Monday, February 12, 2007

4ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

குளித்து முடித்துக் கிளம்பத் தயாராக இருந்தார் சுந்தரராஜன். கண்ணன் ஏற்கனவே அலுவலகம் கிளம்பிச் சென்றிருந்தான். காலை டிபனாகத் தோசையைச் சுட்டுக் கொண்டிருந்தாள் வாணி.

"அம்மா, வாணி. நான் கெளம்புறேம்மா. நேரமாச்சு. ஒங்க அத்த காத்துக்கிட்டிருப்பா."

"அப்பா. ஒரு நிமிஷம் இருங்க. தோச சுட்டாச்சு. சாப்ட்டுப் போங்கப்பா." வாணி சுந்தரராஜனை அப்பா என்றுதான் அழைப்பது வழக்கம். சிவகாமியும் அவளுக்கு அம்மாதான்.

சரியென்று மேசையில் உட்கார்ந்தார் சுந்தரராஜன். உள்ளேயிருந்து வந்தார் ராஜம்மாள். "என்ன சம்மந்தி. கெளம்பியாச்சு போல இருக்கு. கார நீங்களே ஓட்டீருவீங்க. ஒங்களுக்கு டிரைவரும் வேண்டாம்." உள்ளே வாணியைப் பார்த்து, "வாணி, மாமாவுக்குச் சாப்புட டிபன் குடு. வீட்டுக்குக் கெளம்பக் காத்திருக்காரு பாரு." வாணிக்கு அவள் தாயின் பேச்சு எரிச்சலைத் தந்தது. சற்று இங்கிதம் இல்லாமல் பேசுகிறவர் ராஜம்மாள். கேட்டால் வெளிப்படையாக எதையும் சொல்வதாகச் சொல்வார்.

தட்டில் இரண்டு தோசைகளை எடுத்து வந்து கொடுத்தாள் வாணி. "என்னம்மா இன்னைக்கும் தோசையா? நாலஞ்சு நாளா தோசையவே சுடுற. அரவிந்த் இட்டிலியப் பெசஞ்சுட்டான்னு....இட்டிலியே சுடாம இருக்க முடியுமா?" சுந்தரராஜனை நோக்கி, "நீங்க சொல்லுங்க சம்மந்தி, வாய்க்கு மெத்துன்னு இட்லி இல்லாம என்னதான் டிபனோ!" ராஜம்மாளின் இட்டிலிப் பிரியத்தை தெரிந்திருந்த சுந்தரராஜன் புன்னகைத்தார்.

"சரி. சம்மந்தி. நீங்க சாப்புடுங்க. குறுக்கால நாம் பேசிக்கிட்டிருக்கேன். வீட்டுல எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க. சந்தியாவும் கொழந்தையும் நல்லாயிருக்காங்கள்ள. கொழந்தைக்கு என்ன பேரு?"

"சுந்தர்னு பேரு வெச்சிருக்கோம். ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. நீங்களும் வாணி வரும்போது பெசண்ட் நகருக்கு வாங்களேன்." ஒரு மரியாதைக்குக் கூப்பிட்டார்.

"நானா? வேண்டாஞ் சம்பந்தி. எங்க மாப்பிள்ளையே போறதில்லை. அப்புறம் நானெப்படிப் போறது. மாப்பிளைதான எங்களுக்குப் பெருசு. வாணி என்னவோ வரப்போக இருக்கா. அவ மாப்பிள்ளைக்குச் சமாதானம் சொல்லிக்கிருவா. நான் எங்க வீட்டுக்காரங்களுக்குச் சொல்லனுமே."

அழைத்ததற்கு நொந்து கொண்டார் சுந்தரராஜன். வாணி உதவிக்கு வந்தாள். "அம்மா. நீ சும்மாயிரு." சுந்தர்ராஜனிடம் ஒரு பையைக் குடுத்தாள். "அப்பா, இதுல நெல்லிக்கா இருக்கு. நேத்து நடேசன் பார்க் கிட்ட வித்துக்கிட்டிருந்தான். நல்லாயிருந்துச்சுன்னு வாங்கினேன். அம்மா கிட்ட குடுத்து ஊறுகா போடச் சொல்லுங்க. நான் வந்து கொஞ்சம் எடுத்துக்கிறேன்."

பையை வாங்கி வைத்துக் கொண்டு டிபனையும் முடித்துக் கொண்டு தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சுந்தரராஜன். அவர் புறப்பட்டும் போனதும் ராஜம்மாளிடம் வந்து சீறினாள். "ஏம்மா! வாயை வெச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டியா? வீட்டுக்குக் கூப்டா, வர்ரேன்னு சொல்லீட்டுச் சும்மாயிருக்க வேண்டியதுதான. அத விட்டுட்டு...தேவையில்லாம பேசுனா எப்படி?"

"ஐயோ! இதென்ன கூத்து. ஒரு பேச்சு பேசுனதுக்கு இந்தப் பாடா! நான் என்ன இல்லாததையா சொல்லீட்டேன். சந்தியா செஞ்சது மாதிரி நம்ம குடும்பத்துல யாராவது செஞ்சிருந்தா இந்நேரம் வெட்டிப் போட்டிருப்பாங்க. ஏன்...நீயே இருந்தாலும் அதுதான் நடந்திருக்கும்." ஆவேசத்தோடு சொன்னார் ராஜம்மாள்.

"அப்படியாம்மா...சரி...நானாயிருந்தா யாரு வெட்டீருப்பா? அப்பாதான் நான் காலேஜ் படிக்கிறப்பவே தவறீட்டாரே." நக்கலாகக் கேட்டாள் சந்தியா.

"ஏண்டி...ஒங்கண்ணன் இல்லையா? கிருஷ்ணன் என்ன சும்மாவா இருப்பான்?" உளறிக் கொட்டினார் ராஜம்மாள்.

"ஓ அண்ணனா! அண்ணியைக் கவுன்சிலராக்கீட்டு, அத வெச்சே வியாபாரம் செய்ற அண்ணந்தான. ஊருல அண்ணனப் பத்தி என்ன பேசுறாங்கன்னு ஒனக்குத் தெரியுமா? கையைல காச வெச்சாப் போதுமாம். வேலையக் கச்சிதமா முடிஞ்சிருமாம். அந்த அண்ணன் என்னைய வெட்டுவாரா?" சொல்லி விட்டுச் சிரித்தாள்.

மகனைச் சொன்னதும் ராஜம்மாளுக்குக் கோவம் வந்தது. "நல்லாயிருக்குடி. ஊருல ஒலகத்துல இல்லாததயா கிருஷ்ணன் செஞ்சிட்டான். இன்னைக்கு லஞ்சம் வாங்காதவங்க யாரு? என்னவோ இவன் ஒருத்தன் மட்டும் குத்தம் செஞ்சாப்புல!"

"ஆகா. அப்ப ஊருல இருக்குற பொண்ணுங்கள்ளாம் இதே மாதிரி கொழந்த பெத்துக்கிட்டா சந்தியா செஞ்சதும் சரியாயிரும் இல்ல! அண்ணன் செய்ற தப்புகள ஏத்துக்குற ஒனக்கு ஒரு பொண்ணு கொழந்த பெத்துக்கிறத ஏத்துக்க முடியலை. ம்ம்ம். லஞ்சம் வாங்குறத ஏத்துக்க முடியுறதுக் காரணம்...நாமளும் அந்தத் தப்பச் செய்றதுதான். நம்ம செய்யாத வரைக்கும் தப்புன்னு சொல்வோம். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரியாயிரும். நீ மட்டுமில்லம்மா...ரொம்பப் பேரு இப்பிடித்தான். ஒன்னைய மட்டும் சொல்லி என்ன புண்ணியம்." சொல்லி விட்டு சமையலைறைக்குள் புகுந்தாள் வாணி. அரவிந்தைக் கவனிக்கப் போனார் ராஜம்மாள்.

சுந்தரராஜன் பெசண்ட் நகருக்கு வரும் பொழுது சந்தியா அலுவலகத்திற்குக் கிளம்பிப் போயிருந்தாள். சிவகாமியுடனும் சுந்தருடனும் அன்றைய பொழுது நல்லபடி போனது. சம்பந்தியம்மாள் பேசியதை மனைவியிடம் சொன்னாள். சிவகாமிக்கு ராஜம்மாளையும் வாணியையும் தெரியுமாதலால் பெரிது படுத்தவில்லை.

அன்று அலுவலகத்தில் சந்தியாவிற்கு நிறைய வேலை. முதல்நாள் அலோக்கைப் பார்ப்பதற்காக விரைவில் கிளம்பி விட்டதால் வேலைகள் கொஞ்சம் மிச்சமிருந்தன. நடுவில் அழைத்த கதிருக்கும் தான் வேலையாக இருப்பதாகச் சொல்லி விட்டாள். கதிர் யாரென்று கேட்கின்றீர்களா? அலோக்கைப் போலத்தான். ஆனால் உள்ளூர்க்காரன். தி.நகரில் இருக்கும் ஒரு அஞ்சுமாடிக் கடைக்காரரின் மகன். சந்தியாவிற்கு நல்ல பழக்கம். இப்படி யாரெல்லாம் பழக்கமென்று இப்பொழுது பட்டியல் போட வேண்டாம். கதை குழம்பு என்றால் அவர்கள் கடுகு. அங்கங்கு தென்படுவார்கள்.

மாலை வீட்டிற்கு வந்தவள் தந்தையோடு கண்ணன் வாங்கப் போகும் கார் பற்றியும் வாணி, அரவிந்த் நலத்தையும் பற்றிப் பேசினாள். பிறகு இரவு உணவை முடித்து விட்டு சுந்தரராஜனும் சிவகாமியும் தூங்கப் போனார்கள். சுந்தரோடு தன்னறைக்குள் புகுந்த சந்தியா, மகனைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு தன்னுடைய மடிக்கணினியை இயக்கினாள். மின்னஞ்சல்களைப் பார்க்கவும் நண்பர்களோடு சாட்டிங் செய்யவும்தான்.

sandhyasundararajan@gmail.com என்பதுதான் அவளது மின்னஞ்சல் முகவரி. உண்மை முகவரி என்று ஒன்றிருந்தால் போலி என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும். ஆனால் இங்கு இரண்டு போலிகள் angelexotica@gmail.com மற்றும் drippingambrosia@yahoo.com என்பவைதான் அந்தப் போலிகள். இதன் மூலம்தான் சாட்டிங் செய்து நட்பு(!) வட்டாரத்தை உருவாக்கி வைத்திருந்தாள் சந்தியா. ஆனால் பெரும்பாலும் ONS. அதென்ன ONS? One Night Stand.

முதலில் சந்தியா தன்னுடைய உண்மை மின்னஞ்சலுக்குள் நுழைந்தாள். வந்திருந்த மின்னஞ்சல்களில் ஒன்று.....சரவணன். சரவணன். சரவணன். ஆமாம். அவனுடைய மின்னஞ்சல்தான். அதைப் பார்த்ததும் படக்கென்று ஒரு மகிழ்ச்சிப் பூ மொட்டு விட்டது. ஆனால் அந்தப் பூ இரும்புப் பூ போல கனமாக இருந்தது. ஒருவிதத் தயக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் அந்த மின்னஞ்சலைத் திறந்தாள் சந்தியா. ஆங்கிலத்தில் இருந்த மின்னஞ்சலை உங்களுக்காக நான் தமிழில் மொழி பெயர்த்துத் தருகிறேன். ஏனென்றால் யுனிகோடு வழியாக மின்னஞ்சல் அனுப்ப சரவணனோ சந்தியாவோ இணையத்தில் வலைப்பூக்கள் மூலமும் மன்றங்கள் மூலமும் தமிழ் வளர்க்கவில்லை. ஆங்கிலத்தில் படிக்க விரும்புகிறர்களுக்காக ஆங்கிலத்திலும் கொடுத்திருக்கிறேன்.

"தேனே சந்தியா,

எப்படி இருக்க? நான் நல்லா இருக்கேன். அங்க என்ன நடக்குது? இங்க நெதர்லாண்டுல எல்லாம் நல்லாப் போகுது. அடுத்த வாரம் செவ்வாய்க் கெழமை இந்தியா வர்ரேன். சென்னைக்கு வர்ரேன். இந்த முறை ரெண்டு மாச லீவு. ஒன்னோட நம்பர் மாத்தீருந்தீன்னா புது நம்பர் அனுப்பு. வந்து பேசிக்கலாம். பேச்சு மட்டுமில்ல........ ;-)

இனிய முத்தங்கள்,
சரவணன்"

sandhya sweety,

how r u? i'm fine. whatz up there? things r fine here at NL. will be there in india by tuesday next week. itz two months this time. if u hv changed ur no, mail me. let us talk. not just talk... ;-)

sweet kisses,
Saravanan

சின்ன மெயில்தான். ஆனால் சந்தியாவை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. சரவணன் சரவணன் என்று அந்தப் பெயரை மட்டும் மனசுக்குள் மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தாள். இன்றா? நேற்றா? கல்லூரிக் காலத்திலிருந்தே பழக்கம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் சந்தியாவின் பெண்மையைக் கண்டுபிடித்து அவள் இனிமேல் கன்னியல்ல என்று சொன்னவனே சரவணந்தான். சந்தியாவின் நெருங்கிய...மிகச் சிறந்த...அக்கறை கொண்ட...அன்பு கொண்ட நண்பன்.

நெதர்லாண்டில் பணி புரிகின்றான். இந்தியாவை விட்டுச் சென்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன்பு அவனும் சந்தியாவும் போகாத பார்ட்டி இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை. கூடாத கூட்டமில்லை. சரவணனுக்குச் சொந்த ஊர் சென்னைதான். வாழ்க்கையை மிகச் சுதந்திரமாக அனுபவிக்க விரும்பும் அவன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சந்தியா பெண். சரவணன் ஆண். அவ்வளவுதான் வேறுபாடு. புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

சரவணனின் மெயிலைப் படித்து விட்டுத் திரும்பிக் கட்டிலைப் பார்த்தாள். சுந்தரின் முகம். அது சரவணனின் முகம். அதுதான் அவளை அடிக்கடித் துன்புறுத்தும் முகம். படபடவென்று அலைபேசியை எடுத்து அழைத்தாள். "ஹலோ, தேன். தூங்கீட்டியா?"

தொடரும்....

21 comments:

said...

//கள்ளியிலும் பால்//

இது என்ன கள்ளா? பாலா? ஒண்ணும் புரியல்லை நந்தலாலா!

said...

அடுத்த செவ்வாய் எப்ப வரும்னு இருக்கு???

said...

எடுத்த சிக்கல் மிகுந்த களத்தில் கதையைத் துணிச்சலாக நடத்திக்கிட்டுப் போறீங்க.. கடுகளை எல்லாம் கரெக்ட்டா தாழிச்சு குழம்பைப் பக்குவாம வ்ச்சு முடிப்பீங்களான்னு ஆர்வம் எகிறுதுங்கோ...

said...

// இலவசக்கொத்தனார் said...
//கள்ளியிலும் பால்//

இது என்ன கள்ளா? பாலா? ஒண்ணும் புரியல்லை நந்தலாலா! //

கள்ளியில் கள்ளிறக்க முடியுமா கொத்தனாரே? ;-) கள்ளியில் பால்தான் இருக்கும். இதிலென்ன சந்தேகம்.

ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். உனக்கென்ன மேலே நின்றாய் பாடல். சிம்லா ஸ்பெஷல் படத்திற்காக மெல்லிசை மன்னர் இசையில் வாலியின் பாடல். பாலு பாடியது.

said...

// வெட்டிப்பயல் said...
அடுத்த செவ்வாய் எப்ப வரும்னு இருக்கு??? //

இன்னும் ஒரு வாரத்துல வரனும்னு கணக்கு இருக்கு வெட்டி. வாரத்துக்கு ஏழு நாளு. தெரியுந்தானே ;-)

said...

// தேவ் | Dev said...
எடுத்த சிக்கல் மிகுந்த களத்தில் கதையைத் துணிச்சலாக நடத்திக்கிட்டுப் போறீங்க.. கடுகளை எல்லாம் கரெக்ட்டா தாழிச்சு குழம்பைப் பக்குவாம வ்ச்சு முடிப்பீங்களான்னு ஆர்வம் எகிறுதுங்கோ... //

எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. :-) அடுத்து என்ன நடக்குதுன்னு பாப்பம். சரவணன் வேற இந்தியாவுக்கு வர்ரானாமே. சும்மாவா இருப்பான்? நல்லவந்தான்..........ஆனா....

said...

//angel_exotica@gmail.com மற்றும் drippingambrosia@yahoo.com//

ம்ம்ம்ம்.. ஒரு வகையாத்தான் யோசிக்கிறீங்க.

:))

said...

// சிறில் அலெக்ஸ் said...
//angel_exotica@gmail.com மற்றும் drippingambrosia@yahoo.com//

ம்ம்ம்ம்.. ஒரு வகையாத்தான் யோசிக்கிறீங்க.

:)) //

இதென்னங்க கொடுமையா இருக்கு! அது சந்தியாவோட ஐடிகள். சந்தியா யோசிச்சுத் தனக்குப் பொருத்தமா இருக்கும்னு வெச்சுக்கிட்ட ஐடி. நீங்க என்னடான்னா நான் யோசிக்கிறேன்னு சொல்றீங்களே! ம்ம்ம்...இதெல்லாம் சரியில்லை சொல்லீட்டேன்.

said...

எனக்கு எப்பவுமே சந்தேகம்தான் கடுகு ஏன் குழம்புல போடணும்னு! இப்ப மட்டும் தெரியவா போகுது? கடுகை ஏன் தாளிச்சாங்கன்னு கேட்டா என் பாட்டியே முறைப்பாங்க - நான் கேப்பனா உங்க கிட்ட - கேக்க மாட்டேன் - இதெல்லாம் கொதிக்கிற எண்ணை மேட்டர், சின்னப் புள்ளை நான் கிட்ட வரலை! :)

எட்டி நின்னு பாத்துக்கிறேன்! :)

said...

ராகவன் சார்....

அருமை :)))

பிறகு வருகிறேன்...

said...

அருமையா கொண்டு போறீங்க.... சீரியல்லையே வாரத்துக்கு அஞ்சு நாள் போடுறான். நீங்க மட்டும் ஏன் வாரத்துக்கு ஒரு தடவதான்னு அடம் புடிக்கிறீங்க????

said...

அடுத்தவங்க மெயில படிக்கிறதே தப்புன்னு சொல்லிட்டு இப்ப சந்தியா(?)வுக்கு வந்த மெயில மொழிபெயர்த்து வேற கொடுத்திருக்கீங்க.... ம்ம்ம்....

சந்தியாவ பத்திரமா பாத்துக்குங்க... சொல்லடி நிறைய படும் போல இருக்கு!!!

said...

// Madura said...
எனக்கு எப்பவுமே சந்தேகம்தான் கடுகு ஏன் குழம்புல போடணும்னு! இப்ப மட்டும் தெரியவா போகுது? கடுகை ஏன் தாளிச்சாங்கன்னு கேட்டா என் பாட்டியே முறைப்பாங்க - நான் கேப்பனா உங்க கிட்ட - கேக்க மாட்டேன் - இதெல்லாம் கொதிக்கிற எண்ணை மேட்டர், சின்னப் புள்ளை நான் கிட்ட வரலை! :) //

என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க மதுரா? கடுகு தாளிக்காத கொழம்பெல்லாம் கொழம்பா? சாப்புடும் போது நடுவுல பல்லுல நடுக்குன்னு கடிபட்டு அப்படியே ஒடஞ்சு கரஞ்சு போகுற கடுகுல இருக்குற சொகம் கொழம்புலயே இல்லையாமே!

// எட்டி நின்னு பாத்துக்கிறேன்! :) //

அடடா! சரி. உங்க விருப்பம். ஆனா பாருங்க.

said...

// கோபிநாத் said...
ராகவன் சார்....

அருமை :)))

பிறகு வருகிறேன்... //

சரி கோபிநாத். நேரம் கிடைக்கிறப்போ வாங்க.

said...

// ஜி said...
அருமையா கொண்டு போறீங்க.... சீரியல்லையே வாரத்துக்கு அஞ்சு நாள் போடுறான். நீங்க மட்டும் ஏன் வாரத்துக்கு ஒரு தடவதான்னு அடம் புடிக்கிறீங்க???? //

ஜி, உண்மையச் சொல்லட்டுமா? அடமெல்லாம் இல்ல. இருக்கப்பட்டவங்க படபடன்னு எழுதீர்ராங்க. ஒங்களப் போல உள்ளவங்க வேகத்துக்கு நம்ம ஈடு குடுக்க முடியுமா? இம்முன்னா எரநூறு மும்முன்னா முந்நூறு போட நான் வெட்டியா ஜியா அருட்பெருங்கோவா?

said...

// அருட்பெருங்கோ said...
அடுத்தவங்க மெயில படிக்கிறதே தப்புன்னு சொல்லிட்டு இப்ப சந்தியா(?)வுக்கு வந்த மெயில மொழிபெயர்த்து வேற கொடுத்திருக்கீங்க.... ம்ம்ம்....//

இந்தாப்பா சந்தியாகிட்ட நான் உத்தரவு வாங்கீட்டுதான் மெயிலைப் போட்டேன். ரொம்பச் சந்தேகமிருந்தா sandhyasundararajan@gmail.comக்கு மெயில் அனுப்பிக் கேளு. நீ ஒருவேளை angelexotica@gmail.comக்கு மெயில் அனுப்புனாலும் அனுப்புவ!

// சந்தியாவ பத்திரமா பாத்துக்குங்க... சொல்லடி நிறைய படும் போல இருக்கு!!! //

அந்தச் சொல்லடி நல்லவன் கிட்ட இருந்து வந்தா சரி. இல்லைன்னா சந்தியா doesnt care.

said...

"கதை குழம்பு என்றால் அவர்கள் கடுகு. அங்கங்கு தென்படுவார்கள்."

சமையல் மேட்டர் இல்லாமல் ராகவன் எழுத்தா? எழுதுங்கய்யா! எழுதுங்க. ரொம்ப நல்லாயிருக்கு! கள்ளிப்பாலைத்தான் சொன்னேன். கள்ளிப்பால் சின்னப் புள்ளைங்களுக்குத்தான் ஆகாது.நமக்கு ஒன்னும் செய்யாது.

said...

"கதை குழம்பு என்றால் அவர்கள் கடுகு. அங்கங்கு தென்படுவார்கள்."

சமையல் மேட்டர் இல்லாமல் ராகவன் எழுத்தா? எழுதுங்கய்யா! எழுதுங்க. ரொம்ப நல்லாயிருக்கு! கள்ளிப்பாலைத்தான் சொன்னேன். கள்ளிப்பால் சின்னப் புள்ளைங்களுக்குத்தான் ஆகாது.நமக்கு ஒன்னும் செய்யாது.

said...

ராகவன் சார்...

ராஜம்மாள் இட்லி பிரியை என்பதை சூப்பரா சொல்லிட்டிங்க...

\\லஞ்சம் வாங்குறத ஏத்துக்க முடியுறதுக் காரணம்...நாமளும் அந்தத் தப்பச் செய்றதுதான். நம்ம செய்யாத வரைக்கும் தப்புன்னு சொல்வோம். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரியாயிரும்.\\

நிஜம் சுடும் என்பதற்கு அருமையான விளக்கம் ஜி.ரா.சார்...

\\அதுதான் அவளை அடிக்கடித் துன்புறுத்தும் முகம். \\

சரவணன் அன்பு கொண்ட நண்பன்னு சொல்றிங்க ஆனா அவன் முகம் துன்புறுத்தும் முகம்ன்னும் சொல்றிங்க

இங்கதான் குழப்பம்...சரி..சரி..அடுத்த செவ்வாய் வரை குழப்பம் தானா???

said...

// கோபிநாத் said...
ராகவன் சார்...
\\லஞ்சம் வாங்குறத ஏத்துக்க முடியுறதுக் காரணம்...நாமளும் அந்தத் தப்பச் செய்றதுதான். நம்ம செய்யாத வரைக்கும் தப்புன்னு சொல்வோம். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரியாயிரும்.\\

நிஜம் சுடும் என்பதற்கு அருமையான விளக்கம் ஜி.ரா.சார்... //

அதுதான் சார் உண்மை. நம்ம செய்யாத வரைக்கும் எதுவும் தப்புதான். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரிதான். ஆகையால் வாய்ப்புக் கிடைக்குற வரைக்குந்தான் ஒருத்தன் நல்லவன்.

//\\அதுதான் அவளை அடிக்கடித் துன்புறுத்தும் முகம். \\

சரவணன் அன்பு கொண்ட நண்பன்னு சொல்றிங்க ஆனா அவன் முகம் துன்புறுத்தும் முகம்ன்னும் சொல்றிங்க

இங்கதான் குழப்பம்...சரி..சரி..அடுத்த செவ்வாய் வரை குழப்பம் தானா??? //

கோபிநாத், இதுல குழப்பம் என்ன? தீதும் நன்றும் பிறர் தர வாராதானே? ;-) அடுத்த வாரம் அது தெரிஞ்சு போகும்.

said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)