Tuesday, June 24, 2008

தங்க மரம் - 17

சென்ற பகுதியை இங்கே படிக்கவும்.

பாகம் - 17

தங்கமரத்தைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி மூவரின் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. வெள்ளைவெளேரென்ற மண்மலையும் அதன் உச்சில் தகதகவென மின்னும் தங்கமரமும் அழகோ அழகு. அவர்களிடம் அண்டி விவரித்தது போல மரகத இலைகள் மெல்லிய தென்றலில் அழகாக அசைய...அவைகளின் ஊடே பவழ மொட்டுகள் நாங்களும் இருக்கிறோம் என்றோம் என்று சொல்ல...மாணிக்கக் காய்களும் வைரக்கனிகளும் பார்வையை மாற்ற விடாமல் கவர்ந்தன. அப்பொழுது கதிரவன் சொன்னான்.

"சித்திரை... நான் பிடிமாவின் மீது ஏறிச் சென்று கனியைக் கொய்து வருகிறேன். இப்பொழுது இங்கு யாரும் இல்லை. ஆகையால் விரைந்து பறித்து விட்டு அண்டியின் வயிற்றுவழியில் திரும்பச் சென்று விடுவோம்."

ஆனால் சித்திரை வேறொன்றைக் குறித்து வைத்திருந்தான். "கதிரவா, நான் பறக்கும் படியில் வருகையில் இருட்டில் வந்தோம். படி நின்றவுடன் காலை எடுத்து வைத்ததும் நாம் வெளிச்சத்திற்கு வந்து விட்டோம். ஆனால் திரும்பவும் இருட்டுக்குள் எப்படிப் போவது என்ற வழியே தெரியவில்லையே!"

சித்திரை சொன்னதைக் கேட்டு இருவருக்கும் திக்கென்றது. அவர்கள் குடலுக்குள் அண்டி போவது போல ஒரு உணர்வு.

கதிரவன் முதலில் சுதாரித்தான். "ஆமாம். உண்மைதான். ஆனால் அதற்காக நேரம் கடத்த வேண்டாம். படக்கென்று நான் சென்று கனியைக் கொண்டு வருகிறேன். பிறகு யோசிப்போம் மற்றவற்றை." சொல்லிக் கொண்டே பிடிமாவின் மீது ஏறி, "பிடிமா தங்கமரத்திடம் செல்" என்றான்.

ஆனால் பிடிமாவால் பறக்க முடியவில்லை. பலவகையில் முயன்றும் பிடிமாவால் பறக்க முடியாமல் போனது. பிடிமாவின் பறக்கும் ஆற்றல் பூமியில் செயல்படவில்லை. பிடிமா தன்னிலையை விளக்கியதும் அவள் மீதிருந்து குதித்தான் கதிரவன். குதித்த வேகத்தில் விடுவிடுவென்று மண்மலையில் கால் புதையப் புதைய ஏறினான். விரைவில் உச்சிக்குச் சென்று வைரக் கனியைப் பறிப்பதற்காக கையை வைத்தான். ஆனால்... மண்மலை கிடுகிடுவென்று ஆடியது. சரேல் சரேல் என இரண்டு பெரிய நச்சுப்பாம்புகள் மண்மலைக்குள் இருந்து எழும்பிச் சீறின.

கனியோடு இரண்டு மூன்று இலைகளையும் கொத்தோடு பறித்தவன் மண்மலையில் தரதரவென உருண்டான். சித்திரையும் பிடிமாவும் கத்தினார்களே ஒழிய... அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சின்னப் பாம்புகள் என்றால் கம்பெடுத்து அடிக்கலாம். பிடிமாவும் தும்பிக்கையால் தூக்கி விசிறலாம். ஆனால் இவையோ முப்பதடி நீளம். அதிலொன்று கதிரவனைக் குறிவைக்க மற்றொன்று சித்திரையையும் பிடிமாவும் குறிவைத்தது.

"பொம்மைகளே" அண்டி கதறிக் கொண்டு ஓடி வந்தாள். வந்தவள் முதல் பாம்பைப் பிடித்துப் பிதுக்கத் தொடங்கினாள். அதன் வாயிலிருந்து நஞ்சு கொழகொழவென்று ஊதா நிறத்தில் கொட்டியது. பல்வலி மனிதர்களுக்கே வேதனை தருவது. அதில் நஞ்சை வைத்திருக்கும் பாம்பிற்கு? நச்சுப்பல்வலி தாளாமல் காஆஆஆஆஆஆய் என்று ஓலமிட்டது நாகம். கூட்டாளிக்கு ஆபத்து என்றதும் அடுத்த நாகம் கதிரவனை விட்டுவிட்டு அண்டியின் மீது தாவியது.

அதை வலக்கையால் பிடித்தாள் அண்டி. இரண்டு நாகங்களும் கழுத்து நசுக்கப்பட்டு ஓலமெழுப்பின.

"பொம்மைகளே.. இப்படியா விளையாட்டுத்தனமாக இருப்பது! பாருங்கள்..எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டீர்கள். நான் என்ன செய்வேன்! நீங்கள் முதலில் ஓடுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள். இந்த நாகங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்."

அண்டி பொம்மைகளைப் பார்த்து உண்மையிலேயே பரிதாபப் பட்டுக் கூறினாள். ஆனால் உண்மையிலேயே அவளது நிலைதான் மிகப் பரிதாபமாக இருந்தது. இரண்டு நாகங்கள். அதுவும் முப்பதடி நீளமுள்ள நச்சு நாகங்கள். அண்டி வீராங்கனைதான். ஆனால் நஞ்சின் முன் என்ன செய்ய முடியும். நாகங்கள் கக்கிய நஞ்சைத் தொடாமல் தவிர்த்து வந்தாள். ஆனால் கக்கும் பொழுது எழும் சாரல் அவளை லேசாக மயக்கியது. அதுதான் சமயமென்று இரண்டு நாகங்களும் அவள் காலைச்சுற்றி இழுத்தன. எப்படியாவது விசத்தை மிதிக்க வைத்து விட வேண்டும் என்றுதான்....

அண்டியின் பிடியோ லேசுமாசாக இல்லை. முதலில் பிடிபட்ட பாம்பின் நச்சுப்பல்லே பிதுங்கிக் கீழே விழுந்தது. விசப்பையும் கிழிந்து நஞ்சு கொட்டியது. வேதனையில் கதறிக் கதறி உயிர் விட்டது அந்த நாகம். ஆனால் இரண்டாம் நாகம் அவள் காலை இழுப்பதில் சற்று வெற்றி கண்டு நஞ்சைத் தொட வைத்தது. சுரீல் என்று விரலைத் தொட்ட நஞ்சு பரபரவென காலில் ஏறியது. ஆத்திரத்தின் உச்சிக்கே போனாள் அண்டி. தான் மாண்டாலும் நாகத்தைக் கிழித்து விட வேண்டும் என்று தனது வலிமையெல்லாம் திரட்டி அதன் வாலைப் பிடித்தாள். பிடித்த வாலை நகத்தால் கீறிக் கிழித்தாள். அந்த கிழிசலையே பிடித்து இழுத்து டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று நாகத்தை இரண்டாகக் கிழித்துப் போட்டாள்.

"பொம்மைகளே... இனிமேல் உங்களுக்கு நாகத்தால் கெடுதி இல்லை. விரைந்து செல்லுங்கள். மிக விரைந்து...." சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே நஞ்சு தலைக்கேறி முழுவுடலும் நிறம்மாறி மாண்டாள் அண்டி.

பார்த்துக் கொண்டிருந்த மூவரும் பேச்சடைத்துப் போயிருந்தார்கள். யாரிடம் மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தார்களோ...அவள் வழியாகவே தங்கமரத்திற்கு வழி தெரிந்து...அந்த மரத்தையும் அடைந்து ....அங்கு சிக்கிக் கொண்ட ஆபத்தில் இருந்து அவளாலேயே காப்பாற்றப்பட்டு...அதற்காக அவளே உயிரை இழந்து.....ச்சே என்று ஆனது அவர்களுக்கு.

இவர்கள் வயிற்றில் போகும் பொழுதே அண்டிக்கு வயிறு கலங்கியது. என்னவோ என்று எழுந்து பார்த்தவளுக்கு விவரம் விரைவிலேயே புரிந்து போனது. அதனால் பொம்மைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று விரைந்து வந்தாள்.

அட்டகாசப் பேர்வழியானாலும் அண்டிக்கும் அன்புண்டு என்று புரிந்ததன் பலன் அவர்களின் கண்களில் கண்ணீராகப் பெருகியது. ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டார் வருவரோ! சிறிதுசிறிதாக மனதைத் தேற்றிய அவர்களுக்கும் அடுத்த பிரச்சனை நினைவிற்கு வந்தது. அதாவது எப்படி வெளியே செல்வதென்று.

அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அங்குமிங்கு நடந்தார்கள். அப்படி நடந்தவர்கள் கண்ணில் பட்டதுதான் தணலேரி. நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருந்த அந்த ஏரியை எப்படிக் கடப்பது என்பதே யோசனை. ஆனால் எதிர்பாராத உதவி அப்பொழுது வந்தது.

தொடரும்....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

7 comments:

said...

அண்டி உயிரைக் கொடுத்து காப்பாற்றி விட்டாளா? பெரிய உதவி தான்.. இனி அடுத்த கட்டம் தணலேரியா... வெயிட்டிங்ஸ்....

said...

உம்ம்ம்ம்
பரபரப்பு இப்போ தான் கூடுகிறது!
வர்ணனைகள் குறைந்து வர்ண ஜாலங்கள் ஆரம்பித்து விட்டீர்களா ஜிரா? :-)

//அட்டகாசப் பேர்வழியானாலும் அண்டிக்கும் அன்புண்டு என்று புரிந்ததன் பலன் அவர்களின் கண்களில் கண்ணீராகப் பெருகியது//

:-(((

//அப்படி நடந்தவர்கள் கண்ணில் பட்டதுதான் தணலேரி//

தணலெரி தணலெரி தணல் அதுவாக விடுவிடு வேலை வெருண்டது ஓட
.....
ம்ம்ம்ம் அப்பறம்...

said...

ஐயையோ..
அண்டி பாவம்..அவரைக் கொல்லாமல் விட்டிருக்கலாமே..மிக சுவாரஸ்யமானவர் அவர்.கதையின் இறுதிவரை கூட வருவார் என எதிர்பார்த்தேன்.இப்படி ஏமாற்றி விட்டீர்களே..?

said...

என்னங்க இப்படி அண்டியைச் சாக அடிச்சுட்டீங்க? அண்டி வயிறு வழியாகச் செல்லக்கூடிய ஒரு இடத்திற்கு அவள் எப்படி வருவாள்? கொஞ்சம் விளக்குங்களேன்.....

said...

\\நஞ்சு தலைக்கேறி முழுவுடலும் நிறம்மாறி மாண்டாள் அண்டி.\\

:-(

\\இலவசக்கொத்தனார் said...
என்னங்க இப்படி அண்டியைச் சாக அடிச்சுட்டீங்க? அண்டி வயிறு வழியாகச் செல்லக்கூடிய ஒரு இடத்திற்கு அவள் எப்படி வருவாள்? கொஞ்சம் விளக்குங்களேன்.....
\\

ம்ம்ம்...நானும் இதை வழிமொழிகிறேன் ;)

said...

அண்டியவரைக் கைவிடாத அண்டி இறந்துட்டாளா? அச்சச்சோ! :(

said...

ரொம்ப விறுவிறுப்பா போச்சு இந்தப் பகுதி இராகவன். அதெப்படி கதாநாயகர்களுக்கு மட்டும் உதவிகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் வருகின்றன?

எப்படியோ என் கதையில் நான் தான் கதா நாயகன். அதனால் எனக்கும் நிறைய உதவிகள் வரும் என்று நினைக்கிறேன். :-)