Friday, July 21, 2006

அவசர உதவி தேவைப்படும் அவசர உதவி மையம்

ஒரு பிரபலமான ஜவுளித் தொழிலதிபர், சொத்துகள் நிறைய இருந்தும் அன்பான மனைவி மக்கள் இருந்தும் இறக்கும் பொழுது போர்த்திக் கொள்ளத் துணியின்றி இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? இந்தக் கொடுமையான நிகழ்ச்சியையும் அதன் விளைவாக நடந்த நல்ல நிகழ்ச்சியையும் நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

பெங்களூரில் வசிக்கும் ஹேமலதாவின் தந்தை என்.எஸ்.எஸ்.முருகேசன் அவர்களுக்குச் சொந்த ஊர் சின்னாளப்பட்டி. கடின உழைப்பும் இறைநம்பிக்கையும் கொண்டு சிறப்பாக முன்னுக்கு வந்தவர் அவர். பின்னாளில் பெங்களூரில் குடும்பத்தோடு தங்கி விட்டார். நிலக்கோட்டைக்கு ஒரு நண்பரைச் சந்திக்க வந்திருந்த பொழுதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. நெஞ்சுவலிதான். அருகில் உள்ள சிறிய மருத்துவமனையில் வசதிகள் இருக்கவில்லை. அங்கிருந்த மருத்துவரும் பக்கத்திலிருக்கும் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார். அதாவது மதுரைக்கு. ஆனால் அவரது நிலையின் தீவிரத்தை உணராத நண்பர் காலம் கடத்தி விட்டார். அந்தக் காலதாமதம்தான் எமனாகியிருக்கிறது.

மதுரையிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக பெங்களூரில் இருந்தவர்களுக்குத் தகவல் போயிருக்கிறது. குடும்பத்தினர் பதறிப் போனார்கள். ஹேமலதாவும் அவரது தம்பியும் உடனியாக மதுரைக்குக் கிளம்பியிருக்கிறார். ஆனாலும் வழியிலேயே அவர்கள் தந்தை இறந்த செய்தி கிடைத்துத் துடித்துப் போயிருக்கிறார்கள்.

ஆனாலும் பாருங்கள். மதுரையின் அத்தனை பெரிய மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததற்குச் சரியான விளக்கம் கூடத் தரவில்லையாம். நெஞ்சு வலி வந்து நான்கு மணி நேரம் கழித்துதான் மருத்துவமனைக்கே சென்றிருக்கிறார். அதுவும் அவரே நடந்து சென்றிருக்கிறார். அதுவும் இரவு பதினோரு மணியளவில். அந்த அளவிற்கு தன்னுடைய நினைவில் இருந்த ஒருவர் எப்படி இறந்தார் என்று கூட ஒரு மருத்துவமனையால் சொல்லமுடியவில்லை என்றால் எப்படி?

இவர்கள் சென்று சேர்ந்த பொழுதுதான் போர்த்திக் கொள்ளக் கூடத் துணியின்றிக் கிடந்த தந்தையின் உடலைப் பார்த்திருக்கிறார்கள். பதறிக் கதறியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு துயரம். துயரம். துயரம். இந்த இழப்பு மிகப் பெரிய வெற்றிடத்தை மட்டுமல்ல ஹேமலதா அவர்களின் உள்ளத்தில் ஒரு புது வேகத்தையும் உண்டாக்கி விட்டது. தனக்கு நேர்ந்த இழப்பு இன்னும் பலருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணந்தான் அது.

கல்வி என்பது அழியாச் சொத்து. அந்தச் சொத்தை தந்தையார் அளித்துச் சென்றதால்தான் இன்று நல்ல பதவியில் பெங்களூரில் இருக்கிறோம் என்று நம்பும் ஹேமா, அந்தச் சொத்தின் பலனை ஒரு மருத்துவமனை வடிவில் அவரது சொந்த ஊருக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதுவும் கிட்டத்தட்ட 20 முதல் 25 ஆண்டுகள் வரை சின்னாளப்பட்டியின் பக்கமே சென்றிராதவர் ஹேமா. இந்த மருத்துவமனை தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் பலமுறைகள் சென்று அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார்.

இப்படி ஒரு அவசர சிகிச்சை மருத்துவமனை வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் ஹேமா தொடர்பு கொண்டது பெங்களூரில் பிரபலமான நாராயண் ஹிருதயாலயா என்னும் மிகப் பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தேவி ஷெட்டி அவர்களைத்தான். நிறைய நேரம் அவருடன் பேசி ஆலோசனை பெற்று ஒரு இதய நோய் கவனிப்பு மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். டாக்டர் தேவி ஷெட்டி அவர்கள் இந்த Telemedicine பற்றி எடுத்துக் கூறி அதற்கான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதி கூறினார். இன்னும் சொல்லப் போனால் இந்த முடிவெடுப்பதற்கே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.

அதற்குப் பிறகு சின்னாளப்பட்டியில் காந்திகிராம அறக்கட்டளை சார்பில் இருக்கும் கஸ்தூரிபா மருத்துவமனையிலிருந்து டாக்டர் மனோன்மணியும் மூன்று அனுபவமிக்க செவிலியர்களும் பெங்களூரில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். வீடியோ கான்பிரன்சிங் முறையில் பெங்களூர் நாராயண் ஹிருதயாலயாவின் உதவியோடு டெலிமெடிசின் மூலம் சிகிச்சை அளிக்கும் மையமும் ஜூன் 2, 2006 அன்று தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் பெங்களூரில் இருக்கும் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும். காலதாமதமும் இதனால் குறையும். சிறப்பான சிகிச்சையும் உடனடியாக வழங்கப்படும்.

சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேறிய இந்தக் கனவு முயற்சியில் உறுதுணையாக நின்ற தனது தாயார் ருக்மணி முருகேசன், சகோதரர் சுதாகர், டாக்டர் தேவி ஷெட்டி, டாக்டர் விஜய் சிங், டாக்டர் பொம்மையா மற்றும் அனைத்து நண்பர்களையும் நன்றியோடு ஹேமா நினைவுகூர்கிறார்.

நாம் செய்யும் உதவியும் பணியும் எவ்வளவு பெரிது என்பது முக்கியமல்ல. ஆனால் எந்த மனப்பாங்குடன் செய்கிறோம் என்பதே முக்கியம் என்ற எண்ணமும் தனது தந்தை கடைசி நேரத்தில் என்ன துன்பம் அனுபவித்திருப்பாரோ என்ற மனவேதனையுமே இப்படி ஒரு மருத்துவ உதவி மையம் எழுப்ப ஊக்கம் கொடுத்ததாகக் கருதுகிறார் ஹேமா.

ஆனால் இந்தப் பணி இன்னும் முடிவடைந்து விடவில்லை. ஏன்? இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற ஏழை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொடுக்க பெங்களூர் நாராயண் ஹிருதயலயாவின் டாக்டர் தேவி ஷெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இங்கிருந்து பெங்களூர் சென்று வரக் கூட வசதியில்லாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு நாள் சோற்றுக்குச் சம்பாதிக்கும் இவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்வது? சிகிச்சை பெறுகிறவரும் அவருக்குத் துணையாக ஒருவரும் பெங்களூர் சென்று அங்கு ஒரு வாரகாலம் மருத்துவமனையில் தங்கியிருக்கவும் சிகிச்சை முடிந்த பிறகு திரும்பி வரவும் சொறபத் தொகையே தேவைப்படும். ஆனால் அந்தத் தொகை தேவைப்படுகிறவர்கள் நிறைய. அதற்காக ஒரு நிதி திரட்டி அதை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்து உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளது. எதெற்கெதற்கோ செலவிடுகிறோம். இந்தப் புனிதப் பணிக்காகவும் ஒரு தொகையை நாம் மனமுவந்து கொடுத்தலே சிறப்பு. அப்படிச் செய்ய வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ஊர் கூடித்தான் தேரிழுக்க வேண்டும். நண்பர்களே தேரிழுக்க வாருங்கள். பல உயிர்களைக் காத்திடுங்கள்.

இந்த மருத்துவமனையைப் பற்றி இந்து நாளிதழில் வெளி வந்த செய்தி இங்கே.

ஜூலை 15, 2006 அன்று ஒரு மருத்துவ மையத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு சுற்றியிருக்கும் பட்டிக்காடுகளில் இருந்து கிட்டத்தட்ட 250 பேர் வந்திருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும் ஆண்களுமாய் வந்தவர்களில் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் பெரிய சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் சின்னக் குழந்தைகளும் இருக்கிறார்கள். உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்தப் பிஞ்சுகள் பிஞ்சிலேயே நஞ்சு போய்விடும். நூற்றுக் கணக்கில் அல்ல. ஆயிரக் கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் நிதியுதவி தேவைப்படுகிறது. ஒருவரால் முடிகிறதல்ல இது. உங்களால் ஆனதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். பல ஏழைக் குழந்தைகள் பிழைக்க உதவி செய்யுங்கள். பல தமிழ்க் குடும்பங்களை ஒரு வேளையாவது சாப்பிட வைத்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவனையும் தலைவியையும் காப்பாற்றுங்கள். உங்களால் நாளை காப்பாற்றப் படப் போகும் பலருக்காக இன்று உங்களிடம் கையேந்திக் கேட்கிறோம்! மனவுவந்து பெருநிதி தாருங்கள்.

(உதவிகள் செய்யத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி zeushema@yahoo.com )

நன்றியுடன்,
கோ.இராகவன்

20 comments:

said...

ராகவன், இது ஒரு நல்ல முயற்சி. தனி மெயிலில் தொடர்பு கொள்கிறேன்.

said...

Raghavan.. neengal kuripitirupathu.. athey hemalatha-vin minanjala ?!

said...

நன்றே சொன்னீர்! இன்றே செய்வோம்!
நன்றி.

said...

பாராட்டத்தக்க, வேண்டிய முயற்சி.
வாழ்த்துகள்.
பணம் அனுப்பவேண்டிய முகவரியையும், விவரங்களையும், மின்னஞ்சலோடு கூட தெரிவித்திருக்கலாமே!

மனவுவந்து== மனமுவந்து??

said...

காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

உங்கள் நோக்கம் வாழ்க. அதற்கு என்னாலானதைக் கண்டிப்பாகத் தருகிறேன்.

said...

// Udhayakumar said...
ராகவன், இது ஒரு நல்ல முயற்சி. தனி மெயிலில் தொடர்பு கொள்கிறேன். //

கண்டிப்பாக உதய். மேலும் விவரங்களை இங்கேயே குடுக்க முயல்கிறேன். பதிவில் குறிப்பிட்டிருக்கும் மின்னஞ்சலுக்கோ என்னையோ தொடர்பு கொண்டால் மேலும் விவரங்கள் கிடைக்கும்.

said...

// யாத்திரீகன் said...
Raghavan.. neengal kuripitirupathu.. athey hemalatha-vin minanjala ?! //

ஆம் யாத்ரீகன். அது ஹேமலதா அவர்களின் மின்னஞல் முகவரிதான். உதவி செய்ய விரும்புகிறவர்கள் அந்த முகவரியிலேயே தொடர்பு கொள்ளலாம்.

said...

// மணியன் said...
நன்றே சொன்னீர்! இன்றே செய்வோம்!
நன்றி. //

நன்றி மணியன். குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் ஹேமலதா அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். தேவையிருப்பின் என்னையும் தொடர்பு கொள்ளவும்.

said...

// SK said...
பாராட்டத்தக்க, வேண்டிய முயற்சி.
வாழ்த்துகள்.
பணம் அனுப்பவேண்டிய முகவரியையும், விவரங்களையும், மின்னஞ்சலோடு கூட தெரிவித்திருக்கலாமே!

மனவுவந்து== மனமுவந்து?? //

நன்றி SK. ஹேமலதா அவர்கள் பெங்களூரில் இருக்கிறார்கள். அதனால் எந்த முகவரி தருவதென்று சிறு குழப்பம். அவருடன் பேசித் தருகிறேன். அதற்காக காத்திருக்க வேண்டாம். மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். நிச்சயம் விவரங்களைத் தருவார்.

said...

// பிரதீப் said...
காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

உங்கள் நோக்கம் வாழ்க. அதற்கு என்னாலானதைக் கண்டிப்பாகத் தருகிறேன். //

நன்றி பிரதீப். உங்கள் உதவி காத்திருக்கப்படுகிறது. என்னால் அல்ல. அந்த உதவியை வேண்டும் ஏழைகளால்.

said...

இராகவன்,
மிகவும் நல்ல முயற்சி. உங்களின் profile ல் உங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தேடினேன். கிடைக்கவில்லை. எப்படி நாம் உதவி செய்யலாம் எனும் விபரங்களை [வங்கி கணக்கு இலக்கம் போன்றவை] எனக்கு தனி மின்னஞ்சல் மூலமோ அல்லது இப் பதிவிலோ தெரியப்படுத்த முடியுமா?

பி.கு: சின்னாளப்பட்டி தமிழகத்திலா உள்ளது?

said...

நீங்கள் சொல்லியுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தனி மடல் அனுப்பியுள்ளேன்.

said...

// வெற்றி said...
இராகவன்,
மிகவும் நல்ல முயற்சி. உங்களின் profile ல் உங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தேடினேன். கிடைக்கவில்லை. எப்படி நாம் உதவி செய்யலாம் எனும் விபரங்களை [வங்கி கணக்கு இலக்கம் போன்றவை] எனக்கு தனி மின்னஞ்சல் மூலமோ அல்லது இப் பதிவிலோ தெரியப்படுத்த முடியுமா? //

வெற்றி, என்னுடைய மின்னஞ்சல் முகவரி gragavan@gmail.com

ஹேமலதா அவர்களை இன்று தொடர்பு கொண்டு, வேண்டிய தகவல்களைப் பெற்றுத் தருகிறேன்.

// பி.கு: சின்னாளப்பட்டி தமிழகத்திலா உள்ளது? //

ஆமாம். பட்டுக்குப் பெயர் போன சின்னாளப்பட்டி மதுரைக்குப் பக்கத்தில்தான் உள்ளது.

said...

// Nakkiran said...
நீங்கள் சொல்லியுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தனி மடல் அனுப்பியுள்ளேன். //

மிக்க நன்றி நக்கீரன். காலத்தினால் செய்த உதவி என்பார்கள். ஞாலத்தின் மானப் பெரிது அது. நீங்கள் செய்வது அதுதான்.

said...

ராகவன்,

தகவலுக்கு நன்றி. அந்த பெங்களூர் ஹ்ருதயாலயாவில்தான் கோபாலின் அப்பாவுக்குச் சிகிச்சை நடந்தது. இப்பொதும் மாதம் ஒரு முறை போய் வருகிறார்.

முடிந்த உதவியை செய்வேன். நன்றி.

said...

ராகவன், நல்ல முயற்சி. தனியாகப் பேசலாம்.

said...

இராகவன்,
மின்னஞ்சல் முகவரிக்கு மிக்க நன்றி. இன்றே தொடர்பு கொள்கிறேன்.

said...

நன்றே செய்க. அதை இன்றே செய்க.

நல்ல காரியம் இது இராகவன். என்னால் முடிந்த அளவு என் பங்கினை அளிக்கிறேன்.

said...

எல்லாம் ஒரு சிஸ்டமேடிக்கா செய்யணும். அனாவசியமா எதையும் வேஸ்ட் செய்யக்கூடாதுன்றதுதான் முக்கியமாக் கவனிப்பாங்க. //

வெறும் பத்திரிகை செய்தின்னாலும் உங்க எழுத்தால ஜொலிக்குது. நெஞ்சை உருக்குவதாகவும் இருந்தது.

ஹேமலதாவின் முயற்சி மெச்சத்தக்கது. அதற்கு நம் எல்லாருடைய ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை..

said...

Ragavan,
Thagavaluku Nandri.
Naanum oru vagaiyil chinnalapattikaaran than.
athuvum Gandhigramam enaku rombavum parichayamaana idam.
Adutha maasam ooruku pogumbothu, neril sendru parkiren. ennala aana uthavigalai kandippaga seikiren.

anpudan
vk