சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.
பாகம் - 11
தங்கக்கத்தி தனிமாவின் கைகளில் சேர்ந்ததும் பூகனின் கண்கள் அச்சத்தால் விரிந்தன. தனிமா அவசரப்பட்டு பூகனைக் கொல்லவில்லை. சற்றுப் பொறுமையாக இருந்தாள். ஆனாலும் பூகன் அவள் மேல் பாய்ந்ததினால் ஆத்திரத்தோடே இருந்தாள்.
"ஹே... யார் நீ?" அதட்டலோடு கேட்டாள்.
"பார்த்தால் எப்படித் தெரிகிறது? உனக்குக் கண்கள் உண்டுதானே?" திமிராகக் கேட்டது அந்த பூகன்.
"அடி வாங்கிப் பிடி பட்ட பிறகும் பேச்சு பெரும் பேச்சு."
"அது சரி... வந்திருப்பது பூகனூருக்கு.... பிடித்து வைத்திருப்பதோ பூகனை.... வெளியிலிருந்து வந்திருக்கும் நீ இவ்வளவு பேசும் பொழுது என் பேச்சு பெரும் பேச்சாவதில் வியப்பில்லையே." பூகனின் பேச்சில் ஆத்திரமும் எரிச்சலும் வெடித்துச் சிதறின.
மெல்லச் சிரித்தாள் தனிமா. "பூகனாக மட்டுமே இருந்தால் பேசலாம். ஆனால் மானம் மரியாதை அனைத்தும் ஊழிவாயனிடம் அடகு வைத்து விட்டு வாயினை உண்ண மட்டுமே திறக்கின்றவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பேசவும் திறப்பீர்கள் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்."
"ஆஆஆ அவமானம். பூகன்கள் அந்த ஊழிவாயனிடம் விரும்பியா வேலை செய்கின்றன? வேறு வழியில்லாமல் அந்த வெளியண்டத்து ஊழிவாயனிடம் அடங்கி நடக்கின்றார்கள். என்னைத் தவிர. நான் ஒருவன் இருப்பதையே அறியான் அந்த ஊழிவாயன். உன்னைப் பார்த்தால் கூட அந்த ஊழிவாயனின் முகச்சாயல் தெரிகின்றது. நீயும் அவனைப் போல மாயாவியாகத்தான் இருக்க வேண்டும். ஆகையால்தான் மனிதர்களே நுழைய முடியாத இந்தப் பூகனூருக்குள் நுழைந்து...என்னையும் பிடித்து....என்னையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறாய்." ஆத்திரத்தில் பொறுமினான் அந்த பூகன்.
தனிமாவிற்கு நிலமை சட்டென்று புரிந்து போனது. ஆலோரில் இருக்கும் பொழுதே ஊழிவாயன் பூகன்களின் தலைவனை ஏமாற்றி மந்திரக்கோலை அபகரித்துக் கொண்டதை அறிவாள். ஆனால் அனைத்து பூகன்களும் அடிமையாகியிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு பூகம் சுதந்திரமாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
பைய அந்த பூகனைக் கீழே இறக்கினாள். தங்கக் கத்தியையும் அந்தரத்திலேயே நகட்டி அந்த பூகன் கையில் வைத்தாள். அதற்கோ வியப்பு. தரையில் ஒரு நிலையில் இறங்கிய பிறகு கேட்டது. "நீ யார்?"
"பூகனே. ஊழிவாயன் என்று நீங்கள் சொல்லும் நபரின் மகள் நான். என்னுடைய பெயர் தனிமா. ஊழிவாயனிடமிருந்து என்னுடைய தாயை விடுவிக்க வந்திருக்கிறேன்."
பூகனுக்கு ஒன்றும் புரியவில்லை. பளக் பளக் என்று முதலில் முழித்தது.
"சரி. என்னுடைய பெயர் ககன். நீ அப்படியானால் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் என்று நான் நம்புவதற்குக் காரணம் இல்லையல்லவா!"
ககன் சொன்னது எடுத்ததும் தனிமாவிற்குப் புரியாவிட்டாலும் தான் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் இல்லை என்பதைத்தான் அப்படிக் கேட்கிறான் ககன் என்று உணர்ந்தாள்.
"சரி தனிமா. அப்படியானால் நீ இங்கே வந்ததற்கான காரணத்தின் மேலதிகத் தகவல்களை நான் அறிந்து கொள்வதில் உனக்குத் தயக்கம் இருக்கப் போவதில்லை என்றே நம்புகிறேன்."
சிரித்து விட்டாள். "ஹா ஹா ஹா.. இல்லை இல்லை. தாராளமாகச் சொல்லலாம். நாங்கள் ஆலோரிகள். நானும் என்னுடைய ஆனையான பிடிமாவும் பூமிக்கு வந்தோம். பூமியின் எல்லைக்குள் நுழையும் பொழுது தடுமாறினோம். அப்படிக் கீழே விழுகையில் பிடிமா ஒருபுறம் போனாள். நான் இங்கு தவறி தண்ணீருக்குள் விழுந்து இங்கு வந்திருக்கிறேன்."
தனிமா சொன்னது பூகனை யோசிக்க வைத்தது. "தனிமா...இப்பொழுது நீ எப்படி இங்கே வந்ததாகச் சொன்னாயோ அப்படித்தான் முன்னம் ஒருவன் உள்ளே வந்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல. யாரை நீ உன்னுடைய தந்தை என்று கூறிக்கொண்டு..அவனையே எதிர்க்க வந்திருப்பதாகக் கூறுகின்றாயோ...அந்த ஊழிவாயந்தான். நீயும் அதை வழியில் இங்கு வந்திருப்பதிலிருந்து இரண்டு விஷயங்கள் என்னுடைய யோசனைக்கு வருவதால் அவைகளை உன்னிடம் சொல்லிவிடுவதே நல்லது என்று இப்பொழுது தோன்றுகிறது. கேள்."
கூர்ந்து கேட்கத் தொடங்கினாள் தனிமா.
"முதலாவது. ஊழிவாயன் என்னதான் ஏமாற்றுக்காரனாக இருந்தாலும் அவன் ஆற்றலிலும் அறிவிலும் குறையுள்ளவன் என்று யாரும் சொல்ல முடியாத அளவிற்குச் சிறந்தவன்.
இரண்டாவது. ஊழிவாயன் வந்திறங்கிய பொழுது அவனிடமிருந்த சக்தியனைத்தும் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க முடியாத நிலை வந்தது. அதாவது சுருங்கச் சொன்னால்...இந்த பூமிக்கு வெளியே சிறந்து பணியாற்றிய அவனது ஆற்றலனைத்தும் பூமிக்குள் வந்ததும் சிறிது சிறிதாக தன்னை இழந்தது. அதாவது என்னை அந்தரத்தில் தொடாமல் நிறுத்தி வைத்திருக்க உன்னால் தொடர்ந்து செய்ய முடியாது போகும்."
ககன் சொன்ன இரண்டு தகவல்களில் இரண்டாவது தகவல் தனிமாவை யோசிக்க வைத்தது. ஒரு பிரச்சனையை தீர்க்க வந்த அவளுக்குப் பிடிமாவை இழந்தது இன்னொரு பிரச்சனையாக வந்து நிற்கிறது. அவளை முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் தன்னுடைய ஆற்றலை விரைவில் இழக்க நேரிடும் என்ற எண்ணம் வேறு சலனப்படுத்தியது. கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக ககனின் நட்பு வேறு கிடைத்திருக்கிறது. ஆனால் எதையும் சுருக்கமாகச் சொல்லத் தெரியாத ககனால் எவ்வளவு நன்மை என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் ஆற்றல் குறையும் முன்னமே விரைந்து செயல்படுவது நன்று என்று அவளுக்குத் தோன்றியது.
"ககன். நீ சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது நான் விரைந்து செயலாற்ற வேண்டும் என்பது புரிகிறது. முதலில்....எனக்கு ஒன்று புரிய வேண்டும். ஆற்றலை அனைத்தும் இழந்தார் ஊழிவாயன் என்றால்....எப்படி பூகன்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? ஏன் எந்த பூகனும் எதிர்க்கவில்லை. நீ ஊழிவாயனை எதிர்ப்பதாகச் சொன்னாலும் இத்தனை ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லையே! ஏன்?"
ககன் சொல்லத் தொடங்கினான்.
தொடரும்...
Thursday, May 01, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஆற்றல் போகுமா? ஏன்? பின் ஊழிவாயன் மட்டும் எப்படி இப்படி?
சொல்லுங்க ஜிரா சொல்லுங்க.....
எங்கள் தனிமாவின் ஆற்றல் போய் விடுமா?.... ஏனிந்த சோதனை..
ஆனாலும் பூமியில் மனித ஆற்றலுடன் இணைந்து ஊழிவாயனை மடக்குவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... :)
தொடர்ந்து வருகிறோம் தொடருங்கள்
நீங்க இப்ப இருக்கும் பாதாள உலகத்துல தான் பூகனுங்க இருக்காய்ங்களா? அவிங்க பேசற மாதிரியே பூகனுங்க பேசறாங்களே! நாங்க இப்ப இருக்கிற ஊருல கூட பூகனுங்க இப்படித் தான் பேசுவாய்ங்க.
சீக்கிரம் சொல்லு ககன்..சொல்லு ;))
ககன் என்ன சொன்னார்னு எனக்கு மட்டுமாவது சீக்கிரம் சொல்லிடுவீங்களா ஜிரா?
இது என்ன மேட்டர்னு டக்குனு புரியலையே! திடீர்னு பதினொண்ணு படிச்சா ஒண்ணும் தெரியலை .. கீழ பத்துல ஒரு சார்ட் பாத்தேன். ஆஹாங் ஏதோ பெரிய ப்ராஜக்ட் மாதிரி கதையா இருக்கேன்னு தோணுச்சு! ஏதோ தொல் காப்பியமா? மொழி மாற்றமா? சொந்த கதையா - சைன்ஸ் ஃபிக்ஷன்னை தொல் காப்பியம் ஸ்டைல்ல படிக்கிற மாதிரி ஒரு குழப்பம் எனக்கு! :) ...
நடத்துங்க நடத்துங்க ... சும்மா எட்டிப் பாத்துட்டு, சௌக்கியமா கேட்டுட்டு போக வந்தேன்! :)
Post a Comment