Monday, June 20, 2005

Gone With The Wind (காற்றோடு போனதே)

Gone With The Wind (காற்றோடு போனதே)
எழுதியவர் : Margeret Mitchell (மார்கரெட் மிஷெல்)

பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் அச்சிடப்பட்டு விற்பனையாகும் புத்தகம் "Gone with the wind" என்றால் மிகையாகாது. படித்தவர்களுக்கெல்லாம் பிடிக்கும் கதை. இல்லை. காவியம். சற்று பெரிய புத்தகம்தான். உள்ளே இருப்பதும் பெரிய விஷயமல்லவா! அமெரிக்கர்களுக்கு மிகவும் பிரியமான புத்தம் இது. அவர்கள் பார்த்த விஷயங்களையும் நடப்புகளையும் கபடமில்லாமல் சொல்லும் புத்தகமிது.

ஒரு பெண் ஒருவனை மனதில் நினைத்து விட்டால், பிறகு அவனை எந்தச் சூழ்நிலையிலும் மறக்க மாட்டாளென்று கூறுவார்கள். அது எவ்வளவு உண்மையோ தெரியாது. ஆனால் இந்தக் கதையின் கதாநாயகி ஸ்கார்லெட் ஓ ஹாரா (Scarlet O' Hara) அதற்கு இலக்கணமாக இருக்கிறார். எத்தனையோ இழப்புகள், திருமணம், குழந்தை, போர், உழைப்பு என்று நூறு பிரச்சனைகளுக்கு இடையிலும் முதல் காதலை மூளைக்குள்ளேயே மூட்டம் போட்டு வைத்திருக்கும் கதாபாத்திரம் ஸ்கார்லெட்டினுடையது. அமெரிக்காவில் தெற்குப் பகுதியில் டாரா என்ற பண்ணை வீட்டில் பிறந்து வளர்ந்த பணக்கார இளம்பெண் ஸ்கார்லெட். விளையாட்டுப் பெண். செல்லமாக வளர்ந்த பெண். காண்போரைக் கவரும் பேரழகு. அதில் அவளுக்கு பெருமையும் கர்வமும் உண்டு. இரண்டு தங்கைகளும் அவளுக்கு உண்டு. நிறைய ஆண் நன்பர்கள். அவளை மனதில் விதைத்தவர் பலர். ஆயினும் அவள் மனதைத் தைத்தவன் ஆஷ்லே (Ashley). அவனுக்கும் அவனது முறைப்பெண் மெலனிக்கும் (melanie) திருமணம் உறுதியாகிறது. பதறிய ஸ்கார்லெட், அவனிடம் காதலை வெளிப்படுத்துகிறாள். அந்தோ பரிதாபம். காதல் மறுக்கப்படுகிறது. பதினேழு வயது பெண்ணின் உள்ளம் உடைக்கப்படுகிறது. கதறிய பெண்ணின் காதல் உதறப்படுகிறது. ஸ்கார்லெட்டும் ஆஷ்லேயும் பேசுவது ரெட் பட்லர் (Rhett Butler) என்பவனின் காதில் விழுந்து விடுகிறது. ஸ்கார்லெட்டின் இரகசியம் அவனுக்குத் தெரிந்து போனதே!

ஏமாற்றத்தில் உண்டான தடுமாற்றத்தில் மெலனினின் அண்ணன் சார்லஸை திருமணம் செய்கிறாள். அஷ்லேயும் மெலனியை மணந்து கொள்கிறாள். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடிக்கிறது. சார்லஸ் இறக்கிறான். அவளுக்கு குழந்தையும் பிறக்கிறது. அட்லாண்டாவில் சார்லஸின் வீட்டில் தங்கியிருக்கிறாள் ஸ்கார்லெட். அவளுடன் மெலனியும். மெலனியின் வேறு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். ஆஷ்லேயோ போர்க்கைதியாக எதிரியிடத்தில். இதற்கிடையில் ஸ்கார்லெட்டுடனும் மெலனியுடனும் நன்றாக பழகுகிறான் ரெட் பட்லர். அவனை வேறு யாருக்குமே பிடிக்கவில்லை. போரில் தெற்கு அமெரிக்கவினர் பின்வாங்குகிறார்கள். பீரங்கி ஒலிகளுக்கு நடுவில் மெலலினுக்கு குழந்தை பிறக்கிறது. அவர்கள் டாராவிற்குத் தப்பித்துச் செல்ல உதவுகிறான் ரெட். ஆனால் வழியிலேயே அவர்களை விட்டுவிட்டு போரில் கலந்து கொள்ள போய்விடுகிறான்.

அன்னையின் மடி தேடி ஒரு வழியாக டாராவிற்கு வருகிறார்கள். அங்கேயும் அதிர்ச்சி. ஆம். எதிரிகள் எல்லாப் பண்ணை வீடுகளையும் பண்ணைகளையும் அழித்திருக்கிறார்கள். டாராவின் வீடு மட்டும் தப்பித்திருக்கிறது. மகிச்சியோடு டாராவிற்குள் நுழையும் ஸ்கார்லெட்டிற்கு அதிர்ச்சி. ஆம். ஸ்கார்லெட்டின் தாய் நிமோனியாவில் இறந்திருக்கிறாள். தந்தை சித்தம் கலங்கியிருக்கிறார். இரண்டு தங்கைகளும் நோயின் பிடியில். வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்த சில கருப்பர்கள் வேறு இருக்கிறார்கள். ஆனால் பொறுப்பானவர் யாரும் வீட்டில் இல்லை. ஏன்! ஒன்றுமே இல்லை. உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை. அவளது தோள்களில் சுமை இறங்குகிறது. அதையும் திறம்பட சமாளிக்கிறாள். விளையாட்டு ஸ்கார்லெட் பொறுப்புள்ளவளாக மாறுகிறாள். இப்போது மெலனியையும் அவளது குழந்தையையும் காப்பாற்றும் பொறுப்பு வேறு. போர் முடிவுக்கு வருகிறது. எதிரிகளின் கட்டுப்பாட்டில் இப்போது அவர்களது பகுதி. அவர்களது குழறுபடிகள். அப்பப்பா! மென்மேலும் நெருப்புக் கனல்களாய் துன்பங்கள். அவளை மேலும் உறுதியாக்குகிறது அது. அத்தனையும் தாண்டி படிப்பவர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிறைகிறாள் ஸ்கார்லெட்.

அவள் ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் வேளையிலும் காலுக்கு கீழே நிலம் நழுவுவது போல அடுக்கடுக்காய் பிரச்சனைகள். அத்தனை சோதனைகளிலும் சர்ச்சைக்குரிய வகையில் முடிவுகளை எடுத்து தீர்வு காணுகிறாள். பெண்ணியம் பேசியே பொழுதைப் போக்காமல் புரிய வைக்கிறாள் ஸ்கார்லெட். நவகிரகங்களானாலும் நடுவிலிருப்பது சூரியன் என்றால், இந்தக் கதையின் சூரியன் ஸ்காட்லெட். அவளைச் சுற்றியே எல்லாம் இயங்குகின்றன.

இந்தக் கதையின் மற்றொரு சிறப்பு, போரின் கொடுமைகளையும் அதன் பின்விளைவுகளையும் நெஞ்சை உலுக்கும் விதத்தில் சொல்லியிருப்பது. போரின் விளைவாக எப்படியெல்லாம் அவர்களது பழக்கவழக்கங்கள், உணவுகள், தொழில்முறைகள், சம்பிரதாயங்கள் எல்லாம் மாறுகின்றன என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளார் மார்கரெட் மிஷெல். உலகத்தின் பல நாடுகளின் மீது போர் தொடுக்கும் அமெரிக்கா அவர்களது உள்நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நடந்தவைகளை ஒரு முறையேனும் நினைத்துப் பார்க்க வேண்டும். அல்லது இந்தக் கதையை ஒரு முறையேனும் படித்துப் பார்க்க வேண்டும். நீங்களும் நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் இந்தக் கதையை படியுங்கள். இந்திய மதிப்பில் ரூபாய் நூற்று ஐம்பதிற்கு இந்தப் புத்தகம் கிடைக்கிறது. வாசித்து நேசிக்க வேண்டிய புத்தகம்.

இந்தக் கதையின் ஆசிரியை மார்கரெட் மிஷெலைப் பற்றியும் சுவையான தகவல்கள் உள்ளன. ஆயிரத்து தொள்ளாயிரமாம் ஆண்டு அட்லாண்ட்டாவில் பிறந்தவர் மார்கரெட் மிஷெல். அவரது இருபத்தியிரண்டாவது வயதில் பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கிய அவர், Gone with the wind-ஐ எழுதத் தொடங்கியது 1926-இல். அதுவும் குதிரையேற்ற பயிற்சியின் போது கீழே விழுந்ததால் கிடைத்த கட்டாய ஓய்வின் போது. மார்கரெட் மிஷெலில் உயரம் ஐந்தடிக்கும் குறைவு. இந்தக் கதையை அவர் எழுதிய தாள்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்குமாம். கதை எழுதி கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களுக்குப் பிறகுதான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு அந்தப் புத்தகம் பெற்ற புகழை உலகே அறியும். புத்தகம் வெளியான மூன்று ஆண்டுகளிலேயே திரைப்படமாகவும் எடுக்கப் பட்டது. அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. 1946-ல் சாலையைக் கடக்கும் போது ஒரு கார் மோதி இறந்தார் மார்கரெட்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இறுதியில் நடந்த உள்நாட்டுப் போரினால் அமெரிக்காவின் பண்பாடும் கலாச்சாரமும் பெரும் மாற்றம் கண்டது. குறிப்பாக அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள் முழுவதுமாக புரட்டிப் போடப் பட்டன. பேரிழப்பும் சீரழிவும் உள்ளத்தை உருக்குபவை. பெரிய பண்ணைக்காரர்களும் தொழிலதிபர்களும் பட்டாணி விற்கும் நிலைக்கு ஆளானார்கள். வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்கும் இடையே இருந்த உறவு முறைகள் மாறின. பண்ணையில் வேலைக்கு கருப்பர்களை வாங்கிக் கொண்டிருந்த நிலைமாறி, ஒருவிதமான திடீர் சுதந்திரம் கருப்பர்களுக்குக் கிடைத்தது. ஆனால் தவறான வேளையில். தவறான வகையில். மிகவும் கட்டுப்பாடான வெள்ளை அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் பண்பாட்டுச் சீரழிவு புகுந்தது. விலைமாதர்களும் திருடர்களும் பெருகினர். சலூன்கள் என்றழைக்கப்படும் கேளிக்கை விடுதிகள் பெருகின. வண்ணம் பூசி முகத்தழகைக் கூட்டிக் காட்டுவது தவறாக கருதப் பட்டது என்ற நிலை மாறியது. பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பதும் கடினமானது. பல வீடுகளில் பெண்கள் திருமணமாகாமலே வாழும் நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளையெல்லாம் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் gone with the wind.

மார்கரெட் பிறந்த சமயத்தில் உள்நாட்டுப் போர் முடிந்து அமைதி திரும்பிக் கொண்டிருந்தது. போர்க்காலத்தில் தனது தந்தை பட்ட பாட்டை அடித்தளமாக வைத்து எழுதினார் மார்கரெட். அவரது உறவினர்களும் நண்பர்களும் கொடுத்த தகவல்களும் விவரங்களும் கதையை முழுமையாக்கின. அட்லாண்டாவிலேயெ பிறந்து வளர்ந்தவராதலால், கதையில் அந்த ஊரைப் பற்றி சொல்லும் பொழுது சிறப்பாகவும் முழுமையாகவும் சொல்லியிருக்கிறார். பெண்கள் தொழில் செய்வது கேவலமாக கருதப் பட்ட நிலை மாறி பெண்களாலும் தொழில் செய்ய முடியும் என்று நிரூபிக்கப் பட்டதும் இதே காலகட்டத்தில்தான்.

இந்தக் கதையைப் பற்றி இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டு போகலாம். அவ்வளவு சரக்குள்ள கதை. படிக்கச் சிறந்த கதை. இதில் வரும் கதாபாத்திரங்கள் நமது உள்ளங்களை கொள்ளை கொள்ளுவது மற்றுமல்ல, நமக்குள்ளே ஒரு பகுதியாகி விடும் தன்மையும் பெற்றவை. படியுங்கள். படித்து விட்டு சொல்லுங்கள். அசைபோடத் தோதான கதை.

9 comments:

said...

1000+ pages of pure entertainment..

I have read this at least 20 times!

BTW, Melanine illai - Melanie Wilkes.

Even small Characters like Merriweather, Pittypat, Tarleton Twins stays with out heart.. ever..

thanks for the post.

said...

thanks suresh, you are right the name is melanie. i didnt read it again before posting :-)

கருத்துக்கு நன்றி மூர்த்தி.

அன்புடன்,
கோ.இராகவன்

said...
This comment has been removed by a blog administrator.
said...

நன்றாக அறிமுகம் கொடுத்து இருக்கிறீர்கள். 'காற்றோடு போனதே' படத்தை பற்றி தான் அறிந்திருந்தேன். ஹாலிவுட்டில் புத்தகங்களிலிருந்து படம் வருவது சகஜமென்றாலும், இதைப் பற்றி அறியாமல் இருந்து விட்டேன். என்னுடைய படவரிசையில் இருந்த இந்த படத்தோடு கதையும் படிக்க தூண்டிவிட்டீர்களே. நன்றி.

said...

பார்வையும் பதிவும் நன்றாயிருக்கிறது றாகவன்.
புத்தகம் எனது நகர வாசிகசாலையில் கிடைக்குமா எனப் பார்க்கிறேன்.

said...

கண்டிப்பாக இந்தக் கதையைப் படிக்க வேண்டும் விஜய். அமெரிக்க நாகரீகத்தின் பழைய பழக்கங்கள் முதலில் பிடிபடாமல் பிறகு ருசிக்கும். திரைப்படமும் நன்றாக இருக்கும். கொஞ்சம் பெரிய படமென்றாலும் நன்றாக இருக்கும்.

சந்திரவதனா, புத்தகம் கிடைத்தால் படிக்காமல் விடாதீர்கள்.

said...

சுவையான பதிவு! நீளம் பெரிதானாலும் படம் அலுப்படையச் செய்யவில்லை.

said...

I didn't read this book. But i watched the movie version of this book which was released in, i think 1938. So far i didn't understand the theme of the movie.
your article makes me want to read the novel.

said...

இந்தப் படத்துக்கு இவ்வளவு பின்புலமா.

எங்கள் மாமியார் ரெட்பட்லரின் (Clark gable? )தீவிர ஃபான்.
அவன் கண்ணிலதான் எத்தனை போக்கிரித்தனம் என்று அதிசயப்படுவார்.
என்றும் நிலைத்து நிற்கும் காவியம்.
நீங்கள் கதையைக் கொடுத்திருக்கும் விதம் நாவலைப் படிக்க வேண்டும் என்ற நினைப்பைத் தூண்டுகிறது.நன்றி ராகவன்.