Friday, April 21, 2006

5. கோவைக் குற்றாலமும் ஜான் அப்ரஹாமும்

காலைல கோவைக் குற்றாலத்துக்குப் போகைல உள்ள விடல....எல்லாம் ஆனைக பண்ணுன அட்டகாசம்னு சொன்னேன். அப்புறமா பூண்டி முருகன் கோயில், வெள்ளியங்கிரி மலை, ஈஷா தியானலிங்கம் எல்லாம் பாத்துட்டு திரும்ப வரும் போது எங்கள உள்ள விட்டாங்க. ஜீப்பிலேயே கொஞ்ச தூரம் உள்ள போனா வண்டிகள எல்லாம் நிப்பாட்ட எடம் இருந்தது. அங்க வண்டியப் போட்டுட்டு ஒன்ற மைலு உள்ள நடக்கனும்.

வண்டிக நிக்குற எடத்துல ஒரு பெரிய மரத்தை வெட்டி அதோட அடி மட்டும் இன்னும் இருந்துச்சு. பள்ளிக்கூட நெனப்புல அதுல ஏறி நின்னுக்கிட்டு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். :-)

அப்புறம் நடப்பாதைல எல்லாரும் நடந்து போனோம். நல்ல வேளைக்குத் தண்ணி பாட்டில்களும் நொறுக்குத் தீனிகளும் வாங்கி வெச்சிருந்தோம். ஆனா போறப்போ எங்களுக்குத் தேவைப்படல. நாங்க போறப்போ நெறைய பேரு திரும்ப வந்துகிட்டு இருந்தாங்க. நாலு மணிக்கு மேல அங்க இருக்க விட மாட்டாங்க. அதுனால மொதல்ல போனவங்க குளிச்சிட்டு வந்தாங்க.

மலைப்பாதைல போறது நல்லாயிருந்தது. ஊதாப்பூக்கள் நெறைய தென்பட்டது. பச்சை எலைகளும் ஊதாவும் வெள்ளையும் கலந்து பாக்க நல்லாயிருந்தது. ஒரு பக்கம் மலை. மறுபக்கம் பள்ளத்தாக்கு. இந்த மாதிரி இயற்கை அழகுள்ள எடத்துக்குப் போனாலே ஒரு சந்தோஷம் வரும். அடிக்கடி இந்த மாதிரி எடங்களுக்குப் போறதும் உள்ளத்துக்கு நல்லது. ஒரு மாறுதலாவும் இருக்கும்.

அப்படியே நடந்து போய் அருவிக்குப் போனோம். பெரிய அருவீன்னு சொல்ல முடியாது. சிறுசுதான். ஆனாலும் ஒரு அழகோட இருந்தது. ஆனாலும் அங்கங்க பிளாஸ்டிக் கவர்களும் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளுமா இருந்தது. ஒரு அப்பாவும் மகனும் குளிச்சிட்டு ஈரத்துண்டோட உக்காந்திருந்தாங்க. ரெண்டு பேர் கைலயும் பிளாஸ்டிக் தட்டு. அதுல தக்காளிச் சோத்த எடுத்துப் போட்டுக்கிட்டு இருந்தாங்க அம்மா. மூனு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு அந்தத் தட்டுகள அப்படியே ஒரு ஓரமாவே போட்டுட்டாங்க. அவங்க இருக்கிற எடத்துல குப்பையாக்கலை. தமிழன் கிட்ட பல கெட்ட பழக்கங்க இருக்கு. அதுல ஒரு கொடுமையான பழக்கம் துப்புரவா வெச்சிருக்கத் தெரியாமை. பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.

தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்குப் போங்க......தமிழ்நாடு தாண்டுற வரைக்கும் குப்பையா இருக்கும். அதுக்கப்புறமா துப்புரவா இருக்கும். பண்பாடு பண்பாடுன்னு வாய் கிழியப் பேசுறோம். ஆனா தமிழ்நாட்டையே குப்பையாக்கி வெச்சிருக்கோம்.


சரி. நம்ம கதைக்கு வருவோம். அங்க அருவி ரெண்டு அடுக்கா அமைச்சிருக்காங்க. மேலடுக்கு பெண்களுக்கு. கீழடுக்கு ஆண்களுக்கு. கீழடுக்குல இருந்து சறுக்கிக்கிட்டே போனா தடாகம். அதுலயும் பலர் குளிச்சிக்கிட்டு இருந்தாங்க.

இந்தி சினிமாவுல ஜான் அப்பிரஹாம்னு ஒருத்தர் நடிக்கிறாரே. பெரும்பாலும் துணியே போடாம வந்து வயசுப் பிள்ளைக தூக்கத்தக் கெடுக்கிறாரே.....அவரு துணியப் போட்டும் போடாமலுந்தான் காட்சி குடுப்பாரு. இந்திக்கு அவர் ஒருத்தர்தான். நம்மூர்ல நெறையப் பேரு அப்படி இருக்காங்க. கோவைக் குற்றாலத்துல பாத்தேன்.

வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு பாறைகள்ள அப்படியே படுத்துக்கிட்டு சூரியக் குளியல் நடத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு கூட்டம். நல்ல வேளை தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாரும் கற்புக்கரசிகள். இல்லைன்னா இந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு தப்புப் பண்ணீருவாங்க இல்லையா. ஆனா பெண்கள் மட்டும் உடம்பை மூடிக்கனும். அடக்கமா ஒடுக்கமா இருக்கனும். அவங்க அரைகுறையா வந்தா ஆண்கள் தப்புப் பண்ண வாய்ப்பாயிரும். ஆண்களைத் தப்பு செய்ய வெச்ச குத்தமும் பெண்கள் மேல சேரும். அடப்பாவிங்களா!

பொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும். இங்க மட்டுமில்ல. ஒவ்வொரு எடத்துலயும் இப்பிடித்தான். வெளிநாட்டுக்காரன் திரியலையான்னு கேக்கலாம். அவன் அந்த உரிமைய எல்லாருக்கும் குடுத்திருக்கான். ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும். ரெண்டு பேருக்கும் பொதுவா நாயம் பேச ஒருத்தனும் வர மாட்டேங்குறான்.

ஆனாலும் ஒருத்தனையாவது கெளப்பி விடனும்னு தோணிச்சு. கூட வந்த நண்பர்களோட சேந்து பேசி....ஒரு ஜான் அப்பிரஹாமப் பாத்து வேணுக்குமின்னே கிண்டல் பண்ற மாதிரி சிரிச்சோம். கொஞ்ச நேரத்துல அவனுக்கே ஒரு மாதிரி ஆகி ஒரு துண்டைக் கட்டிக்கிட்டு ஒழுங்கா போனான். இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. தலையெழுத்து.

சரி. இப்ப நம்ம குளிக்கனும்ல. நல்ல ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டுதான் குளிச்சோம். கீழடுக்குல அருவி ஒரே சீரா விழுந்துச்சு. அதாவது பெரிய டேம் நெறைஞ்சி வழியிற மாதிரி. அதுக்குள்ள தலையக் கொடுத்தோம். விழுகுற தண்ணிக்கும் அருவிக்கும் நடுவுல கொஞ்ச எடவெளி இருந்தது. அதுக்குள்ள நின்னுக்கிட்டோம். இப்போ எங்களுக்குப் பின்னாடி மலை. முன்னாடி சீரா விழுகுற தண்ணி. அந்தத் தண்ணியத் தாண்டி ஆளுகளும் மரம் மட்டைகளும் தெரியுது. ரொம்ப நல்லாயிருந்தது அந்த அனுபவம். இப்பிடி உள்ள இருந்து பாக்கும் போது தெளிவில்லாம தெரிஞ்சது. ஆனா வெளியருந்து உள்ள பாத்தா தண்ணிக்குள்ள யாரு நிக்கிறாங்கன்னு தெளிவாத் தெரிஞ்சது. ரொம்ப நேரம் தண்ணீல வெளையாண்டோம்.

சரியா நாலு மணிக்கு விசில் ஊதி எல்லாரையும் பத்துனாங்க. நாங்களும் தொடச்சிட்டு துணியப் போட்டுக்கிட்டு பொறப்பட்டோம். தண்ணீல ரொம்ப நேரம் வெளையாண்டுதலயோ என்னவோ எல்லாருக்கும் பசி. மசாலாக் கடலையும் நேந்திரங்காய் சிப்சும் பகபகன்னு பசிக்குற வயித்துல கபகபன்னு போச்சு. தண்ணியக் குடிச்சிட்டு நடந்தோம். ஒரு புத்துணர்ச்சி இருந்தது உண்மைதான். அருவீல குளிச்சதால இருக்கும்னு நெனைக்கிறேன்.

அது சரி....அந்த நொறுக்குத்தீனி பிளாஸ்டிக் பைகள என்ன செஞ்சோம்னு சொல்லவேயில்லையே. எல்லாத்தையும் ஒரு பைல போட்டுக்கிட்டு ராத்திரி லாட்ஜுக்குத் திரும்புனப்புறம் ரூம்ல இருந்த குப்பைத் தொட்டீல போட்டோம்.

அப்புறம் வண்டீல ஏறி நேரா மருதமலைக்குப் போனோம்.........

தொடரும்......

24 comments:

said...

//அங்க அருவி ரெண்டு அடுக்கா அமைச்சிருக்காங்க.//

அமைச்சிருக்காங்களா? அதுவா அமைஞ்சுதுன்னுல்ல நினைச்சேன்.

அங்க குப்பை போடறது தொன்று தொட்டு நம்ம ஆளுங்க பண்ணறது. நாங்க பையில குப்பையை போடும் போது ஒரு மாதிரியா பார்ப்பாங்க.

அங்க உடை மாத்த இடம் ஒண்ணு இருக்குமே. அதன் நிலமையை சொல்லவே இல்லையே. கண்ணீர் வந்திருக்குமே, நம்ம ஆளுங்களோட பொறுப்பை நினைத்து.

said...

Photos are good. Good work!!

said...

//சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.//

நல்லா சொன்னீங்க..

//பொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும்//
இதப் பத்தி பேசி டாபிக்கை மாத்திட்டீங்க..
//இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. .//
என்ன சொல்றீங்க நீங்க.. பொண்ணுங்க நீங்க சொல்றா மாதிரி பாத்து சிரிச்சா அவனவன் ஏதோ பெரிய சாதனை செஞ்சுட்டா மாதிரி, ஏதோ விஜய் விக்ரம் ரேஞ்சுக்கு நெனச்சிகிட்டு இன்னும் கொஞ்சம் போஸ் குடுப்பான்.

இதுல கூட இருக்குற பொண்ணுங்களும் அம்மாக்களும், ஏதோ அந்தப் பொண்ணு தப்பான விஷயத்த பாத்தா மாதிரி சீன் போடுவாங்க..

இந்த மாதிரி இடத்துல என்ன கொடுமைன்னா, கூட்டிட்டு வர்ர சின்ன பிள்ளைகளும் இதெல்லாம் பாத்து கத்துக்கும். நாளைக்கு பெரியவன் ஆனதும் செய்யும்.. அதத் தான் புத்தி சொல்லி திருத்தணும்..

said...

கொடுத்து வைச்சவங்க.. நல்லா ஊரச்சுத்திட்டு இருக்கீங்க ;) சும்மா லுல்லுவாங்காட்டிக்கு. நல்லா இருந்தது உங்க அனுபவம் தொடர்ந்து எழுதுங்க

ஜீவா

said...

இராகவன்,

நான் கவனித்ததை நீங்களும் கவனித்திருக்கிறீர்களே. அமெரிக்க கடற்கரை கெட்டது போங்கள். அவ்வளவு தூரம் இருந்தது நம் ஆண்கள் அணிந்திருந்த துணிகள் இந்த அருவிக்கரையில்.

//பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.
//

முழுக்க முழுக்க உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் இந்நேரம் நீங்கள் அந்த மேல் சாதி தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லியிருந்தீர்களானால் மெச்சியிருப்பேன். :-). இந்நேரம் பின்னூட்ட மழையே கொட்டியிருக்கும். ஆதரித்துத் தான். :-)

said...

ராகவன்,

அருவிலே குளிச்சது சரி. அங்கெ ஆ(யா)னை வரலையா?

படங்கள் நல்லா இருக்கு.

சொற்குப்பை கண்ணுக்குத் தெரியாது. ஆனா இந்த அசல் குப்பை எல்லாத்துக்கும் கேடாச்சேப்பா.

அட்லீஸ்ட் நீங்க குப்பையைப் போடாம வந்ததுக்கு நன்றி.

said...

raghavan pictures are very beautiful.when we go out of India, we do know what to expect. here all these shocks of John Abrahams are out of tune. half or 75% of them are full of spirits(!).annaparavai (udharanam)samachaaram ellaam serithaan.at this rate, even swans will be landing in indigestion.thank you for a very good post.

said...

படங்களுடனான பதிவு நன்றாயுள்ளது.

வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு பாறைகள்ள அப்படியே படுத்துக்கிட்டு சூரியக் குளியல் நடத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு கூட்டம். நல்ல வேளை தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாரும் கற்புக்கரசிகள். இல்லைன்னா இந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு தப்புப் பண்ணீருவாங்க இல்லையா. ஆனா பெண்கள் மட்டும் உடம்பை மூடிக்கனும். அடக்கமா ஒடுக்கமா இருக்கனும். அவங்க அரைகுறையா வந்தா ஆண்கள் தப்புப் பண்ண வாய்ப்பாயிரும். ஆண்களைத் தப்பு செய்ய வெச்ச குத்தமும் பெண்கள் மேல சேரும். அடப்பாவிங்களா!

said...

ராகவன்
முந்திகிட்டீங்களே! அடுத்தடுத்து அருவிக் கதை சொல்லப் போறதில் கோவை குற்றாலமும் இருந்தது. பரவாயில்லை ஊர்க்காரருக்கு விட்டுக் கொடுத்தாச்சு. தண்ணி நல்லா குளிர்ச்சியா இருக்குமே!

said...

>>>>ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும்.<<<<<<

இதையே நான் என்னுடைய ப்ளாகில் சொன்னதால் என் பெங்களூர் நண்பர் ஒருவர் என்னை உதைக்க வருகிறார்.

said...

மகரந்தத்தையும் கொஞ்சம் நுகர்ந்தாச்சு, ஜிரா. (/ஜீரா!). அந்த மரம் மீதான படத்தில் பார்க்க, விவேகானந்தார் தான் நினைவுக்கு வாரார், அசப்பிலே!
-ஜீவா

said...

// அமைச்சிருக்காங்களா? அதுவா அமைஞ்சுதுன்னுல்ல நினைச்சேன். //

இல்ல கொத்ஸ். அது அமைஞ்சதுதான். ஆனா அதுல காங்கிரீட் தர போட்டு விளிம்பக் கொஞ்சம் நீட்டி ஓரே அளவாத் தண்ணி விழுகுறாப்புல அமைச்சிருக்காங்க. இல்லைன்னா அருவீல குளிக்கிறது கஷ்டமாயிரும்.

// அங்க குப்பை போடறது தொன்று தொட்டு நம்ம ஆளுங்க பண்ணறது. நாங்க பையில குப்பையை போடும் போது ஒரு மாதிரியா பார்ப்பாங்க. //

அட பாத்தாப் பாக்கட்டுமே...நமக்கென்ன....நம்ம நல்லதுதான செய்றோம்...

// அங்க உடை மாத்த இடம் ஒண்ணு இருக்குமே. அதன் நிலமையை சொல்லவே இல்லையே. கண்ணீர் வந்திருக்குமே, நம்ம ஆளுங்களோட பொறுப்பை நினைத்து. //

ஏற்கனவே கொஞ்சம் காட்டமாச் சொல்லீட்டமேன்னுதான் அந்த அறையைப் பத்திச் சொல்லலை. நானும் உள்ள போய்ப் பாத்தேன். ரொம்பக் கேவலம்.

said...

// Photos are good. Good work!! //

வாங்க சிவபாலன். அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க.

said...

////இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. .//
என்ன சொல்றீங்க நீங்க.. பொண்ணுங்க நீங்க சொல்றா மாதிரி பாத்து சிரிச்சா அவனவன் ஏதோ பெரிய சாதனை செஞ்சுட்டா மாதிரி, ஏதோ விஜய் விக்ரம் ரேஞ்சுக்கு நெனச்சிகிட்டு இன்னும் கொஞ்சம் போஸ் குடுப்பான். //

அதுவும் உண்மைதான் பொன்ஸ்.

// இதுல கூட இருக்குற பொண்ணுங்களும் அம்மாக்களும், ஏதோ அந்தப் பொண்ணு தப்பான விஷயத்த பாத்தா மாதிரி சீன் போடுவாங்க.. //

:-)))))))) உண்மைதான். பொதுவாகவே பிள்ளை வளர்ப்புல நாம இன்னும் முன்னேற வேண்டியது இருக்கு.

// இந்த மாதிரி இடத்துல என்ன கொடுமைன்னா, கூட்டிட்டு வர்ர சின்ன பிள்ளைகளும் இதெல்லாம் பாத்து கத்துக்கும். நாளைக்கு பெரியவன் ஆனதும் செய்யும்.. அதத் தான் புத்தி சொல்லி திருத்தணும்.. //

அதே அதே...அந்த அப்ப மகன் நடந்துக்கிட்டதச் சொன்னேனே. அவரும் தட்ட இங்குட்டுத் தூக்கிப் போட...மகனும் கூடப் போட்டான். அவங்க அம்மாவும் தட்டத் தூரப் போட்டுட்டு சட்டீல மிச்சம் மீதி இருந்த கருவேப்பிலை, வத்தல் சமாச்சாரங்களையும் வழிச்சி அங்கயே போட்டுட்டாங்க....

said...

// Jeeves said...
கொடுத்து வைச்சவங்க.. நல்லா ஊரச்சுத்திட்டு இருக்கீங்க ;) சும்மா லுல்லுவாங்காட்டிக்கு. நல்லா இருந்தது உங்க அனுபவம் தொடர்ந்து எழுதுங்க //

இப்பச் சுத்தலாம்னு சொல்றீங்களா....வேண்டாம்னு சொல்றீங்களா......கொஞ்சம் தெளிவாச் சொல்லீட்டா நல்லாருக்கும் ஜீவ்ஸ். :-) அது சரி...நீங்களும் ஒங்க அனுபவங்களை எழுதுறது.....

said...

// நான் கவனித்ததை நீங்களும் கவனித்திருக்கிறீர்களே. அமெரிக்க கடற்கரை கெட்டது போங்கள். அவ்வளவு தூரம் இருந்தது நம் ஆண்கள் அணிந்திருந்த துணிகள் இந்த அருவிக்கரையில். //

எதுனால அப்படி நடந்துக்கிறாங்கன்னு என்னால ஊகிக்கவே முடியலை. துணியே இல்லாம இருந்தாலும் அது உறுத்தாத ஞானிகள் ஆயிட்டாங்களா? இல்ல மரத்துப் போச்சா? இல்ல "என்னைப் பார் என்னழகைப் பார்"னு இருந்தாங்களா? என்னவோ போங்க....

////பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.
// முழுக்க முழுக்க உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் இந்நேரம் நீங்கள் அந்த மேல் சாதி தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லியிருந்தீர்களானால் மெச்சியிருப்பேன். :-). இந்நேரம் பின்னூட்ட மழையே கொட்டியிருக்கும். ஆதரித்துத் தான். :-) //

:-))))

said...

// ராகவன்,

அருவிலே குளிச்சது சரி. அங்கெ ஆ(யா)னை வரலையா? //

டீச்சர்...நாங்க போறதுக்கு முன்னாடிதான எல்லாத்தையும் பத்தி விட்டாங்க....ஆனா பாருங்க போன வாரம் பேப்பர்ல செய்தி. இதே மாதிரி ஆன வருதுன்னு உள்ள விடலையாம். ஆனாலும் பத்து எளவட்டப் பயக தெரியாம உள்ள போயிருக்கானுக. அதுல ஒருத்தன ஆன அடிச்சி மிதிச்சிக் கொன்னு அவன் பக்கத்துலயே அடுத்த நாள் காலைல வனத்துறை ஆளுக வர்ர வரைக்கும் நின்னுச்சாம்....அது கொஞ்ச நாளைக்கு முன்னாடி குட்டி போட்ட ஆனையாம்.

// படங்கள் நல்லா இருக்கு. //

நன்றி டீச்சர்

// சொற்குப்பை கண்ணுக்குத் தெரியாது. ஆனா இந்த அசல் குப்பை எல்லாத்துக்கும் கேடாச்சேப்பா. //

சொன்னா எவன் கேக்குறான். நாட்டுல நமக்கெல்லாம் அடுத்தவஞ் செய்யுற தப்புதான் தெரியுது. நம்ம பண்றது தெரிய மாட்டேங்குது. இதுல என்னன்னா கொரங்குகள் வேற இந்த மாதிரி பைகள நக்கி நக்கி அந்த ருசி பிடிச்சிப் போயி, நல்ல பழமும் காயும் குடுத்தா திங்க மாட்டேங்குது.....

// அட்லீஸ்ட் நீங்க குப்பையைப் போடாம வந்ததுக்கு நன்றி. //

நம்ம கடமைய நம்மதான செய்யனும் டீச்சர்.

said...

// படங்களுடனான பதிவு நன்றாயுள்ளது. //

நன்றி சந்திரவதனா

// ஆண்களைத் தப்பு செய்ய வெச்ச குத்தமும் பெண்கள் மேல சேரும். அடப்பாவிங்களா! //

:-)

said...

// ராகவன்
முந்திகிட்டீங்களே! அடுத்தடுத்து அருவிக் கதை சொல்லப் போறதில் கோவை குற்றாலமும் இருந்தது. பரவாயில்லை ஊர்க்காரருக்கு விட்டுக் கொடுத்தாச்சு. தண்ணி நல்லா குளிர்ச்சியா இருக்குமே! //

வாங்க தாணு. நாஞ் சொன்னா என்ன! நீங்க ஒங்க பாட்டுக்குச் சொல்லுங்க. சரியாத்தான் இருக்கும்.

ஆமா. தண்ணி நல்லாக் குளிர்ச்சியா இருந்துச்சு...வெளிய வரவே தோணலை...எனக்கு ஊர்ப்பக்கத்துல இருக்குற பாவநாசம், அகத்தியர் அருவியெல்லாம் நினைவுக்கு வந்துச்சு...அங்கயும் போகனும்....

said...

// இதையே நான் என்னுடைய ப்ளாகில் சொன்னதால் என் பெங்களூர் நண்பர் ஒருவர் என்னை உதைக்க வருகிறார். //

muse, யாருங்க அந்த பெங்களூர் நண்பர்?

said...

// மகரந்தத்தையும் கொஞ்சம் நுகர்ந்தாச்சு, ஜிரா. (/ஜீரா!). அந்த மரம் மீதான படத்தில் பார்க்க, விவேகானந்தார் தான் நினைவுக்கு வாரார், அசப்பிலே! //

கிழிஞ்சது ஜீவா...விட்டாச் சாமியாராக்கி கையில கமண்டலத்தைக் குடுத்திருவீங்க போல.....ஆள விடுங்கப்பா......

said...

ஜிரா.. நிஜமாவே உங்களை சாமியாராக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது - இன்றைக்குத் தேன் கூடு பாருங்கள் :). இருந்தாலும் இன்றைய வலை பதிவரானதற்கு என் வாழ்த்துக்கள். முதல்ல வாழ்த்தினது நாந்தான்னு நினைக்கிறேன். இமயமலைக்குப் போகும் போது சொல்லிட்டு போங்க :)

said...

பொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும். இங்க மட்டுமில்ல. ஒவ்வொரு எடத்துலயும் இப்பிடித்தான். வெளிநாட்டுக்காரன் திரியலையான்னு கேக்கலாம். அவன் அந்த உரிமைய எல்லாருக்கும் குடுத்திருக்கான். ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும். ரெண்டு பேருக்கும் பொதுவா நாயம் பேச ஒருத்தனும் வர மாட்டேங்குறான்.//

பயணக் கட்டுரைக்கு நடுவில பொன்மொழி.. நல்லாருக்கு.


இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. தலையெழுத்து.//

நீங்க தட்டிக்கேட்டா மாதிரி ஒரு பெண் கேட்டிருந்தா அவ்வளவுதான்..

தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்குப் போங்க......தமிழ்நாடு தாண்டுற வரைக்கும் குப்பையா இருக்கும். அதுக்கப்புறமா துப்புரவா இருக்கும்.//

ஆமா ராகவன்.. நம்ம த.நா ஆளுங்களோட கம்பேர் பண்ணும்போது அவங்க எவ்வளவோ பரவாயில்லை. ஆனா இப்ப அங்கயும் கொஞ்சம் கொஞ்சமா இந்த ட்ரெண்ட் பரவ ஆரம்பிச்ச்சிருக்கு. முக்கியமா கொச்சியில..

said...

//தமிழன் கிட்ட பல கெட்ட பழக்கங்க இருக்கு. அதுல ஒரு கொடுமையான பழக்கம் துப்புரவா வெச்சிருக்கத் தெரியாமை. பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.//

//பொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும். இங்க மட்டுமில்ல. ஒவ்வொரு எடத்துலயும் இப்பிடித்தான். வெளிநாட்டுக்காரன் திரியலையான்னு கேக்கலாம். அவன் அந்த உரிமைய எல்லாருக்கும் குடுத்திருக்கான். ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும். ரெண்டு பேருக்கும் பொதுவா நாயம் பேச ஒருத்தனும் வர மாட்டேங்குறான்.//

நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்...