Wednesday, November 15, 2006

சீனியம்மா - வடக்க சூலம்

அகத்திக்கீடைய ஆஞ்சிக்கிட்டிருந்தா சீனியம்மா. அப்பப் பாத்துப் பக்கத்துல உக்காந்தான் அழகரு. அழகுப் பேரன். ஐயனாரு கோயிலு பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கான். கொளக்கட்டாங்குறிச்சிச் தலக்கட்டுக எல்லாம் வரி வாங்கி பெரிய ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. பெரிய கம்மாய் பக்கத்துல இருக்குற ஐயனாரு கோயில்லதான் கொடை. ரொம்ப காலமா நடக்காம இருந்து இந்த வாட்டி நடக்குது. அதுக்குத்தான் ஊருல இருந்து வந்திருக்கான் அழகரு.

"ஐயாளம்மா, அகத்திக்கீரையோட அரட்டையா?" கிண்டலாத்தாங் கேட்டான். சீனியம்மா விடுமா? "ஆமாய்யா...ஆஞ்ச கீர போட்டுத்தான் காஞ்ச பயகளத் தேத்தனுன்னா அரட்டைன்னு பாக்க முடியுமா? செரட்டைன்னு பாக்க முடியுமா?"

வழிஞ்சான். பின்ன. வேலைக்குப் போன எடத்துல கண்டதத் தின்னு காஞ்சி போயில்ல வந்திருக்கான். அப்பிடியே பேச்ச மாத்துனான். "சரி. ஊரு கூப்புட யாரு போறது? செவலார்பட்டிக்கு ஆரு போறா? இப்பயே சொல்லி விட்டாத்தான பொழுது சாய வருவாக."

செவலார்பட்டிலதான் சீனியம்மா கூடப்பொறந்த கெங்கம்மாளக் குடுத்திருக்கு. அந்தம்மாவுக்கும் புள்ள குட்டீன்னு குடும்பம் பெருசு. சம்பந்தங்காரங்க பங்காளிகன்னு பெரிய வீடு. ஊர்ப் பொங்கலுன்னா சொல்லியனுப்பனுமா இல்லையா? அதத்தான் அழகரு கேக்கான்.

"அப்பெல்லாம் நானே ரெண்டு எட்டுல செவலாருபட்டி போயிருவேன். இல்லைன்னா...வண்டி கெட்டுனா...நானே பத்திக்கிட்டு நெம்மேனி வரைக்கும் போயிருவேன். சூலங் கீலமுன்னு பாக்க மாட்டேன். இப்ப எங்க? அதான் மோட்டார் சைக்குளு இருக்கு. எளவட்டங்க படக்குன்னு போயிட்டு வந்துர்ரீக." பழைய கதைய நெனச்சு அலுத்துக்கிட்டா சீனியம்மா.

"அதென்னம்மா சூலம்? அத ஏன் பாக்கீக? வெவரஞ் சொல்லுங்களேன்"னு கேட்டான். இவனுக்கு ஒரு மண்ணுந் தெரியாது. ஊருக்குள்ள இருந்து கிருந்து படிச்சிருந்தா என்னைக்கு எங்க சூலம்னு தெரிஞ்சிருக்கும்.

"என்ன அழகரு! இப்பிடிக் கேட்டுட்ட. அப்பெல்லாஞ் சூலம் பாக்காம ஒரு எட்டு வெக்க மாட்டோமுல்ல. இந்த கெழமைக்கு எந்தப் பக்கஞ் சூலமுன்னு இருக்கு. அத மீறிப் போக முடியுமா? போனாலுஞ் சூலஞ் சும்மா விடுமால? ஆனா எந்தச் சூலமும் என்னய ஒன்னுஞ் செஞ்சிக்கிற முடியாது. நாஞ் சூலத்துக்கே சூலம்." சொல்லைலயே சீனியம்மாளுக்குப் பெருமிதந்தான்.

"அட! என்ன இந்தப் போடு! அதென்ன கத? அதையுஞ் சொல்லுங்களேங் கேக்கேன்."

"ம்ம்ம்....ஒனக்குச் சொல்லாமலாய்யா. கண்டிப்பாச் சொல்றேன்." பேரங் கேட்டதும் ஒத்துக்கிட்டா. "அப்ப எனக்கும் ஒன்னோட ஐயாளய்யாவுக்கும் முடிச்சி ஒரு மூனு வருசம் இருக்கும். ஒங்கப்பாவுக்கு ரெண்டு வயசு. அப்ப செவலார்பட்டியில ஒன்னோட சின்னப்பாட்டிக்குப் பேறுகாலம். எங்கம்மா இல்ல. நாந்தான் அக்கா. காலைல பாத்து சேதி வந்திருச்சு. இடுப்பு வலின்னு. நடந்தா நேரம் ஆகுமுன்னு சடக்குன்னு வண்டியப் போட்டுக்கிட்டுத் தனியாப் பொறப்பட்டேன். அவரு வயலுக்குப் போகனுமில்ல.

அன்னைக்கு சூலம் எந்தப் பக்கமுன்னு பாக்கல. வடக்க சூலமாம். நாந் தெரியாம ஒன்னோட ஐயாளய்யா கிட்ட சொல்லிக்கிட்டு வண்டியப் பத்துனேன். வடக்கதான போகனும். பெரிய கம்மா தாண்டி ஊர்க்கெணறு தாண்டிப் போறேன். அப்ப வந்து நிக்குதய்யா. கருகருன்னு நெடுநெடுன்னு. சூலந்தான். முண்டக்கட்டையா நிக்கி. பாக்கவே திக்குன்னு இருக்கு. ஒத்தப் பொம்பள என்ன செய்ய முடியும். பதட்டந்தான். சூலமோ கண்ணாமுழி ரெண்டையும் உருட்டி உருட்டி முழிச்சி என்னையப் பாக்குது.

அங்கன ஒரு காக்கா குருவி கூட இல்ல. நாயக் கூடக் காணோம். சூலம் இருக்குறப்ப வருமா? நாந்தான் போயி மாட்டிக்கிட்டேன்.

சூலம் வாயத் தொறந்து, "இன்னைக்கு வடக்க சூலம்னு தெரியாதா? ஏன் வந்த? ஒன்னய என்னமுஞ் செஞ்சிர வேண்டியதுதான்"னு மெரட்டுச்சு. உர்ர்ர்ர்ர்ருன்னு உறுமல் வேற. பாதகத்தி நானு. ரெண்டு வேப்பிலையாவது போட்டுக்கிட்டு வந்திருக்கக் கூடாது. ஆனாலும் விடல. "ஐயா! தெரியாம செஞ்சிட்டேன். கூடப் பொறந்தவளுக்குப் பேறுகாலம். அக்கான்னு ஒத்தையா நாந்தான். அதான் பொழுது கெழம பாக்காமப் பொறப்புட்டேன்"னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கு சூலம்.

திரும்பத் திரும்ப "இன்னைக்கு வடக்க சூலம். வடக்க சூலம்"ங்கு. நானும் பாத்தேன். நேரமாகுதேன்னு கடுப்பு வேற. எரிச்சல்ல, "யெய்யா....வடக்க சூலமுன்னு வடக்க பாக்க நிக்க வேண்டியதுதான? ஏன் இப்பிடி தெக்க ஆட்டிக்கிட்டு நிக்கீரு? ஒமக்கே மூள கொழம்பீருச்சா"ன்னேன்.

சூலமுங் கொழம்பீருச்சு. வடக்க சூலமுன்னா வடக்க பாக்கனுமா தெக்க பாக்கனுமான்னு அதுக்கே ஒரு சந்தேகம். அதான் சாக்குன்னு கூடக் கொஞ்சம் பேசிக் கொழப்பிச் சூலத்த வடக்கப் பாத்து நிக்க வெச்சிட்டு நாஞ் செவலார்பட்டிக்குப் போயிட்டேன். பேறுகாலமுஞ் சரியா நடந்து முருகம் புண்ணியத்துல கதிரேசு பொறந்தான். நாலஞ்சு நாளு இருந்துட்டு திரும்பப் பொறப்பட்டேன்.

அன்னைக்கு பாத்து வடக்க சூலமாம். குளக்கட்டாங்குறிச்சி தெக்குலதான இருக்குன்னு யாரும் கண்டுக்கல. எனக்கும் நெனப்பில்லை. ஊருக்குத் திரும்ப வந்தாத்தான சீருக்குச் செய்ய முடியுமுன்னு வண்டீல ஏறி வந்தேன். வந்தா வடக்க பாத்து நிக்குது சூலம். என்னையப் பாத்ததும் அடையாளந் தெரிஞ்சிக்கிறிச்சி சூலத்துக்கு.

"இன்னைக்கு வடக்க சூலம். அதான் வடக்க பாத்து நிக்கேன். வசமா மாட்டிக்கிட்டியா"ன்னு கும்மரிச்சம் போடுது. எனக்குக் கலங்கிப் போச்சு. கையுங் காலும் ஓடல. மாடுகளும் படபடங்குதுக.

அப்பச் சொல்லுச்சு சூலம். "இங்க பாரு பிள்ள. இன்னைக்கு வடக்க சூலம். ஒன்னுஞ் செஞ்சிராம இருக்கனுமுன்னா ஒழுங்காத் திரும்பப் போயிரு. இல்லையின்னா ஒனக்குச் சூலம் பொறக்க வெச்சிருவேன்"னு மெரட்டுச்சு.

நானும், "யெய்யா! என்னமுஞ் செஞ்சிராதீக. நாந் திரும்பியே போயிர்ரேன். நீங்க விட்டுருங்க"ன்னு கெஞ்சுனேன். சூலமும் ஒத்துக்கிருச்சு. நானும் வண்டியில திரும்பி உக்காந்துக்கிட்டு மாட்டக் கொளக்கட்டாங்குறிச்சிக்கே பத்துனேன்.

சூலத்துக்கு ஆங்காரங் கூடி, "ஏய்......திரும்பிப் போறேன்னு இங்குட்டே போறயே...என்ன திமிரு...ஒன்னய.."ன்னு பாஞ்சு வந்துச்சு.

இப்ப நானும் சுதாரிச்சிக்கிட்டேன். "இந்தா! ரொம்ப மெரட்டாதீரும். திரும்பிப் போகச் சொன்னீருன்னுதான திரும்பிப் போறேன். நேராவா போறேன். அப்புறம் எதுக்கு இந்தப் பாடு"ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன்.

சூலந் தெகச்சிப் போச்சி. காச்சு மூச்சுன்னு கத்துச்சு. ஆனா என்னைய ஒன்னுஞ் செய்ய முடியல. சொன்ன வாக்கு மாற முடியுமா? நானும் இதுதாஞ் சமயமுன்னு வண்டியப் பத்திக்கிட்டு வந்துட்டேன். இதாய்யா நடந்துச்சு.

மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டிருந்த அழகரு இப்பக் கேக்கான். "ஐயாளம்மா.....மீறிப் போனா சூலம் பொறக்க வெப்பேன்னு மெரட்டுச்சே சூலம்...இதே ஆம்பிளையா இருந்தா என்ன செஞ்சிருக்கும்?"

"அட....அதுவும் ஒரு கததான். பன்னீரு கத அப்பிடித்தான் ஆச்சு."

"அதென்ன...சொல்லுங்க" கத கேக்குற ஆவல்ல கேக்கான் அழகரு.

ஆனா சீனியம்மா விடல. "மொதல்ல குளிஞ்சிட்டு செஞ்சிட்டுச் சாப்புட்டதும் செவலார்பட்டிக்குப் போயிட்டு வா. கதையுஞ் கத்திரிக்காயும் அப்புறம் பாக்கலாம்"னு பேரனப் பத்தி விட்டுட்டா.

அன்புடன்,
கோ.இராகவன்

29 comments:

said...

இத எழுதினது சாப்ட்வேர் இஞ்சினயர்னா யாரும் நம்ப மாட்டாங்க...

கிராமத்து நடை அருமையா வருது உங்களுக்கு...

சரி கடைசியா சூலம்னா என்னனு சொல்லுங்களேன் ;)

said...

வட்டார வழக்கினைக் கொண்ட கிராமிய கதை. அதுவும் ஒரு கிழவி சொல்லும் நகைச்சுவை கதை. சூலத்தை ஒரு மனிதனாக உருவகம் செய்து கதை சொன்னதும் நல்லாருந்தது. படிக்க வெகு சுவையாக இருந்தது.

said...

அய்யய்யோ, இன்னிக்கு வடக்கெ சூலமா? தெரியாத்தனமா
வடக்கே உக்காந்து படிச்சுட்டேன்.:-))))


ராகவன்,
வழமைபோல 'கலக்கிட்டீரு' போங்க

said...

ராகவன் சார்
"மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டிருந்த அழகரு இப்பக் கேக்கான்....."
நானும் தா... வட்டார வழக்கத்தில கதைய போட்டு கலக்கிட்டிங்க,
"நாஞ் சூலத்துக்கே சூலம்."
சீனியம்மா கிராமத்து விஜயசாந்தி போல...

said...

Top class.படித்து ரசித்தேன்.

சூலம்னு படிச்சதும் எனக்கு "காதலா,காதலா" எம்.எஸ்.வீ தான் நினைவுக்கு வந்தார்.

சீனியம்மாவின் அட்வெஞ்சர்கள் தொடரட்டும்.வாழ்த்துகள் ஜீரா.

said...

மண் வாசனை கதை முழுக்க.
பேச்சுத்தமிழ்ல இயற்கையா எழுதினா கதையோட ஒன்றிப் போயிடமுடியுது. பாராட்டு ராக்ஸ்!
ஷைலஜா

said...

//கதையுஞ் கத்திரிக்காயும் அப்புறம் பாக்கலாம்"னு பேரனப் பத்தி விட்டுட்டா//

ஜிரா
அதுக்காக நீங்களும் எங்கள எதுக்கு பத்தி வுடுறீய?
கதையுஞ் கத்திரிக்காயுஞ் சேத்தே சொல்லலாமுல்ல!
அகத்திக்கீரையப் பத்தி சொல்லி, இப்பிடி கிளப்பிவிட்டியினா நியுயார்க்குல நாங்க எங்கிட்டுப் போயி கீர வாங்கியாறது?

சீனியம்மா கெழவி சூலத்த நல்லா கொழப்பித் தான் வுட்டுருக்கு! சூலத்த மட்டுமில்ல! சூலம் பாக்குறவங்களையுந்தேன்! :-))

said...

// வெட்டிப்பயல் said...
இத எழுதினது சாப்ட்வேர் இஞ்சினயர்னா யாரும் நம்ப மாட்டாங்க... //

அப்ப ராக்கெட் இஞ்சினீரு எழுதுனதுன்னா நம்புவாங்களா வெட்டி? வெட்டின்னு பேரு இருந்தாலும் வேருக்கு மணம் உண்டுதானே? ;-)

// கிராமத்து நடை அருமையா வருது உங்களுக்கு... //

நன்றி. எனக்குள்ளும் ஒரு பட்டிக்காட்டான் இருக்கத்தான் செய்கிறான். சின்ன வயசுல போனது பாத்தது படிச்சதுன்னு உள்ளுக்குள்ள இருக்குறது வெளிய வருது. அவ்வளவுதான்.

// சரி கடைசியா சூலம்னா என்னனு சொல்லுங்களேன் ;) //

அதச் சூலத்துக்கே சூலம் சீனியம்மா கிட்ட கேட்டா சரியா இருக்கும்.

said...

// துளசி கோபால் said...
அய்யய்யோ, இன்னிக்கு வடக்கெ சூலமா? தெரியாத்தனமா
வடக்கே உக்காந்து படிச்சுட்டேன்.:-)))) //

அதுனால என்ன டீச்சர். திரும்பிப் படிச்சிருங்க. சரியாப் போகும். ஆனா நியூசிலாந்துக்குச் சூலமா சிலுவையா? :-)

// ராகவன்,
வழமைபோல 'கலக்கிட்டீரு' போங்க //

நன்றி டீச்சர்.

// கைப்புள்ள said...
வட்டார வழக்கினைக் கொண்ட கிராமிய கதை. அதுவும் ஒரு கிழவி சொல்லும் நகைச்சுவை கதை. சூலத்தை ஒரு மனிதனாக உருவகம் செய்து கதை சொன்னதும் நல்லாருந்தது. படிக்க வெகு சுவையாக இருந்தது. //

நன்றி கைப்ஸ். அடுத்து ஒங்களையும் சீனியம்மாளையும் வெச்சி ஒரு கத எழுதீர வேண்டியதுதான். :-))

said...

// Gopinath said...
ராகவன் சார்
"மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டிருந்த அழகரு இப்பக் கேக்கான்....."
நானும் தா... வட்டார வழக்கத்தில கதைய போட்டு கலக்கிட்டிங்க,
"நாஞ் சூலத்துக்கே சூலம்."
சீனியம்மா கிராமத்து விஜயசாந்தி போல... //

வாங்க கோபிநாத். சீனியம்மா அடிதடியில விஜயசாந்தி, அழுகுறதுல சௌகார்ஜானகி, அழகுல பத்துமினி, அலட்டல்ல சரோஜாதேவி, அசத்தல்ல கே.ஆர்.விஜயா, சிரிப்புல ஸ்ரீதேவி, சீற்றத்துல சரிதா, ஆடுறதுல அமலா, பாட்டுல விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கத்துறதுல காந்திமதி, காமெடியில மனோரமா. புரிஞ்சதுங்களா?

said...

// சுதர்சன்.கோபால் said...
Top class.படித்து ரசித்தேன்.

சூலம்னு படிச்சதும் எனக்கு "காதலா,காதலா" எம்.எஸ்.வீ தான் நினைவுக்கு வந்தார்.

சீனியம்மாவின் அட்வெஞ்சர்கள் தொடரட்டும்.வாழ்த்துகள் ஜீரா. //

நன்றி ஓமப்பொடியாரே. நம்ம விட்டாலும் சீனியம்மா விட மாட்டாங்களே. ஆகையால அவங்க வீரதீரசூர பராக்கிரமங்களுக்கு அளவே இல்லை. சொல்லச் சொல்லப் பெருகுதடாதான் போங்க.

இந்தப் பாத்திரத்துக்கு நீங்க எந்த மாதிரி உருவகம் செஞ்சிருக்கீங்க? கண்டிப்பா மனோரமா மாதிரி இருக்காது. சரியா? புதுமாதிரி ஊர்ப்பக்கமா பாத்த நிஜக் கிழவிகள்தான் உங்களுக்கெல்லாம் சீனியம்மான்னா நெனவுக்கு வரனும். வருதா?

said...

நல்லா இருக்குபா, நகரத்தைத் தாண்டி கிராமம் என்பது பார்த்ததேயில்லை. அந்த ஏக்கம் எப்பொழுதும்
மனதுல இருக்கும். முன்னாடி கிராமத்து கதை எல்லாம் எழுதுவாரே சிவான்னு ஒருத்தர், ஜூட் விட்டுட்டுப்
போனார், பிறகு ஆளையே காணோம் இல்லே!

said...

ஜி.ரா நல்ல கிராமத்து நடை. கலக்கிட்டீங்க போங்க.

said...

// ஷைலஜா said...
மண் வாசனை கதை முழுக்க.
பேச்சுத்தமிழ்ல இயற்கையா எழுதினா கதையோட ஒன்றிப் போயிடமுடியுது. பாராட்டு ராக்ஸ்!
ஷைலஜா //

நன்றி ஷைலஜா. நான் கூட அனைவரும் தெக்கத்தி வட்டார வழக்கைப் புரிந்து கொள்ள சிரமப்படுவார்களோ என நினைத்தேன். ஆனால் புரிந்திருக்கிறது என்று தெரிவது மகிழ்ச்சியைத் தருகிறது.

// // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கதையுஞ் கத்திரிக்காயும் அப்புறம் பாக்கலாம்"னு பேரனப் பத்தி விட்டுட்டா//

ஜிரா
அதுக்காக நீங்களும் எங்கள எதுக்கு பத்தி வுடுறீய?
கதையுஞ் கத்திரிக்காயுஞ் சேத்தே சொல்லலாமுல்ல!
அகத்திக்கீரையப் பத்தி சொல்லி, இப்பிடி கிளப்பிவிட்டியினா நியுயார்க்குல நாங்க எங்கிட்டுப் போயி கீர வாங்கியாறது? //////

ஒங்க வயித்தெரிச்சலுக்கு ஒரு செய்தி. இன்னைக்குக் காலைல ஆபீஸ் போற வழியில ஒரு அம்மா நல்ல எளம் முருங்கைக் கீரையா வெச்சு வித்துக்கிட்டிருந்தாங்க. :-)

// சீனியம்மா கெழவி சூலத்த நல்லா கொழப்பித் தான் வுட்டுருக்கு! சூலத்த மட்டுமில்ல! சூலம் பாக்குறவங்களையுந்தேன்! :-)) //

சரியாச் சொன்னீங்க ரவி. கதையோட கருவே அதுதானே. சீனியம்மாவோட அட்டகாசங்கள் எக்கச்சக்கம். இதெல்லாம் ஒன்னுமேயில்லை.

said...

// ramachandranusha said...
நல்லா இருக்குபா, நகரத்தைத் தாண்டி கிராமம் என்பது பார்த்ததேயில்லை. அந்த ஏக்கம் எப்பொழுதும்
மனதுல இருக்கும். முன்னாடி கிராமத்து கதை எல்லாம் எழுதுவாரே சிவான்னு ஒருத்தர், ஜூட் விட்டுட்டுப்
போனார், பிறகு ஆளையே காணோம் இல்லே! //

ஆமாம் உஷா. தெக்கத்தி நடைக்குச் சிவாதான் ரொம்பச் சரியான ஆள். நானோவது லீவுக்கு ஊருக்குப் போற ஆளு. ஆனா அவரு சின்ன ஊர்லயே வளந்தவரு. அதுனால ரொம்பவே நல்லாயிருக்கும் நடை.

// ILA(a)இளா said...
ஜி.ரா நல்ல கிராமத்து நடை. கலக்கிட்டீங்க போங்க. //

நன்றி இளா. ஒங்கூர் நடையில ஒரு கத எழுதுறதுதானே?

said...

அப்ப ராக்கெட் இஞ்சினீரு எழுதுனதுன்னா நம்புவாங்களா வெட்டி? வெட்டின்னு பேரு இருந்தாலும் வேருக்கு மணம் உண்டுதானே?//

வேல பாக்குறது பெங்களூரு, சென்னைன்னாலும் பொறந்து வளந்ததெல்லாம் ஊர் பக்கந்தேன்..

என்ன ராகவன்..?

வழக்கம் போலவே கலக்கிட்டீங்க.

said...

அன்பு இராகவன்,
தெக்கத்தி வாடை அழகு தமிழில். கதை சொல்லும் பாங்கு அருமை.
இறுதியில் பாதி சொல்லாமல் விட்டுவிட்டு........

said...

அருணகிரிதமிழுக்கு அழகான விளக்கம் அங்கே, அருமையான கிராமீயக் கதை இங்கே!! கலக்குங்க !!

said...

சீனியம்மா வாயக்கிண்டுனா நெறையக் கத வெளியக் கொட்டும் போலருக்கே! :)

நல்லாருக்குங்க சீனியம்மாவோட சூலக் கத!

said...

:-))))

said...

ராகவா!
கிராமப் பேச்சு வழக்கை அப்படியே பற்றி விட்டீர்கள்; இப்படிக் கதைகள் நம்பிக்கைகள் ,நம் பழையவர்களும் கூறுவார்கள்;
ஞானவெட்டியான் ஐயா கேட்டது போல் மிகுதி கதை எங்கே???
யோகன் பாரிஸ்

said...

// tbr.joseph said...

என்ன ராகவன்..?

வழக்கம் போலவே கலக்கிட்டீங்க. //

நன்றி ஜோசப் சார். இதெல்லாம் கலக்கலா. உங்க திரும்பிப் பார்க்கிறேன்ல இல்லாத கலக்கலா இதுல இருந்துச்சு. திரும்பவும் எப்ப நீங்க திரும்பிப் பாப்பீங்கன்னு காத்திருக்கோம். :-)

// ஞானவெட்டியான் said...
அன்பு இராகவன்,
தெக்கத்தி வாடை அழகு தமிழில். கதை சொல்லும் பாங்கு அருமை.
இறுதியில் பாதி சொல்லாமல் விட்டுவிட்டு........ //

ஞானவெட்டியான் ஐயா...அது அடுத்த கதை. நிச்சயம் வரும்.

said...

// மணியன் said...
அருணகிரிதமிழுக்கு அழகான விளக்கம் அங்கே, அருமையான கிராமீயக் கதை இங்கே!! கலக்குங்க !! //

நன்றி மணியன். பாருங்க...அங்கயும் தமிழ். இங்கயும் தமிழ். ஆனா ரெண்டும் வெவ்வேற. ஆனா ரெண்டையும் நம்மால ரசிக்க முடியுது.

// அருட்பெருங்கோ said...
சீனியம்மா வாயக்கிண்டுனா நெறையக் கத வெளியக் கொட்டும் போலருக்கே! :)

நல்லாருக்குங்க சீனியம்மாவோட சூலக் கத! //

நெறையக் கதையா...அடேங்கப்பா....சீனியம்மா ஒரு கதைக்கடல். கரையே கெடையாது.

// குமரன் (Kumaran) said...
:-)))) //

குமரன், சிரிக்கிறீங்க. ஆனா எதுக்குச் சிரிக்கிறீங்கன்னு தெரியலையே! என்ன உள்-வெளி-நடுக்குத்தோ!

said...

கலக்கல்...:))

said...

//அப்ப ராக்கெட் இஞ்சினீரு எழுதுனதுன்னா நம்புவாங்களா வெட்டி? வெட்டின்னு பேரு இருந்தாலும் வேருக்கு மணம் உண்டுதானே? ;-)//

ராக்கெட் இஞ்சினியர் எழுதனதுனா ஒத்துக்கலாம் ஆனால் அந்த ராக்கெட் இஞ்சினியர்னு உங்க படத்தை காண்பிச்சா நம்ப மாட்டாங்க :-)

வேணும்னா இன்னும் நிறைய முடி வளத்துக்கோங்க இல்லை ஃபெரென்ச் பியர்ட் வெச்சிக்கோங்க.. அப்ப வேணா ஒத்துக்குவாங்க

ஒருத்தவன நல்லவனா வாழவே விடமாட்டீங்களா?

said...

// Johan-Paris said...
ராகவா!
கிராமப் பேச்சு வழக்கை அப்படியே பற்றி விட்டீர்கள்; இப்படிக் கதைகள் நம்பிக்கைகள் ,நம் பழையவர்களும் கூறுவார்கள்;
ஞானவெட்டியான் ஐயா கேட்டது போல் மிகுதி கதை எங்கே???
யோகன் பாரிஸ் //

யோகன் ஐயா...சீனியம்மா கிட்ட நெறைய கதை இருக்குது. ஒன்னொன்னா அப்பப்ப எடுத்து விடுவாங்க. :-)

said...

// செந்தழல் ரவி said...
கலக்கல்...:)) //

நன்றி ரவி.

//வெட்டிப்பயல் said.. ராக்கெட் இஞ்சினியர் எழுதனதுனா ஒத்துக்கலாம் ஆனால் அந்த ராக்கெட் இஞ்சினியர்னு உங்க படத்தை காண்பிச்சா நம்ப மாட்டாங்க :-)

வேணும்னா இன்னும் நிறைய முடி வளத்துக்கோங்க இல்லை ஃபெரென்ச் பியர்ட் வெச்சிக்கோங்க.. அப்ப வேணா ஒத்துக்குவாங்க //

வெட்டி...இதத்தான் போன வாரம் ஒரு நண்பரு சொன்னாரு....ஆனா...ஃபெரஞ்ச்சு பியர்டு எல்லாம் நமக்கெதுக்கு. அத வேற அடிக்கடி சொறியனும். அப்பத்தான ஸ்டைலா இருக்கும். இப்படி இருக்குறது வசதியாத்தான் இருக்கு. இப்ப மொட்டையும் அடிச்சாச்சு. ரவுடி மாதிரி இருக்கு...கழுத்துல கர்சீப் கட்டிக்கன்னும் சொல்லீட்டாங்க.

// ஒருத்தவன நல்லவனா வாழவே விடமாட்டீங்களா? //

முருகா! என்ன வெட்டி இப்படிச் சொல்லீட்டீங்க. ஒங்கள நல்லவனா வாழ விடக் கூடாதுன்னு எப்பவோ முடிவு செஞ்சாச்சு. ஒங்கள ரொம்ப நல்லவனாத்தான் வாழ வைக்கனும்னு முடிவு செஞ்சிருக்கோம். :-)

said...

//ஆனா...ஃபெரஞ்ச்சு பியர்டு எல்லாம் நமக்கெதுக்கு. அத வேற அடிக்கடி சொறியனும். அப்பத்தான ஸ்டைலா இருக்கும். இப்படி இருக்குறது வசதியாத்தான் இருக்கு. இப்ப மொட்டையும் அடிச்சாச்சு. ரவுடி மாதிரி இருக்கு...கழுத்துல கர்சீப் கட்டிக்கன்னும் சொல்லீட்டாங்க.//

இதெல்லாம் பண்ணாதான் ஜி.ரா மக்கள் சைண்டிஸ்ட்னு நம்பறாங்க...

புது கெட்டப்பா... அடிக்கடி கெட்டப்ப மாத்திக்கிட்டெ இருக்கீங்க.. யார்ட இருந்து தப்பிக்க???

பெங்களூர் மக்களே யாராவது அங்க என்ன நடக்குதுனு சொல்லுங்களேன்...

சரி ஜி.ராவை கவனிக்க ஒரு ஸ்பை நெட்வோர்க் நாளையே அமைக்கப்படும் என்பதை பெருமிதத்துடனும் பெருன்புடனும் தெரிவித்து கொள்கிறேன் ;)

//ஒங்கள நல்லவனா வாழ விடக் கூடாதுன்னு எப்பவோ முடிவு செஞ்சாச்சு. ஒங்கள ரொம்ப நல்லவனாத்தான் வாழ வைக்கனும்னு முடிவு செஞ்சிருக்கோம். :-)//

ஆஹா... நான் ஏற்கனவே ரொம்ப நல்லவந்தானு இங்க பக்கத்துல இருக்கவங்க எல்லாம் சொல்றாங்க ;)

said...

அண்ணாத்த ஜிரா!!
உங்களை விட கிராமத்து மொழியை அணாயாசாமாக கையாள்பவரை நான் பார்த்தில்லை (நான் பார்த்தது மிக மிகக்குறைவு என்பதை ஒப்புக்கொள்கிறேன்) :-P!!
இதே போன்ற பலநூறு கதைகள் எழுதி எங்களை மேலும் மேலும் மகிழ்ச்சியில் மூழ்கடியுங்கள்!! :-)