Sunday, April 02, 2006

2. ஆனைய உரிச்சு..............

புதுசா ஒரு ஐடியா வந்ததுன்னு போன பதிவுல சொன்னேன். அத ஒடனே பெஞ்சமினுக்கும் ஃபோன் போட்டுச் சொன்னேன். அவரும் அது நல்ல திட்டமுன்னு ஒத்துக்கிட்டாரு. அதை நண்பர்களும் முழு மனசோட ஒத்துகிட்டாங்க. நானும் எல்லாரையும் தூங்கப் போகச் சொல்லீட்டு செல்போன்ல காலைல அஞ்சர மணிக்கு அலாரம் வெச்சேன்.

புதுத்திட்டம் என்னன்னா கோயமுத்தூர்ல எறங்கிக்கிறது. காலைல ஆறு மணிக்குப் போய்ச் சேரும். சேந்ததும் குளிச்சிட்டு செஞ்சிட்டு வண்டியப் பிடிச்சி சுத்திப் பாக்கலாம்னு திட்டம். பாத்துட்டு ராத்திரி புறப்பட்டு மதுரைக்கோ இல்லைன்னா நேரடியா கோயில்பட்டிக்கோ போயிர்ரது. அப்புறம் வழக்கம் போல கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலி, திருச்செந்தூர்னு போயிரலாம்னு சொன்னேன். நாகர்கோயில் இல்லைன்னாலும் கோயமுத்தூர் வந்ததுல எல்லாரும் ஒரு திருப்திதான்னு வெச்சுக்கோங்களேன்.

அதுல பாருங்க ஒரு நண்பனோட சொந்தக்காரங்க கோயமுத்தூர்ல இருக்காங்களாம். அதுனால அவங்ககிட்ட எங்கெங்க போறதுன்னு கேட்டுக்கிற முடிவு செஞ்சோம். அஞ்சரைக்கு அலாரம் வெச்சேனே ஒழிய தூக்கம் ஒழுங்கா பிடிக்கலை. தொடக்கமே இப்பிடி இருக்கே முழுக்க எப்படி இருக்குமோன்னு கொஞ்சம் கலக்கம். அப்பனே முருகா...எது எப்படியோ திருச்செந்தூர்ல மொட்ட போடனும்னு வேண்டிக்கிட்டேன். அரமணிக்கு ஒரு வாட்டி எந்திரிச்சி மணி பாத்தேன். ஈரோடு வந்ததுக்கு அப்புறம் தூக்கம் வரல. எந்திரிச்சி உக்காந்துகிட்டு வெளிய பாத்துக்கிட்டிருந்தேன்.

அப்பதான் தெரிஞ்சது இன்னும் ரெண்டு பேரு தூக்கமில்லாம இருந்தது. ரெண்டு பேரும் பெர்த்துல இருந்து இறங்கி வந்து கூட உக்காந்துகிட்டாங்க. அவங்களுக்கு எனக்குத் தெரிஞ்ச இடங்களையும் வழிகளையும் பத்திச் சொன்னேன். பேசிக்கிட்டேயிருக்கிறப்ப கோயமுத்தூர் வந்திருச்சி. படபடன்னு எறங்கி ஸ்டேஷன விட்டு வெளிய வந்தோம். பக்கத்துலயே ஒரு லாட்ஜ்ல ரெண்டு ரூம் போட்டோம். யாருக்கும் தூக்கமும் இல்லை. நண்பன் அவனோட சொந்தக்காரங்க வீட்டுக்குப் போன் போட்டு சுத்திப் பாக்க வெவரம் கேட்டான். தகவல்கள் கொஞ்சம் வந்தது.

சரி. குளிச்சிட்டு காம்ளிமெண்ட்ரி பிரேக்பாஸ்ட்ட கட்டு கட்டீட்டு குவாலிஸ் புக் பண்ணலாம்னு நெனச்சோம். ஆனா அதுக்கு அவசியம் வெக்காம நண்பனோட அக்காவே ஒரு வண்டியை ஏற்பாடு பண்ணி அவங்க அண்ணனையும் கூட அனுப்பி வெச்சாங்க. வாழ்க வளமுடன்.

அதுக்குள்ள எல்லாரும் குளிச்சி தயாரா இருந்தாங்க. அவங்கள சாப்பிடக் கூட்டீட்டுப் போனேன். பொங்கலும் இட்டிலும் தேங்காய்ச் சட்டினி, தக்காளிச் சட்டினி சாம்பாரோட பரிமாறுனாங்க. நல்லா இருந்தது. அதுக்குள்ள அந்த அண்ணனும் வண்டியோட வந்துட்டாரு. அவரே ஒரு திட்டமும் வெச்சிருந்தாரு. நேரா பேரூர் கோயில். (மொதல்ல பத்மநாபபுரம் அரண்மனைன்னு முடிவு செஞ்சிருந்தோம். ஆனா அது தானா கோயிலாயிருச்சு. அதுதான் ஆண்டவன் விருப்பம் போல.) அப்புறமா கோவைக்குற்றாலம். பெறகு பூண்டி கோயில். (இன்னொரு கோயில்). அப்புறம் ஈஷா தியான மண்டபமாம். (இந்தப் பேரை எங்கயோ கேட்டிருந்தேன். அவ்வளவுதான்.). அப்புறம் மருதமலையாம். (என்னடா என்னைக் கடைசியா பாக்க வர்ரியான்னு மொத நாள்ளயே முருகன் முந்திக்கிட்டாரோ என்னவோ!).

சரீன்னு எல்லாரும் வேண்டிய துணிமணிகளையும் தண்ணி பாட்டில்களையும் எடுத்துக்கிட்டு வண்டீல ஏறுனோம். பெங்களூர்க்காரங்களான எங்களுக்கு கோயமுத்துரோட துப்புரவான ரோடுகளும் மிகவும் மென்மையான தூய காத்தும் ரொம்பச் சுகமா இருந்தது. ரசிச்சிக்கிட்டே இருக்கும் போது பேரூர் கோயில் வந்திருச்சி.


வண்டீலயே செருப்ப விட்டுட்டு கீழ எறங்குனோம். கோயில் பழைய கோயில். வழக்கமான கல்கட்டிடம். பேரூர் பட்டீசுவரர் கோயில்னு எழுதீருந்தது. வாசல்லயே ஒரு பெரிய தேரு. வாசல்ல இருந்து நேராப் பாத்தாலே சிவலிங்கம் தெரிஞ்சது. இருட்டு அறைக்குள்ள சிவலிங்கத்துக்குப் பின்னாடி வட்ட வடிவமா சிறுவிளக்குகளை அலங்காரமா வெச்சிருந்தாங்க. அவ்வளவுதான் கருவறை வெளிச்சம். நம்ம குடியிருந்த கருவறைக்குள்ளயும் இருட்டுதான. அதுல இருந்து வெளிச்சத்துக்கு வர்ரதுதான பிறப்பு.

வெள்ளிக்கிழமையானலும் கோயில்ல கூட்டம் குறைச்சலா இருந்தது. வாய் விட்டு நமச்சிவாய வாழ்க செய்யுளைச் சொன்னேன். தீபாராதனை காட்டி மணியடிக்கும் போது கண்கள் மூடின. கண்ணுக்கு முன்னாடி இருந்த எல்லாம் மறஞ்சு ஒரு பரவசம். சிவசிவான்னு சொல்லித் திருநீறு வாங்கிப் பூசிக்கிட்டு கோயிலைச் சுத்தி வந்தோம். கோயில் முழுக்க சிற்ப அற்புதங்கள். ஒவ்வொன்னயும் விளக்கிச் சொல்ல ஒவ்வொரு பதிவு வேணும். எடுத்துக்காட்டுக்கு ஒன்னு ரெண்டு சொல்றேன்.

கோயில்ல ஒவ்வொரு தூண்லயும் ஒவ்வொரு டிசைன். அதாவது ஒரு தூணின் இரண்டு பாகங்களை இணைக்கும் இடைவெளியில் செய்திருக்கும் வேலைப்பாடுகள் ஒரு தூணில் இருப்பது போல மறுதூணில் இல்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை. அடுத்து பேரூர் கோயிலுக்குப் போகின்றவர்கள் சரியாகப் பாருங்கள்.

அதே மாதிரி இன்னும் பல சிற்ப அற்புதங்கள். ஆனையுரிபோர்த்தவர் என்று ஒரு சிலை. எதுக்க வந்த ஆனையைக் கொன்னு அதோட தோலச் சிவபெருமான் போத்திக்கிற காட்சி. இதச் சிற்பமாச் சொல்லனும். எப்படிச் சொல்றது. ஆனையக் குப்புறத்தள்ளி அதோட தலைல ஏறி நின்னுக்கிட்டு வயித்தப் பிடிச்சிக் கிழிச்ச தோலை ரெண்டு கையாலயும் விரிச்சுப் போத்திக்கிட்டா! இப்ப ஆனையோட வாலு சிவனோட தலைக்கு மேல போயிருமில்லயா? கிழிச்ச தோலோட ரெண்டு பக்கத்துலயும் ரெண்ரெண்டு கால்கள் தெரியுமில்லையா? இதக் கற்பனைல நெனச்சுப் பாருங்க. ஆனைத்தலை மேல சிவன். ரெண்டு கையையும் விரிச்சுத் தோலைப் பிடிச்சிருக்காரு. தலை கீழ இருக்கிறதால வாலு மேல இருக்கு. பாத்த கண்ண எடுக்க முடியல. அவ்வளவு அழகான சிற்பம். போர்வ மாதிரி விரிஞ்ச தோல்ல ஒரு மேடு பள்ளம் கெடையாது. அவ்வளவு நேர்த்தி.

அத விட இன்னொன்னு கண்டிப்பாச் சொல்லனும். கூரைல இருக்கிற சிற்ப அலங்காரம். தாமரப் பூ பெரிசா விரிஞ்சிருக்கு. கீழ இருந்து பாத்தா தலைகீழா தெரியும். கிளிகள் அந்தத் தாமரைப் பூவோட இதழ்கள்ள தலைகீழா உக்காந்துக்கிட்டு பூவுக்குள்ள கொத்திக்கிட்டு இருக்குற மாதிரி சிற்பம். ரொம்ப நுணுக்கமா...அழகா...நேர்த்தியா..திறமையா செஞ்சிருக்காங்க. ஆனா பாருங்க...அப்பேற்பட்ட கற்சிற்பத்துல பெயிண்ட் அடிச்சு வெச்சிருக்காங்க. இயற்கை அழகை மறைக்கிறதுல தமிழனை மிஞ்சிக்கிறதுக்கு ஆளில்லை.

இந்தத் தாமரைப் பூவச் சுத்தி பாம்புக படமெடுத்தாப்புல இருக்கு. அந்தப் பாம்புகள்தான் கொக்கிகள். அந்தக் கொக்கிகள்ள இருந்து சங்கிலிக தொங்குது. நாலு பக்கமும் நாலு பாம்புக் கொக்கி. அந்தக் கொக்கிகள்ள கற்சங்கிலி. அந்தச் சங்கிலிகள்ள என்ன சிறப்பு தெரியுமா? ஒவ்வொரு சங்கிலியிலயும் கடைசி ரெண்டு வளையங்கள்ள அந்தச் சிறப்பு இருந்தது. கடைசி வளையம் ஆணைக் குறிக்கும் சின்னம் போல இருந்தது. வட்டத்துல அம்புக்குறி போடுவாங்களே. அந்த மாதிரி. கடைசி ரெண்டு வளையங்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்த மாதிரி தெரிஞ்சது.

இன்னும் நெறைய அழகான சிற்பங்கள். சொல்லச் சொல்ல நேரம் பத்தாது. சிவபெருமானையும் பச்சை நாயகியையும் தண்டாயுதபாணியையும் கும்பிட்டுட்டு வெளிய வந்தோம். ஆளுக்கொரு எளநி குடிச்சிட்டுக் கோவைக் குற்றாலத்துக்குப் பொறப்பட்டோம். போற வழியிலதான் நடிகர் சூர்யாவோட சொந்த ஊரான மாதம்பட்டி இருக்கு. அதத் தாண்டிக் கோவைக் குற்றாலத்து அடிவாரத்துக்குப் போனோம்.

நாங்க போன நேரம்.....யாரையும் உள்ள விடல. அது ஒரு ஆனைப் பிரச்சனை.........

தொடரும்.....

28 comments:

said...

ராகவன்,

நீங்க போன இடமெல்லாம் அருமையான அற்புதமான இடங்கள்.பேரூர் கோயில் தேரை பார்த்ததும் பழைய ஞாபகம் எல்லாம் வந்துவிட்டது.

said...

இராகவன், இந்தப் பதிவைப் பார்த்தவுடன் நான் சி.ஐ.டியில் படித்த இரண்டு வருடங்கள் நினைவுக்கு வந்தன. அடிக்கடி பேரூருக்கும் மருதமலைக்கும் சென்று வந்தேன் அப்போது. பேரூர் சிற்பங்கள் பெரும் புகழ் பெற்றவை. நீங்கள் சொன்ன ஆனையுரி போர்த்திய சிலையிருக்கும் அதே மண்டபத்தில் இருக்கும் மற்ற சிலைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறை போகும் போதும் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொன்றும் அருமையோ அருமை. முதல் இரண்டு தூண்களில் இருக்கும் யானைமுகனையும் ஆறுமுகனையும் பார்த்தீர்களா? இருவரும் நேரில் நிற்பது போல் இருக்கும். கண்களில் நீர் நிறைந்து விடும். அதே மாதிரி நேரெதிரே இல்லாமல் ஒரு தூண் விட்டு எதிர் எதிர் பக்கங்களில் ஊர்த்துவ தாண்டவரும் பத்ரகாளியும் இருப்பார்கள். நேரே இருந்து பார்த்தால் அன்னை மிகக் கோபத்துடன் இருப்பது போலவும் ஊர்த்துவ தாண்டவரின் அருகில் இருந்து பார்த்தால் அன்னை ஐயன் தன்னை தோற்கடித்துவிட்டாரே என்று வெட்குவது போலவும் அன்னையின் முகபாவம் தோன்றும். அருமையிலும் அருமை அது.

said...

நீங்கள் பட்டியல் போட்டிருக்கும் இடங்களில் ஏறக்குறைய எல்லா இடங்களுக்கும் அண்மையில் (2004ல்) கோவை சென்ற போது குடும்பத்துடன் போய் வந்தேன். பேரூர், கோவை குற்றாலம், ஈஷா தியான மண்டபம் (தியான லிங்கம்), மருதமலை போய்வந்தோம். பூண்டி செல்லவில்லை. தியான லிங்கம் போனது எப்படி இருந்தது? அடுத்தப் பதிவில் சொல்லப் போகிறீர்களா?

said...

கல்லினால் செய்த சங்கிலியும் அற்புதம். ஒவ்வொரு வளையமும் தனித்தனியே செய்து கோர்த்தது போல் தனியாக மேலும் கீழுமாய் நகர்த்திப் பார்க்கலாம். பார்த்தீர்களா?

தண்டாயுதபாணி அற்புதமாய் இருப்பாரே? சுற்றி வரும்போது ஆஞ்சனேயர் தனியாய் வீற்றிருப்பாரே? நினைவுகள் பொங்கி வருகின்றன. :-)

said...

ராகவன்,

அற்புதம். ஆமாம், அங்கே மற்ற சிலைகளையெல்லாம் பார்க்கலையா? அழகான ரதி. கைவிரல் நகம் உள்பட அழகோ அழகு.
ஆனா நம்ம ஜனங்க இதோட அருமை தெரியாம சிற்பங்களைச் சிதைச்சு மொண்ணையா ஆக்கிடறாங்க. அதுக்காக
கம்பிக் கவசம் போட்டு சிற்பங்களை ஜெயிலிலே போட்டுருந்தாங்க, நான் முந்தி பார்த்தப்ப(-:

நம்ம காசி அங்கேதானே இருக்காரு. அப்படியே ஒரு வலைப்பதிவர் மாநாடு நடத்தியிருக்கலாமே.

அதென்னமோப்பா. ஆனையை உரிச்சதை நினைச்சா கஷ்டமாப்போச்சு
என்னதான் அந்த அரக்கன் யானை வடிவத்துலே வந்தான்னாலும்(-:

said...

அன்பு சிவா!

பேருர் மற்றும் கோவில் பற்றி உங்க பிளாக்- ல பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன்.
என் தாத்தா/பாட்டி- யின் ஊர் (நான் கோவையில் படித்தபோது இருந்த ஊர் ...... இப்ப மாமனார் ஊர்)

இந்த வாரம்.... கோவை வாரமா?
சூப்பர் சூப்பர்மா......
சீக்கிரம் எழுதுங்க...

தியாக்

said...

ஆனை உரிச்சதைப் பத்தி இவ்ளோ விளக்கமா எழுதினதுனால தான் உங்களைக் கோவைக் குற்றாலத்துல உள்ள விடலயா??

said...

குளிச்சிட்டு செஞ்சிட்டு //

குளிச்சிட்டு சரி.. அதென்ன செஞ்சிட்டு..

தூத்துக்குடி பாஷை?

தூ..டி யில என்ன சத்தம் மூச்சையே காணோம்னு சொல்லுவாங்க. ஆரம்பத்துல ஒன்னும் புரியாது.. அதாவது என்ன ஒன்னுமே சொல்லாம இருக்கீங்களாம்.. நல்ல ஊருய்யான்னு நினைச்சுக்குவேன் :-))

said...

// ராகவன்,

நீங்க போன இடமெல்லாம் அருமையான அற்புதமான இடங்கள்.பேரூர் கோயில் தேரை பார்த்ததும் பழைய ஞாபகம் எல்லாம் வந்துவிட்டது. //

உண்மைதான் செல்வன். ஒவ்வொரு இடத்தையும் அனுபவித்து ரசித்தோம் என்றால் மிகையாகாது.

நல்ல பெரிய தேர்தான். அதுக்கடீல நின்னு ஃபோட்டோ எடுத்துக்கனும்னு நண்பன் அடம் பிடிச்சான். எடுத்துட்டோம். :-)

said...

// இராகவன், இந்தப் பதிவைப் பார்த்தவுடன் நான் சி.ஐ.டியில் படித்த இரண்டு வருடங்கள் நினைவுக்கு வந்தன. அடிக்கடி பேரூருக்கும் மருதமலைக்கும் சென்று வந்தேன் அப்போது. //

நான் கோயமுத்தூருக்குச் செல்வது இது மூன்றாவது முறை. இதற்கு முன்னும் பின்னும் கோயமுத்தூர் வழியாகச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்குப் பார்த்ததில்லை.

// பேரூர் சிற்பங்கள் பெரும் புகழ் பெற்றவை. நீங்கள் சொன்ன ஆனையுரி போர்த்திய சிலையிருக்கும் அதே மண்டபத்தில் இருக்கும் மற்ற சிலைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறை போகும் போதும் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொன்றும் அருமையோ அருமை. முதல் இரண்டு தூண்களில் இருக்கும் யானைமுகனையும் ஆறுமுகனையும் பார்த்தீர்களா? இருவரும் நேரில் நிற்பது போல் இருக்கும். கண்களில் நீர் நிறைந்து விடும். //

ஆமாம். ஆறுமோ ஆவல் ஆறுமுகனைக் காணாமல். :-) கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியன கண்டேன்.

// அதே மாதிரி நேரெதிரே இல்லாமல் ஒரு தூண் விட்டு எதிர் எதிர் பக்கங்களில் ஊர்த்துவ தாண்டவரும் பத்ரகாளியும் இருப்பார்கள். நேரே இருந்து பார்த்தால் அன்னை மிகக் கோபத்துடன் இருப்பது போலவும் ஊர்த்துவ தாண்டவரின் அருகில் இருந்து பார்த்தால் அன்னை ஐயன் தன்னை தோற்கடித்துவிட்டாரே என்று வெட்குவது போலவும் அன்னையின் முகபாவம் தோன்றும். அருமையிலும் அருமை அது. //

அடடா! இதப் பாக்காம விட்டுட்டேனே..காளியைப் பார்த்தேன். ஆனால் முக வாட்டம் பார்க்காமல் விட்டேனே...ஊர்த்துவ தாண்டவம் பார்த்தேன். ஆனா இந்த இணைப்பைப் பார்க்கலையே....

said...

// தியான லிங்கம் போனது எப்படி இருந்தது? அடுத்தப் பதிவில் சொல்லப் போகிறீர்களா? //

ஆமாம்...அடுத்தடுத்த பதிவுகளில் வரும்.

// கல்லினால் செய்த சங்கிலியும் அற்புதம். ஒவ்வொரு வளையமும் தனித்தனியே செய்து கோர்த்தது போல் தனியாக மேலும் கீழுமாய் நகர்த்திப் பார்க்கலாம். பார்த்தீர்களா? //

அது மேல தொங்கீட்டு இருந்துச்சே...அத எப்படி நகட்டுனீங்க?

// தண்டாயுதபாணி அற்புதமாய் இருப்பாரே? சுற்றி வரும்போது ஆஞ்சனேயர் தனியாய் வீற்றிருப்பாரே? நினைவுகள் பொங்கி வருகின்றன. :-) //

ஆமாம்...தண்டபாணி மிகவும் அருமை...ஆஞ்சநேயர் கோயிலும் கண்டேன். ஆனால் பாருங்க...சுவற்றில் இருந்த கல்வெட்டுகளை மறைத்துக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. ஆனேகமாக பிற்காலத்திய கூட்டுதலாக இருக்கலாம். அதை அப்பொழுதே நண்பர்களுக்கும் காட்டினேன். அவர்களும் கல்வெட்டுகளின் மேல் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு வருந்தினார்கள்.

said...

// அற்புதம். ஆமாம், அங்கே மற்ற சிலைகளையெல்லாம் பார்க்கலையா? அழகான ரதி. கைவிரல் நகம் உள்பட அழகோ அழகு.
ஆனா நம்ம ஜனங்க இதோட அருமை தெரியாம சிற்பங்களைச் சிதைச்சு மொண்ணையா ஆக்கிடறாங்க. அதுக்காக
கம்பிக் கவசம் போட்டு சிற்பங்களை ஜெயிலிலே போட்டுருந்தாங்க, நான் முந்தி பார்த்தப்ப(-: //

ஆமாம். பார்த்தேன். ரொம்ப அழகு. இப்ப கம்பியும் போட்டு கண்ணாடிக் கூண்டும் போட்டிருக்காங்க...இல்லைன்னா தமிழன் கிட்ட இருந்து கலைய எப்படிக் காப்பாத்துறது? :-))

// நம்ம காசி அங்கேதானே இருக்காரு. அப்படியே ஒரு வலைப்பதிவர் மாநாடு நடத்தியிருக்கலாமே. //

கோயமுத்தூர் போற திட்டமே இல்லாம இருந்ததே....கடைசீல போயிட்டோம்...முதல்லயே திட்டம் போட்டிருந்தா...கண்டிப்பா சந்திருச்சிருந்திருக்கலாம்.

// அதென்னமோப்பா. ஆனையை உரிச்சதை நினைச்சா கஷ்டமாப்போச்சு
என்னதான் அந்த அரக்கன் யானை வடிவத்துலே வந்தான்னாலும்(-: //

அத எழுதும் போது ஒங்க நெனப்புதான் வந்தது. பதிவுலயே எழுத நெனச்சேன். அப்புறம் வேண்டாம்...நீங்க என்ன சொல்றீங்கன்னு பாத்துட்டு சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்....

said...

// அன்பு சிவா! //

தியாக்...என்னோட பேரு இராகவன். எழுதும் போது கோ.இராகவன்னு போடுவேன். எல்லாரும் ஜிரான்னு கூப்பிடுவாங்க.

// பேருர் மற்றும் கோவில் பற்றி உங்க பிளாக்- ல பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன்.
என் தாத்தா/பாட்டி- யின் ஊர் (நான் கோவையில் படித்தபோது இருந்த ஊர் ...... இப்ப மாமனார் ஊர்) //

அப்படியா....நெறைய பேருக்குக் கோவையோட தொடர்பு இருக்குன்னு இப்பத்தான் தெரியுது. நல்ல ஊருங்க. நண்பர்கள் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது.

// இந்த வாரம்.... கோவை வாரமா? //

இந்த வாரம்....அடுத்த வாரமும் கோவை வாரந்தான். ஏன்னா...வாரத்துக்கு ஒன்னு ரெண்டு பதிவுதான் நான் போடுறது. :-)
சூப்பர் சூப்பர்மா......
சீக்கிரம் எழுதுங்க...

தியாக்

said...

// ஆனை உரிச்சதைப் பத்தி இவ்ளோ விளக்கமா எழுதினதுனால தான் உங்களைக் கோவைக் குற்றாலத்துல உள்ள விடலயா?? //

என்னைய மட்டுமா பொன்ஸ்...எங்களுக்கு முன்னாடி போன பல பேர விடல...அத ஏங் கேக்குறீங்க...அடுத்த பதிவுல சொல்றேன்...விளக்கமா....

said...

////குளிச்சிட்டு செஞ்சிட்டு //

குளிச்சிட்டு சரி.. அதென்ன செஞ்சிட்டு..

தூத்துக்குடி பாஷை? ////

இருக்கலாம் ஜோசப் சார்...பல ஊரு போய் பேச்சுத் தமிழ் கொஞ்சம் கலந்த மாதிரி இருந்தாலும்.பேச்சுக்குள்ள அப்பப்ப எட்டிப் பாக்கும்...செல நண்பர்களோட பேசும் போது...அது அங்க நிக்கி..அப்படி இப்பிடீன்னு வரும். :-) நான் தேவலாங்குறாப்புல தங்கச்சி பேசுவா...ஆனா இப்ப அவளும் கலந்தாப்புல பேசினாலும் அப்பப்ப தூத்துக்குடி வாடயடிக்கும்.

//// தூ..டி யில என்ன சத்தம் மூச்சையே காணோம்னு சொல்லுவாங்க. ஆரம்பத்துல ஒன்னும் புரியாது.. அதாவது என்ன ஒன்னுமே சொல்லாம இருக்கீங்களாம்.. நல்ல ஊருய்யான்னு நினைச்சுக்குவேன் :-)) //

நெனைக்கிறது மட்டுமா...உண்மையும் அதுதானுங்களே....சத்தம் மூச்சுக்காட்டக் கூடாதுன்னும் மெரட்டுவாங்க...நீங்க சொல்றப்போ நெனவுக்கு வருது... :-)

said...

ஜிரா,

பேரூர் கோயில் மிக அருமையான ஒரு பொக்கிஷம். கோவையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. இன்னுமொரு இடம் மருதமலை என சொல்லத்தான் வேண்டுமோ.

இத்தல புராணம் பற்றி கேள்விப் பட்டீர்களா? அழகான கதைகள் உண்டு. கோயிலிருந்து சற்று தொலைவில் பிறவா புளி, இறவா பனை என இரு மரங்கள் உண்டே. அதைப்பற்றிய கதைகள் கேட்டிருக்கிறேன்.

'ஆனைய உரிச்சு.............."' இப்படி பேர் வைச்சதுனால கோயில் யானையைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களா?

இப்படி ஊர் ஞாபகத்தை கிளப்பி விட்டுட்டீங்களே. ஹூம்...

said...

ராகவன்,

கோபாலும் அங்கே கோவையிலே அஞ்சுவருசம் படிச்சப்ப( CIT) அடிக்கடி பேரூர், மருதமலைன்னு
கொட்டம் அடிச்சுருக்கார். ச்சின்னக் கொசுவத்தியாத்தான் என்னை ஒரு முறை (30 வருசமுன்னே)
அங்கே கூட்டிட்டுப்போய் காமிச்சார்:-)

said...

ராகவன்!

நம்ம கிட்ட சொல்லாம கொள்ளாம அதெப்படி நீர் எங்க ஊருக்கு போகலாம்??!! உம்ம கூட 5 செகண்டு கா! :(

சரி விடுங்க! அப்பெல்லாம் எங்க ஊருல இருந்து யாரு வந்தாலும் மொதல்ல பேரூர்..அப்பறம் மருதமலை! எத்தனை முறை போனாலும் அந்த கற்சங்கிலிகளைத்தான் வாங்கிய பிரசாதமான அதிரசத்தையும் பெரீய முறுக்கையும் தின்னபடியே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன்! :) கல்லுல சங்கிலி செய்யறாங்கன்னா எவ்வளவு அசாத்திய பொறுமையும் கலையுணர்வும் இருந்திருக்கனும்!

said...

// ஜிரா,

பேரூர் கோயில் மிக அருமையான ஒரு பொக்கிஷம். கோவையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. இன்னுமொரு இடம் மருதமலை என சொல்லத்தான் வேண்டுமோ. //

வாங்க இலவசம். கோயமுத்தூர் உங்களுக்கும் பிடிச்ச ஊரா...ரொம்பப் பிரமாதம்...

// இத்தல புராணம் பற்றி கேள்விப் பட்டீர்களா? அழகான கதைகள் உண்டு. கோயிலிருந்து சற்று தொலைவில் பிறவா புளி, இறவா பனை என இரு மரங்கள் உண்டே. அதைப்பற்றிய கதைகள் கேட்டிருக்கிறேன். //

இல்லையே...அவசர அவசரமாக் கெளம்பிப் போனதுல ஒன்னும் சரியாக் கவனிக்கலை...பிறாவப் புளியும் இறவாப் பனையும் பாக்கலையே...அடடா! பாத்தவங்க யாராவது படம் போடுங்கப்பா!

// 'ஆனைய உரிச்சு.............."' இப்படி பேர் வைச்சதுனால கோயில் யானையைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களா? //

பாத்தேன்னு நெனைக்கிறேன். ஆனா என்னவோ சரியாக் கவனிக்கலை...ஆனா இன்னொரு ஆனையைப் பத்தி கண்டிப்பா விவரமாச் சொல்லனும். அதுக்கு இன்னும் நாலு பதிவு ஆகும்.

// இப்படி ஊர் ஞாபகத்தை கிளப்பி விட்டுட்டீங்களே. ஹூம்... //

பட்டுன்னு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊர்ப்பக்கம் போயிட்டு வாங்களேன்!

said...

// கோபாலும் அங்கே கோவையிலே அஞ்சுவருசம் படிச்சப்ப( CIT) அடிக்கடி பேரூர், மருதமலைன்னு
கொட்டம் அடிச்சுருக்கார். ச்சின்னக் கொசுவத்தியாத்தான் என்னை ஒரு முறை (30 வருசமுன்னே)
அங்கே கூட்டிட்டுப்போய் காமிச்சார்:-) //

என்ன டீச்சர்...ஒங்களுக்கும் கோயமுத்தூர் கொசுவர்த்தியா.... :-) நல்ல ஊருதாங்க. ஒரு நாள் ஒரு நிமிடமாப் போயிருச்சு.

said...

Nice pic of Perur temple. Brings back memories of the the few years I spent there. Especially listening to Mannava Mannava(Walter Vetrivel) song while waiting for a bus with NSS friends in front of the bakery facing the temple :-)

said...

//பட்டுன்னு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊர்ப்பக்கம் போயிட்டு வாங்களேன்!//

நக்கலா? ரெண்டு நாள் லீவுல போயிட்டு வர தூரத்திலேயா இருக்கேன். ரெண்டு நாள் லீவுலேயெல்லாம் மருதமலை மாமணியைப் போய் பார்க்க முடியாதே. கூடல் குமரனைத்தான் பார்க்க முடியும்ன்னு சொல்ல வந்தேன். ஆனா அதுக்கும் வழியில்லாமப் பண்ணிட்டாரே. :)

said...

ராகவன்,

தவறுக்கு மன்னிக்கவும்.

சிவ சிவா! :-))

தியாக்

said...

அடுத்த பாகத்தை சீக்கிரமா எழுதுங்க.. இந்த ஆனையை உரிக்கிற சோக தலைப்ப உங்க பதிவு ஆரம்பத்துல பாக்க கஷ்டமா இருக்கு...

said...

// Nice pic of Perur temple. Brings back memories of the the few years I spent there. Especially listening to Mannava Mannava(Walter Vetrivel) song while waiting for a bus with NSS friends in front of the bakery facing the temple :-) //

வாங்க talkative man...ரொம்பப் பேசுவீங்களோ? ஒங்க பிளாகுக்கு வந்து பாத்தா தெரிஞ்சிட்டுப் போகுது.

கோவை பல பேர இழுத்திருக்கு. ஒங்களையும் பேரூர் இழுத்திருக்கு பாத்தீங்களா...ஒருவேள இதுதான் கோயமுத்தூர்க் குசும்போ!

said...

// ராகவன்,

தவறுக்கு மன்னிக்கவும்.

சிவ சிவா! :-))

தியாக் //

சிவ சிவா!

said...

// அடுத்த பாகத்தை சீக்கிரமா எழுதுங்க.. இந்த ஆனையை உரிக்கிற சோக தலைப்ப உங்க பதிவு ஆரம்பத்துல பாக்க கஷ்டமா இருக்கு... //

பொன்ஸ் கொஞ்சம் வேலை. வெள்ளிக்கிழமை அடுத்த பாகத்தப் போட்டுர்ரேன்.

said...

அட நம்ம ஊருக்கு வந்துட்டுபோயி இவ்ளோ பெரிய கட்டுரையா எழுதியிருக்கீங்க. முன்னமே சொல்லியிருந்தா கட்டவுட் பேனர் எல்லாம் வெச்சு அசத்தியிருக்கலாம்.
பரவாயில்ல உங்கள மாதிரி பெரியவங்க வந்ததுனால எங்க ஊரு புகழ் வலைஉலகம் முழுக்க பரவுது.