Sunday, June 11, 2006

பராசக்தி படத்துக்கு தடை

(அரசியல் நையாண்டி என்பது எழுத வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழக, இந்திய அரசியல்வாதிகளின் அன்றாட நகைச்சுவைப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் ஈடுகுடுத்து எழுதுவது யாருக்கும் கடினம்தான். ஆனாலும் ஒரு சிறு முயற்சி.)

தமிழக அரசு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. பராசக்தி படத்தைத் தடை செய்வது காலத்தின் கட்டாயம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் பராசக்தி. இந்தப் படம் வெளிவந்த காலத்தில் மிகுந்த புரட்சிகரமானத கருதப் பட்டு இமாலய வெற்றி பெற்றது.

இந்தத் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தடை. இந்தப் படம் இப்பொழுது திரையரங்கில் ஓடினால் யாரும் வந்து பார்ப்பார்களா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தப் படத்தின் உரிமைகள் சன் டீவியிடம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சன் டீவியினர் இந்தப் படத்தை அடிக்கடி ஒளிபரப்பு செய்வதும் அனைவரும் அறிந்ததே.

இந்தப் படத்திற்குத் தடை விதித்து அதைச் செயல்படுத்தும் படி மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. இன்றைய சூழ்நிலையில் இந்தத் திரைப்படத்தைத் திரையிடுவது என்பது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயலாக அமையும் என்று அரசாங்கம் நம்புகிறது. இதில் பலருடைய நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டில் ஆங்காங்கு கலவரம் உண்டாகலாம் என்று அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் நம்பிக்கையைப் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் படத்தின் வசனங்கள் நிச்சயமாக ஆட்சேபனைக்குறியவை. பலரும் கடவுளாக நம்புகின்ற தெய்வத்தைப் பற்றி படத்தில் அவதூறு வசனங்கள் இருப்பதால் படத்தைத் தமிழக அரசு தடை செய்கிறது.

இதுதான் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தணிக்கைக் குழு சான்றிதழ் கொடுத்த ஒரு திரைப்படத்தை இது போன்று தடை செய்வது முதல்வரின் ஒருதலைப்பட்சமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் படத்தை முதலில் தமிழகத்திலுள்ள மடாதிபதிகளிடம் போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப் படியே இது செய்யப் பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.

தணிக்கைக் குழு என்று ஒன்று இருக்கையில் மடாதிபதிகளிடம் படத்தை ஏன் காட்ட வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்தப் படம் மக்கள் மனதை நிச்சயம் புண்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். முதலில் ஒரு மடாதிபதி உண்ணாவிரதம் தொடங்கியதாலேயே பிரச்சனை பெரிதானது. வலைப்பூக்களில் இதை ஆதரித்தும் எதிர்த்தும் ஏற்கனவே பல பதிவுகள் வந்து விட்டன.

ஆனால் இந்தத் தடையைத் தனது ஆட்சியேலே கொண்டு வந்து விட்டதாகவும் தேர்தல் கமிஷன் இதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொன்னதால் சொல்லவில்லை என்றும் ஜெயலலிதா அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். தேவையில்லாமல் இரண்டாம் முறை இந்தப் படத்தைத் தடை செய்வது கருணாநிதியின் ஏமாற்றுவேலை என்றும் அவர் சாடினார். தன் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அடக்குமுறைகளை கட்சியினரும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். அதைக் கேட்ட சிலர் அந்தப் பக்கமாக வந்த ஒரு லாரியைக் கொளுத்தினார்கள்.

இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்ற வழக்கு உண்டு" என்று கூறினார்.

இதற்கிடையில் ஜெயா டீவியில் ரபி பெர்ணாட்டிற்கு பேட்டி அளித்த வைகோ, "இந்தப் படத்தத் தட பண்ணனுங்க. வெளியிட்டிருக்கவே கூடாதுங்க...அவ்வளவுதான்" என்றார்.

இந்தப் படம் தடை செய்யப்பட்டதால் இந்தப் படத்திற்கு திடீர் ஆதரவு பெருகியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய மக்கள் திருட்டு வீசிடிகளை வாங்கிப் பார்க்கிறார்கள். இதனால் பர்மா பஜார், சிங்கப்பூர் பஜார் மற்றும் அனைத்துத் தமிழக திருட்டு வீசீடி விற்பனையாளர்களும் தமிழக அரசிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிரிண்ட் சரியில்லாவிட்டாலும் படம் லேசுமாசாகத் தெரிவதால் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள்.

இந்தத் தடையைப் பற்றிக் கதாசிரியர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது அவர் நாதழுதழுத்து விட்டதாகத் தெரிகிறது. பராசக்தி தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். இதைத் தடை செய்வது சரியல்ல என்று அவர் கருத்துத் தெரிவித்தார். தமிழனுக்குச் சூடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். அவர்தானே தடை செய்தது என்ற கேள்விக்கு, "அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.

கிண்டலுடன்,
கோ.இராகவன்

28 comments:

said...

//அரசியல் நையாண்டி என்பது எழுத வேண்டும் என்று திடீர் ஆசை.//


ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! சீக்கிரம் எழுதுங்கள் ஜி.ரா.!

;-)

said...

//ஆனால் படத்தை முதலில் தமிழகத்திலுள்ள மடாதிபதிகளிடம் போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப் படியே இது செய்யப் பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.//

ஜி.ரா ஒரு டிஸ்கி இருக்கனமே, இது கற்பனையே சிறிது மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது அப்படீன்னு.:-)

நல்ல இருந்துதுங்க.

said...

அப்டிப் போடு அருவாளை!!

எப்படிப் போட்டலும், திருந்தாத கூட்டத்திடம் இதெல்லாம் எடுபடாது என்ற உண்மையையும் தாண்டி, ரசித்தேன்!

said...

ராகவன், பராவாயில்லை, தமாஷா தான் எழுதி இருக்கீங்க!

said...

//அவர்தானே தடை செய்தது என்ற கேள்விக்கு, "அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.
//

இது தான் எல்லாத்தையும் விட சூப்பர். :-) நல்ல கலைஞர்தனமான பதில். :-)

said...

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! சீக்கிரம் எழுதுங்கள் ஜி.ரா.!
--- அதே அதே :)

said...

"அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.//

:-)))))

kalakkal.

Next I hope that they ban DK and DMK by using the smae logic.:-)))

said...

இன்றைய எனது பதிவைப் படித்தீர்களா?

said...

தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி

நீங்கள் நன்றாக கற்பனை செய்திருந்தாலும், மேற்கொண்ட வரிகள் மிகவும் தத்ரூபம். உண்மையில் இவ்வாறு நடந்தால் , கருணாநிதி இதனை கண்டிப்பாக கூறுவார்.

said...

அது சரி...

இதே ரேஞ்சில் கலைஞர் இன்னும் அம்மையார் ஆட்சியில் இருப்பதாகக் கற்பனையில் இருக்கிறார். அடுத்ததாக இன்று முரசொலியில் கலைஞர், "உடன்பிறப்பே! கல்லில் பெய்த கடும் மழையெனப் புல்லுருவிகள் தமிழகத்தில் வெள்ளமெனப் புகுந்து கலைத்தாயின் முதல் மகன் நடித்து முன்னாள் மகன் எழுதிய படத்தையே தடை செய்வதெனத் துணிந்து விட்டனர். இதனைக் கண்டிக்கப் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு (ஸாரி! தம்பி பட பாதிப்பு) சீறி வரும் சுனாமியெனப் பொங்கி எழு! அடக்குமுறைக்கு எதிராகச் சீறி எழு!" என்று பொங்கி எழுந்திருக்கிறார்.

கலைஞர் இதைச் சொன்னதைக் கேட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, "இந்தத் தடையை நீக்கச் சொல்லும் கருணாநிதியின் கொடும் மனதைத் தாம் கூட்டணி வைத்திருக்கும் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். இதை அடுத்து மாநில மத்திய அரசுகளை எதிர்த்து அ இ அதிமுக இந்தியா முழுவதும் மாபெரும் திருட்டு விசிடி போராட்டம் நடத்தும்" என்றார். ஏன் இந்தியா முழுவதும் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "நீங்கள் சன் டிவி கைக்கூலி என்று எனக்குத் தெரியும். இனி இப்படி நெருக்கடி தரும் கேள்விகளைக் காட்டுமிராண்டித் தலைவர் கருணாநிதியிடம் மட்டும் கேளுங்கள்" என்று சூடாக பதிலளித்தார்.

வைகோ, "மாண்புமிகு புரட்சித்தலைவி தென்னக ஜான்சிராணி, வடக்கு மங்கம்மா, தங்கத் தாரகை, வைர நிலவு, முன்னாள் (இதை மட்டும் நைஸாக மெதுவாகச் சொன்னார்) முதல்வர் அம்மா அவர்கள் தமிழக மக்களுடன் மட்டும் கூட்டணி வைத்துள்ளதாகக் கூறியதில் கூட்டணிக் கட்சியினரை இழிவு படுத்தியதாகக் கட்டுக்கதை கட்டிவிடும் சன் டிவியின் சதியை மதிமுக விசி உடன்பிறப்புகள் நன்றாகப் புரிந்து கொண்டு எனக்கு பத்தாயிரம் தந்திகள் அனுப்பியுள்ளனர். அவர்கள் அன்புக்கு நான் என்ன செய்வேன்?" என்று நாத் தழுதழுக்கக் கண்ணீர் விட்டு "ஓ"வென்று அழுது கொண்டே கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, "இது குறித்து அன்னை சோனியா காந்தியிடம் விளக்குவதற்காக ஜெட் ஏர்வேஸ் சூப்பர் சேவர் ஸ்கீமில் எங்கள் எம் எல் ஏ, எம் பிக்கள் அனைவரும் டெல்லி செல்கிறோம். பின்னர் வந்து சொல்கிறோம்" என்றார். அதற்குள் இன்னும் மூன்று கோஷ்டியினர் ஸ்பைஸ் ஜெட் பிடித்துச் சென்று விட்டதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வி.சி. பொ.செ. திருமாவளவன், "யார் எப்படிப் போனாலும் இந்தத் தமிழனும் தமிழ்க் குடிதாங்கி அவர்களும் சினிமாவை எதிர்க்கும் போராட்டத்தைத் தொடர்வார்கள், இதற்காகக் கதாசிரியர் கலைஞர் கருணாநிதிக்கு என் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் முதல்வருக்குப் பாராட்டு தெரிவிப்பேனா மாட்டேனா என்று சொல்ல மாட்டேன்" என்றார்.

said...

:))

சிறுபான்மை ஓட்டுக்களை மனதில் வைத்து டாவின்சி கோட் படத்தை
தடை செய்த கலைஞர் ஓட்டுக்காக இதையும் செய்ய தயங்க மாட்டார்.

ராகவன்.இது கற்பனையல்ல. நிஜமாகவும் நடக்கலாம்.புனித பிம்பங்கள் எண்ணிக்கை அதிகமாகின்றன.அவர் என்ன பண்ணுவார்?

ஜெயாடிவி பாருங்க.பல காமெடி லாஜிக் கிடைக்கும்.இப்பல்லாம் நான் காமெடி நிகழ்ச்சிகளுக்கு அதைத்தான் பார்க்கிறேன்.முக்கியமாக செய்திகள்.

said...

;-)))))))))))))

said...

1. ஒட்டகூத்தன் பாட்டுக்கு ரெண்டு தாழ்ப்பாள்...

2. கதாசிரியர் வேற முதல்வர் வேற..

3.படம் லேசுபாசாக தெரிவதால் பொதுமக்களும் போட்டி போட்டுக்காண்டு

மேற்கண்ட இடங்களில் கலக்கல்.

****
ரபிபெர்னார்ட் மற்றும் வைகோ பகுதிகளை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்.(ரபி பெர்னார்ட் அதிமுகவில் நேத்திக்கு சேர்ந்துட்டார்)

said...

G Raa,

Welcome to the club:-)

பராசக்தி டி.வி.டி விற்பனையை அதிகரிக்க நீர் செய்யும் இந்தச் சதியின் பின்னணியின் விளக்கம் குறித்த விரிவான அறிக்கை ஒன்று தமிழ்மணப் பதிவொன்றில் அதி விரைவில் காணலாம்.

தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நீர் பதில சொல்லவேண்டியக் கட்டாயம் எழுந்து உள்ளது:-)

said...

ரொம்ப நல்லா இருக்கு இராகவன் சார்.

பலவற்றை காலாய்ச்சுங்க.

said...

//தமிழக, இந்திய அரசியல்வாதிகளின் அன்றாட நகைச்சுவைப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் ஈடுகுடுத்து எழுதுவது யாருக்கும் கடினம்தான்//

ஹூம்.இப்படி டிஸ்கி கொடுத்திருந்தாலும் கலக்கலாவே எழுதியிருக்கீங்க.

ஒரு "+" போட்டாச்சேய்...

said...

ராகவன் கலுக்குறீங்க போங்க.
நீங்க கூறியது நடந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.
முதல்வர் வேறு, கதாசிரியர் வேறு. சூப்பருங்க.
அவரு ஆப்ப எடுத்து அவருக்கு வைக்குறீங்களே

said...

// இது "துக்ளக்" சத்யா பாணி!!!; //

இல்லைங்க யோகன் ஐயா. இது இராகவன் பாணியே தான். ஒரு வேளை இராகவன் எழுதுவதும் சத்யா எழுதுவதும் ஒரே மாதிரி இருக்குமோ? அதைத் தான் சொல்கிறீர்களோ? :-)

என்ன இராகவன். விடாது கறுப்பு அண்ணன் உங்களுக்கு ஒரு புதுப் பட்டம் கொடுத்திருக்கிறாரே? அப்படி ஒரு பட்டம் குடுத்திருக்கேன்னு சொல்றதுக்காக தன் பதிவைப் பாருங்கன்னு உங்களை வந்து கூப்புட்டிருக்காரே? பாத்தீங்களா? பாத்துட்டு உங்க கொள்கைப் படி 'யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே. ஐயன் கருணையைப் பாடு' அப்படின்னு வந்துட்டீங்களா? :-) உசுப்பேத்தி விட்டாலும் கலங்காத இராகவா. நீர் வாழி; வாழி.

said...

"தன் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அடக்குமுறைகளை கட்சியினரும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். அதைக் கேட்ட சிலர் அந்தப் பக்கமாக வந்த ஒரு லாரியைக் கொளுத்தினார்கள்."
தூள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ராகவா உண்மையாகவே நல்ல பதிவு...

said...

நல்ல நக்கல். கலைஞரே தடை செய்கிறார் என்பது தான் இரட்டை நக்கல். உண்மையும் கூட.
வாழ்க உங்கள் நக்கலும் நையாண்டியும்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

கே: பராசக்தி படத்துக்கு தடை பற்றி உங்கள் கருத்து?

ப: ராஜ காளியம்மன், திருமால் பெருமை போன்ற படத்தையெல்லாம் தடை செய்து ஆத்திகர்கள் - அதுவும் இந்து ஆத்திகர்கள் மனதைப் புண்படுத்தும் சாடிஸ்ட் எண்ணம் கொண்ட ஆட்சியாளர்கள், நேரடியாக அதைச் செய்ய முடியாமல், பராசக்தி என்ற தெய்வப்பெயர் கொண்ட திரைப்படத்தை தடை செய்வதன் மூலம் அதற்கு முதல் படி எடுத்து வைத்திருக்கிறார்கள். அவரே கதை வசனம் எழுதும்போதே அது தடை செய்ய வேண்டிய படம் என்று தெரியாதா?
சரி அவருக்கு எந்த மேலிடத்திலிருந்து கட்டளை வந்ததோ நாமறியோம்.

ஜிரா, நல்லா இருக்கு. நாமளும் கை வைக்கலாம்னு ஆசைப்பட்டேன், நம்ம பிரண்டு சோதான் உடனே கைகொடுத்தார்:-)

said...

அடடா. நான் சிரிப்பான் போட்டேன்னு இல்ல நினைச்சேன். மறந்திட்டேன் போல தெரியுது. அதனாலென்ன? இதொ என் சிரிப்பான்.

:)

said...

ராகவன்,

நீங்க பராசக்தின்னு எழுதியிருக்கறதுக்கு பின்னால வேற ஏதாவது படத்தோட தெரியுதான்னு லென்ஸ் வச்சி பாத்தேன்..

ஊஹும் ஒன்னும் தெரியலை..

அதனால வாய்விட்டு சிரிச்சேன்..

நல்லாவே இருந்தது..

தொடர்ந்து கிண்டலடிங்க..

சிறுபான்மை ஓட்டுக்களை மனதில் வைத்து டாவின்சி கோட் படத்தை
தடை செய்த கலைஞர் ஓட்டுக்காக இதையும் செய்ய தயங்க மாட்டார்.//

இது முத்து..

சரி, சைனாவுலயும் இத தடபண்ணிருக்காங்களே..

அங்கயும் சிறுபான்மை ஓட்டுத்தான் காரணமோ..

இது நையாண்டிங்க. இதுல வந்து ஒங்க பாலிட்டிக்ஸ சேக்காதீங்க..

said...

ராகவன்,
நையாண்டியா..நல்லாயிருக்கு..நடத்துங்க ..நடத்துங்க.

said...

ஜோ,

உங்க பாப்பா போட்டா நல்லாருக்கு.

said...

இராகவன்,

நையாண்டியோடு மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் முன்னமே எழுதியது போல 'கருத்துச் சுதந்திரம் என்பது இந்து மதத்தையோ, கடவுளையோ எதிர்ப்பதற்கு மட்டும் தான், மற்ற மதங்களையோ, கடவுள்களையோ விமர்சிப்பதற்கு இல்லை' என்னும் ஒரு போலித்தனமான கொள்கையை நம் நாட்டில் தான் பார்க்க முடியும். தொடர்ந்து இது போன்ற பொதுக் கருத்துக்களை நகைச்சுவையோடு நீங்கள் எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

ரங்கா.