Tuesday, July 08, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபி

இந்தப் பதிவை எழுதுவதற்கு எத்தனைத் திரைப்படத் துணுக்குகளைப் படிக்க வேண்டியிருந்தது தெரியுமா! அப்படி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து எழுதிய இந்தப் பதிவிற்குக் காரணம் கவிநயாதான். சும்மாயிருந்த என்னைச் சீண்டி விட்டிருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் பதிவெழுதத் தூண்டி விட்டால்! அதைப் படிக்கும் உங்கள் நிலைதான் என்ன! ஆகையால் இந்தப் பதிவு தொடர்பான எதுவென்றாலும் நீங்கள் கவிநயாவைத் தொடர்பு கொள்ளுங்கள். ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதாக உறுதி சொல்லியிருக்கிறார்.

கர்ணன் படப்பிடிப்பின் பொழுது நடந்த நிகழ்ச்சி இது. ஒரிசாவின் புகழ் பெற்ற கொனார்க் சூரியக் கோயிலில் படப்பிடிப்பு நடந்தது. இரவும் நிலவும் வளரட்டுமே என்ற அருமையான பாடலின் படப்பிடிப்பும் போர்க்களக்காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. இரவும் நிலவும் பாடலைத் தமிழில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடினார்கள். தெலுங்கில் பி.சுசீலா உண்டென்றாலும் ஆண்குரலுக்குப் பாலமுரளி கிருஷ்ணா.

சாப்பாட்டுப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக இங்கிருந்து செட்டியார் மெஸ் ஒன்றும் உடன் சென்றிருந்தது. மேஸ் கூட்டத்தில் கந்தப்பச் செட்டியார் என்பவர் இனிப்பு வகைகளைத் திறம்படச் செய்யும் கைப்பலம் பெற்றிருந்தார். சிவாஜி அசைவப் பிரியர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சிவாஜி என்றால் இங்கு நடிகர் திலகத்தைக் குறிக்கும். நடிகர் மோகன்லால் வீட்டிற்குச் சென்றால் வாத்துக்கறி வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவாராம். ஆகையால் தினந்தோறும் அசைவ வகைகள் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்கள் மெஸ்காரர்கள்.

அந்தப் படப்பிடிப்பின் போதுதான் சிவாஜி அவர்களின் பிறந்தநாள் வருவதை பி.ஆர்.பந்துலு (அவர்தான் திரைப்பட இயக்குனர்) கந்தப்பச் செட்டியாரிடம் சொல்லி.... ஏதாவது புதிய இனிப்பு செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார். பாயாசங்களையே எத்தனை நாளைக்குத்தான் காய்ச்சுவது? அதிரசத்திற்கு உள்ளூர் வெல்லம் சரிவருமோ என்ற கவலை. உக்கரையெல்லாம் இத்தனை பேர்களுக்குச் செய்வதற்குள் தாவு தீர்ந்து விடும். ஆகையால் குலாப் ஜாமூன் போடுவதென்று முடிவானதாம்.

பிறந்தநாள் அன்று காலை எல்லாரும் நடிகர் திலத்தை வாழ்த்தியிருக்கின்றார்கள். நடிகை தேவிகாவும் அவரது தாயாரும் அருகில் இருந்த பிஷ்ணு கோயிலுக்குச் சென்றுப் பூஜை செய்து பிரசாதம் குடுத்தார்கள். கந்தப்பச் செட்டியார் செய்த குலாப் ஜாமூனை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு வாழ்த்துச் சொல்லச் சென்றிருக்கிறார் பந்துலு மாமா. முதல் இனிப்பு தான் குடுக்கும் இனிப்பாக இருக்க வேண்டுமே..

ஆனால் அங்கே ஏற்கனவே நடிகர் திலகம் எதையே மென்று கொண்டிருந்தார். பார்த்தால் ஜிலேபி. கோயிலுக்குச் சென்ற நடிகை தேவிகா வழியில் இனிப்புக் கடையில் ஜிலேபியையும் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதைத்தான் சிவாஜி அவர்களும் கமலா அம்மாவும் சாப்பிட்டிருந்திருக்கிறார்கள். பந்துலு மாமா குலாப் ஜாமூனைக் கொடுத்து கந்தப்பச் செட்டியார் சிறப்பாகச் செய்ததைச் சொல்லியிருக்கிறார். ஜிலேபி கொடுத்த தேவிகாவிற்கும் ஜாமூன் செய்த செட்டியாருக்கும் நன்றி சொல்லி அடுத்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை. கதையென்றால் கதையேதான். அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய். இப்படியே எம்.ஜி.ஆர் வாங்கிய சோடா.... தேங்காய் சீனிவாசனும் திருப்பதி லட்டும் என்று பலப்பல பழைய கதைகளும்... ஜெனிலியாவிற்குப் பிடித்த ஜெய்ப்பூர் கீர்... சூர்யாவின் சந்திரகலா... தசாவதாரப் படப்பிடிப்பில் கமலும் அசினும் சாப்பிட்ட கல்கோனா போன்ற புத்தம்புதிய கதைகளும் நிறைய உள்ளன. தேவைப்படும் பொழுது அவைகளும் எடுத்து விடப்படும்.

அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே. அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

16 comments:

said...

சூப்பர், கடசீல வர்ற பயங்கரமான ட்விஸ்டை படிக்கும் வரை உண்மைச் சம்பவம் என நினைத்திருந்தேன்:):):) ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.

said...

//ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதாக உறுதி சொல்லியிருக்கிறார்.//

அட ராகவா!

//இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை. கதையென்றால் கதையேதான். அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய்.//

சரி.. சரி... புரிஞ்சிருச்சுப்பா :)

எப்படியோ நெச சிவாஜி வாயில நெச ஜிலேபியப் போட்டுட்டீங்க. பதிவுக்கு நன்றிங்கோ!

//அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.//

அடடா, இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே, அப்படின்னு நான் கவலப் படல. தோணிருந்தா நீங்க இப்படி இத்தனை ஆராய்ச்சி செஞ்சு, இத்தன துணுக்கு படிச்சு, இந்த பதிவப் போட்டிருப்பீங்களா :))

said...

//rapp said...

சூப்பர், கடசீல வர்ற பயங்கரமான ட்விஸ்டை படிக்கும் வரை உண்மைச் சம்பவம் என நினைத்திருந்தேன்:):):) ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.//

ரிப்பீட்டே... :-)

said...

:)

அட ராகவா!

said...

/இந்தப் பதிவை எழுதுவதற்கு
எத்தனைத் திரைப்படத் துணுக்குகளைப்
படிக்க வேண்டியிருந்தது தெரியுமா! /

/இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை.
கதையென்றால் கதையேதான்.
அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய்./

/அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே.
அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு,
டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்./

தாங்கமுடியவில்லை

:)))))))))))))

said...

:))!

///அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே.
அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு,
டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.//

:)))))))))))!

[நான் என்ன கமென்ட் போட வேண்டுமென நினைத்து வந்தேனோ திகழ்மிளிரும் அதே போட்டிருக்காங்க. அதனால் போடமலும் போக முடியலை! :)!]

said...

கதையா இது. நம்ப முடியலியே:)

அப்படியே நடந்ததை எழுதினாப்பில இல்ல இருக்கு.

எப்படியோ முத்துலட்சுமி,தங்கவேலை யாராவது
சிலராவது நினைக்கிறார்களே.:0)
சூப்பர் ஜிலேபிமா ஜிரா.

said...

ஜிரா உண்மையிலேயே எங்க வாயிலே எல்லாம் ஜிலேபி வச்சிட்டிங்க...;))

said...

நீங்கள் அழைத்த மூன்று பேருக்கும் வலைப்பதிவு இல்லை போலிருக்கிறதே. அவர்கள் எழுதி அனுப்பினால் உங்கள் பதிவிலேயே வெளியிடுவீர்களா? முடியாதென்றால் சொல்லுங்கள். இலவசமாக வெளியிட எங்கள் இலவசத்தார் இருக்கிறார்.

said...

அண்ணா இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப டூஊஊஊ மச்சாத் தெரியலை!! ஆனா எழுதின விதம் அபாரம். சூப்பரு! :))))))

said...

// rapp said...
சூப்பர், கடசீல வர்ற பயங்கரமான ட்விஸ்டை படிக்கும் வரை உண்மைச் சம்பவம் என நினைத்திருந்தேன்:):):) ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. //

ஹி ஹி இப்பல்லாம் பொய்ய உண்மை மாதிரி சொல்றதுதாங்க பாஷன்.. அதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்... :)

// வெட்டிப்பயல் said...
//rapp said...//

ரிப்பீட்டே... :-) //

என்ன பாலாஜி.. அவரு சொல்றதுக்கு ரிப்பீட் போடுற.... ஹா ஹா ஹா ரிப்பீட் ரங்கநாதன் ஆயிராதப்பா... :D

said...

இராகவன்,

பாலாஜி அரங்கநாதன் ஆனால் தவறில்லை தானே. :-)

said...

// //ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதாக உறுதி சொல்லியிருக்கிறார்.//

அட ராகவா! //

அட வருத்தப்படாதீங்க. நான் ஆட்டோ சார்ஜ் கேக்க மாட்டேன் :D கொத்தனார்தான் உங்க ஃபோன் நம்பரத் தேடுறாருன்னு கேள்வி. :D

////இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை. கதையென்றால் கதையேதான். அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய்.//

சரி.. சரி... புரிஞ்சிருச்சுப்பா :) //

புரிஞ்சதுல்ல... அப்ப ரெண்டு கிலோ ஜிலேபி பார்சல்

// எப்படியோ நெச சிவாஜி வாயில நெச ஜிலேபியப் போட்டுட்டீங்க. பதிவுக்கு நன்றிங்கோ! //

ஹி ஹி அவரு நமக்குப் பிடிச்ச நடிகருங்க. அவருக்கு இனிப்புக் குடுக்காம இருக்க முடியுமா?!

////அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.//

அடடா, இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே, அப்படின்னு நான் கவலப் படல. தோணிருந்தா நீங்க இப்படி இத்தனை ஆராய்ச்சி செஞ்சு, இத்தன துணுக்கு படிச்சு, இந்த பதிவப் போட்டிருப்பீங்களா :)) //

ரொம்பச் சரியாச் சொன்னீங்க. எவ்ளோ துணுக்குகள். தினமலர், தினத்தந்தி, பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ், தினமணிக்கதிர்..எல்லாமே1960ல இருந்து படிச்சிட்டு வர்ரேனே :)

said...

//எல்லாமே1960ல இருந்து படிச்சிட்டு வர்ரேனே :) //

உங்களுக்கு பூர்வ ஜன்ம நினைவு இருக்கா! சொல்லவே இல்லை?! :)

said...

//எல்லாமே1960ல இருந்து படிச்சிட்டு வர்ரேனே//

எப்பவுமே மத்தவங்க செஞ்சதை செய்யாம புதுமையா செய்யும் இராகவா. உங்கள் வயசை நீங்க கூட்டிச் சொல்லுவதற்கு முன்னரே நான் என் வயதை ரொம்பவும் கூட்டிச் சொல்லிவிட்டேன் என்பதை நினைவுபடுத்துகிறேன். அதனால் என்னை ஈயடிச்சான் காப்பி அடிக்க வேண்டாம் என்றும் சொல்லிக் கொள்கிறேன். :-) தேவையில்லாமல் கவிக்காவையும் குழப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். :-)

said...

// நாமக்கல் சிபி said...

:)

அட ராகவா! //

ஹா ஹா ஹா... திட்டுறீங்களா? பாராட்டுறீங்களா? அதச் சொல்லுங்க சிபி. :)

// Blogger திகழ்மிளிர் said...

/இந்தப் பதிவை எழுதுவதற்கு
எத்தனைத் திரைப்படத் துணுக்குகளைப்
படிக்க வேண்டியிருந்தது தெரியுமா! /

/இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை.
கதையென்றால் கதையேதான்.
அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய்./

/அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே.
அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு,
டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்./

தாங்கமுடியவில்லை

:))))))))))))) //

ஹி ஹி ஆமாங்க தாங்க முடியலை.... எனக்குந்தான் :D