Sunday, January 15, 2006

டாவின்சி கிரெய்ல்

இந்த டாவின்சி கோடு புக்கப் படிச்சாலும் படிச்சேன். ஒரே குழப்பம். எத நம்புறது எத நம்பக்கூடாதுன்னே தெரியலை. ஆனா கத படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா விறுவிறுப்பா போச்சு. ரெண்டு மூனு மூச்சுகள்ல படிச்சு முடிச்சிட்டேன். (ஒரே மூச்சுல படிக்க முடியலை. நேரமில்லாமத்தான்.)

இப்ப இந்தக் கதையப் பத்தித் தோண்டித் துருவிப் படிச்சிக்கிட்டு இருந்தப்ப ஒரு விஷயம் மாட்டுச்சு. அத உங்ககிட்டப் பகுந்துக்கனுமுன்னு விஷயத்தைச் சொன்ன வெப்சைட் சொன்னதால இந்தப் பதிவு எழுத வேண்டியதாப் போச்சு.

கடைசி விருந்து (The Last Supper) அப்படீங்குற ஓவியத்த லியனார்டோ டாவின்சி வரைஞ்சிருக்காராம். (லியனார்டோன்னாலே அடுத்து டிக்காப்ரியோதான் வருது. எல்லாம் சினிமா பண்ற வேலை.) அந்தப் ஓவியத்துல ஏசுநாதர் தன்னோட சிஷ்யர்களோட கடைசியா விருந்து சாப்பிடுறத படமா போட்டிருக்காராம் டாவின்சி.

அதுல பயண்படுத்துன குவளை (grail) ரொம்பவே பிரபலமானது. புனிதமா கிருஸ்துவர்கள் நினைக்கிறதுதான் இந்தக் கிரெயில் குவளை.Indiana Jones படத்துல கண்டுபிடிக்கிறதா வருமே அந்தக் குவளைதான் இந்தக் குவளை.

டாவின்சி கோடு புத்தகம் பத்தி எல்லாரும் கேள்விப் பட்டிருப்பீங்க. அது ஏசுநாதருக்கு மனைவியும் குழந்தையும் உண்டுன்னு சொல்ற புத்தகம். அதுக்கு ஆதாரமாத்தான் டாவின்சியோட படங்களை ஆதாரமாக் காட்டுது. இன்னும் நெறைய விஷயங்களையும் சொல்லுது. புத்தகத்துல சொல்றது உண்மையோ பொய்யோ....ஆனா புத்தகத்தப் படிச்சப்புறம் ஏசுநாதர் மேல எனக்கு அன்பு கூடீருச்சுங்குறத ஒத்துக்கத்தான் வேணும்.

ஏசுநாதருடைய மனைவியின் பேரு மேரி மகதலின் (Mary Magdaline) அப்படீன்னு இந்தப் புத்தகம் சொல்லுது. அவங்களை ஒரு விபச்சாரின்னு தேவாலயங்கள் சொல்லுதாம். அவங்களோட புகழை மறைச்சு தேவாலயங்கள் புகழ் பெற அப்படிச் செஞ்சுட்டாங்கன்னு இந்தப் புத்தகம் சொல்லுது.

அப்படி மேரி மகதலினோட புகழ தேவாலயங்கள் மறைச்சாலும் ஒரு குழுவினர் அந்த ரகசியத்தைக் காப்பாத்தி இன்னமும் வெச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படி ரகசியம் தெரிஞ்ச ஒருத்தர்தான் டாவின்சின்னு இந்தப் புத்தகம் சொல்லுது. தனக்குத் தெரிஞ்ச ரகசியத்த தன்னோட ஓவியங்களில் இலைமறை காயா வெச்சுட்டுப் போயிருக்காருன்னும் பலர் நம்புறாங்களாம்.

அதுக்கு ஒரு எடுத்துக்காட்டா கடைசி விருந்து ஓவியத்தைச் சொல்றாங்க. கடைசி விருந்து ஓவியத்துல ஏசுநாதர் நடுவுல இருக்க, மொத்தம் பதிமூனு பேரு இருப்பாங்க. ஏசுநாதரோட கடைசி விருந்துல கலந்துகிட்டவங்களோட எண்ணிக்கை பதிமூனாம். அதுனாலதான் 13ங்குற எண் கிருஸ்துவர்களுக்கு நல்லதில்லைன்னும் ஒரு நம்பிக்கையாம். கடைசி விருந்து படத்தைக் கீழ குடுத்திருக்கேன். ஒரு வாட்டி நல்லா பாத்துக்கோங்க.ஆனால் டாவின்சி வரைஞ்ச கடைசி விருந்து ஓவியத்துல ஹோலி கிரெய்ல் குவளையே இல்லை. அப்ப கிரெயில்னா என்னன்னும் இந்தப் புத்தகம் கேள்வி எழுப்புது. விடையும் சொல்லுது. கிரெயில் அப்படீங்குறது ஏசுநாதரின் ரத்தத்தைத் தாங்கும் குவளை அல்ல. மாறாக ஏசுநாதரின் இரத்தத்தை வயிற்றில் சுமந்த மேரி மகதலின் அப்படீன்னு விளக்குது. ஏசுநாதருக்கு வலப்பக்கம் உக்காந்திருக்குறது ஆண் இல்லை. ஒரு பெண் அப்படீன்னும் இந்தப் புத்தகத்துல சொல்லீருக்கு. படத்த நானும் பாத்தேன். எனக்கும் அந்த உருவம் பொண்ணு மாதிரிதான் தெரியுது. குறிப்பா நெளிவு சுளிவுகள். இந்த ஓவியத்த லூவர் மியூசியத்துல நான் நேருலயே பாத்திருக்கேன். பெருசா....அப்பக் கூட இருந்த ஒரு நண்பன் ஏசுநாதர் பக்கத்துல இருக்குறது பொண்ணுன்னு சொன்னது சரியா மனசுல பதியல. ச்சே...தெரிஞ்சிருந்தா நல்லா பாத்திருப்பேனே. சரி. அடுத்த வாட்டி பாத்துக்கலாம். (எப்ப போகக் கெடைக்குதோ!)

எழுத்தாளர் டான் பிரவுன் (Dan Brown) இந்தப் புத்தகத்துல சொல்லீருக்குற கருத்துக்கு ஆதரவு இருக்குற அளவுக்கு எதிர்ப்பும் இருக்கு. அதே சமயத்துல அவரும் டாவின்சியோட குறிப்புகளைச் சரியா கவனிக்கலைன்னும் சொல்லிக்கிட்டு இருக்குது ஒரு கூட்டம். அவரால கண்டு பிடிக்க முடியாததை நாங்க கண்டுபிடிச்சிருக்கோமுன்னும் சொல்லிப் பெருமைப் பட்டுக்குறாங்க. அதுவும் கடைசி விருந்து ஓவியத்துல.

"அந்த ஓவியத்துல குவளை இல்லைன்னுதான டான் பிரவுன் சொல்றாரு. ஆனா எங்களுக்குக் குவளை தெரியுது. அத நிரூபிக்கிறோம்"னு மார் தட்டுது ஒரு கூட்டம்.

அந்த ஓவியத்த கம்ப்யூட்டருல போட்டு கசக்கிப் பிழிஞ்சி ஏதாவது தேருமான்னு தேடிப் பாத்திருக்காங்க. அவங்க கண்ணுல மாட்டீருக்கு ஒரு குவளை. அதத்தான் இவங்க ஹோலி கிரெயில் (புனிதக் குவளை)ன்னு சொல்றாங்க. கீழ இருக்குறது கம்ப்யூட்டர்ல புராசஸ் பண்ணுன படம். அதுல ஏசுநாதருக்கு வலது கோடீல இருக்குறவரு தலைக்கு மேல பாருங்க. ஒரு குவளை தெரியுதா? அதுதான் டாவின்சி சொல்ற ஹோலி கிரெயிலாம்.அதத் தெளிவாக் காட்ட அந்தக் குவளையத் தவிர ஓவியத்துல இருக்குற எல்லாத்தையும் கருப்பு-வெள்ளைக்கு மாத்தீருக்காங்க. கீழ இருக்குற படத்தப் பாருங்க.இப்ப இந்தப் படத்துல அந்த புனிதக் குவளை தெளிவாத் தெரியுதா? அப்படியே கொஞ்சம் மேல போய் உண்மையான ஓவியத்தைப் பாருங்க. உங்க கண்ணுக்குக் குவளை தெரியுமுன்னு இந்த இணையதளம் சொல்லுது.

ஆமா. என்னோட கண்ணுக்கும் தெரியுது. தெள்ளத் தெளிவா ஒரு குவளை. ஆனா அந்தத் தூணுக்குப் பின்னாடியிருக்குற ஒவ்வொரு தூண்லயும் ஏதோ மங்கலா தெரியுற மாதிரி இருக்கு. சரி. தெளிவாத் தெரியலையே.........அதுனால இந்தக் குவளை தெளிவாத் தெரியுதுன்னு விட்டுருவோம். ஆனா இன்னொரு கேள்வி தோணுதே. குவளையத் தெளிவாக் காட்டனுமுன்னு டாவின்சி முடிவு செஞ்சிருந்தா அத ஏன் தூண்ல காட்டனும். ஏசுநாதருக்கு முன்னாடியே காட்டீருக்கலாமே. என்னவோ ஒன்னுமே புரியலை. புத்தகம் படிக்க விறுவிறுப்பாப் போச்சு. அத வெச்சு நமக்கும் நல்லாப் பொழுது போகுது. இன்னும் இது மாதிரி விறுவிறுப்பான சமாச்சாரங்கள் இருந்தா சொல்லுங்க....

அன்புடன்,
கோ.இராகவன்

35 comments:

said...

ரொம்பவே விறுவிறுப்பாத்தான் போச்சு. அதற்கப்புறம் அவரின் மத்த கதைகளையும் ஒரே மூச்சுல படிக்க வேண்டியதாப்போச்சு. எனக்கென்னவோ Angels and Demons, Da Vinci Code -ய் விட சிறந்ததாக தோன்றுகிறது. படிச்சுட்டு ஒரு பதிவு போடுங்க. பேசலாம்.

said...

// ரொம்பவே விறுவிறுப்பாத்தான் போச்சு. அதற்கப்புறம் அவரின் மத்த கதைகளையும் ஒரே மூச்சுல படிக்க வேண்டியதாப்போச்சு. எனக்கென்னவோ Angels and Demons, Da Vinci Code -ய் விட சிறந்ததாக தோன்றுகிறது. படிச்சுட்டு ஒரு பதிவு போடுங்க. பேசலாம். //

angels and demons இன்னும் படிக்கவில்லை கொத்தனார். கொஞ்ச நாள் கழித்துப் படிக்க வேண்டும். அடுத்து the solomon keyன்னு ஒரு புக்கு எழுதுறாராமே.

said...

FreeMasons பற்றிய கதையாய் இருக்கும் என்று எதிர்பார்ப்பு. இதைத்தான், நான் எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன். (http://elavasam.blogspot.com/2006/01/2.html) Robert Langdonதான் இதிலும் கதாநாயகன் என்று கேள்வி. மிகுந்த எதிர்பார்ப்புக்களிடையே வெளிவருகிறது.

said...

இராகவன். நம்ம நண்பர் இந்த புத்தகம் வைத்திருந்தார். அவர் வீட்டிற்குச் சென்றிருந்த போது கொஞ்சம் புரட்டினேன். நம்ம லெவலுக்கு மேல இருக்கிற மாதிரி தோணுனதால படிக்கலை. அப்புறம் நூலகத்திலும் தேடிப் பார்க்கலை. இப்ப நீங்க எழுதியிருக்கிறதப் பார்த்தா படிக்கலாம்னு தோணுது. பார்க்கலாம்.

விறுவிறுப்பான விஷயங்கள் உலகத்துல கொஞ்சம் நஞ்சமாகவா இருக்கின்றன. நிறைய இருக்கு. ஏழுமலையான் யார்? லெமுரியா/குமரிக் கண்டம் உண்மையா? இப்படி பல விஷயங்கள் நம்ம நாட்டுலயே இருக்கே? படிச்சதில்லைன்னா படிச்சுப் பாருங்க. குமரிக்கண்டம் பற்றி ஏதாவது விஷயம் தெரிஞ்சா என்னோட கடைசிப் பதிவுக்கு (கூடலில்) வந்து பிற்சேர்க்கை (பின்னூட்டம்) போடுங்கள்.

said...

ராகவன்,
நல்ல கட்டுரை. இயேசுவின் வம்சத்தினர் இன்னும் ஃபிரான்சில் வாழ்கிறார்கள் என்றும் அந்த பரம்பரை ரகசியத்தைப் பாதுகாப்பதெற்கென்று ஒரு அமைப்பு இருப்பதாகவும் இந்த நாவலில் கூறப்பட்டுள்ளதையும் சேர்திருக்கலாம்

நாவல் எனக்கு விறுவிறுப்பென்று சொல்லமுடியவில்லை. பல இடங்களில் விவரணப்படம் போல இன்டென்ஸாக இருந்தது. டான் கதையை இன்னும் ஸ்வாரஸ்யமாக எடுத்துச் சென்றிருக்கலாம் என்பது எனது எண்ணம். அதனால் அவரது மற்ற நாவல்களை எனக்குப் படிக்கத் தோன்றவில்லை.

Honour Among Thieves by Jeffry Archer படித்திருக்கிறீர்களா (பழசுதான்)? ஆக்க்ஷன் படம் பார்த்த விறுவிறுப்பு. அதி பயங்கர வேகம்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

நல்ல கட்டுரை ராகவன். நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன். சகலகலாவல்லவராய் இருக்கிறீரே :-)

said...

இலங்கைக்கு ராமர் கட்டிய பாலத்தில் ஊழல் நடந்ததாகவும் கதை வரலாம். அதையும் உங்கள் வலைப்பதிவிலேயே படிக்க நேரலாம். கற்பனைக்கு எல்லையே இல்லை. லூவர் மியூசியம் உள்ளே சென்று பார்த்த உங்களுக்கே விளங்கவில்லை, வெறும் முன் கதவை பார்த்த எனக்கும் ஒன்றும் தெரியவில்லை. அடுத்த முறையாவது முழுதும் பார்க்க முயற்சிக்க வேண்டும்.

said...

// FreeMasons பற்றிய கதையாய் இருக்கும் என்று எதிர்பார்ப்பு. இதைத்தான், நான் எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன். (http://elavasam.blogspot.com/2006/01/2.html) Robert Langdonதான் இதிலும் கதாநாயகன் என்று கேள்வி. மிகுந்த எதிர்பார்ப்புக்களிடையே வெளிவருகிறது //

இருக்கலாம் இலவசக் கொத்தனார். புத்தகம் வெளி வந்தால் தெரிந்து போகின்றது. உங்கள் தளத்திற்கும் சென்று படித்தேன். பேசாமல் என்னுடைய கருத்துகளோடு ஒத்துப் போகும் அது போன்ற ஒரு masonல் சேர்ந்து விடலாமா என்று தோன்றுகிறது. நம்மளையெல்லாம் கூப்பிட்டாச் சேப்பாங்க. பாக்கலாம் என்ன நடக்குதுன்னு.

said...

// விறுவிறுப்பான விஷயங்கள் உலகத்துல கொஞ்சம் நஞ்சமாகவா இருக்கின்றன. நிறைய இருக்கு. ஏழுமலையான் யார்? லெமுரியா/குமரிக் கண்டம் உண்மையா? இப்படி பல விஷயங்கள் நம்ம நாட்டுலயே இருக்கே? படிச்சதில்லைன்னா படிச்சுப் பாருங்க. குமரிக்கண்டம் பற்றி ஏதாவது விஷயம் தெரிஞ்சா என்னோட கடைசிப் பதிவுக்கு (கூடலில்) வந்து பிற்சேர்க்கை (பின்னூட்டம்) போடுங்கள். //

நம்ம நாட்டுலயும் நெறைய இருக்குது. உண்மைதான். ஒன்னொன்னா எடுத்து அலசுனா நல்லாருக்கும்.

குமரிக் கண்டமா? நான் எந்தக் குமரியோட கண்டத்தைக் (கழுத்தை) கண்டேன். நீங்கதான் கண்டவர். சரி. jokes apart. உங்க பதிவுக்கு வந்து கருத்து போடுறேன்.

said...

// ராகவன்,
நல்ல கட்டுரை. இயேசுவின் வம்சத்தினர் இன்னும் ஃபிரான்சில் வாழ்கிறார்கள் என்றும் அந்த பரம்பரை ரகசியத்தைப் பாதுகாப்பதெற்கென்று ஒரு அமைப்பு இருப்பதாகவும் இந்த நாவலில் கூறப்பட்டுள்ளதையும் சேர்திருக்கலாம் //

ஆமாம் நிலா. இதையும் சேர்த்திருந்திருக்கலாம். எப்படியோ விட்டு விட்டேன்.

// நாவல் எனக்கு விறுவிறுப்பென்று சொல்லமுடியவில்லை. பல இடங்களில் விவரணப்படம் போல இன்டென்ஸாக இருந்தது. டான் கதையை இன்னும் ஸ்வாரஸ்யமாக எடுத்துச் சென்றிருக்கலாம் என்பது எனது எண்ணம். அதனால் அவரது மற்ற நாவல்களை எனக்குப் படிக்கத் தோன்றவில்லை. //

நடுநடுவில் சில தேவையற்ற திருப்பங்கள் இருப்பது போலவும் எனக்குத் தோன்றியது நிலா. கொஞ்சம் மசாலா டைப்பில். நானும் அவருடைய வேறு கதைகளைப் படித்ததில்லை. ஏனென்று தெரியவில்லை.

// Honour Among Thieves by Jeffry Archer படித்திருக்கிறீர்களா (பழசுதான்)? ஆக்க்ஷன் படம் பார்த்த விறுவிறுப்பு. அதி பயங்கர வேகம். //

ஏன் கேட்கிறீர்கள் நிலா! Jeffry Archer புத்தகம் ஒன்று கூட படித்ததில்லை. ஏனோ ஈடுபாடும் வரவில்லை. என்னுடைய நண்பர்கள் Jeffry Archerல் மூழ்குவார்கள். கடைசியாக படித்த ஆங்கிலப் புத்தகம் 5 point something. மிகவும் நன்றாக இருக்கும். அதற்குப் பிறகு வேலைப்பளுவால் நிறைய படிக்கவில்லை. இனித் தொடங்க வேண்டும்.

said...

// நல்ல கட்டுரை ராகவன். நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன். சகலகலாவல்லவராய் இருக்கிறீரே :-) //

கிழிஞ்சது போங்க. ஏதோ தெரிஞ்ச ஒன்னு ரெண்ட எடுத்து விட்டுக்கிட்டு இருக்கேன். ஹி ஹி.

said...

// இலங்கைக்கு ராமர் கட்டிய பாலத்தில் ஊழல் நடந்ததாகவும் கதை வரலாம். அதையும் உங்கள் வலைப்பதிவிலேயே படிக்க நேரலாம். கற்பனைக்கு எல்லையே இல்லை. //

அட! அனுசுயா, இந்த கான்செப்ட் நல்லாருக்கே. நானும் என்னுடைய நண்பனும் இந்தக் கதைய தமிழில்ல எடுத்தா எப்படியிருக்குமுன்னு பேசினோம். பழநி மலைல இருக்குறது முருகன் மட்டுமல்ல. வள்ளியும் இருக்காங்க. முருகன் சிலைக்குக் கீழ அண்டர் கிரவுண்டுல இருக்காங்க. அவங்க சந்ததியர் இன்னும் இருக்காங்க...அது இதுன்னு கற்பனைய ஏத்துனோம். அது அருணகிரி, இளங்கோவடிகள், உ.வே.சா, வாரியார் எல்லாருக்கும் தெரிஞ்சிருந்ததுன்னு ஒரு கதை பண்ணினோம். கடைசீல என்னோட பிரண்டு சொன்னான். இந்தக் கதைய எழுதீட்டு தமிழ் நாட்டுக்குள்ள போகவே முடியாதுன்னு. அதுனால கதை டிராப்டு. இன்னும் சொல்லப் போனா சினிமா நடிக்கும் போது யார் யார்னு கூட முடிவு செஞ்சிருந்தோம்.

// லூவர் மியூசியம் உள்ளே சென்று பார்த்த உங்களுக்கே விளங்கவில்லை, வெறும் முன் கதவை பார்த்த எனக்கும் ஒன்றும் தெரியவில்லை. அடுத்த முறையாவது முழுதும் பார்க்க முயற்சிக்க வேண்டும். //

அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க. அந்த பிரமீட மொதல்ல பாத்ததும்...இவ்வளவு பெரிய கட்டடத்துல ஏன் இத்தன சிறுசா பொருத்தமே இல்லாம பிரமீட் வெச்சிருக்காங்கன்னு நெனச்சேன். ஆனா கதைல அதே மாதிரி வந்ததும் அசந்துட்டேன்.

said...

பழனி மலை கதை நல்லா இருக்கும் போல இருக்கே. கொஞ்சம் சொல்லுங்க இராகவன்.

said...

ஆர்சர் நாவல்களை படியுங்கள். நன்றாகவே இருக்கும். Not a penny more, Not a penny less, Honour among Thieves எல்லாமே நல்லா இருக்கும். வாத்தியார் உள்ள போயிட்டு வந்ததைக் கூட இரு பாக புத்தகமாய் வெளியிட்டு விட்டு காசு பார்த்துட்டார் தெரியுமோ. Prison Diaries என்ற பெயரில்.

said...

லூவர் ம்யூஸியத்துலே நனும் பார்த்தேன், ஆனா சரியாப் பார்க்கலை. அதான் எல்லோரும்
'மோனாலீஸா' எங்கே எங்கேன்னு தேடி ஓடிக்கிட்டு இருந்தோமே.

அந்த சம்பவங்களையே ஒரு பதிவாப் போடலாம், நேரம் கிடைச்சாப் போடறேன்.

கொசுவர்த்தி அனுப்புனதுக்கு நன்றி ராகவன்.

ஆங்.... இந்த டாவின்ஸி கோட் இன்னும் படிக்கலை. ச்சும்மாப் புரட்டுனதோட சரி.
லைப்ரரியிலே இருக்கு. படிச்சிட்டு வந்தபிறகு சொல்றேன். (அது எந்தக் காலமோ?)

said...

விட முடியலைங்க. Freemason ஆக யாரும் கூப்பிட மாட்டாங்க. நீங்களாகத்தான் போகணும். அதுதான் முதல் விதி.
ஒரு வேளை நான் சரியா எழுதலையோ? :(
சேர்ந்தீங்கனா விவரமாய் பதிவு போட்டுடுங்க.

said...

இராகவன்,
DaVinci Code ரொம்பவே manipulative ஆ எழுதப்பட்டிருந்ததா நினைவு. அதாவது திருப்பம் வேணுமின்னு திருப்பம். அந்த மாதிரி.

க்றிஸ்டியன் தியாலஜியில எப்பவுமே ஆர்வம் உண்டு. ஜானி டெப்போட Ninth Gate பார்த்திருக்கிறீங்களா? அதே போல உடான்ஸுக்கு Monty Python and the Holy Grail! ரெண்டுமே நல்லாருக்கும். இரண்டாவது Highly Recommended.

said...

Freemason சார்,
நான் கேள்விப்பட்டவரைக்கும் இந்தியாவில் இருக்கும் இலவசக்கொத்தனார் லாட்ஜில் சேர யாராவது பரிந்துரைக்கணும். எக்ஸாக்டா தெரியல!

said...

இராமநாதன் சார், இக்கட சூடுங்க. http://www.masonindia.org/index5.html. சேரும் பொழுது பரிந்துரைகள் தேவைப்படலாம். ஆனால் முதல் எட்டு (First Step) உங்களுடையாதாகவே இருக்கவேண்டும். உறுப்பினராக சேர யாரும் அழைப்பு விட மாட்டார்கள். அதைத்தான் சொன்னேன்.

உங்களுக்கு பிடித்த கிருஷ்ணாவும் சஞ்சயும்தான் எனக்கு பிடித்தவர்களும்கூட. :)

said...

நூலுக்கு நல்லதொரு அறிமுகம் தந்துள்ளீர்கள் ராகவன்.

ஒன்று கவனித்தீர்களா? பண்டைய மரபையும், வாழ்க்கை முறையயும், மக்கள் பண்பாட்டையும் - புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட - நிறுவன மயமாக்கப்பட்ட 'மதம்' சிதைத்துச் சின்னாபினமாக்கி - அதன் மீது புதிய 'நாகரீகத்தை' கட்டுவது - என்கிற டான் பிரவுனின் விவரணையில் - உலகம் முழுமைக்குமான வரலாற்றின் பிழிவு தெரிவது புரியும்!

'தாய்/பெண்' வழிபாடு (கொற்றவை, நம் பண்டைத் தமிழ் மரபில்)
பெண்ணை முன்னிறுத்திய பழங்குடியின எளிமையான மரபிலான சமதர்ம-சமாதானச் சமூகம் 'நிறுவன மயமாக்கலால்' சிதைவது ( படிக்க - தங்கமணியின் பதிவுகள்) என பிரவுன் அற்புதமாக ஆழமாகச் சொல்லிச் சென்றிருப்பார்.

இந்தியத் துணைக்கண்டத்திலும் - இதே போன்ற நிகழ்வுகள்தான் வரலாற்றையே மாற்றிவிட்டன என்பதையும் கவனத்தில் கொண்டு படித்தோமானால் - 'வாசிப்பின்' ஆழம் கூடும்.

said...

நம்ம ஊரில் மன்னர் வம்சத்தவர் இருப்பது போல அங்கும் ஏன் இருக்க மாட்டார்கள்
நல்ல பதிவு.

said...

// பழனி மலை கதை நல்லா இருக்கும் போல இருக்கே. கொஞ்சம் சொல்லுங்க இராகவன். //

அதச் சொல்ல முடியாதே....சொன்னா...எழுத்தாளர்கள் யாராவது அதக் காப்பி அடிச்சுட்டாங்கன்னா......அதெல்லாம் சீக்ரெட். பண்டாரப் பரதேசம் தெரியுமா? அருணகிரி, வ.உ.சி எல்லாம் இதுல மெம்பரா இருந்தாங்க. இதெல்லாம் சொன்னா...யாரு நம்பப் போறா? இந்த உண்மையெல்லாம் ரவிவர்மா தன்னோட ஓவியத்துல மறை பொருளா எழுதி வெச்சிருக்காரு.

said...

// ஆர்சர் நாவல்களை படியுங்கள். நன்றாகவே இருக்கும். Not a penny more, Not a penny less, Honour among Thieves எல்லாமே நல்லா இருக்கும். வாத்தியார் உள்ள போயிட்டு வந்ததைக் கூட இரு பாக புத்தகமாய் வெளியிட்டு விட்டு காசு பார்த்துட்டார் தெரியுமோ. Prison Diaries என்ற பெயரில். //

இலவசக் கொத்தனார்...ஒருத்தர் பிரபலம் ஆகுறதுக்குத்தான் கஷ்டப் படனும். ஆனப்புறம்....எதை எழுதுனாலும் காசுதான். J.K.Rowling பாருங்க....சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாங்களாம். Harry Potter புக்கத் தூக்கீட்டு அச்சாபீஸா அலஞ்சப்போ யாரும் கண்டுக்கலை. இப்போ நெறைய பணம் இருக்கு. புகழ் இருக்கு. இதை எப்படிக் கையாள்றதுன்னு தெரியலைங்குறாங்க. இதெல்லாம் சகஜமப்பா.....

said...

// லூவர் ம்யூஸியத்துலே நனும் பார்த்தேன், ஆனா சரியாப் பார்க்கலை. அதான் எல்லோரும்
'மோனாலீஸா' எங்கே எங்கேன்னு தேடி ஓடிக்கிட்டு இருந்தோமே. //

அதே ஹால்லதான் இதுவும் இருந்துச்சுன்னு நெனைக்கிறேன். மறந்து போச்சு. அப்ப யாரு இதெல்லாம் தெரிஞ்சு வெச்சிருந்தா...இப்பத்தான இவரு புத்தகம் எழுதுனாரு. நாம் போயி நாலு வருசம் ஆச்சு.

// அந்த சம்பவங்களையே ஒரு பதிவாப் போடலாம், நேரம் கிடைச்சாப் போடறேன்.
கொசுவர்த்தி அனுப்புனதுக்கு நன்றி ராகவன். //

ரொம்ப நன்றி டீச்சர். நன்றிக்கு நன்றி. உங்க பதிவையும் சீக்கிரம் எதிர் பார்க்குறேன்.

said...

// க்றிஸ்டியன் தியாலஜியில எப்பவுமே ஆர்வம் உண்டு. ஜானி டெப்போட Ninth Gate பார்த்திருக்கிறீங்களா? அதே போல உடான்ஸுக்கு Monty Python and the Holy Grail! ரெண்டுமே நல்லாருக்கும். இரண்டாவது Highly Recommended. //

இதுகளையும் தேடிப் பாக்குறேன் இராமநாதன்.

// Freemason சார்,
நான் கேள்விப்பட்டவரைக்கும் இந்தியாவில் இருக்கும் இலவசக்கொத்தனார் லாட்ஜில் சேர யாராவது பரிந்துரைக்கணும். எக்ஸாக்டா தெரியல! //
இராமநாதன் இதெல்லாம் கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் வகையோ!

said...

// நூலுக்கு நல்லதொரு அறிமுகம் தந்துள்ளீர்கள் ராகவன். //

நன்றி நியோ

// ஒன்று கவனித்தீர்களா? பண்டைய மரபையும், வாழ்க்கை முறையயும், மக்கள் பண்பாட்டையும் - புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட - நிறுவன மயமாக்கப்பட்ட 'மதம்' சிதைத்துச் சின்னாபினமாக்கி - அதன் மீது புதிய 'நாகரீகத்தை' கட்டுவது - என்கிற டான் பிரவுனின் விவரணையில் - உலகம் முழுமைக்குமான வரலாற்றின் பிழிவு தெரிவது புரியும்! //

உண்மைதான். உலகம் முழுவதும் இப்படித்தான் நடக்கிறது என்று தங்கமணியும் சொல்லியிருந்தாரே. எனக்கும் இது போன்ற நிறுவனமயமாக்கல் என்ற விதத்தில் ஒப்புதல் இல்லை.

// 'தாய்/பெண்' வழிபாடு (கொற்றவை, நம் பண்டைத் தமிழ் மரபில்)
பெண்ணை முன்னிறுத்திய பழங்குடியின எளிமையான மரபிலான சமதர்ம-சமாதானச் சமூகம் 'நிறுவன மயமாக்கலால்' சிதைவது ( படிக்க - தங்கமணியின் பதிவுகள்) என பிரவுன் அற்புதமாக ஆழமாகச் சொல்லிச் சென்றிருப்பார். //

கொற்றவையும் முருகனும் வள்ளியும் தூய தமிழ் வழிபாட்டிற்கான அடையாளங்கள். விரிசடையனும் கூட. காலப் போக்கில் தமிழர்களே இவைகளை ஒன்றினைக்கத் தொடங்கினார்கள். முருகன் - வள்ளி ஒருங்கிணைப்பும். கொற்றவை - விரிசடையன் ஒருங்கிணைப்பும் ஆயின. ஆனால் இந்த ஒருங்கிணைப்புகளுக்கு முன்னமே கொற்றவையின் மகன் முருகன் என்ற தொடர்பும் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. பிற்காலத்தில் ஆரிய மதக் கலப்பினால் மேலும் பல கலப்புகள்.

// இந்தியத் துணைக்கண்டத்திலும் - இதே போன்ற நிகழ்வுகள்தான் வரலாற்றையே மாற்றிவிட்டன என்பதையும் கவனத்தில் கொண்டு படித்தோமானால் - 'வாசிப்பின்' ஆழம் கூடும். //

உண்மைதான். இந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்ல உலகமெங்கும் இத்தகையவை நடந்தன. நடக்கின்றன. இன்னும் நடக்கும். ஆனால் இயற்கையும் தன் பங்கிற்குக் கழுவி விட்டுக் கொண்டேயிருக்கும்.

said...

ராகவன்,
இதே 'தி லாஸ்ட் ஸப்பர்' ஓவியத்தைப் பத்தி ஒரு மேட்டர் இருக்கு. அது என்னன்னா இந்த ஓவியத்தை வரைய டாவின்சி எடுத்துக்கிட்டது 7 ஆண்டுகள். முதலில் ஏசுவை வரைஞ்சதாகவும் அப்புறம் 7 வருஷம் கழிச்சு யூதாசை வரைஞ்சதாகவும் கேள்வி. இதுல கவனிக்க வேண்டியது என்னன்னா ஏசுபிரானாகப் போஸ் கொடுத்ததும் பின்னர் துரோகி யூதாசாக போஸ் கொடுத்ததும் ஒரே ஆள் என்பது தான். ஈ-மெயிலில் வந்த இந்த துணுக்கை என்னுடைய ஆங்கில வலைப்பூவில் போட்டிருக்கிறேன்.
http://smohanraj.blogspot.com/2005/12/painting-of-last-supper.html

said...

சுட்டி வெட்டு பட்டு விட்டது. இதோ மறுபடியும்:
http://smohanraj.blogspot.com/2005
/12/painting-of-last-supper.html

said...

// ராகவன்,
இதே 'தி லாஸ்ட் ஸப்பர்' ஓவியத்தைப் பத்தி ஒரு மேட்டர் இருக்கு. அது என்னன்னா இந்த ஓவியத்தை வரைய டாவின்சி எடுத்துக்கிட்டது 7 ஆண்டுகள். முதலில் ஏசுவை வரைஞ்சதாகவும் அப்புறம் 7 வருஷம் கழிச்சு யூதாசை வரைஞ்சதாகவும் கேள்வி. இதுல கவனிக்க வேண்டியது என்னன்னா ஏசுபிரானாகப் போஸ் கொடுத்ததும் பின்னர் துரோகி யூதாசாக போஸ் கொடுத்ததும் ஒரே ஆள் என்பது தான். //

அடடா! எப்பேர்ப்பட்ட விஷயம். நல்லதும் கெட்டதும் நமக்குள்ளதான் இருக்குங்குற மாதிரி சொல்லுது நீங்க சொல்ற விசயம். ஒங்க வலைப்பூவுக்கே வந்து படிக்கிறேன். தகவலுக்கு நன்றி கைப்புள்ள.

said...

கடந்த வாரம்தான் நூலகத்திலிருந்து இந்த புத்தகத்தை எடுத்துவந்தேன்.இன்னும் தொடவில்லை.உங்க பதிவை பார்த்ததும் உடனே படிக்கனும்னு தோனியிருக்கு.படிச்சிட்டு சொல்றேன்.

said...

In Louvre museum, when you stand in front of Monalisa painting, the "Last Supper" painting will be on the left wall. When I went there 7 years back, "Last supper" was the one that impressed me most. May be due to it's size and details compared to the "mystic smile".

If your are a history buff, don't miss the Egypt section.

Regards,
Pedharayudu.

said...

அப்படியே இதையும் பார்க்க:
Pagan origins of christ myth
http://www.medmalexperts.com/POCM/getting_started_pocm.html

said...

// கடந்த வாரம்தான் நூலகத்திலிருந்து இந்த புத்தகத்தை எடுத்துவந்தேன்.இன்னும் தொடவில்லை.உங்க பதிவை பார்த்ததும் உடனே படிக்கனும்னு தோனியிருக்கு.படிச்சிட்டு சொல்றேன். //

படிங்க மோகன். படிச்சுட்டு வந்து ஒங்க கருத்தைச் சொல்லுங்க.

// In Louvre museum, when you stand in front of Monalisa painting, the "Last Supper" painting will be on the left wall. When I went there 7 years back, "Last supper" was the one that impressed me most. May be due to it's size and details compared to the "mystic smile". //

பெத்தராயுடு. உண்மைதான். அதே பெரிய அறையில்தான் கடைசி விருந்து படத்தையும் பார்த்தேன். அடேங்கப்பா...எவ்வளவு பெரிசு. கிட்டத்தட்ட ஒரு பக்கச் சுவர் அளவிற்கு இருந்தது. துளசி டீச்சர் சொன்ன மாதிரி எல்லாரும் மோனலிசா எங்கன்னுட்தான தேடுனோம். வாடிகன்ல கூட மனிதனைப் படைக்கும் ஓவியம் எங்கயிருக்குன்னு தேடித் தேடியே மத்ததுகள கோட்ட விட்டோம்.

// If your are a history buff, don't miss the Egypt section. //

ஆமா...அது நடு ஹால்ல இருந்து ஒரு வழியில உள்ள நொழஞ்சதுமே இருக்குல்ல. பிரமீடு, ஸ்பிங்க்ஸ் எல்லாம் வெச்சிருந்தாங்க.

said...

// அப்படியே இதையும் பார்க்க:
Pagan origins of christ myth
http://www.medmalexperts.com/POCM/ //

வெற்றிவேல் லிங்கிற்கு நன்றி. இதென்ன தோண்டத் தோண்ட பல விஷயங்கள் தெரிய வருதே....இதெல்லாம் உண்மையோ பொய்யோ....மெனக்கெட்டு உக்காந்து எழுதீருக்காங்களே. அந்தக் கஷ்டத்துக்காகவாவது ஒரு வாட்டி படிக்கலாம்.