Sunday, June 04, 2006

13. எனக்கும் ஒரு கனவு உண்டு

மயிலார் யாருன்னு ஒங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை. நான் கொஞ்சம் துணுக்கமா உக்காந்திருந்தப்போ வந்து பக்கத்துல உக்காந்தாரு. அவர் வந்ததே எனக்குத் தெம்பா இருந்தது. பக்குன்னு கண்ணத் தொறந்து என்னைத் தயாராக்கிக்கிட்டேன். அதுக்குள்ள காணிக்கை உதவியாளரு அலுமினியச் சட்டீல இருந்த தண்ணிய எடுத்து தலைய நனைச்சாரு. மூச்சியெல்லாம் தடவுனாரு. முருகன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நான் அமைதியா இருந்தேன்.

கத்தியத் தலைல வெச்சு ஒரு இழு இழுத்தாரு. சரக்குன்னு சின்னச் சின்னத் தடுக்கல்களோட ஒரு கொத்து முடி மடியில விழுந்துச்சு. அதுவரைக்கும் கலகலன்னு பேசிக்கிட்டிருக்குற நண்பர்கள் அமைதியாயிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா முடியெல்லாம் வழிஞ்சி கீழ விழுக விழுக நான் உறுதியானேன். மயிலார் துணையா இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல்.

முடிய வழிச்சவரு ஒரு நல்ல காணிக்கை உதவியாளர். ஒன்னும் சொல்லலை. முடிச்சதும் கைல ஏற்கனவே நான் எடுத்து வெச்சிருந்த இருபது ரூபாயக் கொடுத்தேன். ஏன் குடுத்தேன்னு கேக்குறீங்களா? நன்றிதான். ஏற்கனவே காசு கெட்டி மொட்டச் சீட்டு வாங்கீருக்கிறப்ப அவருக்கு நான் எதுவும் குடுக்கனும்னு கட்டாயமில்லை. ஆனா நான் குடுத்தேன். ஏன்?

கோயில்பட்டிக் கதிரேசன் கோயில் ஐயரைப் பத்தி முந்தி எழுதீருந்தேனே...நினைவிருக்கா? அவரோட ஒடம்புல செதிலா வர்ர சோரியாசிஸ் பத்தி. அது அவருக்கு மட்டுமில்ல. எனக்கும் உண்டு. தலையில சொரியாசிஸ் இருக்குறப்போ பல பிரச்சனைகள் உண்டு. குறிப்பா முடி வெட்டிக்கப் போகுறப்போ ஒரு தாழ்வுணர்ச்சி வரும். நம்ம தலையப் பாக்குற முடி வெட்டுறவரு என்ன நெனப்பாரோருன்னு.

போன வாட்டி நான் திருத்தணியில மொட்ட போட்டப்போ அப்பா அந்த உதவியாளருக்குக் கூடக் காசு குடுத்தாரு. ஆனா அந்த உதவியாளர் அது போதாதுன்னு கூடக் கேட்டாரு. அவரு கேட்டது பெருசில்லை. ஆனா "இந்தத் தலைக்கே நீங்க இவ்வளவு குடுக்கனும்"னு சொன்னாரு. அதுவுமில்லாம மொட்டை எடுக்கும் போது நூறு நொரநாட்டியம் சொல்லிக்கிட்டே இருந்தாரு. என்னோட மனசுல அது பதிஞ்சிட்டாலும் நான் கோவிச்சிக்கலை. அதையெல்லாம் நான் கேக்குறதுதான் முருகனோட விருப்பம்னு ஏத்துக்கிட்டேன். ஆனா கூடவே இருந்த அப்பா அம்மா மனசு?

அப்படியொரு நெலம இங்கயும் வந்துறக்கூடாதேன்னுதான் மொதல்ல எனக்கு அந்தத் துணுக்கம் வந்துச்சி. அதையெல்லாம் தூள்த்தூளாக்கி எல்லாத்தையும் அமைதியா நடத்திக் கொடுத்த உதவியாளருக்கு நான் கூடக் குடுக்கக் கூடாதா சொல்லுங்க?

வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக் கனவுண்டு. கோடிக்கோடியாச் சம்பாதிக்கிறது. நிலபுலனா வாங்கிப் போடுறது. பல பொண்டாட்டி கட்டுறது. நெறையப் பிள்ளைக பெத்துக்கிறது. கட்டிடமாக் கட்டுறது. கொல பண்றது. கொள்ளையடிக்கிறது. பதவிக்கு வர்ரது. இப்பிடியெல்லாம் இருக்கும் போது எனக்கும் ஒரு கனவு உண்டு.

ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கனும்னு. அதுல சொரியாசிஸ் மற்றும் பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி செய்யனும். அத்தோட சொரியாசிஸ்காரங்க முடி வெட்டிக்கிறதுக்கும், மத்த பல காரியங்களுக்கும் அங்க வசதி செஞ்சிக் குடுக்குறது. உடம்புல சொரியாசிஸ் இருக்குறவங்க பொது இடங்கள்ளயோ நீச்சல் குளங்கள்ளயோ குளிக்க முடியாது. நட்சத்திர ஓட்டல்ல கூட நீச்சல் குள அனுமதி தரமாட்டாங்க. அவங்களுக்கு நீச்சல்குளம். நீராவிக்குளியல் இடம். இன்னும் பல வசதிகள் செஞ்சி ஒரு நிலையம் தொடங்கனும். அப்புறம் அதை ஊரூருக்குக் கொண்டு போகனும்.

இதவிட முக்கியமா ஒரு கவுன்சிலிங் செண்டர். அதாவது இந்த நோய்க்காரங்க மொதல்ல மனசாலதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவங்க பொதுவாழ்க்கையே போச்சுன்னு. நானும் மொதல்ல அப்படித்தான் இருந்தேன். ஆனா முருகன் புண்ணியத்துல நல்லா கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சிருக்கேன். வாழ்க்கை முறைய கொஞ்சம் மாத்தி அமைச்சிக்கிட்டா நல்லபடியா சந்தோஷமா இருக்கலாம். இதெல்லாம் எடுத்துச் சொல்ல நிபுணர்கள். இப்பிடிப் போகுது என்னோட கனவு.

ஆனா இதெல்லாம் எப்படிச் செய்றது? நான் டாக்டரும் கிடையாது. கோடீஸ்வரனும் கிடையாது. நெறைய விவரம் தெரிஞ்சவனும் கெடையாது. ஆனா நம்பிக்கை இருக்கு. முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான். அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.

இங்க நெறைய பலதரப்பட்ட துறையில இருந்து ஆட்கள் இருக்கீங்க. இந்த மாதிரி விஷயங்கள்ள உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கலாம். இந்தக் கனவு நனவாகுறதுக்கு உங்களால ஏதாவது உதவ முடியுமா? தனிப்பட்ட முறையில தொடர்பு கொள்ள நினைக்கிறவங்க என்னோட gragavan at gmail dot comக்கு மெயில் அனுப்புங்க. உங்களத் தொடர்பு கொள்ளவும் நான் தயார்.

சொரியாசிஸ் பத்தித் தெரிஞ்சிக்கிறதுக்குக் கீழ இருக்குற சுட்டிகளைப் பாருங்க......
http://en.wikipedia.org/wiki/Psoriasis

அன்புடன்,
கோ.இராகவன்

51 comments:

said...

வணக்கம் ராகவன்!

//குறிப்பா முடி வெட்டிக்கப் போகுறப்போ ஒரு தாழ்வுணர்ச்சி வரும். நம்ம தலையப் பாக்குற முடி வெட்டுறவரு என்ன நெனப்பாரோருன்னு.//

//ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கனும்னு. அதுல சொரியாசிஸ் மற்றும் பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி செய்யனும். //

உண்மையில் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்! மிக சிறப்பாக உங்கள் உணர்வுகளை மனம் திறந்து சொல்லியுள்ளீர்கள்.குறைப்பாடுகளை கண்டு மனம் குமைந்து முடங்காமல் தன்னம்பிகையுடன் உள்ளீர்கள் .உங்களை போன்றோர் தான் சமூகத்திற்கு தேவை! உங்கள் முயற்சியில் வெற்றி கிட்ட வாழ்த்துகள்!

said...

அன்பின் ராகவன்,

உங்கள் கனவு நனவாகட்டும். ஊர் கூடித் தேர் இழுக்கும்போது என் கையும் அங்கிருக்கும்.

//Psychological distress can lead to significant depression and social isolation.//

என்று நீங்கள் தந்த சுட்டி சொல்கிறது. ஆனால், உங்கள் எழுத்துக்கள் அதை வென்று நிற்கிறது. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணை நிற்பான்.

அன்புடன்
ஆசிப் மீரான்

said...

நல்ல பதிவு.

//ஆனா இதெல்லாம் எப்படிச் செய்றது? நான் டாக்டரும் கிடையாது. கோடீஸ்வரனும் கிடையாது. நெறைய விவரம் தெரிஞ்சவனும் கெடையாது. ஆனா நம்பிக்கை இருக்கு. முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான். அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.//

கனவு மெய்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. நிச்சயம் இதை பார்க்கும், படிக்கும் பலர் உங்களுக்கு உதவ முன்வருவர்.

said...

கனவு மெய்பட வாழ்த்துக்கள்.

said...

அதாவது இந்த நோய்க்காரங்க மொதல்ல மனசாலதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவங்க பொதுவாழ்க்கையே போச்சுன்னு. நானும் மொதல்ல அப்படித்தான் இருந்தேன்//

ராகவன் நீங்க என்ன சொல்றீங்க? இது அவ்வளவு பெரிய வியாதியா?

வெப்பில இதுக்கு ஒன்னும் இல்லையா? சுத்தி பாத்துட்டு சொல்றேன்..

said...

நிஜமா நான் இத எதிர்பார்க்கலைங்க. ஆண்டவன் ஏன் இப்படியெல்லாம் சோதனை பண்ணறான்னு தெரியல. ஆனா உங்க தன்னம்பிக்கைக்கு நல்லதே நடக்கும்.

said...

ராகவன்,

உங்க நல்ல மனசுக்கு ஒரு குறைவும் வராது.
நிறைஞ்ச மனசோட சொல்றேன், நீங்க நல்லா இருப்பீங்க.
கனவு கட்டாயம் நிறைவேறும். நம்ம எண்ணம் நல்லா இருந்தா,
அந்த ஆண்டவனே எல்லாத்தையும் நிறைவேத்தி வச்சுருவான்.

நம்ம உறவினர்கூட இப்படித்தான் மனசொடிஞ்சு கிடக்குறார்.
நான் சாமிகிட்டே வேண்டிக்கறென். எல்லாம் சரியாகும்.

மொட்டையிலும் நீங்க கம்பீரமாத்தான் இருக்கீங்க.

said...

அன்பு நண்பரே,
சோர்ந்து போய் இருக்கிறவங்களுக்கு உம்ம வார்த்த தான்யா புத்துணர்ச்சி தருத மருந்து.. செந்திலாண்டவனோட அருளால் நீர் மேன்மேலும் உயர்வீர்... உம்ம கனவு நிச்சயம் மெய்ப்படும், அதற்கு என்னுடைய ஆதரவுக் கரம் இதோ.....

said...

// வவ்வால் said...
வணக்கம் ராகவன்!

//குறிப்பா முடி வெட்டிக்கப் போகுறப்போ ஒரு தாழ்வுணர்ச்சி வரும். நம்ம தலையப் பாக்குற முடி வெட்டுறவரு என்ன நெனப்பாரோருன்னு.//

//ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கனும்னு. அதுல சொரியாசிஸ் மற்றும் பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி செய்யனும். //

உண்மையில் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்! மிக சிறப்பாக உங்கள் உணர்வுகளை மனம் திறந்து சொல்லியுள்ளீர்கள்.குறைப்பாடுகளை கண்டு மனம் குமைந்து முடங்காமல் தன்னம்பிகையுடன் உள்ளீர்கள் .உங்களை போன்றோர் தான் சமூகத்திற்கு தேவை! உங்கள் முயற்சியில் வெற்றி கிட்ட வாழ்த்துகள்! //

நன்றி வவ்வால். உங்களது வாழ்த்து நல்ல பலனைக் கொடுக்கட்டும்.

said...

// ஆசிப் மீரான் said...
அன்பின் ராகவன்,

உங்கள் கனவு நனவாகட்டும். ஊர் கூடித் தேர் இழுக்கும்போது என் கையும் அங்கிருக்கும். //

மிக்க நன்றி ஆசிப் மீரான். தேர்வடத்தில் உங்கள் கைத்தடமும் இணையும் என்ற ஊக்கத்திற்கு மிக்க நன்றி. நிச்சயமா இந்தக் கனவு நனவாகும் ஒவ்வொரு படியையும் அனைவரோடும் பகிர்ந்து கொண்டு சிறப்பு செய்வோம்.

// //Psychological distress can lead to significant depression and social isolation.//

என்று நீங்கள் தந்த சுட்டி சொல்கிறது. ஆனால், உங்கள் எழுத்துக்கள் அதை வென்று நிற்கிறது. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணை நிற்பான்.

அன்புடன்
ஆசிப் மீரான் //

மிக்க நன்றி மீரான்.

said...

// சிவமுருகன் said...
நல்ல பதிவு.

//ஆனா இதெல்லாம் எப்படிச் செய்றது? நான் டாக்டரும் கிடையாது. கோடீஸ்வரனும் கிடையாது. நெறைய விவரம் தெரிஞ்சவனும் கெடையாது. ஆனா நம்பிக்கை இருக்கு. முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான். அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.//

கனவு மெய்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. நிச்சயம் இதை பார்க்கும், படிக்கும் பலர் உங்களுக்கு உதவ முன்வருவர். //

நன்றி சிவமுருகன். வேண்டிய உதவிகளை வேண்டிய பொழுதில் அந்தச் சிவமுருகன் கொண்டு வந்து சேர்ப்பான் என்று இந்தச் சிவமுருகன் வாயில் கேட்பது மகிழ்ச்சியே. :-)

said...

// நன்மனம் said...
கனவு மெய்பட வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி நன்மனம். நல்மனங்கள் கூடிச் செய்ய வேண்டிய காரியம் இது. குறிப்பாக மருத்துவ அறிவு பக்கபலமாகத் தேவைப்படுகிறது. பணபலமும் தேவை. இப்பொழுது இருக்கும் மனபலத்தோடு இவையிரண்டும் இறைபலத்தால் சேரும் பொழுது வெற்றி கிட்டும்.

said...

// tbr.joseph said...
அதாவது இந்த நோய்க்காரங்க மொதல்ல மனசாலதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவங்க பொதுவாழ்க்கையே போச்சுன்னு. நானும் மொதல்ல அப்படித்தான் இருந்தேன்//

ராகவன் நீங்க என்ன சொல்றீங்க? இது அவ்வளவு பெரிய வியாதியா? //

ஜோசப் சார். இதால உயிர் போகாது. ஒருத்தர் கிட்ட இருந்து ஒருத்தருக்கு ஒட்டாது. ஆனா பரம்பரையா பரவும். தோற்றத்தைப் பாதிக்கிற எந்த நோயும் மனதளவில் மிகுந்த பாதிப்பைக் கொடுக்கும். அதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளாவிட்டால் அவ்வளவுதான். அது தன்னம்பிக்கையைத் தின்று, தாழ்வுணர்ச்சியைக் கொடுத்து ஆளையே அழித்துவிடும். அந்த வகையில் இது கொடிய நோய்தான். இந்த நோயில் ஒரு விசித்திரம் உண்டு. 90வயதுவரை ஒருவர் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருந்தால் அந்த வயதில் அவருக்கு சோரியாசிஸ் வராது என்று சொல்லவே முடியாது.

// வெப்பில இதுக்கு ஒன்னும் இல்லையா? சுத்தி பாத்துட்டு சொல்றேன்.. //

பாருங்க. நிறைய தகவல்கள் கிடைக்கும். அவைகளையும் இங்கயே எல்லோரோடையும் பகுந்துக்கோங்க. மத்தவங்களுக்கும் இதப் பத்தித் தெரியட்டும். அதுக்குதான நானும் இந்தப்பாடு படுறேன்.

said...

// அனுசுயா said...
நிஜமா நான் இத எதிர்பார்க்கலைங்க. ஆண்டவன் ஏன் இப்படியெல்லாம் சோதனை பண்ணறான்னு தெரியல. ஆனா உங்க தன்னம்பிக்கைக்கு நல்லதே நடக்கும். //

அனுசுயா, எந்தச் சோதனையும் ஒரு நல்லதிற்குத்தான். இந்தச் சோதனை எனக்கு வரவில்லை என்றால் இந்த எண்ணம் எப்படி வந்திருக்கும்?

விரைவில் மற்றொரு நண்பரின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இதெல்லாம் அதற்கு முன்பு ஒன்றுமில்லை. ஆனால் அந்தச் சோதனையின் விளைவு!!!!! ஒரு மருத்துவமனை.

said...

// நெல்லைகிறுக்கன் said...
அன்பு நண்பரே,
சோர்ந்து போய் இருக்கிறவங்களுக்கு உம்ம வார்த்த தான்யா புத்துணர்ச்சி தருத மருந்து.. செந்திலாண்டவனோட அருளால் நீர் மேன்மேலும் உயர்வீர்... உம்ம கனவு நிச்சயம் மெய்ப்படும், அதற்கு என்னுடைய ஆதரவுக் கரம் இதோ..... //

மிக்க நன்றி நெல்லைக் கிறுக்கன். என்ன செய்ய வேண்டும் என்று ஒரு திட்டம் தயாரிக்க இருக்கிறேன். அந்தத் திட்டம் தயாரானவுடன், உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன். அனைவரின் உழைப்போடும் இந்தத் திட்டம் செயலாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும் கூட.

said...

// paarvai said...
அன்பு ராகவன்!
"நோய்களை எவருமே விரும்பிப் பெறுவதில்லை;சில நோயுடையோரை;நம் உற்றவர்களுக்கிருந்தால் எப்படி!எதிர்கொள்வோமோ!, அப்படி ஆறுதற்படுத்தப் பழகவேண்டும்.இதை ஒருசிலர் புரிவதில்லை.
அவர்களை மன்னியுங்கள்.எனெனில்"இது அவர்கள் அறியாமை"
தங்கள்;தெய்வ நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை; நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கும்!
"ஆறுதல் தருவான் ஆறுமுகன்"
யோகன் -பாரிஸ் //

நன்றி யோகன். நீங்கள் கூறுவது மிகுந்த உண்மைதான். இறைவன் அருள்தானே அனைத்தையும் நடத்திக்காட்ட வேண்டும். நடத்திக்காட்டுவான்.

said...

இந்நோயின் தாக்கத்தை நன்றாக பதிந்துள்ளீர்கள். உடலில் குறையிருந்தாலும் குறையற்ற உள்ளத்தைக் கொண்டுள்ளீர்கள். குன்று தோறாடும் குமரன் உங்கள் குறையெலாம் தீர்ப்பான்.

said...

விளையாட்டுப் பிள்ளைகளான எங்களுக்குச் சமமா சிரிச்சி கேலி பண்ணி விளையாடிகிட்டு இருக்கிற உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?!! :(

ஆச்சரியமா இருக்கு ராகவன்.. குறையைக் கூட நிறைவான மனசோட நீங்க அணுகுற விதம் அத விட ஆச்சரியம், அருமை.. உங்க கனவு நிறைவேற நானும் உங்க முருகபெருமானையும் அவனோட மயிலையும் வேண்டிக்கிறேன்.

(என்னால என்ன முடியும்னு சரியாத் தெரியாட்டாலும்,) உங்க கனவுக்கு என்னாலான உதவிகள் எப்போதும் உண்டு..

said...

//முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான்.//

இதை நான் ஒத்துக்க மாட்டேன்.

// அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.
//

All the best!!!!

said...

இராகவன். சில மாதங்களுக்கு முன் 'நீங்கள் என்னைத் தம்பி இராகவன் என்று சொல்லிவிட்டீர்கள். உங்களிடம் சொல்வதற்கு என்ன' என்று சொல்லி என்னிடம் பகிர்ந்து கொண்ட விதயத்தை இன்று வலைப்பதிவு மூலமாக எல்லோருடமும் பகிர்ந்து கொண்டுவிட்டீர்கள். அதுவும் அருமையாக எந்த வித தாழ்வுணர்ச்சியும் இல்லாமல். போன பதிவிலேயே இதற்குக் கோடி காட்டியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போதே எனக்குத் தோன்றியது நீங்கள் இந்த 'மொட்டை போட்ட' பதிவில் அதனைப்பற்றி பேசப்போகிறீர்கள் என்று. உங்களின் தன்னம்பிக்கை தான் எல்லோருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி.

ஏற்கனவே தெரிந்தது தான் என்பதால் பதிவைப் படித்த போது ஒன்றும் புதிதாகத் தோன்றவில்லை. ஆனால் நண்பர்களின் பின்னூட்டங்களைப் படிக்கும் போது கண்களில் நீர் நிறைந்துவிட்டது. இதனைச் சொல்லும் போதும் கண்களில் நீர் நிறைகிறது. உங்களின் பெருந்தன்மையும் வலையுலக நண்பர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பும் மிக மிக மிக மெச்சத் தகுந்தது. நெகிழ்ச்சியானது.

said...

ராகவன்,
உங்கள் தன்னம்பிக்கைமிக்க பதிவுகளில் இது முன்நிற்கிறது.

உங்கள் கனவு நினைவாக வாழ்த்துக்கள்.

said...

ராகவன், உங்கள் கனவு நனவாகட்டும். இந்தத் தடங்கல்களை எல்லாம் மீறி வாழ்வில் நீங்கள் பொதிவாக உங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பயணம் தொடரவும் வாழ்த்துக்கள். பின்புலத்தில் நண்பர்கள் நாங்கள் இருப்போம்.

said...

// மணியன் said...
இந்நோயின் தாக்கத்தை நன்றாக பதிந்துள்ளீர்கள். உடலில் குறையிருந்தாலும் குறையற்ற உள்ளத்தைக் கொண்டுள்ளீர்கள். குன்று தோறாடும் குமரன் உங்கள் குறையெலாம் தீர்ப்பான். //

நன்றி மணியன். அந்தக் குன்றுதோறாடுகிறவன் எனது கனவினை நனவாக்கிக் காட்டுவதே நான் விரும்பும் பரிசு. நிச்சயம் தருவான்.

said...

// பொன்ஸ் said...
விளையாட்டுப் பிள்ளைகளான எங்களுக்குச் சமமா சிரிச்சி கேலி பண்ணி விளையாடிகிட்டு இருக்கிற உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?!! :( //

நம்புங்க பொன்ஸ். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இனிமேலும் சிரிச்சிச் சிரிச்சுதான் விளையாடுவேன். இதக் கூடச் சொல்லீருக்க மாட்டேன். ஆனா அடுத்து என்ன செய்யனும்னு ஆலோசனையும் உதவியும் வேணும். அதுக்குத்தான் குடுத்தேன். வழக்கம் போலவே இருக்கனும். சரியா? நீங்க திரும்ப வந்தப்புறம் பமக வவாச உலகப் பொதுக்குழுச் சங்கத்தச் சோழிங்கநல்லூர்ல கூட்டலாம். :-)

// ஆச்சரியமா இருக்கு ராகவன்.. குறையைக் கூட நிறைவான மனசோட நீங்க அணுகுற விதம் அத விட ஆச்சரியம், அருமை.. உங்க கனவு நிறைவேற நானும் உங்க முருகபெருமானையும் அவனோட மயிலையும் வேண்டிக்கிறேன். //

ஆமா..ஆமா

//(என்னால என்ன முடியும்னு சரியாத் தெரியாட்டாலும்,) உங்க கனவுக்கு என்னாலான உதவிகள் எப்போதும் உண்டு.. //

நேரம் வரும் போது கேக்குறேன்.

said...

Dear ஜீரா,

உயர்ந்த எண்ணங்களையா உமக்கு! பெருமையா இருக்கு! நல்ல மனசுக்கு நினைச்சதை சாதிப்பீங்க!

போட்டோ சும்மா பட்டைய கெளப்புது! :)

said...

Dear ஜீரா,

உயர்ந்த எண்ணங்களைய்யா உமக்கு! நினைத்தது நடக்க வாழ்த்துக்கள்!

போட்டோல சும்ம பட்டைய கெளப்பறீங்க! :)))

said...

எங்க அம்மாவுக்கும் இது மாதிரி பிரச்சினை இருந்தது சார். அவங்க கிட்ட கேட்டு தான் இத எழுதுறேன். குப்பை மேனி இலை, மிளகு, துளசி, தேங்காய் பூ, இதெல்லாம் சேர்த்து விழுது மாதிரி அரைச்சு, குளிக்குறதுக்கு முன்னாடி தேவையான இடத்துல போட்டு ஊற வெச்சு ஒரு மணி நேரம் கழிச்சு குளிக்கணும். நீகோ சோப்னு ஒண்ணு உண்டு அத யூஸ் பண்ணுங்க, அப்புறம் சுத்தமா கத்திரிக்காய் சேர்க்காதீங்க. ஒரு மாததிலேயே உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.
பிரசன்னா

said...

// Cyril அலெக்ஸ் said...
ராகவன்,
உங்கள் தன்னம்பிக்கைமிக்க பதிவுகளில் இது முன்நிற்கிறது.

உங்கள் கனவு நினைவாக வாழ்த்துக்கள். //

வாழ்த்திற்கு நன்றி சிறில்.

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன். சில மாதங்களுக்கு முன் 'நீங்கள் என்னைத் தம்பி இராகவன் என்று சொல்லிவிட்டீர்கள். உங்களிடம் சொல்வதற்கு என்ன' என்று சொல்லி என்னிடம் பகிர்ந்து கொண்ட விதயத்தை இன்று வலைப்பதிவு மூலமாக எல்லோருடமும் பகிர்ந்து கொண்டுவிட்டீர்கள். அதுவும் அருமையாக எந்த வித தாழ்வுணர்ச்சியும் இல்லாமல். போன பதிவிலேயே இதற்குக் கோடி காட்டியிருந்தீர்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அப்போதே எனக்குத் தோன்றியது நீங்கள் இந்த 'மொட்டை போட்ட' பதிவில் அதனைப்பற்றி பேசப்போகிறீர்கள் என்று.//

ஆமாம் குமரன். அதனால்தான் நீங்களும் சின்னப்புள்ளத்தனமாய்ச் சிரித்து வைக்க...நானும் அதைக் கேட்டு வைக்க... :-) தாழ்வுணர்ச்சி தேவையில்லாத ஒன்று.

ஆனால் ஒன்று. வீட்டிலும் நண்பர்களிடத்திலும் கிடைக்கும் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது. மிகவும் முக்கியமானது.

// உங்களின் தன்னம்பிக்கை தான் எல்லோருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி.

ஏற்கனவே தெரிந்தது தான் என்பதால் பதிவைப் படித்த போது ஒன்றும் புதிதாகத் தோன்றவில்லை. ஆனால் நண்பர்களின் பின்னூட்டங்களைப் படிக்கும் போது கண்களில் நீர் நிறைந்துவிட்டது. இதனைச் சொல்லும் போதும் கண்களில் நீர் நிறைகிறது. உங்களின் பெருந்தன்மையும் வலையுலக நண்பர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பும் மிக மிக மிக மெச்சத் தகுந்தது. நெகிழ்ச்சியானது. //

எல்லாம் முருகன் குடுக்குறதுதான. அதான் அப்படி.

said...

// செல்வராஜ் (R. Selvaraj) said...
ராகவன், உங்கள் கனவு நனவாகட்டும். இந்தத் தடங்கல்களை எல்லாம் மீறி வாழ்வில் நீங்கள் பொதிவாக உங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பயணம் தொடரவும் வாழ்த்துக்கள். பின்புலத்தில் நண்பர்கள் நாங்கள் இருப்போம். //

மிக்க நன்றி செல்வராஜ். பொறந்ததுக்கு ஏதாவது செய்யனும்ல. அதான்.

said...

// இளவஞ்சி said...
Dear ஜீரா,

உயர்ந்த எண்ணங்களைய்யா உமக்கு! நினைத்தது நடக்க வாழ்த்துக்கள்! //

நன்றி இளவஞ்சி.

// போட்டோல சும்ம பட்டைய கெளப்பறீங்க! :))) //

அப்படியே அந்த டீ சட்டைய வெள்ளையாவோ காவியாவோ மாத்துனா ஒரு ஆனந்தா எபக்ட் கிடைக்குதுல்ல. :-))))))))))))

said...

அசைவம் சாப்பிடுவராக நீங்கள் இருந்தால் மீன் சாப்பிடுவதையும் நிறுத்திவிடுங்கள்.எனது நெருங்கிய உறவினருக்கும் இந்த குறைப்பாடு உள்ளது.இதற்கு வேப்பிலையை நன்றாக அரைத்து எங்கெங்கு உள்ளதோ அங்கு தடவி,சிறிது நேரம் கழித்து குளிப்பார்.தொடர்ந்து செய்து வந்தால்,பலன் தெரியும்.இதை இங்கு சொல்வத்ற்க்கு தப்பாக் எடுத்துக்கொள்ள வேண்டாம்..இந்த எளிய முறையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற சிறிய(பேரா)ஆசை தான்

said...

அன்பு ராகவன்,

படித்து முடித்ததும் மனசு கனத்துப் போச்சு. ஏதோ நீண்ட நாள் பழகிய நண்பனுக்கு வந்த கஷ்டம் போல் மனதில் ஓரத்தில் அப்போ அப்போ நினைவுக்கு வருகிறது.

இந்த கஷ்டத்திலும் உங்கள் பதிவில் உங்கள் தன்னம்பிக்கையும், செந்தூர் ஆண்டவன் மீது உள்ள நம்பிக்கையும் ஓங்கி இருப்பது மனதுக்கு ஒரு ஆறுதல். உங்கள் விருப்பப் படியே எல்லாம் நல்ல படியாக நடக்கும். முருகன் துணை இருப்பான்.

அன்புடன்,
சிவா

said...

இராகவன் மீன் சாப்புட்றதை நிறுத்துறுதா? நடக்காதுன்னு தோணுது. :-(

said...

ராகவன்
தனிமடலில் தொடர்பு கொள்கிறேன். தன்னம்பிக்கைக்கு என் வணக்கங்கள்.

said...

ஒரு 2-3 மாதம் மீன் சாப்பிடுவதை நிறுத்தினால் மீகவும் நல்லது.இதற்கு என்று இல்லை,அனைத்து சரும குறைபாடுக்களுக்கும்,இதை பத்தியமாக நாட்டு வைத்தியர்க்ள் கூறுவர்.எல்லாம் கேள்வியறிவு தான்

said...

//நீங்க திரும்ப வந்தப்புறம் பமக வவாச உலகப் பொதுக்குழுச் சங்கத்தச் சோழிங்கநல்லூர்ல கூட்டலாம். :-)
//
கூட்டிடலாம் ராகவன்.. நிச்சயமா.. நீங்க எந்தப் போட்டோவிலும் இல்லாம வித்தியாசமான தோற்றத்துல வந்த ரகசியம் இப்போ தான் புரியுது எனக்கு.. இந்த போட்டோவுக்கும் அன்னிக்கு பார்த்த ராகவனுக்கும் நிறைய ஒற்றுமை தெரியுது :)

பை த பை இந்த போட்டோ நிஜமாவே நல்லாருக்கு.. இதே கெட் அப் மெயின்டெயின் பண்ணலாம் ;)

said...

அன்பின் ராகவனுக்கு,

இந்த உலகில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு ஒவ்வொரு மனுசனுக்கும்,ஆனா இது என்ன பொறுத்தவரை சின்ன வியாதிகூட கிடையாது.நம்பிக்கை வைங்க இந்த சின்ன பிரச்சினை தீரும் நாள் வெகுதொலைவில் இல்லை...

said...

அன்பு ராகவன்,உங்கள் கனவு நிறைவேற நண்பர்கள் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

பிரசன்னா மற்றும் திருமதி.மீனா கூறியது போல் இறைச்சி,மீன்,
கருவாடு,கத்தரிக்காய் போன்றவற்றை தவிருங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.
இது அனுபவ உண்மை.

முடியோடு இருப்பதைவிட மொட்டை
அடித்த புகைப்படத்தில் மாதவன்போல்
அழகாக இருக்கிறீர்கள்.

(பழைய பதிவு பின்னூட்டம் ஒன்றில்
யாரோ உங்களை 'சண்டைக்கோழி'
படத்தில் மீரா ஜாஸ்மின் அண்ணனாக
நடித்தீர்களா? எனக்கேட்டார்களே!!.
பாருங்கள்!இப்போது நான் உங்களை ஹீரோவாக்கி விட்டேன்.)

அன்புடன்,
(துபாய்)ராஜா.
http://rajasabai.blogspot.com/

said...

அன்பின் ராகவன்

வாசித்தேன், என் உணர்வுகளை எழுதமுடியவில்லை.தங்கள் கனவு மெய்ப்படவேண்டும்.

said...

அண்ணா,

உங்க தைரியத்தையும் மனதிடத்தையும், நம்பிக்கையையும் வியந்து பாராட்டுகிறேன்.

முருகன் அருள் என்றும் உங்களுக்குண்டு.

உங்களின் கனவு நினைவாகும், அதில் அணிலின் சேவை போல் என்னுடைய சேவையும் இருக்கும்.

said...

// MeenaArun said...
அசைவம் சாப்பிடுவராக நீங்கள் இருந்தால் மீன் சாப்பிடுவதையும் நிறுத்திவிடுங்கள்.எனது நெருங்கிய உறவினருக்கும் இந்த குறைப்பாடு உள்ளது.இதற்கு வேப்பிலையை நன்றாக அரைத்து எங்கெங்கு உள்ளதோ அங்கு தடவி,சிறிது நேரம் கழித்து குளிப்பார்.தொடர்ந்து செய்து வந்தால்,பலன் தெரியும்.இதை இங்கு சொல்வத்ற்க்கு தப்பாக் எடுத்துக்கொள்ள வேண்டாம்..இந்த எளிய முறையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற சிறிய(பேரா)ஆசை தான் //

மீனா, வேப்பிலை மிகச்சிறந்த மருந்து. பெங்களூரில் வேப்பிலை கிடைப்பதில்லை. ஆகையால் வேப்பெண்ணை வாங்கி அதோடு நல்லெண்ணெய் கலந்து பயன்படுத்துவேன். நல்ல பலன் தரும். இரவு தூங்கும் முன் உடலில் பூசிக்கொண்டால் நன்று.

said...

// சிவா said...
அன்பு ராகவன்,

படித்து முடித்ததும் மனசு கனத்துப் போச்சு. ஏதோ நீண்ட நாள் பழகிய நண்பனுக்கு வந்த கஷ்டம் போல் மனதில் ஓரத்தில் அப்போ அப்போ நினைவுக்கு வருகிறது. //

அதென்ன நண்பன் போல? நான் நண்பன்னுதான நெனச்சுக்கிட்டு இருந்தேன்!!!!!!!!!

// இந்த கஷ்டத்திலும் உங்கள் பதிவில் உங்கள் தன்னம்பிக்கையும், செந்தூர் ஆண்டவன் மீது உள்ள நம்பிக்கையும் ஓங்கி இருப்பது மனதுக்கு ஒரு ஆறுதல். உங்கள் விருப்பப் படியே எல்லாம் நல்ல படியாக நடக்கும். முருகன் துணை இருப்பான்.

அன்புடன்,
சிவா //

பின்னே அவன் வேலைக்காரனாயிற்றே......

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன் மீன் சாப்புட்றதை நிறுத்துறுதா? நடக்காதுன்னு தோணுது. :-( //

அதான குமரன். :-)

குமரன் இது தொடர்பாக நானும் பல தகவல்கள் திரட்டினேன். எந்த உணவு நல்லது. எது கெட்டது என்று.

Zinc அதிக அளவில் எடுத்துக் கொள்வது தோல் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. அது கடல் மீன்களில் நிறைய இருக்கிறது. மீனவர்களைப் பார்த்தாலே தெரியும். நல்ல மென்மையான பளபளப்பான தோல் இருக்கும்.

ஆனால் மேக்கரல் என்ற மீனை தவிர்த்தல் மிகவும் நல்லது. ஒழுங்காகச் சுத்தம் செய்யப்பட்டு சமைக்கப்பட்ட இறால் அல்லது நண்டு வகைகளையே உண்ண வேண்டும்.

காய்கறிகளும் பழங்களும் மிகவும் நல்லது. குறிப்பாக பழங்கள். நிறைய நீர் குடிக்க வேண்டும். மோர் குடிக்க வேண்டும். பழச்சாறு குடிக்க வேண்டும்.

உப்பு-புளியைக் குறைப்பதும் நலமே.

said...

// தேன் துளி said...
ராகவன்
தனிமடலில் தொடர்பு கொள்கிறேன். தன்னம்பிக்கைக்கு என் வணக்கங்கள். //

நன்றி தேன் துளி. இன்னும் மெயிலைப் பார்க்கவில்லை. பார்த்ததும் தொடர்பு கொள்கிறேன்.

said...

// raamcm said...
அன்பின் ராகவனுக்கு,

இந்த உலகில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு ஒவ்வொரு மனுசனுக்கும்,ஆனா இது என்ன பொறுத்தவரை சின்ன வியாதிகூட கிடையாது.நம்பிக்கை வைங்க இந்த சின்ன பிரச்சினை தீரும் நாள் வெகுதொலைவில் இல்லை... //

நன்றி ராசிம்.

அது சரி...அதென்ன உங்கள் வலைப்பூவில் மே 15க்குப் பிறகு ஒன்றுமே போடவில்லை?

said...

// பொன்ஸ் said...
//நீங்க திரும்ப வந்தப்புறம் பமக வவாச உலகப் பொதுக்குழுச் சங்கத்தச் சோழிங்கநல்லூர்ல கூட்டலாம். :-)
//
கூட்டிடலாம் ராகவன்.. நிச்சயமா.. நீங்க எந்தப் போட்டோவிலும் இல்லாம வித்தியாசமான தோற்றத்துல வந்த ரகசியம் இப்போ தான் புரியுது எனக்கு.. இந்த போட்டோவுக்கும் அன்னிக்கு பார்த்த ராகவனுக்கும் நிறைய ஒற்றுமை தெரியுது :) //

தெரிஞ்சிருச்சா? தலையில கனம் இல்லைன்னாலே எல்லாம் வேற மாதிரிதான் இருக்கும். அதுவும் நல்லதுக்குத்தான்.

இன்னைக்குக் காலைல அக்சென்சர் அம்மன பாத்துட்டுதான் வந்தேன். பைக்ல வரும் போதே மனசுக்குள்ளயே ஒரு வணக்கம் போட்டுட்டு வந்தேன். நல்ல பேரு வெச்ச தாயே....! அக்சென்சர் அம்மன்.

// பை த பை இந்த போட்டோ நிஜமாவே நல்லாருக்கு.. இதே கெட் அப் மெயின்டெயின் பண்ணலாம் ;) //

இப்படியே விடனும் போலத்தான் தெரியுது. அனேகமா அடுத்த மாசம் திருத்தணி விசிட்தான்.

said...

// பிரசன்னா said...
எங்க அம்மாவுக்கும் இது மாதிரி பிரச்சினை இருந்தது சார். அவங்க கிட்ட கேட்டு தான் இத எழுதுறேன். குப்பை மேனி இலை, மிளகு, துளசி, தேங்காய் பூ, இதெல்லாம் சேர்த்து விழுது மாதிரி அரைச்சு, குளிக்குறதுக்கு முன்னாடி தேவையான இடத்துல போட்டு ஊற வெச்சு ஒரு மணி நேரம் கழிச்சு குளிக்கணும். நீகோ சோப்னு ஒண்ணு உண்டு அத யூஸ் பண்ணுங்க, அப்புறம் சுத்தமா கத்திரிக்காய் சேர்க்காதீங்க. ஒரு மாததிலேயே உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.
பிரசன்னா //

நன்றி பிரசன்னா. உங்கள் அம்மாவிற்கு இருக்கும் பிரச்சனையைப் பகிர்ந்து கொண்டதோடு இல்லாமல் நல்லதொரு மருந்தையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். மிகவும் நன்றி. மிளகு, துளசி, தேங்காப்பூ சரி...குப்பைமேனிக்கு எங்க போவேன்? தூத்துக்குடீல முந்தி வாய்ப்புண் இருந்தா மென்னு துப்புவோம். இங்க எங்க போறது? பெங்களூர்ல எங்க போய்த் தேடுறது?

said...

// முடியோடு இருப்பதைவிட மொட்டை
அடித்த புகைப்படத்தில் மாதவன்போல்
அழகாக இருக்கிறீர்கள்.

(பழைய பதிவு பின்னூட்டம் ஒன்றில்
யாரோ உங்களை 'சண்டைக்கோழி'
படத்தில் மீரா ஜாஸ்மின் அண்ணனாக
நடித்தீர்களா? எனக்கேட்டார்களே!!.
பாருங்கள்!இப்போது நான் உங்களை ஹீரோவாக்கி விட்டேன்.) //

வாங்க துபாய் ராஜா....என்னைய ஹீரோவாக்கீட்டீங்க. ஹி ஹி ரொம்ப சந்தோசம். அப்படியே ஒரு சினிமா எடுத்தீங்கன்னா....ஹி ஹி...

said...

பதிவு மட்டும் மீள்பதிவு வரலான்னா, பின்னூட்டமும் மீள் பின்னூட்டமா வரலாமுன்னு நினைக்கிறேன்.

இது ஒரு மீள் பின்னூட்டம்( கண்டுக்காம விட்டதுக்கு)

ராகவன்,

உங்க நல்ல மனசுக்கு ஒரு குறைவும் வராது.
நிறைஞ்ச மனசோட சொல்றேன், நீங்க நல்லா இருப்பீங்க.
கனவு கட்டாயம் நிறைவேறும். நம்ம எண்ணம் நல்லா இருந்தா,
அந்த ஆண்டவனே எல்லாத்தையும் நிறைவேத்தி வச்சுருவான்.

நம்ம உறவினர்கூட இப்படித்தான் மனசொடிஞ்சு கிடக்குறார்.
நான் சாமிகிட்டே வேண்டிக்கறென். எல்லாம் சரியாகும்.

மொட்டையிலும் நீங்க கம்பீரமாத்தான் இருக்கீங்க.

said...

அன்பு ராகவன் உலகத்தில் குறையில்லா மனிதனே கிடையாது.ஆனால் அந்தக்குறையையும் நிறையாக பாவிப்பவர்கள் உங்களைபோல் சிலபேர்கள்தான். சென்னை கும்மிடிபூண்டீ அருகே மண்ணுர் என்ற கிராமத்தில் ஒரு ஆயுர்வேத மருத்துவர் இருக்கிறார். அவரிடம் 30 நாட்கள் வைத்தியம் பார்த்தால் இந்தக்குறை உங்களைவிட்டு அகன்றுவிடும்.என்குடும்பத்தில் என் மனைவியின் தம்பிக்கு இருந்து இப்போது பூரண குணம் ஆகிவிட்டது. அசைவ உணவை அறவே தவிர்த்து விடுங்கள் அன்பன் தி.ரா.ச