Tuesday, June 10, 2008

தங்க மரம் - 15

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்

பாகம் - 15

ககன் தொடர்ந்து கதையைச் சொன்னான்.

"கஜன் என்ற பறக்கும் ஆனை மிகவும் அறிவாளி. வந்ததும் முதலில் காட்டில் சில ஆனைகளைச் சந்தித்துப் பழக்கமாக்கிக் கொண்டது. வெளியூரில் இருந்து வந்ததும் உள்ளூரில் பழக்கம் உண்டாக்கிக் கொள்வதைப் போல. அந்த வழியாகத்தான் இருவர் கஜனுக்குப் பழக்கமானார்கள். அவர்களின் பெயர்கள் செங்கோமான் மற்றும் இளங்கோ.அவர்கள் நல்லவர்களாக இருக்கக் கண்டு தான் வந்த காரணத்தைக் கஜன் அவர்களிடம் சொன்னது. அதாவது உனது தாயார் குடுத்தனுப்பிய மாயக்கோலும் பெட்டியும் வைத்து. அவர்களும் உதவுவதாக உறுதி கூறினார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் நான் தனியாக இருந்து எப்படி ஊழுவாயனை எதிரிப்பது அழிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தோன்றியதெல்லாம் ஒரே திட்டந்தான். எங்கள் அரசர் பூரசிடமிருந்து திருடிய மந்திரக்கோலை திரும்பவும் எடுத்துக் கொண்டால் ஊழிவாயனின் ஆற்றல் அழிந்து விடுமல்லவா. திரும்ப எப்படி எடுப்பது?

பூரசு மன்னரின் மந்திரக்கோல் பூகன்களுக்குச் சொந்தமான தங்கமரத்தின் கிளைகளை ஒடித்து உருக்கிச் செய்யப்பட்டது. அந்தத் தங்கமரத்தின் பூவோ கனியோ ஒருவரிடம் இருந்தால் அவரை மந்திரக்கோல் எதிர்க்காது. ஏனென்றால் அவை தாய்மரத்து உறவுகள். இந்தத் திட்டத்தோடு தங்கமரத்தை நோக்கிச் சென்றேன்.

தங்கமரத்தை அடையும் வழி பூகன்களுக்கே தெரியும். ஒவ்வொரு வழியிலும் ஒவ்வொருவிதமான காவல்கள் உண்டு. அத்தனை வழிகளும் எனக்குத் தெரியாது என்றாலும் ஒன்றிரண்டு மட்டும் தெரியும். அவற்றில் மிகவும் எளிதான வழி குண்டக்குழியில் இறங்குவது. அருகிலுள்ள காட்டின் நடுவில் சிறிய மலையுச்சியில் ஒரு குண்டக்குழி உள்ளது. அந்தக் குழியில் எப்பொழுது நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். அந்த நெருப்பில் குதித்தால் முப்பது நிமிடங்களில் தங்கமரத்தை அடைந்து விடலாம். அதாவது தணலேரியில் கரையேறலாம்.

ஆனால்...அந்த முப்பது நிமிடங்களும் நெருப்பின் சூடு குதிப்பவரை வாட்டும். ஆனால் உடலுக்கும் உயிருக்கும் எந்த ஆபத்தும் நேராது. முப்பது நிமிடம் முடிந்ததும் வேதனை பறந்து விடும். திரும்பி வருவதற்கும் அதே வழிதான். எங்கள் இனத்தைக் காப்பதற்காக இந்த ஒரு மணி நேரச் சித்திரவதையை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து காட்டிற்குள் நுழைந்தேன்.

அப்பொழுதுதான் கஜன், செங்கோமான் மற்றும் இளங்கோ ஆகியோரைச் சந்தித்தேன். அவர்கள் ஊழிவாயனைத் தேடிச் சென்று கொண்டிருந்தார்கள். எப்படியோ எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. கஜன் பூமியில் இருந்தாலும் உனது தாய் லிக்திமா அதனோடு தகவல் தொடர்பு வைத்திருந்தார். ஆகையால் தங்கமரத்தைப் பற்றிய செய்தியை அவரிடம் சொன்னேன். அவருக்கும் அந்தத் திட்டம் நல்ல திட்டமாகவே பட்டது. நான் தனியாள் இல்லை என்ற தெம்போடு மூவரையும் அழைத்துக் கொண்டு மலையேறினேன்.

நால்வரும் குண்டக்குழியில் குதித்தோம். நெருப்பு சுட்டது. தசை வலித்தது. தாள முடியாத வேதனை. தணியாத தண்ணீர்த் தாகம். ஆனால் எங்களுக்கும் எங்கள் பொருள்களுக்கும் எந்த அழிவும் உண்டாகவில்லை. முப்பது நிமிட மரணவேதனைக்குப் பிறகு தணலேறியில் இருந்தோம். ஒருவழியாகக் கரையைப் பற்றி ஏறினோம். அங்கே யாரும் ஏற முடியாத மண்மலை. ஏறினால் வழுக்கும். அந்த மலைமீதுதான் தங்கமரம் இருந்தது.

அந்த மரத்தின் அழகை எழுத்தில் வடிக்கவே முடியாது. பார்த்த எவராலும் விவரித்துச் சொல்லவே முடியாது. பசும்பொன்னிறத்து மரத்தில் மரகத இலைகள் பலபச்சை நிறங்களில் துளிர்த்து தடித்து அசைந்தாடும். அந்த மரகத இலைகளின் ஊடாக பவழ மொட்டுகள் முழித்துக்கொண்டிருக்கும். அந்த மொட்டுகள் மாணிக்கக் காய்களாகி வைரக் கனிகளாகும். அந்த மரத்தை அடைந்த எங்களுக்கு அப்பொழுதுதான் ஊழிவாயனின் அறிவு புரிந்தது. ஆம். தங்கமரத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு அதற்குக் காவல் வைத்திருந்தான்.

அதுவும் இரண்டு நச்சுநாகங்களின். முப்பதடி நீளமுள்ளவை அந்தப் பாம்புகள். அவைகளின் பற்கள் நஞ்சில் ஊறியூறி நீலமானவை. அந்தப் பல்லால் கடிக்க வேண்டும் என்ற தேவையில்லை. பட்டாலே போதும் பரலோகம்தான். அந்த இரண்டு நாகங்களும் மரத்தைச் சுற்றி மண்மலையில் ஊர்ந்து கொண்டிருந்தன. அவைகளைப் பார்த்ததும் நான் சற்றுப் பயந்து பின்வாங்கினேன். பின்னால் இருந்த தணலேரியை நான் கவனிக்காமல் அதில் தடுமாறி விழுந்தேன். அது முப்பது நிமிடம் என்னை உள்ளே இழுத்துக் குண்டக்குழியில் திரும்பவும் தள்ளியது. அவர்கள் மூவரையும் அங்கேயே விட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில் சுடுநெருப்பின் வேதனையையும் பாராமல் திரும்பவும் குதித்தேன். ஆனால் தங்கமரத்தில் அருகில் அந்த மூவரும் இருக்கவில்லை. ஆனால் இரண்டு நச்சுநாகங்கள் மட்டும் வெறியோடு ஊர்ந்து கொண்டிருந்தன. அதற்கு மேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து திரும்பவும் பூகனூரில் வந்து இருக்கிறேன். அடிக்கடி தங்கமரத்திற்குச் செல்வேன். ஆனால் எதுவும் செய்ய முடியாமல் வருத்தத்தோடு திரும்பி வருவேன். இதுதான் நீ கேட்ட கேள்விகளுக்கான விடை."

சொல்லி முடித்த ககனின் முகத்தில் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையின் வலி தெரிந்தது. அப்பொழுது தனிமா கேட்டாள். "ககன் என்னைத் தங்கம்ரத்திற்கு அழைத்துச் செல்வாயா?"

தொடரும்...

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

2 comments:

said...

பாவம் ககன். பாவம் மற்றவர்கள். நாகங்கள் அவர்களை என்ன செய்தனவோ?

said...

யப்பாடி..தங்க மரத்தின் கிட்ட வந்தாச்சு..;)