Wednesday, June 22, 2005

பாண்டி பஜாரில் விஜய டி ராஜேந்தர்

அடுக்கு மொழிக்காரர் டி.ஆர். அவரை ஒரு முறை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. சந்திப்பும் ரொம்பக் கொஞ்ச நேரந்தான். இது அவர் விஜய டி ராஜேந்தராக மாறும் முன் நடந்தது.

தியாகராய நகரில் பாண்டி பஜாரில் ஏதோ பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தேன். மாலை வேளை. இருட்டியிருந்தது. வீதியெங்கும் விளக்குகள் பொருத்தியிந்தது. பழைய இராஜகுமாரி தியேட்டர் பக்கத்தில் நிறைய பூக்கடைகள் உண்டு. அந்தப்பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தட்டுப்பட்டது ஒரு ஜீப். முன் சீட்டில் டிரைவர் தவிர இன்னொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். நன்றாகப் பார்த்தபின் தெரிந்தது அது டி.ஆர் என்று.

"அடடே! டி.ஆர்" என்று அருகில் சென்று வணக்கம் சொன்னேன். அவரும் பதில் வணக்கம் சொன்னார். கையில் ஆட்டோகிராப் வாங்க எந்தப் புத்தகமும் இல்லை. ஆனால் சின்னதான டெலிபோன் புக் இருந்தது. அதன் கடைசிப் பக்கத்தைப் புரட்டி ஆட்டோகிராப் கேட்டேன். அன்புடன் டி.ஆர் என்று உருண்டை உருண்டையாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஏதாவது பேச வேண்டுமே என்று "எப்பிடி இருக்கீங்க?" என்று கேட்டேன். கேட்டது தவறென்று உடனே புரிந்தது. அவரது கண்கள் கலங்கின. உதடுகள் துடித்தன. கன்னச் சதை லேசாக உதறத் துவங்கியது. தொண்டைக் குழி மேலும் கீழும் குதித்தது தாடியை மீறித் தெரிந்தது. குழறலாய் உடைந்த சொல்லில் பதில் வந்தது. "நல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேம்ப்பா!" அவரது கண்கள் நிரம்பியிருந்தாலும் இன்னும் உடைப்பெடுக்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றா தெரியவில்லை. ஒரு மாதிரியான முள்மேல் நிற்கும் உணர்ச்சி. "ரொம்ப நன்றி. வர்ரேங்க" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். இதை வீட்டிலும் நண்பர்களிடத்திலும் சொன்னேன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான்தான் அவரிடத்தில் "எப்படி இருக்கீங்க" என்று கேட்ட முதல் நபராக இருக்கும் என்று சொல்லிச் சிரித்தார்கள். எப்படியோ நினைவில் நின்ற சந்திப்பு.

15 comments:

said...

அந்த கையெழுத்தை ஸ்கேன் பண்ணி போட்டிருக்கலாமில்லை. நாங்கெல்லாம் தொட்டு கும்பிட்டிருப்போம்ல :-))

-அல்வாசிட்டி.விஜய்.

said...

அவரை எந்த காலகட்டத்தில் சந்தித்திருப்பீர்கள் என்று குறிப்பிட்டிருந்தால் . உங்கள் கேள்வி ஏன் அவரை இந்தளவு பாதித்து என்று யூகிக்கலாம்.. !

இருந்தாலும் ஒரு யூகம் , try பன்றேன்!

ஒரு காலத்தில் அவர் "நான் இந்த கட்சியில் தான் இருக்கேனா??" அப்படினு கொதிச்சு போய் கேட்டார்..
என்ன அர்த்தம்??? ஒருத்தரும் அவர் இருப்பதை யாரும் கண்டுக்கலைனு தானே...
அந்த நேரத்துல நீங்க கேட்டிருக்கலாம்.. அவரும் உணர்சிவசப்பட்டிருக்கலாம்..

வீ எம்

said...

//அந்த கையெழுத்தை ஸ்கேன் பண்ணி போட்டிருக்கலாமில்லை. நாங்கெல்லாம் தொட்டு கும்பிட்டிருப்போம்ல :-))

-அல்வாசிட்டி.விஜய். //
கிண்டல்தான....அந்த டெலிபோன் புக் எங்கயிருக்குன்னு இன்னைக்குத் தேடிப் பார்க்குறேன்.

said...

// நல்லா ரோசனை பண்ணி பாருங்க. அது விஜய T. ராஜேந்தரா இல்லை வெறும் T.ராஜேந்தரான்னு. //

புலிப்பாண்டி....நல்லா நினைவிருக்கு...அவரு டி.ராஜேந்தருதான்.

// அவரை எந்த காலகட்டத்தில் சந்தித்திருப்பீர்கள் என்று குறிப்பிட்டிருந்தால் . உங்கள் கேள்வி ஏன் அவரை இந்தளவு பாதித்து என்று யூகிக்கலாம்.. !//
வீ.எம்....நீங்கள் சொன்னது உண்மைதான். அப்பொழுது அவர் பழைய கட்சியில்தான் இருந்தார். இப்பொழுது புரிகிறது எனக்கு.

said...

டி.ஆர் உடனான என்னுடைய முதல் சந்திப்பே கசப்பானதாக இருந்தாலும் அடுத்தடுத்த சந்திப்புகள் (அதாவது கூட்டத்தோடு கூட்டமாக நின்று!) சுவராசியமாகவே இருந்தது. யார் வந்தாலும் மனம் நோகாமல் பதிலளிக்கக்கூடியவர். குரல் கம்மி ·பீல் பண்ணிப் பேசும்போது அந்த இடத்தில் சிரிப்பு வராது. ஆனாலும் பிறிதோரு நாளில் நினைத்து நினைத்து சிரிக்கலாம். எனக்கொரு பால்ய காலத்து நண்பன் உண்டு. எப்போது பார்த்தாலும் எங்கள் வீட்டு நாய்க்குட்டியில் ஆரம்பித்து சகல ஜீவராசிகளையும் விசாரித்துவிட்டுதான் நகருவான். அவனோடு ஒப்பிடும்போது....நிச்சயம் டீ.ஆரெல்லாம் தெய்வ மச்சான்!

said...

ராகவன் சார்

பதிவை வெள்ளை எழுத்துக்களில் இடலாமே. மகரந்தத்தில் இருக்கும் வெளிச்சம் பாண்டி பஜாரில் இல்லையே.

// எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான்தான் அவரிடத்தில் "எப்படி இருக்கீங்க" என்று கேட்ட முதல் நபராக இருக்கும் என்று சொல்லிச் சிரித்தார்கள். //

சரி நீங்க அப்போ எப்படி இருந்தீங்க....

said...

// பதிவை வெள்ளை எழுத்துக்களில் இடலாமே. மகரந்தத்தில் இருக்கும் வெளிச்சம் பாண்டி பஜாரில் இல்லையே. //
கண்டிப்பாக கணேஷ். அடுத்த பதிவுகளில் திருத்திக் கொள்கிறேன். சரியான வேளையில் சொல்லிக் காட்டியமைக்கு நன்றி.

//// எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான்தான் அவரிடத்தில் "எப்படி இருக்கீங்க" என்று கேட்ட முதல் நபராக இருக்கும் என்று சொல்லிச் சிரித்தார்கள். //

சரி நீங்க அப்போ எப்படி இருந்தீங்க.... //
இஞ்சி தின்ன குரங்குன்னு கேள்விப் பட்டிருப்பீங்க....சிரிச்சவங்கள்ளாம் அன்னைக்கு அதப் பாத்தாங்க :-)))))))))))

said...

இம்மாதிரியான விசாரிப்புகளில் அவர்கள் அவர்களது தாயைக் காண்கிறார்கள். ஒருமுறை எங்க ஊருக்கு ஒரு பாணர் வந்தார்., கையில் ஒரு கருவி., பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு அம்மா அதை மீட்டுக்கிட்டே சின்னப் பையனே தேடிக்கிட்டே பாட்டுப் பாடுமே., நல்ல பாட்டுங்க அது. அது மாதிரி., ஆளு கொஞ்சம் வித்தியாசமா இருந்தாரு, ஆனால் குரல்?., அவ்வளவு நல்லா இருந்துது. எங்க வீட்டுக்கு முன்னாடி எல்லாரும் சுத்தி நின்னுக்கிட்டு பாட்டுப் பாடச் சொல்லி கேட்டு ரசிச்சுக் கிட்டு இருந்தோம். அவரும் சளைக்காம பாடிட்டு இருந்தாரு., இடையே சில சமயம் அவரது குரல் கம்முவதை வீட்டிற்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்த எங்கள் ஆயா கேட்டுவிட்டு., ஏம்பா ,.. ஏதாவது சாம்பிடுறியா?. எனக் கேட்க., அவர் கண்கள் மல்கி 'அம்பிகே., தாயே.. ' என எங்க ஆயாவைப் பார்த்து பாடத் தொடங்கினார்.

said...

என்ன ஜி ரா விஜய டி ஆர் வீடியோ பாத்த எஃபெக்ட்ல பழையப் பதிவ தூசி தட்டிங்க போல?

said...

என்ன மிகவும் கவர்ந்த திரையுலகப் புள்ளிகளில் டி.ஆரும் ஒருவர்!

ஒருதலைராகம் படம் தமிழ்ப்படவுலகின் ஒரு திருப்புமுனை என்று சொல்லுமளவுக்கு, இன்று கொடிகட்டிப் பறக்கும் பலருக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர்.

தன் தனித்தனி திறமைகளால் அந்தத் துறைகளில் மட்டும் முன்னுக்கு வந்தவரை விட அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர் அவர்.

இப்போது விஜய் டிவியிலும் 'நியாங்கள் கேட்கிறோம்' என்னும் தொடரில் குடும்ப வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக வந்து கலக்குகிறர்!

"உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே-அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே"
என்ற அற்புத வரிகளின் சொந்தக்காரர்!

said...

// எங்க வீட்டுக்கு முன்னாடி எல்லாரும் சுத்தி நின்னுக்கிட்டு பாட்டுப் பாடச் சொல்லி கேட்டு ரசிச்சுக் கிட்டு இருந்தோம். அவரும் சளைக்காம பாடிட்டு இருந்தாரு., இடையே சில சமயம் அவரது குரல் கம்முவதை வீட்டிற்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்த எங்கள் ஆயா கேட்டுவிட்டு., ஏம்பா ,.. ஏதாவது சாம்பிடுறியா?. எனக் கேட்க., அவர் கண்கள் மல்கி 'அம்பிகே., தாயே.. ' என எங்க ஆயாவைப் பார்த்து பாடத் தொடங்கினார். //

பாத்தீங்களா? அவரோட தேவையறிஞ்சவங்க அந்தம்மாதான். அதுனாலதான் அவங்கள அம்பிகையாவே பாத்திருக்காரு பாணரு.

said...

// சிநேகிதன் said...
கவலைப்படாதீர்கள், அடுத்த வாரம் முதல் ஞாயிறு சன் டிவியில் டிஆரின் உணர்ச்சிபிழம்புகளை கண்டுகளிக்கலாம்.

ஆமாம், சாலமன் பாப்பையாவையும், ராஜாவையும் புறம் தள்ளி இப்போது "அரட்டை அரங்கத்தை" கலக்க வருகிறார் உங்கள் விஜய டிஆர். //

ஏங்க! அரட்டை அரங்கத்த இழுத்து மூடுறதுன்னே முடிவு செஞ்சுட்டாங்களா? உண்மையோ பொய்யோ...விசு போனப்புறம் அரட்டை அரங்கமே சரியில்லாமப் போச்சு. இன்னும் சொல்லப் போனா அரட்டை அரங்கம் பாக்குறதேயில்லை நான். ஆனாலும் அரட்டை அரங்கத்துக்கு விசுதான் சரியான ஆள்னு தோணுது.

நீங்க சொல்ற விஜய.டி.ஆர் விளம்பரத்த நேத்து சன் டீவியில பாத்தேன். ஒன்னும் சொல்றதுக்கில்லை..

said...

// அருட்பெருங்கோ said...
என்ன ஜி ரா விஜய டி ஆர் வீடியோ பாத்த எஃபெக்ட்ல பழையப் பதிவ தூசி தட்டிங்க போல? //

அதாவது....இப்ப குறிச்சொல் சேக்கலாம்னு ஒரு வசதி இருக்கே. அத நோண்டிக்கிட்டிருந்தப்போ...இது வெளிவந்துருச்சு.

said...

// SK said...
என்ன மிகவும் கவர்ந்த திரையுலகப் புள்ளிகளில் டி.ஆரும் ஒருவர்!

ஒருதலைராகம் படம் தமிழ்ப்படவுலகின் ஒரு திருப்புமுனை என்று சொல்லுமளவுக்கு, இன்று கொடிகட்டிப் பறக்கும் பலருக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர். //

ஒருதலை ராகம்....உண்மைதான். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி என்று கேள்வி.

//தன் தனித்தனி திறமைகளால் அந்தத் துறைகளில் மட்டும் முன்னுக்கு வந்தவரை விட அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர் அவர்.//

மறுக்க முடியாத உண்மை.

// இப்போது விஜய் டிவியிலும் 'நியாங்கள் கேட்கிறோம்' என்னும் தொடரில் குடும்ப வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக வந்து கலக்குகிறர்! //

இப்ப சன் டீவிக்கு வந்துட்டாராமே

// "உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே"
என்ற அற்புத வரிகளின் சொந்தக்காரர்! //

அவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். லேலேலம்பர லேலேலம்பர லேலேலம்பர ஹோய் என்ற வகைப் பாடல்கள் நிறைய இருந்தாலும் சில தமிழ் விளையாட்டுகளும் இருக்கும். ஆனால் அதெல்லாம் பழைய காலம் போல. ஆனா அவருடைய படங்களைப் பார்க்கும் துணிச்சல் இல்லை எனக்கு.

said...

எல்லா கலைகளும் கை வர பெற்ற ஒரு மகா கலைஞனை கண்டால் உங்களுக்கு கோமாளியாக தான் தெரியும்,

அது வந்தாரை வாழ வைக்கும் தமிழனின் மன நிலை


நன்றி :
அப்டிப்போடு
for

//இம்மாதிரியான விசாரிப்புகளில் அவர்கள் அவர்களது தாயைக் காண்கிறார்கள்.//

& SK .

//என்ன மிகவும் கவர்ந்த திரையுலகப் புள்ளிகளில் டி.ஆரும் ஒருவர்!//

for Positive Responses over him.


மற்றவர்களை சொல்லி குற்றமில்லை

இன்னமும் பல உள்ளங்களில் ரீங்காரமிடும் நல்ல பாடல்களை தந்த கலைஞனுக்காக

http://trajendar.blogspot.com/