Monday, April 10, 2006

நான் இந்து மதத்திற்கு எதிரியா?

சென்ற பதிவில் நான் தொடரும் போடவில்லை. காரணம் இந்தப் பதிவு. நான் எழுதியதை நம்பிக்கை வைத்துப் படித்த அனைத்து நண்பர்களுக்கும் முதற்கண் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து வெளிப்படையாக உரிமையோடு உங்கள் பின்னூட்டங்களை இட்டதிற்கும் நன்றி. உண்மையில் இரண்டாவதிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லாம் என்று கொண்டிருக்கும் நம்பிக்கை. மிகமிக நன்றி. சரி. விஷயத்திற்கு வருவோம்.

ஒரு இந்து என்று என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் நான் இந்து மதத்திற்கு எதிரியா? இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் முன் இந்து மதம் என்றால் என்னவென்று நான் கொண்டிருக்கும் கருத்தினை விளக்கியே ஆக வேண்டும்.

இந்து மதம் என்று இன்றைக்கு வழங்கப்படுவது பல மதங்களின் கூட்டமைவு. பல பண்பாடுகளின் கூட்டணி. கலாச்சாரங்கள் கலந்த நிலை. இன்றைக்கு ஒவ்வொன்றிற்கும் தொடர்பு சொல்லப்பட்டு எல்லாம் ஒன்று போலக் காட்சி தந்தாலும் அதன் தனித்துவங்கள் அங்கங்கு வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

முன்பு தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவில் தங்கமணி அவர்கள் அழிக்கப்படும் பன்முகத்தன்மை என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டிருந்தார். அவர் இந்தியாவை மட்டும் குறிப்பிடாமல் உலகளாவிய வகையில் நடக்கும் இந்தப் பன்முக அழிப்பைக் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் நடக்கும் இந்த ஒற்றுமைப் படுத்துதல் என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் பல குழுக்களின் இனங்களின் பண்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில் ஆடு கோழி பலியிடத் தடைச்சட்டம் வந்த பொழுது என்னுடைய வங்காள நண்பனுடன் அதைப் பற்றி உரையாடினேன். வங்காளத்தில் பிராமணர்கள் கடல் பூ என்று சொல்லிக் கொண்டு மீனைச் சாப்பிடுகிறார்கள் என்று எல்லாரும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் என்னுடைய நண்பன் அதைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லையாம். ஏனென்றால் அங்கு சைவ உணவுப் பழக்கம் என்பதே பெரும்பாலும் அறியப் படாதது. கடல் பூ என்று சமாதானம் சொல்லிச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அந்த நண்பன் சட்டோபாத்யாய் என்ற வகுப்பைச் சார்ந்தவன். அதாவது பிராமண வகுப்பு. ஆனால் அவர்கள் வீட்டில் அனைத்து வகையான அசைவ உணவுகளும் கிடைக்கும். நானும் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ருசித்து ரசித்திருக்கிறேன்.

அவனிடத்தில் அந்தத் தடைச் சட்டத்தைப் பற்றிச் சொன்னதும் அது சரியே என்று சொன்னான். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை நேரடியாகச் சொன்ன பொழுது அவன் சொன்ன காரணம் என்னைத் திகைக்க வைத்தது. அவனுடைய கருத்துப் படி பலர் வந்து போகும் இடத்தில் இப்படி கோழிகளையும் ஆடுகளையும் வெட்டினால் அது நன்றாகவா இருக்கும். அங்கு வரும் குழந்தைகளின் நிலையையும் பலவீனமான இதயமுள்ளவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டுமாம். வேண்டுமென்றால் ஒரு அறைக்குள் வெட்டிக் கொள்ளட்டுமே என்பது அவனது கருத்து. அவன் கூற்றை ஏற்றுக் கொண்ட நான் அவனிடம் சொன்னேன். "இதோ பாரப்பா ஆடு-கோழி வெட்டுகின்ற கோயில்களுக்குப் போகின்றவர்களுக்கு அங்கு ஆடும் கோழியும் வெட்டுவார்கள் என்று நன்றாகத் தெரியும். அவைகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட குலத்தாரால் வழங்கப்படும் திருக்கோயில்கள். அதை எப்படித் தடை செய்ய முடியும்? எல்லாரும் போகின்ற பெரிய கோயில்களில் அப்படி யாரும் செய்வதில்லை. அப்படியிருக்க இந்தத் தடைச்சட்டம் சரிதானா?"
அவனும் நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டான்.

இதுவும் ஒருவகை பன்முக அழிப்புதான். ஆனால் இந்தத் தடைச்சட்டத்தின் மூலமாக மட்டுமே பன்முக அழிப்பு நேராது. ஒருவேளை இந்தத் தொந்திரவு தாளாமல் மதம் மாறி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் அவர்கள் பண்பாடு மாறும். அவர்கள் புதிதாகப் போகின்ற கோயிலின் வாசலில் போய் கிடா வெட்டப் போவதில்லை. ஆகையால் அந்த வகையான பன்முக அழிப்பையும் நான் ஆதரிக்கப் போவதில்லை.

அப்படியென்றால் என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொருவனும் தன்னைப் பற்றியும் தனது முன்னோர்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்தால் தன்னைக் காத்துக் கொள்ளவும் அறிவான். தன்னை அறிந்துத் தன்னை மதிக்கின்ற அதே வேளையில் அடுத்தவனையும் நிச்சயம் மதிக்க வேண்டும். நாமெல்லாம் தமிழர்கள் என்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பண்பாட்டு வழக்கங்கள் கொண்டவர்கள். நான் நானாகவே இருக்க நீ நீயாகவே இருக்க நாம் நாமாகவே இருப்போம் என்று எல்லாரும் நினைக்க வேண்டும். அசைவம் சாப்பிட விரும்பினால் சாப்பிடலாம். இல்லையென்றால் விட்டு விடலாம். அசைவம் சாப்பிடுவது எப்படிக் குற்றமாகாதோ அப்படியே சாப்பிடாதும் குற்றமாகாது. அதது அவரவர் விருப்பம்.

இப்படிக் கலப்புகளும் பழக்க வழக்கங்களும் பல கொண்ட இந்து மதத்தின் என்ற பெயர் நிச்சயம் புதிதுதான். வெளியூர்க்காரன் கொடுத்ததுதான். அதனால் என்ன? வெளிநாட்டுப் பணம் கசக்கவா செய்கிறது? இந்தப் பெயரே இருக்கட்டும்.

நிச்சயமாக நாம் வந்த வழியில் இரத்தச் சுவடுகளும் சமூக அவலங்களும் இருக்கின்றன. அந்த உண்மையை ஏற்றுக் கொள்வோம். இறந்த காலத்து உண்மையை வருங்காலத்துப் பொய்யாக்குவோம். நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் உறவோடு இனிமையோடு வாழ்வோம். பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் எனக் கொள்வோம். அடுத்தவரை மதித்து வாழ்வோம். அதில் தவறினால் வீழ்ச்சிதான்.

இன்றைய இந்து மதத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. எங்குதான் இல்லை? எங்களிடம் இல்லை என்று சொல்கின்றவர்களும் உண்டு. ஆனால் உண்மையில் எனக்குத் தெரிந்த வரையில் உலகம் முழுவதும் பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் நாம் நமது பிரச்சனைகளைக் களைவதற்கு வழி காண்போம். அடுத்தவனைச் சொல்லாமல் நமது பிரச்சனைகளை மட்டும் சொல்கிறேனே என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு செய்தி. ஏதோ ஒரு வீட்டில் கொலையே விழுந்தாலும் பதறாத நாம் நமது வீட்டில் நூறு ரூபாய் களவு போனால் பதறுகிறோம் அல்லவா.

அதே நேரத்தில் மதம் எந்த அளவிற்கு அரசியலில் விலை போகிறதோ அந்த அளவிற்கு விலை போகும் இன்னுமிரண்டு சரக்குகள் மொழியும் இனமும். நமது மொழியும் இனமும் பெரிதுதான். யார் இல்லையென்றார்? ஆனால் அதை மேம்படுத்துவதற்கு நிச்சயமாக நேர்மையான வழிமுறையை நாட வேண்டும். குறுகிய காலப் பலனை விட நீண்ட காலப் பலனை நாடுங்கள். அதுவும் நற்பலனை. ஆகையால் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளை நம்புவதை விட தமிழறிஞர்களை நம்பலாம். தங்கள் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள் வங்காளிகளும் மலையாளிகளும். ஆனால் அவர்கள் மொழியை வளர்க்க அரசியல்வாதிகளை நம்புவதில்லை. பொறுப்பை அவர்கள் ஊர் எழுத்தர்களும் அறிஞர்களும் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த நிலை இங்கும் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

சரி. நாம் இந்து மதத்திற்கு வருவோம். பல நம்பிக்கைகள் இருக்கும் இந்து மதத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. அந்த ஒவ்வொரு நம்பிக்கையும் நான் மதிக்கவே விரும்புகிறேன். ஒன்றைத் தாழ்த்தி இன்னொன்றை உயர்வு செய்ய முடியாது. அதது அவரவர் வழி. வேதத்தின் வழியில் வாழ்வோம் என்று சொல்கின்றவர்களுக்கு அந்த உரிமை நிச்சயம் உண்டு. இல்லை.....தமிழ் மொழியில் இல்லாத செல்வமா என்று அதன் வழியில் வாழ விரும்புகின்றவர்களுக்கும் அந்த உரிமை உண்டு. சாமியாவது பூதமாவது என்று வாழ்வதற்கும் உரிமையுண்டு. ஆனால்.....எப்படி வாழ்ந்தாலும் அடுத்தவரையும் மதித்து வாழ வேண்டும். அப்படி வாழத பொழுது எப்படி வாழ்ந்தாலும் பயனில்லை. உலகம் அன்பு மயமானது. அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தான். அன்பே சிவம். அதைத்தான் நான் கற்ற தமிழ் நூல்கள் கூறியுள்ளன. ஆகையால்தான் முடிந்த வரை எனக்குத் தெரிந்தவைகளை நான் சொல்கிறேன்.

கந்தனைத் தொழும் எனது உள்ளம் கண்ணனையும் கொண்டாடத்தான் செய்கிறது. வாடிகன் சிட்டியில் ஏசுவை மடியில் ஏந்திய அன்னை மேரியைக் கண்டதும் உள்ளம் உருகுகிறது. குரானும் சைவ சித்தாந்ததும் ஒத்துப் போகும் சில விஷயங்களில் ஈடுபாடு உண்டாகிறது. அப்படியிருக்கையில் நான் எப்படி எந்தக் குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரியாக முடியும்? ஆத்திகத்தை ஆதரிக்கும் நான் நாத்திகத்திற்கும் எதிரி இல்லை.

ஒரு இந்து என்கிறவன் இன்றைய கணக்குப் படி இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றிய ஏதேனும் ஒரு பண்பாட்டைப் பின்பற்றுகின்றவன். தனது தாய்மொழி எதுவோ அதைக் காதலிக்கின்றவன். அதே நேரத்தில் மற்ற மொழிகளை மதிக்கின்றவன். சாதி மத வேறுபாடுகள் பார்க்காதவன். தனது கருத்துகளை நாகரீகமாக எடுத்து வைக்கத் தெரிந்தவன். குறைந்த பட்சம் முயல்கின்றவன். ஆண்-பெண் சரி நிகர் சமானம் பேணுகின்றவன். பிரச்சனைகளை ஆக்கபூர்வமாகத் தீர்க்க வேண்டும் என்று விரும்புகின்றவன். இது போக எந்தத் தெய்வத்தையும் எந்த வகையிலும் எந்த மொழியிலும் வணங்கிக் கொண்டு எந்த உணவையும் உண்டு கொள்ளட்டும். இதுதான் நான் விரும்பும் இந்து மதம். இந்த நல்ல நிலை நோக்கித்தான் எனது பயணம். என்னோடு கை கோர்த்து வருவீர்களா? இதற்கு மேலும் நான் இந்தப் பதிவின் தலைப்பில் எழுதிய கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமா?

கடைசியாக சொல்ல விரும்புவது....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்க் கவர்ந்தற்று

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்

அன்புடன்,
கோ.இராகவன்

16 comments:

said...

"மனிதன், தமிழன், இந்தியன், மானிடன் == இந்து"

யார் மீதும் பேதம் இல்லை;
யார் மீதும் கோபம் இல்லை;
யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை;
-ஏனெனில்,
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

said...

இராகவன் அண்ணா,

ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கீங்க போலிருக்குதே :).

இன்று செத்தால் நாளைக்கு பால் அவ்வளவு தான் வாழ்க்கை என்பது தெரியாமல் பலர் இருக்கிறார்கள்.

இருக்கிறவரை இப்படி ஒருத்தன் இருந்தான், அவன் நல்லவன், சமுதாயத்திற்கு நல்லது செய்தான் என்று பெயர் எடுத்தால் போதும்.

இதன் இடையிலே ஏன் மதம், இனம், மொழி, நிற, சாதி வேறுபாடுகள்.

உனக்கு பிடிச்சதை நீ செய்துகோ, எனக்கு பிடிச்சதை நான் செய்துக்கிறேன் என்று எப்போ நினைக்கிறோமே அப்போ தான் இந்த உலகம் அமைதி பெறும்.

வாழ்க வளமுடன்.

said...

ராகவன்,
நன்றாகச் சொன்னீர்கள். உருவ வழிபாடு, அருப வழிபாடு, சைவம், வைணவம், சிறுதெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடு போன்ற எண்ணற்ற வழிபாடுகளின் கலவையையே இன்று இந்துமதம் என்கிறோம். இந்துக்களுக்கென பொதுவான புனித நூலோ, பொதுவான கடவுளோ இல்லை. உண்மையான இந்துவுக்கு பைபிளோ, குரானோ, பகவத் கீதையோ எல்லாம் ஒன்றுதான் - தனது நியாயமான சுதந்திரத்தை, விருப்பத்தை, நம்பிக்கையை மறுக்காத வரை.

said...

இந்து மதத்தின் பெருமையே அதன் பன்முகத்தன்மையில்தான் உள்ளது. இந்து மதத்தின் நெறிமுறை களை தனி தனியே பிரிக்க முடியாது. அது ஒரு வாழ்க்கை முறை. இதில் வெறும் காற்றை சுவாசித்து வாழும் சித்தர்களும் உண்டு, அசைவம் படைக்கும் கடவுள்களும் உண்டு. அனைத்தும் இந்து மதத்தை சார்ந்ததுதான்.

said...

கடைசியாக நீங்கள் எழுதிய பெரிய பாரா உண்மையிலேயே இந்து என்பதற்கான விளக்கம் புதிதயதல்ல. அதனால் தான் வந்தோரை எல்லோரும் நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறறோம்.

இந்துக்கள் அப்படி அல்ல என அவர்களுள் சிலரே குற்றம் சாட்டம் பொழுது மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்.

வருங்காலப் பொய்யாக்குவோம் என்பது நாம் செய்ய வேண்டியது. அவசியத் தேவை. அதை அடுத்தவரிடத்தில் எதிர்பார்ப்பதை விட நம்மில் இருந்தே தொடங்குவது அந்த விருப்பத்தை உண்மையாக்கும்.

அருமையான பதிவு.

said...

வாடிகன் சிட்டியில் ஏசுவை மடியில் ஏந்திய அன்னை மேரியைக் கண்டதும் உள்ளம் உருகுகிறது. //

அடடா..

அது சரி ராகவன், அதென்ன ரெண்டு நாளா ரொம்ப சூடா இருக்கீங்க?

இந்த ரெண்டு பதிவையும் எழுதி முடிச்சதும் மனசு ஆறிருச்சா?

Cool down :-)))

said...

உண்மையான இந்துவுக்கு பைபிளோ, குரானோ, பகவத் கீதையோ எல்லாம் ஒன்றுதான் - தனது நியாயமான சுதந்திரத்தை, விருப்பத்தை, நம்பிக்கையை மறுக்காத வரை.//

நன்றாய் நறுக்கென்று சொன்னீர்கள் முத்து.

said...

இராகவன் அண்ணா,

ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கீங்க போலிருக்குதே :).//

அதானே.. ஏன், என்னாச்சு? யார் மேல கோபம்?

said...

//தங்கள் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள் வங்காளிகளும் மலையாளிகளும். ஆனால் அவர்கள் மொழியை வளர்க்க அரசியல்வாதிகளை நம்புவதில்லை. பொறுப்பை அவர்கள் ஊர் எழுத்தர்களும் அறிஞர்களும் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த நிலை இங்கும் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.//

Bulls eye JieRaa.

said...

நல்ல பதிவு. பன்முகத் தன்மை கொண்ட இந்துமதத்தை ஒருமுகப் படுத்துவதாலேயே குழப்பங்கள் ஏற்படுகின்றன.

said...

நன்றிகள் பல ஆயிரம்..ஆணித்தரமாக இதை எழுதியதற்கு....

said...

நான் தனியாகப் பின்னூட்டம் வேறு போட்டுச் சொல்ல வேண்டுமா என்ன? :-) நாம் இந்த விஷயத்தில் முழுவதும் ஒத்துப் போகிறோம்.

said...

//tbr.joseph said...
இராகவன் அண்ணா, //

இராகவன் நீங்க சொல்லவேயில்லை டை(Die) அடிப்பீங்கன்னு. இல்லை உங்களோட அண்ணனும் மகரந்தத்தில் எழுதுறாரா?

:-)

said...

ohh sorry that is dye. hehe.

said...

once again mistake, I think that one is written by paranjothi.

once again sorry. :-(

:-)

said...

அருமையானதொரு பதிவு.