அதுல போத்தீஸ்ல போயி மொட்ட போடுற வேளைக்கு வேணும்னு ரெண்டு துண்டு வாங்க உள்ள போனேன். நெல்லையப்பர் கோயில் நடை நாலு மணிக்குத்தான் தொறக்கும். இருட்டுக்கடையும் அஞ்சு மணிக்கு மேலதான் தொறக்கும். அதுனால நடுவுல் இருக்குற பொழுத ஓட்ட போத்தீஸ்தான் சரியான இடம்னு உள்ள போனோம். ஒருத்தன் வேட்டி வாங்கனுங்கறது நெனவுக்கு வந்தது.
சரீன்னு மொதல்ல அவனுக்கு வேட்டி வாங்க அதுக்கான எடத்துக்குப் போனோம். அவனுக்குத் தமிழ் தெரியாதுங்கறதால அவன் கன்னடத்துல சொல்றதத் தமிழ்ல மாத்திச் சொல்லியும் கடைக்காரர் தமிழ்ல சொல்றத அவனுக்குக் கன்னடத்துல மாத்திச் சொல்லியும் மொழிச்சேவை செஞ்சேன். அப்பத்தான் இன்னொருத்தனுக்கு வேற ஏதாவது பாக்கலாம்னு தோணிச்சு. அவன் ஒரு பக்கமா போனான். இன்னொருத்தன் இந்தப் பக்கம். இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.
மொதல்ல வாங்க வேண்டிய துண்டையும் வேட்டியையும் வாங்கிக்கிட்டோம். அதுக்குள்ள ஒருத்தன் பட்டுச்சேலை பாக்கனும்னு சொன்னான். அவனக் கூட்டீட்டுப் போய் அந்தப் பகுதீல விட்டாச்சு. அவன் அதப் பெரட்டீட்டு இருக்கும் போது இன்னொருத்தன் பிரிண்டேட் சில்க்ஸ் அவனோட அம்மாவுக்கு வாங்கனும்னு விரும்புனான். அந்தப் பகுதிக்கு அவனோட ஓடு. ஒவ்வொன்னா பாக்கும் போது தாமரைச் செவப்புல ஒரு சேலை. பிரிண்டேட் சில்க்தான். நல்லாயிருந்தது. செந்தாமரை பாத்திருப்பீங்களே. ரொம்பப் பளீருன்னும் இருக்காது. ரொம்பக் கம்மலாவும் இருக்காது. அந்த நெறத்துல அழகான கருப்புப் பிரிண்ட் போட்ட சேலை. கொஞ்ச நேரம் அப்படி இப்பிடி யோசிச்சி அம்மாவுக்கு வாங்கீட்டேன். கூட இருந்தவன் அவனோட அம்மாவுக்குப் பொருத்தமா ஒரு பட்டுச்சேலை எடுத்துக்கிட்டான்.அதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான். அள்ளல் நெறையா இருந்ததும் கொஞ்சம் தள்ளுபடியும் கிடைச்சது. பிக் ஷாப்பர்னு சொல்ற சணல் பைகள ஒவ்வொருத்தரும் தூக்கீட்டு வந்தோம். அட! சொல்ல மறந்துட்டேன். தூத்துகுடீல இருக்குற அத்தைக்கு ஒரு காட்டன் சேலையும் எடுத்துக்கிட்டேன்.
ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்களச் சொல்லிக் குத்தமில்லை.
வெளிய வந்ததும் பைகள வண்டீல வெச்சிட்டுக் கோயிலுக்குப் போனோம். நெல்லையப்பர் கோயில். பழைய கோயில். இன்னொரு தகவல் சொல்றேன். குறிச்சிக்கோங்க. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.
இசைத்தூண்கள். நெல்லையப்பர் சந்நிதி நுழைவில இருக்கு. தட்டிப் பாத்தேன். நல்ல இசை வந்துச்சு. இதையே இசை தெரிஞ்சவங்க தட்டுனா! ம்ம்ம்...அது சரி...தூணைத் தட்டுனவனும் இசை தெரிஞ்சவனாத்தானே இருக்கனும். கல்லுச சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே!
காந்திமதியம்மன், முருகன் எல்லாருக்கும் வணக்கம் போட்டுட்டு வந்தோம். கோயிலுக்குள்ள அன்னைக்கு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி வாக்குல வெளிய வந்தோம். வந்ததும் நேராப் போனது இருட்டுக்கடைக்குதான்.
ஆளுக்கு நூறுகிராம் கைல மொதல்ல வாங்கிக்கிட்டோம். அப்புறம் ஒவ்வொருத்தனும் அரக்கிலோ காக்கிலோன்னு பாக்கெட் பாக்கெட்டா வாங்கிக்கிட்டாங்க. கொண்டு போய் பெங்களூர்ல உள்ளவங்களுக்குக் குடுக்கதான். ரொம்ப நேரம் அங்கயே இருக்காம திருச்செந்தூருக்குக் கெளம்ப முடிவு செஞ்சோம்.
முந்தி எல்லா பஸ்சும் ஜங்சன்ல இருந்துதாம் பொறப்படும். இப்ப இன்னொரு பஸ்டாண்டு இருக்கு. அதுவும் பாளையங்கோட்ட தாண்டி...தள்ளிப் போகனும்...அங்க போய் வண்டிய கோயில்பட்டிக்குத் திருப்பி அனுப்பீட்டு திருச்செந்தூர் பஸ்சப் பிடிச்சோம்.
திருநெல்வேலி எனக்குப் புது ஊர் கிடையாது. தூத்துக்குடீல இருந்துன்னாலும் கோயில்பட்டீல இருந்துன்னாலும் முக்கா மணி நேரந்தான். அதுவுமில்லாம என்னோட நெருங்கிய நண்பனின் ஊரும் திருநெல்வேலி. ரொம்ப நெருங்கிய நண்பந்தான். ஆனா இப்ப நாளாவட்டத்துல தொடர்பு கொறஞ்சு போச்சு. அமெரிக்காவுல இருக்கான். ஆனா பேச்சு வழக்கே இல்லைன்னு சொல்லலாம். எப்பவாச்சும் இந்தியாவுக்கு வந்தா ஃபோன் பண்ணுவான். பெங்களூருக்கு வந்தா சந்திப்போம். அதுவும் ஒரு வாட்டிதான். இன்னைக்கு அவனும் நல்ல நெலமைல இருக்கான். நானும் முருகன் புண்ணியத்துல நல்லாயிருக்கேன். அதுதான் உண்மை.
தொடரும்....
அன்புடன்,
கோ.இராகவன்













