Tuesday, January 03, 2006

மயிலார் போன ஃபோரம்

இந்த 2006ல் இருந்து மயிலார் நம்ம கூடவே இருந்து பாத்து காப்பாத்தப் போறதால, இனிமே நம்ம வாழ்க்கைல மயிலார் இல்லாம பதிவு போட முடியுமா? நம்ம மயிலார் முருகன் அனுப்பிச்ச ரத்னக் கலாப மயிலார்தான்.

இன்னைக்கு ஜனவரி ஒன்னு. ஊரெல்லாம் கோலகலமா இருக்கே. நாமளும் forum வரைக்கும் போயிட்டு வரலாமுன்னு நெனச்சேன். அதாவது ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு. ஒடனே கெளம்பீட்டாரு மயிலாரு. சொல்லச் சொல்ல கேக்கவேயில்லை. அந்த மாதிரி எடத்துக்கெல்லாம் போனதில்லைன்னு தோகைய விரிச்சிக்கிட்டு ஒத்தக்கால்ல நிக்குறாரு. வேற வழியில்லாம கூட வரச் சொன்னேன்.

நான் பைக்குல போகும் போது அவரு மட்டும் ஜிவ்வுன்னு வானத்துல எம்பி சர்ருன்னு பறந்தாரு. டிராஃபிக்காவது! சிக்னலாவது! சட்டுன்னு பொறாமையா இருந்துச்சு. சரி. அதையெல்லாம் பாத்தா முடியுமா? மால்ல போய் வண்டிய நிப்பாட்டுனேன். ஒரே கூட்டம். நெரிசக்காடு.

"ஏம்ப்பா ராகவா! இங்க என்ன திருவிழா நடக்குதா? பெரிய கோயிலா இருக்கும் போல!"

"ஐயா சாமி. இது கோயில் இல்ல. கடை. பெரீஈஈஈஈஈஈஈய்ய கடை. விக்கிரமாதித்தன் கதைல வர்ர கதைக்குள்ள கதை மாதிரி கடைக்குள்ள கடை. ஒரு கடைக்குள்ள பல கடை. ஒவ்வொன்னும் ஒரு கடை." முடிஞ்ச வரைக்கும் விளக்குனேன்.

நீட்டமான கழுத்தைத் தூக்கி நாலு பக்கமும் பாத்தாரு. மேலையும் கீழயும் கழுத்து ரெண்டு வாட்டி ஏறி எறங்குச்சு. நான் நடக்கத் தொடங்குனதும் கூடவே வந்தாரு. வர்ரவங்க மேல இடிக்கக் கூடாதுன்னு தோகையை இறுக்கி நெருக்கி வெச்சுக்கிட்டே நடந்தாரு.

ஒரு எடத்துல போனதும் கமகமன்னு வாட வந்துச்சு. மயிலார் கண்ணு பெரிசா விரிஞ்சது.

"ராகவா! என்னவோ வாட வருது பாரு. ஜம்முன்னு இருக்கு."

"மயிலாரே! அது மக்காச்சோளம். நல்லதா உதுத்து வேக வெச்சி கூட உப்பும் மெளகாப் பொடியும் வெண்ணெய்யும் போட்டுத் தர்ராங்க."

"அட அப்படியா! நமக்கும் கொஞ்சம் வாங்கி எரச்சு விட்டா கொத்தித் திம்போமுல்ல."

பாவம் பறந்து வந்ததுல மயிலாருக்குப் பசிச்சிருக்கும் போல. ஒரு பெரிய கப்பு வாங்குனேன். கீழ பல பேரு நடக்குற எடங்குறதால கைல போட்டுக் காட்டுனேன். ஒவ்வொன்னாக் கொத்திக் கொத்திச் சொகமாத் தின்னாரு. தலையக் குனிஞ்சு ஒன்னக் கொத்துறதும்....அதையே வானத்தப் பாத்துக்கிட்டு முழுங்குறதும்....அது தொண்டைல ஜில்ல்லுன்னு போறதும்...அடடா! என்ன அழகு தெரியுமா!

"ராகவா! இந்த மக்காச்சோளம் எவ்வளவு?"

"முப்பது ரூவா ஒரு கப்பு."

மயிலாருக்கு சடக்குன்னு ஒரு சோளம் குறுக்க விழுந்திருச்சு. "என்னது? முப்பது ரூவாயா? கைப்பிடிதான இருந்துச்சு. அதுக்கே முப்பது ரூவாயா?"

"மயிலாரே, இது மக்காச்சோளமாயிருந்தா நாலஞ்சு ரூவாய்க்கு விக்கலாம். அத வெளிய தெருவுல விக்குறாங்களே. நீளமா நெருப்புல வாட்டி. இது கார்ன். பேரே வெளிநாட்டுப் பேரு. பெறகு வெல இருக்காதா?" நான் சொன்ன வெளக்கம் மயிலாருக்குத் திருப்தியாயில்லைன்னு அவரு நடையிலேயே தெரிஞ்சது.

அப்புறம் அப்படியே தானா மேல ஏறும் படீல ஏறி லேண்டு மார்க்குங்குற புத்தகக் கடைக்குப் போனோம். வரிசையா இருந்த புத்தகங்கள ஒரு நோட்டம் விட்டுட்டு மாடிக்குப் போயி தமிழ் சினிமா வீசீடி ஒரிஜினல் வாங்கலாமுன்னு போனோம். ஒவ்வொன்னா எடுத்துப் பாத்தேன். பழசு புதுசுன்னா எல்லாம் இருந்துச்சு. மயிலாரும் பார்வைய ஓட்டிக்கிட்டு இருந்தாரு. திடீருன்னு தலையக் குனிஞ்சி குனிஞ்சி என்னவோ பண்ணுனாரு. உக்காந்து உக்காந்து எந்திரிச்ச மாதிரி இருந்தது. படக்குன்னு தோகைய வேற விரிச்சிட்டாரு. எனக்கு மானமே போன மாதிரி ஆயிருச்சி.

"என்னாச்சு...ஏன் இப்பிடி பண்றீங்க? எல்லாரும் பாக்குறாங்க...கொஞ்சம் நிப்பாட்டுங்க." கட்டக் குரல்ல அழுத்திச் சொன்னேன்.

படக்குன்னு என்னய கோவமா ஒரு பார்வ பாத்தாரு. ஏதாவது தப்பாச் சொல்லீட்டமோன்னு கம்முன்னு நின்னேன். அங்கயிருந்த வீசீடிய சைக காட்டுனாரு. அது கந்தன் கருணை படத்தோட சீடி. அடக் கடவுளே!

"ஐயா! இது சினிமா. அதப் பாத்து இந்தப் போடு போடுறீங்க. படிக்காதவங்கதான் சினிமா பாத்து சாமியாடி கன்னத்துல போட்டுக் கிட்டா நீங்களுமாய்யா? ஒரு படத்தப் பாத்து...சரி. சரி....வாங்க எல்லாரும் பாக்குறதுக்குள்ள போயிருவோம்." கிடுகிடுன்னு நடந்து வெளிய வந்துட்டோம். மயிலார் செஞ்ச கூத்துல நா கையில எடுத்த வீசீடியக் கூட கீழ வெச்சுட்டு வந்துட்டேன். ச்ச!

எனக்கு இன்னும் மனசு கேக்கலை. இப்பிடிச் சின்னப்புள்ளத் தனமா பண்ணீட்டாரே. பாக்குறவங்கள்ளாம் இனிமே மயிலாரப் பாத்துச் சிரிப்பாங்களேன்னு நெனப்பு ஓடுது. மயிலாரும் தோகையத் தொங்கப் போட்டுக்கிட்டு அமைதியா தலையக் குனிஞ்சிக்கிட்டு பின்னாடியே வந்தாரு.

"எக்ஸ்கியூஸ் மீ" ஒரு நல்ல அழகான பொண்ணு. நல்ல பிரமாதமா இருக்கு. நானும் பதிலுக்கு இங்கிலீஸ்ல "யெஸ்"ன்னு சொன்னேன்.

ஆனா பாருங்க. "நாட் யூ"ன்னு சொல்லீட்டு அந்தப் பொண்ணு மயிலார் கிட்டப் போயிருச்சு.

"கேன் ஐ ஹேவ் அ ஃபோட்டோ வித் யூ?"ன்னு கூட்டீட்டுப் போயி போட்டோவும் எடுத்துச்சு அந்தப் பொண்ணு. மயிலார் நல்லா தொகைய பப்பரப்பாங்குன்னு விரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கொண்டைய சிலுப்பிக்கிட்டு நின்னாரு. ஃபோட்டோ எடுத்து அத அப்பிடியே வெள்ளைச் சட்டைல போட்டுக் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு சட்டய வாங்கிக் கிட்டு "தேங்க்ஸ்" சொல்லி மயிலார் கழுத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போயிருச்சு.

நான் ஃபியூஸ் போயி "வீட்டுக்குப் போகலாம். இல்லைன்னா லேட் ஆயிரும்"ன்னு சொன்னேன். இல்லைன்னா எத்தன பேரு இந்த மாதிரி ஃபோட்டோவுக்கு வருவாங்களோ!

சரீன்னு சொல்லீட்டு மயிலாரு கம்பீரமா தோகைய அசைச்சுக்கிட்டு விறுவிறுன்னு துள்ளலோட முன்னாடி போனாரு. நான் பின்னாடியே வேகமா ஓடுனேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

27 comments:

said...

ஆடு மயிலே விளையாடு மயிலே எங்கள்
ஆறுமுக நாதன் வர ஆடு மயிலே
போடு மயிலே தலையில் போடு மயிலே இங்கு
பொறாமையிலே ஆடுகின்றார் போடு மயிலே

இராகவனார் நல்ல பையன் தோகை மயிலே
இராப்பகலாய் போற்றுகின்றான் உன்னை மயிலே
ஈசன் மகன் இங்கு வர ஆடும் மயிலே
இனா வானா நானும் வந்தேன் இன்ப மயிலே

said...

ராகவன்,

மயிலார் நல்லா இருக்கார்.

அந்த ஷாப்பிங் மால் கட்டாயம் போயிரணும்.

said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா.

ஆரம்பமே அட்டகாசமாக இருக்குது. கலக்குங்க.

said...

// ஆடு மயிலே விளையாடு மயிலே எங்கள்
ஆறுமுக நாதன் வர ஆடு மயிலே
போடு மயிலே தலையில் போடு மயிலே இங்கு
பொறாமையிலே ஆடுகின்றார் போடு மயிலே

இராகவனார் நல்ல பையன் தோகை மயிலே
இராப்பகலாய் போற்றுகின்றான் உன்னை மயிலே
ஈசன் மகன் இங்கு வர ஆடும் மயிலே
இனா வானா நானும் வந்தேன் இன்ப மயிலே //

ஆகா பாட்டாவே படிச்சிட்டீங்களா! பிரமாதம். இது பெங்களூர் ரமணியம்மாள் பாட்டு மாதிரி இருக்கு.

ஈசன் மகன் குமரந்தானே. குமரனே வந்தாகி விட்டதே!

said...

// ராகவன்,

மயிலார் நல்லா இருக்கார்.

அந்த ஷாப்பிங் மால் கட்டாயம் போயிரணும். //

நன்றி டீச்சர். பெங்களூர் வாங்க. கண்டிப்பா போயிரலாம். இப்ப பெங்களூருல எங்க பாத்தாலும் மாலு மாலு மாலு ஷாப்பிங்குக்கு மாலு....

said...

// புத்தாண்டு நல்வாழ்த்துகள் அண்ணா.

ஆரம்பமே அட்டகாசமாக இருக்குது. கலக்குங்க. //

நன்றி தம்பி. பாராட்டுகள் ஊக்குவிக்கின்றன. இன்னும் சிறப்பாக எழுத முயல்கின்றேன்.

said...

Migavum nanraga irundhahdu..
Arpudhamaana karpanai kudhirai(sorry..mayil)

said...

நாங்கெல்லாம் ஃபோர்ம்க்கு கலர் மயிலு பார்க்கபோனா நீர் முருகன் மயிலோடவே போயிருக்கீர்!! சப்சே படே கில்லாடியா நீர்!! :)

எத்தனை மணிக்கு வந்தீங்க அங்க? நான் நைட்டு 8 மணிக்கா மேஞ்ச்சேன்! காணக்கண்கோடி வேண்டுமையா!! (நான் லேண்ட்மார்க்ல இருந்த முருகன் வீசீடிய சொன்னேன்! )

said...

//"முப்பது ரூவா ஒரு கப்பு."//

பரவாயில்லப்பு.. இங்க ஹைத்ராபாத் IMAXல இன்னும் வெல அதிகம்.

//காணக்கண்கோடி வேண்டுமையா!! (நான் லேண்ட்மார்க்ல இருந்த முருகன் வீசீடிய சொன்னேன்! )//

இளவஞ்சி... முருகனா இல்ல மயிலா நீங்க பார்த்தது.. (அட... ராகவன் சொல்ற மயிலுக்கு கூடா வேற அர்த்தம் இருக்கும் போல...)

:-)

said...

//ஈசன் மகன் குமரந்தானே. // இராகவன். ஈசன் மகன் அந்தக் குமரன். இந்தக் குமரன் இனா வானா. :-)

said...

// நாங்கெல்லாம் ஃபோர்ம்க்கு கலர் மயிலு பார்க்கபோனா நீர் முருகன் மயிலோடவே போயிருக்கீர்!! சப்சே படே கில்லாடியா நீர்!! :) //

ஹி ஹி டாங்ஸ்சு இளவஞ்சி

// எத்தனை மணிக்கு வந்தீங்க அங்க? நான் நைட்டு 8 மணிக்கா மேஞ்ச்சேன்! காணக்கண்கோடி வேண்டுமையா!! (நான் லேண்ட்மார்க்ல இருந்த முருகன் வீசீடிய சொன்னேன்! ) //

நா ஆறு மணிக்கு அங்க இருந்தேன். ஆறரைக்கெல்லாம் கெளம்பியாச்சு. எட்டு மணி வரைக்கும் அங்கதானா! நல்லது. நல்லது.

said...

// பரவாயில்லப்பு.. இங்க ஹைத்ராபாத் IMAXல இன்னும் வெல அதிகம். //

கோபி நான் சொல்றது சின்னக் கப்பு. நடுத்தரக் கப்பு. பெரிய கப்புன்னு மூனு வகையிருக்கு. நம்ம மயிலாருக்கு ரொம்பப் பசிக்கலைங்கறதாலயும், எனக்கு அதுல இருக்குற வெண்ண வாட பிடிக்காதுங்குறதாலயும் சின்னக் கப்புதான் வாங்குனது.

IMAX தேட்டருக்கு நானும் போயிருக்கேன் கோபி. அங்க நம்ம நண்பர் ஒருத்தரு கூட்டீட்டுப் போனாரு. அங்க பிட்சா சாப்பிட்டதப் பத்தியே ஒரு பதிவு போடனும். போடுவோம்.

said...

// இளவஞ்சி... முருகனா இல்ல மயிலா நீங்க பார்த்தது.. (அட... ராகவன் சொல்ற மயிலுக்கு கூடா வேற அர்த்தம் இருக்கும் போல...) //

நாந்தான் மயிலுக்குத் தோகையிருக்குன்னு சொன்னேனே! பெண் மயிலுக்குத்தான் தோகை இருக்காதே. அப்புறம் எப்படி வேற மயிலுன்னு அர்த்தம் வரும்? (கேள்வியின் நாயகன்னு எனக்குப் பட்டம் குடுக்கக் கூடாதா?)

said...

//எக்ஸ்கியூஸ் மீ" ஒரு நல்ல அழகான பொண்ணு. நல்ல பிரமாதமா இருக்கு. நானும் பதிலுக்கு இங்கிலீஸ்ல "யெஸ்"ன்னு சொன்னேன்.//

இராகவன் ஏன் மயில் வளர்க்கறார்னு எனக்கு புரிஞ்சிடுச்சு! :))

said...

நல்லாருக்கு ராகவன். கற்பனை தானே. இல்ல நிஜமாகவே மயில் வளர்கறீங்களா?

சரி! அந்த மயில மறுபடி பாத்தீங்களா :-) ( எந்த மயிலுன்னு கேட்க கூடாது :-)

said...

// இராகவன் ஏன் மயில் வளர்க்கறார்னு எனக்கு புரிஞ்சிடுச்சு! :)) //

புரிஞ்சு போச்சா...சூப்பர்....இராமநாதனுக்கு புரியாததைப் புரிய வைக்கும் பெரியவருன்னு பட்டம் கொடுக்கலாமா?

said...

// நல்லாருக்கு ராகவன். கற்பனை தானே. இல்ல நிஜமாகவே மயில் வளர்கறீங்களா? //

பெங்களூருல அப்பார்மெண்ட்டுல மயில வளக்க முடியுமா சிவா? அதுக்கெல்லாம் பெரிய வீடும் தோட்டமும் வேண்டாமா! இது கந்த மயிலுங்க. நமக்காக வந்த மயிலுங்க.

// சரி! அந்த மயில மறுபடி பாத்தீங்களா :-) ( எந்த மயிலுன்னு கேட்க கூடாது :-) //

பார்த்தேன். சிரித்தேன். பக்கம் வரத் துடித்தேன். அதைத் தேன் என நான் நினைத்தேன். அந்த மலைத்தேன் அதுவென மலைத்தேன். :-))

said...

நம்ப மயிலுதான்,விராலிமலைலேருந்து ஓடி வந்துடிச்சுங்கோ,திருப்பி அனுப்பிச்சிடுங்க சாமீ, மிக்க நன்றி.தொடர்க!

said...

விராலிமல மயிலா! சரி. அடையாளம் சொல்லீட்டு..அப்படியே வந்தாக் கூட்டீட்டுப் போங்க நடேசன். :-)

said...

ஆரம்பமே அட்டகாசமாக இருக்குது ராகவன். கலக்குங்க.

இது பரஞ்சோதி சொன்னதுதான். நானும் சொல்லிட்டேன்.

இராகவன் ஏன் மயில் வளர்க்கறார்னு எனக்கு புரிஞ்சிடுச்சு! :))

இது ராமனாதான் சொன்னது.. நான் சொல்ல மாட்டேன்.. நான் ரொம்ப நல்லவன் ராகவன்.. சின்ன பசங்கதானே.. போட்டும்னு விட்டுருவேன்..

ஜமாய்ங்க..

said...

// இது ராமனாதான் சொன்னது.. நான் சொல்ல மாட்டேன்.. நான் ரொம்ப நல்லவன் ராகவன்.. சின்ன பசங்கதானே.. போட்டும்னு விட்டுருவேன்.. //

ஆகா! நன்றி ஜோசப் சார். :-) பெரியவங்க பெரியவங்கதான் இல்ல..........

said...

மயில்அம் தனில்கோ யில்கொள் அழகு
மயில்வா கனஎம் பெருமான் - உயிரடி
யார்திரு இராகவன் பின்செலின் உண்மையில்
யார்தான் பிழையெனச் சொல்வார்?

தளை பார்த்து பாடல் எழுதுவதற்குள் 21 பின்னூட்டங்களா?

நான் மிக தாமதம் :((

மயிலே தனிமையிலே போகா தேபின்
உயிரே உனைவெறுக் கும்பார்...


நன்றி,
பூங்குழலி

said...

அருமை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

said...

// மயில்அம் தனில்கோ யில்கொள் அழகு
மயில்வா கனஎம் பெருமான் - உயிரடி
யார்திரு இராகவன் பின்செலின் உண்மையில்
யார்தான் பிழையெனச் சொல்வார்?

தளை பார்த்து பாடல் எழுதுவதற்குள் 21 பின்னூட்டங்களா? //

பூங்குழலி, 21 பின்னூட்டங்களுக்குப் பிறகும் இப்படி ஒரு கவிதைச் செய்யுள் வரவேண்டும் என்று மயிலோன் மனம் வைத்த பின்னே தளை தட்டாது என்பதும் உண்மைதானே.

உங்கள் செய்யுளை மிகவும் ரசித்தேன் என்றால் மிகையாகாது. இதைக் குமரன் பார்த்தாரா என்று தெரியவில்லையே! குமரன்...சீக்கிரமா வந்து பாருங்க...

//
நான் மிக தாமதம் :((

மயிலே தனிமையிலே போகா தேபின்
உயிரே உனைவெறுக் கும்பார்... //

நீங்கள் மிக தாமதம் என்பதற்கு எதற்கு வருந்துகின்றீர்கள்.

தாமதம் = தாம் + அதம் = தாம் என்ற அகந்தையை அதம் செய்தவர்

நீங்களோ மிக தாமதம் = மிகவும் பெருமை மிக்கது அல்லவா. பின் ஏன் வருத்தம்?

said...

// அருமை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். //

நன்றி சண்முகம். உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

//தாமதம் = தாம் + அதம் = தாம் என்ற அகந்தையை அதம் செய்தவர்//

ஐயா, உங்களது விளக்கத்தை கண்டு மெய் சிலிர்த்தேன்.

இனிமேல் பின்னூட்டமிடும் ஒவ்வொரு வார்த்தையையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திய பின்னே இடவேண்டும் போல் இருக்கிறது.

நன்றி.
பூங்குழலி

said...

// ஐயா, உங்களது விளக்கத்தை கண்டு மெய் சிலிர்த்தேன். //

நன்றி நன்றி. ஏதோ தோணிச்சி. எழுதீட்டேன் பூங்குழலி.

// இனிமேல் பின்னூட்டமிடும் ஒவ்வொரு வார்த்தையையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திய பின்னே இடவேண்டும் போல் இருக்கிறது. //

அப்படியெல்லாம் வேணாங்க. உங்களுக்குத் தோணுனதப் போடுங்க. :-) இது மாதிரி எப்பவுமே செஞ்சுகிட்டே மாட்டேன். :-)