Sunday, April 16, 2006

4. தியானமும் கம்பங்கூழும்

ஈஷா தியான லிங்கமுன்னு நான் சமீப காலமாகத்தான் கேள்விப் பட்டிருக்கேன். அதோட சேத்து ஜிக்கீங்கறவரையும் சேத்துச் சொல்வாங்க. இவ்வளவுதான் எனக்கு இருந்த அறிமுகம். பொதுவா நான் கடவுள் மனிதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதுலயும் ஆசிரமம் வெச்சிருந்தா....வாய்ப்பேயில்லை. அதுனால அங்க போறதுக்கு எனக்கு அவ்வளவா ஆர்வம் இருக்கல. ஆனா கூட வந்தவரு கண்டிப்பா போய்ப் பாருங்கன்னு சொன்னதால போனோம்.

நல்லா ரெண்டு பக்கமும் மரங்கள். நடுவுல வழி. ரோடெல்லாம் இல்லை. ஆனாலும் துப்புரவா இருந்தது. வண்டிய நிப்பாடீட்டு இறங்கினோம். பாத்தா புத்தம் புதுசாக் கட்டுன பெரிய நட்சத்திர சுற்றுலாத்தலம் மாதிரி இருந்துச்சு. நல்ல உயரமான கூரை. அதுல நல்ல பெரிய சதுரத் தூண்கள். அந்தத் தூண்களும் கூரையும் சந்திக்கிற இடத்துல கருகருன்னு நாகப்பாம்புக தொங்கீட்டிருந்துச்சு. பொம்மப் பாம்புகதான். ஆனா மரத்துல செஞ்சி நல்லா பாலீஷ் போட்ட மாதிரி பளபளன்னு இருந்துச்சு.அங்க ரெண்டு பெரிய வட்டமான பாத்திரத்துல தண்ணிய நெரப்பி அதுல ஒரு அக்கா செந்தாமரைப் பூக்கள லேசா விரிச்சாப்புல விரிச்சி வெச்சுக்கிட்டிருந்தாங்க. பாக்கவே ரொம்ப அழகா இருந்தது. பக்கத்துல இன்னொரு பொண்ணு அதே வேலைய ஆனா இன்னொரு சட்டில செஞ்சிக்கிட்டிருந்தாங்க. செக்கச் செவேல்னு ரொம்ப அழகா இருந்தது தாமரப் பூக்கள். அத அப்படியே கேமராவுல அப்பீட்டோம்.

வரவேற்புப் பகுதி ரொம்ப நல்லா அமைஞ்சிருந்தது. செடி கொடிகள் வெச்சி...ஓலைக் கூரை போட்ட அழகான கலையம்சமா இருந்துச்சு. அங்கேயே சாப்பிடவும் சின்னதா ஒரு கடை இருந்துச்சு. பன், கேக், ஊறுகாய் வகைகள் இருந்துச்சு. தகவல் புத்தகங்களும் நிறைய இருந்துச்சு. நாங்கள்ளாம் காலைக் கழுவிக்கிட்டு பக்கத்துல இருக்குற கோயில் பகுதிக்குப் போனோம். அதுக்கு முன்னாடி அங்க ஒரு பலகைல செல்போன்களை இங்கே ஒப்படைக்கவும்னு எழுதியிருந்துச்சு. நான் கண்டுக்கலை. என் கூட வந்தவங்களுந்தான்.

கோயில் பகுதியில் நுழைவுல ஒரு பெரிய கல்மரம். (கொடிமரம் போல). அதுல அனைத்து மதச் சின்னங்களும் இருந்துச்சு. இந்தப் பக்கமா ஒரு பெரிய வரைபடம். அதாவது ஈஷாவின் முழுப்பரப்பும் வரைபடமா வழிகளோடு இருந்தது வர்ர போறவங்களுக்குப் பயனாயிருந்தது. நாங்க அதப் பெருசாக் கண்டுக்காம நேரா கோயிலுக்குள்ள போனோம்.

ரெண்டு பக்கமும் சொவத்துல கல்லுல நல்ல கதைகளைச் செதுக்கி வெச்சிருந்தாங்க. கர்நாடகத்துல அக்கம்மாதேவீன்னு ஒரு சிவபக்தை. அவங்கள அவமானப் படுத்த நினைக்கிறான் அரசன். அவைக்கு வரச்சொல்லி அத இதச் சொல்லி துணியெல்லாம் உருவச் சொல்றான். துணி உருவத் தொடங்குன அந்த நொடியிலேயே தன்னுடைய உணர்வுகள் முழுவதும் மொத்தமா எடுத்து இறைவன் மேல வெச்சிர்ராங்க. அதுனால அவங்க துணிய எடுத்ததும் எடுக்காததும் அந்தம்மாவுக்கு ஒன்னுதான். குழந்தை துணியில்லாம இருந்தாலும் துணியோட இருந்தாலும் ஒன்னும் விகல்ப்பமா நெனைக்காதில்லையா. அந்த மாதிரி உள்ளம் வந்திருச்சு அவங்களுக்கு. அதுக்குப் பெறகு அவங்க செஞ்சதெல்லாம் இறையருளால நன்மைகள்தான். அவங்க புகழும் பரவுச்சு. அந்த அம்மாவோட கதையையும் அங்க படமா வெச்சிருந்தாங்க. பூசலார் கதையும் இருந்துச்சு.

அதப் பாத்துக்கிட்டே உள்ள போனோம். வட்ட வடிமான பெரிய அறை. அரைக்கோளத்த எடுத்து அதுக்குக் கூரையா வெச்ச மாதிரி அமைப்பு. அந்த வட்ட அறையின் நடுவுல பெரிய சிவலிங்கம். அதைச் சுற்றிக் கொண்டு ஒரு பாம்பு. ரொம்பவே நேர்த்தியா இருந்தது. அதோட தலைக்கு மேல உச்சீல வெளிய இருக்குற வெளிச்சம் உள்ள வர்ர மாதிரி ஆனா மழைத்தண்ணீ உள்ள வராத மாதிரியான தெறப்பு. இந்தச் சிவலிங்கத்துக்கு முன்னாடி அழகான அமைப்புல அடுக்கி வெச்ச பூக்களும் பூஜைப் பொருட்களும்.

வட்டமான அறைன்னு சொன்னென்லயா...அதோட சுத்துச் சொவர்ல குழிகுழியா இருந்துச்சு. அதுக்குள்ள உக்காந்து அமைதியா தியானம் செய்யலாம். ஒரு சத்தம் கிடையாது. நெறையப் பேரு குழிக்குள்ளயும் குழிக்கு வெளியவும் அமைதியா உக்காந்திருந்தாங்க. நானும் ஒரு குழிக்குள்ள உக்காந்து கண்ண மூடிக்கிட்டேன். அமைதியா இருக்குறதும் எவ்வளவு ஆனந்தம். அந்த அமைதிய ரசிச்சிக்கிட்டேயிருந்தபதான் எனக்கு ஒன்னு தோணிச்சு. என்னோட செல்போன கையோட கொண்டு வந்துட்டேனே....ஒருவேள அதுல யாராவது கூப்புட்டாலோ அல்லது மெசேஜ் வந்தாலோ என்னாகும்! அந்த அமைதியான அறை முழுக்க எதிரொலிக்குமில்லையா....அதுனால அதுக்கு மேல அங்க இருக்க விரும்பாம படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். வர்ர வழியில திருநீறு குங்குமம் வெச்சிருந்தாங்க. நம்மளே தொட்டு வெச்சிக்கலாம்.

நா வெளிய வர்ரதப் பாத்துட்டு கூட வந்த எல்லாரும் வெளிய வந்துட்டாங்க. ரொம்பவே அமைதியான சூழல். அப்படியே வெளிய வந்து வரவேற்புப் பகுதிக்குத் திரும்ப வந்தோம். பசிவேளையில்லையா....அதான் ஏதாவது சாப்பிடலாம்னு. ஆனா எங்க நேரம் அங்க கேக்கு பன்னு வகையறாக்களும் லஸ்ஸியும் இருந்துச்சு. வழக்கமா இருக்குற தயிர்ச்சோறு கூட அன்னைக்கு இல்ல. ஆனா பாருங்க அங்க ஒரு அட்டைல கம்பங்கூழ் கிடைக்கும்னு எழுதித் தொங்க விட்டிருந்தாங்க.

ஒடனே நமக்குள்ள இருந்த பட்டிக்காட்டானும் health freakம் எந்திரிச்சிக்கிட்டு அதக் குடிக்கனும்னு அடம் பிடிச்சாங்க. மத்தவங்க எல்லாம் லஸ்ஸி ஜூசுன்னு கொண்டாடுனப்போ நா கம்மங்கூழ்னு கேட்டேன். கூட மாங்க ஊறுகாயோட கெடச்சது கம்மங்கூழு...அடடா! உண்மையிலே சொகமோ சொகம். ஒரு வாய்க் கூழு. ஒரு தொட்டு ஊறுகா. குடிச்சப்புறம் ஒரு நெறைவு.

அப்புறம் அங்கயிருந்து பொறப்பட்டு திரும்பவும் கோவைக் குற்றாலம் போனோம். அதுக்குள்ள நான் கோயில்பட்டீல என்னோட சொந்தக்காரங்களுக்கு ஃபோன் போட்டு அடுத்த நாள் காலைல நாங்க வர்ரோம்னு சொல்லீட்டேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜ்ல ரூம் போடச் சொல்லீட்டேன். இப்பக் கோயில்பட்டிக்குப் போறதுக்கு டிக்கெட் எடுக்கனுமே.....அதுக்கு நம்ம கூட வந்த நண்பரே உதவி செஞ்சாரு. அவரு ஆஃபீஸ் பையனுக்குப் ஃபோன் போட்டு விவேகம் டிராவல்ஸ்ல எல்லாருக்கும் டிக்கெட் வாங்கி வெக்கச் சொல்லீட்டாரு. உதவி எப்படியெல்லாம் வருது பாருங்க!

இப்பப் போனப்ப கோவைக் குற்றாலத்துக்குள்ள ஆளுங்கள விட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுனால நாங்க ஜம்முன்னு உள்ள போனோம்.

தொடரும்..............

24 comments:

said...

நல்ல பயணக் கட்டுரை, வழக்கமான ஜிரா பாணியிலே. ஆமா! ப்ரொஃபைல்ல உள்ள படத்தை மாத்திட்டீங்க போலிருக்கு? சண்டக்கோழி படத்துல மீரா ஜாஸ்மினுக்கு அண்ணனா நடிச்சது நீங்க தான்னு சொல்லவே இல்லை?
:)-

said...

இவ்வளவு நாள் இருந்தும் இங்க போனதே இல்லைங்க. என்னவோ தெரியலை. கம்பங்கூளெல்லாம் கிடைக்குதா? அடுத்த முறை போக வேண்டியதுதான்.

நம்ம வீக்னெஸ் தெரிஞ்சி அட்டாக் பண்ணிட்டீங்களே..

said...

// சண்டக்கோழி படத்துல மீரா ஜாஸ்மினுக்கு அண்ணனா நடிச்சது நீங்க தான்னு சொல்லவே இல்லை?
:)- //

என்ன கைப்புள்ள இப்பிடிக் கவுத்துட்டீங்க....எல்லாரும் ஆயுத எழுத்து படத்துல மீரா ஜாஸ்மினுக்கு ஜோடியா நடிச்சது நான்னு சொல்றாங்க....நீங்க இப்பிடிச் சொல்லீட்டீங்களே.........

said...

// இவ்வளவு நாள் இருந்தும் இங்க போனதே இல்லைங்க. என்னவோ தெரியலை. கம்பங்கூளெல்லாம் கிடைக்குதா? அடுத்த முறை போக வேண்டியதுதான். //

அடுத்த வாட்டி போயிர வேண்டியதுதான....அதுக்குள்ள அவங்க கேப்பைக் கூழையும் கொடுத்தாலும் கொடுக்கலாம்.

// நம்ம வீக்னெஸ் தெரிஞ்சி அட்டாக் பண்ணிட்டீங்களே.. //

அது எல்லாருக்கும் வீக் பாயிண்ட்டுன்னு நெனைக்கிறேன். :-)

said...

//பாத்தா புத்தம் புதுசாக் கட்டுன பெரிய நட்சத்திர சுற்றுலாத்தலம் மாதிரி இருந்துச்சு//ஆஹா, ஆஹா, ஆஹா! கம்பங்கூழ் ப்ரீயா :-)

said...

தாமரைக்குளம் பார்த்தீங்களா?

அந்த சிவலிங்கத்தையும் தியான அறையையும் படம் பிடித்து போட்டிருக்கலாம்.

செல்போனை அணைச்சிருந்தா தியானத்தில் ஈடுபட்டிருக்கலாமே!

said...

//** பொதுவா நான் கடவுள் மனிதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதுலயும் ஆசிரமம் வெச்சிருந்தா....வாய்ப்பேயில்லை. //**

நானும் அதே தான் ஜீரா :-). 'வேதம் புதிது'ல பாரதிராஜா ஒரு காட்சி வச்சிருப்பரே 'ஏன் சாமி! உங்கள தூக்கிட்டு வர்றவளுக்கு காலு வலிக்காதா'. அப்படி தான் நம்ம யோசனையும் போகும்.

//** அதுனால அதுக்கு மேல அங்க இருக்க விரும்பாம படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். **// செல் போன ஆஃப் பண்ணிட்டு உட்கார வேண்டுயது தானே மக்கா :-)

//** பட்டிக்காட்டானும் health freakம் எந்திரிச்சிக்கிட்டு அதக் குடிக்கனும்னு அடம் பிடிச்சாங்க **// ம்ம்ம்ம்...இங்கே நானு கூலுக்கு என்கே போறது :-(.

ரொம்ப நல்லா சுவாரஸ்யமா சொல்றீங்க ராகவன். தொடருங்க..தொடருங்க.

said...

//பொதுவா நான் கடவுள் மனிதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதுலயும் ஆசிரமம் வெச்சிருந்தா....வாய்ப்பேயில்லை//

என்ன இராகவன் இப்படி சொல்லிட்டீங்க... நான் ஒரு ஆசிரமம் வச்சு அதுல உங்களை சின்ன சாமியா சேத்துக்கலாம்ன்னு இருந்தேனே... என் கனவுல மண்ணள்ளிப் போட்டுட்டீங்களே :-)

அந்த தாமரைப்பூக்களில் ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு போய் சிவலிங்கத்திற்கு முன்னால் (சுற்றி?) இருக்கும் சின்ன குளத்தில் நாமே நம்ம கையால வைக்கலாமே. தாமரைப்பூக்கள் கூட இலவசம்ன்னு நினைக்கிறேன். நீங்க செய்யலையா? யாரும் சொல்லலையா?

நீங்களாவது அந்த தியானக் குழிக்குள்ள கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்திருந்தீங்க. நான் இது வரை தியானம்ன்னு ஒன்னு தனியா உக்காந்து செஞ்சதில்லை. அதனால கூட வந்தவங்க எல்லாம் எப்படா கிளம்புவாங்கன்னு அவங்களை ஒரு பார்வை பாக்குறதும் சிவலிங்கத்தை ஒரு பார்வை பாக்குறமா இருந்தேன். :-) அவஸ்தையான நிமிடங்கள். மனம் அவ்வளவாய் அங்கு ஒட்டவும் இல்லை; கூடவும் இல்லை. :-)

said...

////பாத்தா புத்தம் புதுசாக் கட்டுன பெரிய நட்சத்திர சுற்றுலாத்தலம் மாதிரி இருந்துச்சு//ஆஹா, ஆஹா, ஆஹா! கம்பங்கூழ் ப்ரீயா :-) //

உஷா...கூழு ப்ரீயெல்லாம் இல்லை. அஞ்சு ரூபா. ஆனா நல்லாயிருந்தது. அதுதான் அந்த வெயில்ல ரொம்ப நேரம் தாங்குச்சு...

said...

// தாமரைக்குளம் பார்த்தீங்களா? //

இல்லையே தயா.....மிஸ் பண்ணீட்டோம்னு நெனைக்கிறேன்.

// அந்த சிவலிங்கத்தையும் தியான அறையையும் படம் பிடித்து போட்டிருக்கலாம். //

அங்க கேமிரா கொண்டு போகக் கூடாதுல்ல....

// செல்போனை அணைச்சிருந்தா தியானத்தில் ஈடுபட்டிருக்கலாமே! //

தியானத்தில மூழ்கீருப்பேனோ இல்லையோ...அந்த அமைதீல நல்லா தூங்கீருப்பேன்.

said...

// நானும் அதே தான் ஜீரா :-). 'வேதம் புதிது'ல பாரதிராஜா ஒரு காட்சி வச்சிருப்பரே 'ஏன் சாமி! உங்கள தூக்கிட்டு வர்றவளுக்கு காலு வலிக்காதா'. அப்படி தான் நம்ம யோசனையும் போகும். //

உண்மைதான் சிவா....இந்தக் கேள்விய பாரதிராஜாவுக்கு முன்னாடியே அருணகிரி கேட்டுட்டாரு.......

////** அதுனால அதுக்கு மேல அங்க இருக்க விரும்பாம படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். **// செல் போன ஆஃப் பண்ணிட்டு உட்கார வேண்டுயது தானே மக்கா :-) //

செல்போன ஆஃப் பண்றதா...அது என்னால முடியாதே..ரொம்பக் கஷ்டமான விஷயமாச்சே.......... :-))

////** பட்டிக்காட்டானும் health freakம் எந்திரிச்சிக்கிட்டு அதக் குடிக்கனும்னு அடம் பிடிச்சாங்க **// ம்ம்ம்ம்...இங்கே நானு கூலுக்கு என்கே போறது :-(. //

வீட்டுல காச்சிக்கிற வேண்டியதுதான....

// ரொம்ப நல்லா சுவாரஸ்யமா சொல்றீங்க ராகவன். தொடருங்க..தொடருங்க. //

தொடருவோம். தொடருவோம்.

said...

// என்ன இராகவன் இப்படி சொல்லிட்டீங்க... நான் ஒரு ஆசிரமம் வச்சு அதுல உங்களை சின்ன சாமியா சேத்துக்கலாம்ன்னு இருந்தேனே... என் கனவுல மண்ணள்ளிப் போட்டுட்டீங்களே :-) //

என்னது சின்ன சாமியாரா? அப்ப பெரிய சாமியார் யாரு? நீங்களா? இதெல்லாம் எனக்கெதுக்குய்யா!

// அந்த தாமரைப்பூக்களில் ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு போய் சிவலிங்கத்திற்கு முன்னால் (சுற்றி?) இருக்கும் சின்ன குளத்தில் நாமே நம்ம கையால வைக்கலாமே. தாமரைப்பூக்கள் கூட இலவசம்ன்னு நினைக்கிறேன். நீங்க செய்யலையா? யாரும் சொல்லலையா? //

இலவசமா? காசு குடுத்து வாங்கனும்னு நெனைக்கிறேன். நான் கேட்டுக்கலை.

// நீங்களாவது அந்த தியானக் குழிக்குள்ள கொஞ்ச நேரம் அமைதியா உக்காந்திருந்தீங்க. நான் இது வரை தியானம்ன்னு ஒன்னு தனியா உக்காந்து செஞ்சதில்லை. அதனால கூட வந்தவங்க எல்லாம் எப்படா கிளம்புவாங்கன்னு அவங்களை ஒரு பார்வை பாக்குறதும் சிவலிங்கத்தை ஒரு பார்வை பாக்குறமா இருந்தேன். :-) அவஸ்தையான நிமிடங்கள். மனம் அவ்வளவாய் அங்கு ஒட்டவும் இல்லை; கூடவும் இல்லை. :-) //

அடடே! நல்ல அமைதியா இருந்துச்சுங்களே.....அஜந்தா குகைக்குள்ள ஒரு அமைதி இருக்கும். அந்த அமைதிய இங்க பாத்தேன்.

ஆனா எனக்குத் தெரிஞ்சவங்கள்ளாம்...ஏன் வெள்ளியங்கிரி மலைல ஏறலைன்னுதான் கேட்டாங்க.

said...

ராகவன்,

அந்த வட்டப் பாத்திரம்( உருளி) & தாமரைப்பூ போட்டு வைக்கறது எல்லாம் நிஜமாவே அழகாத்தான் இருக்கு.

அங்கே பூ ஃப்ரீயாத்தான் இருக்கணும். காசுன்னா அப்புறம் வியாபாரம் ஆயிருதுல்லெ?

கம்பங்கூழ் குடிச்சு கனகாலமாச்சேப்பா. இப்பவும் அதெல்லாம் கிடைக்குதா என்ன?

கோவில்பட்டித்தான் நம்ம 'கோ கணேஷோட' ஊருன்னு நினைவு வருது.

ம், அப்புறம்? கோவைக்குற்றாலத்துலே என்ன பார்த்தீங்க? அதைச் சொல்லுங்க.

said...

துளசி, ஆனாலும் நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கக்கூடாது. ஆசிரமங்களில் எல்லாம் "ப்ரீ" ன்னா அப்புறம் எப்படி நட்சத்திர விடுதி கட்டுவது? பெங்களூரில் பார்த்தீங்களே நாலடிக்கு ஒரு போஸ்டர், கட்டவுட் வெக்குறது!!! என்னவோ
போங்க, சாமியார் பிசினசுனா இன்னைக்கு தேதிலே மில்லினியன் பிராஜக்ட் :-))

said...

// அந்த வட்டப் பாத்திரம்( உருளி) & தாமரைப்பூ போட்டு வைக்கறது எல்லாம் நிஜமாவே அழகாத்தான் இருக்கு. //

உண்மைதான் டீச்சர். அதான் லபக்குன்னு படத்துல பிடிச்சிக்கிட்டோம்.

// அங்கே பூ ஃப்ரீயாத்தான் இருக்கணும். காசுன்னா அப்புறம் வியாபாரம் ஆயிருதுல்லெ? //

ஃபிரீயா....இல்லைன்னு நெனைக்கிறேன்.

// கம்பங்கூழ் குடிச்சு கனகாலமாச்சேப்பா. இப்பவும் அதெல்லாம் கிடைக்குதா என்ன? //

கெடைக்குது டீச்சர். பெங்களூர்ல கம்பே கிடைக்குது. வாங்கி லேசா வறுத்து அரைச்சு வெச்சுக்கிட்டு..உளுந்து மட்டும் ஊற வெச்சு அரைச்சு...அதுல கம்பு மாவைக் கலந்து தோசை சுட்டா........அடடா!

// கோவில்பட்டித்தான் நம்ம 'கோ கணேஷோட' ஊருன்னு நினைவு வருது. //

ஆமால்ல....அவரு வீடு எங்கன்னு தெரியலையே....அவரு இப்ப சென்னைல இருக்காருன்னு நெனைக்கிறேன்.

// ம், அப்புறம்? கோவைக்குற்றாலத்துலே என்ன பார்த்தீங்க? அதைச் சொல்லுங்க //

சொல்வேன்ல...கண்டிப்பாச் சொல்வேன்ல....சொல்ல அவ்வளவு இருக்கு....

said...

// துளசி, ஆனாலும் நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கக்கூடாது. ஆசிரமங்களில் எல்லாம் "ப்ரீ" ன்னா அப்புறம் எப்படி நட்சத்திர விடுதி கட்டுவது? பெங்களூரில் பார்த்தீங்களே நாலடிக்கு ஒரு போஸ்டர், கட்டவுட் வெக்குறது!!! என்னவோ
போங்க, சாமியார் பிசினசுனா இன்னைக்கு தேதிலே மில்லினியன் பிராஜக்ட் :-)) //

உண்மைதான் உஷா....அங்க ஒரு செப்புத் தட்டு வெச்சிருந்தாங்க...அதுல பூசைக்கான பொருளெல்லாம் வெச்சித் தர்ராங்க...வெல........அதச் சொல்லக் கூட எனக்கு மனசு வரலை...விடுங்க...

said...

பொதுவா நான் கடவுள் மனிதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதுலயும் ஆசிரமம் வெச்சிருந்தா....வாய்ப்பேயில்லை. //

இதுக்கு ரெண்டு பேர் ஏற்கனவே பதில் சொல்லிட்டாங்க.

இருந்தாலும் சொல்றேன். நீங்க பொதுமக்கள் மத்தியில பரபரப்பா பேசப்பட்டவங்கள வச்சி இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்.

கடவுளே மனிதராக உருவெடுத்து வந்தபோது கூட அவரை அன்றைய மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

என்னுடைய அனுபவத்திலும் சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர்களை சாமியார் என்றோ சன்னியாசி என்ற கோணத்திலோ அவர்களை அறிந்த சிலரும் கருதியதில்லை. ஆனால் அப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பாண்டிச்சேரி அம்மையாரை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், பிறகு கிருஷ்ணமூர்த்தி..

இவர்கள் இருவருமே தங்களுடைய வாழ்நாளில் எந்த சர்ச்சையிலும் அகப்பட்டுக்கொள்ளாதவர்கள். முந்தையவரின் பெயரை வைத்துக்கொண்டு அவருடைய சீடர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் (அதிலும் சிலர் மட்டும்தான்) இன்று நடந்துக்கொள்ளும் விதம் சரியில்லைதான். ஆனால் இன்றும் அத்தகைய மகான்கள் நம்மிடையே இருக்கக்கூடும். நமக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். .

அங்க ஒரு செப்புத் தட்டு வெச்சிருந்தாங்க...அதுல பூசைக்கான பொருளெல்லாம் வெச்சித் தர்ராங்க...வெல........அதச் சொல்லக் கூட எனக்கு மனசு வரலை...//

இதுலயும் பெரிசா ஒன்னும் தப்பில்லை ராகவன். உங்கள வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துனாத்தான் தப்பு. இருக்கறவங்கக் கிட்டருந்து வாங்கி இல்லாதவங்கக் கிட்ட குடுத்தா அதுவும் தர்மம்தான். அத வியாபார நோக்கத்தோட செய்தாத்தான் தப்பு. இவ்வளவு ஏன், திருப்பதி சாமி கிட்ட இல்லாத காசா பணமா? திருப்பதி லட்ட எதுக்கு காசுக்கு விக்கணும்? சும்மாவே குடுக்கலாமே? அதுபோலத்தான்னு வச்சிக்குங்களேன்.

said...

// முந்தையவரின் பெயரை வைத்துக்கொண்டு அவருடைய சீடர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் (அதிலும் சிலர் மட்டும்தான்) இன்று நடந்துக்கொள்ளும் விதம் சரியில்லைதான். ஆனால் இன்றும் அத்தகைய மகான்கள் நம்மிடையே இருக்கக்கூடும். நமக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். .//

உண்மைதான் ஜோசப் சார்....கடவுளே நேரில் வந்தாலும் கடவுள் அருள் இருந்தால்தான் கடவுளை உணர முடியும் என்று நம்புகிறவன் நான்.

பெரும்பாலும் பலர் செய்யும் அட்டூழியங்களால்தான் நான் இந்த முடிவை வைத்திருக்கிறேன்.

மற்றபடி இறைவன் நிச்சயம் நம்மிடையே வர முடியும்...வர முடியும் என்ன...நம்மோடுதான் இருக்கிறார்....ஆனால் அவர் நாந்தான் இறைவன் என்று சொல்லிக் கொள்வதில்லை. இறையருள் பெற்றவர்களும் என் வழியாகத்தான் இறைவனை அடைய முடியும் என்றும் சொல்லிக் கொள்வதில்லை.

said...

// இதுலயும் பெரிசா ஒன்னும் தப்பில்லை ராகவன். உங்கள வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துனாத்தான் தப்பு. இருக்கறவங்கக் கிட்டருந்து வாங்கி இல்லாதவங்கக் கிட்ட குடுத்தா அதுவும் தர்மம்தான். அத வியாபார நோக்கத்தோட செய்தாத்தான் தப்பு. இவ்வளவு ஏன், திருப்பதி சாமி கிட்ட இல்லாத காசா பணமா? திருப்பதி லட்ட எதுக்கு காசுக்கு விக்கணும்? சும்மாவே குடுக்கலாமே? அதுபோலத்தான்னு வச்சிக்குங்களேன். //

இல்லை...என்னை வாங்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தவில்லை. அதை வாங்க வேண்டும் என்று சொல்லவில்லை. நானாகப் போய்த்தான் பார்த்தேன். இதனையும் நான் சொல்லியிருக்க வேண்டும். எப்படியோ தவறி விட்டது. சரியான சமயத்தில் எடுத்துக் கொடுத்தீர்கள் ஜோசப் சார்.

said...

நானும் ஒரு வருடம் முன்பு இங்கு போய் இருக்கிறேன்.
தற்காலச் சமூக சூழலில் மக்களுக்கு வாழ்கையில் உள்ளும், புறமும் எற்படும் அழுத்தமும் ,சிக்கலும் தான் மக்களை விடை தேடி இம்மாதிரி "கடவுள் மனிதர்களைத்" நாடி ஓடச் செய்கிறது.

மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் மாறிவரும் தற்கால சமூகம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும்,அது எழுப்பும் புதிய கேள்விகளுக்கும் இடையே உள்ள விரிசல் கூட இதற்கு ஒரு காரணமோ என்று தோன்றுகிறது.

இன்னொறு விஷயம் நான் கண்டது இங்கு வந்து போகும் , தன்னார்வப் பணிபுரியும் பெரும்பாலோனோர் நன்கு படித்து வேலையில் இருக்கும் இளம் வயதினரே.

The traditional family structure which supported and assisted young people from basic difficulties in life is slowly disintegrating. People are getting more and more isolated .They are in search of a glorified counselling services rather than the drive of internal spiritual awakening.Otherwise I liked the place in general and what's being done there.

எப்படியோ நாங்கள் சென்றது சாயங்கால நேரம் ஆனதால் எங்களுக்கு அருந்தக் கிடைத்தது வெறும் சுக்குக் காபி தான் :-)

said...

//ஆனால் அவர் நாந்தான் இறைவன் என்று சொல்லிக் கொள்வதில்லை.//

இராகவன்,

இதற்கு பதில்....

'நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்' - இயேசு நாதர்.

'மானிட உருவில் இருப்பதால் என்னை வெறும் மானிடன் என்று எண்ணி மூடர்கள் என்னை அவமதிக்கிறார்கள்' - கீதையில் கண்ணன்.

இப்படி எடுத்துக்காட்டுகள் நிறைய கொடுக்கலாம். இறைவன் மனித உருவில் வந்தால் இப்படி சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.

said...

// இன்னொறு விஷயம் நான் கண்டது இங்கு வந்து போகும் , தன்னார்வப் பணிபுரியும் பெரும்பாலோனோர் நன்கு படித்து வேலையில் இருக்கும் இளம் வயதினரே. //

வாங்க கார்த்திக்வேலு. நீங்க சொல்றது உண்மைதான். அங்க நான் பாத்தவங்க எல்லாரும் நிச்சயமாப் படிச்சவங்கதான்னு நெனைக்கிறேன். அதுவுமில்லாம அங்க இருந்தவங்க அப்படி ஒன்னும் சத்தம் போட்டுப் பேசிச் சிரிக்கிற மாதிரி தெரியலை. நம்மள்ளாம் நாலு பேரு சேந்தா கத்திக் கும்மரிச்சம் போட மாட்டோம். ஆனா அவங்க அமைதியா இருந்தாங்க. திருநீறு எடுத்துக்கோங்க - சைகை. இந்த வழியாப் போங்க - சைகை. அத எடுக்காதீங்க - சைகை. பெரும்பாலும் பேச்சைக் குறைச்சிட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

said...

// இப்படி எடுத்துக்காட்டுகள் நிறைய கொடுக்கலாம். இறைவன் மனித உருவில் வந்தால் இப்படி சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. //

ம்ம்ம்.....கற்றது கைமண்ணளவுதான குமரன். :-) நீங்க சொல்றதும் சரியா இருக்கலாம். கண்டவர் விண்டிலர்தானே.

said...

//படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். //

இலவச உயர்தர உணவகத்தில் சென்று, சாப்பிடாமல் வந்தவர் பொல்னு சொல்லுங்க.

இப்ப தான் உங்க பயண கட்டுரை படிச்சேன்.ரொம்ப நல்ல கட்டுரை.

இவரை பற்றி நானும் என் பதிவுல சொல்லியிருக்கேன். படிச்சி பாருங்க. நிகழ்வுகள்

நீங்க நிறைய மிஸ் பண்ணிட்டீங்க ன்னு தான் சொல்வேன்.

2-5 நிமிஷம் உள்ளே சும்மா இருந்திருந்தா தானா மந்திரிச்சு விட்டா மாதிரி நீங்க உட்கார்ந்து இருப்பீங்க.

அவ்ளோ vaibration உள்ளே இருக்கு.
அதை சொல்ல முடியல.