மிக மெலிதாக அழகாக பாத்திரத்தில் நிரம்பியது. ஆனாலும் வெற்றுப் பாத்திரமாகவே தெரிந்தது.

தன்னுடைய தலையிலிருந்து ஒரு முடியைப் பிடித்து இழுத்தாள் லிக்திமா. பொறிப்பொறியாக வண்ண நெருப்புத் துகள்கள் தெறித்தன. பிடுங்கப்பட்ட முடி நெருப்பு இழையாக ஜொலித்தது. அதை பாத்திரத்தில் போட்டாள் லிக்திமா. விண்டாவைப் பார்த்து, "விண்டா, வழி-வளியை பாத்திரத்தில் விடுக" என்றாள்.

ஹம்ம்ம்ம்ம்ம்மென்று மூச்சுக்காற்றை பாத்திரத்தில் விட்டான் விண்டா. நீரும் அதில் ஜொலிக்கும் இழையும் பாத்திரத்தின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுழன்றன. பாத்திரத்திலிருந்து ஒரு மெல்லிய நீர்த்திரை கிளம்பி விரிந்தது. அதில் பலப்பல அண்டங்கள் வரைபடமாகத் தெரிந்தன. லிக்திமா இட்ட நெருப்பு இழை ஒவ்வொரு அண்டமாக அதன் மீது நகண்டது.

"மூவரும் நன்றாகக் கேளுங்கள். இந்த இழையானது உலகம் முழுவதும் உள்ள அண்டங்களைத் தேடும். முத்தில் என்னுடைய ஆற்றல் இருப்பதால் அது எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடும். ஆனால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சற்று நாளாகும். கண்டுபிடித்த உடன் அந்த அண்டமும் அதிலுள்ள கிரகமும் இந்தத் திரையில் ஒளிரும். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்கலாம்."

லிக்திமா சொல்லி நாட்கள் வாரங்களாயின..வாரங்கள் மாதங்கள் ஆன ஒரு சமயத்தில் இழை ஒரு கிரகத்தைத் தொட்டு ஒளிர்ந்தது. அது பூமி. அங்கு அனுப்புவதற்கு லிக்திமா தேர்ந்தெடுத்தாள் கஜனை. அவனோடு ஒரு சிறிய மாயப்பெட்டியையும் மாயக்கோலையும் கொடுத்தனுப்பினாள். (இந்தப் பெட்டிதான் கதிரவனுக்கு முதலில் கிடைத்தது. மாயக்கோல் சித்திரையிடம் கிடைத்தது).

தொடரும்...

8 comments:

said...

அப்பாடா ஆரம்பித்துவிட்டீர்கள்.

அருமையாக இருக்கின்றது.

said...

//இந்தப் பெட்டிதான் கதிரவனுக்கு முதலில் கிடைத்தது. மாயக்கோல் சித்திரையிடம் கிடைத்தது).
//
அது எப்படி பூமிக்கு வந்து சேர்ந்தது?
அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க ! பாத்துக்கலாம்!! :-)

said...

ம்ம்ம்ம்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))

said...

அவ்வப்போது வந்து ,மகரந்தத்தை பார்த்துச் செல்வேன்...ஏமாற்றத்துடன்.... இனி...ம்.... தொடருங்கள்/...

said...

தடைப்பட்டுத் தான் வந்துவிட்டதே அது போதும் ;-)

பாத்திரப்படைப்புக்களுக்கு எப்படி இவ்வளவு தினுசாகப் பெயர் எடுக்கிறீங்க, லிக்திமா, மெரிமா, லிண்டாவத் தான் சொல்றேன ;-)

வழக்கம் போல் சுவாரஸ்யம்.

said...

சீக்கிரம் சீக்கிரம்! அடுத்த பகுதியைப் போடுங்க!

said...

இடைவேளைக்குப் பின்னர் தொடரும் தொடர் தொடர்ந்து வரட்டும் இராகவன். இல்லாவிட்டால் விரைவில் கதிரவனையும் மறந்துவிடுவோம் அவன் பெற்ற பெட்டியையும் மறந்துவிடுவோம். :-)

said...

// சிவமுருகன் said...

அப்பாடா ஆரம்பித்துவிட்டீர்கள்.

அருமையாக இருக்கின்றது.//

நன்றி சிவமுருகன். இனி தொடர்ந்து வரும்

//Blogger CVR said...

//இந்தப் பெட்டிதான் கதிரவனுக்கு முதலில் கிடைத்தது. மாயக்கோல் சித்திரையிடம் கிடைத்தது).
//
அது எப்படி பூமிக்கு வந்து சேர்ந்தது?
அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க ! பாத்துக்கலாம்!! :-) //

ஹி ஹி பாத்துக்கலாம்... அடுத்த பகுதியில பாத்துக்கலாம். :)