Saturday, July 01, 2006

வாணி ஜெயராமிடம் சில கேள்விகள்

coffee with suchi என்ற நிகழ்ச்சியில் இந்த வாரம் வாணி ஜெயராம். தமிழகத்தின் சிறந்த பாடகிகளில் ஒருவர். வடக்கில் இவர் புகழ் பெற்று விடுவாரோ என்று அரசியல் செய்யப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்ப் பெண். தமிழகம் அவரை அரவணைத்துக் கொண்டது. தென்னகம் நல்ல வழி தந்தது. எனக்கும் மிகவும் பிடித்த பாடகியும் கூட. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில அருமையான துளிகள்.

கேள்வி: எம்.எஸ்.வியா? இளையராஜாவா?

வாணி: அப்படியெல்லாம் பாகுபாடு பாக்க முடியாது. ஆனா நிறையப் பாடுனது எம்.எஸ்.வி சார் கிட்டதான். என்னால என்ன முடிஞ்சதுன்னு தெரிஞ்சு அதச் சிறப்பா ஊக்குவிச்சவர் அவர். I enjoyed working with him.

கேள்வி : ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல், bole re pappihara, மேகமே மேகமே. இந்த மூனுல ஒங்களுக்குப் பிடிச்சது எது?

வாணி : மூனும் பிடிக்கும்.

கேள்வி: பி.சுசீலா பாடல்களை விரும்பிப் பாடுவீங்களாமே. எங்களுக்காக ஒரு பாடல்....

வாணி: ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலைப் பாடுகிறார்.

கேள்வி: இப்ப இருக்குற இசையமைப்பாளர்கள் கிட்ட உள்ள குறை?

வாணி: குறையச் சொல்லக்கூடாது. நிறையத்தான் சொல்லனும். ஆனாலும் ஒரு குறையைச் சொல்லலாம். தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க. மும்பைல இருந்து கூட்டீட்டு வாங்க வெளிநாட்டுல இருந்து கூட்டீட்டு வாங்க. ஆனா தமிழ் தெரிஞ்சவங்களாக் கூட்டீட்டு வாங்க. பல பாட்டுகளைக் கேக்கவே முடியலை. தமிழ்க் கொலை பண்றாங்க. தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?

நிகழ்ச்சியின் இடையிடையே அருமையாகப் பாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வாணி ஜெயராம். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னால மலரல்லவோ........இதை தமிழகம் என்றும் மறக்காது.

அன்புடன்,
கோ.இராகவன்

38 comments:

said...

இராகவன்,
திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் பேட்டியைப் பதிவிலிட்டமைக்கு நன்றி.
இவர் எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளுள் ஒருவர்.

//ஆனாலும் ஒரு குறையைச் சொல்லலாம். தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க. மும்பைல இருந்து கூட்டீட்டு வாங்க வெளிநாட்டுல இருந்து கூட்டீட்டு வாங்க. ஆனா தமிழ் தெரிஞ்சவங்களாக் கூட்டீட்டு வாங்க. பல பாட்டுகளைக் கேக்கவே முடியலை. தமிழ்க் கொலை பண்றாங்க. தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?//

முற்றிலும் உண்மை. நான் திருமதி.வாணி ஜெராம் அவர்களின் கருத்தோடு உடன்படுகிறேன். புதுமை செய்ய வேண்டும் என்கிற பெயரில் பல சீரழிவுகள் தமிழ்த்திரையுலகில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று.

said...

இராகவன்,

கை வலி பரவாயில்லையா?

திருமதி.வாணி ஜெயராம், எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அவருடைய பேட்டியை இங்கே கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

// தமிழ்க் கொலை பண்றாங்க //

இது உண்மைதான் என தோன்றுகிறது..

said...

வாணி ஜெயராம்! சிறந்த பாடகி என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. இன்றைய இசையமைப்பாளர்கள் செய்யும் பெரிய தவறு;மொழியறிவற்றவர்களின் அறிமுகம்; மிகச்சரியாகக் கூறியுள்ளார். இவர்கள் தமிழைக் குதறுவது; பெரும் கொடுமை. ஏன் இந்த மோகம்!.புரியாத புதிர்!!
யோகன் பாரிஸ்

said...

தமிழ் சினிமாவுலேதான் தமிழர்களுக்கு கொடுக்கற இடம் குறைவு. உள்ளெ நுழைய
முதல் தகுதியே தமிழ் தெரியதவங்களா இருக்கணுங்கறது 'தலை' விதி.

அது ஹீரோயின் முதல் பாட்டுப் பாடறவங்க வரை .

வில்லன் முதல் ஸ்டண்ட் ஆளுங்க வரை.

அதான் கலைக்கு மொழி தேவை இல்லையாமே(-:

வாணி சொன்னது ரொம்பச் சரி.
உச்சரிப்புக் கொலை. ஒருவேளை இலவசமாப் பாடித் தர்றாங்களோ?

பல பாட்டுகளில் என்ன வார்த்தை இருக்குன்னே தெரியலையேப்பா? அப்புறம் எங்கே
'கரியோகி'யிலே பாடறது?(-:

பி.கு: கை வலி தேவலையா?

said...

//வடக்கில் இவர் புகழ் பெற்று விடுவாரோ என்று அரசியல் செய்யப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்ப் பெண்//

இது எதுக்கு.. திறமை இருந்தால் அவங்க ஜெயிச்சுட்டுப் போறாங்க..

//தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?
//

இது எதுக்கோ பதில் சொல்றமாதிரி இல்ல?

எனக்கும் திருமதி வாணி ஜெயராம் பாடல்கள் பிடிக்கும்..

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

said...

இலங்கை தொலைக்காட்சியில் இவரை அழைத்து ஒரு பேட்டி எடுத்தார்கள். அதில் இவரிடம் முக்கியமாக எதையுமே கேட்கவில்லை. இவர் பாடிய பாடல்களின் காட்சிகளை ஒளிபரப்பினார்கள். ஒவ்வொரு பாட்டையும் முழுமையாக. ஒரு மணித்தியால நிகழ்ச்சியென்றுதான் சொல்லப்பட்டது. அதை பாடல்காட்சிகளாலேயே நிரப்பினார்கள். இடையில் இரண்டொரு கேள்விகள் கேட்டார்கள். அந்த முழுப்பேட்டியிலும் பயன்பாடான ஒரே விசயம், அவர் தமிழ்பற்றியும் தமிழ் உச்சரிப்புப் பற்றியும் இன்றைய பாடகர்கள் இசையமைப்பாளர்கள் தமிழைக் கவனிப்பதில்லை என்பதைப்பற்றியும் ஆதங்கப்பட்டுச் சொன்ன கருத்துத்தான். அந்த ஒரு மணித்தியாலம் முடிவதற்குள் திடீரென ஓடிக்கொண்டிருந்த பாடல்காட்சியை நிறுத்திவிட்டு, "அடுத்து இலங்கை - சிம்பாவே அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது" என்று அறிவித்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்கள்.

வாணிஜெயராமை கலையகத்தில் இருத்தி நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியென்று நினைக்கிறேன். முறையாக நிகழ்ச்சியை முடிக்காமல் அவசரமாகவே முடித்தனர். பாவம் வாணி. அவர் வராமலேயே இருந்திருக்கலாம்.

said...

வாணி ஜெயராம் ஒரு 'ஆர்டிஸ்ட்' அதாவது ஒவியர் என்பது உங்களுக்கு தெரியும் தானே ?

said...

// வெற்றி said...
முற்றிலும் உண்மை. நான் திருமதி.வாணி ஜெராம் அவர்களின் கருத்தோடு உடன்படுகிறேன். புதுமை செய்ய வேண்டும் என்கிற பெயரில் பல சீரழிவுகள் தமிழ்த்திரையுலகில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று. //

உண்மைதான். வெகு சில தமிழ்ப் பாட்டுகளே உச்சரிப்பு தெளிவாகப் புரிந்து இரசிக்கும் நிலையில் உள்ளன. இந்நிலையில் கொஞ்சம் மாற்றம் தேவைதான்.

said...

// Sivabalan said...
இராகவன்,

கை வலி பரவாயில்லையா? //

இப்பக் கொறஞ்சிருக்கு சிவபாலன். ஆனா முழுசா வாசியாகலை. ரெண்டு வாரத்துக்குத் தொட்டில்தான்.

// திருமதி.வாணி ஜெயராம், எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அவருடைய பேட்டியை இங்கே கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி. //

நான் முழுசாப் பாக்கலைங்க. இல்லைன்னா இன்னும் நெறையச் சொல்லியிருப்பேன்.

// // தமிழ்க் கொலை பண்றாங்க //

இது உண்மைதான் என தோன்றுகிறது.. //

உண்மையேதான்.

said...

// paarvai said...
வாணி ஜெயராம்! சிறந்த பாடகி என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. இன்றைய இசையமைப்பாளர்கள் செய்யும் பெரிய தவறு;மொழியறிவற்றவர்களின் அறிமுகம்; மிகச்சரியாகக் கூறியுள்ளார். இவர்கள் தமிழைக் குதறுவது; பெரும் கொடுமை. ஏன் இந்த மோகம்!.புரியாத புதிர்!!
யோகன் பாரிஸ் //

யோகன் வாணிஜெயராம் ஒரு கவிஞர் என்றும் பேட்டியில் தெரிந்து கொண்டேன். உறக்கம் பற்றியும் ஒரு கவிதை சொன்னார். சொல் நயமும் பொருள் நயமும் மிகவும் பொருத்தம். அதை அழகாக உச்சரித்த விதமும் சிறப்பு. அவர் ஓவியம் மிகச்சிறப்பாக வரைவார் என்பது தெரிந்திருந்தது. ஆனால் கவிஞர் என்பது புதுச்செய்தி. முருகக் கடவுள் மேல் இவரே ஒரு கவிதை எழுதி அதற்கு இவரே இசையும் அமைத்திருக்கிறாராம். அதைக் கேட்கவும் ஆவல். ஆனால் தொலைக்காட்சித் தொகுப்பாளனி அவரை விஸ்வநாதனுக்கும் இளையராஜாவுக்கும் இடையே மாட்டி விடுவதிலேயே குறியாக இருந்தார். ஹா ஹா ஹா

said...

// துளசி கோபால் said...
தமிழ் சினிமாவுலேதான் தமிழர்களுக்கு கொடுக்கற இடம் குறைவு. உள்ளெ நுழைய
முதல் தகுதியே தமிழ் தெரியதவங்களா இருக்கணுங்கறது 'தலை' விதி.

அது ஹீரோயின் முதல் பாட்டுப் பாடறவங்க வரை .

வில்லன் முதல் ஸ்டண்ட் ஆளுங்க வரை.

அதான் கலைக்கு மொழி தேவை இல்லையாமே(-: //

கலைக்கு மொழி அவசியமில்லைதான். ஆகையால்தான் வடக்கத்திய நடிக நடிகையருக்கு பின்னணிக்குரல் கொடுத்து விடுகிறார்கள். ஆனால் பின்னணிக்குரலோடு நடிக்கும் நடிக நடிகையருக்குத் தேசிய விருது கொடுக்கப்படுவதில்லை. ஆனால் பாடகர்களைப் பொருத்தவரையில் அவர்கள் ஒழுங்காகப் பாடுவது அவசியமே. அதுவும் சிறந்த உச்சரிப்போடு.

// வாணி சொன்னது ரொம்பச் சரி.
உச்சரிப்புக் கொலை. ஒருவேளை இலவசமாப் பாடித் தர்றாங்களோ? //

ஹி ஹி இத இலவசக் கொத்தனார் கிட்டதான் கேக்கனும்.

// பல பாட்டுகளில் என்ன வார்த்தை இருக்குன்னே தெரியலையேப்பா? அப்புறம் எங்கே
'கரியோகி'யிலே பாடறது?(-: //

கரியோகில வேற பாடனுமா.....கிழிஞ்சது போங்க. ஒருவாரமா வீட்டுல உக்காந்திருந்ததால புதுப்பாட்டுகள் என்னென்ன வந்திருக்குன்னு தெரிஞ்சது. ஒன்னு ரெண்டு நல்லாயிருக்கு. மத்ததெல்லாம் கேட்டு விட்டுர்ர மாதிரிதான். ரகசியமானது காதல் அப்படீங்குற பாட்டு நல்லாயிருக்கு. இன்னும் ரெண்டு பாட்டுக நல்லாயிருக்கு.

// பி.கு: கை வலி தேவலையா? //

கொறஞ்சிருக்கு டீச்சர். ஆனா வலி இருக்கு.

said...

// வசந்தன்(Vasanthan) said...
இலங்கை தொலைக்காட்சியில் இவரை அழைத்து ஒரு பேட்டி எடுத்தார்கள். அதில் இவரிடம் முக்கியமாக எதையுமே கேட்கவில்லை. இவர் பாடிய பாடல்களின் காட்சிகளை ஒளிபரப்பினார்கள். ஒவ்வொரு பாட்டையும் முழுமையாக. ஒரு மணித்தியால நிகழ்ச்சியென்றுதான் சொல்லப்பட்டது. அதை பாடல்காட்சிகளாலேயே நிரப்பினார்கள். இடையில் இரண்டொரு கேள்விகள் கேட்டார்கள். அந்த முழுப்பேட்டியிலும் பயன்பாடான ஒரே விசயம், அவர் தமிழ்பற்றியும் தமிழ் உச்சரிப்புப் பற்றியும் இன்றைய பாடகர்கள் இசையமைப்பாளர்கள் தமிழைக் கவனிப்பதில்லை என்பதைப்பற்றியும் ஆதங்கப்பட்டுச் சொன்ன கருத்துத்தான். அந்த ஒரு மணித்தியாலம் முடிவதற்குள் திடீரென ஓடிக்கொண்டிருந்த பாடல்காட்சியை நிறுத்திவிட்டு, "அடுத்து இலங்கை - சிம்பாவே அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது" என்று அறிவித்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார்கள். //

அடக்கடவுளே!!!!!!!!!!!!!!

// வாணிஜெயராமை கலையகத்தில் இருத்தி நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியென்று நினைக்கிறேன். முறையாக நிகழ்ச்சியை முடிக்காமல் அவசரமாகவே முடித்தனர். பாவம் வாணி. அவர் வராமலேயே இருந்திருக்கலாம். //

இதுவும் ஒருவகை அவமானம் என்பது எனது கருத்து வசந்தன். சமீபத்தில் கூட அவர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடிய பாடல் படத்தில் மட்டுமல்ல கேசட்டிலும் வெளி வராமல் போனது. நந்தா என்ற படத்திற்கு என நினைக்கிறேன்.

said...

வாணி ஜெயராம் அவர்கள் பாடிய மேகமே மேகமே என்ற பாடலும் அந்தமானைப் பாருங்கள் அழகு என்ற பாடலும் எனக்கு பிடித்த பாடல்கள்.

//ஆனால் தொலைக்காட்சித் தொகுப்பாளனி அவரை விஸ்வநாதனுக்கும் இளையராஜாவுக்கும் இடையே மாட்டி விடுவதிலேயே குறியாக இருந்தார். ஹா ஹா ஹா//
நீங்க சொல்ற மாதிரியே பேட்டி எடுப்பவர்கள் விருந்தினரின் திறமையைக் குறித்து மட்டும் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அது ஒரு கலை.

//ஆனா முழுசா வாசியாகலை.//
சொல்லிய contextஇல் இருந்து சரியாகவில்லை என்று புரிகிறது. வாசியாகலை என்பது தூத்துக்குடி பக்கம் பேசற வழக்கோ? அப்புறம் contextக்கு தமிழ்ல என்னங்க?

said...

// // Seemachu said...
//வடக்கில் இவர் புகழ் பெற்று விடுவாரோ என்று அரசியல் செய்யப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்ப் பெண்//

இது எதுக்கு.. திறமை இருந்தால் அவங்க ஜெயிச்சுட்டுப் போறாங்க.. //

சீமாச்சு. வெறும் திறமையை மட்டும் வெச்சுக்கிட்டு திரையுலகத்துல காலம் தள்ள முடியாதுன்னு நெனைக்கிறேன். வாணி ஜெயராம் இந்தியில் முதலில் பாடிய பாடல் bole re pappihara என்ற பாடல். இன்றைக்கும் இது அழியாப் புகழ் பெற்ற பாடல். இந்த ஒரு பாடலே அவருக்குத் தான்சேன் விருது பெற்றுத் தந்தது.

மீரா என்ற படத்தில் முதலில் வாணியை வைத்து பண்டிட் ரவிசங்கர் ஒரு பாடலை எடுத்து விட்டார். இன்னொரு பாடலுக்கு ஒரு மிகப் பெரிய பாடகியைக் கூப்பிட்டதிற்கு அவர் வாணி பாடிய பாட்டையும் தான் பாடுவதானால் வருவதாகச் சொன்னாராம். ரவிசங்கர் என்பதால் அந்தப் பெரிய பாடகியை மறுத்து விட்டு எல்லாப் பாட்டுகளையும் வாணிக்கே கொடுத்து விட்டார். மற்ற கமர்ஷியல் இசையமைப்பாளர்கள் என்ன செய்தார்கள் என்பதை உங்கள் எண்ணத்திற்கே விடுகிறேன்.

வாணி மட்டுமல்ல. அந்தப் பாடகியின் அரசியலில் வீழ்ந்தவர்கள் இன்னும் சிலருண்டு.

////தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?
//

இது எதுக்கோ பதில் சொல்றமாதிரி இல்ல? //

எதுக்கு?

// எனக்கும் திருமதி வாணி ஜெயராம் பாடல்கள் பிடிக்கும்..

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு... //

நிச்சயமாக. நல்ல இசைரசனையுடையவர்கள் அவரது பாடல்களைப் பிடிக்காது என்று சொல்லவே மாட்டார்கள். அவரது கன்னடப் பாடல்களைக் கேட்டுள்ளேன். உச்சரிப்பு மிகத் தெளிவு. ஆகையால் இவர் மற்றவர்களைக் குறை சொல்லலாம்.

said...

நெருப்பு அவர்களே, முதலில் உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்து விட்டேன். அது வேறொரு பதிவிற்கு என்று கருதியதால். பிறகுதான் தெரிந்தது வாணியம்மா பதிவில் அவை வந்திருப்பது. ஆகையால் அழித்து விட்டேன். மன்னிக்கவும்.

said...

// கைப்புள்ள said...
வாணி ஜெயராம் அவர்கள் பாடிய மேகமே மேகமே என்ற பாடலும் அந்தமானைப் பாருங்கள் அழகு என்ற பாடலும் எனக்கு பிடித்த பாடல்கள். //

எனக்கும் அந்த பாட்டுகள் ரொம்பப் பிடிக்கும். நாதமெனும் கோயிலிலே ஞானவிளக்கேற்றி வைத்தேன் பாட்டும் ரொம்பப் பிடிக்கும்.

// //ஆனால் தொலைக்காட்சித் தொகுப்பாளனி அவரை விஸ்வநாதனுக்கும் இளையராஜாவுக்கும் இடையே மாட்டி விடுவதிலேயே குறியாக இருந்தார். ஹா ஹா ஹா//
நீங்க சொல்ற மாதிரியே பேட்டி எடுப்பவர்கள் விருந்தினரின் திறமையைக் குறித்து மட்டும் பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அது ஒரு கலை. //

அப்ப அதுல சிறந்தவங்கள கலைஞர்னு சொல்வாங்களா கைப்பு? ;-)

// //ஆனா முழுசா வாசியாகலை.//
சொல்லிய contextஇல் இருந்து சரியாகவில்லை என்று புரிகிறது. வாசியாகலை என்பது தூத்துக்குடி பக்கம் பேசற வழக்கோ? அப்புறம் contextக்கு தமிழ்ல என்னங்க? //

context தேவையில்ல. நீங்க சொல்றதுல இருந்து வாசியாகலைன்னா சரியாகலைன்னு தெரியுது - என்று சொன்னாலே புரிந்து விடும். literal translation is not always possible.

வாசியாயிருச்சா என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களிலும் நான் பழக்கத்தில் உள்ள சொல்லே. இன்றைக்கு எல்லாம் சரியாப் போச்சு.

said...

// கோவி.கண்ணன் said...
வாணி ஜெயராம் ஒரு 'ஆர்டிஸ்ட்' அதாவது ஒவியர் என்பது உங்களுக்கு தெரியும் தானே ? //

தெரியும் கோவி.கண்ணன். பன்முகத் தன்மை கொண்ட பாடகி என்பதே உண்மை.

said...

//அப்ப அதுல சிறந்தவங்கள கலைஞர்னு சொல்வாங்களா கைப்பு? ;-)//

நம்மளைக் கலாய்க்க நீங்களும் கெளம்பிட்டீங்களா? உண்மையிலேயே contextக்குப் பதிலாக 'சொல்வதிலிருந்து'ன்னு போட்டிருக்கலாம் என்று தோனவே இல்லை. ஆங்கிலத்தில் யோசித்துத் தமிழில் மொழிபெயர்த்து விட்டேன் என்று நினைக்கிறேன்.
:)

said...

தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?//

நெத்தியில அடிச்சா மாதிரி கேட்ட வாணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

இளையாராஜாவும் ஆஷஅ போஸ்லேயை பல படங்களில் பாட வைத்திருந்தாலும் முடிந்தவரை அவர் தமிழை சரியாக உச்சரிக்க வைத்திருக்கிறார்.. ஆனால் ரஹமானும், இப்போதைய இளைஞர் கூட்டமும்தான் இதை கருத்தில் கொள்ளாமல் தமிழ் பாடல்கள் என்றாலே காத தூரம் ஓடவைக்கும் உச்சரிப்புகளை கொடுத்து இம்சிக்கின்றன..

said...

// நெத்தியில அடிச்சா மாதிரி கேட்ட வாணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. //

அதச் சொல்லுங்க ஜோசப் சார்.

// இளையாராஜாவும் ஆஷஅ போஸ்லேயை பல படங்களில் பாட வைத்திருந்தாலும் முடிந்தவரை அவர் தமிழை சரியாக உச்சரிக்க வைத்திருக்கிறார்.. ஆனால் ரஹமானும், இப்போதைய இளைஞர் கூட்டமும்தான் இதை கருத்தில் கொள்ளாமல் தமிழ் பாடல்கள் என்றாலே காத தூரம் ஓடவைக்கும் உச்சரிப்புகளை கொடுத்து இம்சிக்கின்றன.. //

ரகுமானுடைய உச்சரிப்பு சிறப்பாகவே இருக்கும். உதித் நாராயண் எனப்படும் தமிழை உதுத்த நாராயணன்களைக் கொண்டு வருகையில்தான் பிரச்சனை.

லதா மங்கேஷ்கர் ஒருமுறை சென்னை வந்திருந்த பொழுது தமிழில் பாடுவதற்கான ஆவலை அப்பொழுது பிரபலமாக இருந்த விஸ்வநாதனிடம் சொன்னாராம். ஆனால் விஸ்வநாதன் அவரைத் தமிழில் பயன்படுத்தவேயில்லையாம். உச்சரிப்பு சரியிருக்காதுன்னு காரணமாம். ஆஷாவுக்கு இளையராஜா வாய்ப்புக் கொடுத்தது மூனே பாட்டுலதான். அவங்க அக்காவுக்கு ஒரே ஒரு பாட்டுதான். லதா பாடி ஒரு மலையாளப் பாட்டு கேட்டிருக்கேன். கதலி செங்கதலின்னு...சேட்டன்மார்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்னு என்னால ஊகிக்க முடிஞ்சது.

said...

வாணியின் குரலில் அக்காலங்களில் வெளியான ஈழ விடுதலைப் பாடல்கள் பிரபல்யம் வாய்ந்தவை.

வீசும் காற்றே தூது செல்லு -தமிழ்
நாட்டிலெழுந்தொரு செய்திசொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் - அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு

எனத் தொடங்கும் பாடலில் சோகம் ததும்ப அவர் இவ்வாறு பாடுவார்.

இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது
தங்கைகளின் பெரும் மங்களம் போனது
சாவு எமக்கொரு வாழ்வென ஆனது..

இதே போல திலீபனின் நினைவில்..

நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை..

என அவர்பாடிய பாடலும் நினைவில் நிற்பவை

said...

வாணி ஜெயராம் ஈழத்துப்பாடல்களும் (விடுதலைப்புலிகளுக்காக) சிலவற்றைப் பாடியுள்ளார்.
அவற்றுள் உடனே கிடைத்தவை இவை இரண்டுமே.

வீசும் காற்றே தூது செல்லு -தமிழ்
நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு


தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும் (இது மனோவுடன் பாடியது)

said...

கொழுவி பாடல்களைச் சொன்னார் என்றால் வன்னியன் பாடல்களையே தந்திருக்கிறார். நன்றி. நன்றி.

இந்தப் பாடலோடு தொடர்புடைய மற்ற கலைஞர்களையும் பற்றிச் சொல்லுங்களேன்.

இந்தப் பாடலை இறக்கம் செய்து கேட்டு விட்டு எனது கருத்தை நாளை சொல்கிறேன்.

said...

"பனிஷ்மேண்ட்" இராகவன் அண்ணே,

ரொம்ப மாதங்களா உங்க வலைப்பதிவில் தமில் கமெண்ட் ஏழுத ஆசைப்ப்ட்டேண், இன்ரு என்னுடைய அபிமான பாடகரின் பேட்டியுடன் வாஞ்சையும் நிறைவாயிற்று :-)

said...

//தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க

இக்கருத்துடன் நான் 100 வீதம் ஒத்துப் போகின்றேன்
சுஸ்வந்தர் சிங்
உதித் நாராயணன்
இப்படியே பட்டியல் மோசமாக நீளுண்டாலும் நம் தமிழ் இசையமைப்பளர்கள் திருந்துவார்களா?

said...

// வன்னியன் said...
வாணி ஜெயராம் ஈழத்துப்பாடல்களும் (விடுதலைப்புலிகளுக்காக) சிலவற்றைப் பாடியுள்ளார்.
அவற்றுள் உடனே கிடைத்தவை இவை இரண்டுமே.

வீசும் காற்றே தூது செல்லு -தமிழ்
நாட்டிலெழுந்தொரு சேதி சொல்லு

தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும் (இது மனோவுடன் பாடியது) //


வன்னியன், இந்த இரண்டு பாடல்களையும் நான் கேட்டேன். பாடலின் கருத்தும் தாக்கமும் குறையாமல் மெத்தாகிக் குரலில் கொண்டு வந்திருக்கிறார் வாணி. மனதைக் கனக்க வைக்கிறதய்யா! இப்பொழுதைக்கு அதுதான் முடியும் என்பதை நினைக்கும் பொழுதும் மனது கனக்கிறது. இந்தப் பாடலுக்கு இசைக்கோர்வித்தது யார்?

said...

// The Talkative Man said...
"பனிஷ்மேண்ட்" இராகவன் அண்ணே,

ரொம்ப மாதங்களா உங்க வலைப்பதிவில் தமில் கமெண்ட் ஏழுத ஆசைப்ப்ட்டேண், இன்ரு என்னுடைய அபிமான பாடகரின் பேட்டியுடன் வாஞ்சையும் நிறைவாயிற்று :-) //

வாங்க வாங்க...நல்லாயிருக்கிறீங்களா. வாணி ஜெயராம் உங்கள இங்க கூட்டீட்டு வந்துட்டாங்க பாத்தீங்களா! இப்பக் கூட வாணி ஜெயராம் பாடிய பாட்டத்தான் கேட்டுக்கிட்டிருக்கேன். ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது. இசை இளையராஜா.

said...

// mayooresan மயூரேசன் said...
//தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க

இக்கருத்துடன் நான் 100 வீதம் ஒத்துப் போகின்றேன்
சுஸ்வந்தர் சிங்
உதித் நாராயணன்
இப்படியே பட்டியல் மோசமாக நீளுண்டாலும் நம் தமிழ் இசையமைப்பளர்கள் திருந்துவார்களா? //

காலம் மாறும் என நம்புவோம். இந்த நிலை நிச்சயம் மாறும்.

இதை வெளிப்படையாக எதிர்த்த பாடகிகள் மூவர்தான். பி.சுசீலா, வாணி ஜெயராம் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி. பாடகர்களில் இருவர்தான் டீ.எம்.எஸ் மற்றும் பாலு.

said...

"இன்க்கும் இசை இன்க்கவில்லை; இன்க்கிறது உன் குரல் தான்"
"சற்று முன்பு நெல்வரம்; எந்தன் நெஞ்சில் கல்வரம்"
- சாதனா சர்க்கம்

"பெரியாம்மான பெண்ணை ரசிக்கலாம்" (இது "பிரியமான பெண்ணை ரசிக்கலாம்")
"யாரூ யாரின்வனோ"
- சுக்வீந்தர் சிங்

இதெல்லாம், இந்தி உலக மார்க்கெட் பிடிக்க, இந்துஸ்தான் இசையை தமிழில் கலந்து, வடக்கில் இருந்து பாடுவதற்கு தமிழுக்கு கொண்டு வந்த ஏ.ஆர்.ரகுமானை சொல்லனும். கேட்டால் ஏ.ஆர்.ஆர் சாதனா சர்க்கம் இடம் சொன்னாராம், தமிழ் கத்துக்க சொல்லி. ஆனால், அவர் தான் இதுவரை கேட்கவில்லை.

said...

//இந்த இரண்டு பாடல்களையும் நான் கேட்டேன். பாடலின் கருத்தும் தாக்கமும் குறையாமல் மெத்தாகிக் குரலில் கொண்டு வந்திருக்கிறார் வாணி. மனதைக் கனக்க வைக்கிறதய்யா! இப்பொழுதைக்கு அதுதான் முடியும் என்பதை நினைக்கும் பொழுதும் மனது கனக்கிறது. //
உண்மை ராகவன்.. நானும் கேட்டேன்.. நல்ல பாடல்கள்.. சுட்டிகளுக்கு நன்றி, வன்னியன்..

said...

இராகவன்,
வாணி மட்டுமல்ல,
பி.சுசிலா, டி.எம்.செளந்தரராஜன், மனோ, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், சுவர்ணலதா போன்றோரும் ஈழத்துப் போராட்டப் பாடல்களை எண்பதுகளில் பாடியுள்ளனர். எஸ்.பி. பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், ஹரிகரன், சித்ரா போன்றோர் அண்மையில் பல பாடல்களைப் பாடியுள்ளனர்.
எல். வைத்தியநாதன், தேவேந்திரன் போன்றோர் பழைய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்கள். ஏ.ஆர் றகுமான் அண்மையில் இசையமைத்துள்ளார்.

இவற்றில் சிலவற்றை என் ஈழப்பாடல்கள் என்ற வலைப்பதிவில் இடுவேன்.

இப்போது ஏ.ஆர்.றகுமான் இசையமைப்பில் எஸ்.பி.பாலு பாடிய ஒரு பாடல்
பொங்கியெழுகின்ற கடலலையே

எண்பதுகளின் இறுதியில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்.
எனக்கு மிகப்பிடித்த பாடலும்கூட. அருமையான இசையும் குரலும்.
நடடாராசா மயிலைக்காளை

said...

பார்த்தீங்களா? நானும் பார்த்தேன். வாணிஜெயராம் பாடியதிலே என்னுடைய ஃபேவரைட் , 'அம்மா உந்தன் கைவளையாய் ஆக மாட்டேனா'

said...

// இதெல்லாம், இந்தி உலக மார்க்கெட் பிடிக்க, இந்துஸ்தான் இசையை தமிழில் கலந்து, வடக்கில் இருந்து பாடுவதற்கு தமிழுக்கு கொண்டு வந்த ஏ.ஆர்.ரகுமானை சொல்லனும். கேட்டால் ஏ.ஆர்.ஆர் சாதனா சர்க்கம் இடம் சொன்னாராம், தமிழ் கத்துக்க சொல்லி. ஆனால், அவர் தான் இதுவரை கேட்கவில்லை. //

வாங்க சீனு.

ஓ! கத்துக்கச் சொல்லி ரகுமான் சொல்லியும் கேக்கலையா சாதனா. ஆனா சாதனாவிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஆரம்ப காலத்தில் இருந்ததை விட இப்பொழுது உச்சரிப்பு திருந்தியிருக்கிறது. உதித்த நாரயணந்தான் இன்னும் திருந்துற மாதிரி காணோம்.

said...

ஆகா வன்னியன். எத்தனை பாட்டுக்கு லிங்க் குடுத்திருக்கீங்க. இருங்க ஒவ்வொன்னாக் கேக்குறேன். சுட்டிகளுக்கு நன்றி வன்னியன்.

said...

// icarus prakash said...
பார்த்தீங்களா? நானும் பார்த்தேன். வாணிஜெயராம் பாடியதிலே என்னுடைய ஃபேவரைட் , 'அம்மா உந்தன் கைவளையாய் ஆக மாட்டேனா' //

வாங்க இகாரஸ் பிரகாஷ். நீங்க சொல்ற பாட்டு கேட்ட மாதிரி இருக்கு. ஆனா எங்கன்னு தெரியலையே. என்ன பாட்டு இது?

said...

நல்லபேட்டி

said...

திருமதி.வாணி செயராம், மிகச் சிறந்த பாடகி என்பதில் இரண்டாம் கருத்தில்லை. மேலும் அனைத்து இந்திய மொழிகளிலும் பாடிய மிகச்சில பாடகியரில் அவரும் ஒருவர்.

நான் இப்போது பகிர்ந்து கொள்ளப்போகும் விடயத்தின் உண்மைத் தன்மை எத்தகையது என்பது எனத் தெரியவில்லை...ஆனால் மிக நம்பகமான ஒருவர் சொல்லிக் கேட்டது.

இளையராஜா அவர்கள் மேலே வந்து கொண்டிருந்த காலத்தில் வாணிசெயராம், இளையராசா அவர்களின் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி...அவரை கேலிபேசியதால் இளையராசாவினால் கட்டம் கட்டப்பட்டார்....என்பதே.

இதே வகையில் ஒரம்கட்டப்பட்ட இன்னொருவர் திரு.T.M.S

said...

சதயம், நீங்கள் கூறிய தகவல்களில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை நான் கேள்விப்பட்டுள்ளேன். பொதுவாகவே இளையராஜாவானவர் விஸ்வநாதன் முன்னிறுத்திய பாடகர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் உண்மை. பி.சுசீலா, ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், பி.எஸ்.சசிரேகா என்று பட்டியல் செல்லும். ஆனால் டீ.எம்.எஸ்சை முதல் படத்திலிருந்தே சிறப்பாகப் பயன்படுத்தினார். ஆனால் மலேசியாவில் ஒருமுறை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த பொழுது, இளையராஜாவைச் சின்னப்பையன் என்று பலர் முன்னிலையில் கூறியதால் இளையராஜா டீ.எம்.எஸ்சைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே அறிகிறேன். பி.சுசீலாவோ, வாணி ஜெயராமோ இளையராஜாவைப் பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. இளையராஜாவும் அவர்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.