Monday, June 02, 2008

தங்க மரம் - 14

சென்ற பகுதியை இங்கு படிக்கவும்.

பாகம் - 14

அண்டி வரும் அதிர்வுகள் தெரிந்ததும் மூவரும் பொம்மையறைக்குள் வந்து விட்டார்கள். திடுதிடுவென்று உள்ளே ஓடி வந்த அண்டி எதையோ கீழே போட்டாள். ஏதோ மரத்தை வெட்டி வீழ்த்தியது போல பேரோசை.

"பொம்மைகளே...இதோ உங்களுக்காக கனிகள். வாருங்கள். உண்ணுங்கள்."

அண்டியின் அழைப்பு கேட்ட பிறகே துணிச்சலோடு வெளியே வந்தார்கள். அங்கே ஒரு பெரிய மாமரத்தையும் பலா மரத்தையும் வேரோடு பிடுங்கி வந்து போட்டிருந்தாள்.

"சாப்பிடுங்கள் பொம்மைகளே. நீங்கள் சாப்பிடும் அழகை நான் பார்க்க வேண்டும்."

அண்டியின் அன்புக்கட்டளையைத் தட்ட முடியாமல் மாம்பழங்களைப் பறித்து உண்டார்கள். பிடிமா பலாப்பழத்தைப் பிடுங்கிக் கால்களால் நசுக்கி உடைத்து உண்டாள். வயிறு நிறைந்தவுடன் மிச்சப்பழங்களைப் பிறகு உண்பதாகக் கூறிவிட்டார்கள். பொம்மைகள் சாப்பிடும் என்பதைப் பார்த்த அண்டிக்கு ஆனந்தமோ பேரானந்தம். இந்த பொம்மைகள் முன்பே கிடைத்திருந்தால் நிறைய மரங்களைப் பிடுங்கியிருக்கலாமே என்று வருத்தப்பட்டாள்.

அண்டியின் மகிழ்ச்சியைக் கண்ட கதிரவனும் சித்திரையும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள். வாயைக் கிண்டினால் ஏதாவது கிடைக்குமல்லவா.

"அண்டி...(சித்திரையைக் காட்டி) இந்தப் பொம்மை உளறுகிறது. நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன்." என்று தொடர்பே இல்லாமல் சொன்னான்.

"அப்படியா? அந்தப் பொம்மை என்ன உளறியது?"

சிரித்துக் கொண்டே சொன்னான் கதிரவன். "இப்பொழுது எங்களுக்குப் பசிக்கிறது என்று மரம் பிடுங்கிக் கொண்டு வந்தாயே... அந்த மரத்து மாம்பழங்கள் தங்கம் போல மின்னியது என்றேன் நான். இல்லை... பலாப்பழங்கள்தான் பொன்னாக ஒளிவீசியது என்கிறது இந்தப் பொம்மை. நீயே சொல். பலாப்பழங்களா ஜொலிக்கின்றன?"

கதிரவன் சொன்னது இடியோசை போலச் சிரித்தாள். "ஹா ஹா ஹா... இதெல்லாம் ஜொலிப்பா? இந்தக் கனியெல்லாம் கனியா? தங்கமரத்துக் கனியே சிறப்பாக ஒளிரும். பார்த்தாலே கண்கள் குருடாகிவிடும் அளவிற்கு அழகாக ஒளிரும்."

எதையோ சொல்லி வைக்க தங்கமரத்திற்கே குறிப்பு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து சித்திரை பேசினான்.

"அண்டி.. நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன். நான் பொம்மை என்பதால் என்னை ஏமாற்றப் பார்க்கிறாய். தங்கத்தில் மரம் இருக்குமா? அதை எப்படி நம்புவது?"

பொம்மைகள் தங்கமரத்தைப் புரிந்து கொள்ளமல் நம்ப மறுக்கிறார்களே என்று அண்டிக்கு வருத்தம் வந்தது. "பொம்மைகளே நான் உண்மையைச் சொல்கிறேன். நம்புங்கள். உண்மையிலேயே தங்கமரம் இருக்கிறது. அது முழுக்க முழுக்க தங்கம். அந்த மரத்தில் மரகத இலைகள் துளிர்த்து.. பவழ மொட்டுகள் பூக்கும். அந்தப் பவழ மொட்டுகளோ மாணிக்கக் காய்களாகி வைரக் கனிகளாகும். அந்த வைரக் கனியின் ஜொலிப்பிற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது. இதுதான் உண்மை."

அடுத்து கதிரவன் கேட்டான். "நீ பொய் சொல்ல மாட்டாய் அண்டி. நான் உன்னை நம்புகிறேன். ஆனால் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. தங்கமரம் என்று ஒன்று இருக்குமானால்... அது எங்கே இருக்கிறது?"

"ஓ அதுவா... தணலேரிக்கு அருகில் உள்ள ஏறாத மண்மலையில் உள்ளது."

"சரி. ஆனால் அங்கு செல்வதற்கு வழி இருக்க வேண்டுமே?"

பொம்மைகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தனக்கு விடை தெரிந்திருக்கிறதே என்று பெருமகிழ்ச்சி அண்டிக்கு. இவ்வளவு சிறப்பாக யாருமே இதுவரை பேசவில்லையே என்று லேசான வருத்தம் கூட எழுந்தது. ஆனாலும் தன்னுடைய அறிவைக் காட்டும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை அண்டி. "இருக்கிறதே. இதோ என் வயிற்றில். என்னுடைய வயிற்றின் தொப்புளுக்குள் இருக்கிறது தணலேரிக்குச் செல்லும் வழி.

உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனார்கள் மூவரும். சித்திரைதான் கேட்டுவிட்டான். "ஆகா.. உன் வயிற்றுக்குள் வழியா? அதுவும் தொப்புளுக்குள்ளா? அதை எப்படித் திறப்பது? யாராவது வழியைத் திறக்கிறேன் என்று வயிற்றைக் கிழித்து விட்டால்?"

"ஹா ஹா ஹா.. ஐயோ பொம்மை... இப்பிடி முட்டாளாக இருக்கிறாயே! அதனால்தான் நீ பொம்மை. இதோ அங்கிருக்கும் கதவைத் திறப்பதற்குத் திறவுகோலை இங்கே இடுப்பிடில் கட்டி வைத்திருக்கிறேனே." கச்சையில் கட்டியிருந்த சாவியையும் காட்டிக் கொடுத்து விட்டது அண்டி.

விவரங்களைத் தேவையான அளவு தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் தூங்கப் போனார்கள் மூவரும். எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருந்த பொழுது.. இங்கே என்று தானே வந்து நின்றால்....அந்த இன்பம்தான்.

------------------------

நாம் ககனையும் தனிமாவையும் நீருக்கடியில் பூகனூரிலேயே விட்டுவிட்டோம். தனிமா ககனிடம் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லத் தொடங்கனினான் ககன்.

"தனிமா, நீ எப்படி தண்ணீரில் விழுந்து பூகனூருக்குள் நுழைந்தாயோ.. அதே போலத்தான் உன்னுடைய தந்தையாகிய ஊழிவாயனும் நுழைந்தார். அவரிடம் அளப்பறிய சக்தி இருந்தது. அவருடைய பெருமைமிகு தோற்றம் அவரை எங்கள் பூகமன்னர் பூரசு நண்பராக்கிக் கொண்டார். அவரைப் பூகனூரிலேயே தங்க வைத்து கவனித்துக் கொண்டார். வந்த புதிதில் ஊழிவாயரும் ஒழுங்காகத்தான் இருந்தார். ஆனால் விரைவிலேயே அவருடைய ஆற்றல் குறையத் தொடங்கிவிட்டது. அதற்காக மன்னர் பூரசு மிகவும் வருந்தினார். ஆனாலும் ஊழிவாயனை மிகவும் மதிப்பாக நடத்தினர். பூகன்கள் பூமிக்கு நடுவில் சென்று குழம்பு எடுக்கும் துறையை அப்படியே அவர் பொறுப்பிலும் கொடுத்தார். ஆனால் அது ஊழியருக்குத் திருப்தி கொடுக்கவில்லை. அந்த நிலையில்தான் ஒரு தவறு செய்தார். ஆம். பூரசு மன்னரின் மந்திரக்கோலை திருடிக் கொண்டார். அத்தோடு நில்லாமல் மன்னரைச் சிறையிலும் அடைத்து விட்டார். பூகன்கள் அனைவரும் இனிமேல் ஊழிவாயனின் அடிமை என்றும் எதிர்த்து எதுவும் செய்தால் பூரசுக்கு ஆபத்து என்றும் மிரட்டினார். வேறு வழியில்லாமல் எல்லாரும் ஊழிவாயருக்கு அடிமையானோம். நானும் சில நண்பர்களும் தப்பித்து ஓடினோம். ஆனால் குண்டரப் பறவைகளை ஏவி எங்களை அழித்தார். என்னைத் தவிர நண்பர்கள் அனைவரும் மாண்டனர். நானும் மாண்டதாகவே ஊழியர் நினைத்துக் கொண்டார்.

ஏரிக்கு நடுவில் பூமியைக் கிழித்து...அந்தக் குழம்பு பீய்ச்சி அடித்து...ஒரு கூம்புமலையை உருவாக்கினார். அதை அவருக்கான இடமாக்கி அரசு செய்தார். அப்படியிருக்கையில்தான் உன்னுடைய தாயாரான லிக்திமா அனுப்பிய பறக்கும் ஆனை கஜன் வந்தது.

தொடரும்....

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

5 comments:

said...

பிரசண்ட் சார்..... :)
அண்டியின் வயிற்றுக்குள் தங்க மரத்துக்கு வழியா?.... அதுவும் சாவியுடன்... நடக்கட்டும்...
வெயிட்டிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... :)

said...

ம். விறுவிறுப்பாத்தான் போகுது. ஆனா ரெண்டு பகுதிக்கு இடையே இம்புட்டு இடைவெளி வேண்டாமே!!

said...

\\இலவசக்கொத்தனார் said...
ம். விறுவிறுப்பாத்தான் போகுது. ஆனா ரெண்டு பகுதிக்கு இடையே இம்புட்டு இடைவெளி வேண்டாமே!!
\\

ரீப்பிட்டே ;))

said...

எங்கே நண்பர் கிரண்...தங்க மரம் வர்ணிச்சபடி ஒரு படத்தை போடுங்கப்பா!!!! :)

said...

இராகவன். கதை ரொம்ப நல்லா போகுது.