Monday, November 13, 2006

03. மேலக்கரந்தையில் உக்காந்தேன்

முந்திய பாகத்திற்கு இங்கே செல்லவும்.

"தூத்துக்குடிக்கு எவ்வளவு நேரமாகும்?" பக்கத்துல ஒருத்தர் கேட்டாரு. மூனு மணி நேரமாகும்னு சொன்னேன்.

"திண்டுக்கல்ல இருந்து வர்ரேன். இப்படி நின்னுக்கிட்டே போகனுமோ"ன்னு ரொம்ப வருத்தப்பட்டாரு. நான் பெங்களூர்ல இருந்து வர்ரேன்னு சொல்லி அவருக்கு மாரடைப்பு உண்டாகக் காரணமாயிருக்க விரும்பல. அதுனால ஒன்னும் சொல்லாம பேசாம இருந்தேன்.

நாப்பத்தோரு ரூவா அம்பது காசு. மதுரையில இருந்து தூத்துக்குடிக்கு. அம்பத்தொன்னு அம்பது கொடுத்து பத்து ரூவா வாங்கிக் கிட்டேன். வண்டி நல்லா சல்லுன்னு போச்சு. மழை பேஞ்சிருந்ததால சுகமா இருந்தது பயணம். எல்லாரும் தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஆத்தூருன்னு டிக்கெட் வாங்குனாங்க. ஆறுமுகனேரிக்கு யாரும் டிக்கெட் வாங்கலை (இது யாருக்காக சொன்னேன்னு அவங்களுக்குப் புரிஞ்சா சரி). தூத்துக்குடி வரைக்கும் நின்னுகிட்டுத்தான் போகனும் போலன்னு நெனச்சேன். சரி...நின்னுக்கிட்டு போறதுக்காவது வண்டி வந்துச்சேன்னு மனசத் தேத்திக்கிட்டேன். அப்ப அடுத்த சீட்டுல உக்காந்தவரு முத்தலாவரம் பாலத்துக்கு டிக்கெட் வாங்குனாரு.

ஆகான்னு ஒரு பேரானந்தம். பின்னே பாதி தொலைவு உக்காந்திட்டுப் போகலாமே. ஆனா வேற யாரும் அதுல நமக்கு முந்தி உக்காந்திரக் கூடாதே. நாற்காலிய எப்படியும் பிடிச்சாகனும்னு முடிவு செஞ்சேன். கள்ளவோட்டுப் போட்டாவது பதவியப் பிடிக்க முடிவு செஞ்சேன். கெடைக்கலைன்னா என்ன...அடுத்தவன் கள்ளவோட்டுப் போட்டுட்டான்னு சொல்லிக்கலாம்னு முடிவோட இருந்தேன்.

வழியில வர்ர சில ஊர்களைப் பத்திச் சொல்லியே ஆகனும். அருப்புக்கோட்டையப் பத்திச் சொல்ல வேண்டியதில்லை. அப்புறம் வர்ர ஊர்ப்பேருங்களச் சொல்றேன். ஒவ்வொன்னும் அருமையான தமிழ்ப்பேருங்க. முத்தலாவரத்துல மட்டும் புரம் வரும். மத்தபடி எல்லாம் தமிழ்ப் பேருங்க. பந்தல்குடின்னு ஒரு சின்ன ஊர் உண்டு. அப்படியே முன்னாடி வந்தா நென்மேனி. கீழக்கரந்தை. மேலக்கரந்தை. முத்தலாபுரம். சிந்தலக்கரை. எட்டையபுரம். கீழ ஈரால். எப்போதும் வென்றான். குறுக்குச்சாலை (இங்கிருந்துதான் பாஞ்சாலங்குறிச்சிக்கு விலக்கு). அப்புறம் தூத்துக்குடி.

இதுல நடுவுல வர்ர முத்தலாவரம் பாலத்துலதான் ஒருத்தர் எறங்கனும். அந்த எடத்தைப் பிடிக்கத்தான் நான் போர்வெறியோட இருந்தேன். ஏன்னா நின்னுக்கிட்டு தூங்க முடியல. குதிர, ஆன, ஒட்டகச் சிவிங்கியெல்லாம் நின்னுகிட்டேதான் தூங்குமாம். எப்படித்தான் தூங்குதோ! இப்படி நெனச்சிக்கிட்டிருக்குறப்போ டக்டண்டனக்குன்னு சத்தம் வந்தது. டிரைவர் படக்குன்னு வண்டிய ஓரங்கட்டீட்டாரு. கண்டக்டரும் அவரும் எறங்கி என்னன்னு பாத்தாங்க. டங் டங்குன்னு இடிக்கிற சத்தம் கேட்டுச்சு. ஒடனே டிரைவரு வண்டியில ஏறி வண்டிய எடுத்தாரு. நல்ல வேளை பெரிய பிரச்சனையில்லைன்னு நெனச்சேன். ஆனா உண்மையிலேயே பெரிய பிரச்சனைதான்னு கொஞ்ச நேரத்துலயே தெரிஞ்சிருச்சு.

டிரைவரு வேகத்தக் கூட்டுனதும் மறுபடியும் டண்டணக்கா. மறுபடியும் வண்டி ஓரங்கட்டல். நாலஞ்சு டங்குடங்கு. இப்ப மக்களும் கீழ எறங்கிப் பாக்கத் தொடங்கீட்டாங்க. ஒன்னுமில்லைங்க. டயர் இருக்குதுல்ல...அந்த டயரோட நடுவுல இருக்குற இரும்புப் பட்டைய உருளையில விரிசல். வண்டி வேகமாப் போகைல அந்த விரிசலோட ரெண்டு பக்கமும் இடிச்சுக்குது. இப்ப அடுத்து வண்டிய மாத்த எந்த ஊரும் இல்லை. தூத்துக்குடிதான் அடுத்து. எப்பாடு பட்டாவது தூத்துக்குடி போனாத்தான் வண்டிய மாத்த முடியும்! எப்படிப் போறது?

மாட்டு வண்டியில போயிருக்கீங்களா? அதுலயும் பெரிய பைதா உள்ள வண்டியில போயிருக்கீங்களா? உக்காந்த எடத்துலயே இருந்த மாதிரி இருக்கும். ஆனா நகண்டுக்கிட்டேயிருப்பீங்க. அந்த மாதிரி போனா தூத்துக்குடிக்குப் போயிரலாம்னு டிரைவர் வண்டிய உருட்டுனாரு. வெளிய சிலுசிலுன்னு தூறல்.

மேலைக்கரந்தைல ஒரு மோட்டல். சகசகன்னு சகதியா இருந்துச்சு. காலையில ஏழு மணிக்கெல்லாம் பசிச்சிருச்சு போல டிரைவருக்கும் கண்டெக்டருக்கும். ஒடனே மக்களும் எறங்கீட்டாங்க. அந்த முத்தலாரக்காரரும். கொஞ்சமாவது உக்காரலாமேன்னு நானும் உக்காந்துட்டேன். மத்த சீட்டுகள்ளயும் நின்னுக்கிட்டு வந்தவங்க உக்காந்துட்டாங்க. ஓசிச்சாப்பாடு முடிஞ்சு டிரைவரும் கண்டெக்டரும் வந்து வண்டியெடுத்தாங்க. மக்களும் படபடன்னு ஏறீட்டாங்க. வண்டி நகழுது. ஆனா அந்த முத்தாலரக்காரரக் காணம். நானும் திரும்பித் திரும்பிப் பாக்கேன்.

பாத்தா...படியில நிக்காரு. கையக் காட்டி என்னையவே உக்காந்துக்கிரச் சொன்னாரு. அடுத்தது முத்தலாரந்தான். நானும் நன்றி சொல்லி உக்காந்துக்கிட்டேன். சரசரன்னு ஒரு அழகான தூரல். பஸ்சுல டிரைவருக்குப் பின்னாடி சீட்டு. சும்மாயிருக்க முடியுமா? மொபைல்ல ஒரு போட்டோ படக்குன்னு புடிச்சிக்கிட்டேன்.

Photobucket - Video and Image Hosting

இப்பதான் உக்கார எடம் கிடைச்சிருச்சே. பதவி கெடச்சதும் மொத வேலை என்ன? ஓய்வெடுக்குறதுதான. அதத்தான் நானும் செஞ்சேன். அப்படியே அப்பப்ப தூங்கி அப்பப்ப எந்திரிச்சிக்கிட்டேன். ஒரு வழியா கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல தூத்துக்குடி பழைய பஸ்டாண்டுல எறங்கினேன். பஸ்டாண்டுல இருந்து வீட்டுக்கு நாலு நிமிச நடை. ஆனா சின்னப்பிள்ளையா இருந்தப்ப அதுவே ரொம்பத் தூரம். ஏன்னா ஊருக்குப் போகனும்னா பஸ்டாண்டுக்கு ஒவ்வொரு பொழுது ரிக்கிஷாவுல போவோம். அந்த ஊருக்கு அதுவே தொலைவுதான்.

நான் படபடன்னு பையத் தூக்கீட்டு நடந்தே வீட்டுக்குப் போயிட்டேன். அந்தத் தெருவுக்குள்ள...அதாங்க...புதுக்கிராமத்துல நொழஞ்சதும் பழைய நெனப்புகள் வந்து மோதுது. எத்தனையெத்தனை நினைவுகள். வீட்டுக்குப் போறதுக்குள்ள வழியில இருக்குற ஒவ்வொரு வரலாற்று பெருமை பெற்ற இடங்களையும் அங்க நடந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சொல்றேன். கேப்பீங்களா?

தொடரும்...

21 comments:

said...

//கேப்பீங்களா?//

யப்பா ராசா, இதென்ன கேள்வி? புதுசாத்தேன் இருக்கு உம்ம பளக்க வளக்கமெல்லாம். அதான் ஊரு போய் சேந்ததையே பக்கத்து ஊருல பாகவதம் சொல்லற மாதிரி விடிய விடிய சொல்லிக்கிட்டுத்தானே இருக்கீரு! நாங்களும் வாய பொளந்துக்கிட்டு கேட்டுக்கிட்டுதானே இருக்கோம். பொறவு என்ன?

கதைய சொல்லும். நாங்க் உம்மு கொட்டிக்கிட்டு கேக்கோம்.

said...

ஆஹா... பரவாயில்லை இவ்வளவு கஷ்டப்படாலும் வீட்ல போய் கொண்டாடனும்னு போயிருக்கீங்க... ரொம்ப சந்தோஷ்மா இருக்கு.

எனக்கு தெரிஞ்சி இப்படி எல்லாம் விசேஷ நாள்ல போனா கஷ்டமா இருக்கும்னு போகாத ஆளுங்க கொஞ்ச பேர் இருக்காங்க... அவுங்களுக்கு இந்த பதிவுகளை அனுப்பனும்...

said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாடாத குறை தானா? :-)

said...

ராகவன் சார்,
நீங்க "தேவர் மகன்" கமல் மாதிரி ஏறங்குவிங்கன்னு நெனச்சேன் பட்டாசு வெடிக்குமுன்னு பார்த்தேன்...ஆனா autograph சேரன் மாதிரி ஏறங்கிட்டீங்க.

கேப்பீங்க.. ளா.. வா? சிக்கிரம்

பழைய நெனப்புகள் வந்தலே மனசு சந்தோசமயிடும் இல்ல...

said...

// இலவசக்கொத்தனார் said...
//கேப்பீங்களா?//

யப்பா ராசா, இதென்ன கேள்வி? புதுசாத்தேன் இருக்கு உம்ம பளக்க வளக்கமெல்லாம். அதான் ஊரு போய் சேந்ததையே பக்கத்து ஊருல பாகவதம் சொல்லற மாதிரி விடிய விடிய சொல்லிக்கிட்டுத்தானே இருக்கீரு! நாங்களும் வாய பொளந்துக்கிட்டு கேட்டுக்கிட்டுதானே இருக்கோம். பொறவு என்ன?

கதைய சொல்லும். நாங்க் உம்மு கொட்டிக்கிட்டு கேக்கோம். //

ஹி ஹி எல்லாம் ஒரு இதுதான். நீங்கள்ளாம் உம்மு கொட்டுறதுனாலதான நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன். :-)

said...

// வெட்டிப்பயல் said...
ஆஹா... பரவாயில்லை இவ்வளவு கஷ்டப்படாலும் வீட்ல போய் கொண்டாடனும்னு போயிருக்கீங்க... ரொம்ப சந்தோஷ்மா இருக்கு.

எனக்கு தெரிஞ்சி இப்படி எல்லாம் விசேஷ நாள்ல போனா கஷ்டமா இருக்கும்னு போகாத ஆளுங்க கொஞ்ச பேர் இருக்காங்க... அவுங்களுக்கு இந்த பதிவுகளை அனுப்பனும்... //

வெட்டி, இது தேவலாம். ஒரு வாட்டி பெங்களூர்ல இருந்து மதுர வரைக்கும் நின்னுக்கிட்டே போனேன். மதுரையிலதான் உக்கார எடம் கெடைச்சது.

said...

// நிர்மல் said...
ஓரு வழியா தூத்துக்குடிக்கு போய்டிங்க, //

ஆமாங்க நிர்மல். ஒருவழியாத்தான் போய்ச் சேந்தேன்.


// குமரன் (Kumaran) said...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாடாத குறை தானா? :-) //

:-))))) என்ன செய்றது குமரன். என்னுடைய வீரதீரசூர பராக்கிரமங்கள் எல்லாம் தொடங்குன எடமாச்சே....மறக்க முடியுமா?

said...

// Gopinath said...
ராகவன் சார்,
நீங்க "தேவர் மகன்" கமல் மாதிரி ஏறங்குவிங்கன்னு நெனச்சேன் பட்டாசு வெடிக்குமுன்னு பார்த்தேன்...ஆனா autograph சேரன் மாதிரி ஏறங்கிட்டீங்க. //

அந்த வயித்தெரிச்சல ஏன் கேக்குறீங்க கோபிநாத். தூத்துக்குடியில கூடப் படிச்சவனெல்லாம் ஒவ்வொரு ஊருலயும் நாட்டுலயும் சம்பாதிக்கப் போயாச்சு. கூடவே அவங்களப் பெத்தவங்களும். அதுனால இப்பப் புதுக்கிராமத்துல எனக்குத் தெரிஞ்சவங்க ரொம்ப ரொம்பக் கொறவு. ஆனா என்னையும் ஒருத்தருக்குத் தெரிஞ்சிருந்தது. அதப் பத்திப் பின்னால சொல்றேன்.

// கேப்பீங்க.. ளா.. வா? சிக்கிரம்

பழைய நெனப்புகள் வந்தலே மனசு சந்தோசமயிடும் இல்ல... //

உண்மைதான். பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடான்னு இந்த வயசுலயே பாட வேண்டியதாப் போச்சே!

said...

//உக்காந்த எடத்துலயே இருந்த மாதிரி இருக்கும் ஆனா நகண்டுக்கிட்டேயிருப்பீங்க///

//பதவி கெடச்சதும் மொத வேலை என்ன? ஓய்வெடுக்குறதுதான.///

:-))))..

ஊருக்கு போறப்போ எத்தன கஷ்டம் வந்தாலும் நமக்கு தெரியாது.. ஆனா திரும்பி வரும்போதுதான் பிரச்சனை..

:-)))

said...

இ.கொ இதையேதானய்யா நானும் சொன்னேன். பஸ் பிடிச்சி ஊருக்கு போன கதைக்கு மூணு, நாலு பாகம். அதுக்கு பின்னுட்ட மழை. அடுத்து பொறந்த கதை, வளர்ந்த கதை ஆரம்பமாகப் போவுதுன்னு
பில்டப்பு :-(((
ஜிரா, பார்த்து, அங்கங்க அரசியல், பொடி எல்லாம் என் ஞானகண்ணுக்கு தெரியுது, பார்த்துப்பூ, பட்டம் பறிப் போயிடப் போவுது ;-)

said...

ம்ம்... அப்புறம்?
சரியான நேரத்துலெ நிப்பாட்டிவுட்டா என்ன அர்த்தம்?

said...

ஜிரா
இதே மாதிரி ரிடர்ன் ஜர்னி-யும், பேருந்துப் பயணம் தானா? ஏன் கேக்குறேன்னா, ஒங்களோட கூட ஊருக்கு நின்னுகிட்டே வந்த எங்களுக்கும் காலு வலிக்குது; எப்ப வீட்டுக்குக் கூட்டிட்டு போயி காபித்தண்ணிய கண்ணுல காட்டப் போறீக?:-)

அது சரி; கேக்கணும்னு நினைச்சேன்; இந்தப் பேருந்துல ஒக்காந்து தூங்கறப்ப, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, சொக்கி சொக்கி, பக்கத்து சீட்டு ஆளூ மேல லைட்டா சாயறாகளே, அதப்பத்தி நீங்க என்ன நினைக்கீக? நீங்களும் சாஞ்சியளோ?? :-))

said...

ஆங்....
உங்களுக்கு இராகவன்-னு பேர் வைச்சாலும் வைச்சாங்க!
அந்த ராகவப் பெருமாள் மாதிரியே, நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்-னுட்டு அதே மாதிரியே நீங்களும் பண்ணுறீங்களே ஜிரா?
நியாயமா?

அது என்னங்க
பந்தல்குடியில நின்னேன்
மேலக்கரந்தையில் உக்காந்தேன்
கீழக்கரந்தையில் கிடந்தேன்
தூத்துக்குடியில நடந்தேன்....
சரியான பெருமாள் பக்தரா இருப்பீங்க போல! அதுக்காக அவர மாதிரியே எல்லாத்தையும் பண்ணனுமா??:-))

said...

//ஊருக்கு போறப்போ எத்தன கஷ்டம் வந்தாலும் நமக்கு தெரியாது.. ஆனா திரும்பி வரும்போதுதான் பிரச்சனை..

:-))) //

திரும்பி வரும்போது வேற மாதிரி பிரச்சனை. அதப் பெறகு சொல்றேன்.

// ramachandranusha said...
இ.கொ இதையேதானய்யா நானும் சொன்னேன். பஸ் பிடிச்சி ஊருக்கு போன கதைக்கு மூணு, நாலு பாகம். அதுக்கு பின்னுட்ட மழை. அடுத்து பொறந்த கதை, வளர்ந்த கதை ஆரம்பமாகப் போவுதுன்னு
பில்டப்பு :-((( //

அழாதீங்க உஷா...அழாதீங்க...நீங்க அழுதா எங்களுக்கும் அழுகை வருது...ஓஓஓஓஓஓஒ :-((((((((((((((
(முடிஞ்ச வரைக்கும் சுவாரசியமாச் சொல்லப் பாக்குறேன் உஷா)

// ஜிரா, பார்த்து, அங்கங்க அரசியல், பொடி எல்லாம் என் ஞானகண்ணுக்கு தெரியுது, பார்த்துப்பூ, பட்டம் பறிப் போயிடப் போவுது ;-) //

பட்டமா.....அதெல்லாம் வேண்டாம் உஷா. பட்டதாரின்னாலே பல பிரச்சனைகள். நான் சிம்பிள் ஜிராதான். இந்தப் பேரையே நீங்கதான் வெச்சீங்க. :-)

said...

// துளசி கோபால் said...
ம்ம்... அப்புறம்?
சரியான நேரத்துலெ நிப்பாட்டிவுட்டா என்ன அர்த்தம்? //

அடுத்த பகுதிக்குக் காத்திருக்கனும்னு அர்த்தம் டீச்சர். :-)

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
இதே மாதிரி ரிடர்ன் ஜர்னி-யும், பேருந்துப் பயணம் தானா? ஏன் கேக்குறேன்னா, ஒங்களோட கூட ஊருக்கு நின்னுகிட்டே வந்த எங்களுக்கும் காலு வலிக்குது; எப்ப வீட்டுக்குக் கூட்டிட்டு போயி காபித்தண்ணிய கண்ணுல காட்டப் போறீக?:-) //

காப்பித்தண்ணி கெடச்சது. வீட்டுக்குப் போனதுமே மொதல்ல பல்லத் தேச்சுட்டுக் காப்பிதான். அப்புறந்தான் பேச்சு வார்த்தையே :-)

// அது சரி; கேக்கணும்னு நினைச்சேன்; இந்தப் பேருந்துல ஒக்காந்து தூங்கறப்ப, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, சொக்கி சொக்கி, பக்கத்து சீட்டு ஆளூ மேல லைட்டா சாயறாகளே, அதப்பத்தி நீங்க என்ன நினைக்கீக? நீங்களும் சாஞ்சியளோ?? :-)) //

அதெல்லாம் கண்டுக்கிறக்கூடாது. நாம அடுத்தவகளுக்குத் தடுப்புன்னா...அடுத்தவக நமக்குத் தடுப்பு. ஹி ஹி

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆங்....
உங்களுக்கு இராகவன்-னு பேர் வைச்சாலும் வைச்சாங்க!
அந்த ராகவப் பெருமாள் மாதிரியே, நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்-னுட்டு அதே மாதிரியே நீங்களும் பண்ணுறீங்களே ஜிரா?
நியாயமா?

அது என்னங்க
பந்தல்குடியில நின்னேன்
மேலக்கரந்தையில் உக்காந்தேன்
கீழக்கரந்தையில் கிடந்தேன்
தூத்துக்குடியில நடந்தேன்....
சரியான பெருமாள் பக்தரா இருப்பீங்க போல! அதுக்காக அவர மாதிரியே எல்லாத்தையும் பண்ணனுமா??:-)) //

ஆமாங்க. நானும் பெருமாள் பக்தந்தான். அயனைக் குட்டிய பெருமாளே! தனிமயிலேறிய பெருமாளே! என்று அருணகிரி சொல்லும் பெருமாள் பக்தன். :-)

said...

ஜீஆர், எனக்கு அந்த படம் தெரியல்லியே !!! என்ன செய்ய ?

said...

ஜிரா, ஆனாலும் இவ்வளவு அறியாபிள்ளையாய் இருக்கக்கூடாது. இங்க பட்டம் எல்லாம் கேட்டுட்டு சூட்டுகிற அளவு நீங்க பெரிய
ஆளா? கலைஞர், பு. தலைவி, இ.இ -இயக்குனர் இமையம் போன்று :-)

கண்ணபிரான் உங்க பின்னூட்டம் சூப்பர், அதுதான் ஜிராக்கூட நின்னுக்கிட்டு போய் காலு வலிக்குதுங்ன்னீங்களே அது :-)))

ஆரல்வாய்மொழி என்ன அழகான பெயர்! இதுக்காவே இந்த ஊரைப் பார்க்கணும்.

said...

---உக்காந்த எடத்துலயே இருந்த மாதிரி இருக்கும். ஆனா நகண்டுக்கிட்டேயிருப்பீங்க. ---

: )))

நானும் 'ஊம்' கொட்டிக்கறேன்...

said...

// செந்தழல் ரவி said...
ஜீஆர், எனக்கு அந்த படம் தெரியல்லியே !!! என்ன செய்ய ? //

என்னது படம் தெரியலையா....அடக்கடவுளே...என்ன செய்யனும்னு தெரியலையே. சரி விடுங்க. மெயில்ல அனுப்புறேன். எல்லாருக்கும் தெரியுதாமே!

said...

// ramachandranusha said...
ஜிரா, ஆனாலும் இவ்வளவு அறியாபிள்ளையாய் இருக்கக்கூடாது. இங்க பட்டம் எல்லாம் கேட்டுட்டு சூட்டுகிற அளவு நீங்க பெரிய
ஆளா? கலைஞர், பு. தலைவி, இ.இ -இயக்குனர் இமையம் போன்று :-) //

அது சரிதான். என்ன இருந்தாலும் பட்டமெல்லாம் கூப்பிட்டுக் குடுத்தாதான் மரியாதை. தி.ரா.ச குடுத்தாரு ஒரு பட்டம். சண்முகச் செல்வன் அப்படீன்னு. அந்தப் பட்டம் உண்மையிலேயே மன்நிறைவைத் தந்த பட்டம். அது சரி...ஆனாலும் இந்த பு.த, கலைஞரு, இ.இ எல்லாம் ஒரு கிக்குதான் இல்ல. எழுத்துத் திலகம்னு எனக்குக் கூடப் பட்டம் தரலாம். அட...எழுத்து வியாபாரின்னு குடுத்தாலும் சரிதான். :-)))))

// கண்ணபிரான் உங்க பின்னூட்டம் சூப்பர், அதுதான் ஜிராக்கூட நின்னுக்கிட்டு போய் காலு வலிக்குதுங்ன்னீங்களே அது :-))) //

ஹா ஹா ஹா...அதுக்குத்தான் அவருக்குப் பின்னூட்டக் காப்பி குடுத்தாச்சே உஷா.

// ஆரல்வாய்மொழி என்ன அழகான பெயர்! இதுக்காவே இந்த ஊரைப் பார்க்கணும். //

உண்மைதான் உஷா. அந்தப் பக்கத்து ஊர்ப்பெயர்களே ரொம்பவும் அழகாக இருக்கும். அடுக்கிக்கிட்டே போகலாம்.

said...

// Boston Bala said...
---உக்காந்த எடத்துலயே இருந்த மாதிரி இருக்கும். ஆனா நகண்டுக்கிட்டேயிருப்பீங்க. ---

: )))

நானும் 'ஊம்' கொட்டிக்கறேன்... //

பாபா கிச்சு கிச்சு :-)))))