Tuesday, February 06, 2007

3ம் பகுதி கள்ளியிலும் பால்

முந்தைய பகுதி இங்கே

கேள்வி: ஜயண்ட் வீல் ராட்டிணம் எல்லாருக்கும் தெரியும். அதில் ஏறிச் சுற்றுவது நன்றாக இருக்கும். அதே ஜயண்ட் வீல் கரகரவென வேகமாகச் சுற்றினால்?

விடை:
1. மண்டை கிறுகிறுக்கும்.
2. ஒரு மாதிரி உமட்டி வாந்தி வருவது போல இருக்கும். அதனால் வாயைத் திறக்கவும் அச்சமாக இருக்கும்.
3. சத்தமில்லாமல் உடம்பு இறுகிப் போய் அசையாமல் இருக்கும்.

மேலே சொன்ன விடையின் நிலையில்தான் எல்லாரும் இருந்தார்கள். படிப்பு, வேலை, வீடு, திருமணம் வேண்டாம் என்று அத்தனை முடிவுகளையும் சந்தியாதான் எடுத்திருந்தாள்.ஆனால் இப்படி வயிற்றில் குழந்தையோடு வந்து பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்றால்?

முதலில் சுதாரித்தது கண்ணன். "என்ன செஞ்சிருக்க சந்தியா! நம்ம மானமே போச்சு. இனிமே நம்ம சொந்தக்காரங்க யார் மொகத்துலயும் முழிக்க முடியாது. வாணி வீட்டுல என்னவெல்லாம் பேசப் போறாங்களோ! இனிமே அவங்க வீட்டுப்பக்கமும் போக முடியாது." திடீர்ப் படபடப்பு. என்ன செய்வதென்றே புரியாமை.

சுந்தரராஜனும் சிவகாமியும் வேதனையோடு அமைதியான சந்தியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"கண்ணா! எதுக்கு இப்பிடிக் கத்துற? நான் என்னோட முடிவைச் சொல்லீருக்கேன். அவ்வளவுதான!"

"சந்தியா, நான் கத்துறேன்னு மட்டும் சொல்ற. ஆனா ஏன்னு புரிஞ்சுக்கலையே! ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு கொழந்தையோட இருந்தா...இல்ல...கொழந்த பெத்துக்கிட்டா எல்லாரும் எப்படிப் பேசுவாங்க! அது ஏன் ஒனக்குத் தெரிய மாட்டேங்குது? உன்ன யாரோ ஏமாத்தீட்டாங்கன்னும் பேசலாம்.....யார் கிட்டயோ நீ தொடர்பு வெச்சிருக்கன்னும் பேசலாம்.....oh my god....sandhya please understand."

"stop it kanna. நீ இப்படி ஒளர்ரத என்னால கேக்க முடியலை. ஊருல இருக்குறவங்கதான் மனுசங்களா? என்னோட விருப்பங்கள் பெருசில்லையா?"

"விருப்பமெல்லாம் சரி. ஆனா ஒலகத்துக்கு முன்னாடி ஒன்னையும் குழந்தையையும் எப்படி அடையாளம் காட்டப் போற? கொழந்தைக்கு அப்பா யாருன்னு சொல்ல ஒன்னால முடியுமா? தகப்பன் பேர் தெரியாத கொழந்தைன்னு இருந்தா அம்மாவுக்கு என்ன பேர் கெடைக்கும்னு தெரியுமா? ஐயோ..பேச வெக்கிறயே சந்தியா!"

சந்தியாவுக்குக் கொஞ்சம் சுருக்கென்று தைத்தது. "ஆமாண்டா...பேசுறதெல்லாம் பேசீட்டு நான் பேச வெக்கிறேன்னு சொல்லு! என்ன சொன்ன? தகப்பன் பேர் தெரியாத கொழந்தை இருந்தா அம்மாவுக்கு என்ன பேரா? விபச்சாரி. அதான? அதான சொல்ல வர்ர? சொல்லு. உலகத்துல எந்தத் தப்பு செய்றவனும் இருக்கலாம். ஆனா இது மட்டுந்தான பெருந்தப்பு. ஊழல் செஞ்சவனும் கொள்ளையடிச்சவனும் ஏமாத்துனவனும் பெரிய ஆளுங்க. ஆனா கல்யாணம் ஆகாம ஒருத்தி கொழந்த பெத்தா...விபச்சாரி. பொம்பளைங்களச் சொல்ல மட்டும் ஒன்னாக் கெளம்பீருவீங்களே! திருந்துங்கடா! எங்க திருந்தப் போற! நீயும் ஒரு ஆம்பிளைதான!"

சிவகாமி குறுக்கே புகுந்தார். கண்ணனை மேற்கொண்டு எதுவும் பேச விடாமல் நிறுத்தினார். சுந்தரராஜனிடம் "என்னங்க, நம்ம பிள்ளைங்க சண்ட போடுறத என்னால பாக்க முடியல. நிலமை இவ்வளவுக்கு வந்தாச்சு. இன்னமும் சும்மாயிந்தா சரியில்ல. ஏதாவது முடிவெடுக்கிறதுதான் நல்லது."

சிவகாமியின் கூற்றைத் தலையை அசைத்து ஆமோதித்தார் சுந்தரராஜன். சந்தியாவைப் பார்த்து, "நீ இன்னமும் கொழந்த பெத்துக்கிறதுங்குற முடிவுலதான் இருக்கியா?" என்று கேட்டார்.

"ஆமாம்ப்பா. அதான் செய்யப் போறேன். என்னோட கொழந்தைய நான் பெத்துக்கத்தான் போறேன். இந்த ஊர் சரியில்லைன்னா....வேற ஊரோ நாடோ போய்க்கிறேன். நீங்களும் அம்மாவும் எங்கூடயே வந்துருங்க. எனக்கு யார் துணை இல்லைன்னாலும் ஒங்க துணை வேணும். இதுதான் என்னோட முடிவு."

"ம்ம்ம்...சரி. அப்ப நம்ம ஒரு முடிவுக்கு வந்திரலாம். கண்ணா நீ கூடிய சீக்கிரம் நல்ல நாள் பாத்து நம்ம டி.நகர் வீட்டுக்குப் போயிரு. அங்க வாடகைக்கு இருக்குறவங்கள காலி செய்யச் சொல்லீரலாம். வாணியும் அரவிந்தும் அடுத்த மாசம் நேரா அங்கயே வரட்டும். ஏன்னா அவங்க வீட்டுல இருந்து கொஞ்ச நாளைக்கு யாராவது வரப் போக இருப்பாங்க. சந்தியா பேறு காலத்துக்குக் காத்திருக்குறப்போ வர்ரவங்க போறவங்க ஏதாவது பேசுவாங்க. அது அவளுக்கும் நல்லதில்லை. அவ கொழந்தைக்கும் நல்லதில்ல. நானும் அம்மாவும் சந்தியா கூட இங்க இருக்கோம். அப்பப்ப டி.நகருக்கும் வருவோம். சரிதானே?" என்று மகனிடம் முதலில் முடிவைச் சொன்னார். கண்ணனும் அதை ஏற்றுக் கொண்டான்.

சந்தியாவிடம் அடுத்தது. "சந்தியா, நீ செய்றது சரியா தப்பான்னு விவாதம் செஞ்சா அதுக்கு முடிவே இருக்காது. சரீன்னு சொல்றவங்களும் தப்புன்னு சொல்றவங்களும் ஆயிரக்கணக்குல காரணங்கள் சொல்வாங்க. உன்னோட இந்த முடிவு அடுத்தவங்களுக்குத் துன்பம் கொடுக்காத முடிவுதான். ஒத்துக்கிறேன். ஆனாலும் இதால உனக்கும் உன்னோட கொழந்தைக்கும் ஏற்படப் போற துன்பங்களை எடுத்துச் சொன்னோம். அதை எப்படி நீ சமாளிக்கப் போறங்குறது ஒன்னோட பொறுப்பு. அதுக்கு எங்க உதவி எதுவும் வேணும்னா நிச்சயம் செய்வோம். கண்டிப்பாப் பல விதங்கள்ள பேச்சுகள் வரும். சமாளிப்போம். எல்லாம் நல்லபடியா நடந்தாச் சரி."


சுந்தரராஜனின் முடிவு உடனே செயலுக்கு வந்தது. அதற்குப் பிறகு நடந்தவை கீழே.


வல்லினம்

க. வாணி சென்னைக்கு வந்ததும் கண்ணன் அவளிடம் உண்மையைச் சொல்லி விட்டான். அவளும் நிலமையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தாள்.

ச. அன்று அந்தப் பேச்சுப் பேசிய கண்ணன் மட்டும் சந்தியாவுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தான். அதுகூட ஆத்திரத்தில் அல்ல. அப்படிப் பேசி விட்டோமே என்ற வருத்தத்தில்.

ட. சந்தியாவின் அலுவலகத்தில் வெளிப்படையாக artificial insemination உதவியால் குழந்தை பெற்றுக் கொள்வதாகக் கூறி விட்டாள்.

த. அவ்வப்போது சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்த ராஜம்மாள் வகையறாக்களும் சந்தியாவை ஒரு விதமாகப் பேசினார்கள்.

ப. சந்தியாவின் சொந்தக்காரர்களுக்கும் குழந்தை பற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது. முனுமுனுப்புகள் எழுந்தன.

ற. படுக்கையில் கணவன் என்ற பெயரில் சூர்யாவோடும் விஜய்யோடும் கூடிக் கொண்டாடும் உத்தமப் பத்தினிகள் சிலர் சந்தியாவின் முதுகுக்குப் பின்னால் அவளது கற்பைப் பற்றிப் பல் கூசக்கூசப் பேசினர்.


இடையினம்

ய. டி.நகர் வீட்டிற்குக் கண்ணன் குடி போனான்.

ர. குழந்தை அரவிந்த் தாத்தா வீட்டில் வளரட்டும் என்பதற்காக டி.நகருக்கு வந்து விட்டதாக வாணி குடும்பத்தாருக்குச் செய்தி போனது.

ல. வாணிக்குத் துணையாக ராஜம்மாள் வந்து தங்கியிருந்தார். கணவனைப் பறிகொடுத்திருந்த அவருக்குப் பேரனோடு பொழுது போக்குவது மிகவும் பிடித்திருந்தது.

வ. வாணியின் குடும்பத்தார் பெசண்ட் நகர் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தனர்.

ள. சுந்தரராஜனும் சிவகாமியும் அவ்வப்பொழுது டி.நகர் சென்று வருவார்கள். ஊர் பேச்சு அவர்களை வருத்தப்பட வைத்தாலும் பொறுத்துக் கொண்டார்கள்.

ழ. மருமகன் அரவிந்திற்குச் சந்தியா செய்ய வேண்டிய சீர்களைத் தவறாமல் செய்தாள். வாணியும் கண்ணனும் அவைகளை ஏற்றுக் கொண்டார்கள்.


மெல்லினம்

ங. சந்தியாவிற்குச் சுகப் பிரசவம் நடந்து சுந்தர் பிறந்தான்.

ஞ. மகளையும் பேரனையும் சுந்தரராஜனும் சிவகாமியும் நல்லபடி பார்த்துக் கொண்டார்கள்.

ன. வாணி ஏதாவது வாய்க்குச் சுவையாக செய்தால் அதை பெசண்ட் நகர் வரை சென்று சந்தியாவிற்குக் குடுத்தாள்.

ந. சுந்தருக்குத் தங்கச் சங்கிலியும் கைக்காப்பும் வெள்ளித் தண்டையும் வாங்கித் தந்தாள். சாப்பிடுவதற்கு வெள்ளிக் கிண்ணமும் கரண்டியும் சங்கும் கொடுத்தாள்.

ம. தனது மகன் பெயரை ச.சுந்தர் (S.Sundar) என்று பெயரைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்தாள். அம்மாவின் பெயரைத்தான் முதலெழுத்தாகப் பயன்படுத்தலாமே.

ண. மொத்தத்தில் அந்த வீட்டு மனிதர்களுக்குள் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டு அமைதி இருந்தது.


கடையினம்

இப்படி நடந்ததெல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டே தூங்கப் போனாள் சந்தியா. அடுத்த நாள் அவள் வாழ்க்கையைத் தோசையாக்கப் போகும் மின்னஞ்சல் வரப் போவது தெரியாமல். அதாவது அவளுக்குத் தெரியாமலே வாழ்க்கையைத் திருப்பிப் போடும் மின்னஞ்சல்.

தொடரும்...

31 comments:

said...

இது எந்த நூற்றாண்டுல நடக்கற கதை ஜி.ரா???

நமக்கு அடுத்த ஜெனரேஷனா???

said...

சரி... கதை போகட்டும்...

கடைசியா என் கருத்தை சொல்கிறேன்...

said...

ஒரு சுழி, ஆர்பாட்டம் இல்லாம அமைதியான நதி மாதிரி கதை போகுதேன்னு நினைச்சேன். கடைசியில் ஒரு அருவி மாதிரி ஒரு கொக்கி போட்டுட்டீரேய்யா!

said...

// வெட்டிப்பயல் said...
இது எந்த நூற்றாண்டுல நடக்கற கதை ஜி.ரா???

நமக்கு அடுத்த ஜெனரேஷனா??? //

இருபத்தோராம் நூற்றாண்டுலதான். ஏன் இந்த நூற்றாண்டுல நடந்தத கதைக்கு நடுவுல சொன்னாத்தான் நம்புவீங்களா?

said...

// வெட்டிப்பயல் said...
சரி... கதை போகட்டும்...

கடைசியா என் கருத்தை சொல்கிறேன்... //

எப்ப? கதையோட எல்லா அத்தியாயங்களும் முடிஞ்சப்புறமா? சரி. காத்திருக்கிறேன்.

said...

// இலவசக்கொத்தனார் said...
ஒரு சுழி, ஆர்பாட்டம் இல்லாம அமைதியான நதி மாதிரி கதை போகுதேன்னு நினைச்சேன். கடைசியில் ஒரு அருவி மாதிரி ஒரு கொக்கி போட்டுட்டீரேய்யா! //

இந்த அத்தியாயத்துல என்ன நடந்ததுன்னு சொன்னோம். அடுத்த அத்தியாயங்களயும் முந்திய ரெண்டு அத்தியாயங்கள்ளயும் என்ன நடக்குதுன்னு சொல்றோம். அதான் இந்த அத்தியாயம் மட்டும் அமைதியா இருந்த மாதிரி இருக்குது.

said...

//G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
இது எந்த நூற்றாண்டுல நடக்கற கதை ஜி.ரா???

நமக்கு அடுத்த ஜெனரேஷனா??? //

இருபத்தோராம் நூற்றாண்டுலதான். ஏன் இந்த நூற்றாண்டுல நடந்தத கதைக்கு நடுவுல சொன்னாத்தான் நம்புவீங்களா? //

இந்த மாதிரி ஒரு பெண்ணையோ குடும்பத்தையோ நேர்ல பாத்திருக்கீங்களா???

பாலச்சந்தர் படம் மாதிரி இருக்கு :-))

(ரியாலிஸ்டிக்கா இல்லை. அட்லிஸ்ட் அந்த அப்பா, அம்மாவோட ரியாக்ஷன்ஸ்)

said...

ராகவா!
சுமுகமாக பிரச்சனை தீர்ந்ததெனப் பார்த்தால்; மின்னஞ்சல் என்னுறீங்க??
பார்ப்போம்.
யோகன் பாரிஸ்

said...

ராகவன் சார்..
வழக்கம் போலவே கதை நல்லா கொண்டு போறிங்க..
நீங்கள் கதையில் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மறுக்கமுடியாத கருத்துக்கள்.

இந்த வல்லினம்,இடையினம்,மெல்லினம் சூப்பர் (ஆனா எதுக்கு இந்த மாதிரி துணை தலைப்புன்னு தான் புரியல)

\\அடுத்த நாள் அவள் வாழ்க்கையைத் தோசையாக்கப் போகும் மின்னஞ்சல் வரப் போவது தெரியாமல்.\\

அந்த "தோசை"யை காண அடுத்த வாரம் வரைக்கும் காத்திருக்கனுமா???

said...

// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
இது எந்த நூற்றாண்டுல நடக்கற கதை ஜி.ரா???

நமக்கு அடுத்த ஜெனரேஷனா??? //

இருபத்தோராம் நூற்றாண்டுலதான். ஏன் இந்த நூற்றாண்டுல நடந்தத கதைக்கு நடுவுல சொன்னாத்தான் நம்புவீங்களா? //

இந்த மாதிரி ஒரு பெண்ணையோ குடும்பத்தையோ நேர்ல பாத்திருக்கீங்களா??? //

ம்ம்...நல்ல கேள்வி. கண்ணனை வெச்சுக் கதை எழுதுறியே கண்ணனப் பாத்திருக்கியா? உணர்ந்திருக்கேன்னுதான சொல்வ. அந்த மூளை உணர்ச்சி பார்த்த பாத்திரங்கள் இவை. பேய்க்கதை எழுதுறவனெல்லாம் பேயப் பாக்கனுமோ? அப்ப இந்த டைனோசாரு...சயண்ஸ் பிக்சன் சுஜாதா?

இன்னொரு விஷயம். இப்படி இருக்குற நமக்கு முந்தைய தலைமுறைப் பிரபலங்கள் உண்டு. விவியன் ரிச்சர்ட்சுக்கு இந்தியாவுல ஒரு குழந்தை உண்டு தெரியுமா?

// பாலச்சந்தர் படம் மாதிரி இருக்கு :-)) //

ஐயோ பாவம். அவரை என்னோட ஒப்பிட்டு அவமானப் படுத்த வேண்டாம். :-)


//(ரியாலிஸ்டிக்கா இல்லை. அட்லிஸ்ட் அந்த அப்பா, அம்மாவோட ரியாக்ஷன்ஸ்) //

அதுக்குக் காரணம் அந்த மாதிரி ரியாக்ஷனை நீ பாக்காததுதானே தவிர. அப்படி ரியாக்ஷனே இருக்க முடியாதுங்குறதில்லை.

said...

// Johan-Paris said...
ராகவா!
சுமுகமாக பிரச்சனை தீர்ந்ததெனப் பார்த்தால்; மின்னஞ்சல் என்னுறீங்க??
பார்ப்போம்.
யோகன் பாரிஸ் //

என்ன செய்றது யோகன் ஐயா. கதையில ஏதாவது வந்தாத்தான நகருது. அதான்.

said...

// கோபிநாத் said...
ராகவன் சார்..
வழக்கம் போலவே கதை நல்லா கொண்டு போறிங்க..
நீங்கள் கதையில் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மறுக்கமுடியாத கருத்துக்கள். //

நன்றி கோபிநாத். உங்கள் கருத்துகள் ஊக்கம் தருகின்றன.

// இந்த வல்லினம்,இடையினம்,மெல்லினம் சூப்பர் (ஆனா எதுக்கு இந்த மாதிரி துணை தலைப்புன்னு தான் புரியல) //

கதை சொல்லும் முறையில் ஒரு புதுமை வேண்டித்தான். இதெல்லாம் பரிசோதனைகள். அந்தத் தலைப்புகளின் கீழுள்ள செய்திகளைப் பாருங்கள். அவை தலைப்பின் பொருளுக்குள் அடங்கும்.

\\\\அடுத்த நாள் அவள் வாழ்க்கையைத் தோசையாக்கப் போகும் மின்னஞ்சல் வரப் போவது தெரியாமல்.\\

அந்த "தோசை"யை காண அடுத்த வாரம் வரைக்கும் காத்திருக்கனுமா??? \\

அப்படித்தான் நினைக்கிறேன் கோபிநாத். ஏன்னா...ஒரு எதிர்பாராத பயணம். அதான் தாமதம்.

said...

//
இந்த மாதிரி ஒரு பெண்ணையோ குடும்பத்தையோ நேர்ல பாத்திருக்கீங்களா??? //

ம்ம்...நல்ல கேள்வி. கண்ணனை வெச்சுக் கதை எழுதுறியே கண்ணனப் பாத்திருக்கியா? உணர்ந்திருக்கேன்னுதான சொல்வ. அந்த மூளை உணர்ச்சி பார்த்த பாத்திரங்கள் இவை. பேய்க்கதை எழுதுறவனெல்லாம் பேயப் பாக்கனுமோ? அப்ப இந்த டைனோசாரு...சயண்ஸ் பிக்சன் சுஜாதா?

இன்னொரு விஷயம். இப்படி இருக்குற நமக்கு முந்தைய தலைமுறைப் பிரபலங்கள் உண்டு. விவியன் ரிச்சர்ட்சுக்கு இந்தியாவுல ஒரு குழந்தை உண்டு தெரியுமா?//

கதையோட பேக் க்ரவுண்ட் சொல்லாம சொன்னா மனசுல ஏறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு...

நான் வளர்ந்த சமூகமும் நான் பார்த்த சமூகமும் இன்னும் கலப்பு திருமணத்தையே ஏற்காத சமூகமாக இருப்பதால் எனக்கு இது என்னை சுற்றி நடப்பதை போல் நினைக்க முடியவில்லை :-(

தமிழ் நாட்ல இந்த மாதிரி அப்பாவை நான் இது வரைக்கும் கேள்வி பட்டதும் இல்லை...

இது டைனசர் மாதிரியோ கண்ணனை மாதிரியோ கற்பனையாக இருந்தால் ஓகே!!!

said...

//அதுக்குக் காரணம் அந்த மாதிரி ரியாக்ஷனை நீ பாக்காததுதானே தவிர. அப்படி ரியாக்ஷனே இருக்க முடியாதுங்குறதில்லை. //

இதனை நானும் ஒத்துப் போகிறேன்.. பல விசயங்கள் நமக்கு இதெல்லாம் உலகத்தில் நடக்குமா? இப்படியெல்லாம் மக்கள் நடந்துக் கொள்வார்களா? என்று சில தடவை பார்த்திருக்கிறேன். பெரும் பகுதி மக்களிடையே நடக்கும் கதையை மட்டும் எழுதினால் எப்படி.. சில இடங்களில் வெகு சில மக்களிடையே இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதுண்டு. அதையும் கதைபிடித்துக் காட்டிருக்கிறார்ர் ஜி.ரா என்றே நான் நம்புகிறேன்...

இப்படித்தான் மக்கள் இருப்பார்கள்.. இப்படித்தான் ரியாக்ஷன் கொடுப்பார்கள் என்பது நம்முடைய பொதுவான கற்பனை. ஏன் அப்படி ரியாக்ஷன் கொடுக்கக்கூடாது என்று நம்மால் கூற முடியாது..

ரொம்ப ஓவரா பேசுறேனோ? ஜி.ரா. கதை சூப்பரா போகுது... பாப்போம். ஒரு ஃப்ளாஸ்பேக் போயிடுச்சி. ஆனா இன்னும் மெயின் ஃப்ளாஸ்பேக் வரலியே...

said...

// ஜி said...
//அதுக்குக் காரணம் அந்த மாதிரி ரியாக்ஷனை நீ பாக்காததுதானே தவிர. அப்படி ரியாக்ஷனே இருக்க முடியாதுங்குறதில்லை. //

இதனை நானும் ஒத்துப் போகிறேன்.. பல விசயங்கள் நமக்கு இதெல்லாம் உலகத்தில் நடக்குமா? இப்படியெல்லாம் மக்கள் நடந்துக் கொள்வார்களா? என்று சில தடவை பார்த்திருக்கிறேன். பெரும் பகுதி மக்களிடையே நடக்கும் கதையை மட்டும் எழுதினால் எப்படி.. சில இடங்களில் வெகு சில மக்களிடையே இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதுண்டு. அதையும் கதைபிடித்துக் காட்டிருக்கிறார்ர் ஜி.ரா என்றே நான் நம்புகிறேன்... //

ரொம்பச் சரி ஜி. எல்லாரும் சொல்றதையே சொல்றதுக்கு நான் எதுக்கு? அந்த எல்லாரும் போதுமே. சொல்லாத கதை. கேள்விப்படாத செய்திகள் ஆகியவைகளை வைத்துச் சொல்றதும் எழுத்தில் ஒருவகை என்று நம்புகிறேன். அதுதான் இந்தக் கதையில் முயல்வது.

// இப்படித்தான் மக்கள் இருப்பார்கள்.. இப்படித்தான் ரியாக்ஷன் கொடுப்பார்கள் என்பது நம்முடைய பொதுவான கற்பனை. ஏன் அப்படி ரியாக்ஷன் கொடுக்கக்கூடாது என்று நம்மால் கூற முடியாது..

ரொம்ப ஓவரா பேசுறேனோ? ஜி.ரா. கதை சூப்பரா போகுது... பாப்போம். ஒரு ஃப்ளாஸ்பேக் போயிடுச்சி. ஆனா இன்னும் மெயின் ஃப்ளாஸ்பேக் வரலியே... //

இல்லை. இல்லை. ஓவரெல்லாம் இல்லை. ரொம்பச் சரியாகத்தான் இருக்கு. :-)

மெயின் ஃபிளாஷ்பேக்கா? வரும். வரும். ரும். ரும். ரும். ம். :-)

said...

// வெட்டிப்பயல் said...
//
இந்த மாதிரி ஒரு பெண்ணையோ குடும்பத்தையோ நேர்ல பாத்திருக்கீங்களா??? //

ம்ம்...நல்ல கேள்வி. கண்ணனை வெச்சுக் கதை எழுதுறியே கண்ணனப் பாத்திருக்கியா? உணர்ந்திருக்கேன்னுதான சொல்வ. அந்த மூளை உணர்ச்சி பார்த்த பாத்திரங்கள் இவை. பேய்க்கதை எழுதுறவனெல்லாம் பேயப் பாக்கனுமோ? அப்ப இந்த டைனோசாரு...சயண்ஸ் பிக்சன் சுஜாதா?

இன்னொரு விஷயம். இப்படி இருக்குற நமக்கு முந்தைய தலைமுறைப் பிரபலங்கள் உண்டு. விவியன் ரிச்சர்ட்சுக்கு இந்தியாவுல ஒரு குழந்தை உண்டு தெரியுமா?//

கதையோட பேக் க்ரவுண்ட் சொல்லாம சொன்னா மனசுல ஏறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு... //

கதையோட பேக்கிரவுண்ட் சொல்ல வேண்டியதேயில்லை. மூனு அத்தியாயங்கள் போயிருக்கு. இந்த மூனுலயும் நடந்தது அறிமுகங்கள்தான். இப்ப என்ன நெலமை இருக்குன்னு சொல்லீரூக்கோம். இனிமே நடக்குறது கதையாகும். நடந்தத வெச்சித் தோணுறதச் சொன்னாலே போதும்.

// நான் வளர்ந்த சமூகமும் நான் பார்த்த சமூகமும் இன்னும் கலப்பு திருமணத்தையே ஏற்காத சமூகமாக இருப்பதால் எனக்கு இது என்னை சுற்றி நடப்பதை போல் நினைக்க முடியவில்லை :-( //

அதுதான் பிரச்சனை வெட்டி. நம்முடைய நிலையிலிருந்தே அடுத்தவர்களைப் பார்ப்பது. அடுத்தவர் நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் புரிபடும். ஒரு எழுத்தாளன் அதற்குக் கொஞ்சமேனும் மெனக்கெட வேண்டும். நானும் அதற்கு முயற்சி செய்யத்தான் வேண்டும்.

// தமிழ் நாட்ல இந்த மாதிரி அப்பாவை நான் இது வரைக்கும் கேள்வி பட்டதும் இல்லை...//

ஒனக்குத் தமிழ்நாட்டுல எத்தனை அப்பாக்கள் தெரியும்னு சொல்லு. அதுல தெரியாத அப்பாக்கள்ள இந்த அப்பா ஒளிஞ்சிக்கிட்டிருப்பார். இது போன்ற சம்பவங்கள் கதையில் வருவது போன்ற பெரிய வீடுகளிலும்....அல்லது தெருவோரம் ஊரூராகச் சென்று வாழ்க்கை நடத்துகிறார்களே அவர்கள் வாழ்க்கையில் நடப்பதுண்டு. ஒரு எடுத்துக்காட்டே சொல்லியிருக்கின்றேனே. விவியன் ரிச்சர்சுக்குக் கல்யாண வயதில் ஒரு மகள் இந்தியாவில் உண்டு. ஆனால் அவரது தாய் ரிச்சர்சின் மனைவி அல்ல. இது யார் தெரியுமா? கண்டு பிடியேன். ஏன்? தமிழ்நாட்டு அரசியலையே எடுத்துக்கொள்ளேன். பிரபலமான அரசியல் தலைவருக்கு ஒருவர் மனைவி. இன்னொருவர் துணைவி. அவர் ஆண். ஆகையாள் எளிதாயிற்று. இன்னொரு அரசியல்தலைவிக்குக் குழந்தை இருக்கிறது என்று கூடச் சொல்வார்களே. அவர் பெண். ஆகையால் வெளியே சொல்ல முடியவில்லை போலும்.

// இது டைனசர் மாதிரியோ கண்ணனை மாதிரியோ கற்பனையாக இருந்தால் ஓகே!!! //

ஏன்? எதற்காக இது கற்பனையாக இருக்க வேண்டும்? உண்மையிலே நடந்தால் என்ன?

said...
This comment has been removed by the author.
said...

ஜி.ரா ரசிக்க வைக்கிறீங்க.. கதையின் போக்கில் வல்லினம், மெல்லினம், முதலியவைகளின் கையாடல் வெகுவாக ரசித்தேன்.. கதை நல்லாப் போயிட்டு இருக்கு... இதுவரைக்கும் ஆர்வம் குறையாமல் தான் போகிறது அடுத்து ஆவது என்னப் பாப்போம்..

said...

ராகவன் ஜி,

கதையோட்டம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது... அடுத்தப் பகுதிக்காக காத்திருக்கிறேன்!

கொஞ்ச நாள் முன்பு artificial insemination மூலம் குழந்தை பெற்ற ஒரு கேரளப் பெண்மணியின் பேட்டியை விகடனில் படித்ததாக நினைவு!

(சரி சரி சந்தியாவுக்கு வந்த மெயில சீக்கிரம் fwd பண்ணுங்க;-) )

said...

// தேவ் | Dev said...
ஜி.ரா ரசிக்க வைக்கிறீங்க.. கதையின் போக்கில் வல்லினம், மெல்லினம், முதலியவைகளின் கையாடல் வெகுவாக ரசித்தேன்.. கதை நல்லாப் போயிட்டு இருக்கு... இதுவரைக்கும் ஆர்வம் குறையாமல் தான் போகிறது அடுத்து ஆவது என்னப் பாப்போம்.. //

நன்றி தேவ். இந்தப் பகுதியில் விறுவிறுப்பாக எதுவுமில்லை. ஏனென்றால் முன்பு என்ன நடந்ததுன்னு சொல்லனுமே. அதுனாலதான். அடுத்த பகுதி இன்னும் விறுவிறுப்பா இருக்கும்னு நம்புவோம்.

said...

// அருட்பெருங்கோ said...
ராகவன் ஜி,

கதையோட்டம் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது... அடுத்தப் பகுதிக்காக காத்திருக்கிறேன்! //

நானுந்தான் கோ.

// கொஞ்ச நாள் முன்பு artificial insemination மூலம் குழந்தை பெற்ற ஒரு கேரளப் பெண்மணியின் பேட்டியை விகடனில் படித்ததாக நினைவு! //

ஆமாம். அவரை முன்பு திருமணம் செய்தவரிடந்தான் போய் இதற்கு உதவி கேட்டாராம். அந்த மனிதன் அசிங்கமாகத் திட்டி விரட்டி விட்டானாம். பிறகு பெயர் தெரியாத ஒரு டோனரின் உதவியால் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை ஊரார் எவ்வளவு பேசியிருப்பார்கள்! சந்தியாவுக்கும் அதே நிலைதான்.

// (சரி சரி சந்தியாவுக்கு வந்த மெயில சீக்கிரம் fwd பண்ணுங்க;-) ) //

கோ, இது தப்பு. அடுத்தவங்களுக்கு வந்த மெயிலைப் படிக்கலாமோ?

said...

ஜி.ரா, அருமையா எழுதறீங்க. நல்லா போயிட்டிருக்கு. அடுத்ததை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.நான் இந்த தமிழ் பதிவுகளுக்கு புதுசு. நான் விரும்பி படிக்கும் பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று. உங்களுக்கு நேரம் இருக்கும்போது, என் பதிவுக்கு வந்து பாருங்க.

said...

/
ஆமாம். அவரை முன்பு திருமணம் செய்தவரிடந்தான் போய் இதற்கு உதவி கேட்டாராம். அந்த மனிதன் அசிங்கமாகத் திட்டி விரட்டி விட்டானாம். பிறகு பெயர் தெரியாத ஒரு டோனரின் உதவியால் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை ஊரார் எவ்வளவு பேசியிருப்பார்கள்! சந்தியாவுக்கும் அதே நிலைதான்./

ஒரே ஒரு வித்தியாசம் அவர் கொஞ்சம் வயதானவர் என்று நினைக்கிறேன்...

/கோ, இது தப்பு. அடுத்தவங்களுக்கு வந்த மெயிலைப் படிக்கலாமோ? /

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.... :-)))

said...

இப்படியெல்லாம் நடக்குமா எனக் கேட்பதைவிட, இப்படியும் நடக்கலம், நடக்கும் என்பதை வலியுறுத்தும் கதை!

அப்படியே ஏத்துகிட்டு, இனிமே எப்படி வருதுன்னு பாக்கணும்.

இது போன்ற நிலைமை ஒரு சில பேருக்கு ஏற்படும் போது, இப்படியும் செய்யலாமோ என அவர்களுக்கு ஒரு பரிமாணத்தைக் கொடுக்கிறது இது.

எல்லாம் சரிதான்.

சந்தியா கண்ணனிடம் அப்படிச் சீறுவதாகச் சொல்லி, பெண்ணுரிமை பற்றிப் பேசிவிட்டு,

//பொம்பளைங்களச் சொல்ல மட்டும் ஒன்னாக் கெளம்பீருவீங்களே! திருந்துங்கடா! எங்க திருந்தப் போற! நீயும் ஒரு ஆம்பிளைதான!"//

வல்லினத்தில்,"ற" வில் உத்தமப் பத்தினிகளை மட்டும் சாடியிருக்கிறீர்களே!
உத்தமப்பதிகளை விட்டு விட்டீர்களே!

நீங்களும் ஒரு ஆம்பிளைதான் என்பதாலா!!
:))

இப்படிப் பேசுபவர்கள் இரு பக்கமும் இருக்கிறார்களே!

said...

// அருட்பெருங்கோ said...
/
ஆமாம். அவரை முன்பு திருமணம் செய்தவரிடந்தான் போய் இதற்கு உதவி கேட்டாராம். அந்த மனிதன் அசிங்கமாகத் திட்டி விரட்டி விட்டானாம். பிறகு பெயர் தெரியாத ஒரு டோனரின் உதவியால் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை ஊரார் எவ்வளவு பேசியிருப்பார்கள்! சந்தியாவுக்கும் அதே நிலைதான்./

ஒரே ஒரு வித்தியாசம் அவர் கொஞ்சம் வயதானவர் என்று நினைக்கிறேன்... //

ஆமாம். வயது நிறைய இருப்பதால் பேச்சுகளும் நிறைய இருக்கும்.

// /கோ, இது தப்பு. அடுத்தவங்களுக்கு வந்த மெயிலைப் படிக்கலாமோ? /

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.... :-))) //

அதுக்குதான் சொன்னேன். கேட்டாத்தானே! இப்ப அப்பா அம்மான்னா ஆச்ச?

said...

// SK said...
இப்படியெல்லாம் நடக்குமா எனக் கேட்பதைவிட, இப்படியும் நடக்கலம், நடக்கும் என்பதை வலியுறுத்தும் கதை!

அப்படியே ஏத்துகிட்டு, இனிமே எப்படி வருதுன்னு பாக்கணும். //

ஆமாம். சரிதான்.

// சந்தியா கண்ணனிடம் அப்படிச் சீறுவதாகச் சொல்லி, பெண்ணுரிமை பற்றிப் பேசிவிட்டு,

//பொம்பளைங்களச் சொல்ல மட்டும் ஒன்னாக் கெளம்பீருவீங்களே! திருந்துங்கடா! எங்க திருந்தப் போற! நீயும் ஒரு ஆம்பிளைதான!"//

வல்லினத்தில்,"ற" வில் உத்தமப் பத்தினிகளை மட்டும் சாடியிருக்கிறீர்களே!
உத்தமப்பதிகளை விட்டு விட்டீர்களே!

நீங்களும் ஒரு ஆம்பிளைதான் என்பதாலா!!
:)) //

:-)

// இப்படிப் பேசுபவர்கள் இரு பக்கமும் இருக்கிறார்களே! //

நிச்சயமாக. அதுவும் சொல்லப்படும். :-)

said...

ஜி.ரா. எந்த நூற்றாண்டிலும் சங்க காலத்திலும் நடக்கிற கதைதான்.
குந்தி செய்தது போல.
மாதவி செய்தது இன்னொரு விதம்.

வித்தியாசமானவர்கள் எப்போதுமே உண்டு.
அவரவர் வாழ்க்கை அவரவருக்கு.
வயது முதிர்ந்து வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது, கோபம், தாபம் வார்த்தைகள் அத்தனையுமே விரயமானவைகளைத் தான் குறிக்கின்றன.
அதற்குப் பதில் நான் வாழ்வேன் என்று துணிச்சலோடு இருப்பவர்கள்,அந்தத் துணிவு அடுத்தவர்களைத் துன்புறுத்தாத வரை...மதிக்கப் படவேண்டியவர்களே.

said...

// வல்லிசிம்ஹன் said...
ஜி.ரா. எந்த நூற்றாண்டிலும் சங்க காலத்திலும் நடக்கிற கதைதான்.
குந்தி செய்தது போல.
மாதவி செய்தது இன்னொரு விதம். //

அதே அதே. சரியாகப் பிடித்தீர்கள் வல்லி. மாதவியை நாம் திட்டுகிறோமா என்ன? கணவனைச் சரியாக வைத்துக் கொள்ளத் தெரியாதவள் என்று கூடத் திட்டும் கூட்டம் உண்டு. ஆனால் மாதவியை? ஆனால் சந்தியாக்களுக்கு மட்டும் ஏன் கெட்ட பெயர்? உண்மையிலேயே புரியவில்லை வல்லி. :-(

// வித்தியாசமானவர்கள் எப்போதுமே உண்டு.
அவரவர் வாழ்க்கை அவரவருக்கு.
வயது முதிர்ந்து வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது, கோபம், தாபம் வார்த்தைகள் அத்தனையுமே விரயமானவைகளைத் தான் குறிக்கின்றன.
அதற்குப் பதில் நான் வாழ்வேன் என்று துணிச்சலோடு இருப்பவர்கள்,அந்தத் துணிவு அடுத்தவர்களைத் துன்புறுத்தாத வரை...மதிக்கப் படவேண்டியவர்களே. //

உண்மை. ஆனால் பாருங்கள். இந்த விஷயத்தில் பெண்ணை விட ஆணுக்குச் சுதந்திரம் இருக்கிறது. ஒரு ஆண் ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ளாமலே குழந்தையும் பெற்று தன்னுடைய மகன் என்றோ மகள் என்றோ வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டு அரசுகட்டில் வரை வரமுடிகிறது. ஆனால் பெண்ணால் தெருவாசல் வரைக்கும் கூட வரமுடிவதில்லை. மதங்களும் பண்பாடுகளும் பழக்கவழக்கங்களும் அவரை ஆணுக்கு அடிமையாக்கி...அந்த அடிமைத்தனத்தைப் பெருமைத்தனமாக அவளையே நினைக்க வைத்து...அதைச் சுட்டிக்காட்டுகின்றவர்களை கேவலப்படுத்தி...சேச்சே! ஒரு பெண் திருமணம் ஆகாமல் குழந்தையைத் தத்தெடுக்க முடியுமாம். அதுவும் சட்டப்படி. ஆனால் ஒரு ஆணால் முடியாது. ஏன் தெரியுமா? தேவைப்பட்டால் வைப்பாட்டி வைத்துக் கொள்ளலாமே!

said...

முதல்ல உங்க வல்லினம், இடையினம், மெல்லினம் பாத்தேன் - கதைய படிக்க முன்னாடி - புதுசா இருக்கேன்னு - சூப்பரா இருக்கு ஐடியா.
அப்புறம் பின்னூட்டம் பக்கம் வந்தேன். எப்படி நிலமை - அவை அறிதல் பண்ணலாமான்னு. டேஞ்சரான வல்லினமெல்லாம் விட்டா பெண் பதிவர்கள் என்ன பண்றாங்கன்னு மோப்பம் பாத்தேன். யாருமே இல்ல போலியே அப்படின்னு பாத்துட்டே வந்தவ, வல்லி அம்மாவோட கலக்கல் பின்னூட்டம் பாத்து - "அப்படி போடு"னு சந்தோஷப் பட்டு, இப்பதான் பின்னூட்டம் விடுற தெம்பு வந்திருக்கு :) பின்னூட்டம் விடும் ஆண்களும் நேர்மையா நல்லாதான் எழுதிருக்காங்க. பிரச்சனையில்லாத ஏரியாவாதான் இருக்கு! :)
இப்ப போய் மேல இருக்கிற கதைய படிக்கிறேன்.
(இது பின்னூட்டம் இடும் பெண் இயம்! :) ...)

said...

உண்மையோ உண்மை.
வாயைத் திறக்காத எத்தனையோ பெண்களை நான் பார்த்து இருக்கிறேன்.
கணவனுக்கு எத்தனையோ காரணங்கள் தப்பு வழியில் போக.
அவளால் இயல்பாகவே, தவறி நடக்க முடிவதில்லை.
என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.
தந்தையைப் பார்த்து, அவன் போன குறுக்கு வழி போகாமல் நேர்மையாக நடக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
நன்றி ராகவன்,.

said...

கண்ணன் என்ன குதிச்சாலும் சந்தியாவின் முடிவை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் அவனுடைய மனைவியின் கதாபாத்திரம் யதார்த்தம். அதிலும் சந்தியா செய்யும் சீரையும் ஏற்றுக்கொண்டு அவளுடைய பிள்ளைக்கும் சீர் செய்யும் பாங்கும் அருமை..

வல்லினம், இடையினம்கறதும் புதுமை ராகவன்.. நல்ல யுக்தி.. ஒரு அஞ்சாறு எப்பிசோட்ல சொல்ல வேண்டியத அரை பக்கத்துலயே முடிச்சிட்டீங்க..

இது முந்தி பொதிகைல வர்ற சீரியல் மாதிரி வாரத்துக்கு ஒன்னுன்னு இல்லாம ரெண்டுன்னு கூட்டுனா நல்லதுன்னு நினைக்கிறேன்.