Monday, May 05, 2008

தங்க மரம் - 12

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 12

தனிமா பிடிமாவை விட்டு வந்தது போல நாமும் விட்டுவிட்டோம். பிடிமாவின் நிலையை என்னவென்று பார்க்கலாம்.

கதிரவனும் சித்திரையும் பிடிமாவின் மீது பரிவு காட்டியது அதன் கலக்கத்தைக் குறைத்து ஆசுவாசப்படுத்தியது. அதுவுமில்லாமல் சுடர்மகள் லிக்திமாவின் படத்தைப் பார்த்ததும் அவர்கள் மேல் நம்பிக்கையும் பிடிமாவிற்கு உண்டானது. நம்பிக்கை வந்தாலே தன்னைப் பற்றிச் சொல்லத்தானே விருப்பம் வரும். அதற்காகத் தன்னிடமிருந்த நாவிலூறியை வாயில் போட்டுக் கொண்டது பிடிமா. ஆலோரில் மனதினாலேயே அங்குள்ளவர்களிடம் தகவலைப் பரிமாற முடியும். ஆனால் பூமி மனிதர்கள் மனது தகவல்களைப் பெறும் திறனை காலவோட்டத்தில் இழந்து விட்டதால் அவர்களிடம் பேசுவதற்கு இந்த நாவிலூறி தேவைப்படுகிறது. அதை வாயில் போட்டுக் கொண்டால் அவர்களுக்குப் புரியும் மொழியில் தகவலைச் சொல்லலாம்.

பிடிமாவைப் பற்றியும் தனிமாவைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்ட கதிரவனுக்கு வந்திருப்பவர்கள் நண்பர்கள் என்றும் இருவரின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் மிக எளிதில் புரிந்து போனது. இந்த விஷயத்தை முதலில் அன்னையிடம் சொல்லி விட்டு காரியத்தில் இறங்க நினைத்தான்.

பிடிமாவிற்கு உணவு ஏற்பாடு செய்து தரச் சொல்லி சித்திரையிடம் சொல்லி விட்டு நேராக வீட்டிற்குச் சென்றான். ஆனால் அங்கிருந்த நிலவரம் கலவரத்தையே உண்டாக்கியது. என்ன நடந்ததென்றே புரியவில்லை. அம்மாவைக் காணவில்லை. ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. வீட்டுக்குள் மட்டும் அலங்கோலமாக இருந்தது அவன் ஐயத்தை அதிகப் படுத்தியது. நிலமையைக் கண்டதும் ஊழிவாயன் மேல்தான் சந்தேகம் வந்தது. ஆனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

அதற்கு மேல் சற்றும் தாமதிக்க விரும்பாமல் மீண்டும் சித்திரையிடமும் பிடிமாவிடமும் ஓடினான். அதற்குள் சூரிய வெளிச்சத்தாலும் சித்திரை ஒடித்துப் போட்ட நல்ல தென்னங்குறுத்துகளாலும் வயிறு நிரம்பி மிகவும் தெளிவாக இருந்தாள் பிடிமா. வீட்டில் கண்டதை இருவருக்கும் விளக்கினான் கதிரவன்.
மூன்று பேரும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் இட்டார்கள்.

முதலில் கதிரவனின் அன்னை அமுதம் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

பிடிமாவோடு வந்த தனிமாவையும் காணவில்லை. அவளையும் கண்டுபிடிக்க வேண்டும்.

ஊழிவாயன் எங்கிருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவனிடமிருந்து லிக்திமா, கதிரவனின் தந்தை, சித்திரையின் தந்தை...ஒருவேளை அமுதத்தையும் பிடித்துக் கொண்டு போயிருந்தால் அவரையும் சேர்த்து விடுவிக்க வேண்டும்.

இந்தச் செயல்களை எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் முழித்தார்கள் நண்பர்கள் இருவரும். ஏதேனும் சின்னக் குறிப்பு கிடைத்தாலும் நன்றாக இருக்குமே என்ற இருவரின் கவலையையும் பிடிமா குடுத்த தகவல் போக்கியது.

ஊழிவாயன் இருக்குமிடத்தை அடைய முதலில் தங்கமரத்தை அடைய வேண்டும் என்றும்... அந்தத் தங்கமரமோ ஏறாத மண்மலையில் இருக்கிறது. அந்த ஏறாத மண்மலையோ தணலேரிக்கு அருகில் இருப்பதாகவும் லிக்திமா ஏற்கனவே சொல்லி வைத்திருப்பதை பிடிமா சொன்னது. (லிக்திமாவிற்கு இந்த விவரங்கள் எப்படித் தெரிந்தது என்பதைப் பிறகு பார்ப்போம்.)

ஆக இப்பொழுது தணலேரியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏரியில் நீரிருக்கும். தணலிருக்குமா? அல்லது வெறும் பெயரா? மண்ணிலே மலையிருக்கும். மலையே மண்ணாயிருக்குமா? தங்கத்தில் மரம் முளைக்குமா? ஒருவேளை தங்குவதற்கான மரமா?

இந்தச் சந்தேகங்கள் மூவரின் உள்ளத்திலும் எழுந்தன. அப்பொழுது பிடிமா சொன்னாள்.

"நண்பர்களே என் மீது ஏறிக் கொள்ளுங்கள். உங்களைச் சுமந்து என்னால் பறக்க முடியும். என்னுடைய இறக்கைகள் மிகவும் வலுவானவை. இந்தச் சூரியவொளி மிகுந்த ஆற்றலைக் கொடுக்கிறது எனக்கு. ஆகையால் பறந்து சென்று தேடுவதே வசதியாக இருக்கும். மேலும் என்னோடு வந்த தனிமாவும் அருகில் எங்கேயாவது விழுந்திருக்க வாய்ப்புள்ளது. வாருங்கள். என் மீது ஏறிக் கொள்ளுங்கள்"

பிடிமாவின் அழைப்பை இருவராலும் மறுக்க முடியவில்லை. விண்ணிலிருந்து பார்த்தால் விசாலமான காட்சி கிடைக்கும். அது தேடுதலை எளிமையாக்கும் என்றும் புரிந்தது. சரியென்று ஒப்புக்கொண்டு பிடிமாவின் மேல் ஏறினார்கள். இருவரையும் சுமந்து கொண்டு ஜிவ்வென்று வானில் ஏறிப் பறந்தது பிடிமா.

விண்ணிலிருந்து அழகான பூமியைக் காணும் காட்சி மூவரையும் பரவசப்படுத்தியது. களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த பிடிமாவும் நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையையே சற்று மறந்திருந்தார்கள் என்றாலும் மிகையாகது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரங்கள் பறந்த பிறகு மலைகள் நிறைந்த பகுதியை அடைந்தார்கள். அங்கு இறங்கி களைப்பாறி உணவு தேடலாம் என்று கதிரவனுக்குத் தோன்றியது.

தோன்றியதைச் சொல்லும் முன்னமே பிடிமா விண்ணிலேயே நின்றது. அதனால் சிறிதும் நகரமுடியவில்லை. முழு ஆற்றலையும் பயன்படுத்தினாலும் அசையக் கூட முடியவில்லை. கீழேயும் விழவில்லை. என்னடா அதியம் என்று அசந்து போகும் வேளையில் கேட்டது இடியோசை போன்ற சிரிப்போசை.

தொடரும்...

படிக்கின்றவர்களின் வசதிக்காக






அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

11 comments:

said...

கண்ணுக்குத் தெரியாத காவற்சுவரா? நடக்கட்டும் நடக்கட்டும்.

said...

Not to publish...

//களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த தனிமாவும் நண்பர்கள் இருவரும் //

பிடிமா தனிமா ஆகிவிட்டது/விட்டாள் இங்கே. சரி செய்துவிடுங்கள்.

said...

ஆகா. பிடிமா வந்தாலே சுவையாகத் தான் இருக்கிறது.

said...

ஆர்வம் இன்னும் அதிகமாகி விட்டது... தொடருங்க:..:)

said...

///களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த ;;;;;தனிமா;;;;;வும் நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையையே சற்று மறந்திருந்தார்கள் என்றாலும் மிகையாகது////
அது தனிமா இல்லை பிடிமா...

said...

ஆகா...ஜிரா நல்லா போட்டிங்க பிரேக்கை..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)

said...

நாவிலூறி..தங்க மரம்..தங்குவதற்கு மரம்..வார்த்தைகளில் அழகாக விளையாடுகிறீர்கள் ராகவன்..

said...

//அந்தத் தங்கமரமோ ஏறாத மண்மலையில் இருக்கிறது. //

கதையோட தலைப்பு வந்துடுச்சி... :)

said...

// Blogger இலவசக்கொத்தனார் said...

கண்ணுக்குத் தெரியாத காவற்சுவரா? நடக்கட்டும் நடக்கட்டும். //

என்ன கொத்ஸ்... மேல நடக்க மாட்டாமத்தானே தடுப்பு இருக்கு. அப்புறம் நடக்கட்டும்னா எப்படி? :)

// Blogger குமரன் (Kumaran) said...

பிடிமா தனிமா ஆகிவிட்டது/விட்டாள் இங்கே. சரி செய்துவிடுங்கள். //

சரி செஞ்சிட்டேன் குமரன். நீங்க போடக்கூடாதுன்னு சொன்னாலும் போட்டுட்டேன். தப்பைத்தானே சரி செஞ்சீங்க. :) இருக்கட்டும்.

// தமிழ் பிரியன் said...

///களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த ;;;;;தனிமா;;;;;வும் நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையையே சற்று மறந்திருந்தார்கள் என்றாலும் மிகையாகது////
அது தனிமா இல்லை பிடிமா...//

ஆமாங்க தமிழ்ப் பிரியன். சரி செஞ்சுட்டேன்.

said...

// கோபிநாத் said...

ஆகா...ஜிரா நல்லா போட்டிங்க பிரேக்கை..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;) //

நானும் வெயிட்டிங்குதான் :) வாங்க... சேந்து வெயிட்டுவோம். பிடிச்சிருந்தா படிப்போம். பிடிக்கலைன்னா எழுதுனவர இடிப்போம் :D

// Blogger பாச மலர் said...

நாவிலூறி..தங்க மரம்..தங்குவதற்கு மரம்..வார்த்தைகளில் அழகாக விளையாடுகிறீர்கள் ராகவன்.. //

நன்றி பாசமலர். இன்னமும் விளையாடலாம். இந்தக் கதைக்கு இவ்வளவு போதும்னு உங்களையெல்லாம் மன்னிச்சாச்சு :) ரொம்பக் கஷ்டப்படுத்தக் கூடாதுல்ல.

said...

ஹைய்யோ..... இன்னிக்குத்தான் பாகம் எட்டுலே இருந்து இதுவரை படிச்சேன்.

அடடா.... பிடிமாவோடு நம்ம வீட்டுக்குப் பறந்து வந்துட்டுப் போயிருக்கலாமுல்லே?

பூகனூர் ரொம்பப் பிடிச்சிருக்கு.

நல்லா விஷுவலைஸ் பண்ணி எழுதறீங்க.

சூப்பர்.