Tuesday, June 17, 2008

தங்க மரம் - 16

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்

பாகம் - 16

அண்டியின் குகையிலேயே நாம் மூவரை விட்டு வந்துவிட்டோமே. அதுவும் தங்கமரத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற வழிகளில் ஒன்றைத் தெரிந்த கொண்ட மூவரை. அண்டி சொன்னதைக் கேட்டதில் இருந்தே மூவருக்கும் ஒரே சிந்தனை. அதுவும் தங்கமரத்தை அடைவதை அல்ல. அண்டியின் கச்சையின் முடித்து வைக்கப்பட்டிருக்கும் திறவுகோலை அடைவதற்கே சிந்தனை.

எவ்வளவு சிந்தித்தாலும் மூவருக்கும் தோன்றிய ஒரே வழி...அண்டி தூங்கும் பொழுது திருடுவது என்பதுதான். அண்டி தூங்கத் தொடங்கினால் அவளை அவ்வளவு எளிதில் எழுப்ப முடியாது என்று அங்கு தங்கிய ஒரு இரவிலேயே புரிந்து விட்டது. ஆனால் அவளது குறட்டையொலிதான் காதுகளைக் கம்பியால் குடைந்தது.

அண்டி தூங்கிய பிறகு வேறுவழியில்லாமல் அவளது அறைக்குள் நுழைந்தார்கள். நுழையும் பொழுதே கப்பென்று கெட்ட வாடை மூக்கில் ஏறியது. காதையாவது பஞ்சை வைத்து அடைக்கலாம். மூக்கை? காரியத்தை முடிக்க வேண்டுமே. திருடும் பொறுப்பு சித்திரைக்குப் போனது. கதிரவன் என்னதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் குசும்புகளில் சித்திரையை அடித்துக்கொள்ள முடியாது. பிடிமா சித்திரையைத் தூக்கிக் கொண்டு அண்டியின் கச்சையின் அருகில் பறந்தது. பிடிமாவின் மீதிருந்து சரியாகக் கச்சையில் குதித்தான். குதித்த வேகத்தில் அண்டி எழுந்து விடுவாளோ என்று அச்சம். ஆனால் அதற்கெல்லாம் அண்டி அசைவதாகத் தெரியவில்லை.

அவள் மீது இறங்கியதுமே சித்திரைக்கு வயிற்றைப் பிரட்டியது. குளித்தறியாத அண்டியின் கச்சையில் ரோஜா வாடையா எழும்பும்!!!! வேறு வழியில்லாமல் மூக்கையும் மூச்சையும் பிடித்துக் கொண்டு கச்சைக்குள் நுழைந்தான். அந்த ஒரு நொடியிலேயே உலகத்தின் எந்த நாற்றத்தையும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்ற அதிபயங்கர திறமையைப் பெற்றான் சித்திரை.

திறவுகோலைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. ஓரடி நீளமுள்ள இரும்புத் திறவுகோலை ஒருவழியாகக் கச்சைக்கு வெளியே இழுத்து வந்தான். அலும்பு தெரிந்தாலும் நேரத்தைக் கடத்த விரும்பாமல் அண்டியின் வயிற்றை நோக்கி நடந்தான். பிடிமாவின் மீது ஏறிய கதிரவும் அண்டியின் வயிற்றுக்கே வந்து விட்டான். அருகில் இருந்து பார்க்கையில்தான் அண்டியின் வயிற்றோடு சேர்ந்த பூட்டு தெளிவாகத் தெரிந்தது. மூவரும் சுற்றி நின்று கிணற்றுக்குள் பார்ப்பது போலப் பார்த்தனர். கதிரவன் சைகை காட்டியதும் சித்திரை திறவுகோலைப் பூட்டில் நுழைத்துத் திருகினான். கிர்ர்ர்ர்ர்ரென்று துருப்பிடித்த ஓசையோடு பூட்டு திறந்தது.

கரகரவென வயிற்றின் நடுவில் பூட்டு இருந்த இடத்தில் ஒரு குழி திறந்தது. உள்ளே ஒரே இருட்டு. ஆனால் முதற்படி மட்டும் கண்ணில் திறந்தது. நல்ல பெரிய படி. பிடிமாவே நிற்கலாம். கதிரவன் குசுகுசுவெனச் சொன்னான்.

"சித்திரை..படிகள் ஒன்றும் பெரிதாக இருக்கின்றன. இது போல எத்தனை படிகள் இருக்குமோ தெரியாது. முதலில் நான் இறங்குகிறேன். பிறகு பிடிமா இறங்கட்டும். பின்னால் திறவுகோலை எடுத்துக் கொண்டு நீயும் வா." சொன்னவன் முதற்படியில் இறங்கி நின்றான்.

நின்ற அடுத்த நொடியில்தான் விபரீதம் புரிந்தது. படி தானாக நகரத் தொடங்கியது. படக்கென்று வேகம் பிடித்து இருளுக்குள் மறைந்தது. பிடிமாவும் சித்திரையும் அதிர்ந்து போனார்கள். ஆனால் உடனே மற்றொரு படி அங்கு தோன்றியது. அது படிக்கட்டு அல்ல...நகரும் படி என்று புரிந்து கொண்டனர் இருவரும். நேரம் கடத்த விரும்பாமல் பிடிமா அடுத்த படியில் இறங்கினாள். அதுவும் விர்ரென்று உள்ளே நகன்றது. அடுத்த படியில் இறங்கினான் சித்திரை. இருட்டுக்குள் படி வழுக்கியது. எங்கோ பாதாளத்திற்குள் இறங்குவது போல அப்படியொரு வேகம். ஆனால் சுற்றிலும் என்ன இருக்கிறது என்றே தெரியாத இருட்டு. எங்கோ படியின் வேகத்தால் கதிரவன் கத்தும் ஒலியும் பிடிமாவின் பிளிறலும் கேட்டுத்தான் அவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

இன்ன குறிப்பிட்ட திசையில்தான் சென்றது என்றில்லை. கண்ட பக்கமும் படி சரக்சரக்கென்று திரும்பியது. வலது பக்கமே போவது போல இருக்கும். திடீரென வெடுக்கென்று இடப்பக்கம் திரும்பி படக்கென்று கீழே இறங்கும். ஒவ்வொரு சமயம் மேலே எழும்பும்...ஆனா எழும்பிய பிறகு தட்டை யாரோ நழுவ விட்டது போல படியும் விழும். முதலில் மூவரும் கத்திக்கதறினாலும் நேரம் செல்லச் செல்ல பழகி விட்டது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் விழுந்து விடுவார்களோ என்ற அச்சமும் தேவையில்லாமல் போனது. ஏனென்றால் ஓரிடத்தில் படி தலைகீழாகத் திரும்பிச் சென்றது. ஆனால் அவர்களும் கீழே விழவில்லை. அவர்களிடமிருந்த பொருட்களும் உடைகளும் கூடக் கீழே விழவில்லை. படியைப் பொருத்தவரையில் நேராகவே நிற்பது போன்ற நிலை.

எவ்வளவு நேரம் என்று கணக்கிட முடியாத நேரம் இந்தப் விசித்திரப் பயணம் தொடர்ந்தது. படுவேகத்தில் சென்று கொண்டிருந்த கதிரவனின் படி திடீரென்று நின்றது. ஒரு நொடியில் நின்றதும் தடுமாறினான் கதிரவன். பின்னாடியே பிடிமாவின் படியும் வந்து இடித்துக் கொண்டு நின்றது. அடுத்து இரண்டு மூன்று நொடிகளில் திறவுகோலோடு வரும் சித்திரையின் படியும் நிலைக்கு வந்தது. ஆனாலும் இருள் விலகவில்லை. கதிரவன் துணிச்சலோடு காலை எடுத்து வைத்தான்.

அடுத்த நொடியே அவன் ஒளிநிரம்பிய ஓரிடத்தில் அவன் இருந்தான். ஆனால் எங்கிருந்து வந்தோம் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் வெளிச்சம் நிரம்பிய புது இடத்தில் இருந்தான். அப்படியே பிடிமாவும் சித்திரையும் கூட வந்து விட்டார்கள். இருட்டில் இருந்து வந்ததால் அவர்களுக்குக் கண்களைக் கூசியது. இடுக்கிக் கொண்டு பார்த்தார்கள். அவர்கள் பார்வைக்கு முதலில் தெரிந்தது தங்கமரம்.

தொடரும்....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

7 comments:

said...

அடுத்த பாகம் எப்போ? நல்லா இருக்கு!! (நான் என்னத்த சொல்லி என்ன பயன்...அபிஅப்பா படிக்காம பின்னூட்டம் போடுறார்ன்னு சொல்ல போறீங்க:-((

said...

தங்க மரத்துக்கு வந்தாச்சா!! வெரிகுட் வெரிகுட். அப்புறம் என்ன ஆச்சு?

said...

// அபி அப்பா said...

அடுத்த பாகம் எப்போ? நல்லா இருக்கு!! (நான் என்னத்த சொல்லி என்ன பயன்...அபிஅப்பா படிக்காம பின்னூட்டம் போடுறார்ன்னு சொல்ல போறீங்க:-(( //

வாங்க வாங்க..வாங்க அபி அப்பா. எப்படியிருக்கீங்க? :) உங்களை என்னோட மகரந்தத்துல பாத்ததும் புல்லரிச்சுப் போச்சு. :) நீங்க படிச்சிட்டுத்தான் பின்னூட்டம் போடுறீங்க. ஹி ஹி நல்லாயிருக்குன்னுல்ல சொல்லீருக்கீங்க :) அபி அப்பா வாழ்க.

said...

சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க (வேற என்னாத்த சொல்ல!) ;))

said...

// இலவசக்கொத்தனார் said...

தங்க மரத்துக்கு வந்தாச்சா!! வெரிகுட் வெரிகுட். அப்புறம் என்ன ஆச்சு? //

ஆமா வந்தாச்சுல்ல.. ஒரு வழியா கதைய இழுத்துட்டு வந்துட்டோம்ல... :D

அடுத்து என்ன நடக்கும்? இந்தப் பாகம் முடிஞ்சி அடுத்த பாகம் தொடங்கும். :D

said...

ரோஜா வாடை என்றதும் அண்மையில் நான் பார்த்த ரோஜாக்களின் நிழற்படங்கள் நினைவிற்கு வந்தன இராகவன். :-) அந்த நினைவில் தான் நீங்களும் இதனை எழுதினீர்களோ?

நல்ல கற்பனை இராகவன். நானும் படிச்சுட்டுத் தான் சொல்றேன்னு சொல்லத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். :-)

said...

ஹை! ரோலர் கோஸ்டர் ரைடு நல்லாருக்கே! :)